Advertisement

அன்றைய நாளின் களைப்பு கண்களை சுழற்ற சற்று தலையை சாய்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியதும் விஜயன் துவாரகா இருவரும் படுக்கையில் விழ, படுத்த மாத்திரத்தில் உறங்கி போயினர்.

மாலை ஐந்து மணி விஷ்ணு பரமசிவத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றிருக்க. கடற்கரையில் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என இந்திராணி பெருமாள் சாமி அன்னம் மூவரையும் அழைத்து  சென்றிருந்தார் ஜெகநாதன். சாவித்ரி விசாலாட்சி இருவரும் சமையல் அறையில் மும்முரமாக இருக்க, யாருடனோ அலைபேசியில் தீவிரமாக உரையாடி கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

திருமணத்திற்கு வராமல் சாக்குபோக்கு கூறியவனை அறையில்  வறுத்தெடுத்து கொண்டிருந்தான் விஜயன் “சாரிடா விஜி அதான் சொல்லறேனே முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமா வெளிய போக வேண்டியதா போச்சுன்னு. ஆபீஸ்ல லீவ் கேட்டேன் அவங்க தரலை நா என்னடா பண்ண”, கிட்டத்தட்ட அழுதுவிடுபவன் போல பேசினான் சபரி.

“போடா என்னவிட உனக்கு வேலை தான் பெருசா போச்சு. சமாதானம் பண்றதுக்காக ஆபிஸ்ல லீவ் தரலை, நமத்து போன ப்ராஜெக்ட்டுக்காக நாலு நாள் வெளிய போயிட்டேன்னு சப்பை ரீசன் சொல்லிட்டு இருக்க. நீ வருவன்னு எவ்ளோ எதிர்பார்போட இருந்தேன் தெரியுமா?” என்று விஜயன் முகத்தை திருப்பி கொண்டான்.

என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியாமல் தலையை சொறிந்த சபரி, அருகில் அமர்ந்து இருவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தையை கேட்டு கொண்டிருந்த துவாரகாவை பாவமாய் பார்க்க.

சன்ன சிரிப்பை உதிர்த்தவன் “டேய் அவரு தான் ரீசன் சொல்றாறே நீ ஏண்டா விதண்டாவாதமா பேசுற. சென்னை வந்து இறங்குனதும் நேரா இங்க தான் வர்றாரு பாவம்டா உன்னோட கோபத்தை குறைச்சுக்கோ இல்லன்னா விஷயத்தை மேலிடம் வரைக்கும் கொண்டு போறதா இருக்கும்” என்று சிரித்து கொண்டே மிரட்டினான் துவாரகேஷ்.

சபரியின் முகத்தை பார்த்த விஜயனுக்கு சிரிப்பு பீறிட “ப்ச் கொஞ்ச நேரம் கோபமா இருக்குற மாதிரி நடிக்க விடுறியாடா பக்கி” என்று துவாரகாவிடம் கடிந்தவன்,

சபரியின் தோளில் கைபோட்டு “எனக்கு தெரியாதா நீ உண்மைய சொல்றியா இல்லையான்னு. என்னவிட என்மேல அக்கறை காட்டுனவங்கள்ல நீயும் ஒருத்தன் நீ வரலைன்னா அதுல காரணம் இருக்கும்னு புரிஞ்சிக்க முடியாதவன் இல்ல சபரி” என்று நெகிழ்ந்து பேச.

“தங்க்ஸ்டா என்ன புரிஞ்சுகிட்டதுக்கு” என்று அணைத்து கொண்டான் சபரி.

தாளிப்பு வாசனை சமையல் அறையை மட்டுமல்லாது இல்லத்தையே நிரப்பியத. தன் கைப்பக்குவதை காட்ட தொடங்கியவர் “வைதேகி அவங்க ரெண்டுபேரையும் எழுப்பி குளிக்க சொல்லு ம்மா தூக்கம்னா போதும் ரெண்டு பேருக்கும் கும்பகர்ணனையும் மிஞ்சிருவாங்க” என்று இருவரையும் தாளித்து கொண்டே பணியார கல்லில் மாவை ஊற்ற, சுர்ரென்ற சத்தத்தில் அடங்கியது அரிசியும் உளுந்தும் கலந்த மாவு.

“சரி சித்தி” என்று சிரித்து கொண்டே அறைக்கு சென்று இருவரையும் எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு வெளியே வர, கடற்கரை சென்ற நால்வரும் உள்ளே நுழைந்தனர்.

“என்னம்மா அதுக்குள்ள வந்துட்டீங்க அவ்ளோ தானா? இதுக்கா இவ்ளோ அவசரம் காட்டுனீங்க”, திகைப்பை காட்டினாள் வைதேகி.

“அத ஏ கேக்க ஒங்கம்மாவை கூட்டிட்டு போனதுக்கு பாடப்படுத்தி எடுத்துட்டா அங்கன இருந்தவக அம்புட்டு பேரும் எங்கள தான் பாத்தாக. தண்ணில காலை நனைக்க சொன்னா கத்துறா அவபாட்டுக்கு. காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கூச்சல் போடுறா. கூட நாங்க தான் இருக்கோமே அப்டியேவா விட்டுற போறோம் கடல் வரை போயி சமுத்திரத்துல கால் நனைக்காமல வீட்டுக்கு வருவாக” என்று இந்திரணியை பார்த்து தலையில் அடித்து கொள்ளாத குறையாக கூறிய அன்னம்.

“நேரமாகிருச்சு த்தா அதான் கெளம்பி வந்துட்டோம் காபி தண்ணி இருந்தா கொடுத்தா நாக்கு நமநமங்குது” என்று சொல்ல.

“இதோ கொண்டு வறேன் அத்தை” என்று வைதேகி நகர்ந்து சென்றதும் வந்தவர்கள் வாசலில் சேரை போட்டு அமர்ந்து கொண்டனர்.

சுடச்சுட கார பணியாரமும் மணக்க மணக்க பில்டர் காஃபியும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்ற வைதேகி “வாங்கண்ணா” என்ற இந்திராணியின் விளிப்பில் வேகமாக திரும்பி வாசல் புறம் பார்க்க பரமசிவமும் விஷ்ணுவும் உள்ளே நுழைந்தனர்.

இருவர் முகத்திலும் இதமான இணக்கத்தை காட்டும் புன்னகை படர்ந்திருந்தது. பரமசிவத்திடம் இருந்து பொருட்களை வாங்கி வைத்தவனின் முகத்தை கண்கள் இடுங்க பார்த்தவள் இருவருக்கும் சிற்றுண்டியும் காஃபியும் கொடுத்துவிட்டு சமையல் அறை வாசலில் நின்றவாறு ” மாமா பாரு இங்க பாரு மாமா ” என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டே விஷ்ணுவின் பார்வைக்காக தவிப்போடு நின்று கொண்டிருந்தாள் வைதேகி.

யாரோ பார்ப்பது போல தோன்றவும் சட்டென நிமிர்ந்து பார்த்தவன் வாசலில் நின்ற உருவத்தை பார்த்து புருவம் உயர்த்தி என்ன என கேட்டான். அவன் முகத்தில் தெரிந்த புன்னகையை சுட்டி காட்டியவள் அதற்கான காரணம் என்னவென கேட்க.

அருகில் அமர்ந்திருந்த அவன் தந்தையை பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என்று புன்னகை புரிந்தவாறு மறுப்பாய் தலையாட்ட. புரிந்து கொண்ட விதமாய் அவளும் தலையாட்டி மென்னகையுடன் நகர்ந்து சென்றுவிட்டாள் வைதேகி.

இந்திராணி அன்னம் இருவரும் சேர்ந்து சாவித்ரிக்கு உதவியாக இரவு உணவை தயாரிக்க, தமயந்தி வைதேகி இருவரும் சஞ்சளா வைஷாலியிடம் வளவளத்து கொண்டிருந்தனர்.

“புவி மாமா எதுக்கு சீக்கிரமே கிளம்பி போயிட்டாரு ரெண்டு நாள் இருந்துட்டு போயிருக்கலாம் தானே? அவரு மட்டும் அங்க தனியா போய் என்ன பண்ண போறாராம்”, சுணங்கிய முகத்துடன் கேட்டாள் வைதேகி.

“சொன்னா கேட்டா தானே லீவ் போட முடியாது அது இதுண்ட்டு பெரிய இவரு கணக்கா பேசுறாரு உங்க மாமா. ஒரு நாள் லீவ் போட்டாலும் பேங்கை யாரோ தூக்கிட்டு போயிடுவாங்கன்னு நெனப்பு”,

வைஷாலியின் தலையை வாரி கொண்டே பேசியவள் அவன் மீதிருந்த கோபத்தில் சீப்பை சற்று பலமாக அழுத்த.

“ஷ்.. ஆ.. வலிக்கிது க்கா அவரு மேல உள்ள கோபத்தை என்மேல காட்டுறீங்க” என்று முகம் சுருக்கி வலியில் தலையை பிடித்து கொண்டாள் வைஷாலி.

“மன்னிச்சிரும்மா அவர பத்தி பேசுனாலே இப்டி தான்” என்று நொடித்து கொண்டே தலைவாரி முடித்தவள் “ப்ச் பூ எடுத்து வச்சேன் கொண்டு வர மறந்துட்டேன். நீ போய் எடுத்துட்டு வா” என்று சஞ்சளாவிடம் பணித்தாள் தமயந்தி.

“நா போறேன் நீ இரு சஞ்சு” என்று அறையில் இருந்து வெளிப்பட்டவளின் கால்கள் பசையிட்டதை போல சட்டென நின்றுவிட்டன விஜயனின் செயலில்.

அலைபேசியை சார்ஜரில் போட்டுவிட்டு சென்றவன் மொபைலை எடுக்க வெளியே வர தட்டு தடுமாறி எழ முயற்சி செய்து கொண்டிருந்தார் சாரதா.

வேகமாக அவரின் அருகில் வந்தவன் “என்ன அத்தை என்ன வேணும்?”.

“ஒன்னுமில்ல மாப்பிள்ளை நா பாத்துக்கிறேன் நீங்க போங்க” என்றவர் எழ முற்பட்டு பலம் இழந்து, சோர்ந்து மூச்சு வாங்கிய படி அமர்ந்துவிட.

“சொல்லுங்க அத்தை. மாமா வெளிய ஃபோன் பேசிட்டு இருக்காரு, என்ன வேணும்னு சொல்லுங்க நா கொண்டு வறேன்” என்றவனின் மீது தயக்கமான பார்வையை பதியவைத்தார் சாரதா.

“உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம் வைசுவை கூப்பிடுங்க நா பாத்துக்கிறேன்”என்றவரின் முகம் சங்கடத்தை அப்பிக்கொண்டது.

ஒரு நொடி அவர் முகத்தை ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்தவன் அவரின் தயக்கம் உணர்ந்து “இதுல என்ன அத்தை இருக்கு என்னோட கைய பிடிங்க நா கூட்டிட்டு போறேன். என்னோட அம்மாவ இருந்தா இதெல்லாம் பண்ண மாட்டேனா? இல்ல உங்களுக்கு பையன் இருந்தா இதெல்லாம் பண்ண மாட்டானா?” என்று சாரதாவின் கைபிடித்து விஜயன் தன் தோளில் போட்டு கொள்ள.

சன்ன சிரிப்பும் தயக்கமும் இழையோட கையை ஊன்றி அவன் தோளை பற்றி எழுந்தவரை, குளியலறை வரை அழைத்து சென்றவன் வாசலில் காத்திருந்து அழைத்து வந்து அமர வைத்தான். கண்கள் பெருகியது சாரதாவிற்கு

 “நா உங்கள அம்மாவ தான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியலை? ஆத்திர அவசரத்துக்கு உதவி தேவைப்படும் போது தயக்கம் இருக்க கூடாது அதுவும் இந்த மாதிரியான நிலைமையில.” என்றவன்.

“அப்றம் இன்னொரு முறை தம்பின்னு கூப்பிட கூடாது உரிமையா மாப்பிள்ளைன்னு கூப்பிடனும்” என்று உரிமையுடன் மிரட்டி,

“விலைமதிக்க முடியாத தங்கத்தை கொடுத்த ரத்தினம் நீங்க. இந்த ரத்தினம் கஷ்டப்படுறதை பாத்துட்டு பாக்காத மாதிரி போவேனா” என்று இயல்பாய் பேசி அவரின் விழிநீரை துடைத்துவிட்டு திரும்ப.இதழில் சிரிப்பையும் விழிகளில் நீரையும் அடக்கி கொண்டு நின்றிருந்தாள் வைஷாலி.

கிருஷ்ணனிடம் பேசும் அளவிற்கு சாரதாவிடம் அதிகம் பேசியது கிடையாது. அவரிடம் பேசும் போது அதில் மதிப்பும் பணிவும் கலந்திருக்கும், அவர் என்ன பேசினாலும் புன்னகையுடன் ஏற்று கடந்து செல்பவன் இன்று உரிமையுடன் பேசுவது சற்று வியப்பாக தான் இருந்தது சாராதவிற்கு.

‘மகளுக்கு வரும் கணவன் எப்படிபட்டவனோ,

எங்கிருப்பானோ, புரிந்து நடந்து கொள்வானா?’ என்ற பலவித எண்ணங்கள் கலக்கமாக சாரதாவின் மனதில் நிறைந்திருந்த தருணம், விஜயன் தான் மாப்பிள்ளை என்று அறிந்ததும் ஹப்பாடா என்ற நிம்மதி தான் அவருக்கு.

பழகியவன் தெரிந்தவன் என்பதால் மட்டுமல்ல. அவனின் குணம் உறவுகளின் மீது அவனுக்குள்ள பற்று அனைத்தையும் விட மகள் மீது அவன் வைத்துள்ள நேசம் அனைத்தும் அவனை அக்மார்க் மாப்பிள்ளையாகவே மறுப்பின்றி ஏற்று கொள்ள வைத்தது.

முன்பே வைஷாலியின் குடும்பத்தை பற்றி நன்கு அறிந்து பழகியவன் தான். சில காரணங்களால் அவளிடம் மட்டும் அதிக ஒட்டுதல் வைத்து கொள்ளாமல் இருந்தவன் இன்று அவளால் அதீத உரிமையுடன் உறவுகளை ஏற்று கொண்டான்.

முதன் முதலில் உறவுகள் என்று உரிமையாய் பழகியவர்களின் மீது அத்தனை பற்று உண்டானது, அதுவே இன்று உறவுக்கான விதையை வித்திட்டு குடும்பம் என்ற விருட்சத்தின் அடியில் இளைப்பாற இடமளித்ததில் அவன் மனதில் ஓர் நிறைவு.

வாசலில் நின்றிருந்தவளின் புறம் கவனம் செலுத்தியவன் “என்ன” என புருவம் உயர்த்தி இதழில் மென்னகை நிரப்பி கேட்க.

ஒன்றுமில்லை என தலையாட்டியவளுக்கு கண்சிமிட்டி புன்னகையை பரிசளித்தவன் அதே நகைப்புடன் நகர்ந்து சென்றுவிட்டான் விஜயன்.

“ஏய் இன்னுமா பூவை எடுத்துட்டு வர” என்ற வைதேகியின் அதட்டல் குரல் கேட்டு கணவனின் செயலில் பூவாய் மலர்ந்து நின்றவள் வேகமாக சென்று பூவை எடுத்து வந்து கொடுக்க.

“இதை எடுக்க இவ்ளோ நேரமா?” என கேட்டுக்கொண்டே அன்னம் இந்திராணி இருவரும் நெருக்கமாய் கட்டி வைத்திருந்த மல்லி சரத்தை இரண்டாய் கத்தரித்து இருவருக்கும் வைத்துவிட்டாள் வைதேகி.

Advertisement