Advertisement

அவள் கூற்றை ஆமோதிக்க தோன்றவில்லை அதே நேரம் அவள் உணர்வுகளை உதாசீனம் செய்யவும் மனம் வரவில்லை. இதமாய் அவள் கரம் பற்றியவன் தன் கரத்தோடு இணைத்து பிணைத்து கொண்டு “நான் தான் சொன்னேனே, அமிர்தா அத்தை எங்கயும் போகலை உன்கூட தான் இருக்காங்கன்னு. உன்னோட ஒவ்வொரு செய்கையிலயும் அவங்க நிறைஞ்சு இருப்பாங்க சஞ்சும்மா” என்று ஆறுதலாய் கூறியவன் சிறிய வடிவிலான பேழையை திறந்து காட்டினான்.

“என்னது மாமா?”. 

“இது உனக்கு சேர வேண்டியது சஞ்சும்மா” என்று கணையாழியை எடுத்து காட்டினான் துவாரகேஷ். 

ஆழியின் நடுவில் அ என்ற எழுத்து பொறிக்கபட்டு இரு பக்கமும் சிறிய அளவில் மாங்காய் வடிவம் கொடுத்து எழுத்தின் அருகில் சிறிய வைர கல் பதிக்கப்பட்டிருந்தது “எனக்கு சேர வேண்டியதா என்ன மாமா சொல்றிங்க? எனக்கு புரியலை!”.

“இது யாரோடாதுன்னு ஞாபகம் இருக்கா சஞ்சும்மா. அமிர்தா அத்தையோடது!” என்றதும் வேகமாக வாங்கி முன்னும் பின்னும் திருப்பி திருப்பி பார்த்தவளுக்கு விழிகள் கலங்கியது.

அழுத்தமாய் கணையாழியில் ஆழமுத்தமிட்டு “ஆமா மாமா அம்மாவோடது தான் பர்ஸ்ட் வெட்டிங் டேக்கு அப்பா அவங்களுக்கு ஆசையா வாங்கி கொடுத்ததுன்னு அம்மா சொல்லிருக்காங்க” என்றாள் உற்சாகம் ததும்பும் குரலில்.

மனைவியின் புன்னகை அவன் இதழிலும் ஒட்டி கொள்ள “மின் மயானத்துல கழட்டி கொடுத்தாங்க. அத்தையோட விரல்ல இருந்து கழட்டவே முடியலை அங்க வேலை பாக்குறவங்க தான் சிரமப்பட்டு கழட்டி கொடுத்தாங்க. 

அன்னைக்கே கொடுத்துருப்பேன் ஆனா.. நீ இருந்த நிலைமையில கொடுக்க தைரியம் வரல சஞ்சும்மா. அத பாத்து இன்னும் வேதனையும் வலியும் அதிகம் ஆகும்னு கொடுக்காமலே இருந்துட்டேன்” என்றான் துவாரகேஷ்.

“இன்னைக்கு மட்டும் எதுக்கு கொடுத்திங்க இப்போ இதை பாக்கும் போது கஷ்டமா இருக்காதா?” என்று எதிர் கேள்வி கேட்டு நிறுத்த.

“இருக்காது சஞ்சும்மா” என்று அறுதியிட்டு உரைத்தவன் “முன்னாடி உரிமை இல்லாதவனா இருந்தேன் ஆனா இப்போ அப்டி இல்ல. முழு உரிமை இருக்கு. உனக்கு ஆறுதலா சுகத்துக்கத்துல பங்கெடுத்துக்க எனக்கு முழு உரிமை இருக்கு. நா இருக்கும் போது உன்ன கஷ்டப்பட விட்டுருவேனா? இல்ல அன்னைக்கு மாதிரி கையாலாகதவனா வேடிக்கை பாத்துட்டு இருப்பேனா?” என்று அமிர்தாவின் இழப்பில் உயிரும் உணர்வும் அற்று இருந்தவளை ஆற்ற முடியாது விலகி நின்ற நாளை நினைவு கூர்ந்து சொல்லும் போதே வேதனை அவன் நெஞ்சை தொட்டு சென்றது.

“டேய் கிளம்பியாச்சா டைம் ஆச்சு சீக்கிரம் வீட்டுக்கு போகணும் பசிக்கிது” என்ற விஷ்ணுவின் குரல் கேட்டு எந்தவித உணர்வையும் காட்டாது அவனை பார்த்து கொண்டிருந்த சஞ்சளா அவசரமாக உடைகளை எடுத்து வைக்க. மென்னகை அவன் இதழை அலங்கரிக்க மனையாளுக்கு உதவலானான் ஆடவன்.

சற்று நிமிடத்தில் அறையில் இருந்து டிராலியை தள்ளி கொண்டு துவாரகேஷ் வர, அவன் பின்னோடு வந்தவளை கண்டு “ஓகே ஆன்ட்டி நாங்க கிளம்புறோம்” என்று விஷ்ணு எழுந்து கொள்ளவும் வைதேகியும் எழுந்து கொண்டாள்.

உணவு மேஜையில் இருந்த பாத்திரத்தை பார்த்த சஞ்சளா “வைத்திக்கா பர்ஸ்ட் டைம் நா சமைச்சிருக்கேன் சாப்ட்டு போலாமே..” என்று கெஞ்சலாய் கேட்க.

விஷ்ணு வைதேகி இருவரும் திருதிருவென விழித்தனர். “இல்ல சஞ்சு வீட்டுல போய் சாப்ட்டுக்கலாம் சித்தி ரெடி பண்ணிருப்பாங்க” என்று வைதேகி நைச்சியமாய் பேசி நழுவ முற்பட, அவளது முயற்சிகள் எல்லாம் வீண் போனது சஞ்சளாவின் கெஞ்சல் மொழியில்.

“ப்ளீஸ் க்கா..” என்று கண்களை சுருக்கி கெஞ்சியத்தில் வேறு வழியில்லாமல் கணவன் மனைவி இருவரும் உணவருந்த அமர்ந்தனர். பாவம் உணவின் சுவை உப்பின் மிஞ்சிய அளவில் அபரிமிதமாக இருக்கும் என்று நால்வருக்கும் தெரியாமல் போனது.

நால்வருக்கும் பரிமாறியவள் தனக்கும் போட்டு கொண்டு நால்வரின் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள். தன் மனைவியின் கைப்பக்குவதை பரபரப்புடன் முதலில் ருசி பார்த்த துவாரகேஷ் வாயடைத்து போனான். 

விழுங்கவும் முடியாமல் துப்பாவும் முடியமால் விழிகள் பிதுங்க விழித்தவனை பார்க்க சிரிப்பாய் இருந்தாலும் உணவின் ருசியை அறிந்து கொள்ள வேண்டி “என்ன மாமா நல்லா இருக்கா?” என்று புருவம் உயர்த்தி விழிகள் விரிய ஆவலோடு கேட்க.

‘பாவி உப்புமாவுல உப்பை அள்ளி கொட்டிருக்கயேடி’ என்று வாய்வரை வந்த வார்த்தையை உணவோடு சேர்த்து கடினப்பட்டு விழுங்கியவன் “ம் நல்லா இருக்கு. இதுவரைக்கும் இப்டி ஒரு உப்புமாவ நா சாப்ட்டதே இல்ல. சமையல்ல அம்மாவையே மிஞ்சிட்ட சரவெடி” என்று தலையை ஆட்டி ஆட்டி புகழ்ந்தவனை கூர்மையான பார்வையில் சந்தேகமாய் பார்த்தாள் சஞ்சளா.

அவள் பார்வை உணர்ந்து “சத்தியமா நல்லா இருக்கு” என்று இடது கையை தலையில் வைத்து பிரமாணம் செய்தவன், முகத்தில் எதையும் காட்டாது உணவை கடினப்பட்டு உள்ளே தள்ள.

விசாலாட்சியோ.. ஏன் சமையல் செய்ய அனுமதித்தோம் என்று நொந்து போனார். உணவை வயில் வைத்த நொடி ஒரே கரிப்பு இருந்தும் எடுத்த எடுப்பிலேயே குறை கூற மனமில்லாமல் முயற்சி செய்திருக்கிறாளே என்று எண்ணியவர் மகனை போலவே  எதுவும் சொல்லாமல் உணவை கடினபட்டு விழுங்க.

வைதேகியும் விஷ்ணுவும் துவாரகாவின் முகத்தையும் விசாலாட்சியின் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் முகம் போன விதமே சொல்லியது ஏதோ சொதப்பல் என்று.

அருகில் இருந்த இருவரையும் பார்த்த துவாரகேஷ்  “என்னடா பசிக்கிதுன்னு சொன்ன சாப்டு உன்னோட தங்கச்சி ஆசையா பண்ணிருக்கா உப்பு..மா..” என்று அழுத்தமாய் கூறியவன் பார்வையால் எதையோ மறைமுகமாக உரைக்க.

அவன் அழுத்தம் கொடுத்து சொன்னதில் புரிந்து கொண்ட விஷ்ணு சன்னமாய் புன்னகைத்து “சாப்ட்டு தேவிம்மா” என்று உணவை விழுங்க தொடங்கினான்.

“எனக்கு போதும் வயிறு நிறைஞ்சிருச்சு” என்ற விசாலாட்சி பாதி உணவிலேயே கைகழுவ எழுந்து சென்று விட.

மற்ற மூவரும் உண்பதை ஆசையோடு பார்த்து கொண்டிருந்தவள் தானும் ஒரு வாய் கவளத்தை உள்ளே வைக்க முகம் அஷ்டகோணலாக மாறிய அடுத்த நொடி வேகமாக எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.

வாயில் அடைத்திருந்த உணவை சிங்கிள் துப்பியவள் உப்பின் தன்மை போகும் வரை தண்ணீர் கொண்டு கொப்பளித்துவிட்டு வர, மூவரும் அமைதியாக உணவை பிசைந்து கொண்டிருந்தனர். 

மூவரையும் பார்வையால் மாறி மாறி அளந்தவள், பார்வையை கொண்டவனிடம் நிலை நிறுத்தினாள் ‘கட்டியவன் பொறுத்த கொள்வதில் அர்த்தம் உள்ளது ஆனால் இவர்கள் ஏன் பொறுத்து கொள்ள வேண்டும் குறையை கூறியிருக்கலாமே?’ என்று சிந்தனையில் இருந்தவளின் முக பாவனையை கவனித்து கொண்டிருந்த துவாரகேஷ் அவள் விழிகள் கலங்குவதை கண்டு.

“என்ன சஞ்சும்மா உப்புமா கரிக்கிதா?” என்று கரிசனமாய் கேட்க

“இல்ல” என்று வேகமாக தலையாட்டியவள் மூக்கை உறிஞ்சியபடி “உங்க அன்பை பாத்து அழுகை வருது. ஏன் முன்னாடியே சொல்லலை வாயில வைக்க முடியல ஒரே உப்பு. எப்டி எதுவுமே சொல்லாம சாப்பிடுறீங்க?” என்று கேட்கும் போதே குரல் உடைந்து அழுகை வெளிப்பட்டது சஞ்சளாவிற்கு.

“முதல் தடவை சமைச்சிருக்க எடுத்த எடுப்பிலேயே நல்லா இல்லன்னு சொன்னா மனசு கஷ்டப்படும்னு தான் சொல்லலை பர்ஸ்ட் டைம் தான ம்மா. கொஞ்சம் அப்டி இப்டி இருக்க தான் செய்யும் போக போக சரியாகிரும் ஒரு நாள் உப்பு அதிகமா போட்டு சாப்டா ஒன்னும் ஆகாது” என்று உள்ளன்புடன் உரைத்தான் விஷ்ணு.

“போதும் அழுதது. அதான் விஷயம் தெரிஞ்சிருச்சே பின்ன என்ன? நல்ல வேலை சாப்ட்டு முடிக்கிற வரைக்கும் பாத்துட்டு இருக்காம போன இல்லன்னா உப்பு… மாவை சாப்ட்டு நொந்து போயிருப்போம். பாவம் அம்மா ஒரு வாய் வச்சதும் அவங்க முகம் போன போக்கை பாக்கணுமே இதுக்கு மேல முடியதுடா சாமின்னு நைசா எந்திரிச்சு போயிட்டாங்க இனி உப்புமா பேரை கேட்டாலே தலை தெறிக்க ஓடிருவாங்க. ஒரே நாள்ல ஒரே ஒரு வாய் உப்புமாவுல மொத்தமும் க்ளோஸ்”என்று துவாரகேஷ் கிண்டல் செய்ய. 

“போதும்! கிண்டல் பண்ணது” என்று கைகழுவி வந்து ஆஜரான விசாலாட்சி “முதல் முறையா இருந்தாலும் நல்லா பண்ணிருக்கா ரொம்ப குழையாம ரொம்ப உதிரியாவும்  இல்லாம பதமா செஞ்சிருக்கா. பாக்க நல்லா இருக்கு கொஞ்சம் உப்பு அதிகமாயிருச்சு அவ்ளோ தான்” என்று ஆதரவாக பேச.

“ஃபீல் பண்ணாத நல்லா இருக்கு சஞ்சு உப்பு மட்டும் அதிகமா இல்லன்னா இன்னும் நல்லா இருந்துருக்கும்” என்ற வைதேகி கைகழுவ சென்றுவிட பின்னோடு விஷ்ணுவும் சென்று விட்டான்.

கண்கள் கலங்கி நின்றவளின் அருகில் சென்றவன்  “சந்தோஷமா இருக்கு வேண்டிய நேரத்துல செண்டிமெண்ட் சீன் எல்லாம் வேணாம் கிளம்பு சரவெடி டைம் ஆச்சு” என்றான் இதமாக . 

“நீயும் வர்ற தானே?” என்ற விஷ்ணுவிற்கு, “இல்லடா அம்மா தனியா இருப்பாங்க நீங்க போய்ட்டு வாங்க” என்றான் அயர்வுடன் துவாரகேஷ். 

இருவரின் பேச்சையும் கேட்டு கொண்டிருந்த விசாலாட்சி “இத்தனை நாள் கூடவே இருந்தவன் மாதிரி பேசுற நீ வேலைக்கு கிளம்பி போன பிறகு தனியா தானே இருப்பேன் இன்னைக்கு என்ன பாசம் பொங்கி வழியிது? அவள போய் விட்டுட்டு வாடா” என்று  கண்டிப்புடன் சொல்லவும்,

மறுத்து பேசாமல் சரியென்று தலையாட்டியவன் பைக் சாவியையும்  உடன் சஞ்சளாவின் உடமையையும் எடுத்து கொண்டு முன்னே சென்றுவிட விசாலாட்சியிடம் விடைபெற்று கொண்டு மூவரும் வெளியே வர. வாகனத்தை உயிர்ப்பித்து வைத்திருந்தான் துவாரகேஷ் சஞ்சளா பின்னால் ஏறி கொண்டதும் “சரிம்மா போய் விட்டுட்டு வறேன்” என்றவன் “என்னடா போலாமா?”.

“ம்” என்று தலையாட்டிய விஷ்ணு வைதேகி பின்னால் எறிக்கொண்டதும் கிக்கரை உதைத்து உயிர்பித்தவன். ஹேண்டில் பாரில் அழுத்தத்தை கொடுக்க இரு வாகனமும் இல்லம் நோக்கி விரைந்தது.

தொடரும்

எதனால் இமை பார்த்தது

எதனால் இதழ் கோர்த்தது

வங்கக்கடல் ஈரம் போகுமா

இந்த புதிர் காதல் ஆகுமா….

இமை மூடாமல் இரை தேடாமல்

உன் உணர்வால் விழித்திருப்பேன்…

சற்றுமுன் கிடைத்த தகவல்படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே.. என் உயிரே..

என் உயிரே உயிரே

Advertisement