Advertisement

“இன்னும் சரியான பதில் வரலயே. ஒழுங்கா விஷயம் என்னனு சொல்லிட்டு போ சரவெடி என்ன ஏற்பாடு பண்றாங்க?” என்று புருவம் உயர்த்தி கேட்டவன், எழுந்த கள்ளசிரிப்பை முயற்சி செய்து அடக்கினான். 

“ப்ச் என்னவோ பண்றாங்க அதை விடுங்க. உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டு இருக்க முடியாது” என்று கோபத்தில் இதழ் சுளித்தவள் “அத்தை கீழ காத்திட்டு இருக்காங்க நா போறேன் கீழ தானே வருவிங்க அப்ப பாத்து தெரிஞ்சுகோங்க” என்றவாறே அவன் பிடியில் இருந்த கையை உறுவ முற்பட்டாள்.

“ஓய் சரவெடி” என்றவனின் மந்தகாச சிரிப்பில் “இந்த மரமண்டைக்கு எதையும் விளக்க வேண்டிய அவசியமில்ல என்ன சொல்ல வறேன்னு நீ சொல்லாமலே தெரிஞ்சுக்கிட்டேன் அதை தள்ளி நின்னு சொன்னா நல்லா இருக்காது” என்று சற்று விலகி நின்றவளை அருகில் இழுக்க எதிர்பாரா செயலில் நிலை தடுமாறி அவன் மீது மோதி நின்றவள் மிகசமீபத்தில் தெரிந்த அவன் முகத்தை விழிகள் விரிய பார்த்தாள்.

விலகி செல்ல முடியாதபடி கரம் கொண்டு அணைகட்டியவன் “என்ன பர்ஸ்ட் நைட்க்கு ஏற்பாடு பண்றாங்களா?” என்று புருவம் உயர்த்தி விஷமமாய் கேட்டு சிரிக்க.

விரிந்த இமைகள் தாழ்ந்திட. மின்னல் வெட்டிட மலரும் தாழம்பூவாய் வதனத்தில் புன்னகை அரும்பியது.அவன் முகத்தை பார்க்க முடியாமல் கையால் முகத்தை மறைத்து கொள்ள.

அவள் செயலை பார்க்க பார்க்க அத்தனை சுவரஸ்யமாய் இருந்தது துவாரகேஷிற்கு ஏதோ புதிதாய் பார்ப்பதை போல விழிகளை விலக்காமல் பார்த்தவன் “ஏய் என்ன பண்ற சரவெடி..? நீ பண்றத பாக்கும் போது எனக்கே ஒரு மாதிரியா இருக்கு” என்று அட்டகாசமாய் சிரித்தவன். 

“நீ நார்மலாவே இரும்மா ஓவரா வெட்கபட்டு எனக்கு அவஸ்தையை உண்டாக்காத. தாலி கட்டிருந்தாலும் இப்போதைக்கு எதுவும் வேணாம்னு, என்ன நானே கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் கெடுத்துறாத” என்று பாவமாய் உரைத்தாலும் இதழ் கூட்டி முத்தமிட மனம் துடித்தது.

விழிகளுக்கு திரையிட்டிருந்த கரங்களை விலக்கி இடுப்பில் கைவைத்து முறைப்பு காட்டியவள் “போரா தொங்கா..” என்று கையில் நறுக்கென்று கிள்ளி வைத்து கோபத்தில் முகத்தை திரும்பி கொள்ள.

ஷ்.. ஆ.. என்று கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டு கைதட்டி அவுட்டு சிரிப்பு சிரித்தவன், வயிற்றை பிடித்து கொண்டு மூச்சையும் சிரிப்பையும் சீர்படுத்த ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டு “அர்த்தம் தெரியாத பாஷையில் என்னமோ திட்டுறன்னு தெரியிது ஆனா அதுக்கு மீனிங் தான் என்னன்னு தெரியல கூடிய சீக்கிரமே அந்த வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கிறேனா இல்லையான்னு பாரு” என்று ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாய் உறுதிபட உரைத்தவனிடம் அலட்சிய பார்வை வீசியவள்,

“அதையும் தான் பாப்போமே மிஸ்டர் தொங்கா” என்று முகத்தை வெடுக்கென திருப்பி கொள்ள.

அவள் பாவனையில் சிரிப்பை அடக்கியவன் அதற்கு மேலும் தவிப்பை அடக்க முடியாது நொடிபொழுதில் காட்டிவிட்டான் இதழ் ஸ்பரிசத்தை. எதிர்பாரா செயலில் முதலில் திகைத்து விழித்தவள் பின் இமைமூடி அவன் உணர்வுகளை இதமாய் உள்வாங்க உச்சி முதல் உள்ளங்கால் வரை அணுக்கள் விரவி சிலிர்ப்பை உண்டாக்கியது.

முத்த காரியத்தின் வீரியம் கடைநிலை அடையும் முன்னே சட்டென அவளை விலக்கி நிறுத்தி அவள் முகம் பாராது முதுகாட்டி திரும்பி கொண்டான் துவாரகேஷ். மூச்சு வாங்க நின்றவள் அவனின் தீடீர் செயலில் புரியாது திகைத்து பின் தோளில் இதமாய் கரம் வைக்க. 

மெல்ல அவள் கரம் விலக்கியவன் “ப்ளீஸ் சரவெடி இங்க இருந்து போ..” என்றான் அவஸ்தை நிறைந்த குரலில்.

“மாமா” என்று மெல்லிய குரலில் அழைக்க.

தலையை அழுந்த கோதி விட்டவன் “முன்னவிட இப்போ அதிக உரிமை இருந்தாலும் உறுத்தல் அதைவிட அதிகமா இருக்கு சஞ்சும்மா. அம்மாவோட மனசை உடைச்சிட்டு இந்த மாதிரி பண்றது என்னவோ மாதிரி இருக்கு சாரி. உண்மைய சொல்லனும்னா அழகை ஆராதிக்காம இருக்க முடியலை நீ நார்மலா பேசிருந்தா கூட ஒரு மாதிரியா இருந்துருக்காது திக்கி திணறி என்னைக்குமே காட்டாத வெட்கம், உரிமையான கோபம் இதெல்லாத்தையும் ஒன்னா பாக்கவும் ஒரு மாதிரி ஃபீல் ஆகிருச்சு அதான்..இந்த மாதிரி..” என்று தயங்கி நிறுத்தியவன் அவள் புறம் மறந்தும் திரும்பவில்லை.

அவன் விளக்கத்தில் மென்னகையை இதழில் நிரப்பியவள் “உஃப் இவ்ளோ தானா நா கூட வேற என்னமோன்னு நினைச்சுட்டேன். அத்தையோட கோபம் தணியிற வரைக்கும் வெய்ட் பண்ணலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. சரி சாப்ட வாங்க அத்தை நமக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள் எந்தவித சலனமோ சடவோ இல்லாத இயல்பான குரலில்.

அவளின் பக்குவம், இயல்பாய் ஏற்று கொள்ளும் குணம் அவனுக்கு சற்று திகைப்பை உண்டாக்க. அவள் புறம் திருப்பியவன் “ஏன் சஞ்சு என்மேல உனக்கு கோபமே வரலையா?”.

“எதுக்கு கோபப்படனும்?”.

“நா அந்த மாதிரி வீதியில நின்னு நாலு பேரு வித்தியாசமா பாக்கிற மாதிரி தாலி கட்டுனதுல உனக்கு வருத்தமாவே இல்லையா? அம்மா மாதிரி நியும் என்மேல கோபப்படுவன்னு பாத்தேன் ஆனா சாதாரணமா எடுத்துகிட்ட. என்ன அவ்ளோ பிடிக்குமா உனக்கு” என்று புருவம் அரை இன்ச் மேலெழும்ப ஆச்சர்யம் ததும்பும் குரலில் கேட்டான் துவாரகேஷ்.

“பிடிக்கு..மாவா… ரொம்ப… பிடிக்கும். இவரு தான் உன்னோட மாமான்னு அம்மா சொன்ன அந்த நிமிஷத்துல இருந்து உங்கள பாக்கணும் உங்ககிட்ட பேசணும்னு தவிச்சுட்டு இருந்தேன் அதெல்லாம் சொன்னா புரியாது உங்களுக்கு. பெரியவங்க மன்ஸ்தாபத்துல உங்களுக்கு அம்மா மேல கோபம் இருந்துச்சுன்னு அத்தை சொன்னாங்க. அதுக்கு முன்னாடியே அம்மா சொல்லிருந்தாங்க ரெண்டு குடும்பமும் பேசிக்க மாட்டோம்னு. அதனாலயே ஆரம்பத்துல நா யாருன்னு உங்ககிட்ட காட்டிக்கலை யாருன்னு தெரிஞ்சு ஒருவேளை என்ன வெறுத்து ஒதுக்கீட்டிங்கன்னா? அதை என்னால தாங்கிக்க முடியாது”, முகம் சோகத்தை பிரதிபலித்தது.

“அத்தைக்கு உங்கமேல கோபம் இருக்குன்னா அது நியாயமான கோபம். நம்பிக்கைய சிதைச்சுட்டானேன்ற ஆதங்கம். எப்டியெல்லாம் மகனோட கல்யாணத்தை நடத்த ஆசைப்பட்டுருப்பாங்க, அது நடக்கமா போயிருச்சேன்ற வருத்தம். அவங்க கேட்டும் சொல்லவேணாம்னு சொல்லிட்டு இப்டி ஒரு காரியத்தை பண்ணிட்டீங்களேன்ற கோபம். அது இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு சரியாகிரும் மாமா அதை நினைச்சு கில்டியா ஃபீல் பண்ணாதீங்க” என்றவள் 

“உங்க மேல எனக்கு கோபம் இருந்துச்சு தாலி கட்டிட்டு எங்க வேணாலும் போன்னு சொல்லிட்டு விட்டுட்டு போனீங்களே அப்போ செம்ம கோபத்துல இருந்தேன். ஆனா.., அத்தைகிட்ட நீங்க பேசுனப்போ பாவமா இருந்துச்சு மாமா எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு நினைச்சப்போ ரொம்ப கஷ்டமாகிருச்சு எல்லாரையும் ஒன்னு கூட்டி உங்கள குற்றவாளி மாதிரி நிக்க வச்சுட்டேனேன்ற குற்றவுணர்வு உண்டாகிருச்சு” என்று தலைகுனிந்து கொண்டாள் சஞ்சளா.

ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தியவன் விழிகளில் கோர்த்து நின்ற ஈரம் கண்டு “ப்ச் இதுக்கெதுக்கு அழுகுற போதும் அழுதது. எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு முடிஞ்சதை பத்தி இனி பேச வேண்டாம் அதை நினைச்சு ஃபீல் பண்ணவும் வேணாம். நடக்க போறத பத்தி மட்டும் யோசி” என்று விழி நீரை துடைத்து அனுசரணையாய் அணைத்து கொள்ள.

“சஞ்சளா…” என்று கீழே இருந்து கேட்ட உரத்த குரலில் வேகமாக அவனிடமிருந்து விலகியவள் “அச்ச..ச்சோ ரொம்ப நேரமாச்சு மாமா பாவம் அத்தை நீங்க வாங்க நா முன்னால போறேன்” என்று அவசரமாக படியிறங்கி சென்றவளை காண அத்தனை சிரிப்பாய் இருந்தது துவரகேஷிற்கு.

படியிறங்கி வந்தவளை ஆழ்ந்து நோக்கிய விசாலாட்சி அவள் முகத்தில் தெரிந்த வித்தியாசம் கண்டு,எழுந்த சிரிப்பை மறைக்க குனிந்து கொண்டார்.

“சாரி அத்தை ரொம்ப நேரம் ஆகிருச்சு சாரி” என்று மன்னிப்பு வேண்டியவளுக்கு வேகமாக மாடியிறங்கி வந்ததில் மூச்சு வாங்க.

“எதுக்கு இவ்ளோ வேகம் மெதுவா இறங்கி வர வேண்டியது தானே?. கால் தவறி இருந்தா என்ன ஆகிருக்கும்?” என்று கரிசனம் காட்டியவர் “சாப்ட வர சொல்றதுக்கு இவ்ளோ நேரமா கூப்பிட்டா சட்டுன்னு வரமாட்டானாமா அவன்” என்று எரிச்சலை காட்ட,

அமைதியாக தரை பார்த்து நின்றாள் சஞ்சளா.

“சாப்பிட வர சொல்லிட்டு இப்டி நின்னா என்ன அர்த்தம்?” என்று அதற்கும் குரலை உயர்த்த, கால்களுக்கு வேகம் கொடுத்தவள். சமையல் அறைக்குள் சென்று உணவு பாத்திரத்தை எடுத்து கொண்டு வந்து தட்டை எடுத்து வைக்க. 

விசாலாட்சியின் கோபமான குரல் கேட்டு கீழே இறங்கி வந்த புதல்வன் “சாரிம்மா என்னால தான் லேட்..” என்று வார்த்தைகளை இழுத்தான்.

“என்கிட்ட யாரும் பேச வேணாம்” என வேகமாக உரைத்தவர் “இந்த லிஸ்ட்டுல இருக்கிறத வாங்கிட்டு வர சொல்லும்மா நேரம் ஆகுது” என்று மடிக்க பட்டிருந்த வெள்ளை காகிதத்தை சஞ்சளாவிடம் நீட்டினார் விசாலாட்சி.

என்னவென்று வாங்கி பிரித்து பார்த்தவள் தன் யூகம் சரிதான் என்று கணவனை பார்க்க. ‘என்ன’, கண்களில் கேள்வியை நிரப்பி புருவம் உயர்த்தி கேட்டான் துவாரகேஷ்.

காகிதத்தை அவனிடம் நீட்டியவள் “இல்ல அத்தை எனக்கு இதுல உடன்பாடு இல்ல மன்னிச்சிருங்க. அவர மகனா ஏத்துக்க முடியாதுன்னு சொன்ன பிறகு என்னால மட்டும் எப்டி கணவனா ஏத்துக்க முடியும்?. உங்களுக்கு இருக்குற அதே கோபம் வருத்தம் எல்லாம் எனக்கும் இருக்கு நீங்க எப்போ அவர மன்னிச்சு மகனா ஏத்துகிறீங்களோ அப்ப தான் அவர நா கணவரா ஏத்துப்பேன் அதுவரைக்கும் இந்த சடங்கெல்லாம் வேணாம்” என்று தீர்க்கமாய் கூறிவிட்டு பரிமாற தொடங்கினாள்.

துவாரகேஷ் சற்றுமுன் பேசியதை மனதில் வைத்து கொண்டு விருப்பமில்லை என்று கூற. தனக்காக தான் என்று எண்ணும் போதே அவள் மீதான காதல் அதிகரித்தது அவனுக்கு. 

மகனை திகைபோடு பார்த்தவர் அவளிடம் தெரிந்த அதே திண்ணம் கண்டு பயந்து போனார் விசாலாட்சி. இருவரின் வாழ்வு தன்னால் பாழ்பட்டுவிட கூடாதே எண்ணம் தோன்ற “டேய் என்னடா அவ இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கா நீயும் அமைதியா இருக்க?” என்று கோபமாக கேட்க. 

“அவ சரியா தான் ம்மா பேசுறா எனக்கும் இந்த விஷயத்துல உடன்பாடு இல்ல உங்கள கஷ்டப்படுத்திட்டு என்னால சந்தோஷமா வாழ முடியாதும்மா. உங்க மனசை காயப்படுத்திட்டேனேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு, இதுல இந்த சடங்கெல்லாம்.. வேணாம் ம்மா. உங்க ரெண்டு பேரோட மனசும் எப்ப மாறுதோ அப்போ வச்சுக்கலாம்” என்றான் அழுத்தம் பொதிந்த குரலில் முகத்தை உம்மென வைத்து கொண்டு.

“என்ன விளையாடுறீங்களா? பேசிவச்சுக்கிட்டு பேசுற மாதிரி இருக்கு” என்ற விசாலாட்சி “உடன்பாடு இல்லாதவன் செய்யிற வேலையாடா இது” என்று சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை காண்பிக்க.

நெஞ்சில் சாய்ந்து கொண்டபோது செந்நிற சாந்தும் அவளை போலவே வாஞ்சையுடன் ஒட்டியதுமில்லாமல் ஒளிந்து கொள்ள வழிதெரியாது அப்பட்டமாய் மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை காட்டி கொடுத்து விட்டது. அவசரமாக குங்குமத்தை தட்டி விட்டு, வெண்ணெய் திருடிய கண்ணன் மாட்டி கொண்டு முழிப்பதை போல மலங்க மலங்க விழித்தவன் மனையாளிடம் முறைப்பு காட்டினான்.

Advertisement