Advertisement

அத்தனை வலிகள் அவள் மனதில். இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை அடக்கி வைத்த அழுத்தமெல்லாம் இன்று ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வியை தாங்கிய குறையாக வெளிப்பட்டது.

“சித்தி அம்மாகிட்ட அழுதுகிட்டே பேசுனதை கேட்டதும் மனசுக்கு என்னமோ ஆகிருச்சு எதுக்கு அழுதாங்கன்னு அப்போ எனக்கு அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியும் போது ரொம்ப கஷ்டமா போச்சு மாமா இப்டியெல்லாமா பேசுவாங்கன்னு ஆச்சர்யமாவும் வேதனையாவும் இருந்துச்சு.

நம்மள வளர்த்தது சித்தியும் சித்தப்பாவும் தான். நம்ம குழந்தையையும் அவங்க தான்  வளர்க்கணும் நா ஆசைப்படுறேன். மத்தவங்களுக்கு உரிமை இருக்கு ஆனா அவங்களுக்கு தான் அதிக உரிமை அந்த உரிமைய அவங்களுக்கு கொடுப்பிங்களா மாமா?” என்று யாசகமாய் கேட்டு அவனை பார்த்தாள் வைதேகி.

இருவரிடத்திலும் இனம் புரியாத உணர்வுகளை கடத்தியது மனம்.வலியின் ஆழம் எத்தகையது என்பது அனுபவிப்பவருக்கே தெரியும் சதை கிழித்து வெளிப்படும் காயத்தின் உதிரம் சில நிமிடங்களில் உறைந்து விடும் ஆனால் மனதின் காயம் இறுதி வரை உயிர்கொல்லும் நோயாக உடன் வரும்.இன்று வரை சாவித்ரியின் மனதில் வடுவாக இருந்து வலியை கொடுக்கும் பேச்சுக்கள் துளி அளவும் குறைந்தபாடில்லை.

விஷ்ணுவால் பேச முடியவில்லை மனம் வலித்தது, சாவித்ரியை பிடிக்கும் எந்த அளவுக்கு என்று எல்லை வகுக்க தெரியாது அவனுக்கு. அன்னத்திடம் காணும் தாய்மையின் சௌகரியத்தை சாவித்ரியிடம் உணர்ந்ததாலோ என்னவோ தன் தாயை விட அதிக ஒட்டுதல் வைத்திருந்தான் அவர் மீது. சாவித்ரியின் முகம் சுருங்கினாலோ சுணக்கம் கொண்டாலோ தாங்கி கொள்ள முடியாது விஷ்ணுவால்.

அவனை முதன் முதலில் கைகளில் ஏந்தி முகர்ந்து முத்தமிட்டது அவர் தான் என்று அவனுக்கு தெரியும்.

அவன் குழந்தையை மட்டும் வேண்டாம் என்பானா என்ன? பரமசிவத்தின் ஒரு சில குணங்களை விஷ்ணுவிடம் காணலாம் அதிலும் சாவித்ரியின் விஷயத்தில் இருவரும் ஒரே குணம் ஒத்த மனநிலையுடன் தான் இருப்பார்கள். புவியரசன் விஷ்ணுவை போல் அல்ல என்றாலும், குணத்திலும் தோற்றத்திலும் பரமசிவத்தின் சாயல். பாசத்தை வெளியே காட்டிட மாட்டான் தகப்பனை போல ஒளித்து வைத்து காட்ட தெரிந்தவன்.

மௌனத்தில் நிமிடங்கள் கரைய”என்ன மாமா நா கேட்டதுக்கு பதிலையே காணோம்” என்ற மனையாளின் பேச்சில் மௌனம் உடைத்தான் மங்கையின் மீது உரிமை கொண்டவன்.

குரலை சீர் செய்து கொண்டு “நீ சொன்ன பிறகு நா வேணாம்னு சொல்வேனா தேவிம்மா. அத்தை தான் நம்ம குழந்தைய வாங்குவாங்க” என்றவனுக்கு கண்கள் பளபளத்தது.

கண்ணீரை அடக்கி துக்கத்தின் சில துளிகளை உள்வாங்கி கொண்டவன் சூழ்நிலையை இயல்பாக்க வேண்டி “விஷயத்தை அவங்களுக்கு சொல்லணுமே தேவிம்மா. இந்த நேரத்துல…” என்று யோசனையுடன் அலைபேசியில் மணியை பார்க்க எட்டு என காட்டியது நேரம்.

“சரி கிளம்பு வீட்டுக்கு போவோம் எப்டியும் கல்யாணத்துக்கு அங்க தானே போகணும் இப்பவே கிளம்பலாம் நேர்ல போய் சொன்னா தான் நல்லா இருக்கும் அத்தை ரொம்ப சந்தோஷபடுவாங்க” என்றதும் அத்தனை மகிழ்ச்சி அவள் முகத்தில்.

துள்ளி குதித்து எழுந்தவள்

“இதோ அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுறேன் விணு” என்று உற்சாக நடையில் அறைக்கு சென்றவள் தலைவாரி முகம் கழுவி சின்னதாய் பொட்டிட்டு கிளம்பி வர, இருவரும் சாவித்ரியின் இல்லம் விரைந்தனர்.

மூவரின் சத்தம் மட்டுமே அவ்வீட்டில் ஒலித்து கொண்டிருந்தது. அதிலும் சாவித்ரியின் கணீர் குரல் வெளியே வரை தெளிவாக கேட்டது “மருதாணி வச்சா தான் கை பாக்க அழகா இருக்கும். எனக்கு கல்யாணம் ஆகும் போது மருதாணி தான் வச்சுவிட்டாங்க அவருக்கும் அது தான் பிடிக்கும். கைக்கு அழகும் சேர்க்கும், உடம்புக்கு தீங்கும் இருக்காது, உடம்பு சூட்டை தணிக்கும், விஷகடியோட விஷத்தை முறிக்கும்” என்று மருதோன்றி இலையின் மருத்துவ குணங்களை பற்றி பேசி கொண்டே வைஷாலியின் பத்து விரல்களிலும் வைத்து விட்டவர்,

“ஏய் சஞ்சளா நீ வா” என்று அழைக்க.

துவாரகாவிடம் அலைபேசியில் உரையாடி கொண்டிருந்தவள் பாதியிலேயே பேச்சை முடித்து கொண்டு வந்து அமர்ந்து, கைகளை நீட்டினாள்.

“கட்டிக்க போறவனை மனசுல நினைச்சுக்கோ அப்ப தான் காலையில பாக்கும் போது நல்ல சிவந்திருக்கும்” என்றதும் சஞ்சளாவிடம் வெட்க புன்னகை துளிர்த்தது. சன்ன சிரிப்புடன் கைகளில் வைக்க தொடங்கிய நேரம் அழைப்பு மணி சத்தம் செவிகளை நிறைக்க.

“யாருன்னு போய் பாரு வைசு” என்றதும் எழுந்து சென்று கதவை திறந்தவள் “அத்தை விஷ்ணு வந்துருக்கான் கூடவே வைதேகியும் வந்துருக்கா” என கூவியவள்,

“என்னடா வர்றோம்னு சொல்லவே இல்ல?”.

“இந்த வீட்டுக்கு வரும்போது என்னைக்காவது சொல்லிட்டு வந்துருக்கேனா பக்கி. ஒரு குட் நியூஸ் அதான் இப்பவே சொல்லணும்னு கிளம்பி வந்துட்டோம்” என்று இருவரும் உள்ளே வர, கதவை மூடினாள் வைஷாலி.

“சித்தி” என்று குடுகுடுவென ஓடிவந்து சாவித்ரியை அணைத்து கொண்டாள் வைதேகி.

“என்ன வைத்திம்மா என்ன விஷயம் என்னைக்குமில்லாம ரொம்ப சந்தோஷமா இருக்க?”.

“சந்தோஷம் தான் சவிகுட்டி நீங்க பாட்டி ஆக போறீங்க” என்றவன் வாங்கி வந்த இனிப்பில் ஒன்றை எடுத்து அவர் வாயில் திணித்துவிட்டு சந்தோஷ மிகுதியில் சிரித்தான்.

இனிபோடு சேர்ந்து வாயும் ஒட்டி கொண்டது சாவித்ரிக்கு இருவரையும் மாறி மாறி பார்த்தவர் இருவர் முகத்திலும் தெரிந்த நிறைவான புன்னகை கண்டு “நிஜமாவா?” என்று எதிர்பார்ப்பை தேக்கி கேட்க.

“ஆமாம்” என்று வைதேகி தலையாட்டி பதில் கூறியதும், வேகமாக எழுந்து கொண்டவர் கைகளை கழுவிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்து டப்பாவில் அடைத்து வைத்திருந்த ஜாமுனை எடுத்து வந்து விஷ்ணுவின் வாயில் திணித்தார் அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில்.

“அப்ப எனக்கு மருமகனோ மருமகளோ வர போறாங்களா சூப்பர்” என்று குதூகலித்த வைஷாலி மருதாணி ஒட்டி விடாதவாறு வைதேகியை அணைத்து கொண்டாள் .

“எப்போ வைத்தி உறுதியாச்சு? டாக்டர் கிட்ட போனயா? எந்த டாக்டர்? போகலைன்னா நாளைக்கு போய்ட்டு வரலாம்” என்று சாவித்ரி கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல.

“அத்தை எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்கீங்க ரிலாக்ஸ் டாக்டர்கிட்ட போயிட்டு தான் வந்துருக்கா அடுத்த மாசம் வர சொல்லிருக்காங்க” என்று பதட்டத்தை தணிக்கும் விதமாய் பேசினான் விஷ்ணு.

“என்னடா எவ்ளோ பெரிய விஷயம். கேட்டதும் சந்தோஷம் தாங்க முடியலை அண்ணிகிட்டயும் அக்காகிட்டயும் விஷயத்தை சொல்லணுமே” என்று படப்படத்தவர் “டேய் அம்மாவுக்கு போன் போட்டு கொடு நா பேசணும்”.

“இப்பவா! நேரம் என்னனு பாத்திங்களா? அவங்க எப்பவோ கடைய சாத்திருப்பாங்க காலையில சொல்லிக்கலாம் முதல விட்ட வேலைய கண்டீனியூ பண்ணுங்க அத்தை. பாவம் சஞ்சு நீங்க வருவிங்களா மாட்டீங்களான்னு முழிச்சிட்டு உக்காந்துட்டு இருக்கா” என்ற போது தான் மருதாணி வைத்த கை காய தொடங்கியிருப்பதை பார்த்தார் சாவித்ரி.

“அச்சச்சோ விஷயத்தை கேட்டதும் என்ன பண்றதுன்னே தெரியலை” என்று தன்னையே தலையில் குட்டி கொண்டவர் “வைத்தி வா உனக்கும் வச்சுவிடுறேன்” என்று அருகில் அமர்த்தி கொண்டு சஞ்சளாவிற்கு வைத்துவிட்டு வைதேகியின் கைகளை அலங்கரிக்க. அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினான் விஷ்ணு.

அடுத்தடுத்து வந்த இரண்டு நாட்களில் வைதேகி நொந்து போனாள் என்றால், அவளின் நிலை கண்டு விஷ்ணுவிற்கு ஒரே கொண்டாட்டம் தான்.  மனைவியை கவனிப்பதில் பெண்கள் நால்வரும் போட்டிபோட்டு கொண்டு முன்னே வந்து நிற்பதை காணும் போது அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும் அவனுக்கு. அவர்களின் அக்கறையில் வைதேகி தான் திக்குமுக்காடி போனாள்.

கருவுற்றிருக்கும் விஷயம் தெரிந்த அடுத்த நாளே அடித்து பிடித்து கொண்டு சென்னை வந்து இறங்கினர் விஷ்ணு வைதேகியின் குடும்பத்தினர். அன்னம் இந்திராணி சாவித்ரி இவர்களின் கவனிப்பில் தமயந்தியும் சேர்ந்து கொள்ள.

“அக்கா நீங்களுமா…?” என்று அக்கறையின் ஆதிக்கம் தாங்க முடியாமல் பெண்ணவளோ அவஸ்தையில் வார்த்தைகளை இழுத்தாள்.

“சும்மா இரு வைத்தி இந்த மாதிரி நேரத்துல வயித்துக்கு எதையாவது கொடுத்துட்டே இருக்கணும். உள்ள இருக்குற குழந்தைக்கு சத்தான ஆகாரம் போய் சேர வேணாமா நீ சாப்பிடுறதுல பாதி கூட அதுக்கு போகாது” என்று கண்டித்து கொண்டே சாதத்தை ஊட்ட வர.

“அய்யோ அக்கா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்ட்டுக்கிறேனே ஈவ்னிங் சாப்ட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு இதுக்கு மேல உள்ள தள்ள முடியாது, இடமும் இல்ல ப்ளீஸ் க்கா வாமிட் வந்துரும்” என்று கண்களை சுருக்கி இறைஞ்சியவளை சிறு புன்னகையுடன் பார்த்தாள் தமயந்தி.

“சரி இந்த பாலை மட்டும் குடி” என்று பெரிய டம்ளர் முழுதும் நிரப்பி இருந்த குங்கும பூ கலந்த பாலை முன்னே வைக்க.

“இதுக்கு சாப்பாடே பெட்டர்” என்று முகம் சுருக்கி முணுமுணுத்தவள் வேண்டா வெறுப்பாக டம்ளரில் இருந்ததை குடிக்க.

சிரிப்பாய் இருந்தது தமயந்திக்கு “இப்ப இப்டி சொல்றவ இன்னும் கொஞ்ச நாள் போனா நீயே கேட்ப, எனக்கு அது வேணும் இது வேணும் பண்ணி கொடுங்கன்னு” என்று சிரித்து கொண்டே கூறியவள் டம்ளரை வாங்கி கொண்டு நகர்ந்து சென்றுவிட்டாள்.

வெளியே சென்று வந்த விஷ்ணு தமயந்தியின் உபசரிப்பை கண்டு “என்ன தேவிம்மா கவனிப்பு எல்லாம் பலமா இருக்கு”என்று கிண்டலாய் கேட்டபடி அவள் அருகில் இருந்த சேரில் அமர.

முறைப்பு காட்டியவள் அடுத்த நொடி கெஞ்சலில் இறங்கினாள் “ப்ளீஸ் விணு இவங்க அக்கறையில இருந்து என்ன காப்பாத்துங்க முடியலை ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிளாஸை கொண்டு வந்து நீட்டுறாங்க என்னால முடியலை மாமா” என்று புலம்பினாள் வைதேகி.

“மிஞ்சி போனா கொஞ்ச நாள் தானே இந்த கவனிப்பு. பேபி ப்ளஸ் நீ. ரெண்டுபேரோட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தேவிம்மா நீ நல்லா சாப்ட்டா தானே குழந்தையோட ஆரோக்கியம் நல்லா இருக்கும். டாக்டர் சொன்னது நினைவு இருக்கு தானே?” என்று கன்னம் பிடித்து கெஞ்சி கொஞ்சியவனின் கையை வெடுக்கென தட்டிவிட்டவள்.

“டாக்டருக்கும் உங்களுக்கும் வேற வேலையில்ல ஈஸியா சொல்லிடுறீங்க எனக்கு தானே தெரியும்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

“ப்ச் கோபம் கொள்ளாதே என் தேவியே” என்று அவனுக்கே உரிய பாணியில் காதலும் கனிவும் கலந்த குரலில் வசனம் பேச.

கண்களை சுருக்கி மூக்கு விடைக்க முறைத்து பார்த்தவள் “போங்க விணு” என்று கோபத்தை காட்ட முடியாது தோளில் தலை சாய்ந்து கொண்டாள் வைதேகி.

“என்ன பேச்சு ஒட்டிட்டு இருக்கு” என்று அறையில் இருந்து வெளிப்பட்ட வைஷாலியுடன் சஞ்சளா வர, பின்னால் விஜயன் துவாரகா இருவரும் அவர்கள் அறையில் இருந்து வந்தனர்.

“எப்போடா வந்த போன வேலை முடிஞ்சதா”, விஜயன் கேட்க.

“ம் முடிஞ்சதுடா” என்றதும் இருக்கையை நகர்த்தி நால்வரும் அமர்ந்து கொண்டனர்.

“எங்களுக்கு தெரியாம என்ன விஷயம் ஓடிட்டு இருக்கு அதுவும் சீரியஸா?”,புருவம் உயர்த்தி வைஷாலி கேட்க.

“சாப்பிட பிடிக்கலையாம் அக்கறை காட்டுறத நிறுத்த சொல்றா” என்றான் விஷ்ணு வைதேகியிடம் கவனத்தை பதித்து கொண்டே.

“என்ன க்கா நீங்க கொடுக்கிறதை வேணாம்னு சொல்ல கூடாது முடிஞ்ச அளவு அனுபவிச்சு சாப்பிடணும் ஃபியூசர்ல உங்க நிலையில நா இருந்தேன்னா எதையும் வேணாம்னு சொல்லவே மாட்டேன். கொடுங்க கொடுங்கன்னு வாங்கி சாப்ட்டுட்டே.. இருப்பேன் அப்டியில்லையா நானே சமைச்சு சாப்ட்டுருவேன்” என்று சஞ்சளா மிடுக்குடன் புருவங்களை உயர்த்தி, கைகளை ஆட்டி, கண்களில் அபிநயம் பிடித்தவாறு சொல்லவும்,பக்கென்று சிரித்து விட்டான் துவாரகேஷ்.

சிரிப்பின் காரணம் தெரியாது விழித்தவளை பார்த்து, சிரிப்பை முயன்று அடக்கியவன் “எப்டிம்மா. உங்க தாராள மனசை உப்புமாவுல காமிச்ச மாதிரியா?” என்றான் கிண்டல் பொதிந்த குரலில்.

புசுப்புசுவென மூச்சு வாங்க முறைப்பு காட்டியவள் “ஒரே தொங்கா கொஞ்ச நாள் கழிச்சு பண்ண வேண்டிய வேலைய நாளைக்கே ஆரம்பிக்க வச்சிறாதிங்க. ஒரு வேளை உப்புமா மூணு வேளையா மாறிடும்” என்று மிரட்டியவளின் பாவனையில் சிரிப்பு பீறிட்டாலும், ‘செய்தாலும் செய்வாள்’ என்று அடக்கி கொண்டான் துவாரகேஷ்.

“நா எதுவும் சொல்லல தாயே ஒரு தடவை தியாகி ஆனதுக்கே மனசாட்சி தாளிச்சு கொட்டுது இதுல மூணு வேளையும் தியாகி ஆனேன் அவ்ளோ தான் சோழி முடிஞ்சது” என்று பவமாக கூற, விஷ்ணு வைதேகி இருவரும் அடக்க மாட்டாமல் சிரித்தனர்.

“உங்களை” என்று அடிக்க கை ஓங்கியவளுக்கும் புன்னகை தொற்றி கொள்ள. என்ன பேசி கொள்கின்றனர் என்று தெரியமால் விழித்த விஜயனும் வைஷாலியும் விஷயம் என்னவென்று அறிந்ததும் சிரிப்பில் ஒன்று கூடிட. புன்னகையின் ஒளிசிதறல் வனவில்களின் வதனத்தில் வண்ணமயமான பொலிவை கொடுக்க. அனைவரின் முகமும் பார்க்கவே அத்தனை அழகாய் இருந்தது கள்ளமில்லா நகைப்பில்.

மாடியில் இருந்து இறங்கி வந்த சாவித்ரி உறங்காமல் பேசி கொண்டிருந்தவர்களின் அருகில் வேகமாக வந்தவர் “இன்னும் தூங்காமா என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. காலையில சீக்கிரம் கிளம்பி மண்டபத்துக்கு போகணும் நேரத்துக்கு தூங்குனா தானே எந்திரிக்க முடியும்? போங்க போய் தூங்குங்க. எல்லாரும் தூங்கிட்டாங்க உங்களுக்கு மட்டும் தூக்கம் வரலையா? மணி என்னாகுது”என்று அதட்டியவர் பெண்கள் மூவரிடமும் திரும்பி,

“என்ன வைத்தி அவங்க தான் நேரம் தெரியாம பேசிட்டு இருக்காங்கன்னா நீயும் அவங்க கூட உக்காந்துட்டு இருக்க. நேரத்துக்கு தூங்க வேணாமா? அவங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டு ரூம்ல போய் தூங்கும்மா” என்றதும் வைதேகி இருவரையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.

Advertisement