Advertisement

“ஏய்யா”, எப்போதும் கேட்கும் கணீர் குரல் மறைந்து கரகரப்பான குரல்  வெளிப்பட்டது.

“சொல்லுங்க ப்பா” என்றவன் அவர் குரலில் தெரிந்த வேறுபாட்டை உணர்ந்தான்.

“எம்மேல ஒனக்கு கோவம் எதுமில்லையே ய்யா?’

“கோபமா? எதுக்கு ப்பா நீங்க என்ன தப்பு பண்ணிங்க? சின்னவங்க தப்பு பண்ணா பெரியவங்க கண்டிக்கணும் நீங்க அதை தானே பண்ணிங்க!.

அந்த மாதிரி ஒரு இடத்துல நாலு பேர் முன்னாடி நா பண்ண காரியத்துக்கு யாருக்குனாலும் கோபம் வரும். விடுங்கப்பா போனது போகட்டும் அதான் எல்லாம் சரியாகிருச்சே நீங்க என்கிட்ட பேசுனதே போதும் ப்பா” என்று பரமசிவத்தின் கைகள் இரண்டையும் பற்றி கொண்டு மென்மையாக கட்டை விரலால் வருட.

பரமசிவத்திற்கு கண்கள் கலங்கியது பொது இடம் என்பதால் உணர்ச்சிகளை அடக்கி கொண்டவர் “வைதேகி சொன்னா ஏதோ விருது வாங்க போறியாமே! அதுவும் சிஎம் கையால நெசமாவா ய்யா?” என்று வெகுளியாய் கேட்க.

சிறு சிரிப்பை உதிர்த்தவன் “ஆமாம் ப்பா நிஜம்தான்” என்றான் வாங்கி வந்த பொருட்களை இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி.

“நா எதுக்கு இருக்கேன் நா வச்சுகிடுதேன் ய்யா கீழ எங்கினயாவது விழுந்துடும்”என்று வாங்கி கொண்டவர் “ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்காத பைய விவரம் தெரியாம அன்னைக்கு அம்புட்டு பேசிட்டேன் மனசுல எதும் வச்சுக்காதய்யா”.

“என்னப்பா நீங்க. உங்கள தவிர வேற யார் என்ன திட்டவோ கண்டிக்கவோ முடியும் சொல்லுங்க? என்மேல உங்களுக்கு நிறையவே உரிமை இருக்கு நா எப்பவோ அதை மறந்துட்டேன். நீங்க பேச மாட்டிங்களான்னு நிறைய நாள் ஏங்கிருக்கேனே தவிர நீங்க திட்டுனதை நினைச்சு உங்கமேல கோபப்பட்டதில்லை, திட்டிட்டாரேன்னு வருத்தப்பட்டதும் இல்ல. உங்க மனச கஷ்டப்படுத்திட்டேனேன்ற கவலை தான் இப்ப வரைக்கும் இருந்துச்சு. அப்பான்ற ஸ்தானத்துல இருந்து உங்களை ஒரு படி மேலயே வச்சு பாக்குறேன்.

உங்ககிட்ட சகஜமா பேசணும் பழகணும். நானும் நீங்களும் கைய பிடிச்சுகிட்டு ரொம்ப தூரம் நடந்து போகணும். உங்களுக்கும் அம்மாவுக்கும் நிறைய செய்யணும், இன்னும் என்னவோ ஆசை இருக்கு ப்பா ஆனா அதுக்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் நமக்கு அமையல. ஏதோ ஒரு மனக்கசப்பு அது இப்போ தீர்ந்து போயிருச்சு இந்த நிமிஷம் என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத நாளா மாத்திட்டீங்க ப்பா” என்று ஆரத்தழுவி கொள்ள. பரமசிவத்தின் சுருங்கிய கன்னங்களில் சூடான உப்பு நீர் இறங்கியது.

தந்தை மகனின் உறவு மலரின் மகரந்தம் போல அவிழும் வரை அதன் வாசம் தெரியாது. தெரியும் போது பாசத்தின் அளவு புரியாது. நீண்ட நாட்களுக்கு பிறகு மகனிடம் உறவை புதுப்பித்து கொண்ட உற்சாகத்தில் இல்லம் வரை பல விஷயங்களை வளவளத்து கொண்டே வந்தவரிடம் அயராமல் பதில் சொல்லி சிரித்து கொண்டே இல்லம் வந்து சேர்ந்ததை சொல்லி முடித்தவன் வைதேகியை பார்த்தான். விரல்கள் செயலிலும் விழிகள் அவன் முகத்திலும் பதிந்திருந்தது.

“என்ன தேவிம்மா எதுவும் பேசாம அமைதியா இருக்க?”.

“என்ன பேசுறதுன்னு தெரியலை மாமா மனசு நிறைவா இருக்கு. காலமும் நேரமும் கூடி வந்தா எல்லாம் நல்லாதவே நடக்கும்னு சொல்லுவாங்க இங்க நடக்குற ஒவொன்னையும் பாக்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு”.

“உண்மை தான் தேவிம்மா இதே வேலையால தான் அப்பா என்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னாரு இப்போ இதே வேலை தான் அவர என்கிட்ட பேச வச்சுருக்கு. இன்னைக்கு காலண்டர்ல ஒரு வாக்கியம் பாத்தேன்.’அனுபவம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதை அனுபவிக்கவில்லை என்றால் வாழ்கையே இல்லைன்னு’. எத்தனை உண்மையான வரிகள் நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு அனுபவம். அதை சகிச்சு ஏத்துக்க பழகிக்கணும் அப்ப தான் லைஃப் நல்லா இருக்கும்னு புரிஞ்சிகிட்டேன்” என்றவன்

“சரி நம்ம ஜூனியர் என்ன பண்றாங்க” என்று வயிற்றில் முகம் புதைத்து கேட்க.

குறுகுறுப்பில் நெளிந்தவள் “ம் பசிக்கிது அப்பாவை சாப்பாடு கொண்டு வர சொல்லுங்க ம்மான்னு சொல்றாங்க” என சிரித்து கொண்டே சொன்னவள்

“பசிக்கிது மாமா கீழ போலாம்” என்று முகம் சுருக்கி சொல்ல.

அப்போது தான் உணர்ந்தான் அவளின் பசியை “மறந்தே.. போயிட்டேன் தேவிம்மா வா கீழ போலாம்” என்று விஷ்ணு வேகமாக எழுந்து கொள்ள.

நீண்ட நேரம் கால்களை நீட்டி அமர்ந்திருந்ததில் ரத்தம் ஓட்டம் தடை பட்டு கால்கள் மரத்து போனது வைதேகிக்கு. ஒரு வேகத்தில் சட்டென எழுந்து நின்றவள் கால்களை ஊன்றி நிற்க, கூச்சத்தில் பாதங்கள் சிலிர்த்து குறுகுறுப்பை ஏற்படுத்தின.

“மாமா நடக்க முடியலை ரொம்ப நேரம் உக்காந்து இருந்ததுல கால் மரத்து போச்சுன்னு நினைக்கிறேன் நடந்தா ஒரு மாதிரி கூச்சமா இருக்கு” என்று கீழே விழாமல் இருக்க விஷ்ணுவின் தோளை பற்றி கொண்டாள் வைதேகி.

“அடியேனின் சேவை தேவிக்கு என்றும் தேவை நான் உள்ளேன் தேவியே” என்று பழைய சினிமாக்களில் பேசுவது போல வசனம் பேசியவன் சட்டென பஞ்சு மூட்டையை தூக்குவது போல கைகளில் ஏந்தி கொண்டு “போலாமா?” என கேட்டான் விஷ்ணு.

சிரித்து கொண்டே”செல்லலாம் ஐயனே” என்று அவனை போலவே பதில் கூறியவள் வாகாக அவன் கழுத்தில் கரங்களை மாலையாய் கோர்த்து கொள்ள. அவள் நெற்றியில் முட்டி சிரித்தவனின் கால்கள் நேராக சமையல் அறை வாசலில் சென்று நின்றது.

வைதேகியை இறக்கி விட்டவன் சமையல் அறையை நோட்டம் விட பளிச்சென்று பல்லை காட்டின விளக்கி வைத்த பாத்திரங்கள்.

சிறு அதிர்வுடன் “தேவிம்மா சாப்பாடு காலி” என்று மனையாளின் முகத்தை காண.பசியின் வாட்டம் அப்பட்டமாய் தெரிந்தது அவள் வதனத்தில். என்ன செய்ய என்று சில நிமிடம் யோசித்தவன் “சரி வா வெளிய போலாம்”

“எங்க மாமா மணி என்னாகுதுன்னு பாத்திங்களா?” என்று சுவர் கடிகாரத்தில் பார்வையை பதித்தாள் பாவை.

நேரம் பன்னிரெண்டை கடந்து பயணம் செய்து கொண்டிருந்தது “வெளிய எங்கயும் போக வேணாம் பிரிட்ஜில மாவு இருக்கு மொறுகளா ரெண்டு தோசை மட்டும் ஊத்தி கொடுங்க போதும் சாம்பார் சூடு பண்ணி சாப்ட்டுக்கிறேன் எனக்கு அதுவே போதும்” என்று விளக்கி வைத்த பாத்திரங்களை சத்தம் வராமல் ஒதுக்கி வைத்துவிட்டு திண்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் வைதேகி.

“சாரி தேவிம்மா பேசிட்டு இருந்ததுல நீ சாப்டாததையே மறந்துட்டேன்”.

“ப்ச் ஒரு நாள் தானே விணு. எத்தனை நாள் நீங்க லேட் நைட்ல சாப்ட்டுருக்கிங்க விடுங்க. பேசிட்டு இருக்காம தோசை ஊத்தி கொடுங்க” என்று அவசரம் காட்ட.

வேகமாக செயலில் இறங்கினான் விஷ்ணு. சமையல் அறை ஜன்னலை திறந்து விட்டவன் அடுப்பில் கல்லை காய வைத்து மிதமாக மாவை எடுத்து கல்லில் ஊற்றி, கல்லுக்கும் கரண்டிக்கும் வலிக்காமல் பரபரவென தேய்த்து விட்டவன், மாவை சுற்றி நெய் விட்டு மூடி போட்டு மூடி வைத்து, ஐந்து நிமிடங்களில் ஒருபக்கம் மட்டும் வேக வைத்த தோசையை தட்டில் ஆவி பறக்க எடுத்து வைத்து வைதேகியின் முன்னால் நீட்டினான்.

“வாவ்” என்று வியந்தவள் கண்களை மூடி நெய்யின் வாசத்தை நாசியில் ஏற்றி நுரையீரலுக்கு அனுப்பியவாறே வாங்கி கொண்டு “இந்த டேஸ்ட் ஹோட்டல் சாப்பாடுல இருக்குமா? என்ன விட ரொம்ப நல்லா தோசை சுடுறீங்க விணு” என்று பாராட்டி கொண்டே சப்பு கொட்டி உள்ளே தள்ளினாள்.

உறக்கத்தில் புரண்டு படுத்த சாவித்ரி சமையல் அறையில் விளக்கேறிவதை பார்த்து வேகமாக எழுந்தவர் விஷ்ணு வைதேகியின் குரல் கேட்டு சிரித்து கொண்டே படுத்து கொண்டார்.

“மாமா போதும் ரெண்டு தான் கேட்டேன் மூணு உள்ள போயிருச்சு இதுக்கு மேல முடியாது ப்ளீஸ் மாமா” என்று கெஞ்சியவள் பாவமாக அவனை பார்க்க.

“இன்னும் ஒன்னு மட்டும் தேவிம்மா மாவை ஊத்திட்டேன் காலையில நல்லா இருக்காதுடா எனக்காக இந்த ஒன்னு. நானே ஊட்டிவிடுறேன்” என்று அவள் மறுப்பை பொருட்படுத்தாது தட்டில் வைத்துவிட்டு கைகழுவி வந்தவன் ஊட்டிவிட தொடங்க வயிறு நிறைந்ததே தெரியவில்லை அவன் காதலில். அத்தனை நிறைவாய் இருந்தது அவள் மனம்.

“ஏன் விணு ஒருவேளை உண்மை தெரியாம போயிருந்தா இந்த மாதிரி ஒரு வாழ்க்கை நமக்கு கிடைச்சிருக்குமா? இல்ல நீங்களும் நானும் சந்தோஷமா வாழ்ந்திருப்போமா?” என்று விழி தாழ்த்தி கேட்டாள் வைதேகி.

அவள் கேள்வியில் துணுக்குற்றவன் “தேவிம்மா” என்று அவள் முகத்தை நிமிர்த்த, நீர் துளி திரண்டு கன்னத்தில் உருண்டோட தயாராய் இருந்தது.

கண்ணீரை துடைத்துவிட்டு “ஒரு விஷயம் நமக்கு கிடைக்கனும்னு இருந்தா எப்பேர்ப்பட்ட தடையையும் தாண்டி நம்மகிட்ட வந்து சேர்ந்திரும். அப்டியில்லையா கிடைச்சத ஏத்துகிட்டு வாழ பழகிக்கணும் முக்கால்வாசி பேர் அப்டி தான் வாழுறாங்க ஒவ்வொரு நாளையும் அப்டி தான் கடந்து போறாங்க, வாழ்க்கையோட நியதியே அது தான்.

நா உனக்கு தான்னு எப்பவோ முடிவாகிருச்சு கிடைச்ச வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்கணுமே தவிர அப்டி நடந்திருந்தா என்னவாகிருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி வலிய அனுபவிக்க கூடாது” என்று மூக்கை பிடித்து ஆட்டியவன் “பைத்தியம்” என்று செல்லமாய் கொஞ்ச, சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வைதேகி.

இருவருக்குமிடையே உண்டான இணக்கம் மொட்டவிலும் மலரை போல பார்க்கவும் ரசிக்கவும் அத்தனை அழகாய் இருந்தது. அவனின் செயலில் அவளும் அவளின் செயலில் அவனும் இல்லறத்தின் நல்லறத்தை மெருகேற்ற வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தெவிட்டாத காதலில் திளைத்து ரசித்து சிரித்து பரவசம் அடைந்து நேசத்தின் மேன்மையை இனிமையாய் அனுபவித்தனர்.

தொடரும்…

உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்ல

உன்னையின்றி வாழ்வதற்கு மண்ணில் ஒரு வாழ்க்கை இல்ல

உசுராகத்தானே நான் உறவாடுவேனே

ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே…

Advertisement