Advertisement

அவளோ நமட்டு சிரிப்புடன் தலை குனிந்து கொள்ள. 

“அது.. அது.. வந்து.. ரெட் இங்க் ம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல” என்று சமாளித்தவன் “நா சொன்னது சொன்னது தான் அதுல எந்த மாற்றமும் இல்ல” என்று தீர்க்கமாய் கூற.

“அவ மேல இருந்து வரும் போதே பாத்துட்டேன் மேல என்ன நடந்துருக்கும்னு நீ எதுவும் எனக்கு சொல்ல தேவையில்ல. உடன்பாடு இல்லாதவன் தான் யாருக்கும் தெரியாம தாலி கட்டுனியா? மனசுல இருக்குற ஆசைய யாருக்காக ஒளிச்சு வக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். உங்க ரெண்டுபேரோட சந்தோஷத்துக்கு குறுக்க நிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல துவாரகா!. போனது போகட்டும் அதது நடக்க வேண்டிய நேரத்துல நடந்திரனும்” என்று அழுத்தமாய் கூறிய விசாலாட்சி.

தணிந்து பேச தொடங்கினார் “என்ன இருந்தாலும் நீ என்னோட பையன். ஆசைப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிருக்க அதுவும் எனக்கு பிடிச்ச என்னோட அண்ணே பொண்ணயே” என பேசி கொண்டே சென்றவரின் மடியில் சட்டென முகம் புதைத்து அழ தொடங்கினான் துவாரகேஷ்.

மகனின் செயலில் பதறி போனவர் “டேய் துவாரகா” என்று தணிவாக அழைக்க.

“சாரிம்மா நா பண்ணது தப்புன்னு நீங்க பேசுன பிறகு தான் தெரிஞ்சது என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க என்னால தாங்கிக்க முடியாது ம்மா” என்று தேம்பி அழுத மகனை கண்டு தாயின் உள்ளம் உருக.

“ப்ச் இப்போ எதுக்குடா அழுகுற பண்றதையெல்லாம் பண்ணிட்டு அழுகை கேட்குதா உனக்கு?” என்று செல்லமாய் கடிந்து கொண்டவர் புதல்வனின் தலையை பரிவாக வருடி கொடுத்தார்.

“மன்னிச்சிருங்க ம்மா இனிமே உங்க மனசு காயப்படுற மாதிரி எந்த காரியத்தையும் பண்ண மாட்டேன், அவ மனசுல இருக்குறதை தெரிஞ்சுகிட்டு சர்ப்ரைஸ்ஸா உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அதான் நீங்க கேட்டப்போ கூட அவகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். அவளோட விருப்பத்தை கேக்குறதுக்கு தான் கோவிலுக்கு கூட்டிட்டு போனேன் ஆனா செக்கெண்ட் ஆப்ஷன செய்ய வேண்டியதா போச்சு” என்று விம்மிய மகனின் முகத்தை  நிமிர்த்தியவர் சேலை தலைப்பால் அவன் கண்ணீரை துடைத்து விட்டு அருகில் இருந்த சேரில் அமர வைத்தார்.

விசாலாட்சியின் கைகளை இறுக பற்றியபடி அமர்ந்தான் துவாரகேஷ் “விடு கண்ணா ஒருவகையில நானும் தப்பு பண்ணிருக்கேன். நீ சொல்ல வேணாம்னு சொல்லிருந்தாலும் அவகிட்ட நா உண்மைய சொல்லிருக்கணும் அப்டி பண்ணிருந்தா அவளோட முடிவுல மாற்றம் இருந்துருக்கும் நீயும் இப்டி பண்ணிருக்க மாட்ட” என்று வருத்தம் இழையோட கூறியவர். 

“என்ன ஒன்னு உன்னோட கல்யாணத்தை கண்குளிர பாக்குற பாக்கியம் எனக்கு இல்லாம போச்சு ஒரே பையன் இல்லையா? அதை நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்குடா என்னைக்கும் நினைப்ப விட்டு போகாது. ஒரு விஷயத்தை மன்னிச்சு ஏத்துக்கலாம் ஆனா காலத்துக்கும் அதை மறக்க முடியாது இல்லையா?” என்று ஆதங்கத்துடன் பேசியவரின் விழிகளில் ஈரம் படர்ந்தது.

தன் தாயின் முகத்தில் தெரிந்த ஆற்றாமை கண்டு முகம் கசங்கியவன் ஆற்று தேற்ற திராணியற்று தன்னால் தானே இந்த வேதனை என்ற குற்றவுணர்வு மேலோங்க தவிப்பில் ஆழ்ந்தான் துவாரகேஷ்.

தாய் மகன் இருவரின் பேச்சையும் அருகில் இருந்து அமைதியாய் கேட்டு கொண்டிருந்த சஞ்சளா இருவரையும் சேர்த்து வைத்த தன் தாய்க்கு மனதில் நன்றியுரைக்க.

“சாரிம்மா” என்று மீண்டும் தொடங்கிய மைந்தனை “டேய் போதும்டா..”என்று அடக்கிய விசாலாட்சி.

“எத்தனை தடவை மன்னிப்பு கேட்ப கோபம் வரும் தான். ஆனா எந்த தாயும் தன்னோட பிள்ளைய வெறுத்து ஒதிக்கிட மாட்டா உன்மேல எனக்கிருந்த கோபம் எப்பவோ போயிருச்சு” என்றவர் “லிஸ்டுல இருக்குறதை சீக்கிரம் போய் வாங்கிட்டு வா” என்று சிரித்து கொண்டே சொல்ல.

“என்ன வாங்கிட்டு வரணும்?” என்ற குரல் கேட்டு மூவரும் வாசலை பார்த்தனர். 

விஷ்ணு வைதேகி இருவரும் உள்ளே வந்து கொண்டிருந்தனர் “வைத்தி க்கா” என்று சஞ்சளா இன்முகமாய் அழைக்க.

“சஞ்சும்மா” என்று சிரிப்பை அடக்கிய குரலில் அழைத்தவள் “அம்மாவும் பிள்ளையும் சமாதானம் ஆகியாச்சா?”.

“ஒருவழியா வெள்ளை கொடி காட்டிடாங்க க்கா இருக்குறது மூணு பேரு ரெண்டுபேரும் முகத்தை சோகமா வச்சுக்கிட்டா நா என்ன பேசுறது, யார்கிட்ட பேசுறதுன்னு, ஒரு சின்ன கவலை இருந்துச்சு. ஹப்பாடா இனி அந்த கவலை இல்லை” என்று நிம்மதி மூச்சை வெளியிட்டு கண்களில் சிரிப்புடன் கணவனை பார்த்தாள் சஞ்சளா.

“வாலில்லாத வானரத்துக்கு கவலைய பாத்தியா வைதேகி” என்று துவாரகேஷ் கிண்டல் பேச.

“யாரு யாரு வானரம்?” என்று வேகமாக கேட்டு அவன் முன்னே வந்தவள் “அத்தை உங்க தங்கத்தை சேதாரம் ஆகாம பாத்துக்கோங்க டேமேஜ் ஆனா நா பொறுப்பில்ல” என்று மிரட்டும் தோணியில் பேசி ஒரு மார்க்கமாக முறைத்து பார்க்க. சிரிப்பு பீறிட்டது துவாரகேஷிற்கு.

அமிர்தாவின் இறப்பிற்கு பின் ஓட்டுக்குள் அடைந்து கொண்ட ஆமையாய் தனக்குள் தன்னையே சுருக்கி கொண்டவள் இப்போது இயல்பாய் பேசி வம்பளப்பதை பார்க்க ஆனந்தமாய் இருந்தது நால்வருக்கும். முன்பிருந்த சஞ்சளா எட்டி பார்த்ததில் பரம திருப்தி துவாரகேஷிற்கு.

“என்னடா ஈவ்னிங் தானே போனீங்க? சொல்லாம ரெண்டுபேரும் வந்துருக்கீங்க என்ன விஷயம்?” என்று துவாரகேஷ் கேட்க.

“நல்ல விஷயம் தாண்டா” என்றவன் “தேவிம்மா என்னனு சொல்லு” என்று மனையாளை ஊக்கினான் விஷ்ணு.

“அது இருக்கட்டும் நீங்க என்ன பிளான் பண்ணிட்டு இருந்திங்க அத முதல சொல்லுங்க?” என்ற வைதேகியின் கேள்வியில் துவாரகேஷும் சஞ்சளாவும் விசாலாட்சியின் முகம் பார்த்தனர். 

“நல்ல விஷயம் தான் வைதேகி கல்யாணம்.., ஏனோ தானோன்னு நடந்திருந்தாலும் நடக்க வேண்டியது நல்ல நேரத்துல நடக்கணும் இல்லையா?. அதுக்கு தேவையானதெல்லாம் வாங்கிட்டு வர சொல்லி சொன்னேன் வேற ஒன்னுமில்ல ம்மா. தனியா எப்டி பண்றதுன்னு சின்ன யோசனை இருந்துச்சு நீங்களே வந்துட்டீங்க” என்ற விசாலாட்சியின் பேச்சில் விஷ்ணுவை பார்த்தாள் வைதேகி. இன்றே அழைத்து வரலாம் என கணவன் பிடிவதமாய் கூறியதன் காரணம் புரிய பார்வையால் மெச்சி கொண்டவள்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் ஆன்ட்டி” என்றாள் வைதேகி.

“என்னம்மா சொல்லு?”.

“நாங்க ஒரு விஷயம் முடிவு பண்ணிருக்கோம் உங்களுக்கு ஓக்கேன்னா அப்டியே பண்ணிறலாம்” என்று கணவனை பார்க்க.

“சொல்லு தேவிம்மா” என்றதும் “விஜி அண்ணாக்கு கல்யாணம் நடக்குற அதே நேரத்துல இவங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். நீங்க என்ன ஆன்ட்டி சொல்றிங்க? அவசரத்துல நடந்த கல்யாணம் நாம யாருமே பாக்கலை நம்மள தவிர வேற யாருக்கும் தெரியாது. நாளப்பின்ன பாக்கிறவங்களுக்கு இந்த மாதிரின்னு தனி தனியா பதில் சொல்லிட்டு சங்கடப்பட வேண்டிய அவசியமும் இருக்காது” என்ற வைதேகி மட்டுமல்லாது மற்றவர்களும் விசாலாட்சியின் முகத்தை சிறு எதிர்பார்ப்போடு பார்த்தனர். 

ஆழ்ந்த சிந்தனையில் இறங்கிய விசாலாட்சிக்கு வைதேகியின் கூற்று சரியென பட்டது. ‘வீண் பேச்சுக்களை தவிர்க்கலாம்’ என்று எண்ணியவர் சம்பந்தப்பட்ட இருவரிடம் “நீங்க என்ன சொல்றிங்க உங்களுக்கு சம்மதம் தானே?” என்று கேட்க.

“எங்களுக்கு ஓகே அத்தை. பண்ண தப்ப சரி செய்ய ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு உங்க மனவருத்தம் ப்ளஸ் எங்களுக்கு இருக்குற கில்டி ஃபீல் ரெண்டும் இல்லாம போகும்” என்றவள் “என்ன துவா மாமா உங்களுக்கு ஓகே தானே?” என்று அருகில் இருந்தவனின் தோளில் லேசாய் இடித்து சம்மதம் கேட்க.

“எனக்கு ஓகே சஞ்சும்மா” என்று கண்சிமிட்டி புன்னகை முகமாய் கூறினான் துவாரகேஷ்.

“சரி ஆன்ட்டி அப்ப நாங்க  கிளம்புறோம் விஷயத்தை சொல்லி சஞ்சளாவை கூட்டிட்டு போலாம்னு தான் வந்தோம்” என்றதும் “எதுக்கு” என்றான் அதிர்ந்த குரலில் துவாரகேஷ்.

“டேய்..” என்று முறைத்து பார்த்த விஷ்ணு “கல்யாணம் முடியிற வரைக்கும் ரெண்டுபேரும் ஒன்னா இருக்குறது சரிவராது அதான் கூட்டிட்டு போறோம். அதுவுமில்லாம, சஞ்சளா அம்மா வீட்டுல தான் இருக்கணும் மாப்பிள்ளை வீட்டுல இருக்க கூடாது. சாவித்ரி சித்தியும் அவளுக்கு அம்மா தான். சித்தி தான் கூட்டிட்டு வர சொன்னது போதுமா” என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல.

“சரியா சொன்ன விஷ்ணு கூட்டிட்டு போ அவள. இப்பவே இவன் சரியில்ல” என்ற விசாலாட்சி மகனை பார்த்து சிரிக்க.

“ம்மா..” என்று இழுத்து ராகம் பாடியவன் கூம்பிய முகத்துடன் சஞ்சளாவை பார்த்தான். 

அவன் முகம் போன போக்கை கண்டு சிரித்தவள் “வைத்திக்கா ஒரு பத்து நிமிஷம் டிரெஸ் மாத்திட்டு தங்குறதுக்கு தேவையான டிரெஸ் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று அறைக்கு சென்றுவிட. 

பின்னோடு செல்ல முற்பட்டவனை பிடித்து கொண்ட விஷ்ணு “எங்க போற? வந்து உக்காரு” என்றான் அதிகாரமாய். 

“டேய் ஒரு முக்கியமான விஷயம். போய் பேசிட்டு வந்துடுறேன்” என்று முகத்தில் பரபரப்பை தேக்கி கூறவும்,

பற்றிய கரத்தின் பிடியை தளர்த்த விட்டால் போதுமென வேகமாக அவன் அறைக்கு சென்று எதையோ எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தான் துவாரகேஷ். 

துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சஞ்சளா “எனி ஹெல்ப்” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் “ச்சே இப்டியா வந்து பயமுறுத்துவீங்க?” என்று பயத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு மூச்சு வாங்கியபடி நிற்க.

அவள் செயலில் விச்சித்திரமாய் நோக்கியவன் “என்ன ஆச்சு சஞ்சு எதுக்கு இவ்ளோ பயம் பழகுன இடம் தானே?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை சொன்னா நீங்க நம்புவீங்களா இல்லையான்னு தெரியலை மாமா” என்றவள் “அம்மா இருக்குறதை நா உணர்ந்தேன். அவங்க என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. அந்த குரல்! எப்பவும் அதட்டி அழுத்தமா ‘ஏய் சஞ்சுன்னு’ கூப்டுவாங்களே அதே குரல்! அதே குரல் தான்!. கேட்டுச்சு மாமா.

காத்துல ஜன்னல் கதவை சாத்த போனேன் அப்போ பக்கத்துவீட்டு மரத்துல இருந்து என்மேல பூ விழுந்துச்சு மாமா” என்றவளுக்கு கூறும் போதே உடல் சிலிர்த்து குரல் நடுங்கியது.

Advertisement