Advertisement

அதன் பிறகு நான்கு நாட்கள் தனிப்பட்ட விடுமுறையில் எங்காவது செல்ல வேண்டும் என்று தீடீரென திட்டமிட்டு வேலையில் இருந்து மட்டுமல்ல சென்னையின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்தும் சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டி நண்பர்கள் மூவரும் குடும்பத்துடன் மகாபலிபுரம் வந்திருந்தனர்.

முன் உச்சியில் சிலுப்பி கொண்டு நின்ற சில முடிகளை காதோரமாய் ஒதுக்கி விட்டவனின் கையை வேகமாக தட்டிவிட்டாள் சஞ்சளா. அவள் கோபத்தை புன்னகை அரும்ப ரசித்தவன் “நமக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷம் ஆகலை ஒரு மாசம் இருபத்தி நாலு நாள் தான் ஆகிருக்கு இந்த இடைப்பட்ட நாட்கள்ல உன்மேல கவனம் செலுத்துனதை விட வேலையில தான் அதிகமா கவனம் செலுத்திருக்கேன், அதை நானே ஒத்துகிறேன். புதுசா கல்யாணம் ஆன பொண்ணோட எதிர்பார்ப்புகள் என்ன மாதிரி இருக்கும்னு ஓரளவுக்கு என்னால புரிஞ்சிக்க முடியும் சஞ்சும்மா.

நீ கோபப்பட்ட நேரத்துல ஒர்க் டென்ஷன உன்மேல காட்டி சண்டை போட்டுருக்கலாம் ஆனா அது எனக்கு பிடிக்காது. எங்கயோ யார்மேலயோ இருக்குற கோபத்தை சம்பந்தமே இல்லாத உன்கிட்ட காட்டுறது சரியா இருக்காது. நீ என்கிட்ட சண்டை போட்டு கோபமா பேசுனப்போ அந்த கோபம் எனக்கு நியாயமா 

பட்டுச்சு, உன்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாத்ததால எனக்கு கோபம் வரல. என்னோட இயலாமைய சமாளிக்க தான் அந்த சிரிப்பே தவிர உன்ன எரிச்சல் படுத்த இல்ல சஞ்சு.

எப்ப கொஞ்சனும், கெஞ்சனும், சண்டை போடணும்,சமாதானம் ஆகணும்னு ஒரு வரை முறை இருக்கு. எடுத்ததுகெல்லாம் குத்தம் கண்டு பிடிச்சு சண்டை போட்டு வாழ்க்கைய, வாழ தெரியாம ஏனோ தானோன்னு வாழ எனக்கு விருப்பமில்ல” என்று அவளுக்கு புரியுமாறு தணிவாக விளக்கினான் துவராகேஷ்.

ம்ஹும்” என்று இதழ் சுளித்தவள்”ஆனா அதுக்காக இப்டியும் இருக்க கூடாது மாமா கல்யாணம் ஆன நாள்ல இருந்து நானும் உங்களை கவனிச்சுட்டு தான் இருக்கேன் நா எது பேசுனாலும் ‘அப்டியா சரின்னு’ சொல்றிங்களே தவிர நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்ல மாட்டிங்கிறீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசுன துவாரகா வேற இப்போ இருக்குறவரு வேறன்னு தோணுது டோட்டல் சேன்ஜ்” என்று அவன் கூற்றை ஏற்று கொள்ள முடியாமல் வருந்தி பேசினாள்.

இதழ் பிரியா சிரிப்பை உதிர்த்தவன் “கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்னோட காதலி.அந்த நேரத்துல உன்கிட்ட கிண்டலா கோபமா பேசிட்டு போயிறலாம் நீயும் சில நேரங்கள்ல சாதாரணாமா எடுத்துப்ப. சில நேரங்கள்ல நா பேசுனதுல உனக்கு மன கஷ்டமோ சங்கடமோ இருந்தா யார்கிட்டயாவது சேர் பண்ணிப்ப. ஆனா,கல்யாணம் ஆன பிறகு அந்த மாதிரி பேசுனா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. யார்கிட்டயும் உன்னால சேர் பண்ணிக்க முடியாது, கூடாது. ஏன்னா நாம ரெண்டு பேரோட உறவு அப்டி!” என்று தோளோடு தோள் சேர்த்து அணைத்து சமாதானம் செய்தவன்,

விருப்பத்துக்கும் நேசத்துக்கும் வித்தியாசம் இருக்கு சஞ்சும்மா. முன்னாடி உன்ன விரும்புனேன் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். இப்போ நேசிக்கிறேன் உன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிக்கணும்னு நினைக்கிறேன்”என்று வார்த்தைகளை அனுபவித்து கூறினான்.

நீங்க சொல்றதை கேட்கும் போது கூடை ஐஸ்கட்டிய மொத்தமா கொட்டுன மாதிரி ஜில்லுன்னு தான் இருக்கு. ஆனா.. நடந்துகிறதை பாக்கும் போது அக்னி நட்சத்திரம் மாதிரி கொதிக்கிது” என்றாள் கடுப்பின் காரம் குறையாமல்.

ப்ச் எவ்ளோ பொறுமையா உனக்கு புரியிற மாதிரி சொல்லிட்டுருக்கேன் இப்டி கோபப்பட்ட என்ன அர்த்தம் கண்ணம்மா. ரொம்ப முக்கியமான கேஸ் முடிக்க வேண்டிய கட்டாயம் அந்த நேரத்துல அதை தவிர வேற எதுலயும் கவனம் செலுத்த முடியலை. நா நடந்துகிட்டது உனக்கு கொஞ்சம் ஓவரா தான் இருக்கும் ஆனா என்ன பண்ண, என்னோட ஒர்க் அப்டி. எல்லாம் தெரிஞ்சு தானே என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்றவன்,

இனி அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன் என்ன வேலையா இருந்தாலும் உன்மேல கவனம் செலுத்துவேன் உன்கூட டைம் ஸ்பென் பண்ணுவேன் இது உன்மேல பிராமிஸ்”என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தவனை மிரட்சியுடன் பார்த்தாள் சஞ்சளா.

அவள் பாவனை அவனுக்குள் சிரிப்பை உண்டாக்க “சத்தியத்தை காப்பத்துவேன் பயப்படாத சஞ்சு” என்று நம்பிக்கையளித்தவன் “சண்டை போடலாம் காரணம் இருந்தா சண்டை இல்லையா சமாதானம்.  அனுபவிக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. சண்டை போட்டு சமாதானமாகி, விட்டு கொடுத்து, சில பிடித்தங்களை தியாகம் பண்ணி, உனக்கு நா இருக்கேன் எனக்கு நீ இருக்கன்னு ஒருத்தருக்கொருத்தர் துணையா அனுசரணையா எதிர்கால கடமைகளை நிறைவேத்துன பிறகும், நமக்குள்ள இருக்குற நேசம் குறையாத அளவுக்கு வாழணும்னு ஆசைப்படுறேன்”என்று கண்களில் கனவுகள் மின்ன கூறினான் துவாரகேஷ்.

ம்ஹும் அப்பவே வைத்திக்கா  சொன்னாங்க காக்கி சட்டைக்கு வாக்கப்பட்டா கால நேரமெல்லாம் பாக்க கூடாது பொறுமை ரொம்ப முக்கியம் சஞ்சு. வலிக்காத மாதிரியே வாழ்க்கைய நடத்தணும்னு.  இந்த மரமண்டைக்கு அப்ப புரியலை இப்ப தானே புரியுது எதுக்கு அப்டி சொன்னாங்கன்னு” என்று அலுத்து கொள்ள,

இதுக்கு தான் அனுபவப்பட்டவங்க சொன்னா கேட்கணும்னு சொல்றது. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்” என்று சோகம் இழையோட கூறியவன் அவள் முறைப்பை கண்டு இளநகை புரிந்தான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை கண்ணம்மா. உனக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காம இருக்கலாம் எனக்கு பிடிச்சது உனக்கு பிடிக்காம இருக்கலாம் உதாரணத்துக்கு எனக்கு கணக்கும் தோசையும் ஒன்னு சுட்டு போட்டாலும் பிடிக்காது வராது. ஆனா, உனக்கு அப்டியில்ல ரெண்டுமே உன்னோட ஃபேவரைட் அது மாதிரி தான் கணவன் மனைவி ரிலேஷன்ஷிப்.

எதிர் எதிரான கருத்துகளோட  இருக்குறது தான் அந்த உறவோட சுவாரஷ்யமே. ரெண்டுபேருக்கும் ஒரே கருத்து ஒரே மனநிலை ஒரே பிடித்தம் இருந்தா அங்க சுவாரஸ்யமே இருக்காது ரசனையில்லா வாழ்க்கைய வாழ்ந்து தான் ஆகனுமன்ற கடமையா மாறிடும் இல்ல வெறுத்து வேணாம்னு விலகி போக தோணிரும். ஏன்னா அங்க ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கவோ புரிஞ்சுக்கவோ அவசியம் இருக்காது” என்று எதார்த்த வாழ்வை எடுத்துரைத்தவன் சஞ்சளாவை பார்க்க, திகைப்பின் உச்சத்தில் கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் முகத்திற்கு நேராய் சொடுக்கிட்டு நடப்பிற்கு கொண்டு வந்தவன் “என்ன அப்டி பாக்குற?”

இல்ல.. ஏ இப்டி இருக்கீங்கன்னு கேள்வி கேட்டதுக்கு இவ்ளோ பெரிய பதிலை உங்ககிட்ட எதிர்பாக்கலை மாமா அறிவா பேசுறீங்க. இந்த ஞானோதயம் வர்றதுக்கு எந்த மரத்தடியில உக்காந்துட்டு வந்திங்க” என்று கிண்டல் பேசியவளின் மனதில் அமைதி இடம் பிடித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. 

ஞானோதயம் வர மரத்தடி தேவையில்ல சஞ்சு மத்தவங்க வாழ்க்கைய பாத்தாலே போதும்” என்று சிரித்து கொண்டே சொல்ல, 

ம் நல்லாவே பேசுறீங்க” என்று தலையை ஆட்டி மெச்சி கொண்டவள்” ஏன் மாமா நீங்க சொன்ன மாதிரி எதிர் எதிரா இருக்குறதை விட எதிரும் புதிருமா இருக்குறதும் நல்லா தானே இருக்கும்”என்று அதிதீவிரமாக கேட்டு வைக்க,

நா சொன்னதுக்கு அர்த்தம் வேற நீ சொல்றதுக்கு அர்த்தம் வேற. எதிரும் புதிருமா இருக்கலாம் ஆனா..அங்க வெறுப்பு மட்டும் தான் இருக்கும் விருப்பு இருக்காது அப்டியிருந்தா உனக்கு ஓகேவா கண்ணம்மா” என்று ஒற்றை புருவம் உயர்த்தி இதழ் மடித்து சிரிப்பை அடக்கி கேள்வியாய் பதில் அளிக்க,

ம்ஹும்” என்று வேகமாக தலையாட்டியவள் “எனக்கு இந்த தொங்கா தான் வேணும் நாம இப்டியே எதிர் எதிராவே இருக்கலாம்” என்று அவன் கன்னம் பிடித்து ஆட்டி தோளில் சாய்ந்து கொண்டாள் சஞ்சளா.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு பேசி கொண்டதில் இருவரிடத்திலும் சொல்லில் அடங்காத மெல்லிய இதம் பரவ, சற்று நேரம் இருவரும் ஆழியின் அழகை ரசித்தனர். கடற்கரை வந்து நீண்ட நேரம் ஆனதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவள் அவன் முகத்தில் பார்வையை நிலைநிறுத்த, களைப்பின் மிகுதி அப்பட்டமாய் தெரிந்தது. “ரெஸ்ட் எடுக்கலாம்” என அவன் கூறியது நினைவில் வர,

அலைபேசியில் நேரம் என்னவென்பதை பார்த்துவிட்டு “மாமா ரூமுக்கு போலாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் வரலாம்” என்று எழுந்து கொண்டு அவன் எழ வேண்டி கரம் நீட்டினாள் சஞ்சளா.

சிறு புன்னகையுடன் அவள் கரம் பற்றி எழுந்து கொண்டவன் ஆடையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டு அவள் கரத்தினை பற்றி கொள்ள, பேசிக்கொண்டே இருவரும் அறைக்கு சென்றனர்.

மாலை மயங்கும் வேளை வானம் கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சியபடி இருளை கவர தொடங்கியது. ஆங்காங்கே வெளிச்சம் பரப்பிய எல்இடி விளக்குகளின் பார்வையில் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர் விஷ்ணு விஜயன் துவாரகா மூவரும்.

டேய் இன்னுமாடா ரெடியாகுறாங்க எவ்ளோ நேரம் தான் வெய்ட் பண்றது”, கிட்டத்தட்ட அலுத்து கொண்டான் விஜயன்.

கிளம்ப வேணாமா ஒரு ஆள் ரெடியாகவே ஒரு மணி நேரம் ஆகும் மூணு பேர். அட்லீஸ்ட் ரெண்டு மணி நேரமாவது ஆக வேணாம்” என்று துவாரகேஷ் கேலி பேச,அவர்களின் பேச்சை தொடர்ந்து வந்த சிரிப்பு சத்தம் செவிகளை நிறைத்தது. 

ஹப்பாடா வந்துட்டாங்கடா” என்று பெருமூச்சை வெளியிட்டு துவாரகா சொல்ல,

வேகமாக திரும்பி பார்த்த விஷ்ணுவிற்கு சிரிக்கவா சிலிர்க்கவா என்றே தெரியவில்லை. இதுநாள் வரை புடவையிலும் சுடிதாரிலும் வலம் வந்தவளை, இன்று வேறு உடையில் கண்டதும் அதிசயத்தின் அறிகுறிகளாக புருவங்கள் மேலெழும்பின.

நீல நிற லாங்ஸ்கர்ட்டும் அதற்கு இணையாய் எடுத்து காட்டும் வகையிலான வெள்ளை நிறத்திலான ஸார்ட் டாப்பும் அணிந்து கேசத்தை மொத்தமாய் அடக்காமல் விரித்து விட்டபடி மிதமான ஒப்பனையை பூசிக்கொண்டு தயக்கமும் சிரிப்போடு கலந்த நாணமும் இழையோட நடந்து வந்தவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. 

அருகில் வந்தவள் “நல்லா இருக்கா மாமா” என்று ஆவலை தேக்கி ஆசையாய் கேட்க,

இது என்ன தேவிம்மா கோலம். இதெல்லாம் உனக்கு பழக்கம் இல்லையே சுடி இல்லன்னா புடவை தானே கட்டுவ இதென்னா புதுசா”, வியப்பா கேலியா என்று பிரித்தறிய முடியாத பாவனையின் ஊடே சிரிப்புடன் கேட்டவன்,

இது என்ன முகத்துல கிலோ கணக்குல பிளீச்சிங் பவுடரை அப்பி வச்சுருக்க இவ்ளோ தான் இருந்துச்சா” என்று வெளிப்படவிருந்த சிரிப்பை அடக்கி, கேட்டான் விஷ்ணு.

Advertisement