Advertisement

ம் நாலுமணிக்கு தானே கொண்டு போய் விடுறேன் வீட்டுல தங்க வச்ச எனக்கு கொண்டு போய் விடுறதுல ஒன்னும் கஷ்டமில்லஎன்று உணர்ச்சியற்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட.

உதட்டை சுளித்து கொண்டு வேகமாக அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள் சஞ்சளா.

கணக்கு புத்தகத்தில் கவனத்தை பதித்திருந்த வைதேகி குறிப்பெடுத்துவிட்டு ஒருமுறைக்கு இருமுறை தனக்கு தானே கொண்டு வந்த விடைக்கான கணக்குகளை ஒத்திகை பார்த்து கொண்டவள், அருகில் யோசனையோடு அமர்ந்திருந்தவனை புருவம் சுருங்க பார்க்க. தீவிர சிந்தனையில் முழ்கி இருந்தான் விஷ்ணு.

என்ன மாமா யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்ற மனையாளின் குரலில் சிந்தனை கலைந்தவன்.

ப்ச் எல்லாம் துவாராக சஞ்சளாவ பத்தி தான் தேவிம்மா, இப்போ தான் ஒரு ஜோடி சரியாகி நல்ல முடிவை சொல்லிருக்காங்கன்னா இப்போ இவங்க ரெண்டுபேரும் ஆரம்பிச்சிட்டாங்க என்ன பண்றதுன்னு தெரியலை!என்று கவலையுடன் சொல்ல. 

நானே அதை பத்தி கேட்கலாம்னு இருந்தேன் நாளைக்கு அவ ஊருக்கு கிளம்புறா என்ன பண்ண போறீங்க? நாமளே சொல்லிறலாம்னு சொன்னதுக்கு சரி வராதுன்னு சொல்லிட்டீங்க, துவாரகா அண்ணாகிட்ட சஞ்சுவை பத்தி பேசுறேன்னு சொன்னிங்களே பேசுனிங்களா?”. 

எங்க அவ பேச்செடுத்தாலே கழுவுற மீன்ல நழுவுற மீனாட்டம் பிடி கொடுக்காம பேசிட்டு போறான். ரெண்டு நாளா நானும் அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி பண்றேன் என்ன சொல்ல வறேன்னு கேட்டா தானே!, போனா போயிட்டு போறான்னு அசால்டா சொல்றான்என்று சோர்ந்து போன குரலில் கூற.

இப்போ என்ன பண்ண போறதா உத்தேசம்? அவங்களே சொல்லிக்குவாங்கன்னு நாம நினைக்கிறது தப்பு மாமா. நாளைக்கு துவாரகா ண்ணா வீட்டுக்கு போய் நாமளே விஷயத்தை சொல்லிறலாம் அது தான் சரிஎன்று திண்ணமாய் உரைத்திட. 

நீ சொல்றதும் சரி தான், ஆனா..விஷயத்தை மட்டும் சொல்ல கூடாது தேவிம்மா அவங்களுக்கே தெரியாம ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்கணும் அப்ப தான் நல்லா இருக்கும்என்று விஷ்ணு மீண்டும் சிந்தனையில் மூழ்க.

வைதேகியின் அலைபேசி சன்னமாய் ஒலி எழுப்பியது. கண்ணாடி டேபிள் மீதிருந்த அலைபேசியை எடுத்து பார்த்தவள், திரையில் மின்னிய பெயரை கண்டு மெலிதான புன்னகை பிறக்கவிஜி அண்ணா தான் கால் பண்றாரு விணுஎன்று உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.

எடுத்த எடுப்பிலேயேவைதேகி விஷ்ணு இருக்கானா?” என்ற  காட்டம் நிறைந்த குரலில் 

திருத்திருவென விழித்தவள். 

இருக்காரு ண்ணா என்னாச்சு கோபமா பேசுற மாதிரி இருக்குஎன்று அருகில் இருந்தவனை பார்த்தாள்.

கோபம் இல்லம்மா அவனுக்கு ஃபோன் பண்ணேன் நாட் ரீச்சபல்ன்னு வருது, ஒரு விஷயம் சொல்லலாம்னு தான் ஃபோன் பண்ணேன் அவன் இருந்தா கொஞ்சம் கொடும்மாஎன்றான் விஜயன் தணிவான குரலில்.

விஷ்ணுவிடம் கைபேசியை நீட்ட வாங்கி காதில் வைத்தவன்என்ன விஜி சொல்லு?”.  

ஃபோன எங்கடா வச்சுருக்க எத்தனை தடவை ட்ரை பண்றது ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்கு தான் கால் பண்ணேன்.நாளைக்கு நானும் வைஷாலியும் கிளம்பி வர்றோம் அநேகமா பத்து மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருவோம், அதை சொல்றதுக்கு தான் கால் பண்ணேன் மத்த விஷயங்களை நேர்ல வந்து சொல்றேன்என்று படபடவென பேசியவன். 

துவாரகா உன்கூட தான் இருக்கானா..விஷ்ணு?அவனுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டிங்கிறான்“. 

வீட்டுக்கு போயிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். நீன்னு இல்ல இப்போதைக்கு யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்டான். அவன பத்தி தான் நானும் வைதேகியும் பேசிட்டு இருந்தோம், நீ தான் நாளைக்கு வர்றயே நேர்ல பேசிக்கலாம் விஜிஎன்று ஒரு சில விஷயங்களை பேசிவிட்டு வைத்தவன் வைதேகியை பார்த்தான்.

சிந்தனை குழப்பம் அனைத்தும் மறைந்து ஒருவித பிரகாசத்துடன்ஏன் தேவிம்மா இப்டி பண்ணா என்ன? விஷயத்தை யாராவது ஒருத்தர்கிட்ட சொல்லிருவோம் அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், கல்யாண விஷயத்தை பத்தி பேச தான் விஜி வர்றான்னு நினைக்கிறேன், அவனுக்கு கல்யாணம் நடக்குற அதே நேரத்துல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்திறலாம் ரெண்டு பேர்கிட்டயும் சொல்ல வேணாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்என்று எண்ணத்தில் பிறந்த உதயத்தை மனையாளிடம் உற்சாகத்துடன் உரைக்க.

ம் சூப்பர் மாமா அப்டியே பண்ணிறலாம்என்று வியந்து பாராட்டியவள் தயங்கிய பார்வையை தாங்கி கொண்டுஅப்டியே ஐடியா கொடுத்த எனர்ஜியோட ஒரு காஃபி போட்டு கொடுத்தா நல்லா இருக்கும்“, என்ன சொல்வானோ என்று வார்த்தைகளை இழுத்து நிறுத்த.

சாப்பிட போற நேரத்துல காஃபியா?” என்று கண்டித்தவன்ரொம்ப அடிக்ட் ஆகிட்ட தேவிம்மா நோ காஃபி. நோட்ஸ் எடுக்க வேண்டியது இருந்தா அந்த வேலைய பாரு இன்னைக்கு டின்னர் நானே பண்றேன், அதுக்கு முன்னாடி போய் குளிச்சிட்டு வறேன்என்று விஷ்ணு எழுந்து அறைக்குள் சென்றுவிட. 

உதட்டை பிதுக்கி சிணுங்கியவள்இவருகிட்ட கேட்டதுக்கு நாமளே போட்டு குடிச்சிருக்கலாம்என்று  முணங்கியவாறு வேறு வழியின்றி தண்ணீரை குடித்துவிட்டு பாடப்புத்தகத்தில் கவனத்தை செலுத்தினாள் வைதேகி. 

அவனிடம் அவள் தேடும் நேசத்தில் தான் அவன் அவளை தேடி கொண்டிருந்தான். அலைவரும் போது வெளிப்படும் கிளிஞ்சல்கள் அலை நீர் வடிந்த பின் மண்ணுக்குள் சென்று மறைந்து கொள்ளும். அது போலவே இதுவரை தன் மேல் அவள் கொண்ட நேசத்தை பார்த்தவன் மறைத்து கொண்ட காதலை அவளே வெளிப்படுத்த வழிவகை தேட, இரவெல்லாம் சிந்தனைகள் நீட்சியாக சென்றதே தவிர விடை கிடைக்கவில்லை ஆனால், வழி கிடைத்தது. புது உற்சாகம் பிறந்தது போல  தலையணையை அணைத்து கொண்டு விடியலை வரவேற்க கண்விழித்து தயராய் காத்திருந்தான் துவாரகேஷ். 

விடிந்தும் விடியா வேளையில் எழுந்து கொண்ட சஞ்சளா குளித்து முடித்து

வெள்ளை நிற குர்த்தியில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிறத்திலான பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டு வடிவமைக்கபட்ட ஆடையின் மேல், அதே இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் கோடுகள் இடபட்ட மேல் சட்டையை போட்டு கொண்டு தலை வாரி பொட்டிட கூட மனமில்லாது ஏனோ தானோவென கிளம்பி அறையில் இருந்து ட்ராலியை தள்ளி கொண்டு வெளியே வந்தாள்.

இருக்கும் நிமிடமே இறுதி இதில் எதற்கு வீண் பிடிவாதம்என்று மனம் இடித்துரைத்தாலும் எடுத்த முடிவில் இருந்து சற்றும் தளரவில்லை அவள்.

அவளுக்கு நேர்மாறாக அதீத உற்சாகத்துடன் வெள்ளை நிற காட்டன் சட்டையும் அதற்கு இணையாக, எடுத்துக்காட்டும் வகையிலான நீல நிற ஜீன்ஸில் அட்டகாசமாய் கிளம்பி தயராய் வாசலில் நின்று கொண்டிருந்தான் துவாரகேஷ்.

அவன் கிளம்பி நின்ற தோரணையை பார்க்க பார்க்க அடிவயிற்றில் திரவகம் சுரந்தது அவளுக்கு. புது மாப்பிள்ளைன்னு நினைப்பு  கிளம்பி நிக்கிறதை பாருஎன்று ஆத்திரத்துடன் எண்ணமிடும் போதேசஞ்சும்மாஎன்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க.

பூஜை அறையில் இருந்து கையில் திருநீறு தட்டுடன் வெளிப்பட்டார் விசாலாட்சி. இனி இத்தகைய பாசம் கிட்டுமா என்ற நினைவே வலியை கொடுக்க கண்ணீரை அடக்கி கொண்டு இயல்பாய் நிற்க முயன்றால் பதுமையான பாவையானவள்.

சஞ்சளாவின் நெற்றியில் குங்குமமிட்டுபாத்து போயிட்டு வாடாம்மா போற இடத்துல சூதானமா இருக்கணும் சரியாஎன்று எச்சரிக்கை செய்தவர் கலங்கிய மனதுடன் அவள் முகத்தை பார்த்தார். 

இப்பவும் நேரமிருக்கு மனசிருந்தா கொஞ்சம் யோசிடா, உன்ன அனுப்ப எனக்கு மனசு வரல போறப்ப தடை சொல்ற மாதிரி பேச கூடாதுன்னு தான் எதையும் வெளிப்படையா சொல்ல முடியாம மனசை அடக்கிக்கிட்டு இருக்கேன்

அவசரத்துல எடுக்கிற முடிவுகள் எப்பவும் சரியா இருக்காது சஞ்சும்மா பஸ் ஏறுற வரைக்கும் நேரம் இருக்கு யோசி. இந்த வீட்டை விட்டு, ஊர விட்டு, நெருங்குன உறவுகளை, மனசுக்கு பிடிச்சவங்களையெல்லாம் விட்டுட்டு, எங்கயோ கண்காணாத இடத்துக்கு போகணும்மானு இன்னோரு முறை நிதானமா யோசிடாஎன்று இறைஞ்சும் குரலில் போக வேண்டாம் என்பதை நேரடியாக கூறாமல் மறைமுகமாக புதல்வனிடம் ஒரு பார்வையை வைத்து கொண்டே சொல்ல.

பதில் பேசவில்லை அவள். துறுத்தி கொண்டு நிற்கும் கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டு கொண்டிருந்தாள். 

ப்ச் ம்மா.. நேரமாச்சு பஸ் வீட்டுக்கே வரும்னு நினைப்பா சீக்கிரம்என்று சோபாவில் சட்டமாய் அமர்ந்து கொண்டு துவாரகேஷ் அவசரபடுத்த.

மகனின் பேச்சில் கோபமடைந்த விசாலாட்சி எதையும் காட்டமுடியாது பல்லை கடித்தபடி அமைதியாக இருந்தார். மறுபரிசீலனை செய்யலாம் என்ற அவளது எண்ணம் அவன் வார்த்தைகளில் தகர்ந்து போய்விட உடல் விரைக்க உள்ளத்தின் திடத்தை தேகத்தில் காட்டியவள்நா கிளம்புறேன் அத்தை உடம்பை பாத்துக்கோங்கஎன்று வேகமாக உரைத்துவிட்டு ட்ராலியை தள்ளி கொண்டு விறுவிறுவென சஞ்சளா வெளியேறி விட.

பைக் சாவியை ஆள்காட்டி விரலில் சுழற்றியபடிம்மா போய் விட்டுட்டு வறேன்என்ற மகனை புரியாத புதிராய் பார்த்தவர்நில்லுடா!என்று வேக நடை போட்டு அவன் அருகில் வந்து.

என்ன தாண்டா நினைச்சிட்டு இருக்க அவள அனுப்பி விடுறதுலயே குறியா இருக்க. நீயும் சொல்ல மாட்ட என்னையும் சொல்லவிட மாட்ட. அன்னைக்கு அவ்ளோ வருத்தமா பேசுனயே அந்த வருத்தம் கொஞ்சம் கூட இன்னைக்கு உன்கிட்ட இல்லை, என்னாச்சுடா உனக்கு அவ கிளம்பி போறது உனக்கு சந்தோஷமா இருக்கா? அவ என்னோட அண்ணே பொண்ணு யாருமே இல்லாதவ மாதிரி ஊரவிட்டே போறாஎன்று கோபமாக கேட்டவருக்கு குரல் தழுதழுத்து வார்த்தைகள் உடைந்துவிட. 

ம்மா.. நா எதுவும் பண்ண முடியாது உங்க அண்ணே பொண்ணு தான், நா இல்லைன்னு சொல்லலையே. அதுக்காக போறேன்னு சொல்றவளை கட்டியா வைக்க முடியும்? இது அவ எடுத்த முடிவு தானே? இந்த வீட்டை விட்டு போன்னு யாரும் சொல்லலைல. மனசுல என்ன இருக்குன்னு இப்போ கூட அவளால சொல்ல முடியலை அந்த அளவுக்கு பிடிவாதமா இருக்கா, எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் அழுகுறதை நிறுத்திட்டு போய் வேலைய பாருங்கஎன்று வேகமாக பேசிவிட்டு செல்ல. 

இருவரின் பிடிவாதமும் எதில் சென்று முடியுமோ என்ற கவலையோடு எதுவும் செய்ய முடியாத நிலையில் வாசலை பார்த்தபடி அருகில் இருந்த சேரில் தொய்ந்து அமர்ந்தார் விசாலாட்சி.

அரைமணி நேர பயணம் என்றாலும் அரை யுகமாய் இருந்தது இருவருக்கும். உடலை ஊடுருவி செல்லும் வாடை காற்று கூட வெம்மை பாய்ச்சுவது போல எரிச்சலை அளித்தது சஞ்சளாவிற்கு. அப்டியே பைக்கில இருந்து தள்ளிவிட்டா என்ன?’ என்ற எண்ணம் கண நேரத்தில் எழ.

உன்னால முடியுமா?” என்று அவளின் எண்ணத்திற்கு பதில் அளிக்கும் விதமாய் கேட்ட குரலில் திடுக்கிட்டு போனவள்.

என்ன சொன்னிங்க?”என்று சிறு அதிர்வுடன் கேட்டாள் சஞ்சளா.

இல்ல ரொம்ப குளிருதே உன்னால தாங்கிக்க முடியுமான்னு கேட்டேன்என்றதும் தான் இதய துடிப்பும் மூச்சு காற்றும் சீரனாது அவளுக்கு.

ரொம்ப தான் அக்கறை காட்டுறிங்க இந்த குளிருக்கு உறைஞ்சிற மாட்டோம் நீங்க முன்னாடி பாத்து ஓட்டுங்க“, வெடுக்கென கூறிய பதிலில் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டவன் வலது பக்க கண்ணாடியில் ஊர்ரென்று வைத்திருந்த முகத்தையும் முணுமுணுத்து கொண்டே வந்த இதழ்களையும் அவஸ்தையுடன் பார்த்து கொண்டே வாகனத்தை ஓட்டினான்.

அரை மணி நேர பயணத்தில் வடபழனி முருகன் கோவிலை வந்தடைந்தனர். கவனம் அவளிடம் இருந்தால் தானே செல்லும் வழி சரியா இல்லையா என்று தெரியும்? கவனமெல்லாம் அவன் மீது அல்லவா வைத்திருந்தாள். 

இறங்கு சரவெடிஎன்றவனை புரியமால் பார்த்தவள் சுற்றிலும் பார்வையை பரவவிட்டபடி

பைக்கில் இருந்து இறங்காமலேயேஇங்க எதுக்கு சார் வந்துருக்கோம்? எனக்கு பஸ்க்கு நேரமாச்சு வண்டி எடுங்க போலாம்“, ஒரு வித பதட்டம் நிறைந்த குரலில் அவசரம் கட்டி பேச. 

எனக்கு தெரியும் சரவெடி முதல வண்டியில இருந்து இறங்கு பஸ் போனா போகுது உன்கிட்ட பேசனும்னு தான் பஸ் ஸ்டாண்ட் போகாம இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். நீ சொல்றதுல தான் என்னோட முடிவே இருக்குஎன்று தாழ்ந்த குரலில் பேசியவனை ஆழ்ந்து நோக்கியவள்.

Advertisement