Advertisement

அடுத்ததாக விஷ்ணுவை முறைத்து பார்த்தவர் “வளர்ந்துருக்கியே தவிர கொஞ்சம் கூட மூளையே இல்லடா அவ நேரத்துக்கு தூங்கனும்ணு உனக்கு தெரியாதா வேலையில மட்டும் பொறுப்பா இருந்தா போதாது அவ விஷயத்துலயும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ” என்று கண்டிப்புடன் கூறியவர்.

“தூங்க போங்கடா டைம் என்ன ஆகுது சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க காலையில எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? இப்போ தூங்குனா தானே காலையில முகம் பாக்க நல்லா பிரெஷ்ஷா இருக்கும். இல்லன்னா மந்திரம் சொல்லும் போதே ரெண்டுபேரும் தூங்கி வடிய போறீங்க” என்று வசைபாடலுடன் கேலியாய் பேச.

சன்ன சிரிப்புடன் சாவித்ரியின் கன்னம் பிடித்து ஆட்டியவன் “சாரி அத்தை பேச்சு மும்முரத்துல டைம் கவனிக்கல அதுக்கெதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறிங்க நீங்க தூங்குங்க நாங்க கிளம்புறோம்” என்ற விஷ்ணு நண்பர்கள் இருவரையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்று கதவை மூடி கொள்ள.

சமையல் அறையில் எறிந்த விளக்கை அணைத்துவிட்டு கூடத்திலேயே அன்னம் இந்திராணி இருவருக்கும் அருகில் படுத்து கொண்டார் சாவித்ரி.

இதமான நிசப்தத்தை தத்தெடுத்து கொண்ட அதே இரவு. இனிமையான விடியலையும் வரவேற்க தயராய் இருந்தது.

கண்களை மூடிய நொடி உறங்கியதும் தெரியவில்லை நேரம் கரைந்ததும் தெரியவில்லை அத்தனை வேகமாய் கரைந்து கடந்து விட. ஆளுக்கொரு அலைபேசியில் வைத்திருந்த இரண்டு மணி அலாரம் ஒலி கேட்டு வந்திருந்த உறவுகள் அனைவரும் எழுந்து, அவசரம் அவசரமாக கிளம்பி மண்டபம் வந்து சேர்ந்திருந்தனர்.

ஒரே மேடையில் இரு திருமணம் என்பதால் இருபக்க உறவுகளின் வருகை சற்று அதிகமாகவே இருந்தது. விஜயன் இடது புறமும் அவன் அருகில் ஐயர் ஒருவரும் துவாரகா வலது புறமும் அவன் அருகில் மற்றோரு ஐயரும் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்து கொண்டிருக்க, அவர் வாய்மொழிக்கு ஏற்றவாறு மந்திரங்களை ஓதி கொண்டிருந்தனர் மணமகன்கள் இருவரும்.

மணமகள் அறையில் அலங்காரம் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டிருந்தது “ஏய் வைத்தி இந்த பூவை கொஞ்சம் எடுத்துறேன் தலை ரொம்ப பாரமா இருக்கு ப்பா” என்றாள் தலையை பிடித்து அழுத்தியபடி வைஷாலி.

“இன்னைக்கு ஒரு நாள் தானே வைசு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வேணும்னா எக்ஸ்ட்ரா பின் குத்திவிடுறேன்” என்று ஹேர்ப்பின்னை பின்னலிட்ட கூந்தலின் அடியில் பூவை பற்றி கொண்டவாறு குத்திவிட்டு நிமிர.

“ஏத்தா ரெண்டுபேரும் அவளுகளை அழைச்சிட்டு வாங்க ஐயறு வர சொல்லுதாக” என்று அன்னம் கூறிவிட்டு செல்ல.

வைதேகியும் தமயந்தியும் பெண்கள் இருவரையும் மணமேடைக்கு அழைத்து கொண்டு வந்தனர்.

மந்திரம் கூறுவதில் கவனத்தை வைத்திருந்தாலும் அருகில் வந்து அமர்ந்தவளை கண்கொட்டாமல் குறுகுறுவென பார்வையால் பதியம் செய்து கொண்டிருந்தான் விஜயன். வாய் வரை வார்த்தைகள் துள்ள, துருத்துருத்த நாவை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் “ஏன் வைசு வர்றது தான் வர்ற தலைகுனிஞ்சு நடந்து வர வேண்டியது தானே? ஏதோ காக்கி டிரெஸ்ல காவலுக்கு போற மாதிரி நடந்து வர்ற” என்று நக்கலாய் கேட்டு சிரிக்க.

அவனிடத்தில் நீலோற்பவ இதழ் விழிகளால் புரியாத பார்வை வீசியவள் “தலை குனிஞ்சு வர்றதுக்கு நா என்ன தப்பு பண்ணேன் விஜிகண்ணா?” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு வேகமாக கேட்டவளின் கேள்வியில் திகைத்த விஜயன்.

“அடிபாவி” என்று வாயில் கைவைக்காத குறையாக சன்னக்குரலில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.

“வெட்கம் வந்தாலும் தலை குனிவாங்க அந்த பழக்கமெல்லாம் உனக்கு கிடையாதா?”, ஏக்கமா அல்லது ஏமாற்றமா பிரித்தரிய முடியாத குரலில் அவன் கேட்க.

அவனை ஆழ்ந்து நோக்கியவள்

“அது எப்டி இருக்கும் விஜிகண்ணா எனக்கு தெரியாதே. உன்ன எப்போ பாத்தேனோ அப்பவே சூடு சொரணைய கழட்டி வச்ச மாதிரி அதையும் ஓரமா ஒதுக்கி வச்சுட்டேன்” என்று கண் இமை படபடக்க இதழ் பிதுக்கி பாவமாய் உரைத்தவளை கண்டவனுக்கு உணர்ச்சிகள் எல்லாம் கெக்கலிட்டு நகைத்தன.

‘அய்யோ.. ராங்கி..’ என்று கன்னம் பிடித்து ஆட்டி இதழ் சுவைக்க தூண்டிய மனதை அடக்கி கொண்டவன் கண்களில் சிரிப்புடன் பார்வையை அவளிடமிருந்து வம்படியாய் பிரித்து காரியத்தில் கவனத்தை பதிய வைத்தான் விஜயன்.

காண கண் கோடி வேண்டும் என்ற ரீதியில் பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி. மனதின் வருத்தமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட, அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில். விசாலாட்சியின் முகமே அவர் மனதை காட்டிவிட்டது. தங்களால் வந்த மனவேதனை தீர்ந்தது என்ற எண்ணமே இருவருக்குள்ளும் இருந்த குற்றவுணர்ச்சிகளை சூரியன் பட்ட பனியாய் மெல்ல கரைத்திட, அவ்வப்போது சஞ்சளா துவாரகேஷ் ஒருவரை ஒருவர் பார்வையால் மனதை பகிர்ந்து வேறொருவரும் அறியாமல் சிரித்து கொண்டனர்.

ஆசிபெற்று வந்த அர்ச்சதையில் இருந்த மங்கல்யத்தை எடுத்து மணமகன்களின் கையில் ஐயர் கொடுக்க இதோ காதலின் பூரணமாய் அரங்கேறியது இரு மனமும் ஒன்று சேர்ந்த திருமணத்தில். மேளமும் ஸ்வரமும் சேர்ந்து ஒலிக்க அச்சத்தை தூவி ஆசிகள் வழங்கிட இனிதாய் முடிந்தது காதல் ஜோடிகளின் திருமணம்.

அலையாய் அலைந்து திரிந்து பெற்ற காதலில் தான் எத்தனை பரவசம். கஷ்டம், காயம், உதசீனம், வெறுப்பு, கோபம் என்று அனைத்தும் நிவர்த்தியாகிட கலாபத்தின் சாமரம் போல மனதில் காதலின் இதம் வீச, பாஷைகள் அற்று போனது பாவைகள் இருவரிடத்திலும்.

இருஜோடிகளும் அக்கினியை வலம் வந்து அனைவரிடமும் ஆசி வாங்க ஒவ்வொரு தருணத்தையும் புகைப்பட கருவி சேகரித்து வைக்க தொடங்கியது நிஜங்களை நினைவுகளாய்.

விஜயனின் வாழ்வில் இதுவரை வழிகாட்டியாக இருக்கும் தேவதாசும் வந்திருந்தார் அத்தனை மகிழ்ச்சி அவரிடத்தில் “என்ன மேன் சிங்கிளா இருந்தவங்க இப்போ மிங்கிள் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள். எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும் அப்டியே அந்த டாம் அண்ட் ஜெர்ரி சண்டைய விட்டுடாதிங்க உங்க ரெண்டுபேரோட அடையாளமே அது தான்” என்று புன்னகை புரிந்தவாறே கிண்டலாய் கூறிவிட்டு பரிசு பொருளை கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றார் தேவதாஸ்.

சடகோபனை அழைத்தது மட்டுமல்லாது கைலாசத்தையும் அழைக்க சொல்லியிருந்தான் விஷ்ணு.மறப்பதை விட மன்னிப்பது தான் மிகபெரிய தண்டனை கைலாசத்தின் சூழ்நிலை தவறுகளை மன்னித்து விஷ்ணுவிற்காக துவாரகேஷ் அழைப்புவிடுத்திருக்க.

திருமணத்திற்கு வந்தவர் சங்கடத்துடன் இருவரையும் ஏறிட முடியாமல் செய்த செயலால் வெட்கி தலை குனிந்தார். வயதில் சிறியவர்கள் என்றாலும் இருவரின் செயலும் பெரியவர்கள் என்று காட்டியது அவருக்கு.

அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் குற்றவுணர்வை அதிகப்படுத்த கொண்டு வந்த பரிசை கொடுத்து வாழ்த்தை கூறிவிட்டு சென்று விட்டார் கைலாசம். அவரின் மனநிலை உணர்ந்து இருவரும் நிறுத்தி வைக்கவில்லை.அவரின் நிலையை எண்ணி விஷ்ணுவின் இதழரோம் நிந்தனையான புன்னகை மின்னி மறைந்தது.

நேரம் ஒன்றை கடந்து பயணம் செய்ய தொடங்கியிருக்க. வந்திருந்த உறவுகள், உடன் பணிசெய்யும் அலுவலக நண்பர்கள், உடன்பயின்ற நட்புக்கள் என்று வந்திருந்தவர்கள் கலைய தொடங்கினர்.

“நல்ல நேரம் ஆரம்பிச்சுருச்சு சாவித்ரி. ரெண்டு மணி நேரம் தான் இருக்கு அப்றம் எமகண்டம் ஆரம்பிச்சிரும் அதுக்குள்ள பொண்ணு மாப்பிள்ளைய வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடலாம் செய்ய வேண்டிய சடங்கு சமரதாயங்கள் வேற இருக்கு”என்று கிருஷ்ணன் சாரதா தம்பதியினர் கூற.

“அதுவும் சரி தான்” என்று கணவரின் கைகடிகாரத்தில் நேரம் பார்த்தவர்”டேய் விஷ்ணு வைத்திய கூட்டிட்டு முன்னாடி போங்க நாங்க பின்னாடி வர்றோம்” என்று சொல்ல.

“சரி அத்தை” என்றவன் வைதேகி மட்டுமல்லாது அன்னம் இந்திராணி இருவரையும் காரில் அழைத்து கொண்டு முன்னே சென்றுவிட, மற்றவர்கள் மணமக்களை டிராவலர் வேனில் அழைத்து கொண்டு பின்னால் சென்றனர்.

எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை சிலருக்கு வீடாகவும் ஏணியாகவும் மாறுகின்றன. இதோ இவர்கள் செதுக்கிய மூங்கில்கள் வேங்குழலின் வடிவம் பெற்று செவிவழியே உருகி சொருக வைக்கும் வேணுகானமாய் வாழ்வை இசைக்க தயராய் இருந்தது.

அரை மணி நேர பயணத்தில் சாவித்ரியின் இல்லம் வந்து சேர்ந்தனர் அனைவரும். ஆலம் கரைத்து எடுத்து வந்த வைதேகி இரு ஜோடிகளையும் ஒன்றாய் நிற்க வைத்து ஆலம் சுற்றி சுண்ணாம்பும் மஞ்சளும் கரைந்த கலவையில் செந்நிறமாய் மாறிய நீரை மோதிர விரல் கொண்டு நெற்றியில் வைத்து விட்டு, அதற்கு சன்மானமும் வாங்கி கொண்டு ஜோடிகளை உள்ளே அழைத்து சென்று, பால் பழம் கொடுக்கும் சடங்குகளை வைதேகியும் தமயந்தியுமே செய்து முடித்தனர்.

மணமக்களை அவரவர் அறைக்கு அழைத்து செல்லுமாறு விஷ்ணு வைதேகியிடம் கூறிவிட்டு, இரவு நேர சடங்கை எங்கு வைத்து கொள்வது எப்போது கிளம்புவது என்பதை பற்றி பேச தொடங்கினர் பெரியவர்கள்.

விசாலாட்சி அவர் இல்லத்திலும் கிருஷ்ணன் சாரதா இருவரும் திருச்சியில் தங்கள் வீட்டில் ஏற்பாடு செய்வதாக கூற. பெரும் சங்கடமாகி போனது அனைவருக்கும், விசாலாட்சி இல்லம் என்றால் இதே சென்னையில் இருக்கிறது ஆனால் திருச்சி..சற்று உதைப்பதாக தோன்றியது மற்றவர்களுக்கு.

எப்போது கிளம்பி எந்த வேளையில் போய் சேர்ந்து ஏற்பாடுகள் செய்து, நினைக்கும் போதே அத்தனை மலைப்பு தோன்ற பரமசிவம் வாய் திறக்கும் முன்பே சாவித்ரி தன் எண்ணத்தை உடைத்து விட்டார்.

“நீங்க யாரும் தப்பா நினைக்கலன்னா நா ஒன்னு சொல்லவா?” என்று தயங்கிய குரலில் அனைவரின் கவனத்தை ஈர்க்க, என்னவென்று அனைவரும் சாவித்ரியின் முகம் பார்த்தனர்.

“வைஷாலி எனக்கு அண்ணே பொண்ணு மாதிரின்னா சஞ்சளா விஜி ரெண்டுபேரும் எனக்கு பையன் பொண்ணு மாதிரி அதனால சடங்கு ஏற்பாட்டை இங்கயே பண்ணினா என்ன?” என்று கேட்டு தயக்கம் தாங்கிய முகத்துடன் அனைவரையும் பார்க்க.

ஒருவரும் பேசவில்லை ஒருவர் முகத்தை ஒருவர் என மாறி மாறி வியப்பா திகைப்பா அல்லது அமைதியான கோபமா என்று பிரித்தறிய முடியாத பார்வை பரிமாற்றத்தில் சிலகணங்கள் அமைதியில் கழிந்தது. சிலகணம் தான். ‘ஏன் கேட்டோம்’ என்ற எண்ணம் தோன்றிட அதுவே சாவித்ரிக்கு படபடப்பை உண்டாக்கியது.

“உங்களுக்கு விருப்பமில்லன்னா ஒன்னும்  பிரச்சனை இல்ல. பெத்தவங்க நீங்க எங்க செய்யணும்னு நினைக்கிறீங்களோ அங்கயே வச்சுக்கோங்க” என்ற மனைவியின் பதட்டம் தணிக்க, வேகமாக எழுந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் ஜெகநாதன்.

“மன்னிச்சிருங்க அவ ஏதோ கேக்கணுமேன்னு கேட்டுட்டா உங்க விருப்பப்படியே பண்ணுங்க.அவங்கவங்க பிள்ளைகளுக்கு என்ன பண்ணனும் எப்டி பண்ணனும் தெரியாதா?” என்றவரின் கூற்றில் அனைவருக்கும் வருத்தமாகி போனது, முகம் மட்டுமல்ல அகமும் வாடி போக.

தங்கையின் முகத்தை வேதனையோடு பார்த்தார் பரமசிவம். சாவித்ரியின் மனதில் உள்ள ஆசை ஏக்கம் அனைத்தும் அப்பட்டமாய் அவர் கண்களுக்கு புலப்பட, ஈரம் படர்ந்த விழிகளை எவரும் அறியாமல் துடைத்து கொண்டார்.

“இதுல என்ன இருக்கு சாவித்ரி. நீ சொல்ற மாதிரி இங்கயே ஏற்பாடு பண்ணிக்கலாம் எங்க பிள்ளைகளா இருந்தாலும் அவங்க மேல உள்ள பாசத்துல நல்ல விஷயம் சொல்லும் போது வேணாம்னு மறுத்து பேசவா போறோம். இதுக்கெதுக்கு பதட்டப்படுற மனசுல பட்டத்தை சொல்லிருக்க” என்று சூழ்நிலையை மாற்றிய கிருஷ்ணன்,

“சரிம்மா எல்லாருக்கும் காபி போட்டு கொண்டு வா” என்று உரிமையுடன் பணிக்க.

“சரிங்கண்ணா” என்றவருக்கு கால்கள் இருப்பு கொள்ளவில்லை சமையல் அறை சென்று மணக்க மணக்க பில்டரில் காஃபி தயாரிக்க தொடங்கினார் சாவித்ரி.

‘எங்கே என் மகள் என் மகன் எங்களுடைய முடிவு என்று மறுத்து கோபமாக வார்த்தைகளை விட்டு விடுவார்களோ?’ என்ற எண்ணமும் ‘அதிகபிரசங்கி தனம்’ என்று எண்ணி விடுவார்களோ’ என்ற கவலையும் தோன்றி அச்சத்தை கிளப்பியிருக்க, கிருஷ்ணனின் பேச்சிலும், விசாலாட்சியின் புன்னகை முகமான சம்மதத்திலும் கணவன் மனைவி இருவருக்கும் கலக்கம் அனைத்தும் மறைந்து போனது.

ஐந்து நிமிடத்தில் காஃபி டம்ளர்களுடன் வெளிப்பட்டவர் ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்கு   கொடுத்துவிட்டு அறையில் இருப்பவர்களுக்கு எடுத்து சென்றார்.

“வைத்தி ம்மா கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிடா ரொம்ப டையர்டா இருக்குற மாதிரி தெரியிது” என்றவர் “உங்களுக்கு காஃபி வேணுமா?” என்று சஞ்சளா வைஷாலியிடம் கேட்க.

வேண்டாம் என்றதும் “சரி டிரெஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிங்கடி” என்று கூறிவிட்டு விஷ்ணுவை தேடி அவன் அறைக்கு சென்றார் சாவித்ரி.

கும்மாளம் அடித்து ஒருவரை ஒருவர் கிண்டல் பேசி சிரித்து கொண்டிருக்க”என்ன சிரிப்பெல்லாம் பலமா இருக்கு” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த மூவரும் அமைதியை தத்தெடுத்து கொண்டனர்.

“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்டி அமைதியாகிட்டீங்க” என்று டிரேயை நீட்டியவர்”அது சரி உங்களுக்குள்ள சிரிச்சு பேச ஆயிரம் விஷயம் இருக்கும் அது எதுக்கு எனக்கு. சரி இந்தாங்க காஃபி எடுத்துக்கோங்கடா” என்றதும் ஆளுக்கொன்றை எடுத்து கொண்டனர்.

“அசதியா இருந்தா கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிங்கடா பேசிட்டே இருக்காதீங்க” என்று கூறிவிட்டு விஷ்ணுவை மட்டும் தனியே அழைத்து சென்றார் சாவித்ரி.

Advertisement