Advertisement

காஃபி கலந்து மகனின் அறைக்கு கொண்டு சென்றவர் புதல்வனின் வாட்டம் நிறைந்த முகத்தை சில நொடி ஆராய்ந்துவிட்டு ” ஏன் துவாரகா நீ போக வேணான்னு சொன்னா அவ போகவா போறா?, போகட்டும்னு ஏண்டா சொன்ன? உனக்கும் அவமேல விருப்பம் இருக்கு நேரம் நெருங்கி வர்றப்போ அதை தக்க வச்சுக்கிறதை விட்டுட்டு இப்டி பிரிஞ்சு போற மாதிரி அவ தான் முடிவெடுத்துருக்கான்னா அதுக்கு நீயும் சரின்னு சொல்லி அனுப்பிவிட பாக்குற எதுக்குடா இந்த வேண்டாத சோதனை” என்றவரின் குரலில் அத்தனை கோபம் அது அவளால் வந்ததா அவனால் உண்டானதா என்பது அவருக்கு தான் தெரியும்

அனிச்சம் கண்ட முகத்துடன் நிமிர்ந்தவன் “ம்மா ஜாப் அப்ளே பண்றதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டுருந்தா கண்டிப்பா போக வேண்டாம்னு சொல்லிருப்பேன், ஆனா அவ என்கிட்ட எதுவுமே சொல்லலை? முடிவெடுத்துட்டு வந்து ஏதோ கேக்கணுமேன்னு கடமைக்கு பர்மிஷன் கேக்குறாம்மா, எனக்கு மட்டும் என்ன ஆசையா அவ இங்க இருந்து போகணும்னு!. உங்களுக்கே தெரியும் அவ மேல எனக்கு இருக்குற காதல் என்னனு

நேத்து அவசரமா ஒரு இடத்துக்கு போனேன்னே எதுக்குன்னு நினைக்கிறீங்க?” என்றவன் வேகமாக அருகில் இருந்த டிராயரை திறந்து சிறிய வடிவிலான பெட்டகத்தை திறந்து காட்டினான் மஞ்சள் கயிற்றில் பளிச்சென்று மின்னி நகைத்தது பொன்தாலி

மெதுவாக மாங்கல்யத்தை வருடி பார்த்தவரின் கண்களில் ஈரம் சுரக்க ஆசைகளை மறைக்க தெரியுமா இவனுக்கு என்று ஆச்சர்யத்துடன் மகனை பார்த்தார்

“இன்னைக்கு அவகிட்ட இத காட்டி விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேன் ஆனா அவ வேற ஒரு முடிவெடுத்துட்டா, விடுங்க நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருதா என்ன?” என்று விட்டெரியாக பேச

இதுவரை வேதனையின் பக்கம் நெருங்காமல் இருந்தவன் இன்று துன்புறுதலை காண சகிக்கவில்லை அவருக்கு, தோளோடு அவனை அணைத்து கொண்டவர் “நா சஞ்சுகிட்ட பேசுறேன் துவாரகா” என்று கூற

வருத்தம் இயைந்த புன்னகையை சிந்தியவன் “என்ன பேசுவீங்க ம்மா என்ன கட்டிக்க சொல்லியா? இந்த விஷயத்தை பத்தி அவகிட்ட பேசுனா சரின்னு தான் சொல்லுவா. ஆனா.. அதுல நன்றி கடன் மட்டும் தான் இருக்கும் காதல் இருக்காதும்மா, அடைக்கலம் கொடுத்ததா நினைச்சிட்டு இருக்கா உறவா நினைச்சிருந்தா இப்டி ஒரு முடிவெடுத்துருப்பாளா? மனசுல இந்த மாதிரி இருக்குன்னு சொல்லிருப்பாளே ம்மா, அவ மனசுல எதுவும் இல்ல நாம தான் ஏதேதோ நினைச்சுகிட்டோம் யாருக்கும் பாரமா இருக்க கூடாதுன்னு தான் அவ இங்க இருந்தே கிளம்புறா, இது கூடவா எனக்கு புரியாது விடுங்கம்மா போகட்டும் பாத்துக்கலாம் இதை பத்தி யார்கிட்டயும் பேச வேணாம்” என்று வருந்தி பேசியவன்

“எனக்கு வேலைக்கு நேரமாச்சு நா குளிச்சிட்டு கிளம்புறேன்” என்று கூறிவிட்டு குளியலறை புகுந்து கொண்டான் துவாரகேஷ்

மகனின் வருத்தத்தை உணர முடிந்தவரால் அதை தீர்க்கும் வழி தெரியவில்லை கவலையுடன் எழுந்து சென்று காலை உணவது தயார் செய்ய தொடங்கினார் விசாலாட்சி.

அடர் நீல நிறத்திலான காட்டன் புடவை பாந்தமாய் உடலை தழுவி இருக்க மிதமான ஒப்பனையில் பள்ளி செல்ல தயாராகி வந்தாள் வைதேகி. சமையல் அறை வாசலில் நின்றவாறே கையில் தோசை கரண்டியுடன் நின்று கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு மெலிதாய் புன்னகை அரும்பியது ரசனையுடன் சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தவள்

“அடடா என்ன அழகு துப்பாக்கி பிடித்து தோட்டா சுட்ட கைகள் இன்று சட்டாப்பை பிடித்து தோசை சுடுகிறதே” என்று நளினமாய் எதுகை மோனையில் கவிநயம் பேசியவளின் வாக்கியத்தை ஆச்சர்யம் ததும்ப கேட்டவன் அவளின் வார்த்தைகளை மட்டுமல்ல அவளையுமே அளவளவாய் அணுஅணுவாய் ரசித்தான்

“சூப்பர் தேவிம்மா, இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என்ன ஸ்பெஷல் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இந்த புடவை கட்டிருக்க” என்று புருவம் உயர்த்தி கேட்க

“ஸ்பெஷல் அப்டின்னு எதுவும் இல்ல மாமா கட்டணும்னு தோணுச்சு அதான்! ஆசையா சமைச்சு போடுற என்னோட மாமாவுக்கு கண்ணுக்கு நிறைவா இருக்குற மாதிரி தெரிய வேணாமா” என்று புருவங்களை இரண்டொரு முறை உயர்த்தி காட்டி மென்னகை புரிய

“ம்ம்..” என்று மெச்சுதலாய் தலையாட்டியவன் “நல்லா இருக்கு தேவிம்மா” என்று ரத்தின சுருக்கமாய் முடித்து கொள்ள

அவள் முகம் ஏமாற்றத்தை பூசி கொண்டது “அவ்ளோ தானா..” என்று ஸ்ருதி இறங்கிய குரலில் சுணங்கிய முகத்துடன் கேட்க

“வேற என்ன சொல்லணும் தேவிம்மா, நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு தானே சொல்ல முடியும் நல்லா இல்லைன்னா சொல்ல முடியும்?” என்று சிரிப்பை அடக்கியபடி வார்த்தைகளை குழப்ப

முசுமுசுவென வந்த கோபத்தில் “யோவ் மாமா” என்று கத்தியவள் “போயா நீயும் உன்னோட தோசையும் எனக்கு ஒன்னும் வேணாம் நா கிளம்புறேன்” என்று வேகமாக திரும்பி நடக்க முயல

ஓர் எட்டில் வேகமாக வந்து அவளை பிடித்து கொண்டவன் “தோசை வேணாம் சரி நானுமா வேணாம்?” என்று குறும்பாய் கேட்டு சிரித்தவன்

அவளை கைவளைவிற்குள் கொண்டு வந்து “நல்லா இருக்குன்னு சொன்னது வெறும் வாய் வார்த்தையா சொல்லை என்ன நானே கன்ட்ரோல் பண்ணிட்டு சொல்லிருக்கேன் சும்மா இருக்குறவனை உசுப்பிவிடுறதே நீ தான் தேவிம்மா” என்று போலியாய் கடிந்து கொண்டவன்

“இவ்ளோ அழகா கண்ணுக்கு லட்சணமா வந்து நின்னா யாருக்கு தான் பிடிக்காது டூயூட்டிக்கு கிளம்புற நேரத்துல பிளைட் மூடுக்கு மாத்துறியே  இது உனக்கே நியாயமா?, வேலைக்கு போகவா இல்ல இன்னைக்கு முழுக்க..” என்று வார்த்தைகளை முழுவதும் கூறமால் ஒரு மார்க்கமாக நெளிந்து ரகசிய புன்னகை சிந்தினான் விஷ்ணு

அவன் நெளிந்த பாவனையே அவளுக்குள் சிரிப்பை வரவழைக்க உள் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் புரியாதது போலவே சிரிப்பை மறைத்து கொண்டு “உங்கள வேலைக்கு போக வேணாம்னு நா சொல்லலையே போக வேணாம்னு தடுத்தா வச்சுருக்கேன்” என்றவள் “ஆமா அதென்ன பிளைட் மூடு” என்று அதிதீவிரமான கேள்வியை முன் வைக்க

“ப்ச் எல்லாத்தையும் உனக்கு சொல்லி புரியவைக்கணும் போல கணக்கு டீச்சருக்கு கணக்கு பாடம் தெரிஞ்ச அளவுக்கு கணக்கு பண்ண தெரியலையே இதுல கோபம் மட்டும் வந்துரும்” என்று மனையாளின் கன்னத்தில் இடித்து நொடித்து கொண்டவன் காதில் ரகசியமாய் கிசுகிசுக்க முகம் நாணத்தை மட்டுமல்ல கோபத்தையும் தத்தெடுத்து கொண்டது

“உங்களை..” என்று மாறி மாறி கண்மண் தெரியாமல் அடிக்க தொடங்கினாள் வைதேகி

“ஏய் அடிக்காதடி நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன் வலிக்குது” என்று சில அடிகளை வாங்கி கொண்டு அவள் கரத்தினை பிடித்து நிறுத்தியவன் “நா சொன்னதுல என்ன தப்பு? நீ மீனிங் கேட்ட அதுக்கு அன்சர் சொன்னேன் ஏதோ கல்யாணம் ஆகாத பொண்ணுகிட்ட  தப்பா பேசுன மாதிரி கோபப்டுற”

“நீங்க பேசுனது எல்லாமே தப்பு தப்பா தான் பேசிறுக்கீங்க ஒரு போலீஸ் மாதிரியா பேசுறீங்க”

“தோ பாருடா இதென்ன வம்பா இருக்கு! கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகலை ரெண்டு மாசம் தான் ஆகிருக்கு இதுல அரசியலும் ஆன்மிகமுமா பேச முடியும், ஏதோ அப்பப்ப வருது அதுக்கும் கோபப்பட்டா எப்டி தேவிம்மா” என்று கெஞ்சலும் கொஞ்சலுமாய் இறங்கியவன் சலுகையாய் அணைத்து கொள்ள

“உங்களுக்கு பேச சொல்லியா தரணும் எனக்கு நேரமாச்சு சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க விணு கிளம்பலாம் பேசுனா இன்னைக்கு முழுக்க பேசிட்டே இருப்பீங்க கேக்குற எனக்கு தான் என்னென்னவோ பண்ணும்” என்று அவனிடமிருந்து விலகி அடுப்பில் இருந்த தோசையை பார்க்க அந்தோ பரிதாபமாக காட்சி அளித்தது திரவ நிலையில் இருந்து திடமாய் மாறி கருகி காய்ந்து போன தோசை

“இது தான் நீங்க தோசை சுடுற லட்சணமா? ஒருவேலைக்கு ரெண்டு வேலையா பண்ணி வச்சுருக்கிங்க போங்க விணு போய் குளிச்சிட்டு வாங்க இனி எல்லாத்தையும் சுத்தம் பண்ணனும்” என்று எரிச்சல் மண்ட விரட்டியவளின் கன்னத்தில் இதமாய் இதழ் பதித்துவிட்டு குடுகுடுவென ஓடி சென்று மறைந்து கொண்டான் விஷ்ணு

கோபமாக திரும்பியவள் அவன் ஓடி ஒளிந்து கொண்டதை கண்டு அனுமதியின்றி முளைத்த மலராய் புன்னகை அரும்ப விஷ்ணு விட்டு சென்ற மிச்ச வேலையை தொடர்ந்தாள் வைதேகி.

சற்று நேரத்தில் குளித்து முடித்து காவல் நிலையம் செல்ல கிளம்பி வெளியே வந்த துவாரகேஷ் இடுப்பில் இருந்து நழுவ முயன்ற பெல்ட்டை சரி செய்தபடி “அம்மா டிஃபன் எடுத்து வைங்க” என்று குரல் கொடுக்க

“அத்தை வெளிய போயிருக்காங்க” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன் பெல்ட்டை சரி செய்துவிட்டு ஏதும் பேசாது அமைதியாய் வந்து அமர்ந்தான்

தட்டை எடுத்து வைத்து பரிமாறியவள் “உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா சார்?” என்று கேட்க

“இல்ல என்ன விஷயம் எங்கயாவது போகணுமா?”என்றான் அவள் முகத்தை நிமிர்ந்து பாராமலே

“பேங்க் வரைக்கும் போகணும் ஒரு சின்ன வேலை இருக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று தயங்கி கேட்க

நிமிர்ந்து ஒருகணம் அவள் வதனத்தில் ஆராய்ச்சியை தொடர்ந்தவன் எதையும் துருவி கேட்காது “சரி” என்றுவிட்டு உணவும் வார்த்தையும் தீர்ந்து போனது போல “எனக்கு சாப்பாடு போதும் நீ சாப்ட்டு சீக்கிரம் கிளம்பு போற வழியில உன்ன பேங்க்ல இறக்கி விட்டுடுறேன்” என்று கைகழுவி எழுந்து சென்று விட

அரைகுறையாய் உண்டு விட்டு செல்பவனை ஏக்கத்தோடு பார்த்தவள் “இப்ப கூட உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்ல மாட்டீங்க அப்டி தானே? போக வேணாம்னு சொன்னா போகவா போறேன்” என்று அவன் மீது கோபம் வர தனக்கு தானே பேசி கொண்டவளின் விழிகள் நீரை சுரந்தன

கண்ணீரை சுண்டி தட்டிவிட்டவள் அறக்கபறக்க உணவை விழுங்கிவிட்டு துவாரகாவின் அறைக்குள் நுழைந்தாள் சஞ்சளா.

சில கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தவனின் கவனத்தை தொண்டையை கனைத்து அவள் புறம் திருப்பியவள்”சார் நா கிளம்பிட்டேன் போலாமா?” என்று கேட்க

“ம் போலாம்” என்றவன் பைக் சாவியை எடுத்து கொண்டு அவளை கடந்து வெளியேற முகத்தை தொங்க போட்டபடி அவனை பின்தொடர வெளியே சென்று வந்த விசாலாட்சி இருவரும் கிளம்பி வருவதை கண்டு “என்னடா சாப்டயா”, சஞ்சளாவை பார்த்து கொண்டே கேட்க

“ம் சாப்டேன் ம்மா இவளுக்கு பேங்க்ல ஏதோ வேலை இருக்காம் அதான் போற வழியில டிராப் பண்ணிடுறேன்னு சொன்னேன், சரிம்மா டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என்று பைக்கை உயிர்ப்பிக்க விசாலாட்சியிடம் கூறிவிட்டு பின்னால் ஏறியவள் ஒரு இஞ்ச் தள்ளியே அமர்ந்து கொண்டாள்.

பின்னால் அமர்ந்திருந்தவளின் முகத்தை வலது பக்க கண்ணாடியில் பார்த்தவன் “கிளம்புறதுக்கு தேவையானதெல்லாம் எடுத்து வச்சிட்டியா சஞ்சு” என்று முகத்தை லேசாக திருப்பி கேட்டான் துவாரகேஷ்

எண்ணங்களில் வலியை நிரப்பி வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவள் அவன் வார்த்தைகள் செவிகளை எட்டாமல் போனது, “என்ன கேட்டீங்க சார்?” என்று கனாவில் இருந்து மீண்டவள் போல மிரட்சியான பார்வையுடன் கேட்க

“கிளம்புறதுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியான்னு கேட்டேன். நினைப்பெல்லாம் வேற எங்கயோ இருக்குது போல”, கோபமா ஏளனமா என பிரித்தறிய முடியாத குரலில் பேச

சற்று தயங்கியவள் “இல்ல நீங்க கேட்டது சரியா கேக்களை அதான்… எல்லா எடுத்து வச்சுட்டேன் பேங்க் அக்கவுண்ட்  மட்டும் க்ளோஸ் பண்ணிட்டா வேலை முடிஞ்சது, அப்றம் கிளம்ப வேண்டியது தான்” என்றவள் பதில் சொல்கிறேன் என்று உளறி கொட்டியதை நினைத்து நாக்கை கடித்து லேசாய் முகம் சுருக்கி தன்னையே கடிந்து கொண்டாள்

Advertisement