Advertisement

விஜயன் சென்ற சற்று நேரத்தில் இல்லம் வந்த துவாரகா ஆளுக்கொரு பக்கமாய் திரும்பி அமர்ந்திருப்பதை கண்டு ‘என்னாச்சு இவங்களுக்கு’ என்றபடியே மூவரின் முக பாவனையும் ஆராய்ந்து கொண்டே விஷ்ணுவின் அருகில் வந்து அமர்ந்தவன் “என்னாச்சுடா ஏ மூணு பேரும் இப்டி உக்காந்துட்டு இருக்கீங்க” என்று கேட்க

அதுவரை உர்ரென முகத்தை வைத்து கொண்டு மனதோடு பொறுமி கொண்டிருந்த வைதேகி வேகமாக எழுந்து சமையலறைக்குள் சென்றுவிட, சஞ்சளாவும் துவாரகாவை பார்க்க விருப்பமில்லாமல் சட்டென எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்

மனம் சோர்ந்து போனது சஞ்சளாவிற்கு ‘இப்போதெல்லாம் அவனிடம் சகஜமாக பேசுவதே இல்லை அவனை விட்டு விலகி ஒதுங்கி செல்வது போன்ற ஓர் எண்ணம் தோன்றியது அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்துவிட்டு சென்று இரண்டு நாட்கள் ஆன போதும் அதை பற்றி தன்னிடம் ஒன்றுமே கூறவில்லையே? என்ற ஏக்கம் உயிரை அறுக்க யாரிடமும் எதையும் காட்டாது வேதனையை அடக்கி கொண்டபடியே வலம் வந்தாள்

‘என்ன இது இப்டி சிலுப்பிட்டு போறாங்க’ என்று ஒரு மாதிரியாக பார்த்தவன்  “என்னடா ஆச்சு?” என்று கேட்க

“ப்ச் வைதேகிக்கும் எனக்கும் ஒரு சின்ன சண்டை அதான் முகத்தை திருப்பிக்கிட்டு போறா!” என்றான் விஷ்ணு அசட்டடையாக

‘வைதேகி போறது சரி! சஞ்சு ஏ… முகத்தை திருப்பிக்கிட்டு போறா..?’ என்ற விளங்காத குழப்பத்துடன் “சரி விஜிக்கு இப்போ எப்டி இருக்குடா தூங்கிட்டு இருக்கானா?” என்று விசாரிக்க

“அவன் எங்க இங்க இருக்கான் திருச்சிக்கு கிளம்பி போய்ட்டான் அவன் போனதும் நீ வர”

“திருச்சிக்கா? டேய் அவனுக்கு இன்னும் உடம்பு சரியாகல இந்த நேரத்துல எதுக்கு டிராவல் பண்றான்? எதுனாலும் உடம்பு சரியானதும் போகவேண்டியது தானே?” என்று கோபத்தை காட்டியவன் “ஆமா இப்போ எதுக்கு திருச்சி போறான்? ஏன் பேசுனது போதலையாமா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க

“ஆமா நா சொன்னதும் கேட்டுருவான் பாரு போடா.., அவசரப்பட்டு அவன் பண்ண தப்ப சரி செய்ய போறானாம் போகட்டும் ஒரு முடிவு தெரிய வேணாமா? போய் பேசிட்டு நல்ல முடிவை சொல்றேன்னு சொல்லிருக்கான் பாப்போம் என்ன முடிவ சொல்றான்னு?” என்று சிந்தனை செய்தபடியே கூறியவன்

“சரிடா கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரலாமா?” என்று துவாரகாவின் தோளில் கைபோட்டு சமையல் அறையை நோட்டம் விட்டபடி கேட்க

“இந்த வேகாத வெயில்ல இப்போ தான் வெந்துபோய் வந்துருக்கேன் மறுபடியும் வெளிய எங்கடா கூப்பிடுற?”,வெட்கை தந்த  கசகசப்பில் எரிச்சலுடன் கேட்க

“சும்மா அப்டியே ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வரலாம் வரும் போது மதியம் சமையக்கிறதுக்கு தேவையான காய் வாங்கிட்டு வந்துறலாம், என்ன வாங்கிட்டு வரணும்னு உன் தங்கச்சிகிட்ட கேளு வாங்கிட்டு வரலாம்” என்று அவளை சீண்டி கோபத்தை தூண்டும் விதமாக சற்று உரக்க பேசினான் விஷ்ணு

“ஏன் அத நீ கேக்க கூடாதா நான் தான் கேக்கணுமா என்ன?” என்று புருவம் உயர்த்தி சந்தேகமாய் கேட்க

“ப்ச் கேளுடா..!” என்று விஷ்ணு சலுகையாய் கன்னத்தில் இடிக்க

ஒரு மார்க்கமாக பார்த்தவன் “ம்..சரியில்லையே..” என்றுவிட்டு வைதேகியிடம் பேச வாய் திறக்கும் முன்பே சமையல் அறையில் இருந்து வந்த குரலில் கப்சிப்பென்று அடங்கி போனான் துவராகேஷ்

“மதியம் நா சமைக்க போறது இல்ல வேணும்னா நீங்களே சமைச்சு சாப்பிடுங்க இப்போ சமையல் ஒன்னு தான் குறை” என்று வந்த காரசாரமான பதிலில் திருதிருவென விழித்து திகைத்தபடி விஷ்ணுவை பார்க்க

எதிர்பார்த்தது தான் என்ற ரீதியில் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தான் விஷ்ணு,

“டேய் வேகாத வெயில்ல வந்த என்ன வெறும் வயித்தோட அனுப்பிறாதீங்கடா பசி உயிர்போகுது” என்றான் பட்டினியில் அடிப்பட்டவன் போல பாவமாக முகத்தை வைத்து கொண்டு

“ப்ச் நா எதுக்கு இருக்கேன் இன்னைக்கு மதியம் நா சமைக்கிறேன் அவ பண்ணலன்னா என்ன? பசிக்கிதுன்னு சொல்லிட்ட இருக்குறத வச்சு சமைக்கிறேன், நா இருக்கேன்டா உனக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல சாப்பாடு ரெடியாகிரும்” என்று நண்பனின் தோளை அணைத்து விடுவித்த விஷ்ணு சமையல் அறைக்குள் நுழைய வேகமாக அறையில் இருந்து வெளியேறினாள் வைதேகி

அவன் பின்னோடு வந்த துவாரகேஷ் “டேய் உனக்கு சமைக்க தெரியுமா?” என்று சந்தேகமாய் கேட்டு விழிக்க

“எல்லாம் எனக்கு தெரியும் நீ கொஞ்ச நேரம் வெளிய இரு ரெடியானதும் கூப்பிடுறேன் இடையில வந்து இடைஞ்சல் பண்ண காரத்தை அள்ளி கொட்டிருவேன் சாப்பாட்டுல” என்று மிரட்டியவன் அடுக்கி வைத்திருந்த டப்பாக்களை ஆராய தொடங்கினான்

‘சொன்னதை செய்தாலும் செய்துவிடுவான்’ என்ற அச்சத்தில் “என்னமோ பண்ணு சாப்பாடு வந்தா சரி” என்று சலிப்புடன் கூறிவிட்டு பால்கனியில் வந்து நின்றுகொண்டான் துவாரகேஷ்

கிரஹபிரவேசம் அன்று துவாரகாவின் திருமணத்தை பற்றி விசாலாட்சியும் அன்னமும் பேசிய தருணங்கள் அவள் நினைவை விட்டு அகல மறுத்தன “துவாரகா அத்தை நாளைக்கு வர்றாங்க அநேகமா அவங்க பொண்ணுக்கு என்னோட பையன்ன கேட்டு வர்றாங்கன்னு நினைக்கிறேன் நெருங்குன சொந்தம்” என்று விசாலாட்சி பேசியது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல அத்தனை உவப்பாய் இருந்தது சஞ்சளாவிற்கு

‘பெண்வீட்டார் வந்து சென்று இரண்டு நாட்கள் ஆகிற்று ஆனால் அதை பற்றி சிறு குறிப்பு கூட காட்டவில்லையே?’ என்ற எண்ணமே நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் சுருக்கென்று தைக்க அவனிடம் கேட்கவா வேண்டாமா என்று மனம் அலைமோதியது சஞ்சளாவிற்கு

‘கேட்டால் என்ன நினைப்பார்?

என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே? ஒருவேளை அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்தால் என்னுடைய விருப்பத்தை கூறிவிடலாம் எத்தனை நாள் தான் எனக்கு நானே தளை போட்டு கொள்வது என்றோ ஒரு நாள் தெரிய வேண்டிய விஷயம் அது இன்றே தெரியட்டும்!’

யோசனையை ஒதுக்கிவிட்டு செயலில் இறங்கினாள் சஞ்சளா வேகமாக அவன் இருக்கும் இடம் சென்றவள் “சார்”என்று அழைக்க

பார்வையை இலக்கற்று அலைபாய விட்டு கொண்டிருந்தவன் அவளின் குரல் கேட்டு திரும்பி “என்ன” என்று புருவம் உயத்தினான்

“உங்ககிட்ட ஒரு விஷயம்.. கேட்கணும் ரெண்டு நாள் முன்னாடி உங்கள பாக்க யாரோ வர்றாங்கன்னு சொன்னிங்களே வந்தாங்களா..?” என்று தயங்கி கேட்டவள் அவன் பதிலை எதிர்பார்த்து ஆவலோடு முகத்தை பார்க்க

நிதானமாக அதே நேரம் அழுத்தமான பார்வையை அவளிடத்தில் செலுத்தியவன் அவளது ஆர்வத்தை கண்டு “ரெண்டு நாளா என்கிட்ட சரியா பேசாததுக்கு காரணம் இதுக்கு தானா?” என்று சிரிப்பை வாய்க்குள் அதக்கியவன் “ம் வந்தாங்களே” என்று ஒரு வரியில் அசுவாரஸ்யமாய் கூற

மனம் சோர்ந்து போனது அவளுக்கு ஏன் என்னிடம் அதை பற்றி கூறவில்லை என்று கேட்டால் கோபம் கொள்வானோ? என துவாரகாவின் முகத்தை பார்க்க அப்படி ஒன்றும் இல்லை என்று காட்டியது அவன் வதனம்

ஆரம்பிக்கும் போதே வார்த்தைகள் குழறின ‘ஆரம்பமே இப்படியா?’ என்று அலுத்து கொண்டவள்

“வந்தவங்க என்ன சொன்னாங்க? அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?” என்று படபடப்புடன் கேட்க

அடக்கிய சிரிப்பு இதழில் மெல்ல எட்டி பார்க்க அவளிடம் காட்டி கொள்ளாது முயன்று அடக்கியவன் “ம் எல்லாம் பேசி முடிச்சாச்சு சஞ்சு நல்ல விஷயம் தான் அவங்க பொண்ணுக்கு என்ன மாப்பிள்ளை கேட்டு வந்துருந்தாங்க பேச வேண்டியதை பேசி முடிச்சாச்சு” என்று மொட்டையாக கூற

சஞ்சளாவின் முகம் மட்டுமல்ல அகமும் வாட்டமுற்றது, அவ்வளவு தானா? என்று எண்ணும் போதே தொண்டை அடைத்து கொள்ள ஏதும் பேசாது திரும்பி செல்ல எத்தனிக்க அதுவரை அவளது முக மாறுதலை கவனித்து கொண்டிருந்தவன் கேட்க வேண்டியதை கேட்காமலே போகிறாளே என கணீர் குரலில் தடுத்து நிறுத்தினான்

“ஏய் நில்லு? நீயா வந்த ஏதோ கேட்ட கேட்க வேண்டிய மீதி விஷயத்தையும் கேட்காமலே போறயே?” என்று பூடகமாய் பேச

“போதும் சார் என்ன நடந்துருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியும் உங்களுக்கு ஒரு நல்லது நடந்தா எனக்கு அது சந்தோஷம் தான் கேட்டது வரை போதும்” என்று முயன்று முறுவலை வரவழைத்து கொண்டு வேகமாக அங்கிருந்து நகன்றாள் சஞ்சளா

கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு என சமைப்பதற்கு தேவையான சகிதமும் எடுத்து வைத்து கொண்டவன் குக்கரில் சாதம் வைத்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க

சமையல் அறை வாசல் சுவரில் சாய்ந்து நின்றவாறு ரசனையுடன் அவன் சமைக்கும் பக்குவத்தை பார்த்து கொண்டிருந்த வைதேகி சின்ன சின்ன வேலையை கூட திருத்தமாக செய்யவதை உள்ளூர மெச்சி கொண்டவள் என்ன செய்கிறான் எப்படி செய்கிறான் என்று கவனமாக பார்வையிட வாசல் புறம் நின்றிந்தவளின் மீது அவ்வப்போது அவன் விழிகள் குறுஞ்சிரிப்புடன் தீண்டி மீண்டு சென்றன

வேகமாக சமையலை முடித்தவன் உணவுகளை பாத்திரத்தில் நிரப்பி ஹாலில் கொண்டு வந்து வைத்துவிட்டு “டேய் துவாரகா சாப்பாடு ரெடி” என்று உரத்த குரலில் மற்ற இருவருக்கும் கேட்கும் விதமாக கூவினான்

வேகமாக வந்த துவாரகா”என்ன சமையல்டா? வாசனையே செம்மையா இருக்கு” என்று கண்களை மூடி வாசனையை நாசியில் நிரப்பியபடி அமர

“கேர்ட் ரைஸ் வித் போட்டேட்டோ ஃபிரை கஷ்டப்பட்டு சமைச்சுருக்கேன் மிச்சம் வைக்காம வேணுன்ற அளவுக்கு போட்டு சாப்டுங்க” என்று ஓரக்கண்ணால் துவாரகாவை பார்த்து கொண்டே மூவருக்கும் பரிமாற தொடங்கினான் விஷ்ணு

 பெயரை கூறியதும் துவாரகாவின் முகம் அஷ்டகோணலாய் மாறியது உதட்டை சுளித்து கொண்டு “இதுக்கு தான் இவ்ளோ பில்டப் கொடுத்தியா.. ஏண்டா தயிர் சாதம்னு முன்னாடியே சொல்லிருக்க கூடாது நா கடையில போயாவது சாப்ட்டு வந்திருப்பேன்ல” என்று நொடித்து கொள்ள

“ப்ச் இன்னைக்கு ஒருநாளைக்கு தானடா? பசிக்கிதுன்னு சொல்லவும் டக்குன்னு மண்டையில் உதிச்சது இது தான் எதுவும் சொல்லாம சாப்டு பசி ருசி அறியாது!” என்று வசனம் பேசி மூவருக்கும் பரிமாறியவன் தனக்கும் சேர்த்து போட்டு கொண்டான்

தயிர் சாதம் என்றாலும் அமிர்தமாய் இறங்கியது வைதேகிக்கு கணவனின் கைப்பக்குவதை ருசித்தவள் விழிகள் வியப்பில் விரிய

அவள் வியப்பை கண்டு ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தி பார்வையால் கேட்டவனுக்கு ‘ஒன்னுமில்ல’ என்று முகில் நகை புரிந்து தலையாட்டியவள் உணவில் கவனத்தை செலுத்தினாள்

Advertisement