Advertisement

கண்ணீர் துளிகள் கன்னத்தை நனைக்க சிரித்தவன் “என்ன தான் உறவுன்னு சொல்லிக்க நீங்க எல்லாரும் இருந்தாலும் ரத்த சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையென்றே ஒரு வலி கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அடி மனசுல இருந்துச்சு வைசு. அது இப்போ இல்ல. என்னோட உயிர். என்மூலமா வந்த உயிர். சொல்ல வார்த்தையில்ல வைசு, எல்லாத்துக்கும் நீ தான் காரணம்! நீ மட்டும் இல்லன்னா இப்பவும் ஏதோ ஒரு மூலையில  யாருமே..” என்றவனின் வாயை வேகமாக மூடினாள் வைஷாலி.

ப்ளீஸ் விஜி பழைய விஷயங்களை பேசி கஷ்டப்படாதீங்க விட்டுருங்க. அத பத்தி நினைக்கவே வேண்டாம் இனி வாழ போற மிச்ச வாழ்க்கைய எப்டி வாழணும்னு மட்டும் நினைங்க” என்றவள் அவன் நெஞ்சில் தலைசாய்த்து கொள்ள,

சன்ன சிரிப்புடன் அணைத்து கொண்டவன் “ரொம்ப தங்க்ஸ் வைசு” என்றான் உள்ளம் நிறைந்து.

நறுக்கென்று அவன் கையில் கிள்ளியவள் “உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் நமக்குள்ள இந்த தங்க்ஸ் சாரி இதெல்லாம் வேணாம்னு. இனிமே சொன்னிங்க கிள்ளி வைக்க மாட்டேன் கடிச்சு வச்சுறுவேன். நா யாரோ இல்ல உங்க மனைவி என்கிட்ட எதையும் உரிமையோடு கேளுங்க சொல்லுங்க ஆனா மூணாவது ஆள் மாதிரி ஃபார்மலிட்டிஸ் பாத்திங்க கொன்னுருவேன்” என்று கண்களை உருட்டி ஆள்காட்டி விரலை அவன் கண் முன்னே அசைத்து எச்சரிக்க,

அம்மாடியோவ் பாக்கவே பயங்கரமா இருக்கு இன்னொரு முறை இதே எக்ஸ்ப்ரஷனோட பண்ணு வைசு டப்ஸ்மாஸ்க்கு யூஸ் பண்ணிக்கலாம் சந்திரமுகி டையலாக் எடிட் பண்ணி போட்டா செம்மயா இருக்கும் லைக் பிச்சுக்கும்” என்று கிண்டல் பேசியவனின் நெஞ்சில் போலியாய் சில அடிகளை வைத்து சிணுங்கினாள் வைஷாலி. 

ரொம்ப ஓட்டுறீங்க விஜி அந்த அளவுக்கு பயங்கரமாவா இருக்கேன்” என்று இதழ் சுழிக்க,

பயங்கரமா இல்ல, ஆனா ராட்சசியா இருக்க. அழகான ராட்சசி” என்று மூக்கை பிடித்து ஆட்டி கொஞ்சினான் விஜயன்.

சரி சரி போதும். விட்டா ஓவரா கொஞ்சுவிங்க நா போய் அம்மாகிட்ட பேசிட்டு வறேன்” என்று அலைபேசியை எடுத்து கொண்டு நகர முற்பட்டவளை பிடித்து நிறுத்தியவன்,

இங்க இருந்தே பேசு வைசு வெளிய வேணாம்” என்றதும் அவன் அருகில் அமர்ந்து  கிருஷ்ணனுக்கு அழைப்புவிடுத்து பேச தொடங்க, சலுகையாய் கழுத்திலே கரம் கோர்த்து கொண்டு அவள் பேசுவதை சுவரஸ்யமாய் கேட்க தொடங்கினான் விஜயன்.

கடற்கரையில் சஞ்சளாவின் ஆட்டம் ஓய்ந்த பாடில்லை. கரை தொட்டு செல்லும் அலையை தொடர்ந்து முன்னால் செல்வதும், கரை தொட வரும் போது பின்னால் ஓடி வந்து அவன் அருகில் நின்று கொள்வதும் என குழந்தையாய் குதுகலித்து விளையாடி கொண்டிருந்தவள் “மாமா நீங்களும் வாங்க ப்ளீஸ்” என்று அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனை அழைத்தாள்.

இல்லம்மா எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல, எதையும் ரசிக்கிறதோட சரி நீ போய் விளையாடு”என்றிட, 

விழிகள் இடுங்க முறைத்து பார்த்தவள் “சின்ன பிள்ளை தனமா இருக்கு நீங்க பேசுறது. ரசிக்கிறது மட்டும் வாழ்க்கை இல்ல அதை அனுபவிக்கணும்.  அதுவுமில்லாம இதெல்லாம் பழகி வர்றது இல்ல மாமா. என்ஜாய் பண்ண மூட் இருந்தா போதும். என்ஜாய் பண்ண வர சொன்னா என்னயவே ஃபிலாசஃபி பேச வைக்கிறீங்க எந்திரிங்க மாமா தனியா விளையாட போர் அடிக்கிது”என்று வலுக்கட்டாயமாக அவன் கையை பிடித்து இழுக்க,

அவள் அதீத தொல்லை தாள முடியாமல் “இருடி வறேன்” என்றவன் காலணியை ஓரமாய் கழட்டி வைத்து விட்டு கரை தொடும் அலையில் காலை வைக்க, உடல் சிலிர்த்தது துவாரகாவிற்கு. மண்டையை பிளக்கும் வெயிலுக்கு இதமாய் உடலில் இறங்கியது ஜில்லென்ற பரவசம்.

எத்தனையோ முறை நண்பர்களுடன் அலையில் காலை மட்டும் நனைத்ததுண்டு ஆனால், இன்று துணையின் கரம் பற்றி அலையில் நனைவது புது அனுபவமாக இருந்தது துவாரகாவிற்கு. சற்று நேரம் தண்ணீரில் நனைந்து ஒருவரை ஒருவர் நனைத்து ஆட்டம் போட்டுவிட்டு ஒருவர் கரத்தினை ஒருவர் பற்றியபடி நுரை தொட்டு செல்லும் கரை மீது எல்லை வகுக்காமல் நடக்க தொடங்கினர்.

சற்று தூரம் வரை இருவரும் பேசவில்லை. பேசி கொள்ள இருவரிடத்திலும் ஏதும் இல்லையோ என்னவோ?. ஆனால் மனம் மட்டும் பாஷைகளை பரிமாற்றம் செய்ய துடித்து கொண்டிருந்தது. பரந்த ஆழியை பார்வையால் தழுவி கொண்டு வந்தவனிடத்தில் நொடிக்கொரு தரம் அமைதியான பார்வையை வீசினாள் பாவை. ஆனால் அமைதியின் உள்ளே ஏதோ அர்த்தம் பொதிந்திருந்தது அது காதலா அல்லது கேள்வியா அல்லது இரண்டுமா என்பதை அவளே அறிவாள்!. 

மனையாளின் புதிரான பார்வையை உணர்ந்து கொண்டாவனின் அடிமனதில் ஜில்லென்ற இதம் பரவ”சைட் அடிச்சது போதும் கண்ணம்மா” என்ற துவாரகா சிருங்காரத்தின் சில துளிகளை மறைக்க சட்டென முகத்தை திருப்பி கொண்டான்.

அதை என்ன பாத்து சொல்லுங்க மாமா” என்றவள் அவன் செயலை கண்டு அடக்கமாட்டாமல் சிரிக்க,

இதுக்கு தான் வரமாட்டேன்னு சொன்னேன் படுத்துற கண்ணம்மா எனக்கு ஒரு மாதிரி ஃபீல் ஆகுது நீ பாக்குறது. நாம ரெண்டுபேரும் தனியா இருக்கும் போதுன்னா பிரச்சனை இல்ல பொது இடத்துல இந்த மாதிரி பாக்காதடா..”என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணற,

அடேயப்பா இதுக்கே இப்டியா? இதுவரைக்கும் தனியா இருக்கும் போது அப்டியே ரொமான்ஸ் அள்ளி கொட்டிட்டிங்க பாருங்க. போறா தொங்கா” என்றவள் அடிமனதில் பதுக்கி வைத்தவைகளையெல்லாம் கொட்ட தொடங்கினாள்.

கல்யாணமாகி ஒரு மாசத்துக்கு மேல இருக்குமா? ஆனா எனக்கு என்னவோ பத்து பதினஞ்சு. வருஷம் ஆனா மாதிரி ஃபீல் ஆகுது. இப்ப வரைக்கும் எல்லா விஷயத்துலயும் எதிர்பார்போட தான் வச்சுருக்கிங்க நானும் உங்ககிட்ட இருந்து ஒரு சில விஷயங்களை எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டு தான் இருக்கேன். வாழ்க்கை முழுக்க இப்டியே வெறுமையா போயிருமோன்னு பயமா இருக்கு மாமா. 

ஒவ்வொரு தடவையும் இப்டி பண்ணாதீங்கன்னு கோபமா பேசுறேன் சண்டை பிடிக்கிறேன் ஆனா அதை கூட ஒழுங்கா எதிர்வாதம் செய்யாம ஒரே ஒரு சின்ன சிரிப்புல கடந்து போயிடுறீங்க. அந்த நேரத்துல எனக்கு எப்டி இருக்கும் தெரியுமா? அப்டியே எரிச்சலா வரும் தலையில ணங்கு ணங்குன்னு கொட்டலாம் போல இருக்கும்” என்று குறைபட்டு கொண்டவளின் வார்த்தைகளில் மின்னல் கீற்றாய் கோபம் எட்டி பார்த்தது.

என்ன கண்ணம்மா இப்டி சொல்லிட்ட அப்ப இந்த திருடனை உனக்கு பிடிக்கலையா?, சண்டை போட்டா தான் பிடிக்குமா?”என்று கூம்பிய முகத்துடன் கேள்வி கேட்க,

மூச்சு வாங்க முறைத்து பார்த்தவள்”இதை கூட ஒழுங்கா பண்ண தெரியலை நா கோபமா பேசுறேன். நா அப்டி தான்னு அடிச்சு பேச தெரியலையா உங்களுக்கு!. சண்டை போடுவிங்கன்னு பாத்தா சமாதானமா பேசுறீங்க. ஏன் மாமா இப்டி இருக்கீங்க உங்களுக்கு சண்டை போடவே தெரியாதா?”,எரிச்சல் மண்ட கேட்டவள்,

ஒன்னு அதிரடியா இறங்குறீங்க இல்ல இருக்குற இடமே தெரியாமே அடங்கி இருக்குறீங்க உங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலை. உங்கள வச்சு எப்டி தான் வாழ்க்கை முழுக்க குப்பை கொட்ட போறேனோ தெரியலை மாமா. நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கோம் ஆனா.., அந்த லவ்வ ஒரு சதவீதம் கூட கல்யாண வாழ்க்கையில பிரசன்ட் பண்ணலை மிச்சம் இருக்குற வாழ்க்கைய நினைச்சாலே பயமா இருக்கு” என்று வேகமாக ஆரம்பித்தவள் சோர்வுடன் பேசி முகத்தை திருப்பி கொள்ள, கண்ணீர் துளிகள் லேசாய் இமைகளை நனைத்திருந்தது. 

அவள் கோபத்தில் சன்னமாய் சிரித்தவன் “இங்க உக்காருவோமா?” என கேட்டு அமர்ந்து கொண்டு, சஞ்சளாவை பக்கத்தில் இருத்தி கொண்டான். பற்றிய கரத்தினை வருடி கொடுத்தவன் அவள் முகம் பார்க்க, ஆதங்கத்தின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி படர்ந்திருந்தது அவளிடத்தில்.

அவளின் கோபம் எதனால் என்று அவனுக்கு தெரியமால் இல்லை ஆனால்.. கடமையின் கட்டளையால் தீடீரென வேலையில் சேர வேண்டிய கட்டாயம். ஆத்மார்த்தமாய் நேசித்து ஆசையாய் மணமுடித்து இரண்டு நாட்கள் மட்டுமே அவளுடன் நேரத்தை செலவழித்தான் துவாரகேஷ். 

மேலிடத்தில் இருந்து முடிக்க வேண்டிய முக்கியமான விசாரணையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேறு வழியில்லாமல் மூன்றாம் நாளே வேலையில் வந்து சேர்ந்து கொண்டான். அதுவும் விண்ணப்பித்திருந்த விடுமுறையை ரத்து செய்துவிட்டு.  

காவல் நிலையத்திற்குள் நுழைந்தவனை புரியாது பார்த்த விஷ்ணு என்ன ஏது என்று கேட்க, திருமணத்திற்கு எடுத்த விடுமுறையை ரத்து செய்ததை பற்றி கூறியதும் அத்தனை கோபம் அவனுக்கு”ஏண்டா லீவ கேன்சல் பண்ண. அட்லீஸ்ட் ஒரு வாரமாவது லீவ் எடுத்துக்க வேண்டியது தானே! நா பாத்துக்க மாட்டேனா.. அப்ளே பண்ண லீவ போய் கேன்சல் பண்ணிருக்க பக்கி. என்கிட்ட பேசுற மாதிரியே கமிஷ்னர்கிட்ட பேச வேண்டியது தானே?” என்று ஆற்றாமையில் கொப்பளிக்க,

பச் இந்த கேஷை முடிச்சுட்டா தொல்லை விட்டதுன்னு நிம்மதியா இருப்பேன். கால சுத்தன பாம்பு மாதிரி இத்தனை நாள் கொத்தாம இருந்ததே பெரிய விஷயம்டா. சூசைட் கேஸ். கொஞ்சம் பெரியிடத்து சமாச்சாரம் கேஸ்ல இருந்து வாபஸ் வாங்கிகோங்க சிபிஐக்கு மாத்தி என்ன பண்ணணுமோ பண்ணிக்கிறோம்னு சொல்றாங்கடா.

கிட்டத்தட்ட நெருங்கிட்டேன் இந்த நேரத்துல அங்க இங்கன்னு கேஷை கைமாத்துனா நிச்சயம் குற்றவாளி உஷாராகி தப்பிச்சிறுவான். இவங்களும் இழு இழுன்னு ஜவ்வா இழுத்து சீக்கிரம் முடிக்க வேண்டிய கேஷை வருஷ கணக்கா கொண்டு போயிருவாங்க. மறுபடியும் கேஷை முதல இருந்து ஆரம்பிப்பாங்க,அதான் இந்த நேரத்துல லீவ் எடுத்தா சரியா இருக்காதுன்னு டியூட்டில ஜாயின் பண்ணிட்டேன்” என்று விசாரணையின் தீவிரத்தை பற்றி உரைத்தவன் தீர்க்கமாய் கூறிவிட்டு வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினான் துவாரகேஷ்.

வேலையின் மீது அவனுக்கிருந்த நாட்டத்தையும் தீவிரத்தையும் புரிந்து கொண்டவன் வற்புறுத்தவில்லை அவன் போக்கிலேயே விட்டுவிட்டான் விஷ்ணு. அதன் பின் வந்த நாட்கள் ஒருவித பரபரப்புடனே சென்றன துவாரகாவிற்கு . காலை காவல் நிலையம் கிளம்பி சென்றால் இரவு வெகுநேரம் கழித்தே இல்லம் வருவது. இடையில் விசாரணைக்காக சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டி அவ்வப்போது வெளியூரும் சென்று விடுவான்.

சில நாட்கள் அவனுக்காக காத்திருப்பாள் உறக்கம் வந்தால் உறங்கி விடுவாள், சில நேரம் இயலாமையில் கோபமாக கத்திவிடுவாள் சஞ்சளா. அவளுக்காகவே அவளுடன் சிறிது நேரமாவது நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே நடத்த வேண்டிய விசாரணையில் தீவிரமாக கவனம் செலுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த பின்னரே ஓய்ந்தான் துவாரகேஷ். 

Advertisement