Advertisement

முன் கதை சுருக்கம்:

அமிர்தாவின் இறுதி காரியத்தின் போது செலவான பணத்தை எடுத்து நீட்டுகிறாள் சஞ்சளா. பணம் எதற்கு என்று அறிந்ததும். கோபமாக பேசிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வரவுக்காக காத்திருப்பவள் துவாரகேஷ் வந்ததும் பேருந்து நிலையத்தில் விட முடியுமா என்று கேட்கிறாள். வைதேகி பள்ளி செல்வதற்காக அவசரமாக சமையல் செய்து கொண்டிருக்க அவளிடம் வம்பளத்துவிட்டு சமையல் வேலையை கவனிக்கின்றான் விஷ்ணு. பேருந்து நிலையம் அழைத்து செல்லாமல் வடபழனி முருகன் கோவில் அழைத்து சென்று தன் மனதில் உள்ளதை துவாரகேஷ் சொல்ல. அதற்கு மறுத்து பேசுகிறாள் சஞ்சளா வேறு வழியில்லாமல் கண்களை மூடி கடவுளை தரிசிக்க சொல்லிவிட்டு தாலியை கட்டிவிட்டு எங்கு வேணாலும் போ என கூறிவிட்டு சென்றுவிடுகிறான். விஷயம் அறிந்து விசாலாட்சி விஷ்ணுவிற்கு போன் செய்ய இல்லம் வந்தவர்கள் விஷயத்தை அறிந்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். இல்லம் வந்த துவாரகாவிடம் நம்பிக்கை உடைந்து போன விரக்தியில் சற்று கடுமையாக பேசிவிட மனம் துவண்டு

போகிறான் துவாரகேஷ். விஜயன் வைஷாலி திருமணம் அறிந்து நடந்ததை தானே சரி செய்கிறேன் என்று சொல்லி கொண்டவன் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இனி:

அன்றைய நாளில் நடந்த கசப்பான நிகழ்வுகளுக்கு காலம் மருந்தளிக்கும் என்று எண்ணி துவாரகாவால் இயல்பாய் கடந்து செல்ல முடியவில்லை. நண்பனின் நிலை உணர்ந்து விஜயன் விஷ்ணு உடன் வைஷாலி வைதேகி நால்வரும் மாலை நேரம் நெருங்கும் வரை அவனுடன் இருந்துவிட்டே இல்லம் கிளம்பி சென்றனர். 

மகனிடம் வேகமாக பேசிவிட்டு அறைக்குள் சென்று அடங்கி கொண்ட விசாலாட்சிக்கு மகன் தவறிழைத்துவிட்டானே.. என்ற வருத்தத்தை விட, அவனின் மனம் நோகும் படி பேசிவிட்டோமே… என்ற வேதனை தான் அதிகமாய் இருந்தது. இருந்தும் அவன் செய்த செயலை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை.

இதுவரை மகனிடம் கீற்றாய் கூட கோபத்தை காட்டியது இல்லை. வார்த்தையில் கண்டிப்பும், பார்வையில் இதமும் சிரிப்பும் கலந்து தவறு என்பதை சுட்டி காட்டியே ஆளாக்கியவருக்கு முதல் அடி பெரும் வலியை கொடுக்க. அழுகையை அடக்கிய கண்கள் கூட இப்போது அழ தயராய் இருந்தது ஆனால், நம்பிக்கையற்று போன மனதிற்கு தான் அழுது கரையும் திடம் இல்லாமல் போனது. 

சஞ்சளா ஹாலில் கன்னத்தில் கைவைத்து பலத்த சோகத்திலும், துவாரகேஷ் அவன் அறையிலும், விசாலாட்சி அவர் அறையிலும் அவரவர் சிந்தனையில் முழ்கி இருக்க. ஆறுமணிக்கொரு முறை ஒலியெழுப்பி தன் இருப்பிடத்தை காட்டும் கடிகாரத்தின் ஓசை நிசப்தத்தை கலைத்தது. அதில் நினைவு கலைந்த சஞ்சளா மணியை பார்த்தாள் சரியாய் ஆறு என்று கடிகார முள் குறிப்பு காட்டியதில்,

“அச்சோ இவ்ளோ நேரம் ஆகிருச்சா” என்று திடுக்கிட்டு எழுந்து, வீட்டின் விளக்குகளை எரியவிட்டு விசாலாட்சி இருக்கும் அறையை பார்த்தவள், ஆழ்ந்து மூச்சை வெளியிட்டு டேபிளில் இருந்த தண்ணீரை டம்ளரில் சாய்த்து, நிரம்பிய கிளாஸை எடுத்து கொண்டு விசாலாட்சியின் அறைக்குள் சென்றாள். 

விளக்கை கூட எரியவிடாது இருளில் அமர்ந்திருந்தவரை பார்த்தவளுக்கு வருத்தம் மேலோங்க, விளக்கின் சுவிட்சை தட்டியதில் அறை வெளிச்சத்தில் உயிர் மீட்டது . 

வெளிச்சம் பரவியதில் கண்கள் கூச. கண்களை மூடி மூடி திறந்தவர் திரும்பியும் பார்க்கவில்லை. வந்திருப்பது அவள் தான் என்று அவருக்கு தெரியும் அவளை தவிர வேறு யாராக இருக்க கூடும் என்ற திண்ணம் விசாலாட்சிக்கு. 

முகம் இறுகி போய் முதுகாட்டி அமர்ந்திருந்தவரின் முன்னால் சென்று நின்றவள் “அத்தை தண்ணி குடிங்க” என்று கிளாஸை நீட்ட.

அவள் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டவர் “எனக்கு எதுவும் வேணாம்மா” என்று சன்ன குரலில் கூறிவிட்டு தலையை திருப்பி கொண்டார்.

“ப்ச் அத்தை. அதான் கோபமா பேச வேண்டியதை பேசிட்டிங்களே? அப்றம் எதுக்கு ஃபீல் பண்றிங்க. நானும் அவரும் பண்ண தப்புக்கு நீங்க எதுக்கு தண்டனை அனுபவிக்கிறீங்க. ப்ளீஸ் அத்தை அடம்பிடிக்காம தண்ணி குடிங்க காலையில இருந்து எதுவும் சாப்பிடல. மதியமும் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டீங்க எவ்ளோ நேரம் தான் நடந்து முடிஞ்சதை பத்தியே யோசனை பண்ணிட்டு இருப்பீங்க?” என்று சற்று வேகமாகவே கேட்க.

“நடந்து முடிஞ்சது தான் ஆனா நினைப்ப விட்டு போக மாட்டிங்கிதேடா என்ன, என்ன பண்ண சொல்ற? என்னோட பையனா இந்த மாதிரி பண்ணான்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு சஞ்சும்மா. எப்டியெல்லாம் அவனோட கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்ணு இருந்தேன் எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டானே. 

வேகத்துல பண்ணிட்டேன்னு சொன்னா எல்லாம் சரியாகிருமா? அவனோட அம்மா நான். எனக்கு இது பிடிச்சிருக்குன்னு விவரம் தெரியாத வயசுல கேட்டு வாங்கிக்கிட்டவன் எனக்கு இவளை பிடிச்சிருக்குன்னு சொன்னா கட்டி வைக்காமல போயிருவேன். சொல்லுடா? அவன வளர்த்த வளர்ப்புக்கு நல்ல பாடம் சொல்லி கொடுத்துட்டான் மகனா இருந்தாலும் சட்டுன்னு மன்னிக்க மனசு வர மாட்டேங்கிது” என்று கண்களில் நீர் மல்க கூறியவரை பார்க்க அத்தனை பாவமாய் இருந்தது சஞ்சளாவிற்கு. 

அவரது நிலையில் இருந்து பார்த்தால் தானே உள்ளே இருக்கும் வலியும் ஏமாற்றமும் என்னவென்று தெரியும். ஆறுதல் கூற முற்படவில்லை ஆதரவாய் அவரை அணைத்து கொண்டாள். 

“அவரு பண்ணது தப்புன்னா ஒரு வகையில நானும் தப்பு பண்ணவா தான் அத்தை” என்றதும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தார் விசாலாட்சி. 

“என்னம்மா சொல்ற நீ என்ன தப்பு பண்ண?”.

“என்னால தானே அத்தை அவரு அந்த மாதிரி முடிவெடுத்தாரு. என்ன ஏத்துக்க தெரிஞ்ச உங்களுக்கு அவர மன்னிச்சு ஏத்துக்க ஏன் மனசு வர மாட்டேங்கிதுன்னு எனக்கு புரியலை? கோபப்பட்டு என்ன ஆக போகுது அத்தை. நீங்க நினைச்சதை தானே அவரு பண்ணிருக்காரு, நீங்க முறையா பண்ணனும்னு நினைச்சிங்க அவரு முறையில்லமா ஒரு வேகத்துல பண்ணிட்டாரு அவ்ளோ தானே வித்தியாசம். ஒரு கண்ணுல சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுல வெண்ணையும் வச்சு பாக்குறிங்க ரெண்டு பக்கமும் தப்பு இருக்கும் போது ஒருத்தருக்கு மட்டும் ஏன் தண்டனை கொடுக்கணும் அதை அவரே ஏன் அனுபவிக்கணும்?” என்று சரமாரியாக கேள்வி கணைகள் தொடுத்து கணவனுக்கு அனுசரணையாக பேச.

அவள் வார்த்தைகள் ஊசியாய் விசாலாட்சியின் மனதை தைத்தது ‘விழிகள் இரண்டு என்றாலும் அதில் தெரியும்  காட்சி ஒன்று தானே?’ என்று எண்ணியவர் “என்ன டாம்மா இப்டி பேசுற ரெண்டுபேரும் எனக்கு ஒன்னு தான் என்னைக்கும் உங்கள நா பிரிச்சு பாத்ததே இல்லடா” என்றவரின் குரலில் வருத்தம் இழையோடியது.

“பிரிச்சு பாத்ததே இல்லன்னு சொல்றிங்க அப்ப தண்டனை மட்டும் அவருக்கு எதுக்கு?. எனக்கும் கொடுங்க அத்தை” என்றவள் “உங்ககிட்ட சொல்லிருந்தா நடத்தி வச்சுறுப்பேன்னு சொல்றிங்களே அவரு மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே? நீங்க என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே அத்தை எதுக்கு சொல்லலை?” என்று புருவம் உயர்த்தி கேள்வி கேட்க.

“அவன் எங்கம்மா சொல்லவிட்டான் சொல்றதுக்கு முன்னாடியே சொல்ல வேணாம்னு சொல்லி வாயடைச்சிட்டான் இல்லன்னா அப்பவே சொல்லிருப்பேன்”.

“என்ன அத்தை சின்ன பசங்க மாதிரி காரணம் சொல்லிட்டு இருக்கீங்க பெரியவங்க தானே நீங்க. அவரு சொன்னாருன்னு உண்மைய மறைச்சிருக்கிங்க அப்டி பாத்தா நீங்களும் தப்பு பண்ணவங்க தானே?”என்று விசாலாட்சியை அதிர வைத்தாள் சஞ்சளா. 

“என்னடாம்மா சொல்ற நா என்ன தப்பு பண்ணேன் நா ஒன்னும் அவன சொல்ல வேணாம்னு சொல்லலையே?” என்றார் சிறு கீற்றாய் தோன்றிய கோபத்துடன்.

“சொல்லலை தான் ஆனா சொல்லிருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்காதே” என்று எதிர் கேள்வி கேட்டதும் விசாலாட்சியின் முகம் வாடி போனது. உண்மை தானே! என்று மனமும் சேர்ந்து உரைக்க. 

“தப்பு பண்றவங்களை விட தப்பு பண்ண துண்டுறவங்களுக்கு தான் தண்டனை அதிகம். அப்டி பாத்தா எனக்கு தான் நீங்க தண்டனை கொடுக்கணும் அத்தை. குழந்தை, மருந்து கசக்கும் வேணாம்னு சொன்னா அப்டியே விட்டுருவோமா அது பேச்சை கேட்காம உடம்பு சரியான போதும்னு வம்படியா பிடிச்சு வாய்க்குள்ள உத்திவிட்டுற மாட்டோம். அது மாதிரி தானே? அவரு சொல்ல வேணாம்னு சொன்னதை பொருட்படுத்தாம நீங்க என்கிட்ட உண்மைய சொல்லிருக்கணும் ஒருவகையில நீங்களும் தப்பு பண்ணிருக்கிங்க அத்தை” என்றவளின் விழிகள் கோபத்தை தாங்கி இருந்தது.

விசாலாட்சியின் மனதை நோகடிப்பது அவள் நோக்கமல்ல துவாரகாவிடம் பேச வேண்டும் அவர் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சரியோ தவறோ என்பதை ஆராயாமல் வேகமாக பேசிவிட.

விசாலாட்சியால் பேச முடியவில்லை இத்தகைய கோணத்தில் அவர் சிந்தித்தும் பார்க்கவில்லை. ‘துளி விஷம் அமிர்தத்தை பாழ்படுத்தி பயனுறாமல் செய்துவிடுவது போல துளி உண்மையை மறைத்தது பாதகமான செயலை செய்ய வழிவகை செய்துவிட்டதே, அவனின் முடிவிற்கு தானும் ஓர் காரணம்’ என்ற எண்ணமே மனதை அறுக்க பேச வார்த்தைகளற்று கண்களில் நீர் வழிய அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்.

“நா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அவர மன்னிக்கிறதும் மன்னிகாததும் உங்க விருப்பம் அத்தை. அம்மா பையனுக்குள்ள ஆயிரம் இருக்கும் நா யாரு அதுல தலையிடுறதுக்கு. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன் அவரு தாலி கட்டும் போது எனக்கு கோபம் வரல அத்தை சந்தோஷமா தான் இருந்துச்சு” என்றவள் அவர் கண்ணீரை துடைத்து விட்டு,

“வெறும் வயித்துல காஃபி டீ குடிக்க கூடாதுன்னு தான் தண்ணி கொண்டு வந்தேன் உங்களுக்கு பால் பிடிக்காது இல்லன்னா காய்ச்சி கொண்டு வந்துருப்பேன் அத்தை. இப்போ தண்ணி மட்டும் குடிங்க கோபம் கொஞ்சம் தணியட்டும்”என்று தண்ணீர் கிளாஸை விசாலாட்சியின் கையில் திணித்து அழுத்தமாய் அவர் முகம் பார்த்தாள் சஞ்சளா. 

ஆசுவாசப்படுத்தி கொள்ள மட்டுமல்ல, ஏற்பட்ட கோபமும் வருத்தமும் தணிய தண்ணீர் அவசியம் தேவைப்பட்டது விசாலாட்சிக்கு. மறுப்பேதுமின்றி குடித்து முடித்தவர் காலி டம்ளரை நீட்டி 

“அவன் எங்கம்மா இருக்கான் வந்தவங்க போயிட்டாங்களா?” என்று கேட்க.

“அவங்க அப்பவே கிளம்பி போயிட்டாங்க அத்தை அவங்க கிளம்பினதும் ரூமுக்குள்ள போனவரு இன்னும் வரல. அவரும் ரொம்ப ஃபீல் பண்றாரு உங்க கோபத்தை கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்களேன்” என்று இறைஞ்சும் குரலில் கேட்டு கொண்டவள்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல சமையல் ரெடியாகிரும் மூணுபேரும் சேந்து சாப்பிடலாம்” என்று சொல்ல.

“இல்லம்மா எனக்கு எதுவும் வேணாம் நீங்க சாப்ட்டு படுங்க” என்று சோர்வுடன் கூறியவருக்கு சட்டென மூளையில் மின்னல் வெட்டியது. ‘இதை எப்படி மறந்தோம்’ என்று தலையில் லேசாய் தட்டி கடிந்து கொண்ட விசாலாட்சி, வேகமாக எழுந்து சென்று நாட்காட்டியை எடுத்து நல்ல நேரம் பார்த்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள. 

அவர் செயலில் புரியாமல் விழித்தவள் “என்ன அத்தை என்னாச்சு?”

“ஒன்னுமில்லம்மா சமைச்சிட்டு ரெண்டுபேரும் சாப்பிட்டு முடிச்சதும் என்ன கூப்பிடு” என்று கூறிவிட்டு படுக்கையில் சாய்ந்து ‘அவ்வளவு தான் விஷயம்’ என உடல் மொழியில் கூறிவிட்டு கண்களை மூடி கொண்டார்.

என்ன? ஏது? என்று துருவி கேட்டு தெரிந்து கொள்ள மனம் வரவில்லை ஆனால் நாட்காட்டியை அவர் வேகமாக புரட்டி பார்த்திலேயே தெரிந்து போனது விஷயம் இதுவாக தான் இருக்க கூடும் என்று. ‘இப்போ இது தேவையா?’ என மனம் கேலி செய்ய. 

அன்னிச்சையாய் வதனத்தில் எழுந்த புன்னகையுடன் அறையில் இருந்து வெளியே வந்த சஞ்சளா மாடி ஏறி செல்பவனை புருவ சுழிப்புடன் பார்த்தாள். வேகமாக படிகளில் காலடியை பதித்து சென்று கொண்டிருந்தான் துவாரகேஷ். இரவு உணவை தயார் செய்து விட்டு அழைக்க செல்லலாம் என்று எண்ணி சமையல் அறைக்குள் சென்று என்ன சமைக்கலாம் என்று சிந்தனை செய்ய சட்டென எதுவும் நினைவில் எட்டவில்லை.

Advertisement