Advertisement

“நான் மாமா வீட்டுலேயே சாப்பிட்டேன் டா”, என முத்து சொல்ல.

“ஓஹோ.  ஆடு பகை குட்டி உறவா”  என முறைத்து விட்டு போனான் கண்ணன்.

“முத்துவின் தந்தை நாலு வார்த்தை பேசி விட்டு வயலுக்கு சென்றாலும், தாயின் அன்பு மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. மகனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இன்னொரு வாய் சாப்பிடுய்யா”  என ஊட்டி அகம் குளிர்ந்தார்.

அன்று இரவு வரை உறவுகளுடன் கொஞ்சி பேசிய  முத்து நிலவின் முகம் பார்த்ததும் மலரின் நினைவு உள்ளுக்குள் உலையாய் கொதிக்க தொடங்கியது.

“இங்கு மலரோ செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  பார்த்த கண்ணும் பூத்து போக காத்திருந்தாள்.  ஒரு மெசேஜ் வராதா?”  என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது தனது அக்கா எழிலிடம் இருந்து கால் வந்தது. எழில் விடியற்காலை ஊருக்கு வருவதாக கூற. அனைவரது  முகத்திலும்  மகிழ்ச்சி தாண்டவமாடியது.  அந்த மகிழ்ச்சியோடு அனைவரும் உறங்க போக.

மலர் தனது பஞ்சனையில் துயில் கொள்ள வந்து அமர்ந்தாள். அப்போது முத்துவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

மலரே மௌனமா… மௌனமே வேதமா?…  என ஒரு வாக்கியம் முத்துவிடம் இருந்து வர..

மலருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு மௌனம் மட்டும் தான் எனக்கு வேதம் என்று பதிலனுப்பினாள்.

“மௌனத்தை உடைத்து காதல் மொழி பேச வைப்பேனடி” என முத்து பதில் அனுப்ப.

“ஊமை நெஞ்சம் பேசுமா?”  என  மலர் அனுப்பினாள்.

“நெஞ்சம் பேச நினைப்பதை ஊமை விழிகள் பார்வையால் ஆயிரம் கதைகள்         சொல்லுமடி” என்றான்.

“நீ இவ்வளவு நாளா ஒன்னும் பேசாம தான் இப்போ பேச போறியா மாமா. உனக்கு தமிழ்னா உயிரா பிடிக்கும்னு தெரியும்.. அதுக்காக கவிதைலயே பேசனுமா.  ஒரு குட் நைட், குட் மார்னிங் கூட வராது.  இன்னைக்கு மட்டும் என்ன பொங்கிவழியுது” என மலர் அனுப்ப.

உன்ன நெனச்சி மனசுக்குள்ள
உருகி தவிக்கிறேனடி
உசுருக்குள்ள உன் நெனப்பு
உறஞ்சி போயி துடிக்கிறேனடி
உன் முகம் தான் நித்தம்
உள்ளூர தெரியுதடி
உன் உதட்டு சிரிப்பில்
உள்ளத்தை தொலைத்தேனடி

என முத்து அனுப்ப..

“இங்க அதெல்லாம் ஒன்னுமே இல்ல. ஒழுங்கா போய் படிக்கிற வழிய பாருங்க. உங்களுக்கு எக்ஸாம்ல ஏன் அந்த பாயிண்ட் மதிப்பெண் குறைஞ்சது.  எப்படி அந்த தோல்வி வந்தது.  அதை எப்படி சரி பண்றதுன்னு யோசிங்க மாமா.  என்ன தப்பு பண்ணி இருக்கீங்க.  பாசிடிவ் தொண்ணூறு சதவீதம் இருக்கும். நெகட்டிவ்  பத்து சதவீதம் இருக்கும்.  அதனால நெகட்டிவ சரி பண்ணாவே தன்னால ஜெயிக்க முடியும். அதனால நெகட்டிவ் எதுனு முதல்ல கண்டுபிடிங்க” என மலர் அறிவுரை கூற.

“முத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.  மலர்  நீ நிச்சயமா எனக்கு இன்னொரு தாயா,  தோழியா,  காதலியா எல்லாமுமா இருந்து என்ன சரியா வழிநடத்துவனு எனக்கு தெரியும்.   நிச்சயமா  இந்த முறை விடமாட்டேன்.  சாதிச்சே தீருவேன்.  நீ மட்டும் என்ன விட்டு விலகாதடீ.  ‘ப்ளீஸ’ என் கூடவே இரு மலர்”,  என செய்தி அனுப்ப..

“உங்க வெற்றிக்கு பின்னாடி நிச்சயமா நான் இருப்பேன் மாமா.  மனச போட்டு குழப்பிக்காத.  நேரமா தூங்கு. நேரமா எழுந்து படி”  என்று அனுப்ப.

சரிடி செல்லம். மலர்.. ஒன்னே ஒன்னு..

“மலரின் இதழ்கள் புன்னகையாய் பூத்திருக்க. சரியென இதழ்கள் துடித்தாலும், அதுக்கு வேற ஆள பாரு மாமா. என் மனசுல ஒன்னுமே இல்ல” என செய்தி அனுப்பினாலும் இதயமோ  நீ மட்டும் தான் மாமா என் உசுருக்குள்ள இருக்க.  எனக்கு நீ வேணும் மாமா என்றது.  நேரம் ஆகுது போய் தூங்குங்க. ‘ குட்நைட்’ என மலர் அனுப்பி விட்டு உறங்க சென்றாள்.

‘ச்ச்சீ’ போடி.. “எவ்வளவு  ஆசையா பேசினேன்.  இப்படி  துரத்தற” என்று  அனுப்ப.

மலரிடம் பதில் இல்லை..

மலர்….

செல்லம்..

தங்கம்..

குட்டிமா…

அம்மு.  என அனுப்பிக் கொண்டே இருக்க  எதற்கும் மலரிடமிருந்து பதில் இல்லை.

“போடி, குட் நைட்” என அனுப்பிவிட்டு, “முத்து உறக்கம் இல்லை என்றாலும் இமைகளாவது இணையட்டும்   அதை பிரிக்க வேண்டாம்” என இமைகளை மூடி கனவில் மலரை நோக்கி சென்றான்.

மலர் சிரித்துக் கொண்டே தனது மாமனுடன் கனவுலகில் கட்டியணைத்து காதல் மொழி பேசிக் கொண்டாள்..

“மறுநாள் பொழுது விடிந்ததும் அதிகாலை, எழிலரசி பெண்களின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் பயிற்சி, சிறு தொழில் பயிற்சி”, என ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டு, தனது தோழிகளுடன் சேர்ந்து பல கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொண்டு எங்கெல்லாம் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தலாம் என்றும் எவ்வாறு அவர்களை அணுகுவது என்றும் பல போராட்டங்களை சந்தித்து நல்ல முடிவோடு வந்து சேர்ந்திருந்தாள்..

எழிலை கண்டு சரஸ்வதி, மலர் இருவரும் கட்டியணைத்துக் கொள்ள.

“அம்மா, அப்பா இன்னும் என் மேல கோபமா இருக்காங்களா?”  என எழில் கேட்க.

“ஆமாடி ரொம்ப கோவமா இருக்காக.  நீயே வந்து பேசு” என சரசு உள்ளே அழைத்துப் போனாள்.

“உன்ன பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா. நம்ம கருசகாட்டு பூமியிலே பிறந்த  அழகான முத்து தான் நீ” என்று மலர் கூற.

“என்னடி பாராட்டுற மாதிரி சைடு கேப்பில கெடா வெட்டுற.  உதாரணம் சொல்ல கூட முத்து தானா.  உன் ஆள விட்டு குடுக்க மாட்டியா?  மாமா மேல அவ்வளவு காதலா” என எழில் கண் சிமிட்ட.

“போக்கா”   என மலர் வெட்கப்பட்டாள். “அக்கா கண்ணன் மாமா உம்மேல ரொம்ப கோவமா இருக்காங்க. நீ இப்படி சேவை செய்யறனு வாழ்க்கைய தொலச்சிடாதக்கா” என மலர் கூற.

மலர், நீயே இப்படி பேசாத.. வருத்தமா இருக்கு. கிராமத்தில மழை இல்லாதப்போ விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படறாங்க. நம்ம கிராமத்துல மட்டும் இல்ல மலரு. மழை இல்லாதப்போ  விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கவங்க குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.  அரசாங்கத்திலும் இன்னைக்கு வரை இதுக்கு சரியான நடவடிக்கை எடுக்கல.  அரசு செய்யணும்னு எதிர்ப்பார்த்து  விவசாயிங்க உசுரத்தான் விடுறாங்க. அதுக்கு  பதிலா நம்மள நாமே காப்பாத்திக்க என்ன வழின்னு தான் யோசிக்கணும். அதைத்தான் நானும் யோசிச்சேன்  மலரு.

விவசாயமும் நாம பெத்தெடுக்கற  பிள்ளைகள போல தான். மழை இல்லாம விவசாயம் செத்துபோவுது.  இதை மட்டுமே நம்பி இருக்காம மழையில்லாத காலத்துல சிறு தொழில் செஞ்சு நம்ம வாழ்க்கைய காப்பாத்திக்கலாம். விவசாயிகள் யார்கிட்டயும் கையேந்தி நிக்க கூடாது. நமக்குன்னு ஒரு சிறுதொழில் கத்துக்கிட்டா யாரையும் எதிர்பார்க்காம நம்ம பொழப்ப நாம நடத்திக்கலாம்.  விவசாயிகள் எப்போதும் உழைப்புக்கு அஞ்சி பின்வாங்கறவங்க  இல்ல. உச்சிவெயில்ல நாம உழைக்கலனா யாருக்கும் சாப்பாடு கிடைக்காது.  ஒரு வகையில விவசாயிகள் மக்களுக்கு இன்னொரு கடவுள் தான் மலர். எல்லாத்தையும் கொடுக்குறவ தான் கடவுள்னு  மக்கள் நம்புறாங்க இல்ல.  உயிர்வாழ சோறு தான் முக்கியம். அப்போ அது கொடுக்கிற விவசாயிகள் கூட கடவுள் தானே மலரு.  இந்த மழையில்லாம  கஷ்டம் வந்து பஞ்சத்தில பட்டினி கிடக்கும்போது யார்கிட்ட போய் கேட்க முடியும்.  இந்த நிலை மாறனும்  மலரு.  இளைய தலைமுறைகள் தான் முயற்சி பண்ணனும். அவங்கவங்க கிராமத்துல விழிப்புணர்வு கொடுக்கணும். அவர்களால் முடிந்த உதவிகளை செய்யணும்.

“இப்போ பாரு முத்து மட்டும் கலெக்டர் ஆகிட்டா நம்ம கிராமத்துக்கு மட்டுமில்ல.  பல கிராமங்களுக்கு நிச்சயமாக நல்லது செய்வான்.  விவசாயிகளுக்கு  நிறைய உதவிகள செய்வான். நானும் என்னால  முடிஞ்சத பண்ண போறேன் மலரு.  எல்லாரும் ஒத்துழைப்பு கொடுத்தா  நம்ம கிராமம் என்னைக்கும் பசுமையாவே இருக்கும்”  என எழில் சொல்லச் சொல்ல மலர் வாயை பிளந்து கொண்டு நின்றாள்.

“இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராசப்பன் மனம் நெகிழ்ந்து தன் மகளைப் பார்த்து கண் கலங்கினார்.  நான் கூட உன் மேல கோவப்பட்டேன்.  இனி என்ன  யார் என்ன சொன்னாலும் உனக்கு பக்கத்தொணையா  நான் இருக்கேன்டா கண்ணு” என்று ராசப்பன் கூற.

எழிலும் தந்தையின் கரங்களை பற்றி கண் கலங்க.

“போதும்.  போதும்..  உங்க பாசமழை.  உங்க தங்கச்சி வீட்டில என்ன சொல்ல போறாராகளோ  தெரியல.  மாப்பிள்ளை வேற ரொம்ப கோவமா இருந்தாக.  ஏதாவது சமாதானம் சொல்லி விட்டுட்டு வரணும் இல்ல”  என சரசு கூற.

“எழில் சிரித்துக்கொண்டே அம்மா மாமாவோட கோபத்தை பத்தி எனக்கு தெரியும். எப்படி சமாளிக்கனும்னு தெரியும். அத்தை மாமா நான் சொன்னா புரிஞ்சுக்குவாங்க. நானே போய்க்கிறேன். நீங்க யாரும் வரவேண்டாம்”  என்று கூற.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த ஜில்லு எழிலின் மேல் தன் பாசத்தை கொட்டி தீர்த்தான்.  அவள் புடவை  மட்டும் தான் கிழியாத கொடுமை. ஜில்லு  சுற்றிவந்து தோள்வரை தாவி பாசத்தை கொட்டி தீர்த்தான்.

“ஜில்லுவ  மொதல்ல வெளியே துரத்து போகட்டும்” என ராசப்பன் கோவப்பட.

ஜில்லுவின் அன்பில் நனைந்த  எழில்  விடுங்கப்பா.  அவன் எவ்வளவு பாசக்காரன் பார்த்தீங்களா கூற.

“பாசக்கார தான். ஊருக்குள்ள  வெடக்கோழியா   பிடிச்சு எனக்கு இல்ல தெண்டம் கட்ட  வைக்கிறான்”  என்று கோபப்பட்டார்.

“அவன் சின்ன புள்ள தானே விளையாட்டுத்தனமா பண்றான்.  இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டா சரியா போயிடும்”  என்று எழில் கூற..

“இன்னும் கொஞ்சம் வளர்ந்தா அடுத்து வெடக்கோழி இல்ல. நேரா   ஆட்டதே பாத்து பிடிப்பான்.  பெரிய கெடாவா  பாத்து புடிச்சானா  இன்னும் கொஞ்சம்  தெண்டம் கட்ட சேர்த்து சம்பாதிக்கணும்” என்றார்.

அனைவரும் சேர்ந்து சிரிக்க ஜில்லு ஓரக்கண்ணால்  ராசுவைப் பார்த்தான்.  மெல்ல மெல்ல வாலை ஆட்டினான்.

“இப்படி ஓரக்கண்ணால பார்த்தே கோபத்த குறச்சிடுவானே வாடா ஜில்லு”, என ராசப்பன் கோவம் தீர்ந்து ஜில்லுவை தூக்கிக் கொஞ்சினார்.

“அவன அப்புறம் கொஞ்சுவீக. உங்க தங்கச்சி வீட்டில ஏதும் சொல்லாம இவள ஏத்துகிட்டா சந்தோசம் தான். நீங்க கொஞ்சம் பேசி விட்டுட்டு வாங்க. முதல்ல வந்து  சாப்பிடுக.  பிறகு போகலாம்”  என சரசு சொல்லி கொண்டே  தன் இரு மகளுக்கும் சேர்த்து தன் கையால் சாதத்தை பிசைந்து ஊட்ட.  அங்கு மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் இருந்தது..

“சாப்பிட்டு முடித்த எழில்  அப்பாவை வர வேண்டாம் என்று கூறிவிட்டு தனது உடமைகளை எடுத்துக்கொண்டு  கணவன்  வீட்டிற்க்கு கிளம்பினாள்.

ராசப்பன் தனது தங்கை மாரியம்மாளுக்கு போன் போட்டு எழில் கூறிய விஷயங்களை பற்றி எடுத்துக் கூறி  மகளை பார்த்து கொள்ள சொன்னார்.

“மாரியம்மாளுக்கு இதையெல்லாம் கேட்டு முகத்தில் பூரிப்பு நிறைந்தது.  என் பிள்ளைய  நான் பாத்துக்குறேன்.   இத நீங்க சொல்லனுமா. நிம்மதியா இருங்கண்ணே” என்ற  தங்கையின் ஆறுதல் வார்த்தை கேட்டு ராசப்பன் போன்காலை துண்டித்தார்.

எழில்  கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

மாரியம்மாள் அவசரமாக ஆரத்தி கரைத்து வைத்து தட்டை எடுத்து வந்து அவளுக்கு சுற்றி நெற்றியில் பொட்டு வைக்க.

“ஓடுகாலிக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்”, என்று முறைத்துக்கொண்டே கண்ணன் வந்தான்.  இவளுக்கு இதெல்லாம் வேணுமாம்மா.  இவ வீட்டுக்குள்ளயே  வரக்கூடாது. ஒழுங்கா திரும்பி அவள வீட்டுக்கு போகச் சொல்லு என்றான்
கண்ணன்.

“ஏனுங்க.  மாமோய். அப்படி எல்லாம்  திரும்பி போக முடியாது.  நீங்க தானே என் கழுத்துல தாலி கட்டின மணாளன்.  அப்போ இதுதான் என் வீடு.   நான் இங்கதான் இருப்பேன்” என எழில் கூற.

“அப்படி சொல்லுங்க அண்ணி.   ஆனா நீங்க இன்னும் கிராமத்து பேச்சுவழக்கு மறக்காம இருக்கறது  சந்தோசம் தான்” என்றான் முத்து.

அடப்போங்க கொழுந்தனாரே.  உங்க அண்ணன் பன்னிரண்டாவது தானே.  என்ன விட குறைச்சலான படிப்பு தான். அதனால  நாகரீகமா பேசினா  அவருக்குப் பிடிக்காது. அவருக்கு ஈகோ வேற.  அதான் அவருக்கு ஏற்றமாதிரி பேசுறேன் என்றவள் உள்ளே வர அடியெடுத்து வைக்க.

“ஏய்!  நீ உள்ள வரக்கூடாது.  நான்  உன்ன உள்ள விடமாட்டேன்”,  என கைகளை நீட்டி  கண்ணன்  வழிமறிக்க.

“மாமா உங்க மூஞ்சிக்கு கோவமெல்லாம் செட் ஆகல.  காமெடி பீசா தான் தெரியுது. கொஞ்சம் வேற மாதிரி முயற்சி பண்ணுங்க மாம்ஸ்.. இப்போ  வழிய விடுங்க” என அவன் கைகளை தட்டிவிட்டு எழில்  வேகமாக உள்ளே போனாள்.

“கண்ணன் ஆடிப்போய் அப்படியே நின்றான்.  நான் நல்லா தான கோவப்பட்டேன். இவ  காமெடி  பீசுன்னு சொல்லிட்டு போறா. இருடீ உன்னைய கவனிச்சிக்கிறேன். இதோ வரேன்” என்று கண்ணன்  கோபத்தோடு உள்ளே வந்தான்.

தொடரும்…..

Advertisement