Advertisement

“ஏய் கொஞ்சமா வையேன் வைத்தி நைட்டு நேரம் தானே இப்போ எதுக்கு இவ்ளோ வச்சுவிடுற?” என்று சிணுங்கியவளின் பேச்சை கேளாது பூ சரத்தை மூன்றாய் மடித்து வைத்துவிட்டவள்,

“வச்சு விடுறது எங்க வேலை அவ்ளோ தான்!”.

“அப்ப எடுக்கிறது யாரோட வேலை” என்று நமட்டு சிரிப்பை உதிர்த்து துடுக்காக கேட்ட சஞ்சளாவை வாயை பிளந்து பார்த்தாள் வைதேகி.

“வாய் என்னமா கூடி போச்சு உனக்கு வாயிலேயே ரெண்டு பேட்டேன்னா” என்று கையை ஓங்கியவள் “அந்த வேலையெல்லாம் எனக்கு தெரியாது வேணும்னா உன்னோட ஆள் கிட்ட கேளு யாரு எடுத்து விடுவாங்கன்னு அவரே சொல்லுவாறு” என்று மிடுக்குடன் சொல்ல.

“ஓ.. அனுபவமா” என்றவளை முறைத்து பார்க்க முயன்று தோற்று போய் வைதேகி சிரித்துவிட, மற்ற மூவருக்கும் சிரிப்பு பீறிட்டது.

சற்று நேரத்தில் இரவு உணவும் தயராகிட விஷ்ணுவை தவிர்த்து மற்ற அனைவரும் அமர்ந்து உணவை முடித்துவிட்டு உறங்க சென்றுவிட்டனர்.பரபரப்பான வேலைக்கிடையில் அவனை காணவில்லை என்ற எண்ணமே தோன்றவில்லை அவளுக்கு.

“ஏய் நீங்களே போய்ருவிங்களா இல்ல ரூம் வரைக்கும்  துணைக்கு வரவா?” என்று வைதேகி துடுக்காக கேட்க.

“வந்தா நல்லா தான் இருக்கும்” என்று ராகம் இழுத்த வைஷாலியின் முதுகில் லேசாய் தட்டியவள் “ஆசை தான் சும்மா பேச்சுக்கு கேட்டேன் விட்டா கூடவே வான்னு வாசல் வரைக்கும் வம்படியா கூட்டிட்டு போயிருவ போல. உங்களுக்கு தான் நல்லா நடக்க தெரியுமே நீங்களே போய்கோங்க” என்று தமயந்தி கொடுத்த டம்ளரை  இருவரின் கையிலும் திணித்தாள் வைதேகி.

“போய்ட்டு வறோம்” என்ற வைஷாலி வைதேகியின் காதில் ரகசியமாய் எதையோ கூறிவிட்டு சிரித்து கொண்டே நகர்ந்து செல்ல “அடிவாங்கிட்டு போகாத நல்ல பிள்ளைன்னு நினைச்சா ரொம்ப மோசம்” என்றவளுக்கு கண்டிப்பையும் மீறிய வெட்கம் எட்டி பார்த்தது.

“ஏத்தா ஓம் புருஷன் எங்க ஆளையே காணோம் ” என்ற அன்னத்தின் கேள்வியில் தான் விஷ்ணுவின் நினைவே வந்தது வைதேகிக்கு.

“தெரியலை அத்தை என்கிட்ட எதுவும் சொல்லலையே? சாயந்திரம் பாத்தது அப்றம் பாக்கவே இல்ல நானே உங்ககிட்ட கேட்கலாம்னு இருந்தேன்” என்றவள் “இருங்க நா அவருக்கு போன் பண்றேன்” என்று அவசரமாக அலைபேசியை எடுத்து அழைப்பு விடுக்க.

“சொல்லு தேவிம்மா” என்றான் அழைப்பு ஏற்கப்பட்டதும்.

“எங்க இருக்கீங்க மாமா உங்கள காணோம்னு தேடிட்டு இருக்கோம்”

“மாடியில இருக்கேன் மேல வா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்து விட.

அவனின் செயலில் புரியாது அலைபேசியை வெறித்தாள் வைதேகி “என்னத்தா எங்க இருக்கானாம்?”.

“மாடியில தான் இருக்காரு அத்தை நீங்க சாப்பாடு வச்சு கொடுங்க நாங்க ரெண்டு பேரும் மேல வச்சு சாப்ட்டுக்கிறோம்” என்றதும் ஒரே தட்டில் இருவருக்குமான உணவை வைத்து கொடுத்தார் அன்னம்.

“வாடை காத்து வயித்து பிள்ளைக்காரிக்கு ஒத்துக்காது வெரசா சாப்ட்டு கீழ வாங்க” என கூறிவிட்டு அவர் நகன்றுவிட.

மாடியேறி சென்றாள் வைதேகி. ஒழுகும் நிலவை சுற்றி ஒளிவட்டம் தெரிய விழிகளை விலக்காமல் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.

முதுகு காட்டி நின்றவனை கண்டு புருவம் சுருக்கியவள் அவன் அருகில் சென்று “என்ன மாமா இங்க வந்து தனியா நின்னுட்டு இருக்கீங்க எப்போ மேல வந்திங்க உங்கள காணோமேன்னு தான் ஃபோன் பண்ணேன். சரி வாங்க சாப்பிடலாம்” என்றவள் பலத்த சிந்தனையில் இருந்தவனின் தோளில் கைவைத்து நினைவை கலைத்தாள்.

என்னவென்று மனையாளை நோக்கியவன் முகத்தில் ஒரு வித திருப்தி. “தேவிம்மா” என்று உணர்ச்சி ததும்பும் குரலில் அழைத்தவனை விளங்காமல் பார்த்தாள் வைதேகி.

பரமசிவம் பேசிய போது எதையும் காட்டிக்கொள்ளதாவனுக்கு மனையாளிடம் நடந்தவற்றை கொட்டி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆர்ப்பரிக்க.

“உன்னோட மாடியில படுத்துக்கவா தேவிம்மா” என்று  வாஞ்சையாய் தலைசாய்த்து கேட்க.

அவன் கேட்ட விதமே அத்தனை அழகாய் தெரிந்தது அவளுக்கு. குழந்தை தாயிடம் கெஞ்சுவது போல. அவன் பாவனையை ரசித்தவள் “ம்.. படுக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி சாப்டனும் நம்ம ரெண்டுபேரை தவிர எல்லாரும் சாப்டுட்டு தூங்க போயிட்டாங்க. அதனால சாப்டுட்டு மடியில படுத்துக்கோங்க விணு” என்றாள் உணவு கொண்டு வந்த தட்டை முன்னால் வைத்து.

“சரி” என்றதும் ஒவ்வொரு கவளமாக ஊட்டிவிட ரசித்து ருசித்து உணவை விழுங்கினான் விஷ்ணு. இதுவே மற்ற நாள் நேரமாக இருந்தால் பிடித்த உணவாக இருந்தாலும் அவசரகதியில் உண்டு எழுந்து விடுவான்.  வயிறு நிறைந்தால் போதும் என்று வாயில் அள்ளி போட்டு கொண்டு வேலைக்கு கிளம்பி செல்பவனை பார்க்க அத்தனை எரிச்சல் வரும் வைதேகிக்கு. ஆனால் வெளியே காட்டி கொள்ள மாட்டாள். அவற்றிற்கெல்லாம் சேர்த்து இன்று தட்டில் இருக்கும் மொத்த உணவும் காலியாகும் வரை அமைதியாக வாஞ்சையுடன் ஊட்டிவிட அவளின் பங்கையும் சேர்த்து உண்டு முடித்தவன் “போதும் தேவிம்மா” என்று கைகாட்டி தடுத்தான்.

எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் “நீங்க வேணும்னு சொன்னாலும் இல்ல விணு சாப்பாடு காலி” என்று தட்டை காட்ட.

“அச்சச்சோ அப்ப உனக்கு?” என்றான் அதிர்ந்த குரலில்.

“நா அப்றமா சாப்ட்டுக்கிறேன்” என்று கை கழுவியவள் அவன் படுத்து கொள்ள வாகாக காலை நீட்டி கொண்டு “என்ன ஒரே யோசனையா இருக்கு? அதுவும் முகத்துல என்னைக்கும் இல்லாத ஒரு ஜொலிப்பு வேற தெரியிது”, சந்தேக பார்வையை அவன் முகத்தில் படர விட்டவாறே வைதேகி கேட்க.

“அப்டியா!” என்று முகம் சுருக்கியவன் “இருக்கும் இருக்கும்” என்று அசட்டடையாய் அவளுக்கு சொல்வது போல தனக்கும் சொல்லி கொண்டான்.

ஜொலிப்பு தான் இன்று வரை அவன் எதிர்பார்த்த மனதின் ஏக்கம் தீர்ந்திட்டது என்ற ஜொலிப்பு. பேசமாட்டாரா என ஏங்கிய நாட்களுக்கெல்லாம் மொத்தமாய் முற்று புள்ளி வைத்தார் பரமசிவம்.அதுவே அவனுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்த அதை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் தனிமையில் நினைத்து நினைத்து பூரித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தான்.

விளங்காத பார்வையில் விழித்தவள் “என்ன ஒரே புதிரா இருக்கு என்ன நடந்துச்சு அத சொல்லுங்க மாமா வெளிய போயிட்டு வந்ததும் கேட்டேன் ஒன்னுமில்லன்னு சொன்னிங்க இப்போ தனியா வந்து நின்னுட்டு இருக்கீங்க” என்று ஆர்வமாய் கேட்க.

மடியில் தலை வைத்து கொண்டவன் பரந்த ஆகாயத்தை பார்த்தவாறு “அப்பா என்கிட்ட பேசுனாறு தேவிம்மா” என்றான் களிப்பு பொங்க.

கேசத்தை அளந்து கொண்டிருந்தவளின் கைகள் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்திட, ஆச்சர்யமான பார்வையில் “யாரு சிவம் மாமாவா?”

“ஆமா அப்பா தான். அவரு பேசும் போது என்ன பேசுறதுன்னு கூட எனக்கு தெரியல பதில் கூட சொல்லாம அவர் முகத்தை தான் பாத்துட்டே இருந்தேன் இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பா வருது. கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு மேலயே இருக்கும் அவரு என்கிட்ட பேசி எப்பவும் கோபத்தையே காட்டுனவரு இன்னைக்கு சிரிச்சு பேசினதும் கையும் ஓடலை காலும் ஓடலை அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தேவிம்மா”,உள்ளுணர்வுகள் தட்டி எழுப்பிய உவகையில் கூறினான் விஷ்ணு.

இருவருக்குமிடையே நடந்ததை கூற ஆரம்பிக்க அவனை பேசவிட்டு கேசத்தை அளந்து கொண்டே அமைதியாக பார்த்து கேட்டு கொண்டிருந்தாள் வைதேகி.

செல்லும் வழியெங்கும் ஒரே சிந்தனையும் பயமும் தான். பரமசிவம் உடன் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு வாகனத்தை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சாவித்ரி வாங்க சொன்ன பொருட்களை வாங்கி கொண்டு சாலையை கடக்க முயல சட்டென கையைப்பற்றி கொண்டார் பரமசிவம். அந்த நொடி! ‘அப்பாவா?’ என்று நம்ப முடியாத பார்வையில் பற்றிய கரத்தினையும் பரமசிவத்தையும் மாறி மாறி வியந்து பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.

“இருய்யா வண்டிக வாரதும் போறதுமா இருக்கு நீ பாட்டுக்கு போற, ரெண்டுபக்கமும் பாத்து சூதனமா போகணும்” என்று பிடித்து நிறுத்தி வைத்து கொள்ள.

சிலையாய் நின்றான் விஷ்ணு. நிமிடத்தில் கலங்கி ததும்பிய விழிகளை சட்டென திரும்பி மறைத்து கொண்டவன் அவர் அறியாமல் கண்களை துடைத்து கொள்ள. பற்றியிருந்த கை முன்னைவிட அழுத்தமாய் பிடித்திருந்தது.

காவல்துறையில் சேர விருப்பம் என்றதும் பரமசிவத்திற்கு அத்தனை கோபம். ‘போலீஸ் வேலையே வேண்டாம்’ என்றவரின் பேச்சை மீறி தேர்வு எழுதி பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துவிட்டவனிடம் இறுதியாக பேசியது பணி நியமன ஆணையை அவரிடம் காட்டிய போது தான் “இம்புட்டு தூரம் சொல்லியும் கேக்காம வேலையில சேந்துருக்க. மெத்த படிச்சுட்டோம்ன்ற நெனப்பு எம்பேச்சுக்கு மதிப்பில்லாத பயகிட்ட எனக்கென்ன பேச்சு வேண்டியது கெடக்கு. இனி எதுனாலும் நீயே பாத்துக்கோ எதுக்கும் என்ன எதிர்பாக்காத” என்று இறுகிய முகத்துடன் பேசிவிட்டு சென்றவர் தான். இதுவரை அவராய் முன் வந்து மனமுவந்து அவனிடம் பேசியது இல்லை.

அதிலும், வைதேகியின் விருப்பம் அறிந்து குடும்பத்தினர் எடுத்த முடிவில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டவர். திருமணத்தில் நடந்த குளறுபடியில் முன்னைவிட கோபம் அதிகமாக ‘வீட்டை விட்டு போ’ என்றதும் மறுத்து பேசி வாதம் செய்யாமல் தந்தையின் பேச்சிற்கு மதிப்பளித்து வீட்டை விட்டு வெளியேறினான் விஷ்ணு.பலா பழத்தின் முட்களை போன்று கோபத்தை வெளிப்படையாய் காட்ட தெரிந்தவர் சுளையின் தித்திப்பான பாசத்தை உள்ளுக்குள்ளேயே ஒளித்து வைத்து கொண்டார்.

ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளியிட்டவன் ‘எமோஷ்னல் ஆகாத விஷ்ணு நார்மலா இரு’ என்று தனக்கு தானே மனதில் தைரியம் சொல்லி கொண்டு “ப்பா நாம தான் ரெண்டு பக்கமும் பாத்து ரோட்ட கடந்து போகணும் நின்னுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது என்னோட கைய பிடிச்சுக்கோங்க நா கூட்டிட்டு போறேன்” என்று பரமசிவத்தின் கையை பற்றி கொண்டான்.

காய்ப்பு காய்ச்சி சொரசொரப்பாக இருந்த உள்ளங்கையின் தடம் உணர்வில் பதிந்தது. ஏறும் கலப்பையும், மண்ணும் மண்வெட்டியும் பிடித்து விவசாயத்தை தூக்கி நிறுத்தவில்லை என்றாலும் அதில் உழன்று திரிந்து இன்று வரை விவசாயம் செய்து உழைப்பவரை ஆச்சர்யமும் அதிசயமுமாய் பார்த்தவனுக்கு கண்களில் நீர் ததும்பியது.

அந்நொடி தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் மாறிட, கவனமாக சாலையை கடந்து அழைத்து வந்த பின்னும் பற்றிய கரத்தினை விடவில்லை பரமசிவம்.மகன் விருது வாங்க போகும் செய்தி செவி வழி அறிந்ததும் அத்தனை மகிழ்ச்சி

யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.

மகனிடம் பேச வேண்டும் பேச வேண்டும் என நேரம் பார்த்து கொண்டிருந்தவர் மாலை விஷ்ணுவும் ஜெகநாதனும் வெளியே கிளம்பி செல்வதை பார்த்து “நீங்க இருங்க மாப்ள நா போயிட்டு வறேன் உள்ளக்கயே அடைஞ்சு கெடக்க ஒருமாரி இருக்கு” என்று அவனிடம் பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள.அவரின் எண்ணம் தெரியாமல் ஜெகநாதன் சரியென்றதும் பரமசிவத்தை சந்தைக்கு அழைத்து வந்திருந்தான் விஷ்ணு.

Advertisement