Advertisement

“அவசரம் காட்ட மாட்டேன்னு சொல்லாத வைசும்மா பிடிச்ச திருடனையே தப்பிக்க விடுற ஆள் நீ. இதுல அவசரம் காட்ட மாட்டேன்னு சொன்னா என்னோட வேலை அம்போ தான்” என்று சீரியசாய் உரைத்து பாவமாய் அவள் முகம் பார்த்தான் விஜயன்

கண்கள் இடுங்க முறைத்து பார்த்தவள் “போங்க விஜி ஒரு முறை தப்பிக்க விட்டதுக்கு இப்டி ஓராயிரம் முறை சொல்லி சொல்லி கிண்டல் பண்ணுவீங்களா?” என்றவளின் அதரத்தில் கோபத்தையும் மீறி புன்னகை மலர்ந்தது

“சரி கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?” பேச்சோடு பேச்சாக கிருஷ்ணன் கேட்டுவிட

“நீங்க ஓகே சொன்னா நாளைக்கு காலையிலேயே வஞ்சுக்கலாம் ப்பா” என்று உரைத்த மகளின் தலையில் செல்லமாய் கொட்டியவர்

“வாலு அவசரம் எல்லாத்துலயும் அவசரம். சொல்லுங்க விஜயன்?” என்று எதிரில் இருந்தவனிடம் கேட்க

“அதெல்லாம் நீங்களே முடிவு பண்ணுங்க அங்கிள் எனக்கு இந்த நல்ல நாள் அத பத்தியெல்லாம் எதுவும் தெரியாது” என்று சங்கடமாய் கூறியவன் “கல்யாணம் சிம்பிளா கோவில் இல்ல ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு முடிச்சுக்கலாம் ரிசப்ஷன் வேணா கொஞ்சம் கிராண்டா பண்ணிக்கலாம்” என்று தயக்கத்துடன் உரைக்க

“இதை சொல்றதுக்கு எதுக்கு விஜயன் தயக்கம்? நீங்க சொன்ன மாதிரியே பண்ணிக்கலாம், நாளைக்கு ஆபிஸ் லீவ் தான் நாளைக்கே ஜோசியரை பார்த்து தேதி குறிச்சிடுறேன். வைசுகுட்டி மாப்பிள்ளையும் நீயும் போய் அம்மாவ பாத்து விஷயத்தை சொல்லிட்டு வாங்க” என்று கூற

“சரிப்பா!” என்றவள் விஜயனை அழைத்து கொண்டு சாரதாவின் அறைக்கு சென்றாள்

படுத்திருந்தவர் உள்ளே வந்தவர்களை கண்டு எழ முற்பட, வேகமாக அருகில் சென்று தடுத்தவன் “பரவாயில்ல அத்தை படுத்துக்கோங்க” என்று விளம்பியவனை ஒரு மாதிரியாக பார்த்து திகைத்து விழித்தவர் மகளிடம் பார்வையை நிலை நிறுத்த

இருவரின் நேசிப்பை பற்றி கூறியதும் சாரதாவின் கைகள் தன்னிச்சையாய் அரவணைத்து கொள்ள விரிந்தன. “ம்மா” என்று விரிந்த கரங்களுக்குள் தஞ்சம் புகுந்த மகளை உச்சி முகர்ந்தவர்

“இவ்ளோ நாள் சொல்லாம மறைச்சிட்டுயேடி, இப்போவாவது நல்லா முடிவை எடுத்தியே” செல்லமாக கோபம் கொண்டு

“நீ வந்ததுல இருந்து நேத்து நைட்டு வரைக்கும் ஒரே புலம்பல் உன்னோட அப்பா. உனக்கு என்னாச்சு என்னாகிருக்கும்னு என்கிட்ட கேட்டு என்ன தூங்கவிடலை”, இரவு உறக்கத்தை கெடுத்த கோபம் சன்னமாய் எட்டி பார்த்தது அவரிடத்தில்.

சன்ன சிரிப்புடன் இருவரும் ஆசி பெற்று கொண்டு சற்று நேரம் இருந்து பேசிவிட்டே அறையில் இருந்து வெளி வந்தனர்.

“ரெண்டு பேரும் உக்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றார் சமையல் அறையில் இருந்து வந்த கிருஷ்ணன்

“அப்பா! நீங்க சமைச்சீங்களா?” என்று வியப்பை காட்ட

“அம்மாவ தவிர மதியம் நாம ரெண்டுபேரும் சாப்பிடலை சாதம் அப்டியே தானே இருந்துச்சு? எல்லாத்தையும் சூடு பண்ணிட்டேன் வயிறு பசியில கத்துது வைசு குட்டி சீக்கிரம்” என்றார் வயிற்றை தடவி காட்டியபடி

சிரித்து கொண்டே “சரி நீங்க உக்காருங்க நா எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என்று  சமையல் கட்டுக்குள் நுழைந்தவள் அனைத்தையும் எடுத்து வைத்து பரிமாற சுவாரஸ்யமான பல கதைகளை கதைத்து கொண்டே மூவரும் இரவு உணவை உண்ண தொடங்கினர்.

மதிய உணவை முடித்து கொண்டு சற்று நேரம் இருந்து பேசிவிட்டு நாளை வருவதாக கூறி துவாரகா சென்றுவிட அவன் சென்றதும் யோசனையுடன் சென்று அறைக்குள் முடங்கியவள் இருள் அடைந்த பின்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை சஞ்சளா.

சாவித்ரியின் இல்லம் சென்று வந்த விஷ்ணு ஹாலில் அமர்ந்து அலைபேசியில் உரையாடி கொண்டுருந்தவளை கடைக்கண் பார்வையில் அளந்து கொண்டே அறைக்கு சென்றான்

வந்தவனை சற்றும் கண்டு கொள்ளவில்லை வைதேகி உடை மாற்றி கொண்டு வந்தவன் அவள் அருகில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க வேகமாக எழ முற்பட்டவளின் கைபிடித்து எழ முடியாதபடி அருகில் இருத்தி கொண்டான்

சற்று நேரம் கழித்து அழைப்பதாக மறுமுனையில் கூறிவிட்டு மூச்சு வாங்க முறைத்தவள் “ப்ச் விடுங்க விணு உங்களுக்கும் எனக்கும் பேச்சில்லை. அதான் வேலைய பாத்துட்டு போன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்கள? பின்ன எதுக்கு இந்த சமாதானம்”  முறுக்கி கொண்டு நின்றவள் அவன் வலிய கரத்தின் பிடியில் இருந்து திமிற

“ஏதோ கோபத்துல சொன்னது அதையே பிடிச்சு தொங்குவியா? அப்பப்ப நடக்குற சண்டைய அப்பவே மறந்துடனும் இப்டி முகத்தை திருப்பிக்கிட்டு போக கூடாது”

“என்னால அந்த மாதிரியெல்லாம் சட்டுன்னு கோபத்தை விட முடியாது இப்போ விட போறீங்களா இல்லையா? சஞ்சு உள்ள தான் இருக்கா கத்திருவேன்” என்று கோபமாக மிரட்ட

“எங்க கத்து பாப்போம்” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் அவளை மூச்சடைக்க செய்தான்

எதிர்பாராத செயலில் திகைத்து விழித்து அவனிடமிருந்து விடுபட திமிறியவள் மென்மையான சிறையெடுப்பில் மிதமான சூட்டில் கரையும் அச்சு வெல்லமாய் இளகி கரைந்தொழுகினாள்.

சில நொடிகள் கழித்து அவளிடமிருந்து ஓசையில்லாமல் விலகியவன் மெய்மறந்து விழிமூடி இருப்பவளின் நெற்றியில் முட்டி மோன நிலை கலைத்து குறும்பாய் நகைக்க

கண்விழித்து எதிரில் இருந்தவனின் சிரிப்பை பார்த்த வைதேகிக்கு அவள் நின்றிருந்த கோலம் நினைவில் வர நாணமும் கோபமும் கெக்கலிட்டு கேலி செய்தன. “ச்சே..” என்று கையை உதறியவள் எதிரில் நிற்பவனை ஏறிட்டு காண முடியாது தடுமாறினாள்

” சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே சென்ற குரலில் கூறிவிட்டு விறுவிறுவென சென்றுவிட

“ஏய் தேவிம்மா இந்த சமாதானம் கூட நல்லா தான் இருக்கு” என்றவனின் கேலி குரல் பின் தொடர்ந்து வந்து அவள் செவிபறையை நிறைக்க தன்னையே கடிந்து கொண்டவள் மறந்தும் அவன் முகத்தை பார்க்கவில்லை

சரசங்கள் எதுவும் அறியாது மூளைக்கு பளு கொடுத்தபடி தீவிர சிந்தனையுடன் வந்து அமர்ந்தாள் சஞ்சளா. சிறு தயக்கத்துடன்”அண்ணா” என்று அழைக்க

என்னவென்று நிமிர்ந்து பார்த்தவனிடத்தில் “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்?”

“என்னம்மா சொல்லு?”

“உங்களுக்கே தெரியும் இப்போ என்னோட நிலைமை என்னன்னு. நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்துருக்கேன் ண்ணா. நா கோயம்புத்தூர் போலன்னு இருக்கேன்” என்று ஒருவழியாய் கூறிட

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர் “ஏன் சஞ்சு! திடீர்னு என்ன கோயம்புத்தூர் போறேன்னு சொல்ற, அங்க தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?”

“இல்ல ண்ணா எனக்கு சென்னையில இருக்க ஒரு மாதிரியா இருக்கு, ஒரு இடமாற்றம் வேணும்னு மனசுக்கு தோணுது அதான்..! வேலைக்கு ஆல்ரெடி பிரெண்டுகிட்ட சொல்லி வச்சுருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லிருக்காங்க இண்டர்வியூ அட்டன் பண்ணா கண்டிப்பா எனக்கு வேலை கன்பார்ம்” என்று ஆர்வம் இருப்பது போல காட்டி பேசினாள் சஞ்சளா

ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியவன் ” உனக்கு காலேஜ்ல அட்மிஷன் போட்டுருக்குறதா துவாரகா சொன்னான். படிப்பை விட்டுட்டு அப்டியென்ன பணம் தேவைப்படுதுன்னு வேலைக்கு போறேன்னு சொல்ற?”, கேள்வி கேட்டவன் வார்த்தையில் சற்று அழுத்தத்தை ஏற்றினான்

“படிக்க மாட்டேன்னு சொல்லையே, படிக்கிறேன் வேலை பாத்துட்டே படிக்கிறேன் ண்ணா. பண தேவைக்காக இல்ல மனசுக்கு கொஞ்சம் நிம்மதி வேணும், இங்க இருந்தா தேவையில்லாததெல்லாம் வந்து இம்சை பண்ணுது ப்ளீஸ் ண்ணா” என்று கெஞ்சலில் இறங்க

“உண்மையான காரணம் இது தானே வேற எதுவும் இல்லையே?” என்று விஷ்ணு அழுத்தமாய் பார்க்க

சில நொடி உதட்டை கடித்து மௌனம் காத்தவள் “இல்லண்ணா ரீசன் இது தான், நீங்க சரின்னு சொன்னா நா போறேன் வேண்டாம்னா நா போகல ண்ணா” என்ற போதே முகமும் குரலும் சுணங்கி போனது

வாட்டத்தை பொறுக்காது “உன்னோட விருப்பம் சஞ்சு. எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல நீ தாரளாமா போகலாம். ஆனா விசாலாட்சி ஆன்ட்டி கிட்ட கேட்டுக்கோ, ஏன்னா நீ இப்போ அவங்க பொறுப்புல இருக்க” என்றான் தீவிரமான முகத்துடன்

” ரொம்ப தங்க்ஸ் ண்ணா அத்தைகிட்ட நா சொல்லிடுறேன் இப்போ உங்க பிரெண்டுக்கு போன் போட்டு வர சொல்றிங்களா நா வீட்டுக்கு கிளம்புறேன்?”

“ஏன் சஞ்சு நைட் இருந்துட்டு காலையில போகலாமே என்ன அவசரம். கோயம்புத்தூர் போக இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல அப்றம் என்ன?” என்று அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் புகுந்து வினா தொடுத்தாள் வைதேகி

“இல்லக்கா நாளைக்கு பேங்க்ல கொஞ்சம் வேலை இருக்கு, அதுவுமில்லாம என்னோட சர்டிஃபிகேட் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும் காலேஜ் போய் டிசி வேற வாங்கணும்” என்று விடை அளிக்க

“சரிம்மா நா அவனுக்கு கால் பண்ணி வர சொல்றேன் நீ சாப்டு” என்றவன் துவரகேஷை வர சொல்ல சற்று நேரத்தில் விஷ்ணுவின் இல்லம் வந்த துவாரகேஷ் என்ன ஏது என அவளிடம் கேள்விகள் கேட்காது கணவன் மனைவி இருவரிடமும் விடை பெற்று அழைத்து கொண்டு கிளம்பினான்.

இல்லம் சென்று சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏதாவது தொனதொனத்து கொண்டு வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றம் மிஞ்ச. பக்கவாட்டு கண்ணாடியில் அவன் முகம் காண கல்லாய் இறுகி இருந்தது.

‘விஷயம் தெரிந்திருக்குமோ அதனால் தான் இந்த கோபமா?’ என்று எண்ணி குழம்பியவள் வாய் திறக்கவில்லை ‘எப்படியும் தெரிய போகும் விஷயம் தானே? காலையில் இருவரிடமும் நிதானமாக விளக்கி கொள்ளலாம்’ என்று எண்ணத்தை ஒதுக்கிவிட்டு சுற்றுப்புறம் பார்க்க சேர வேண்டிய இடம் வந்திருந்திருந்தனர்.

வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியவன் பின்னால் பார்வையை திருப்ப

“அதுக்குள்ள வீடு வந்துருச்சா?” என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள் சஞ்சளா

“நினைப்பு வேற எங்கயோ இருந்தா எதுவும் தெரியாது. கற்பனையில கோட்டை கட்டுறத விட்டுட்டு போய் படுத்து தூங்கு” என்று வார்த்தையில் கடுமை காட்டி பேச

எதிர்த்து பேச வாய் திறந்தவள் அவன் பார்வை கண்டு பதில் பேச வேண்டும் என துறுதுறுத்த நாவை அடக்கி கொண்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள். கண்ணாடியில் கல்பட்டு சிதைந்த பிம்பம்  போல அவன் கண்ட கனாக்களெல்லாம் சிதைந்து சிதலமாகின. மனதில் எழுந்த சோர்வு நடையில் ஒட்டி கொள்ள அறைக்குள் சென்று முடக்கியவனுக்கு உறக்கம் வரவில்லை.

விஷ்ணு கூறிய செய்தியில் அவள் மீது கோபம் எழுந்தது. எழுந்த வேகத்தில் தண்ணீர் பட்டு அணைந்த நெருப்பாய் அணைந்து அமிழ்ந்தும் போனது.

‘ஏன் இதை பற்றி சொல்லவில்லை கோபத்தை காட்டும் அளவிற்கு உரிமைகள் இல்லையா? இல்லை! அத்தை மகள் என்ற உறவை வைத்து கொண்டு உரிமை ஏற்பது நியாயமில்லை என்று எண்ணுகிறாளா?’,தனக்கு தானே கேட்டு கொண்ட கேள்விக்கு விடை கிடைக்கவில்லை

‘சலனமில்லா வாழ்வில் சாரம்சமாய் வந்தவள் உள்ளத்தின் சங்கதி தெரிந்து கொள்ளாமலேயே பிரிவை தருகிறாள்’, என்று வெதும்பி விம்மியது மனம்.

‘உள்ளதை சொன்னால் ஏற்று கொள்வாளா? இல்லை ஏதாவது காரணம் சொல்லி நிராகரிப்பாளா?.

விட்டு சொல்பவளுக்கு நிராகரிக்க சொல்லியா தரவேண்டும்!’, அவன் இதழில் இகழ்ச்சியாய் ஓர் அவல புன்னகை வடிந்தது.

தென்னங்கீற்றில் வடியும் மழைத்துளியாய் கண்ணீர் துளிகள் துளிர்க்க. தலையணையை அணைத்தபடி  உறக்கத்தை இரவல் வாங்கினான் துவாரகேஷ்.

தொடரும்..

உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை

இந்த காதல் என்பதே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை

உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி.

Advertisement