Advertisement

திகைப்பின் கோடுகள் தீர்க்க ரேகைகளை போல படர்ந்தது அவன் முகத்தில் “பேங்க் அக்கவுண்ட் எதுக்கு க்ளோஸ் பண்ற நீ வேலைக்கு தானே போக போற?”

“அது.. வந்து! சார்” என்று காரணம் சொல்ல வார்த்தைகள் தேடியவள் “அம்மாவோட அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் இருக்கு அத எடுத்துட்டு அக்கௌண்ட் க்ளோஸ் பண்ணனும் இன்சூரன்ஸ் பணம் கொஞ்சம் ஜாஸ்தியாவே வந்துருக்கு அக்கௌண்ட்ல இருந்தா ஆபத்து தானே சார், என்னோட படிப்புக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது போற இடத்துல செலவுக்கு பணம் வேணுமில்லையா பேங்க் மேனேஜர்கிட்ட பேசிட்டேன், சில ஃபார்மாலிட்டிஸ் மட்டும் முடிச்சுட்டு அக்கவுண்ட்ட கிளியர் பண்ணிறலாம்னு சொல்லிட்டாரு” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவள் ஏதாவது பேசுவான் என்று கண்ணாடியில் அவன் முகம் பார்க்க உணர்ச்சியற்று போய் உடல் விரைக்க கல்லாய் சமைந்திருந்தது, சற்று தூரம் இருவரும் பேசி கொள்ளவில்லை பேச எதுவும் இல்லை இருவரிடத்திலும்.

வளர்பிறைகள் எல்லாம் வசந்தங்கள் ஆவதில்லை! வாழ்க்கையும் வார்த்தையும் முற்று பெரும் முன் அத்தியாயங்கள் முழுமை அடைவதில்லையே?. வாழ்வின் இறுதி வரை தோன்றும் சுவாரஸ்யமில்லா அமைதியை போல அடர்த்தி நிறைந்த மௌனம் மட்டுமே பிரயாணம் செய்தது அவர்களிடத்தில்.

வங்கி வாசாலில் அவளை இறக்கிவிட்டவன் “சரி நீ வேலைய முடிச்சிட்டு ஆட்டோ பிடிச்சு போயிரு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நைட் தான் வருவேன் அம்மாகிட்ட சொல்லிரு” என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தி சீறும் வேகத்தில் சென்றுவிட

வாகனத்தின் உருவம் கண்ணை விட்டு மறைந்து தேய்ந்து போகும் வரை பார்த்து கொண்டிருந்தவள் பெருமூச்சை வெளியிட்டவாறே வங்கியின் உள்ளே சென்றாள் சஞ்சளா.

விஜயனும் கிருஷ்ணனும் ஜாதகம் பார்த்துவிட்டு இல்லம் வர வாசலில் ஆர்வத்துடன் காத்து கொண்டிருந்தாள் வைஷாலி. மகளின் ஆர்வத்தை கண்டு சன்னமாய் புன்னகைத்தவர் உடனே பதில் சொல்ல விருப்பமில்லாமல் சற்று நேரம் போகட்டும் என்று “வைசு குட்டி காபி போட்டு கொண்டு வர்றியா அதுக்கு முன்னாடி மாப்பிள்ளைக்கு தண்ணி கொண்டுவந்து கொடும்மா” என்று பணிக்க

ஒரு கணம் தயங்கி இருவரின் முகத்தை பார்த்தவள் ஏமாற்றத்துடன் உள்ளே சென்று தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துவிட்டு காஃபி கலந்து எடுத்துவர சென்றாள்

“என்ன சொல்லுவோம்னு ஆர்வமா இருக்கா விஜயன்” என்று காதில் ரகசியமாய் பேச காஃபி காப்புகளோடு வெளிப்பட்டவள் இருவரும் ரகசியம் பேசுவதை பார்த்துவிட்டு

“எனக்கு தெரிய கூடாதுன்னு ரெண்டுபேரும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?, ஜாதகம் பாக்க போன இடத்துல என்ன சொன்னாங்க ப்பா எல்லா நல்லா இருக்கு தானே?” என்று ஆர்வம் மேலோங்க கேட்க

“சொல்லலை விஜயன்” என்றவர் “எல்லாம் நல்ல விஷயம் தான் வைசுகுட்டி இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் விஜயனுக்கும் கல்யாணம் இந்த வாரத்துல முகூர்த்த நாள் இல்லம்மா அதான் அடுத்தவாரத்துல முதல் நாளே கல்யாண தேதிய பிக்ஸ் பண்ணியாச்சு இப்போ சந்தோஷம் தானே?” என்று கேட்டவர் பூரிப்புடன் மகளை பார்க்க அத்தனை சிரிப்பு அவள் முகத்தில்

“ரொம்ப சந்தோஷம் ப்பா ஆனா.. இன்னும் ஒரு வாரம் வெய்ட் பண்ணனுமா?” என்றாள் முகம் சுருங்க

“ஆக்க பொறுத்த உனக்கு ஆற பொறுக்களையா வைசு குட்டி? அவரப்படாதா” என்று கேலி செய்ய

“ப்ச் உங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா உங்க மாப்பிள்ளைய என்னோட வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள நா பட்டபாடு எனக்கு தானே தெரியும்? மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏரிற கூடாது இல்லையா அந்த பயம் தான் எனக்கு” என்று விஜயனை பார்த்து கொண்டே  இதழ்விரியா சிரிப்பை உதிர்த்தாள்

சன்னமாய் புன்னகைத்தவன் பதில் ஏதும் பேசவில்லை விழிகளால் பேசியவனுக்கு மொழிகள் தேவையில்லாமல் போக, இனி தான் இருப்பது உசிதமில்லை என்று எண்ணி கொண்டாரோ என்னவோ நிதானமாக எழுந்து கொண்டவர் இருவருக்கும் தனிமை அளிக்கும் விதமாய் மனைவியின் அறைக்குள் சென்றுவிட்டார் கிருஷ்ணன். அவரின் உருவம் மறையும் வரை அமைதியாய் இருந்தவன் நின்று கொண்டிருந்தவளின் கைபிடித்து இழுத்து அமர வைத்து கொள்ள

“விஜி என்ன பண்றிங்க அப்பா இருக்காரு” என்று தணிந்த குரலில் கோபமாக பேச

“என்னோட மாமனாருக்கு இங்கிதம் தெரியும் நந்தி மாதிரி நாம எதுக்குன்னு அவரே எந்திரிச்சு போயிட்டாரு, நா உனக்கு வேதாளமா அது என்ன பண்ணும் தெரியுமா?” என்று துளைக்கும் பார்வையில் ஒரு மாதிரியாக கேட்க

மூச்சடைத்தது வைஷாலிக்கு ‘இவனுக்கு இப்டியெல்லாம் பேச தெரியுமா?’ என்று அதிசயித்து பார்த்து கொண்டிருக்க

மூச்சு விட கூட மறந்து பார்த்து கொண்டிருந்தவளின் முன் சொடுகிட்டு நினைவு கலைத்தவன் “என்ன பதிலையே காணோம்” என்று கண்களில் சிரிப்புடன் கேட்டு அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்

அவன் செயலை புருவம் மேலெழும்ப பார்த்தவள் “இவ்ளோ தானா நா கூட வேற என்னமோன்னு நினைச்சேன்” என்று போலியாய் அலுத்து கொள்ள

“நாட்டி கேர்ள் சினிமா பாத்து நீ ரொம்ப கெட்டு போயிட்ட வைசு எல்லாம் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் அதுவரைக்கும் கொஞ்சம் கட்டுப்பாட்டோட இரும்மா, என்னையும் இருக்க விடு” என்று கெஞ்சுதலாய் வலியுறுத்தியவன் அவள் கரத்தினை தன் கைகளோடு பிணைத்து இணைத்து கொண்டான்

ஒரு கை அவனிடமிருக்க மறுக்கை அவன் கேசத்தை அளந்தபடி “சரி விஜி விஷ்ணு துவாரகாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிரு” என்றாள் வைஷாலி

“இல்ல வைசு நேர்ல போய் சொல்லிக்கலாம் நம்மள விட அவங்க தான் ரொம்ப ஆர்வமா இருந்தாங்க, நேர்ல போய் சொன்னா தான் அவங்க ரியாக்சன் எப்டி இருக்குன்னு பாக்க முடியும்” என்று சிறு கெஞ்சலுடன் கூற

“ஓகே நீ சொல்ற மாதிரியே செய்யலாம் அப்ப இன்னோரு முறை பிரெண்ட்ஸ் மூவி பாக்கணும் போல’ என்று கிண்டல் பேச

“அப்டிதான்னு வச்சுக்கோயே?” என்று மென்னகை புரிந்தவாறு கூறியவனின் அலைபேசி சன்னமாய் இசைத்தது

பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து பார்த்தவன் “சாரி வைசு டைம் ஆச்சு டூயூட்டிக்கு போகணும் போயிட்டு வேலைய முடிச்சிட்டு ஸ்டேஷன்ல இன்பார்ம் பண்ணிட்டு நாளைக்கு வறேன்” என்று எழுந்து கொண்டவன் அலைபேசியின் வாயிலாக இணையத்தில் செங்கல்பட்டு செல்ல டிக்கெட் பதிந்து கொண்டே

“சீக்கிரம் வந்து வேலையில ஜாயின் பண்ற வழிய பாரு வைசு கமிஷ்னர் உன்னோட ரிசைனிங் லெட்டரை ஹயர் ஆபிசருக்கு அனுப்பலை அவருக்கிட்ட பேசி சார்ஜ் எடுத்துகிறேன்னு சொல்லு என்ன?” என்று பேசி கொண்டே சென்றவன் அவளிடத்தில் பதில் இல்லை என்றதும் நிமிர்ந்து அவளை பார்க்க

வாட்டம் நிறைந்து ஏமாற்றத்தின் படிவங்கள் படர்ந்திருந்தன அவள் வதனத்தில் “ஒரு நாள் தான நாளைக்கு வந்துருவேன்ம்மா” என்று அவள் தாடையை பிடித்து ஆட்டவும்

மெலிதாய் புன்னகைத்தவள் “சரி போய்ட்டு போன் பண்ணுங்க விஜி” என்று சொல்ல,சரியென்றவன் வைஷாலியின் பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பினான்

வாசல் வரை அவனுடன் சென்றவள் வாட்டத்தை மறைத்து வலிய ஏற்படுத்தி கொண்ட புன்னகையுடன் வழியனுப்ப இரண்டு அடி நகர்ந்தவன் என்ன நினைத்தானோ “நா வர்ற வரைக்கும்” என்று கன்னத்தில் இதமாய் இதழ் ஒத்திவிட்டு சிரிப்புடன் பேருந்து நிலையம் நோக்கி செல்ல பனிமலராய் பூத்த புன்னகை அவன் உருவம் மறையும் வரை உதட்டில் உறைந்திருந்தது வைஷாலியிடம்.

வங்கி சென்று பணத்தை எடுத்துவிட்டு கணக்கை முடித்து கொண்டு கல்லூரி சென்றவள்

மாற்று சான்றிதழ் நன்னடத்தை சான்றிதழ் அனைத்தையும் பெற்று கொண்டு அலுவலக அறையில் இருந்து வெளியே வர கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டிருந்த ஹெச்ஓடி முத்துமணியின் பார்வை சஞ்சளாவின் மீது படிந்தது. கல்லூரி முதல்வரிடம் அனுமதி கேட்டு “ஏய் சஞ்சு” என்று குரல் கொடுக்க

குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவள் முகம் அன்னிச்சையாய் புன்னகையை அப்பி கொள்ள வேகமாக அருகில் சென்றவள் “குட் ஆஃப்டனுன் மேம் எப்டி இருக்கீங்க?” என்று முகமன் வைத்து நலம் விசாரிக்க

“ம் நா நல்லா இருக்கேன். நானே உன்ன மீட் பண்ணி பேசலாம்னு இருந்தேன் கொஞ்ச நாள் முன்னாடி தான யூஜிக்கு அப்ளிகேஷன் போட்டுருந்த, இப்போ என்ன சர்டிபிகேட் வாங்கிட்டு போக வந்துருக்க?” என்றவர் அவளின் குழப்பமான பார்வையை கண்டு

“தற்செயலா மிஸ்டர் துவாரகாவ பாத்தேன் அவரு தான் சொன்னாரு கோவையில ஏதோ ஜாப்க்கு அப்ளே பண்ணிருக்கியாமே, என்ன சஞ்சு எனி ப்ராப்ளம்” என்று தீவிரமான முகபாவனையுடன் கேட்டதும் அவள் முகம் சிறிதாய் வாட்டம் கண்டது

“நோ மேம் கொஞ்ச நாள் தனியா இடம் மாறி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான்!, கொஞ்ச நாள் தான் மேம்” என்று வலிய வரவழைத்து கொண்ட புன்னகையுடன் கூறி சமாளிக்க

“சார் நா கூட சொன்னேனே இந்த வருஷம் காலேஜ் பர்ஸ்ட் என்னோட கிளாஸ் ஸ்டுடண்ட்டுன்னு அது இந்த பொண்ணு தான் சார், எல்லா சப்ஜெக்டலயும் பர்ஸ்ட் கிளாஸ் அபௌவ் நைன்ட்டி பர்சன்ட்ஜ் சார்” என்று பெருமையுடன் கண்களிலும் பேச்சிலும் கர்வம் மிளிர கூற

“வாழ்த்துக்கள் ம்மா கிப்பிடப் ஏதாவது உதவின்னா தயங்காம கேளு நிச்சயம் என்னால முடிஞ்ச உதவிய செய்யிறேன்” என்றவர் வேறு வேலை இருப்பதாக கூறி அனுமதி வாங்கி விடைபெற்று சென்று விட்டார்

“ஓகே மேம் நா கிளம்புறேன் நேரமாச்சு” என்று நகல முற்பட்டவளை “நில்லு சஞ்சு” என்று பிடித்து வைத்து கொண்டவர்

” சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கேன் கண்டுக்காம அதை பத்தி கேக்காம போற, நீதான் காலேஜ் பர்ஸ்ட். இந்த வருஷம் பெஸ்ட் ஆஃப் த ஸ்டுடண்ட் நீ தான் ஆனா அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட உன்கிட்ட இல்லையே என்னாச்சு உனக்கு ஏதாவது பிரச்சனையா தயங்காம சொல்லு!” என்று ஊக்க

“இல்ல மேம் இந்நேரம் அம்மா இருந்திருந்தா ஆசையா ஓடி போய் அவங்ககிட்ட சொல்லிருப்பேன் ஆனா..” என்றவளுக்கு தொண்டை அடைத்தது விழிகளில் கோர்த்தது

ஈரத்தை துடைத்து கொண்டு “அதான் மேம் இண்ட்ரஸ்ட் காட்ட தோணலை, எனக்கு தெரியும் கிளாஸ் பர்ஸ்ட் நான் தான் வருவேன்னு. ஆனா.. எதிர்பாக்கலை காலேஜ் பர்ஸ்ட் வருவேன்னு” என்றவள் ஆசுவாசப்படுத்தி கொண்டு “ஓகே மேம் நா கிளம்புறேன் நேரமாச்சு” என்று சிறு புன்னகையுடன் கூற

மேலே பேசி அவளை சங்கடப்படுத்த விருப்பமில்லமால் சன்னமாய் முறுவலித்து விடை கொடுத்தார் அவளது துறை தலைவர் முத்துமணி.

நினைவுகளை ஒதுக்கி விட்டு நிஜத்தை ஏற்று கொள் என்று அறிவுறுத்தினாலும் சுரனை இல்லா மனம் அவளையே சுற்றி சுற்றி வந்து நினைவலைகளை அள்ளி தெளித்தது. நிஜம் எது நிழல் எது என தெரியாமல் மனதுடன் வாதம் செய்து கொண்டிருந்தான் துவாரகேஷ். நகத்தை கடிப்பதும் பின் யோசனை செய்வதுமாய் அலைபாயும் காற்றில் அணைய முற்படும் கற்பூரமாய் தவித்து தள்ளாடியது அவன் மனம்.

சொல்லாமல் வலியை அனுபவிப்பதை விட சொல்லிவிட்டு ஒரு வித திருப்தியுடன் வலியை அனுபவிப்பது மேல் அல்லவா?. திறந்து பார்த்தால் தானே உள்ளே என்ன உள்ளது என தெரியும் அறியாமலே அறிந்து கொள்ள முற்படாமலே இருப்பது சரியா?, எண்ணகளில் வாதங்கள் நீட்சி அடைந்து கொண்டே செல்ல

துவாரகேஷின் நடவடிக்கைகளை கடைக்கண் பார்வையில் பார்த்து கொண்டிருந்த விஷ்ணு “டேய் துவாரகா” என்று உரத்த குரலில் அழைக்க

திரும்பி அவன் முகம் பார்த்தவன் அசுவாரஸ்யமாய் “என்னடா?”

“என்ன பிரச்சனை உனக்கு நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் ஆளே சரியில்ல, அப்டியென்ன தீவிரமா யோசிச்சிட்டு இருக்கா? என்ன விஷயம்னு சொன்னா என்னால முடிஞ்சதை பண்ணுவேன்ல இனி கடிச்சு துப்ப விரல்ல நகம் இல்ல ஆழமா யோசிக்கிறேன்னு விரலை சேத்து கடிச்சிறாத” என்று முன்னிருந்த கோப்புகளை ஒதுக்கிவிட்டு கவனத்தை எதிரில் இருந்தவன் மீது பதித்தான்

“ப்ச் ஒன்னுமில்லடா சஞ்சு எடுத்த முடிவு தப்போன்னு தோணுது, அவளோட அம்மா அகௌண்ட்ட க்ளோஸ் பண்ண போறேன்னு சொன்னா ஒருவேளை பணத்தை எடுத்துட்டு மொத்தமா நம்மளவிட்டு போறதா ஐடியா பண்ணிருக்காளோன்னு ஒரு சின்ன டவுட்” என்று உண்மையான காரணத்தை மறைத்து நெருடலை ஏற்படுத்திய விஷயத்தை சந்தேகமாய் முன் வைக்க

“ப்ச் அவ செலவுக்கு தேவைப்படும் அதான் எடுத்துருப்பா நீ வீணா எதையாவது போட்டு குழப்பிட்டு இருக்காத, நீ என்ன நினைச்சேன்னு எனக்கு தெரியும்? மனசுல உள்ளதை முதல சொல்ல பாரு அதவிட்டுட்டு கண்டதையும் கற்பனை பண்ணிக்கிட்டு” என்று கடுப்புடன் கூறிவிட்டு “நேரமாச்சு அக்யூஸ்ட்ட கோர்ட்ல பூரடியூஸ் பண்ணனும் அருள் கூட நீயும் போ” என்று பணிக்க

எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து சென்றான் துவாரகேஷ் ஆனால் அவன் மனம் ‘அது தான் நடக்கும் மொத்தமாய் செல்ல தான் இத்தனை ஏற்பாடுகள் செய்கிறாள்’ என்று திண்ணமாய் உரைத்தது.

தொடரும்..

ஏன் தான் காதல் வளர்த்தேன் அதை ஏனோ என்னுள் புதைத்தேன்

சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்

ஓஹோ இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி

இதயம் கொண்டு போனால் என்னடி

Advertisement