Advertisement

கலவரம் நிறைந்த முகத்துடன் அறை வாசலில் நின்றிருந்த வைதேகியை கண்டதும் ஓடி சென்று அணைத்து கொண்டவள் தேம்பி அழுதபடிவைத்தி க்கா தாலி கட்டிட்டு எங்க வேணாலும் போய்க்கோன்னு சொல்லி விட்டுட்டு போயிட்டாரு க்காஎன்று அழுகையின் ஊடே திக்கி திக்கி பேச.

தாலி கட்டிட்டு விட்டுட்டு போயிட்டாறா யாருடா அது? சொல்லு இப்போவே அவன அரஸ்ட் பண்ணி ஜெயில்ல வைக்கிறேன்என்று உடல் விறைக்க கோபத்தில் உறுமினான் விஷ்ணு.

வேற யாரு உங்க பிரெண்ட் தான் ண்ணாஎன்றதும்யாரு துவாரகாவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்க.

ஆமாஎன்று தலையாட்டியதில் மூவரும் பேயறைந்தார் போல திகைத்து நின்றனர்.

அதிர்ச்சியில் நா வறண்டு போக எச்சிலை கூட்டி விழுங்கியவன்என்னம்மா சொல்ற அவனா உனக்கு தாலி கட்டுனது?” என்று நம்ப முடியாத பாவனையில் விஷ்ணு மீண்டும் கேட்க.

ஆமா ண்ணா அவரு தான். கண்ண மூடி சாமி கும்பிட சொல்லி எனக்கே தெரியாம கழுத்துல தாலி கட்டிட்டு, எங்க வேணா போன்னு சொல்லிட்டு போயிட்டாருஎன்றாள் விசும்பலுடன் கண்களை துடைத்து கொண்டே.

விசாலாட்சிக்கு அளவற்ற நம்பிக்கை புதல்வனின் மீது, இப்படியொரு காரியத்தை அவன் செய்திருப்பானா? என்ற ஐயம் எழுந்ததே தவிர செய்திருப்பான் என்று எண்ண தோன்றவில்லை, பெண்களின் விஷயத்தில் அத்தனை கட்டுக்கோப்புடன் அவர் அறிவுரைகளை கேட்டு அவர் அறிந்து வளர்ந்தவனாயிற்றே. 

சஞ்சும்மா சொல்றதை புரியிற மாதிரி விவரமா சொல்லுடா அரைகுறையா சொன்னா நாங்க என்ன மாதிரி அர்த்தம் எடுத்துகிறதுஎன்று விசாலாட்சி ஒருவித பயத்துடன் கேட்க

என்ன பஸ் ஏத்தி விட்டுட்டு வறேன்னு தானே உங்ககிட்ட சொன்னாரு அத்தை. நானும் அப்டி தான் நினைச்சிட்டு இருந்தேன் வடபழனி முருகன்  கோவில் போற வரைக்கும்“. 

வடபழனியா! அங்க எதுக்கு கூட்டிட்டு போனான்?” என்று விசாலாட்சி குழப்பத்துடன் கேட்க.

அவரோட விருப்பத்தை சொல்றதுக்காக தான் கோவிலுக்கு கூட்டிட்டு போனாரு அத்தை, கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாரு ப்ச் நான் தான் அவரு மேல இருந்த கோபத்துல பிடிக்கலைன்னு சொல்லி கொஞ்சம் பிகு பண்ணேன், என்ன நினைச்சாறுன்னு தெரியலை கண்ண மூடி சாமி கும்பிட சொல்லி தாலி கட்டிட்டு, எங்க வேணாலும் போன்னு சொல்லிட்டு அங்கயே என்ன விட்டுட்டு போயிட்டாரு அத்தைஎன்று நடந்ததை சுருங்க விளம்பியவள் மூவரின் முகம் பார்க்க ஈ ஆடவில்லை. 

அவள் முடிவில் மாற்றமில்லை என்றதும் கண்களை மூடி வேண்டி கொள்ளுமாறு கூறியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நீண்ட யோசனைக்கு பின் எடுத்த தீர்மானத்தை செயல்படுத்தினான் துவாரகேஷ். 

சட்டை பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த தாலியை எடுத்து அவள் கண்களை திறவும் முன்னே அவசரமாக கட்டிவிட்டு

இப்போ எங்க வேணாலும் போ சரவெடிஎன்று அசரீரியாய் ஒலித்த அவன் குரல் கேட்டு கண் திறந்து அவன் முகம் பார்க்க இமைகள் ஈரத்தை தாங்கி நின்றன.

எதுக்கு இப்போ கண்கலங்குறாரு?’ என்று எண்ணமிடும் போதே கடந்து செல்வோரின் ஊசி துளைக்கும்  பார்வையில் அன்னிச்சையாய் உடல் கூச்சத்தை பூசி கொள்ள, கூச்சத்தில் நெளிந்தவள் அசௌகரியமாய் கழுத்தில் உறுத்திய ஏதோ ஒன்றை கையால் தடவி எடுத்து பார்த்தாள். பளீச்சென்று பல்லை காட்டியது அவன் பூட்டிய மாங்கல்யம். 

மாங்கல்யத்தை கழுத்தில் தாங்கிய அந்த தருணம்  பேதையின் நெஞ்சம் புளகாங்கிதத்தில் கூத்தாட. மறைக்க முயன்ற கண்ணீரும் கண நொடியில் தழும்பி தத்தளித்து கொண்டு கன்னத்தில் வடிய தொடங்கியது. அதிர்ச்சியின் உச்சத்தில் நம்ப முடியாத பார்வையில் எதிரில் இருந்தவனை பார்த்தாள் சஞ்சளா.

மண்ணை தின்று தாயிடம் மாட்டி கொண்ட குழந்தையை போல கண்கள் கலங்கி நின்றவன்கோவை போனாலும் சரி கோவா போனாலும் சரி உனக்கு எங்க போக தோணுதோ போ சரவெடி, ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. எத்தனை வருஷம் ஆனாலும் சரி உனக்காக இங்க ஒருத்தன் காத்துகிட்டு இருப்பான் அதை மட்டும் மறந்துடாத“, கண்களை துடைத்து கொண்டவன் மேலே பேசலானான். 

இது வரைக்கும் யாரை பாத்தும் வராத உணர்வு உன்ன பாத்ததும் வந்துச்சு. பர்ஸ்ட் டைம் உன்ன பாத்தப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ எனக்கானவன்னு உன்கிட்ட பேசுன மாதிரி யார்கிட்டயும் சீண்டி பாத்து சிரிச்சு பேசுனது இல்லஎன்றவனின் இதழில், அரும்பிய மலராய் மென்னகை ஒட்டி கொண்டது. இனி பூட்டி வைத்து பயன் இல்லை என்று மனதில் உள்ளதை கொட்ட தொடங்கினான்.  

உன்னோட கோபம் எனக்கு புரியாம இல்லை ஆனா.. மேல பேசி விளக்கம் கொடுத்து புரிய வைக்க எனக்கு தோணலை சரவெடி, என்மேல உனக்கு உரிமை இருக்கு ஆனா அதை நீ தான் பயன்படுத்திக்கலை, என்ன விரும்ப தெரிஞ்ச உனக்கு உரிமையா நா உங்களை விருப்புறேன்னு சொல்ல வாய் வரலை அவ்ளோ வீம்பு, பிடிவாதம்என்றவன். 

இது சரியா தப்பான்னு எனக்கு தெரியலை ஆனா என்னவிட்டு நீ போக கூடாதுன்னு தோணுச்சு அதான் இந்த மாதிரி பண்ணேன் இதுக்கும் நீ தான் காரணம்என்று அவள் முகத்தை பார்க்க கண்கள் இடுங்க புரியாத பார்வையில் ஏறிட்டாள் பாவையானவள்.

நேத்து நீ பண்ண காரியம் தான் இந்த மாதிரி ஒரு முடிவெடுக்க வச்சது, அப்போ உரிமை இல்லாதவனா இருந்தேன் இப்போ உரிமையோட சொல்றேன் அத்தைக்கு நா பண்ணது கடமை. அதுக்கு கைமாறு பண்றேன் நன்றி கடனை தீர்க்குறேன்னு சொல்லி முட்டாள் தனமா அடுத்தவங்க மனசார செஞ்ச வேலைய அவமானப்படுத்தாத, சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இனி நீ தான் முடிவெடுக்கணும். எங்க வேணாலும் போ உன்னோட முடிவுல நா குறுக்க நிக்க மாட்டேன், அதே நேரம் என்ன பத்தியும் கொஞ்சம் கன்சிடர் பண்ணு நா கிளம்புறேன்என்று முடிவெடுக்கும் பொறுப்பை அவளிடம் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து சிட்டாய் பறந்துவிட்டான் துவாரகேஷ்.

நின்றது நின்றபடி கால்கள் தரையில் பசையிட்டு ஒட்டியது போல அவன் சென்ற திசையை வெறித்து கொண்டிருந்தவள் கடந்து செல்வோருக்கு காட்சி பொருளாய் நிற்பதை உணர்ந்து கோவில் படியில் சென்று அமர்ந்தாள். வீம்பு செய்த மனம் குதுகலித்தது. வேகமாக பேசிவிட்டு சென்றவன் எப்படியும் அழைத்து செல்ல வருவான் என்று காத்திருக்க. 

காத்திருப்புகள் நீண்டு கொண்டே சென்றனவே தவிர அவன் வரவில்லை, நேரம் செல்ல செல்ல அவர் வரமாட்டார் என்ற எண்ணமே அழுகையை தோற்றுவிக்க மற்றவர்களின் பரிதாப பார்வைக்கு உள்ளாகாமல் அங்கிருந்து ஆட்டோ பிடித்து இல்லம் வந்து சேர்ந்தாள் சஞ்சளா. 

விழிகளால் நாலாபுறமும் அலசி ஆராய்ந்தவாறே தவிப்புடன் வீட்டின் உள்ளே நுழைந்தவள்  விசாலாட்சியின் கேள்வியை புறம் தள்ளிவிட்டு அவன் அறைக்கு சென்று நோட்டம் விட துவாரகேஷ் இல்லை. அடக்கி வைத்த கண்ணீர் மொத்தமும் சரஞ்சரமாய் வடிய துவங்கியது. நிதானித்து அதற்கு பதில் கூறும் திடமும் மனமும் இல்லாமல் தோல்பாவையாய் துவண்டு போனாள் கன்னிகையானவள். கேள்வி கேட்பவரை பொருட்படுத்தாது கோபமாக அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டவளுக்கு கோபம், அத்தனை கோபம். தாலி கட்ட தெரிந்தவனுக்கு உரிமையுடன் அழைத்து செல்ல மனம் வரவில்லை என்ற கோபம். 

சஞ்சளாவிடம் பேசிவிட்டு இல்லம் செல்லாமல் நேராக காவல் நிலையம் சென்று அமர்ந்து கொண்டான் துவாரகேஷ். அருள் ஜோதி கூட அவனின் வாட்டம் நிறைந்த முகத்தை கண்டு என்ன ஏது என விசாரிக்க. ஒன்றுமில்லை என்று உரைத்துவிட்டானே தவிர, மனம் ஒரு நிலையில் இல்லை. விஷயம் தெரிந்த நிமிடம் உறவுகள் நட்புக்களின் மனநிலை என்னவாக இருக்கும் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான் துவாரகா.

மகனின் செயலில் விசாலாட்சியின் இதயம் உடைந்து பலம் இழந்து போக, மொத்த சக்தியும் வடிந்து போனது போல யாரிடமும் பேசாமல். பேச மனமில்லாமல் அமைதியாக எழுந்து சென்று ஹாலில் அமர்ந்து கொண்டார். 

மாமாஎன்று விஷ்ணுவின் தோளில் இடித்த வைதேகி

ஆன்ட்டி ரொம்ப ஃபீல் பண்றாங்க, துவாரகா அண்ணா இப்டி ஒரு காரியம் பண்ணுவாறுன்னு அவங்க நினைச்சு கூட பாக்கலைஎன்று வருத்தத்துடன் சொல்ல.

அண்ணா அவருக்கு போன் போட்டு எங்க இருக்காருன்னு கேளுங்களேன் கண்கலங்கி போனாரு. எனக்காவது ஆறுதல் சொல்ல இங்க ஆள் இருக்கீங்க அவருக்கு யாருமே இல்ல, தப்பு பண்ணிட்டோமேன்னு தவிச்சுட்டு இருப்பாருஎன்று அந்நிலையிலும் அவன் மனதை எண்ணி பரிவு காட்டி பேசினாள் சஞ்சளா.

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடமான பார்வையை பகிர்ந்து கொண்டபடிதேவிம்மா நீ போய் ஆன்ட்டி பக்கத்துல இரு நா அவனுக்கு போன் பண்ணி வர சொல்லுறேன்என்று விஷ்ணு கைபேசியுடன் எழுந்து சென்றுவிட. 

சஞ்சளாவும் வைதேகியும் விசாலாட்சியின் அருகில் சென்று வலிக்கு மருந்தாக ஆறுதல் தரும் விதமாய்  அமர்ந்து கொண்டனர். வேதனை படிந்த முகத்தை பார்க்க சற்று பரிதாபமாய் இருந்தது இருவருக்கும் அந்த தாயின் மனநிலை என்னவென்று இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆறுதல் கூறி ஆசுவாசமடைய செய்யும் விஷயம் அல்லவே மகனின் செயல் இருந்தாலும் முயற்சி செய்து கோபத்தை சற்று தணிக்கலாம் என்ற எண்ணத்தில் கண்களில் நீர் கோர்த்து தரையை வெறித்து கொண்டிருந்தவரின் தோளில் கரம் பதித்த சஞ்சளாஅழுகாதீங்க அத்தை மாமா வேணும்னு பண்ணலை எல்லாத்துக்கும் நான் தானே காரணம் அவர தப்பா நினைச்சிறாதிங்க அத்தைஎன்று இறைஞ்சும் குரலில் மன்றாடியவளை உணர்ச்சியற்று பார்த்தவர் எதுவும் பேசவில்லை தலை குனிந்து கொண்டார் விசாலாட்சி.

காவல் நிலையம். இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து  அமர்ந்திருந்தான் துவாரகேஷ். இந்நேரம் போயிருப்பாளா இல்ல அங்கயே இருப்பாளா?’, அவன் நினைவெல்லாம் அவளை சுற்றியே இருக்க.

சார்என்ற தாழ்ந்த குரலில் நினைவு கலைத்தவன் விழி திறந்து என்னவென பார்க்க. அருள் தான் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

என்ன அருள்?” 

அப்ப இருந்து உங்க போன் ரிங் ஆகிட்டே இருக்கு ஏதாவது அவசரமா இருக்க போகுது சார் எடுத்து பேசுங்க“, என்ன சொல்வாரோ என்ற தயக்கத்துடன் கூறிவிட்டு நகர்ந்து விட.

அசுவாரஷ்யாமாய் அலைபேசியை எடுத்து பார்த்தவனின் விழிகள் திகைப்பில் விரிந்தது, தவறிய அழைப்புகள் பத்தை கடந்திருக்க அய்யோ.. ஒருவேளை விஷயம் தெரிஞ்சிருக்குமோ?’ என்ற சந்தேகம் எழுந்து பய பந்துகளை அடிவயிற்றில் சுழற்றி வியர்வை துளிகளை தருவித்தது. ஒரு வித படபடப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் விஷ்ணு என்னும் முன்பே.

டேய் துவாரகா சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை, என்னாச்சுன்னு தெரியலை உன்ன பாக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்கஎன்று பதட்டமும் பயமும் அடங்கிய குரலில் பரபரப்புடன் சொல்லிவிட்டு அணைப்பை துண்டித்துவிட.

மறுமுனையில் கூறிய செய்தியை செவிகள் மூளைக்கு உணர்த்தி உணர்வுகளை கொண்டு வர ஒரு கணம் பிடித்தது. மரத்து போய் சுரனை இல்லாமல் சில நிமிடம் நின்றவன் அருள் ஜோதியிடம் கூறிவிட்டு மரத்து போன கால்களுக்கு வேகம் கொடுத்து என்னவோ ஏதோ என்ற பரிதவிப்புடன் வேகமாக இல்லம் விரைந்தான் துவாரகேஷ்.

Advertisement