Advertisement

சில வாரங்களுக்கு பிறகு… மகாபலிபுரம் ரெசார்ட். 

ஏசியை ஆன் செய்து மிதமாக அறையில் குளிரை பரப்பும் வகையில் வைத்துவிட்டு ‘அக்கடா’ என கட்டிலில் அமர்ந்தான் விஷ்ணு. நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைதூரம் காரை ஓட்டி கொண்டு வந்ததில் முதுகு தண்டு சற்று வலிக்க தொடங்கியது அவனுக்கு, குனிந்து நிமிர்ந்து அமர்ந்தவன் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிட, அவன் செயலை விசித்திரமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் வைதேகி. 

என்ன மாமா ரொம்ப வலிக்கிதா?” என்று பரிவுடன் கேட்க.

ஆமா தேவிம்மா டிரைவ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கார் ஓட்டும் போது தெரியலை ஸ்பைனல் கார்ட்ல லேசா வலிக்கிது” என்றான் எழுந்து நின்று பின்னால் முதுகை வளைந்தபடி.

தைலம் தேச்சு விடவா மாமா சரியாகிரும்” என்றவள் அவசரத்திற்கு தேவைப்படும் என்று கையோடு கொண்டு வந்த தைல பாட்டிலை எடுக்க போக,

இல்ல தேவிம்மா வேணாம். கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சா சரியா போயிரும்” என்றவன் “ஒரு காஃபி குடிக்கலாமா?” என்று முகம் சுருக்கி கேட்டான் விஷ்ணு.

இந்த வேகாத வெயில்ல கார் ஒட்டிட்டு வந்துட்டு காஃபி குடிக்க போறிங்களா? நல்லா இருக்கும்” என்று நொடித்து கொண்டவள் “எனக்கு வேணாம் நீங்க வேணா குடிங்க ரொம்ப டையர்டா இருக்கு பிரேஷ்ஷா ஒரு குளியல் போட்டுட்டு குட்டி தூக்கம் போடணும்” என்று மாற்று உடையை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள்  புகுந்து கொண்டாள் வைதேகி.

தோளை குலுக்கி கொண்டவன் தனக்கொரு காஃபியை இண்டர்காம் வழியாக ஆர்டர் செய்து விட்டு, ஜன்னல் திரைசீலைகளை ஒதுக்கி வெளியே பார்வையிட, கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாய் ஆர்ப்பரிக்கும் அலைகடல், நீல நிற ஆகாயத்தை ஒட்டியவாறு அழகாய் தெரிந்தது.

சில நிமிடம் கடலை ரசித்து கொண்டிருந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்க்க சர்விஸ் பாய் கையில் காஃபி காப்புடன் நின்று கொண்டிருந்தான்.

சார் காஃபி” என்று டிரேயை நீட்ட,புன்னகை முகமாய் எடுத்து கொண்டவனிடத்தில்,

சார் உங்களுக்கு ரூம் பிடிச்சிருக்கா ஏசி ஒர்க் ஆகுதா? வேற இஸ்யூஸ் எதுவும் இல்லையே, இருந்தா சொல்லுங்க சார் என்ன ஏதுன்னு பாத்து சரி பண்ணிடுறோம்” என்று சேவையின் நிறைவை தெரிந்து கொள்ள வேண்டி வழக்கமாக கேட்கும் கேள்வியை பணிவுடன் கேட்க,

எல்லாம் ஓகே, குடிக்க தண்ணி மட்டும் கொண்டு வந்து வச்சுடுங்க”என்று பதில் அளித்தவனிடம் “ஓகே சார்” என்று நகன்றுவிட்டான் சர்விஸ் பாய்.

கதவை மூடிவிட்டு கட்டிலில் அமர்ந்து காஃபியை பருக தொடங்க, அலைபேசி சிணுங்கியது “யார்டா அது” என்றவாறே மொபலை எடுத்து பார்க்க துவாரகேஷ் தான் அழைப்பு விடுத்தான்.

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் “டேய் எங்கடா இருக்க ரூம் வரைக்கும் வாடா உன்னோட தங்கச்சி தொல்லை தாங்க முடியலை” என்றான் கிட்டத்தட்ட அவஸ்தை நிறைந்த குரலில்.

என்னடா என்னாச்சு?”.

வந்து அரை மணி நேரம் கூட ஆகலை பீச்ச பாத்ததும் போலாம் போலாம்னு ஒரே நச்சரிப்பு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் போலாம்னு சொன்னா கேட்க மாட்டிங்கிறாடா” என்று புலம்பினான்.

பக்கி இதுக்கெதுக்கு எனக்கு ஃபோன் பண்ற கூட்டிட்டு போக வேண்டியது தானே! என்னமோ கல்யாணமாகி அஞ்சாறு வருஷம் ஆனவன் மாதிரி பேசுற. ஃபோன கட் பண்ணிட்டு சஞ்சு எங்க கூப்டாலும் போயிட்டு வா இவ்ளோ தூரம் வந்ததே என்ஜாய் பண்றதுக்கு தானே! இங்க வந்தும் ரெஸ்ட்டா? ஒழுங்கா கூட்டிட்டு போ” என்று வார்த்தையிலேயே உருட்டி மிரட்டியவனிடம் எதுவும் பேச முடியாமல் விழித்தான் துவாரகேஷ். 

இதுக்கு அவளே பரவாயில்ல எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு உனக்கு ஃபோன் பண்ணேன் பாரு என்ன சொல்லணும்” என்று முணுமுணுத்து கொண்டே”சரி கூட்டிட்டு போறேன்” என்று சுணக்கத்துடன் கூறி அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப, கேலி பார்வையை அவன் மீது பதிய வைத்தபடி நின்று கொண்டிருந்தாள் சஞ்சளா. 

இந்த பல்ப் உங்களுக்கு தேவையா? எதுக்கு தேவையில்லாம விஷ்ணு அண்ணாக்கு ஃபோன் போட்டிங்க அவரு எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாறுன்னு தெரியாதா!” என்று நக்கலாய் மொழிந்துவிட்டு “வாங்க போலாம்” என்று சஞ்சளா முன்னே செல்ல,

உதட்டை சுழித்து கொண்டு எழுந்தவன் அறையை பூட்டிவிட்டு அவளுடன் கடற்கரைக்கு சென்றான் துவாரகேஷ்.

ஆழி பேரலை “வா வா” என்று அழைப்பது போல தெரிந்தது அவளுக்கு. கடற்கரையை நெருங்கியதும் மிட்டாய் கடையை பார்த்த மழலை போல துள்ளல் நடையில் கிட்டத்தட்ட ஓடி சென்றவள் ஆர்ப்பரிக்கும் அலையில் காலை வைக்க, ஜில்லென்ற இதம் பாதத்திலிருந்து பயணம் செய்து கபாளத்தை தொட்டது.

அதுவரை உம்மென முகத்தை வைத்து கொண்டிருந்தவன் அவளின் உற்சாக சிரிப்பை கண்டதும் தன்னிச்சையாய் குருநகை அரும்பிட “வாலில்லாத வானரம்ன்றது சரியா தான் இருக்கு” என்று சிறு முணுமுணுப்புடன் ஈரமில்லாத இடம் பார்த்து அமர்ந்து அவள் அலையோடு விளையாடும் அழகை ரசிக்க தொடங்கினான் துவாரகேஷ்.

குளியல் அறையில் இருந்து வெளிப்பட்ட விஜயன் அறையில் அவன் மனைவி இல்லாததை கண்டு அவளை தேடி வெளியே வர, காரிடரில் நின்று இலக்கற்று வெறித்து கொண்டிருந்தாள் வைஷாலி.

என்ன வைசு இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க உள்ள வர வேண்டியது தானே?” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தவள்,

சும்மா தான் விஜி உள்ள இருக்க ஒரு மாதிரியா இருந்துச்சு கொஞ்ச நேரம் காத்தோட்டமா நிக்கலாம்னு வெளிய வந்துட்டேன்” என்று விளக்கம் அளித்தவள் தயக்கம் இழையோட அவன் முகம் பார்த்தாள். 

முடிவு தெரிந்த பிறகு சொல்லவா இப்போதே சொல்லவா?’ என்று எண்ணங்கள் ஓட, வாய் வரை வரும் வார்த்தைகளை எச்சில் கூட்டி விழுங்கியவள் ‘எப்படி சொல்வது? எங்கிருந்து தொடங்குவது’ என மனதில் விவாதம் நிகழ்த்தி கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் படர்ந்த யோசனையின் ரேகைகளை கவனித்து கொண்டிருந்தவன் “என்ன ஆச்சு வைசு உடம்பு ஏதாவது பண்ணுதா” என்று நெற்றியில் கைவைத்து உடல் சூட்டை பரிசோதிக்க,

நல்லா தான் இருக்கேன் விஜி உடம்புக்கு எதுவும் இல்ல ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும். காலையில இருந்து சொல்ல முயற்சி பண்றேன் ஆனா.. சொல்றதுக்கான வாய்ப்பு தான் அமையல” என்றாள் வைஷாலி.

கார்ல வரும் போது கேட்கணும்னு இருந்தேன் மறந்தே போயிட்டேன் சொல்லு வைசு என்ன விஷயம் காலையில இருந்த அவசரத்துல கேட்க முடியலை இப்போ சொல்லு” என்று ஊக்க,

அது எப்டி சொல்றதுன்னு தான் தெரியலை விஜி…” என்று தயங்கி வார்த்தைகளை இழுத்தவள் “நம்ம ரெண்டுபேருக்கு நடுவுல புதுசா ஒரு உறவு வர போகுதுன்னு நினைக்கிறேன்” என்று தடுமாற்றம் இல்லாமல் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிதானமாக சொல்லி முடித்து அவன் முகம் பார்க்க,

குழப்பத்தை தாங்கி இருந்தது அவன் பார்வை. 

என்ன சொல்ற? எனக்கு புரியலை நமக்கு இடையில புதுசா யாரு வருவா?” என்று சில நொடிகள் தீவிரமாக சிந்தனை செய்தவன் வாக்கியத்தின் அர்த்தம் புரிந்து “நிஜமாவா?” என்று ஆர்வம் பொங்க கேட்க, ஆமாம் என்று அவள் தலையாட்டியதில் சந்தோஷத்தின் மிகுதியில் உறைந்து போனான்.

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சிரிப்பில் ஒளிந்திருந்த நாணத்தை அடக்கியவள் “இன்னும் கன்ஃபார்ம் பண்ணலை ஒரு கேஸ்ஸிங் தான். எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க விஜி ஒருவேளை நாம..” என்றவளின் வாயை வேகமாக மூடினான் விஜயன்.

நெக்டிவ்வா சொல்லாத வைசு  எதையும் பாசிட்டிவாவே யோசிப்போமே வா டாக்டர்கிட்ட போலாம்” என்று அவசரம் காட்ட,

டாக்டர் வேணாம் என்கிட்ட செக் பண்ற கிட் இருக்கு விஜி  எதுனாலும் ஊருக்கு போய் பாத்துக்கலாம். நா நெகட்டிவ்வா பேசலை கொஞ்சம் பயமா இருக்குப்பா. மத்த விஷயம்னா போனா போகுதுன்னு விட்டுருவேன் ஆனா.. இந்த விஷயத்துல என்னால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாது ப்ளீஸ் விஜி. என்ஜாய் பண்ண வந்துருக்கோம் நம்மலாள மத்தவங்க சந்தோஷம் கெட்டு போயிட கூடாது” என்று கவலை தேய்ந்த குரலில் வைஷாலி கூற,

பைத்தியம் நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இருக்காது நல்லதே நினைப்போம். கிட் வச்சுருக்கேன்னு சொன்னியே போ போய் டெஸ்ட் பண்ணனிட்டு வா. எதுனாலும் ஏத்துக்க பழகிக்கணும் வைசு ஒருவேளை பாசிட்டிவ் வந்தா?” என்று கேள்வி குறியிட்டு நிறுத்தியவன், 

சொல்லாம இருந்திருந்தா இவ்ளோ ஆர்வம் வந்துருக்காதுடி எனக்காக ப்ளீஸ் வைசும்மா ரிசல்ட் என்னனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் ப்ளீஸ்..”என்று கண்களை சுருக்கி இறைஞ்சினான்.

அவன் ஆர்வம் கண்டு மிளிர்ந்தவள்”சரி போறேன்” என சிறுகலக்கத்துடன் அறைக்குள் சென்றுவிட, அவள் வரும் வரை ஏதோ பிரசவ அறையின் வெளியே காத்திருப்பவனை போல அத்தனை படபடப்பும் தவிப்புமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் விஜயன்.

சில நிமிடங்கள் கழித்து பட்டென கதவு திறக்கும் சத்தம் கேட்டு வேகமாக திரும்பியவனை உள்ளே வர சொல்லிவிட்டு தலைமறைந்து கொண்டாள் வைஷாலி. சில நிமிடங்கள் தான் என்றாலும் ஏதேதோ ஆசைகள் கனவுகளில் மின்னியவன் உள்ளே செல்ல, அவள் விழிகள் குளம் கட்டி கன்னத்தில் வழிய தயாராய் இருந்தது. 

கண்ணீரை கண்டு ஏமாற்றமடைந்தவன் சிறு கவலையை கூட அவள் முன்னே காட்டிவிட கூடாது என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டு “சரி விடு வைசு கொஞ்ச நாள் தானே ஆகிருக்கு” என ஆதுரமாய் அணைத்து ஆறுதல்படுத்த,

இல்ல விஜி எதையும் ஏத்துக்க பழகிக்கணும்னு சொன்னிங்களே உண்மை தான் நீங்க சொன்னது சரி தான் நான் தான்..” என்று முடிவை கூறாமல் விசும்பினாள்.

ப்ச் விடும்மா இதுக்கெதுக்கு அழுகுற”என்றவனை இடைமறித்து விலகி நின்று அவன் முகம் பார்த்தவள் “விஜி கண்ணா நீ அப்பா ஆக போற” என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் வைஷாலி.

அவள் கூற்றில் உணர்வுகளை கூட காட்ட தெரியாது மெய் மறந்து நின்றவன் அவள் துள்ளலை கண்டு”ஏய் என்ன பண்ற? இந்த மாதிரியெல்லாம் இனி பண்ண கூடாது” என்று செல்லமாய் கடிந்துவிட்டு,

“நிஜமாவா” என்று முகமெல்லாம் புன்னகை பூக்கள் மின்ன கேட்டவனுக்கு கண்கள் நொடியில் கலங்கி ததும்பிட, எதிரில் நின்றவளை இறுக அணைத்து கொண்டான். தனிமையின் வலிகள் எல்லாம் கரைந்து காணாமல் போகும் அளவிற்கு அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன் உயிர் உண்டான உதரத்தில் கரம் வைக்க உயிர் நடுங்கி சிலிர்த்தது அவனுக்கு.

Advertisement