Advertisement

பட்டாசு என்றதும் நினைவில் எட்டும் சிவகாசியில் மாதம் இரண்டிற்கும் குறையாமல் வெடி விபத்துகள் நடக்கும். அதுவும் வெயில் காலத்தில் கணக்கீடுகள் என்பதே இல்லை.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த சத்தில் திடுக்கிட்டு இருவரும் அவ்விடம் செல்ல, புழுதி புயலில் சிக்கிய இடம் போல களோபரமாக காட்சி அளித்தது சற்று முன் வரை விறுவிறுப்புடன் செயல்பட்டு கொண்டிருந்த பட்டாசு ஆலை. தொழிலார்களின் அலறல் ஓலமும், சத்தம் கேட்டு வந்தவர்களின் ‘அய்யோ அம்மா…’ என்ற கதறலும் நெஞ்சை மட்டுமல்ல உடலையும் உறைய செய்தது.

சற்று நேரம் என்ன நடக்கிறது என்பதே மூளைக்கு எட்டவில்லை. மூளை சுதாரித்து விவேகமாய் செயல்படும் முன்னே நடந்துவிட்ட விபத்தில் கண்மண் தெரியாமல் அறையை விட்டு தொழிலார்கள் ஓட துவங்கினார்

படபடவென வெடித்து சிதறிய தீ கங்குகள் அதனுடன் சிதறி பறந்துவிழுந்த செங்கற்கள் உயிரை காப்பாற்ற ஓடியவர்கள் மீது மட்டுமல்லாது பீதியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களின் மீதும் விழ தொடங்கியது.

திடீரென நெடுஞ்சாலையில் தோன்றும் பள்ளமாய் அவன் வாழ்வை மாற்றிய பயணத்தின் திருப்புமுனையை விளம்பலானான் விஜயன்.

“அந்த இடம் முழுக்க ஒரே புகை. சரியா எதுவும் தெரியல வைசு எல்லாரும் ஓடுறாங்க, தலையில கால்ல உடம்புலன்னு. காயத்தோட ரத்தம் வழிய மிஞ்சி இருக்கிற உயிர் பிழைச்சா போதும்னு பாதை தெரியாம கல்லு முள்ளு மேல விழுந்து எந்திரிச்சு ஓடுறாங்க,

அம்மாவும் நானும் பயத்துல படப்படப்போட நின்னுட்டு இருந்தோம். பாக்கவே பயங்கரமா இருந்துச்சு வைசு அடுத்தடுத்து இருந்த ரூம் எல்லாம் தொடர்ச்சியா வெடிச்சதுல பறந்து வந்த செங்கல், கல்லு என்மேல விழ கூடாதுன்னு என்ன தள்ளிவிட்டுட்டு அவங்க விலகுற நேரத்துல சிதறின செங்கல் தலையில விழுந்து அந்த இடத்துலேயே அம்மா இறந்துட்டாங்க” என்று நிறுத்தியவனின் மனம் இறந்தவர்களுக்காக ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தியது.

“நினைச்சு கூட பாக்கல வைசு என்ன பாதியிலேயே விட்டுட்டு போவாங்கன்னு. தனியா தூங்க பயமா இருக்கும் அழுகுறது அம்மாவுக்கு பிடிக்காது அழுதா வறுத்த படுவாங்களேன்னு அழுகைய கூட அடக்கி கிட்டேன் அன்னைக்கு. தூங்கும் போது கனவுல அந்த சம்பவம் துரத்தும் ‘அம்மா ன்னு நா கத்துறதும் கிட்ட வராதப்பா போயிட்டுன்னு அவங்க துரத்துரதும்’.

ரொம்ப கொடுமை வைசு அதெல்லாம் நினைச்சு பாத்தா ஒரு வாய் சோறு கூட தொண்டையில இறங்காது பயமில்லாம தூங்க முடியாது!” என்று வேதனையில் விம்மி வெடித்தான் விஜயன்

அவன் சொல்ல சொல்ல அந்த நிகழ்வுகள் எல்லாம் மனக்கண் முன் படமாய் விரிய கண்களில் நீர் வழிய கேட்டு கொண்டிருந்தாள் வைஷாலி.

‘இது தான் அவர்களின் சாபம் போல கந்தக பூமியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கரிமங்களின் நடுவில் உயிரை காக்க உழைத்து ஓய்வது மட்டுமல்லாது மாண்டும் போகின்றனர்’, எண்ணும் போதே நெஞ்சில் வலி ஏறியது அவளுக்கு.

“பசியோட என்னைக்காவது படுத்துருக்கியா வைசு?”, தீனகுரலில் கேட்டு அவள் முகத்தை பார்த்தான் விஜயன்

தலையாட்டவும் மறந்து அவன் வலிகளை உள்வாங்கி கொண்டிருந்தவளின் விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்க. அவள் கண்ணீரை துடைத்து விட்டவன், எழுந்து அவள் அருகில் அமர்ந்து கரத்தோடு கரத்தினை பிணைத்து கொண்டான்

“பல முறை படுத்துருக்கேன் ஒரு ரூபா கூட இல்லாம பசியோட அடுத்தவங்க முகத்தை பாத்து ஏக்கத்தோட தண்ணிய குடிச்சிட்டு பல முறை படுத்துருக்கேன்” என்றான் வலி நிரம்பிய புன்னகையில்

அதற்கு மேல் கேட்க மனம் வரவில்லை அவளுக்கு. ஒன்று இரண்டு என்றால் அடக்கி ஆறுதல் கூறலாம் வாழ்வே வலி நிறைந்திருந்ததாய் இருந்தால் ஆறுதல் சொல்பவர்களுக்கும் ஆறுதல் சொல்ல ஆள் வேண்டுமே. அவள் நிலைமையும் அதே தான்

“ப்ளீஸ் விஜி வேணாம் இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேணாம். சொல்ற உங்கள விட கேக்குற எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உள்ள என்னவோ பண்ணுது ப்ளீஸ் விஜி போனது போகட்டும் விட்டுருங்க” என்று வலிய வற்புறுத்தினாள் வைஷாலி

“இல்லம்மா சொல்லிட்டா மனபாரம் குறையும் பொத்தி பொத்தி வச்சு ஒளிஞ்சுக்க விருப்பமில்ல உள்ளதை சொல்லிட்டா கடைசி வரை மனசு உறுத்தாம சந்தோஷமா வாழ்வேன்” என்ற விஜயன் அனுசரணையாய் அவளை தோளில் சாய்த்து கொண்டான்.

ஆதரவு தேடிய அவள் மனம் சலுகையாய் சாய்ந்து கொண்டது அவன் தோளில்

“அம்மா இறந்து போன விஷயம் தெரிஞ்சு ஊருக்கு வந்த மாமா ஆதரவு இல்லாத என்னை அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு, அங்க ஆரம்பிச்ச வாழ்க்கை தான். இதுவரைக்கும் உன்ன ஏத்துக்க விடாம பண்ணது.”

அவள் முகம் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்

“அது ஒரு நொண்டி சாக்குன்னு கூட வச்சுக்கலாம் வைசு, ஒரு பக்கம் அத்தையோட குத்தல் பேச்சு மறுபக்கம் அத்தை பொண்ணோட ஆறுதல் வார்த்தை, திக்கு தெரியாம திகைச்சு போய் நின்ன என்கிட்ட சகஜமா பழகுனது அவ மட்டும் தான். அத்தையோட காரசரமான வார்த்தைகளுக்கு அவ தான் அனுசரணையா இதமா பேசுவா,

நான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும் வைஷ்ணவி என்னோட வைசு. அவ சிரிக்கிற சிரிப்புக்கு ஈடு இணையே இருக்காது பேசுவா! பேசிக்கிட்டே இருப்பா வாய் ஓயாமா பேசிட்டே இருப்பா. அன்னைக்கு என்னென்ன நடக்குமோ எல்லாத்தையும் ஒப்பிச்சிருவா, நா சோகமா இருந்தா போதும் சிரிக்க வைக்க என்னேன்னமோ பண்ணுவா என்னோட வைஷ்ணவி!”, கண்களில் காதல் மின்ன இதழில் இளநகை துளிர்க்க கூறினான்

அதுவரை துக்கம் துயரம் நிறைந்த குரல் மறைந்து சிருங்கார புன்னகை அரும்பியது அவன் வதனத்தில்.

வைஷ்ணவி வைய்யகமாய் அவனுள் அமிழ்ந்து போயிருந்தாள் பசியில் இருப்பவனிடம் ரொட்டியை நீட்டி கடவுளாய் மாறுவது போல அன்புக்கு ஏங்கிய அவன் மனம் அன்பு செலுத்தியவளை ராஜ பீடத்தில் ஏற்றியது. அன்றைய நாளில் கிடைக்காதா என்று ஏங்கியிருந்தவனுக்கு மொத்தமாய் கிடைத்த உறவாய் போயிருந்தாள் அவள்.

வைஷ்ணவி என்ற பெயரை கேட்டு நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அத்தனை ரசனை அவன் வதனத்தில்

“உண்மையான பாசத்தை அவளுக்குள்ள பாத்தேன் அந்த வீட்டுல போலியான மனுஷங்களுக்கு மத்தியில தன்மையா ஒளிவு மறைவில்லாம பாசமா பேசுன அவள எனக்கு ரொம்ப பிடிச்சது. காரணம் தெரியல? ஆனா.. அது காதல் இல்லைன்னு அப்ப எனக்கு புரியலை, பரிசுத்தமான அன்பை இது தான் காதல்ன்னு எனக்கு நானே தப்பா அர்த்தம் புரிஞ்சுக்கிட்டேன்

அவ சாதரணாமா தான் பழகுனா நான் தான் வீண் ஆசைய மனசுல வளத்துக்கிட்டேன் அவளோட கலங்கமில்லாத மனசு கடைசி வரைக்கும் என்னோட துணையா வரணும்னு ஏங்குனேன் ஆசைப்பட்டேன். பறவை கோபுரத்து மேல ஆசைப்படலாம்! ஆனா அதுமேல சொந்தம் கொண்டாட முடியாது இல்லையா!”, வெற்றுகுரலில் இயம்பியவன்

“நா அவக்கூட சிரிச்சு பேசுறது பழகுறது அத்தைக்கு பிடிக்கலை, அவகிட்ட பேச கூடாதுன்னு உள்ளங்கையில சூடு வச்சுட்டாங்க! என்ன சொல்லி வச்சாங்க தெரியுமா வைசு?”, உணர்ச்சியற்று கேட்டவனை பார்க்க அத்தனை கஷ்டமாய் இருந்தது வைஷாலிக்கு

சிறுபிராயத்தில் நடந்த நிகழ்வு அப்பட்டமாய் அவன் நினைவில் அரங்கேறின.

ஒரு கை கரண்டியை அடுப்பில் காட்டியபடியும் மறுக்கை விஜயனின் கையை பற்றியபடியும் ஆத்திரத்துடன் உறுத்து விழித்தபடி “பிறந்தவோடனே அப்பன தலை முழுகுன! கொஞ்ச நாள்ல அம்மாவ முழுங்குன! இப்போ யார் குடிய கெடுக்க இங்க வந்துருக்க? நீ பிறந்த நேரம் சரியில்லன்னு தான் உன்னோட அப்பனே ரெண்டுபேரையும் நட்டாந்திரத்துல விட்டுவிட்டு போனான். எந்த நேரத்துல இந்த வீட்டுல கால் எடுத்து வச்சியோ அப்ப ஆரம்பிச்சாது ஏழரை விட்டு ஒளிவேணாங்குது” என்று பொறிந்தவர் பழுக்க காய்ச்சியை தாளிப்பு கரண்டியை பிஞ்சு விரலில் ஈவு இரக்கமற்று பதிய வைத்தார்

அந்த நேரத்தில் அவரை பார்க்கும் போது மனித உருவம் கொண்ட தாடகை போலவே தெரிந்தது அவனுக்கு.

வலியில் கதறி துடித்தான் பட்டு போல கிள்ளி வைத்ததும் ரத்தம் கோர்க்கும் விரல்களில் தகிக்கும் கரண்டியை வைத்து எடுக்க சதையை பிய்த்து கொண்டு தெரிந்தது காயம்.

“அம்மா.. அம்மா..” என கையை உதறி இல்லாதவளை அழைத்து கதறியவன் வலியில் கத்தி கொண்டிருக்க “இனி ஏம் பொண்ணுகூட சிரிச்சு பேசுறதை பாத்தேன்.., கையில வச்ச சூடு உடம்பு முழுக்க வச்சுறுவேன் பாத்துக்கோ. அண்டி பிழைக்க வந்த நாய்க்கு அந்தஸ்து கேக்குதோ?” என்று மனித தன்மை அற்று கண்டித்துவிட்டு கோபமாக சென்றார், என்பதை கேட்டு துடித்து போனாள் வைஷாலி

வேகமாக அவன் கரத்தினை பற்றி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவள் சன்னமாய் தெரிந்த காயத்தை கண்டு மனம் வலிக்க மயிலிறகாய் வருடி கொடுத்தாள்.

தீயின் வெம்மை தெரிந்தது அவள் கண்ணீரில். உப்பு நீர் துளிகள் விரல்களில் தடம் பதித்த காயத்தினில் பட்டு தெறிக்க. சன்னமாய் கேட்ட விசும்பல் ஒலியில் அவள் முகம் நிமிர்த்தியவன்

“அழுகாத வைசும்மா அப்ப வலிச்சது இப்போ வலிக்கலடா காயம் நல்ல ஆறிருச்சு!” என்று இதமாய் கூறி முயன்று புன்னகைக்க

“பாவி நல்லா இருப்பாளா இப்டியெல்லாம் பண்ணிருக்காளே அவ மனுஷியே இல்ல அரக்கி!, சின்ன பையன்னு கூட பாக்காம எப்டி சித்திரவதை பண்ணிருக்கா?” என்று வைஷாலி வசைபாட இதழ்விரியா புன்னகை நீட்சியாய் மாறியது அவன் அதரத்தில்

“இதே மாதிரிதான் அவளும் துடிச்சா காயத்தை பாத்து பாத்து அழுதா மாமாகிட்ட சொல்லி அத்தைக்கு செமத்தியா திட்டு வாங்கி கொடுத்தா, காயம் ஆறுற வரைக்கும் வைஷ்ணவி தான் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டா. அதுவே அத்தைக்கு என்மேல தீராத வன்மம்ன்னு சொல்லுவாங்களே? அந்த மாதிரி கோபத்தை உண்டு பண்ணிருச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராசியில்லாதவன்னு சொல்லி சொல்லி மனச கஷ்டப்படுத்துவாங்க,

அத்தையோட குணம் தெரிஞ்சு அவங்க தொந்தரவு தாங்க முடியாம மாமா என்ன ஆஸ்ரமத்துல கொண்டு போய் சேத்தாரு, ஆரம்பத்துல.. அந்த சூழ்நிலை என்னவோ ஒரு மாதிரியா தான் இருந்துச்சு ஆனா.., அங்க இருந்தவங்களை பாக்க பாக்க அந்த அளவுக்கு நாம இல்லையேன்னு சூழ்நிலைய ஏத்துக்க பழகிருச்சு மனசு.

வாரம் தவறாம என்ன பாக்க வந்துருவா வைஷ்ணவி

காலேஜ் யூஜி பண்ணும் போது தான் எனக்குள்ள உணர ஆரம்பிச்சேன் அவமேல எனக்கு ஏற்பட்டது வெறும் ஈர்ப்பு இல்ல வேற ஏதோன்னு.  எனக்குள்ள ஏற்பட்டை மாற்றத்தை அவகிட்ட சொன்னேன் ஆனா இந்த வயசுல எல்லாருக்கும் ஏற்படுறது தான்னு சாதாரணமா சொல்லிட்டு போயிட்டா,

ஆனா என்னால அப்டி எடுத்துக்க முடியலை? அவகிட்ட இயல்பா பேசவோ சிரிக்கவோ மனசு ஒத்துழைக்கல ஒரு கட்டத்துல மனசுல இருக்குறத அவகிட்ட விளக்கி சொல்லாம்னு இருந்தப்போ வேற ஒருத்தர விரும்புறேன் வந்து நின்னா?”, அனாயசமாய் உரைத்தான். அவன்  முகத்தில் துளியும் வருத்தின் சுவடுகள் இல்லை

Advertisement