Advertisement

பகுதி – 03

 “அடேய்!  பேராண்டி,  இப்போ எதுக்குடா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற.  ஏதோ கொஞ்சம் வயசாயிடுச்சு.  கிழடிதட்டி போச்சு.  அதனால தாங்கிப் புடிக்க முடியல. இந்த மீசை முருகேசன் வாலிபத்தில எம்புட்டு கம்பீரமா இருப்பானு ஊருக்குள்ள கேட்டு பாருலே தெரியும்”  என மீசையை முறுக்கினார்.

“தாத்தா இந்த வயசுலயும் உங்க குறும்பும், கொழுப்பும் அடங்கவே இல்ல.  திடீர்னு தாங்கிப் பிடிக்கவும் நான் யாரோன்னு நினைச்சேன்.  போங்க தாத்தா”  என செல்லமாக சண்டை போட்டான் முத்து.

ஏன்டா, மலருன்னு நெனச்சியோ.  அப்படி நெனச்சி தான் என்மேல சாஞ்சியோ முரட்டு பயலே.

அப்படிலாம் ஒன்னும் இல்ல தாத்தா.

உன்ன சின்ன  பிள்ளையிலிருந்து தூக்கி வளத்த எனக்கு தெரியாதாலே.  ஆனா மலரு ரொம்ப புடிவாதக்காரிலே.  அவளோட கொணம் உனக்கு தெரியுமில்ல. கெழக்க உதிக்கற சூரியேன்  மேக்கால  உதிச்சாலும் தன்மானத்தை மட்டும் விட்டுக் கொடுத்து இறங்கி வரமாட்டாலே.  வைராக்கியம் புடிச்சவ.

அட போங்க தாத்தா.  அந்த வைராக்கியத்த அவளே வச்சிக்கட்டும். அவளோட காதல் மட்டும் எனக்கு போதும் தாத்தா. அவ என்கூட  இருந்தா நான் நிச்சயமாய் ஜெயிப்பேன்னு எனக்கு தோணுது தாத்தா.

“நெனைப்பு மாறாம நெஞ்சில இருந்தா எல்லாத்துலயும் செயந்தேன் முத்து.  உங்க ஆச்சி வேற  நீ கண்ணுக்குள்ளேயே இருக்குதேனு உனக்கு புடிச்ச இதெல்லாம் செஞ்சு வெச்சுக்கிட்டு காத்துக்கிடக்கும்.  வா போலாம்”, என கூற.

“நான் மாமா வீட்டிலயே கறியும் சோறும் சாப்பிட்டு வந்துட்டேனே தாத்தா”, என முத்துக் கூற.

இப்பத்தேன் பேரா கறி விருந்து நெல்லு சோறு எல்லாம்.  எங்க காலத்துல நாங்க சின்ன புள்ளையா இருக்கும்போது கரா வருஷமுன்னு  ஒரு வருஷம்  வந்துச்சுலே. அது  பயங்கரமான பஞ்ச காலம்.  அப்போ  எந்த வசதியும் இல்ல நமக்கு. ஏழைகதேன். கத்தாழ ஆளொசரம் வளந்து நிக்கும்.   அத வெட்டி கிழங்க எடுத்து வேக வைச்சி சாப்பிடுவோம்லே.  புளியங்கொட்டைய  குத்தி பொடச்சி உப்பு போட்டு வேக வச்சி சாப்பிடுவோம்.  இதேன் எங்களுக்கு அந்த பஞ்சகாலத்துல சோறு. அப்படிலாம் உசிர கையில புடிச்சிகிட்டு சோத்துக்கு கஷ்டப்பட்டு வளந்தவங்கதேன் நாங்க.

தாத்தாவின் பேச்சு முத்துவை கண்கலங்க வைத்தது. இப்படியெல்லாம் கூட சாப்பிட முடியுமா?  தாத்தா.. பசி அடங்குமா? தாத்தா.

உசுரு வாழனும்னா சாப்பிட்டுதே ஆகனும். வகுறு வளக்க வேற வழியில்லையே. நெல்லு சோறு கண்ணுள  பார்க்க ஒரு தீபாவளி,  பொங்கல் வரணும்.  அந்த ஒரு நாளுதே நெல்லு சோறு  பாக்கிறதே.  ஈசானி மூலையில மேகம் திரண்டு வரதை பார்த்தாதேன்   போன உசுரு திரும்பி வரும். மழையை பாக்க தவம் கிடப்போம். சோத்துக்கு இல்லாத வருமைதே.

“மலைக்கு போய் விறகொடிச்சி   பத்து மைல் தூரம் நடந்து கொண்டு போய் வித்தா மூணு ரூபாய் கெடைக்கும். நம்ம குடும்பம் அப்போ ஏழைகதேன்.  எங்க சித்தப்பாரு வீட்டில கொஞ்சம் வசதி.  ஆனா வடிச்ச கஞ்சி கூட ஊத்தமாட்டாங்க.  ஒருவாய் கஞ்சி ஊத்த மாட்டாங்களான்னு வாசல்ல நிண்டு ஏங்கி  தவம் கெடந்த காலம் கூட உண்டு.  மூணு  ரூபாய்க்கு சோளம் கம்பு கெடச்சி  வாங்கினா ரெண்டு நாளைக்கு குடும்பமே கஞ்சி காய்ச்சி குடிச்சி  பசியாறுவோம்.  இப்படியெல்லாம் நொந்து போய்தான் பாடுபட்டோம்.  உங்க ஆச்சி வந்த பொறவு  தான்  வாழ்க்கைல முன்னுக்கு வந்தேன்.  நாலு பணம் சேர்த்து தோட்டம் தொறவு வாங்கி மனுஷனாக்கி அழவு பாத்தா உங்க ஆச்சி. அவ என் குலசாமிலே”  என  தாத்தா தனது கஷ்டங்களை கூறி வருந்தினார்.

“அவர் வாழ்ந்த சூழ்நிலையை கேட்டு முத்து மிகவும் வருந்தினான்.  மனசு ரொம்ப வலிக்குது தாத்தா.  இனி எப்போதும் நமக்கு அப்படி ஒரு கஷ்டம் வராது.  வரவும் விடமாட்டேன் தாத்தா. நீங்க வேணா பாருங்க. நான் நிச்சயமா கலெக்டராகி என்னால முடிஞ்ச உதவிய நம்மள போல கஷ்டப்படுற குடும்பத்துக்கு செய்வேன்.  நீங்க இதப் பாக்க தானே போறீங்க”  என முத்து ஆறுதல் கூறினான்.

“சரி வாய்யா. எல்லாம் காத்துக்கெடக்காவ” என முத்துவை அழைக்க.

முத்து தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு பெற்றோரையும், ஆச்சியையும்,  உடன்பிறப்பையும்  காண ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் துள்ளிக் குதித்து  வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் மகனை காணும் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் பரிசாக கொடுத்து அவர்களை அணைத்துக் கொண்டான் முத்து.

“தன் மகனை உச்சிமுகர்ந்து தழுவிய மாரியம்மாளுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருக. அதான் புள்ள வந்துட்டானே. இப்போ எதுக்கு அழுவுற.  நீ கொஞ்சனது  போதும் இப்படி வா”,  என ஆச்சி தங்கம்மா தன் மகளை இழுத்துவிட்டு,  அய்யா முத்து எப்படிய்யா இருக்க.  இந்த ஆச்சிய காங்கணும்னு  மனசுக்கு நெனைப்பு வரலயா? என்று கேட்க.

“அப்படி எல்லாம் இல்ல ஆச்சி.  கொஞ்சம் வேலையா இருந்தேன்.  இனிமே உங்க கூட தான் இருப்பேன் ஆச்சி”,  என முத்து  ஆச்சியை அரவணைத்துக் கொள்ள.

“டேய் படவா.  சேறுடா சேறுடா”,  என ஆச்சி கத்த..

அதெல்லாம் ஒன்னும் ஆகாது ஆச்சி என முத்து சிரிக்க.

“அது சரி. உங்க ஆத்தா பாசத்துல சேறு கண்ணுக்கு தெரியாம கொஞ்சினா.  எனக்கு பாசம் இருக்கு. வயசான காலத்துல எத்தன தடவ தண்ணீல முங்கறது.  இப்படி சேரும் சகதியுமா  வந்து நிக்கீக.  வயசானாலும் உங்க தாத்தானுக்கு இன்னும் ஆட்டம் கொறையளையோ?”,  என ஆச்சி கேட்க.

ஆமா ஆச்சி.  நான் கீழே விழப் போக.  தாத்தா என்னை பிடிக்க வந்து அவரும் சேர்ந்து விழுந்துட்டாரு.

“நரிக்கு எதுக்கு நாட்டாம வேலை.  வயசானா ஓரமாக நிக்க வேண்டியது தான.  இப்ப தான் வயசு இருபதுனு நெனப்புல ஓடுதோ? “, என ஆச்சி முருகேசனைப் பார்க்க.

“என் பொஞ்சாதி கூட இருக்கும் போதும் எனக்கு இப்போதும் இருபதுதாம்லே”,  என தனது மீசையை முறுக்கி காட்டினார்.

“பிள்ளைக்கு மொளவா சுத்தி போட்டு உள்ளே போகச் சொல்லு”, என ஆச்சி மகளைப் பார்த்து கூற.

“மாரியம்மாள்  ஐந்து மிளகாயுடன்,  அடுப்புக்கரி,  கொஞ்சம் வேப்பிலையைக் கொண்டு வந்து முத்துவுக்கு திருஷ்டி கழித்து அடுப்பில் போட்டாள். அது  ‘சடசட’வென ஏறிய என் புள்ள மேல அம்புட்டு கண்ணு”  என ஆசையுடன் மகனே நெட்டி முறித்து கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து போக.

“டேய்!  முத்து இப்பதான் வந்தியா?”,  என கண்ணன் குரல் கொடுக்க.

“ஆமாடா”, என முத்து கூற.

“இந்த காலத்து பிள்ளைங்க அண்ணனுக்கு மருவாதையே கொடுக்கிறது இல்ல.  நாங்க எல்லாம் இன்னும் எங்க அண்ணன பேர சொல்லியோ டேய்னோ  சொன்னதில்ல. இதுகள  பாரு”,  என ஆச்சி கூற.

“ஆச்சி அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க” என முத்து கூற.

கண்ணனும் முத்துவும்  தோளில் கைபோட்டுக் கொண்டு வீட்டிற்கு உள்ளே வந்தனர்.

“கண்ணா அண்ணி எப்ப வீட்டுக்கு வராங்க”, எனக் கேட்க

அவள பத்தி பேசாத டா.  பெரிய சமூக சேவகின்னு  நெனப்பு.  பெண்கள் முன்னேற்றம்னு சொல்லிக்கிட்டு புருசன் பேச்சையும்  மதிக்காம,  அவங்க பொறந்த வீட்டு பேச்சையும் மதிக்காம தாலி கட்டின மஞ்சகயிறு ஈரம் கூட காயல. ட்ரெய்னிங்குனு சொல்லிட்டு  போயிட்டா.  புருசன் பேச்சை மதிக்காதவளுக்கு இனி  திரும்பி வந்தாலும் இந்த வீட்டில இடம் கிடையாது டா.

வாய மூடு  கண்ணா. அவங்க நல்லதுதான் பண்றாங்க.  முடிஞ்சா புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.  ஆணாதிக்கம் பண்ணனும்னு நினைக்காத டா.  இப்போ உனக்கு என்ன மரியாதை குறைச்சலா போயிடுச்சு.

இன்னும் என்னடா மரியாதை இருக்கு.  பொண்டாட்டிய அடக்கத் தெரியாதவன்னு ஊருல கேவலமா பேசுறாங்க. அவமானமா இருக்குடா முத்து.   ஊர்ல நல்லது கெட்டதுக்கு கூட நான் தலை காட்டறது இல்லடா.

கண்ணா பொண்டாட்டின்னா என்னனு நெனச்ச.  உனக்கு அடிமைனா.  இல்ல நீ என்ன சொன்னாலும்  அமைதியா கேட்டுட்டு தலையாட்டுற தஞ்சாவூர் பொம்மைனா. அவங்களோட முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டுடா.  அண்ணி தப்பு ஒன்னும் பண்ணல.  ட்ரெய்னிங் தானே போனாங்க.  நீ கட்டின தாலிய ஒன்னும் கழட்டி வீசலையே. உன்ன  பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.  உன் மேல உசுரா இருக்காங்க.  நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க.

டேய்!  நல்லதோ,  கெட்டதோ ஆம்பள சொல்றத கேட்டு அடங்கி நடக்கிறவ தான் பொம்பள.  எனக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு.  நான் சொல்றத தான் அவ கேட்கணும்.  என்னைக்கி என் பேச்சை கேட்காம அவ போனாலோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்.  இனி அவ எனக்கு வேண்டாம்.  ஊருக்கு வரட்டும் விவாகரத்து கொடுத்து விட்டுறேன்  என்றான் கோபமாக.

டேய்!  கண்ணா அத்தை மாமாவ கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?  நீ பண்ற தப்பு இரண்டு குடும்பத்தையும்  பாதிக்கும். (“அச்சோ! இவன் எதையாவது பண்ணி நம்ம கல்யாணத்துக்கு ஆப்பு வச்சிடுவான் போல இருக்கே” என முத்து மனதுக்குள் நினைத்துக் கொண்டான்)

“டேய்!  முத்து ஆம்பள பேச்சை கேட்டு அடங்கி நடக்கிறவதா  குடும்ப பொம்பளைக்கு அழகு. இவ தான் ஊர சுத்தி பவனி வராலே.  அதெல்லாம் செட் ஆகாதுடா.  இனி அவ இங்க வரக்கூடாது”  என்று ஆணித்தரமாக கண்ணன் கூறினான்.

“முதல்ல அண்ணி ஊருக்கு வரட்டும் கண்ணா. ஆளில்லாதப்போ  ஏன் அளந்துவிடுற” என முத்து கூற.

அவதான்  நாளைக்கு வரேன்னு எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்காளே.

மெசேஜ்  ஆஆஆ. ஏன் போன் பண்ணலையா? கண்ணா.

“ஒரு முப்பது தடவையாவது போன் பண்ணி இருப்பா.  நான்தான் எடுக்கல” என்றான்.

“கண்ணா! ஏன்டா இப்படி பண்ற.  அண்ணி வரட்டும் எல்லாம் சரியாப் போகும்” என்று கூற.

“நீ வந்து முதல்ல சாப்பிடு. மத்தத அப்பறம் பேசிக்கலாம்”  என  கண்ணன் கூறினான்.

Advertisement