Advertisement

இதுவரை சமைத்து பழக்கம் இல்லை அவளுக்கு. காஃபி கூட என்றோ ஒரு நாள் சாவித்ரி போடும் போது பார்த்தது அதை நினைவில் வைத்து தான் அன்று விசாலாட்சிக்கு போட்டு தந்தாள் மற்றபடி அமிர்தா இருந்தவரை அவளை அதை செய் இதை செய் என்று வேலை ஏவியது கிடையாது. மெல்ல நினைவில் எட்டி பார்த்தது அமிர்தாவின் நினைவு. கழுத்தில் மின்னிய மாங்கல்யத்தை எடுத்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கிட “ம்மா..” என்று ஆழ்ந்த கரகரப்பான குரலில் மெல்ல அழைத்தவள்.

“எனக்கு கல்யாணம் ஆகிருச்சு” என்னும் போதே வதனத்தில் ஓர் சந்தோஷ புன்னகை மிளிர, “நீங்க பாத்துட்டு தானே இருக்கீங்க?, எனக்கு தெரியும் ம்மா என்னோட உள்ளுணர்வு சொல்லுது நீங்க இங்க தான் எங்கயோ இருக்குறீங்கன்னு. உங்க பொண்ணு இப்போ அக்மார்க் குடும்ப ஸ்த்திரி ஆகிட்டாம்மா இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே? நீங்க நினைச்சது நடந்துருச்சு”, எட்டி பார்த்த புன்னகையோடு விழி நீரும் சேர்ந்து கொள்ள மானசீகமாய் தன் தாயோடு உரையாடினாள்.

“ஒரே ஒரு வருத்தம் தான் ம்மா என்னால அத்தைக்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டாகிருச்சு” என்று வருத்தம் இழையோட பேசியவள் “நீங்க தான் அவங்களுக்குள்ள இருக்குற மனஸ்தாபத்தை சரி பண்ணனும் ப்ளீஸ்ம்மா..” என்று கண்களை மூடி கைகளை கூப்பி இறைஞ்சி வேண்டி கொண்டிருக்க.

சட்டென ஜன்னல் கதவு மூடிய சத்தத்தில் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தாள், காற்று சற்று பலமாய் வீசி கொண்டிருந்தது. 

“ப்ச் இந்த காத்து வேற..” என்று முணுமுணுத்து கொண்டே கதவின் குடுமியை எடுத்து மூட செல்ல.காற்றின் அழுத்தத்தில் நிலையாய் நின்று வருவேனா என்று அடம் பிடித்தது ஜன்னல் கதவு. 

‘நீயா நானா’ என்ற ரீதியில் எரிச்சல் மேலோங்க ஜன்னல் கதவை மூட முயற்சி செய்ய. சலசலக்கும் ஓசையுடன் காற்றில் அலைகளிக்கப்பட்ட பக்கத்து வீட்டின் மகிழ மரம் மங்கிய மஞ்சள் நிறத்திலான மலர்களை ஜன்னல் வழியாக அவள் மீது அர்ச்சதையாய் தூவியதும். செய்யும் வேலையை இடை நிறுத்தம் செய்தவள் ‘இது எப்படி சாத்தியம்!’ என்று மிரண்ட பார்வையில் அதிசயித்து பார்த்து கொண்டிருக்க.  உள்ளுணர்வு உரைத்த செய்தியில் சட்டென மூச்சடைத்தது சஞ்சளாவிற்கு. 

வாய் திறந்து சொற்களை பிரயோகிக்க முயன்றவளுக்கு வார்த்தைகள் வலுவிழந்து போக உள்ளத்தில் எழுந்த சொல்ல முடியாத உணர்வை நீராய் பிரதிபலித்தன விழிகள். தன் அன்னையின் ஆசியாக தோன்றிய நொடிப்பொழுதில் தேகத்தில் ரோமங்கள் எல்லாம் எழுந்து செங்குத்தாய் எழுந்து நின்று சிலிர்ப்பை உண்டாக்கின.

“ஏய் சஞ்சு” என்று அதட்டலும் அழுத்தமும் இணைந்த அமிர்தாவிற்கே உரிய தோரணை குரல் கேட்டு ஒருகணம் உடல் அதிர!.பயத்தில் மிரண்டு போய் திரும்பி பார்த்தாள் எவரும் இல்லை. வாசல் கதவு திறந்து தான் இருந்தது. ஆன்மாவின் அழைப்பை வெறும் மனபிரம்மை, நினைவின் வெளிப்பாடு என்று சஞ்சளாவால் அலட்சியமாய் ஒதுக்கிவிட்டு செல்ல முடியவில்லை. 

‘ஆன்மாவிற்கு அழிவில்லை நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உண்டு என்றால் பூலோகத்தில் அலைந்து திரியுமாம்’, என்றோ ஒருநாள் அமிர்தா கூறியது நினைவில் எட்ட.

“ம்மா..” என்றாள் உதடுகள் நடுங்க மெலிந்த ஓசையில். கண்களில் கண்ணீர் அணை கட்டி நிற்க. கால்கள் பலம் இழந்து, தொய்ந்து தரையில் அமர்ந்த நொடி. அழுகை அருவியாய் வெளிப்பட தொடங்கியது.

அப்பார்ட்மெண்ட் வளாகம். விஷ்ணு விஜயன் இருவரும் வாகனத்தை பார்க் செய்துவிட்டு சவாதீனமாய் பேசி கொண்டு வர, இருவரின் பேச்சை கேட்டவாறு உடன் வந்து கொண்டிருந்தாள் வைஷாலி. மூவரையும் பின்னால் விட்டு வீட்டை திறக்க வேண்டி முன்னால் சென்ற வைதேகி சாவித்ரி ஜெகநாதன் இருவரும் வாசலில் காத்திருப்பதை கண்டு “சித்தி” என்று வேகமாக இருவரின் அருகில் வந்தாள்.

“என்னம்மா எங்க போயிருந்திங்க எவ்ளோ நேரமா காத்திட்டு இருக்கோம்” என்றார் சாவித்ரி அயர்வான குரலில்.

அவர் முகத்தில் தெரிந்த சோர்வை கண்டு சங்கடத்தில் ஆழ்ந்தவள் “சாரி சித்தி துவாரகா ண்ணா வீட்டுக்கு போயிருந்தோம் வர்ற வழியில செம்ம டிராபிக் அதான் வர லேட் ஆகிருச்சு நீங்க ஃபோன் பண்ணிருக்க வேண்டியது தானே சித்தி?” என பேசிக்கொண்டே கதவை திறந்து உள்ளே செல்ல. 

பின்னோடு வந்த சாவித்ரி “எத்தனை தடவை போன் பண்றது நீயும் எடுக்கலை அவனும் அட்டன் பண்ணல” என்று நொடித்து கொண்டவர் ‘அக்காடா’ என்று சோபாவில் அமர்ந்தார். அதிக நேரம் நின்றதால் கால்கள் கடுகடுத்தது.வாங்கி வந்த பழங்களை வைதேகியிடம் கொடுத்துவிட்டு ஜெகநாதன் மனைவியின் காலை பிடித்து விட.

“வேணாம் விடுங்க” என்று கையை விலக்கி விட்ட மனைவியை புன்னகையுடன் பார்த்தவர் “நம்ம பிள்ளைங்க தானே? எதுவும் நினைக்க மாட்டாங்க சவி” என்று கூறிவிட்டு சாவித்ரியின் காலை பிடித்து விட்டார் ஜெகநாதன்.

“ஹாய் சவிகுட்டி” என்ற துள்ளல் குரல் கேட்டு அவசரமாக காலை கிழே இறக்கியவர் வாசல் புறம் பார்க்க, புன்னகை முகமாய் உள்ளே நுழைந்தான் விஷ்ணு. பின்னால் விஜயனும் வைஷாலியும் வர.

“டேய் அப்டி கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது” என்று முறைப்பு காட்டியவர் “பாத்திங்களா எப்டி கிண்டல் பண்றாண்ணு” என்று கணவனிடம் புகார் செய்ய.

“விடும்மா ஆசையா தானே கூப்பிடுறான்” என்று விஷ்ணுவுக்கு ஆதரவாக ஜெகநாதன் பேச.

“உங்ககிட்ட சொன்னேன் பாருங்க என்ன சொல்லணும் மருமகனை என்னைக்கு விட்டு கொடுத்துருக்கிங்க” என்று அங்கலாய்த்து கொண்டவர் பின்னால் வந்த இருவரையும் பார்த்து “நீங்க எப்போ வந்திங்க?” என்று ஆச்சரியமாய் கேட்டார்.

“காலையில வந்தோம் அத்தை நைட்டு வீட்டுக்கு வரலாம்னு இருந்தோம் நீங்களே வந்துட்டீங்க” என்று சாவித்ரியின் அருகில் வைஷாலி அமர்ந்து கொள்ள.

விஷ்ணு விஜயன் இருவரும் ஜெகநாதன் அருகில் அமர்ந்து கொண்டனர். வைதேகி சமையல் அறையில் எதையோ துழாவி கொண்டிருந்தாள்.

“சவிக்குட்டி என்ன திடீர் வருகை?. சொல்லாம கொல்லாம மாமாவை கூட்டிட்டு வந்துருக்கீங்க என்ன விஷயம்?”, இதழ் புன்னகையில் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

முறைப்பு காட்டியவர் “சொல்லிட்டு தான் வரணும்னு ஏதாவது சட்டம் போட்டுருக்கியாடா? எங்க பொண்ணு வீட்டுக்கு வர நாங்க யார்கிட்டயும் சொல்லிட்டு வர வேண்டிய அவசியமில்லை”, அலட்சியமாய் உரைத்த பதிலில் அடக்கமாட்டாமல் சிரித்தான் விஷ்ணு. 

அவனின் குணம் சாவித்ரி ஜெகநாதனுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும் இயல்பாய் பேசி இருக்கும் இடத்தின் சூழ்நிலையை தன் பிடிக்குள் கொண்டு வந்துவிடுவான் என்று. சாவித்ரிக்கு அவனிடம் பிடித்ததே கலகலப்பான பேச்சு தான். வேண்டுமென்றே கேட்கிறான் என தெரிந்தும் அதற்கு தக்க பதில் கூறியதில் அத்தனை பூரிப்பு உண்டானது சாவித்ரிக்கு.

“பாருடா! முன்ன விட இப்போ சவி குட்டி முகத்துல இம்ப்ரூவ்மெண்ட் அதிகமா தெரியிது. என்ன மாமா டிரெயினிங் ஸ்டார்ட் பண்ணியாச்சு போல” என்று பாராட்டும் தோரணையில் புருவம் உயர்த்தி கேட்டதும் ஜெகநாதனிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, அவரது அவுட்டு சிரிப்பில் இல்லமே ஒலியை பிரதிபலித்தது. 

ஜெகநாதனின் சிரிப்பில் என்னவென்று சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த வைதேகி சிறு புன்னகையுடன் பாதியிலேயே விட்டு வந்த வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினாள் .

கணவனின் புன்னகையில் மனம் லயிக்க ரசனையுடன் பார்த்து கொண்டிருந்த சாவித்ரியின் விழிகள் நீரை வார்த்தன. வைதேகி விஷ்ணு இருந்தவரை பேச்சுக்கும் சிரிப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. திருமணம் முடிந்து இருவரும் வேறு இல்லம் சென்ற பின் வீடே வெறுமையை பூசி கொள்ள,மீண்டும் பழைய நிலை. இருவர் மட்டுமே என்ற வாழ்வில் இயல்பான சிரிப்புகளும், பேச்சுகளும் மட்டுமே இருந்த நிலையில்! இன்று கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்கும் கணவனை பார்க்க தெவிட்டவில்லை சாவித்ரிக்கு.

“பாருடா சைட் அடிக்கிறாத” என்ற விஷ்ணுவின் கேலி குரலில் கண்களை துடைத்து கொண்டவர் “இங்க வந்த பிறகு தான் மனசு நிம்மதியா சந்தோஷமா இருக்கு. அது என்னமோ தெரியலை உங்க கூட இருக்கும் போது சொல்ல முடியாத சந்தோஷம் கிடைக்குதுடா” என்று மனதின் ஏக்கம் வார்த்தைகளாய் வெளிவர. 

எழுந்து சென்று சாவித்ரியின் அருகில் அமர்ந்து அவரை அணைத்து கொண்டவன் “அத்தை உங்களுக்கு செண்டிமெண்ட் எல்லாம் ஒத்து வராது எப்பவுமே கோபமா பேசி முறைச்சு பாப்பிங்கள அது தான் சரியா இருக்கு” என்று கன்னம் பிடித்து ஆட்டியவனின் கரத்தினை தட்டி விட்டவர் “போடா..” என்று சிணுங்கி சிரிக்க. 

“அய்யோ அத்தை வெட்கப்படுறாங்க’ என்று அதிசயமாய் கூறி விஷ்ணு சிரிக்க, அவனின் புன்னகை அங்கிருந்தவர்களையும் தொற்றி கொள்ள சில நிமிடங்கள் அவ்விடமே 

நகைபொலியில் மிளிர்ந்தது.

சிரிப்புகள் கரைந்து தேய்ந்த பின் “ஏண்டி எப்பவுமே ரெண்டு பேரும் தனி தனியா தானே வருவீங்க இன்னைக்கு என்ன அதிசயமா ஒன்னா சேந்து வந்துருக்கீங்க”, வைஷாலியை பார்த்து சாவித்ரி கேட்க.

“இனிமே ஒன்னா தான் வருவாங்க அத்தை” என வைஷாலியை முந்தி கொண்டு பதில் கூறியவன் “ரெண்டுபேருக்கும் கல்யாணம் இன்வைட் பண்ண வந்துருக்காங்க ஆனா இவங்களுக்கு முன்னாடி இன்னொருத்தன் யார்கிட்டயும் சொல்லாமலே முந்திக்கிட்டான்” என்று பீடிகை இட்டு நிறுத்தினான் விஷ்ணு.

கணவன் மனைவி இருவரும் குழம்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்வையை பரிமாறி கொண்டு “என்னடா சொல்ற யாரு முந்திக்கிட்டாங்க?”.

“வேற யாரு நம்ம துவாரகா தான்!” என்றதும் “என்ன சொல்ற விஷ்ணு!” என்று அதிர்ந்தார் சாவித்ரி. ‘துவாரகா’ என்றதும் கணவன் மனைவி இருவரிடத்திலும் பெரும் அதிர்ச்சி.

“ஆமா அத்தை அவனுக்கும் சஞ்சளாவுக்கும் கல்யாணம் ஆகிருச்சு. இன்னைக்கு காலையில வடபழனி முருகன் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிருக்கான்”.

“ஏண்டா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையேடா?”, சாவித்ரியிடம் சிறிதாய் கோபம் எட்டி பார்த்தது.

“நீங்க வேற அத்தை அவன் யாருக்குமே சொல்லலை சஞ்சளாவுக்கே தெரியாம தாலி கட்டிருக்கான்”என்று ஐந்து நிமிடத்தில் நடந்ததை விளம்பி முடித்த விஷ்ணு இருவர் முகத்தையும் மாறி மாறி பார்க்க. 

கணவன் மனைவி இருவர் முகத்திலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் இழையோடியது. நம்ப முடியவில்லை துவாரகாவின் குணமும் சஞ்சளாவின் இயல்பும் இருவரும் அறிந்ததே. சஞ்சளாவிற்கு அவன் மீது விருப்பம் இருப்பதை துவாரகாவிடம் அவள் நடந்து நடந்து கொண்ட விதத்தை வைத்தே ஓரளவு யூகம் செய்து வைத்திருந்த சாவித்ரி. சஞ்சளாவின் படிப்பு முடியவும் அமிர்தாவிடம் சொல்லி துவாரகேஷிற்கு மணம் முடித்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தார்.

அமிர்தாவின் இறப்பிற்கு பிறகு உறவுகள் என்று அறிந்த பின் நேரம் வரும் போது பேசி கொள்ளலாம் எங்கே போக போகிறது என்று சற்று மெத்தனமாய் எண்ணி விஷயத்தை தள்ளி போட்டிருக்க. இன்று இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது அதுவும் யாருக்கும் தெரியாமல் என்றதும் இருவர் மீதும் சாவித்ரிக்கு அடக்க மாட்டாது கோபம் மேலோங்கியது.

அதிர்வில் இருந்து முதலில் விடுபட்ட ஜெகநாதன் “பரவாயில்லயே விஷ்ணு அதிரடியா முடிவெடுக்குறதுல உனக்கு ஈடா யாரும் இல்லைன்னு நினைச்சேன் கூடவே இருந்துருக்கான்” என்று பெருமையாய் பேசி சிரிக்க.

பெருமையில் ஒளிந்திருந்த கேலி உணர்ந்து “ப்ச் மாமா..” என்று முறைத்தான் விஷ்ணு.

“சரியா சொன்னிங்க சித்தப்பா கூட்டாளிக ஒரே மாதிரி தானே முடிவெடுப்பாங்க” என்று நேரம் பார்த்து வாரினாள், காஃபி டம்ளர்களுடன் வெளிப்பட்ட வைதேகி.

மனைவியிடம் போலியாய் முறைப்பு காட்டியவன் தனக்கொரு டம்ளரை எடுத்து கொண்டதும் மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொள்ள.  

“நம்பவே முடியலைடா அவனா இப்டி பண்ணான்?” என்றவருக்கு சஞ்சளாவின் மீது எரிச்சல் மண்டியது.

Advertisement