Advertisement

டப்பாவில் அடைத்து வைத்திருந்த ரவையை தேடிப்பிடித்து எடுத்து, உணவு டேபிளில் இருந்த அலைபேசியை எடுத்து வந்து உப்புமா செய்வது எப்படி என்ற முறையை வலையொளியில் பார்த்து முதலில் ரவையை வறுத்து தனியே வைத்து கொண்டு.

அதன் பின்னர், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்? என்ற செய்முறைகளை பார்த்து கடகடவென காரியத்தை முடித்து விட்டு இறுதியாய், உப்பை போலவே உப்புமாவில் கொத்தமல்லி தழையை தாரளமாய் தூவி இறங்கி வைத்து “ஹப்பாடா” என்று பெரும் சாகசம் புரிந்தவளாய் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு விசாலாட்சியை அழைக்க அவர் அறைக்கு சென்றாள் சஞ்சளா.

யோசனை படர்ந்த முகத்துடன் விட்டதை பார்த்தபடி படுத்திருந்தார் விசாலாட்சி. யோசனை தான்.சஞ்சளாவின் வார்த்தைகளை கேட்ட பிறகு மகனை பற்றியும், அவர் மீதிருந்த தவறை பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. சிந்தனையில் உழன்றவரை தட்டி எழுப்பியவள் “எந்திரிங்க அத்தை சாப்பாடு ரெடியாகிருச்சு” என்று வலுக்கட்டாயமாக கைபிடித்து அழைத்து வந்து ஹாலில் அமர வைத்துவிட்டு. 

“நா போய் அவர கூட்டிட்டு வந்துடுறேன்” என்று மாடியேறி சென்றாள். 

அறையில் அடைந்து கிடப்பது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்ய சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டி மாடிக்கு வந்தவனுக்கு இருளின் தனிமை கூட சுகப்படவில்லை. ஊழ்வினையின் பயனை அனுபவித்து கொண்டிருந்தான் துவாரகேஷ். முகத்தில் பட்டு செல்லும் குளிர்காற்று உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்த பரபரவென கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றி கொண்டவன் தாயின் மனதை குளிர்விக்கும் வழி தெரியாது மருகி இருளை வெறித்து பார்த்தபடி நின்றான்.

செய்த தவறை சீர் செய்யும் வழி அறியாது தவித்து திகைத்து விழித்து கொண்டிருந்தான் மொட்டை மாடியின் தனிமையில்.

“சாரி.. மாமா” என்ற கரகரப்பான குரல் கேட்டு திரும்பி பார்க்க.

சஞ்சளா தான் ஈரம் கோர்க்கும் விழிகளுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். தன்னால் தானே தாயும் மகனும் பிரிந்தார்கள் என்ற குற்றவுணர்வு மெல்லிய நூலாய் மனதை அறுக்க அவன் வேதனை கண்டு துடிக்கும் அதரங்களை அழுந்த கடித்து வெளிப்படவிருந்த அழுகையை அடக்கி கொண்டு நின்றாள்.

‘இங்க வா’, அவனின் கண்ணசைவில் சற்று தயங்கியவள் பின்னலிட்டு தடுமாறிய நடையை சீர்படுத்தி கொண்டு அவன் அருகில் வர.

“எதுக்கு சாரி நீ என்ன தப்பு பண்ண?” என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் சுவரில் சாய்ந்தபடி கேட்டான் துவாரகேஷ் . 

“பிரச்சனையே என்னால தானே துவா மாமா நான் தானே சாரி கேட்கணும்”, கமறல் குரல் இப்போது விசும்பலாய் வெளிப்பட்டது.

மென்னகை இதழில் பூக்க மார்பின் குறுக்கே ஒரு கையும் இதழில் ஒரு கையுமாய் தோரணையுடன் நின்றவன் “நா கேட்டதுக்கு இது பதில் இல்லை” என்று அழுத்தமாய் கேட்டு இதமான பார்வையால் அவள் விழிகளை தீண்ட. 

கன்னத்தில் வழிந்த நீரை துடைத்து கொண்டே “இல்ல துவா மாமா பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா.. உங்களுக்கும் அத்தைக்கும் இடையில இவ்ளோ பெரிய மனஸ்தாபம், பிரிவு வந்திருக்காது, எல்லார் முன்னாடியும் குற்றவாளியா நீங்க நின்னிருக்க மாட்டீங்க. எல்லாத்துக்கும் நான் தானே காரணம் என்ன மன்னிச்சிருங்க மாமா” என்று மன்னிப்பு வேண்டியவளின் விழிகள் முத்து முத்தாய் நீரை வெளிப்படுத்த.

கண்ணீரை கண்டு வேகமாக துடைக்க கரம் நீட்டியவன் சட்டென தயங்கி பின்னால் இழுத்து கொண்டான். மனதில் சிறு நெருடல். நொடி பொழுதும் அவகாசம் இன்றி, தோன்றி நேசத்தை நெறிக்க. பெருமூச்சை வெளியிட்டவன் “ப்ச் அவசரப்பட்டு தப்பு பண்ணது நான் நீ எதுவும் பண்ணலை சரவெடி. சொல்லபோனா.. நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். உன்னோட மனசுல நான் தான் இருக்கேன்னு எனக்கு எப்பவோ தெரியும் இருந்தும் உன்ன போன்னு சொன்னது என்னோட தப்பு தானே?, நீ சொல்லாட்டியும் நானாவது என்னோட மனசுல இருந்ததை உன்கிட்ட சொல்லிருக்கணும் ஒருவிதத்துல நானும் உன்கிட்ட ஈகோ பாத்துருக்கேன். என்மேல தான் தப்பு அதிகம்” என்று துவாரகேஷ் வருந்தி பேச.

அவன் வருத்தம் தாளாமல் “இல்ல மாமா நான் தான் தப்பு பண்ணிட்டேன் நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு அன்னைக்கே முழுசா கேட்டுருந்தா உண்மை என்னனு தெரிஞ்சிருக்கும் ஆத்திரத்துல அறிவு இழந்துருக்க மாட்டேன் எல்லாம் என்னால தான்” என்று வேகமாக மறுத்து பேசியவள் அவன் மீது வைத்திருந்த அதீத காதலின் பால் பழியை தன் மீது போட்டு கொண்டாள் .

கலங்கி கசங்கிய முகத்துடன் “தயவுசெய்து அழாத சஞ்சும்மா நீ அழுகிறதை பாக்குற சக்தி எனக்கு இல்ல. ஒரு முறை நீ அழுததையே என்னால இன்னும் மறக்க முடியலைடா” என்று முகத்தில் வேதனையும் குரலில் இதமும் கலந்து கூறவும் வேகமாய் கண்களை துடைத்து கொண்டாள் பெண்ணவள்.

“கோபத்துல என்ன தான், நீ என்ன விரும்பலைன்னு சொல்லிருந்தாலும், உன்னோட விருப்பதுக்காக நா வெய்ட் பண்ணிருக்கணும்” என்றவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் மென்மையான அதரங்களை பற்களின் இடையே அழுத்தியபடி விரிந்த விழிகளுடன் கேட்டு கொண்டிருந்தாள்.  

“அத விட்டுட்டு வீதியில நின்னு தாலி கட்டுனது உனக்கு என்ன மாதிரியான உணர்வை கொடுத்திருக்கும்னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம அப்டியே விட்டுட்டு போயிட்டேன் தப்பு என்மேல தான். சாரிடா, என்மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையே?, அப்டியே இருந்தாலும் அதுல தப்பில்லை” என்றவனின் இதழில் மெலிதாய் எட்டி பார்த்த புன்னகைக்கு நேர்மாறாய் முகம் வருத்தத்தை பிரதிபலித்தது.

அவனுடைய மனநிலை அவளுக்கு புரியாமல் இல்லை இருந்தும் ஆறுதல் கூறும் அளவிற்கு மனதில் திடமும் இல்லை! தன்னால் தானே அனைத்தும் என எண்ணும் போதே குற்றவுணர்வும் தவிப்பும் போட்டிபோட்டு மேலும் மேலும்  உள்ளத்தை வருத்த கண்களில் நீர் வடிய அமைதியாக நின்றாள் சஞ்சளா.

அவள் கரம் பற்றி அந்திமத்தின் இறுதியில் நிற்பவனாய் “என்னோட மனசுல ஒரே ஒரு நெருடல் இருந்துகிட்டே இருக்கு சஞ்சும்மா. அது நீ சொல்ற வார்த்தையில தான் நிவர்த்தி ஆகும், தயவுசெய்து உண்மைய சொல்லு!. எனக்கு தெரியும் நீ என்ன விரும்புறேன்னு இருந்தாலும்.. உன்மூலமா நீ சொல்லி கேட்கணும்னு ஆசைப்படுறேன். என்னோட கண்ணை பாத்து சொல்லணும். என்ன உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா? சொல்லு சஞ்சும்மா” என்று கெஞ்சலாய் கேட்டு கண்களில் ஆவலை நிரப்பி அவள் வாய் மொழிக்காக காத்திருக்க.

காத்திருக்கும் சில நொடிகள் கூட அவனுக்குள் படபடப்பை அதிகரிக்க செய்தது. உதடுகள் நடுங்கிட விழிகளில் நீர் நிரம்பிட விசும்பலோடு “பி..பிடி..ச்சிருக்கு மாமா..”, திக்கி திக்கி கூறிய ஒற்றை வரியில் அவன் நெஞ்சில் குத்திய நெருஞ்சியின் வலியை குறைத்தாள் பெண்ணவள். 

பிடித்தம் என்ற சொல்லில் தான் எத்தனை பரவசம். வரம் கிடைக்க தவம் பண்ணவில்லை என்றாலும் வரமாய் கிடைத்த காதலை கண்டு கொண்டு கலியாணம் செய்து, இப்போது அவன் அருகில் அவனின் அவளாய் நிற்கும் தருணம்! சொல்ல வார்த்தைகளும் இல்லை வரையறுக்க அளவுகளும் இல்லை அவளிடத்தில். இந்த ஒரு வார்த்தைகாக தானே இத்தனை நாள் காத்திருந்தான் காத்திருக்கவும் வைத்தாள்?.

“ரொம்ப பிடிச்சிருக்கு மாமா ரொம்ப.. ரொம்ப..பிடிச்சிருக்கு நீளம் அளவெல்லாம் கிடையாது சொல்ல முடியாத அளவுக்கு உங்களை எனக்கு பிடிச்சிருக்கு துவா மாமா” என்று கைகளை விரித்து மனம் திறந்தவளுக்கு கோவலாய் வெடித்த அழுகையின் ஊடே உறக்கத்தில் சிரிக்கும் மழலையை ஒத்த புன்னகையும் பிறக்க.

அவள் வார்த்தைகளால் உள்ளே எழுந்த உணர்வுகளின் கிளர்ச்சியில் துவாரகேஷிற்கு கண்கள் பளபளத்தது. கரகரப்பான குரலில் “பைத்தியம்” என்று செல்லமாய் திட்டியவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி விழிகளால் பாவையின் மனதை ஊடுருவ. இருவிழிகளும் ஒன்றை ஒன்று தழுவிய நொடி நெருடல் எல்லாம் மறைந்து கரைந்து காணாமல் போயிருந்தது. தன்னவள் தனக்கானவள் என்ற எண்ணமே உயிர் வரை சென்று அணுக்களை சில்லிட வைத்தது.

விழிகளில் அரும்பி ததும்பி வடிய காத்திருந்த நீரை இதமாய் துடைத்து விட்டவன் ஈரம் படர்ந்த விழியிலும் பிறை நெற்றியிலும் அழுத்தமாய் இதழ் பதித்து  “பிடிச்சிருக்கா” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டு அவளை சிவக்க வைக்க.

“ம்..” என்று தலையாட்டியவளுக்கு வார்த்தைகள் வசமின்றி போக, அவன் முகத்தை ஏறிட  முடியாமல் நாணி கோணியவள் வாஞ்சையுடன் நெஞ்சில் முகம் புதைத்து கொள்ள. 

உவகையில் உள்ளம் கூத்தாட மார்பில் தஞ்சம் புகுந்தவளை  இளநகையுடன் இறுக அணைத்து கொண்டான் துவாரகேஷ். 

காரிருள் படர்ந்த ஆகாயத்தில் ஆடை கலைத்த மேகம் போல இருவர் மனதிலும் இருந்த கோப தாபங்கள் மறைந்து வெற்று குவளையில் நிரம்பிய ரசனை மிகுந்த தேநீராய் காதல் குடியேற நேசிப்பின் சுகந்ததை இருவரும் சுகமாய் அனுபவித்தனர். 

அவர்கள் நின்ற மோனநிலையின் தொடர்ச்சி நேரமா நிமிடமா என்று தெரியவில்லை உன்னதமான உறவின் மேன்மையில் அவ்விடமே மௌனத்தின் பிடியில் ஆழ்ந்திருக்க மெல்ல மெல்ல அவன் அணைப்பில் இருந்து சற்று தன்னை தளர்த்தி கொண்டவள் “மாமா”, என்று உள்ளே சென்ற குரலில் மௌனத்தின் தாழ் திறந்தாள் சஞ்சளா.

“என்னடாம்மா”

“இல்ல…” என்று இழுத்தவளுக்கு விசாலாட்சியின் எண்ணத்தை எவ்வாறு உரைப்பது என்ற தயக்கம் மேலோங்கியது. ஆனால், சொல்ல வேண்டுமே என்று மனம் இடித்துரைக்க “அத்தை நமக்கு” என்று முழுமையாய் கூற முடியாமல் தொண்டையில் வார்த்தைகள் சிக்கி கொண்டன.

“நமக்கு என்ன?” என சாதாரணமாய் கேட்டவன் “ஏதோ சொல்லணும்னு நினைக்கிற அது என்னனு நேரடியா சொல்லிரு நமக்குள்ள என்ன தயக்கம்?”.

“ப்ச் நா இன்னும் சொல்லவே இல்ல..” என்று ராகம் இழுத்தவள் “நமக்கு இன்னைக்கு அதுக்கு ஏற்பாடு பண்றாங்க மாமா” என்றவளுக்கு நயனமும் நாணத்தை விளைவிக்க கூச்சத்தில் நெளிந்து கண்களை இறுக மூடி கொண்டாள்.  

அவள் உடல் அசைவிலும், வார்த்தையில் ஒளிந்திருந்த பொருளிலும் விஷயம் என்னவென்பதை யூகித்து கொண்டவன் சீண்டி பார்க்க வேண்டி “என்ன ஏற்பாடு பண்றாங்க எனக்கு புரியலை?” என்று அணைத்திருந்தவளை விலக்கி நிறுத்தியவன், 

“சொல்றதை தெளிவா சொல்லு சரவெடி” என்று முகத்தில் சலிப்பை காட்டி உள்ளூர அவளின் தவிப்பை ரசித்தான் ஆடவன்.

‘சரியான மரமண்டை எல்லாத்தையும் டெட்டால் போட்டு விலக்கணும்’ என்று  மனதில் கடிந்து கொண்டவள் “ஒன்னும் இல்ல நா கீழ போறேன் நீங்க சாப்ட வாங்க” என முறுக்கி கொண்டு, செல்ல முற்பட்டவளின் கரத்தினை பற்றி நிறுத்தினான் துவாரகேஷ்.

Advertisement