Advertisement

“இருக்கும் போதே இவளுக்கு என்னவாம். பிடிச்சு போய் தானே அவன்கூட பேசி பழகுனா மனசுல உள்ளதை முன்னாடியே அவன்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே?. இந்த காலத்து பசங்க பின்னாடி வர்ற விபரீதத்தை புரிஞ்சிக்கிறதே இல்ல அவசரத்துல என்ன பண்றோம்னு தெரியாம எதையாவது ஏடாகூடமா பண்ணிடுறீங்க. பாவம் விசாலாட்சி அம்மா” என்று கோபமாய் பேசியவர் விசாலாட்சியை எண்ணி பரிதாபம் கொள்ள.

“ஆமா சித்தி ஆன்ட்டி ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க அவங்கள பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு, அண்ணா மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருந்தாங்க நாங்க யாருமே நினைச்சு கூட பாக்கலை இப்டி பண்ணுவாங்கன்னு” என்று வருத்தி பேசிய வைதேகி. 

“துவாரகா ண்ணா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்டாங்க ஆனா ஆன்ட்டி தான் மன்னிக்க முடியாதுன்னு சொல்லிட்டு கோபமா எந்திரிச்சு போயிட்டாங்க ரொம்ப ஃபீல் பண்ணி அழுதாரு” என்று கவலை தேய்ந்த குரலில் கூற.

“பின்ன? கோபம் இருக்காதா. அவன் பண்ண காரியத்துக்கு கண்ணே மணியேன்னு கொஞ்சவா செய்வாங்க. இப்போ அவன் எங்க இருக்கான் விஷ்ணு?” 

“வீட்டுல தான் அத்தை இருக்கான்” 

“அவனுக்கு போன் போடு பேசுவோம். ரொம்ப தான் தைரியம்டா அவனுக்கு” என்றார் சாவித்ரி அடக்கமாட்டாத கோபத்தில்.

துவாரகாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான் விஷ்ணு. முழு அழைப்பும் சென்று இறுதியில் அழைப்பை ஏற்கவில்லை என்ற கணினியின் குரல் கேட்டு ஏமாற்றம் பொதிந்த முகத்துடன் சாவித்ரியை நோக்க.

“என்னடா?” 

“ப்ச் என்னனு தெரியலை ஃபோன் எடுக்கலை அத்தை” என்றவன் “டேய் விஜி நீ அவனுக்கு கால் பண்ணி பாரு!” என்று பணிக்க.

அவனுக்கும் அதுபோலவே அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் ‘இல்லை’ என்று உதட்டை பிதுக்கினான் விஜயன்.

“ப்ச் இப்போ அவனுக்கு போன் போட்டு என்ன பேச போறீங்க? இப்போதைக்கு யார் ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டான். ஆன்ட்டி பேச மாட்டேன்னு சொன்ன வருத்ததுல சோக கீதம் வாசிச்சிட்டு இருப்பான் நேர்ல போய் பேசுனா தான் உண்டு” என்று அசட்டடையாய் கூறினாள் வைஷாலி. 

அவளின் கூற்று உண்மை என்பது போல அலைபேசியை அறையில் வைத்துவிட்டு தான் மாடிக்கு சென்றிருந்தான் துவாரகேஷ். 

“நா ஒரு யோசனை சொல்லவா?” என்று அனைவரின் கவனத்தை ஈர்த்தாள் வைதேகி.

“என்ன தேவிம்மா சொல்லு?”. 

“விஜி அண்ணா மேரேஜ் கூடவே மறுபடியும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன விணு?” என்ற சொல்லில்  

அனைவரின் முகத்திலும் புன்னகை மலர. 

“நல்ல யோசனை தேவிம்மா இப்டி ஒரு ஆங்கிள்ல நா யோசிக்கவே இல்ல“.

“நீ என்னைக்கு நிதானமா யோசிச்சிருக்க அதிரடியா தானே முடிவு எடுப்ப?” என்ற வைஷாலியை முறைத்து பார்த்தவன் “போடி பிசாசு” என்று செல்லமாய் தலையில் கொட்டு வைக்க.

முகத்தை சுருக்கி பாவமாக விஜயனிடம் பார்வையை செலுத்தினாள் வைஷாலி “உனக்கு இது தேவையா?” என்று நமட்டு சிரிப்பை உதிர்த்தவனிடம், கோபப்பார்வை வீசியவள் முகத்தை உர்ரென வைத்து கொண்டு பேச்சில் கவனத்தை செலுத்தினாள்.

“இதனால ஆன்டியோட மனவருத்தமும் சரியாகும் துவராகாவும் கில்டியா ஃபீல் பண்ண மாட்டான்” என்று குதூகலத்துடன் கூறிய விஷ்ணு “என்ன அத்தை தேவிம்மா சொல்ற மாதிரி பண்ணலாம் தானே?” என்று சாவித்ரியிடம் சம்மதம் கேட்க.

“நா என்னடா சொல்ல நல்ல யோசனை தான் அப்டியே பண்ணிருங்க வாழ வேண்டிய பசங்க யாரோட மனவருத்தமும் இல்லாம வாழ்க்கைய ஆரம்பிக்கணும். நாம முடிவு பண்றது இருக்கட்டும் முதல விசாலாட்சி அம்மாக்கு சம்மதமான்னு கேளுங்க அவங்க விருப்பம் தான் முக்கியம்” என்றார் சாவித்ரி.

“ஓகே அத்தை கேட்டுடலாம் அவங்களும் ஓகேன்னு தான் சொல்லுவாங்க” என்று ஆருடம் போல கூறியவன்,

“விஜி உங்க கல்யாணம் எங்க? எப்போ? எந்த நேரத்துல நடக்க போகுது?” என்று பரபரப்புடன் முகத்தில் தீவிரத்தை நிரப்பி கேட்க.

“சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம் விஷ்ணு” என்றதும் “ஏன்” என்று வேகமாக கேட்டவனின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் அப்பட்டமாய் படர்ந்தன.

“மேரேஜ் சிம்பிளா வச்சுட்டு ரிசப்ஷன் கிராண்டா வச்சுக்கலாம்னு நினைக்கிறோம்டா. அதுவும் இல்லாம என்னோட சைட் நீங்க மட்டும் தான் இவ வீட்டு சைடு வேணா உறவுன்னு சொல்லி கொஞ்ச பேர் வருவாங்க” என்று விஜயன் சொல்லி முடிக்கும் முன்பே 

“யார கேட்டு இப்டி ஒரு முடிவெடுத்த?” என்று கீறிச்சிட்ட விஷ்ணுவிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. 

மற்றவர்கள் சிறு பயத்துடன் அவன் முகம் பார்க்க, கணநொடியில் விஷ்ணுவின் கோபத்தில் உள்ளுக்குள் கலங்கி போனாள் வைதேகி. 

“உனக்கு எத்தனை முறை சொல்றது உறவுன்னு நாங்க மட்டும் இல்ல நிறைய பேர் இருக்காங்கன்னு. இன்னொரு முறை இந்த மாதிரி பேசுன அடிச்சு பல்லை தட்டி கையில கொடுத்துருவேன் பாத்துக்கோ. உன்ன விட நாங்க தான் ஆவலா எதிர்பார்த்தோம் எப்போ நல்ல விஷயம் சொல்லுவேன்னு. கல்யாணம் எந்த மாதிரி நடக்கணும்னு, எங்க நடக்கணும்னு, எப்டி நடக்கணும்னு, நா பாத்துகிறேன்! நீ மாப்பிள்ளையா நின்னா போதும்” என்றவனின் அதீத உரிமையில் அங்கிருந்த அனைவரின் உள்ளமும் நெகிழ்ந்து போனது. விஜயனுக்கு சொல்லவே தேவையில்லை நண்பனின் நெஞ்சத்து நட்பில் லேசாய் விழிகளில் ஈரம் படர, முயன்று அடக்கி கொண்டவன் எதுவும் பேசவில்லை.

“மண்டபம் புக் பண்ணி சிறப்பா பண்ணலாம். நடக்க போறது ரெண்டு கல்யாணம் சோ எல்லாரையும் இன்வைட் பண்ணி சிறப்பா பண்ணனும் விஜி. உங்கள விட நான் தான் செம்ம எக்ஸைட்மெண்டா இருக்கேன் உங்க ரெண்டுபேரோட கல்யாணம் நா நினைச்ச மாதிரி தான் நடக்கும் அதுல யாரும் தலையிட கூடாது” என்று விஷ்ணு கராய் கூறிட.

விஜயனால் மறுத்து பேச முடியவில்லை நண்பனின் பேச்சில் நெக்குறுகி போனவன் 

“சரிடா உன்னோட விருப்பம் நா உன் விருப்பதுக்கு குறுக்க வர மாட்டேன்” என்று புன்னகை முகமாய் கூறவும் தான் விஷ்ணுவின் வதனத்தில் இயல்பான குணம் எட்டி பார்த்தது.

இறுக கையை பற்றியிருந்த மனையாளை புருவம் நெறிக்க பார்த்தவன் தன் கோபத்தினால் வந்த பயமோ என்ற எண்ணம் பிறந்த வேளை, இதழ்விரியா புன்னகையும் எட்டி பார்த்தது அவனிடத்தில் “தேவிம்மா நீயும் வா சஞ்சளாவை போய் கூட்டிட்டு வந்துறலாம்” என்று அழைக்க. 

“நானா..” என்று சங்கடமான பார்வையில் இழுத்தவள் “நீங்க போய் கூட்டிட்டு வாங்க மாமா இப்போ தான் டிராவல் பண்ணி வந்துருக்கோம் காலையில போய் கூட்டிட்டு வரலாமே” என்றாள் அயர்வான குரலில்.

“ப்ச் காலையில வரைக்கும் காத்திட்டு இருக்க முடியாது நீ வா போயிட்டு வந்துறலாம்” என்றான் பிடிவதமாய்.

அவனின் அழுத்தமான பார்வை எதையோ உரைக்க “சரி மாமா” என்றவள் “சித்தி காலையில தானே போறீங்க?”.

“இல்ல வைத்திம்மா இப்பவே கிளம்புறோம்டா சித்தப்பா காலையில வேலைக்கு போகணும். வரும் போது கூட்டிட்டு வாடான்னா எங்க.., இவன் மட்டும் தான் வர்றான்” என்று விஷ்ணுவிடம் முறைப்பு காட்டியவர், 

“உன்ன பாக்கணும் போல இருந்துச்சு அதான் சித்தப்பாவை பர்மிஷன் கேட்டு சீக்கிரம் வர சொன்னேன் சாவகாசமாக பேசிட்டு போலாம்னு வந்தா நீங்க லேட் ரொம்ப பண்ணிட்டீங்க” என்று அலுத்து கொள்ள.

“ப்ளீஸ் சித்தி இருந்துட்டு நாளைக்கு போங்களேன் அங்க போய் என்ன பண்ண போறீங்க ரெண்டுபேர் தானே இன்னைக்கு நைட் மட்டும் ப்ளீஸ்..” என்று முகம் சுருக்கி இறைஞ்சினாள் வைதேகி.

நேரம் செல்ல செல்ல விஷ்ணுவின் மனதில் ஒருவித பதட்டம் சூழ தொடங்கியது. ‘என்ன தான் மகன் மீது கோபம் இருந்தாலும் சடங்கு சம்பிரதாயம் என்று எதையும் ஏற்பாடு செய்து விட போகிறார்’ என்ற பயம் தொற்றி கொள்ள. 

இருவரின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் “தேவிம்மா நீ கிளம்பு நாம போய் சஞ்சளாவை கூட்டிட்டு வந்துறலாம் சவிக்குட்டி எங்கயும் போக மாட்டாங்க” என்றவன் 

“என்ன அத்தை காலையில தானே போறீங்க?” என்று கேள்வி கேட்டு சாவித்ரியிடம் அழுத்தமான பார்வையை செலுத்த.

அவன் கேள்விக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை அவரால்  “நீ சொன்ன பிறகு இங்க இருந்து போக முடியுமா? காலையிலேயே கிளம்புறோம்” என்று சிரித்து கொண்டே சொல்லவும் கணவன் மனைவி இருவரும் சஞ்சளாவை அழைத்து வர வேண்டி துவாரகாவின் இல்லம் விரைந்தனர். 

சமையல் அறையில் கால்களை மடக்கி கைகளால் முட்டு கொடுத்தபடி அமர்ந்திருந்தாள் சஞ்சளா.ஆறுதல் சொல்ல கூட ஆளில்லாது சத்தமில்லாமல் அழுகையில் கரைந்தவள் அவசரமாக கண்களை துடைத்து கொண்டு. விருட்டென எழுந்து பூஜை அறை சென்று விளக்கேற்றி வழிப்பட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து முன் உச்சியில் குங்குமம் இட செல்ல. கைகள் ஒருகணம் தயங்கியது. 

“கல்யாணம் ஆன பொண்ணுங்க முன் உச்சியில குங்குமம் வச்சுக்கிட்டா புருஷனோட ஆயுள் அதிகமாகுமாம் குங்குமம் ரொம்ப மங்களகரமானதுடி. நாள பின்ன உனக்கு கல்யாணம் ஆனா குங்குமத்தை நெத்தியிலயும் முன் உச்சியிலயும் மாங்கல்யத்துலயும் வச்சுகணும் ஏன்னா அந்த மூனு இடத்துலயும் லட்சுமி இருக்கிறதா சொல்லுவாங்க. உன்னோட பாட்டி கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சொன்னது உனக்கு கல்யாணம் ஆகும் போது நா இருக்கேனோ இல்லையோ விதி எந்த அளவுக்கு எனக்கு விதிச்சிருக்கோ யாருக்கு தெரியும்“, என்றோ ஒரு நாள் எதை பற்றியோ பேசி கொண்டிருக்கும் போது ஆதங்கமாய் வெளிப்பட்ட அமிர்தாவின் வார்த்தைகள் நினைவில் எட்டி பார்க்க. 

தயக்கம் மறைந்து மனமுவந்து நடுவிரல் கொண்டு உச்சியில் குங்குமம் பதித்தாள் பாவை. மெல்லிய புன்னகை அவள் அதரங்களை நிறைக்க உள்ளே எழுந்த சிரிப்பையும் சிலிர்ப்பையும் அடக்கி கொண்டு சமையலில் கவனத்தை செலுத்த தொடங்கினாள் சஞ்சளா.

அமிர்தா இருந்தவரை பெரும்பாலும் இரவு உணவு உப்புமாவாக தான் இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகை. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சலிக்காமல் சமைத்து வைத்துவிடுவார் அமிர்தா. 

“என்னம்மா நேத்து ரவை இன்னைக்கு அரிசி உப்புமாவா…” என்று ராகம் இழுக்கும் மகளை பார்க்கும் போது சிரிப்பு எழுந்தாலும், 

“இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ சஞ்சு குட்டி” என்று கொஞ்சி பேசி உண்ண வைத்துவிடும் தாயின் சாமர்த்தியத்தை எண்ணி மனதில் மெச்சி கொண்டவள். 

அவர் செய்து கொடுத்த உப்புமாவில் இடம் பெற்றிருக்கும் பொருட்களை வைத்தே இதிது இருக்கும் இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஓரளவு யூகம் செய்து, சமைப்பதற்கு தேவையான இத்தியாதி பொருட்களை எடுத்து வைத்து கொண்டாள். 

Advertisement