Advertisement

மதிய உணவை வைதேகியுடன் சேர்ந்து உண்டுவிட்டு சற்று நேரம் வளவளத்துவிட்டே பள்ளி கிளம்பி சென்றாள் மலர். நேரம் செல்ல செல்ல ஏக்கம் காரிகையின் மனதை நிறைத்து கோபத்தை உண்டாக்க, ‘அழைக்கவா வேண்டாமா’ என்று நெடுநேரம் சிந்தித்தவள்.

‘நேரில் சொல்வது தான் சரியாக இருக்கும்’ என எண்ணி கொண்டே அலைபேசிக்கு உயிர் அளிக்கும் தொப்புள் கொடியில் இருந்து விடுவித்து மொபைலை ஓரமாய் வைத்துவிட்டு, எழுந்து நடப்பதும் பின் அமர்வதுமாக இருந்தாள்.

வித விதமாக சிந்தனைகள் சிந்தையில் வந்தெழுந்தது. ‘விஷயத்தை கூறும் போது அவனின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்ன கூறுவான் எப்படி நடந்து கொள்வான்?’ என்று சினிமாவில் வரும் காட்சிகளை ஒத்து உருவகம் செய்து பார்த்தவளுக்கு ஏனோ உவப்பாய் இருக்க, வேகமாக தலையாட்டி தட்டி கொண்டாள்.

‘அவனின் உணர்வுகள் எதார்த்தமாய் இருக்க வேண்டும்’, என மனதிற்குள் சொல்லி கொண்டவளின் விழிகள் மட்டும் அவ்வபோது வாசலையும் அலைபேசியையும் ஆவலோடு தீண்டி மீண்டு, மீண்டும் ஏமாற்றத்தை அப்பி கொள்ள. தொப்பென சோபாவில் அமர்ந்தாள் வைதேகி.

கதகதப்பான வயிற்றில் வலது கையை வைத்து ஆசையாய் வருடினாள். உயிர்பெற்ற உருவத்தின் ஓசை கேட்டதோ என்னவோ தாய்மையின் புன்னகை அவள் வதனத்தில் ஒட்டிக்கொள்ள, அன்னிச்சையாய் கண்கள் பளபளத்தது. தனியாய் பேசினால் தனது குரல் மட்டும் தனித்து ஒலிக்கும் என்ற கூச்சத்தில் வாய் திறக்கவில்லை. உருவம் அறியா மழலையுடன் மானசீகமாய் உவகை பொங்க உரையாட தொடங்கியவள் தன்னையும் மறந்து உறங்கி போக, வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டே கண்விழித்தாள்.

“தேவிம்மா” என்ற குரல் கேட்டு வேகமாக எழுந்து சென்று கதவை திறக்க விஷ்ணு தான் நின்றிருந்தான் “விணு” என்று உற்சாக குரலில் அழைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள.

புருவம் சுருக்கி காரணமறியாமல் விழித்தவன் முகில் நகை புரிந்தவாறே “என்ன தேவிம்மா ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியிது என்ன விஷயம்?” என கேட்டு கொண்டே உள்ளே அழைத்து வந்தவன், வெளியே அலைந்து திரிந்ததில் உண்டான வியர்வையும் களைப்பும் உணர்ந்து.

“நா போய் குளிச்சிட்டு வறேன் சூடா ஒரு காஃபி போட்டு வை தேவிம்மா” என்று கன்னத்தில் தட்டி விட்டு செல்ல.

“ப்ச் விஷயம் என்னனு கேட்டுட்டு கேக்காமலே போறாரு” என்று முணுமுணுத்தவளின் முகம் காற்றிழந்த பலூன் போல சப்பென்று வாடி போனது, கட்டளையாய் கூறவில்லை என்றாலும் அவன் சொன்னதை செய்யவோம் என்று காஃபி தயாரிக்க தொடங்கினாள்.

சற்று நேரத்தில் குளித்து முடித்து உடைமாற்றி கொண்டு வந்தவன் புருவ நெறிப்புடன் காஃபி டேபிளின் மீது பார்வையை நிலைநிறுத்தினான். ஒரு பக்கம் இனிப்பும் ஒரு பக்கம் காஃபி டம்ளருமாய் கன்னத்தில் கைவைத்து சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்தவன் “என்ன தேவிம்மா என்னைக்கும் இல்லாம ஸ்விட் வாங்கிட்டு வந்துருக்க உனக்கு தான் ஸ்விட் பிடிக்காதே”என்றவாறே காஃபியை எடுத்து பருகினான் விஷ்ணு.

 வெளியே சுற்றி  திரிந்து வந்தவனுக்கு இதமான குளியலும், சூடான காஃபியும் தொண்டையை தாண்டி பயணிக்கும் போதே மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தது.

“மாமா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றவள் இனிப்பை எடுத்து நீட்டினாள்.

சில நொடி புரியாத பார்வையில் ஆழ்ந்து நோக்கியவன் புன்னகை முகமாய் “நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தேவிம்மா. வர்ற இன்டிபெண்டன்ஸ் டே அன்னைக்கு எனக்கு அவார்ட் கொடுக்க போறாங்க சிஎம் கையால” என்று இனிப்பை எடுத்து வைதேகியின் வாயில் திணிக்க.

“நிஜமாவா? மாமா” என்று கண்களை விரித்து வியப்புடன் கேட்டவளுக்கு முகமெல்லாம் சிரிப்பு தான்.

“இதுக்கெல்லாம் காரணம் நீ தான் தேவிம்மா நீ என்னோட வாழ்க்கையில வந்த பிறகு தான் சந்தோஷத்தையே முழுசா அனுபவிக்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக என்மேல ரொம்ப அக்கறை எடுத்துகிற, என்னோட வாழ்க்கைய அழகாக்க வந்த தேவதை நீ” என்று காதலுடன் சொன்னவனை பார்த்து புன்னகைத்தாள் வைதேகி.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மாமா. உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு” என்றாள் குதூகலத்துடன் வெட்கம் அமிழ்ந்த குரலில்.

“ப்ரோமோஷனா..” என்று வார்த்தைகளை இழுத்தவன் காலையில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி “கமிஷ்னர் சார் இதை பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே தேவிம்மா” என்று யோசனை செய்யும் விதமாய் இயம்ப.

தலையில் ணங்கென்று கொட்டலாம் போல இருந்தது வைதேகிக்கு. கண நொடியில் அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை தடம் தெரியாமல் கலைந்துவிட, சுறுசுருவென கோபம் தலைக்கேற வேகவேகமாக மூச்சு வாங்கியவள் “அடேய் மங்குனி மாமா எப்ப பாரு வேலைய பத்தி மட்டும் தான் யோசிப்பியா? நம்மள பத்தி யோசிக்கவே மாட்டியா?.என்ன எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்ட உன்னோட காக்கி வேலையவே கட்டிக்கிட்டு அழ வேண்டியது தானே” என்று ஆற்றமாட்டாமல் பொறிந்தவளின் மரியாதை அற்ற பேச்சில் திருதிருவென விழித்தான் விஷ்ணு.

“என்ன தேவிம்மா பொசுக்குன்னு மாமாவை மரியாதை இல்லாம பேசிட்டே. நா இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோபம்” என்று தணிவாக கேட்டு அவள் கரம் பற்றினான்.

வெடுக்கென கையை உதறியவள் “ப்ரோமோஷன் வேலையில இல்ல வாழ்க்கையில நா ஒருத்தி இருக்கேன் நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு நம்ம வாழ்க்கைய பத்தியும் அப்பப்ப கொஞ்சம் நினைச்சு பாருங்க” என்று வேகமாக உரைத்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள் வைதேகி.

அவள் கூற்றின் அர்த்தம் விளங்காமல் சில நொடிகள் விழித்து கொண்டிருந்தவன் ‘வாழ்க்கையில ப்ரமோஷன்’ என்ற வாக்கியத்தின் பொருள் புரிந்து வேகமாக எழுந்து அறைக்குள் செல்ல.

கோபமாக முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவனின் தேவி. விழிகளில் ஈரம் படர்ந்திருந்தது”ஏய் சாரி தேவிம்மா சொல்றதை தெளிவா சொன்னாதானே எனக்கு புரியும் சாரிடா..” என்று அவளின் முகத்தை தன் புறம் திருப்பி கெஞ்சி கொஞ்சியவன் “நிஜமாவா” என்று விழிகள் விரிய குரலில் எதிர்பார்ப்பை அடக்கி கேட்டான்.

கலங்கிய விழிகளை துடைத்து “ஆமாம்” என்று இதழை சுளித்து  தலையாட்டியவளுக்கு அவனின் ஆவல் பொதிந்த முகத்தை கண்டதும் கோபமெல்லாம் கரைந்து காணாமல் போய்விட “நீங்க அப்பா ஆக போறீங்க ஏசிபி சார்” என்று கன்னம் பிடித்து ஆட்டி கொஞ்சினாள் வைதேகி.

“ஹேய் தேவிம்மா என்ன சொல்ற? இதை சொல்றதுக்கு தான் கால் பண்ணியா?”, அவன் குரலில் குதூகலம் தொனித்தது.

“ஆமா ஆனா நீங்க தான் எடுக்கலையே எந்நேரமும் பிஸியா இருக்குறவரு அதான் ஃபோனை கட் பண்ணிட்டீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி தான் ஆசையா பாக்குறது பேசுறது இன்னும் என்னென்னவோ…” என்றவள் வார்த்தை செல்லும் திசை உணர்ந்து நிறுத்தி கொள்ள.

“என்ன? ‘இன்னும் என்னென்னவோ..?’ சொல்றதை முழுசா சொல்லிரு தேவிம்மா” என்றான் மந்தகாசமாய் சிரித்தபடி.

“ம்ம்ம் ஆசை தான். கல்யாணத்துக்கு முன்னாடி அப்டியே உருகி உருகி லவ் பண்ணிங்க பாருங்க வரிசையா எடுத்து விடுறதுக்கு” என்று நொடித்து கொண்டவள்,

“அழுக வச்சாலும் அதுல ஒரு விதமான கேரிங்க் இருந்துச்சு அந்த அக்கறை வேணும் வேணும்னு மனசு ஏங்குச்சு. ஆனா இப்போ அப்டியில்ல கண்டுக்கவே மாட்டிக்கிறீங்க மாமா. விஷயத்தை சொல்ல எவ்ளோ ஆசையா ஃபோன் பண்ணேன் கட் பண்ணிட்டீங்க” என்று கூம்பிய முகத்துடன் சொல்ல.

“சாரிம்மா வேணும்னு கட் பண்ணல கமிஷ்னர்கிட்ட பேசிட்டு இருந்தேன் நீ கால் பண்ணி என்னைக்காவது கட் பண்ணிருக்கேனா? இன்னைக்கு ஒரு நாள் நடந்த விஷயத்தை வச்சு ஜட்ஜ் பண்ணாத.

எனக்கு தெரியுமா? நீ இந்த விஷயம் சொல்றதுக்கு தான் கால் பண்றன்னு. சார்கிட்ட பேசிட்டு வெளிய வந்ததும் உனக்கு கால் பண்ணேன் சுவிட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு அப்றம் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். ஒரு கேஸ் விஷயமா வெளிய போயிருந்தேன் அதான் வீட்டுக்கு வர லேட் ஆகிருச்சு தேவிம்மா” என்று அன்றைய நாளின் நிகழ்வுகளை விளக்கியவன் அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து.

“இப்பவும் இந்த தேவி மேல எனக்கு அக்கறை இருக்கு முன்னவிட அதிக அக்கறையோட காதலோட தான் இருக்கேன் எல்லாம் மனசுக்குள்ள இருக்கு அப்பப்ப வெளிய வரும். இன்னொரு முறை அக்கறை இல்ல கண்டுக்க மாட்டிங்கிறேன்னு சொல்லாத தேவிம்மா கஷ்டமா இருக்கு” என்றான் வருத்தம் தேய்ந்த குரலில்.

கணவனின் வாடிய முகம் அவள் மனதிற்குள் சங்கடத்தை உண்டு பண்ண “சாரி விணு எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலை.அதுவும் இந்த விஷயத்துல என்ன நானே கன்ட்ரோல் பண்ண முடியலை.புத்திக்கு தெரியிது எதார்த்தம் இதுவா தான் இருக்கும்னு ஆனா மனசு கேட்க மாட்டிங்கிது அப்பவே பாக்கணும் பேசனும்னு அடம் பண்ணது.

சொல்லி காட்டணும்னு சொல்லலை மாமா மிஸ்டுகால் பாத்தும் போன் பண்ணலையேன்ற கோபத்துல வார்த்தை வேகமாக வந்துருச்சு.

ஃபோன் ஆஃப் ஆனதேயே மறந்துட்டேன். அந்த கேப்ல நீங்க கால் பண்ணது எனக்கு எப்டி தெரியும்? சாரி இன்னொரு முறை இந்த மாதிரி பேச மாட்டேன்” என்று அவனின் கரம் பற்றி கொண்டாள் வைதேகி.

மென்மையாக வருடி கொண்டே,

“ஃபோன்ல சொன்னா நல்லா இருக்காதுன்னு தான் மறுபடியும் உங்களுக்கு கால் பண்ணலை உங்க ஃபேஸ் எக்ஸ்ப்ரசன் எப்டி இருக்கணும்னு பாக்க ஆசையா இருந்துச்சு விணு அதான் நேர்ல சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்” என்றவள் காலையில் நடந்த நிகழ்வை விளக்கி “மலர் தான் விட்டுட்டு போனா” என்றவள் அவன் முகம் பார்க்க.

விழிகள் கலங்கி நீர் வடிய தயராய் இருந்தது “மாமா” என்ற விளிப்பில், சட்டென அவள் மடியில் தலை வைத்து கொண்டவன் “ரொம்ப தங்க்ஸ் தேவிம்மா எதிர்பார்க்கவே இல்ல. என்ன பேசுறதுன்னு கூட தெரியல நா அப்பா ஆக போறேன் நமக்கு குழந்தை பிறக்க போகுது” என்று உவகையில் கண்ணீர் வடித்தவன் வயிற்றோடு முகம் புதைத்து தன் மழலைக்கு அவள் உதரம் வழியாக முத்தமழை பொழிந்தான் விஷ்ணு.

பேரின்பம் மழலை செல்வம். அச்செல்வம் உருவான சேதியில் மற்றதெல்லாம் மறந்து போக இன்பத்தில் திளைத்தான். காவல் துறையில் வாங்கவிருக்கும் விருதை விட வாழ்க்கை துறையில் அவன் வாங்கவிருக்கும் தந்தை என்னும் பட்டம். கோடி மின்னல்கள் ஒன்றாய் வெடித்து ஊர்வலம் அழைத்து செல்வது போன்ற பரவசம் எழுந்தது அவனுள்.

“எந்திரிங்க மாமா மொத்தத்தையும் குழந்தைக்கே கொடுத்துட்டா எப்டி? எனக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க” என்று அவன் முதுகில் லேசாய் தட்டி வீம்புடன் கேட்க.

அவள் முகத்தை ஏறிட்டவன்

“உனக்கில்லாததா நிறையவே இருக்கு தேவிம்மா “என்று அதற்காகவே காத்திருந்தவன் போல முகமெங்கும் காட்டிவிட்டான் இதழ் தீண்டலை.

வஞ்சமில்லாமல் வாஞ்சையுடன் வாங்கி கொண்டவள் “போதும் மாமா போதும். மொத்தத்தையும் இப்பவே கொடுத்துறாதீங்க அப்பப்ப கொடுக்க கொஞ்சம் மிச்சம் வைங்க” என சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அனுசரணையாய் அணைத்து கொண்டு பரிவாக தலையை வருடி கொடுத்தான் ஆடவன்.

“எனக்கொரு ஆசை அதை நிறைவேத்துவிங்களா மாமா?”, சட்டையின் பொத்தனை திருகி கொண்டே கேட்டாள் வைதேகி.

“என்னனு சொல்லு தேவிம்மா நீ கேட்டு மாட்டேன்னு சொல்லிருக்கேனா? ஆசைன்னு சொன்ன பிறகு முடியாதுன்னு சொல்வேனா அதுவும் இந்த மாதிரியான நேரத்துல. சொல்லு என்ன பண்ணனும்?” என்று ஊக்கினான் விஷ்ணு.

“நம்ம குழந்தையை முதல் முதலா சாவித்ரி சித்தி தான் வாங்கணும் மாமா. அவங்க கையால தொட்டு தூக்கின பிறகு தான் மத்தவங்க!, ஏன்? நீங்களே வாங்கணும்” என்றவள் சிரம் நிமிர்த்தி அவன் விழிகளை பார்க்க, ‘ஏன்?’என்ற கேள்வியை தங்கியிருந்தது விஷ்ணுவின் பார்வை.

அவன் பார்வையை புரிந்து கொண்டவளின் ஆசைக்கு காரணமான சாவித்ரியின் கலங்கிய விழிகள் நினைவில் எட்ட, கண்மூடி திறந்தவள் சிறு மௌனத்திற்கு பின் பேச தொடங்கினாள் “இது இப்போ வந்த ஆசையில்ல காலேஜ் படிக்கும் போதே மனசுல ஆழமா பதிய வச்ச ஆசை விணு” என்று வேதனை நிரம்பிய குரலில் தொடர்ந்தாள்.

“வாய்விட்டு சிரிக்கிறவங்களை பாக்கும் போது நமக்கு தோணும் எந்த கவலையும் இல்லாத மனுஷங்கன்னு. ஆனா.. அந்த சிரிப்புக்கு பின்னாடி இருக்குற வலியும் வேதனையும் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அந்த வேதனையை சித்திகிட்ட நா பாத்தேன் மாமா.

சிரிப்போட எத்தனையோ பேச்சுகளை சித்தி கடந்து வந்துருக்காங்க இதுவரைக்கும் சித்தப்பாகிட்ட கூட சொன்னது இல்ல. சொன்னா வருத்தப்படுவாறுன்னு, சொல்லி ஆறுதல் தேட கூடிய எத்தனையோ விஷயங்களை மறைச்சிருக்காங்க சித்தி” என்று கரகரப்பான குரலில் கூறியவளை அமைதியாய் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.

“குழந்தை இல்லாதவங்க ஒன்னும் அற்ப பிறவி இல்லையே விணு அவங்களும் மனுஷங்க தானே? நிறைவா இருந்தா தான் சமூகம் நல்ல காரியம் செய்ய ஏத்துக்குமா? நிறைவுன்றது உடம்புல இல்ல. மனசுலயும் செய்யிற செயல்லையும் இருக்குன்னு ஏன் புரிஞ்சிக்க மாட்டிங்கிறாங்க.

குழந்தை இல்லாம போனது ஒன்னும் அவங்களோட குறை இல்லையே. மழை பெய்யிறதும் குழந்தை பிறக்குறதும் மகாதேவனுக்கே தெரியாது? அப்டி இருக்குறப்போ அட்வைஸ்ன்ற பேர்ல ஆசிட் மாதிரி வார்த்தைகளை வீசுறதுக்கு மனுஷங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று ஆதங்கத்துடன் கேட்டவளின் விழிகள் நீரை உகுத்தன.

Advertisement