Advertisement

இரண்டு நாட்கள் ஆகிற்று விஜயன் வைஷாலியுடன் பேசி உடல் சோர்ந்து போய் இருந்த காரணத்தினால் அவளுக்கு அழைப்பு விடுத்து பேசவில்லை அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை

மாத்திரையின் செயலிலும் உடன் இருந்தவர்களின் அக்கறையான கவனிப்பிலும் உடல் நிலை சற்று தேறி இருந்தது ஆனால் மனம் தான் அவனுக்கு தெளியவில்லை தேறவுமில்லை.

அவள் அழுது கொண்டே சென்றது உறக்கத்திலும் உடன் வந்து இம்சிக்க நொடி பொழுதும் அவளது நினைவே ‘உண்டாளா? இல்லையா? என்ன செய்வாள் செய்து கொண்டிருப்பாள்?’ என்று அவளை சுற்றியே மனம் வலம் வர, வேகமாக அலைபேசியை எடுத்த விஜயன் பேசவா வேண்டாமா என ஒருவித தவிப்புடன் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான்

‘பேசிய வார்த்தைகளின் சுவடு இன்னும் மறையவில்லை! அதற்குள் சமாதானம் என்றால் ஏற்பதாக இருக்குமா? அல்லது ஏற்று கொள்வாளா..?’ என்ற தயக்கம் மோலோங்க எண்களை தட்டுவதும் பின் அழிப்பதுமாக மனதின் பதட்டத்தை விரல்களை கொண்டு தந்தியடித்தபடி தணித்து கொண்டிருக்க

அவனது அலைபேசி சன்னமாய் சிணுங்கியது.

திரையில் மின்னிய புதிய எண்ணை கண்டு புருவம் சுருக்கியவன் அழைப்பு மணி நீண்டு கொண்டே செல்லவதை உணர்ந்து அணைந்து போகும் தருவாயில் அவசரமாக உயிர்ப்பித்து காதில் வைக்க

மறுமுனையில் பேச்சில்லை கனத்த மௌனம் நிலவியது சற்று பொறுத்து பார்த்து பொறுமையிழந்து போய் மௌனத்தை உடைக்கும் விதமாய் “ஹலோ ஹாலோ.. லைன்ல இருக்கீங்களா இல்லையா?” என்று சன்ன குரலில் பேசியவனுக்கு பதில் கிட்டவில்லை என்றதும் சட்டென அழைப்பை துண்டித்துவிட்டு சிக்னல் கிடைக்கவில்லையோ என்றெண்ணி மீண்டும் அதே எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

முன்பு போலவே பேச்சில்லை ஆனால் அழைத்தது யார் என்று கண்டுகொண்டான்? மறுமுனையில் சன்னமாய் செவிகளை எட்டிய பெயரை வைத்து அழைத்தது அவள் தான் என்று தெரிய இதழோரம் அளவாய் ஒர் புன்னகை அவனையும் மீறி அரும்பியது, முதல் முறையாக குறும்பான புன்னகை எட்டி பார்த்தது அவன் அதரத்தில் பேசவில்லை அழைப்பை துண்டித்துவிட்டான்

விஜயனுக்கு உடல்நிலை சரியில்லை என்று முதல் நாளே துவராகா கூறிவிட அவனை பற்றிய எண்ணம் மட்டுமே அவள் சிந்தையில் நிறைந்திருந்தது, வேலை எதுவும் ஓடவில்லை ‘என்ன செய்வான்? எப்படி இருக்கிறான்? நலம் தானா..?’ என்று பரிதவித்தவள் மனம் கேளாமல் அழைப்பு விடுத்துவிட்டு அவன் குரல் கேட்டால் போதுமென்றே அமைதியாய் இருந்தாள்

‘மானம் கெட்ட மனது எத்தனை முறை அவமதித்தாலும் அவனுக்கு ஒன்றென்றால் துடித்து பதறுகிறதே’ என்று தன்னையே கடிந்து கொண்டவள்

“ஏப்பா… போன் பேசிட்டு இருக்கும் போது பேர் சொல்லி கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?” என்று சலிப்பாய் எரிச்சலை காட்ட

“ஏம்மா உன்னோட பேர சொல்லி தானே கூப்பிட முடியும்? வைசு குட்டின்னு சொன்னது தப்பா?” என்றார் கிருஷ்ணன் விளங்காத குரலில்

“ப்ச் போங்கப்பா இன்னேரம் அவன் கண்டுபிச்சிருப்பான்” என்று சலித்து கொண்டே சோர்வுடன் அறைக்குள் சென்று முடங்கி கொள்ள மகளின் அர்த்தமற்ற பேச்சில் விளங்காது விழித்தவர் மனைவி அழைக்கும் குரல் கேட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்

அறைக்குள் சென்றவளுக்கு மனம் நிலை கொள்ளவில்லை “கேட்டுருப்பானா கேட்டிருக்குமோ? அதனால் தான் அழைப்பை துண்டித்தானா? என்னைபற்றி என்ன நினைத்திருப்பான்! அத்தனை தூரம் வக்கணையாய் வாய்கிழிய வசனமெல்லாம் பேசிவிட்டு இப்போது அழைப்பு விடுத்திருக்கிறாளே என்று ஏளனமாக எண்ணமாட்டானா?” என்று வாய்விட்டே புலம்பியவள்

“என்ன நினைத்தால் என்ன? இது தான் நான் என்னுடைய குணம் இது தான்! எதிரியாய் இருந்தாலும் நலம் விசாரிக்க அழைப்பு விடுப்பது சகஜம் தானே?” என்று மிடுக்குடன் தனக்கு தானே நொண்டி சமாதானம் செய்து கொண்டவள் வலிய அவன் நினைவுகளை ஒதுக்கிவிட்டு அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினாள் வைஷாலி

அதுவரை தனிமையில் சிரித்து பழக்கமில்லை ஆனால் சிரித்தான் அவளின் மௌனத்தை எண்ணி மந்தகாசமாய் சிரித்தான் விஜயன், அவளின் மௌனமான அழைப்பு அவளை காண வேண்டும் என்ற உந்துதலை அளித்த அதே நேரம் அவள் முகத்தை பார்த்து எப்படி பேசுவது என்ற தயக்கத்தையும் அளித்தது

குடிப்பதற்கு வெந்நீர் கொண்டுவந்து வைத்த வைதேகி “அண்ணா குடிக்க தண்ணி வச்சிருக்கேன் சூடு ஆறினதும் குடிங்க” என்றுவிட்டு தயக்கத்துடன் அவன் முகத்தை பார்க்க

அவள் தயங்கி நிற்பதை கண்டு “என்னம்மா ஏதாவது சொல்லனுமா?”

“ஆமாண்ணா! சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது எதுக்காக நீங்க வைசுகிட்ட அப்டி பேசுனீங்கன்னும் எனக்கு தெரியாதுஎனக்கு தெரியவேண்டிய அவசியமும் இல்ல, ஆனா.. ஒன்னு மட்டும் நல்லா தெரியும்?

அவக்கூட நீங்க வாழ்ந்தா கடைசிவரைக்கும் சந்தோஷமா இருக்கு முடியும் அதுக்கு நா உத்தரவாதம் கொடுக்கிறேன், அந்த அளவுக்கு அவ உங்களை நேசிக்கிறா? உண்மையா நேசிக்கிற யாரும் அவ்ளோ சீக்கிரம் நேசிக்கிறவங்களை வெறுத்து விலகிட மாட்டாங்க!,

உங்க பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் உங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியல நா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இப்பவும் நேரம் இருக்கு நிதானமா யோசிச்சு ஒரு நல்ல முடிவை எடுங்க விஜிண்ணா இனிமே நீங்க எடுக்கபோற முடிவு காலத்துக்கும் உங்கள சந்தோஷமா வச்சுருக்கும்!” என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சிறு புன்னகையுடன் நகர்ந்து சென்றுவிட

அவளிடம் எப்படி பேசுவது என்று அதுவரை எண்ணி மருகியவன் வைதேகியின் பேச்சில் சற்று திடத்தை வரவழைத்து கொண்டான்.

‘அவள் ஏற்று கொண்டாலும் இல்லையென்றாலும் இனி மீதி உள்ள காலம் அவளோடு தான்?’ என்ற எண்ணமே உடலின் பலகீனத்தை புறம் தள்ளி பலம் அடைய செய்தது வேகமாக திருச்சி செல்ல இணையத்தில் பயண சீட்டை பதிந்துவிட்டு அவசர அவசரமாக குளித்து முடித்து உடைமாற்றி கொண்டு வெளியே வர

தொலைக்காட்சியில் கமிஷ்னர் சடகோபனின் பேட்டியை கண்ணிமைக்காது பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு,

“சாந்த மூர்த்தியின் மகன் தான் அனைத்து குற்றங்களையும் செய்தது சற்று மனநிலை சரியில்லாதவர்” என்ற அவரின் சாமர்த்தியமான பேச்சில் சிரிப்பும் திகைப்பும் இழையோட பார்த்து கொண்டிருந்தவன் அவசரமாக அறையில் இருந்து  வெளிபட்டவனை கண்டு வியந்து போனான்

‘எழுந்து நிற்க கூட முடியமால் தடுமாறியவன் இப்போது உற்சாகமாய் நடந்து வந்து நிற்கிறானே..’ என்று குழப்பமாய் எண்ணி

“என்னடா எங்க கிளம்பிட்ட? உனக்கு தான் உடம்பு இன்னும் சரியாகலையே படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே?” என்று தன்மையாக கேட்க

“திருச்சிக்கு போறேன் விஷ்ணு” என்றான் கம்மிய குரலில்

துள்ளி எழுந்து “திருச்சிக்கா? உனக்கு வேலை செங்கல்பட்டு தானே?” என்றவனுக்கு அதிர்ச்சியை மீறிய கோபம் உண்டானது

“வேலை விஷயமா போகலை சொந்த விஷயமா போறேன் நா பண்ண தப்ப நான் தானே சரிபண்ணனும்? அதான், போய்ட்டு நல்ல முடிவை சொல்றேன்” என்று தாழ்ந்த குரலில் சொல்ல

“எதுக்கு இப்போ திருச்சிக்கு?, ஏ அவ உயிரோட இருக்குறது உனக்கு உறுத்தலா இருக்கா” என்றான் விஷ்ணு குத்தலாக

“ஏண்டா இப்டி பேசுற அவசரப்பட்டு பேசுனதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேனே போதாதா ப்ளீஸ்டா.. புரிஞ்சுக்கோ”

“நீ யார புரிஞ்சுகிட்ட நா உன்ன புரிஞ்சுகிறதுக்கு? நீ உன்னோட இஷ்டத்துக்கு பேசிட்டு அப்றம் மன்னிச்சிருன்னு ஒரு வார்த்தையில உன்னோட தப்ப சரி பண்ணிக்கிவ, ஆனா.. காயப்பட்டவங்க நீ பேசுனதை எல்லாம் மறந்துட்டு உன்கூட சிரிச்சு பேசணும் அப்டிதானே?, சரியான சுயநலவாதியா இருக்கியே விஜி,

நீ பேசுன பேச்சுக்கு அவ உன்ன எதுவும் பண்ணாம போனாளேன்னு சந்தோஷப்படு இனிமே அவள தொந்தரவு பண்ணாத, அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே மறுபடியும் எதுக்கு முதல இருந்து ஆரம்பிக்கிற? கடைசி வரைக்கும் யாரையும் புரிஞ்சுக்காம நீ நீயாவே இருந்துட்டு போ விஜி அவள விட்டுரு இப்போ தான் அவ நல்ல முடிவை எடுத்துருக்கா அதையும் கெடுத்துறாத எதுவும் பேசாம உள்ள போ” என்றான் கடுமையான குரலில்

‘பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு வேண்டினால் பேசிய அனைத்தும் இல்லையேயென்றாகி விடுமா படட்டும் அவளை அழ வைத்ததற்கு இது கூட இல்லையென்றால் எப்படி?’ என்று கறுவியவன் விஜயனின் முன்னால் வந்து நின்று வழி மறித்து போகவிடாதபடி நின்று கொண்டான்

“ப்ச்” என்று அலுத்து கொண்டவன் “டேய் நா போகணும் விஷ்ணு அவகிட்ட பேசுனா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றவனின் குரல் மட்டுமல்ல முகமும் சற்று கடுமையை பூசி கொண்டது

“முடியாது விஜி?” என்று அழுத்தமாக கூறிய விஷ்ணு

“எது பேசுறதா இருந்தாலும் ஃபோன்ல பேசிக்கோ நேர்ல பாத்து பேசுற வேலை வேணாம், செம்ம கோபத்துல இருக்கா கொலை பண்ணா கூட ஆச்சர்யம் இல்ல”

“டேய் உனக்கு புரியிதா புரியலையா? அவ என்ன கொன்னாலும் பரவாயில்ல அவகிட்ட பேசியே ஆகணும் என்ன தடுக்கிற வேலை வச்சுக்காத ரொம்ப நேரம் யோசிச்சு இப்போ தான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன் நீயே அதை கெடுத்துறாதடா..” என்று விஜயனும் அவனுக்கு சளைக்காமல் அவனை விட இருமடங்கு அழுத்தமாய் நிற்க

இருவரின் பேச்சு வார்த்தைகளையும் சமையல் அறை நிலை வாயிலில் சாய்ந்தவாறு கேட்டு கொண்டிருந்தனர் வைதேகியும் சஞ்சளாவும், விஷ்ணுவின் கோபமான பேச்சு வைதேகிக்கு வயிற்றில் கிலியை கிளப்ப வார்த்தை முற்றிவிடும் முன் தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்ணுவின் அருகில் சென்றவள் “மாமா அண்ணா தான் நல்ல முடிவை சொல்றேன்னு சொல்றாருல்ல போகட்டும் விடுங்களேன்!” என்று அனுமதியின்றி ஆஜரானவளை எரிக்கும் பார்வை பார்த்தவன்

“ஓணானுக்கு வேலி சாட்சியா?உங்க அண்ணனுக்கு நீ சப்போர்ட்டா? உன்னோட வேலைய மட்டும் பாரு இதுல நீ தலையிடாத!” என்று வெடுக்கென கூறியதும் கூம்பிய மலராய் வந்த வழியே சுவடில்லாமல் சென்றுவிட்டாள் வைதேகி

“டேய் இப்போ எதுக்கு அவ மேல கோபப்டுற தப்பு பண்ணது நான் தானே? என்மேல இருக்குற கோபத்தை யார்யார்மேலயோ காட்டிட்டு இருக்காத விஷ்ணு” என்று கோபமாக பேச

“திருச்சிக்கு நீ போக வேணா விஜி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது, அதான் சொல்ல வேண்டியதை அவகிட்ட தெளிவா சொல்லிட்டல்ல அப்றம் என்ன?” என்று மீண்டும் அதே புராணத்தை தொடங்க

சலிப்புடன் நெற்றியை நீவிவிட்டபடி”நா திருச்சிக்கு போவேன் யார் தடுத்தாலும் சரி நா போறேன் என்னால இங்க இருக்க முடியாது!, ஒருவேளை என்ன பாக்க விருப்பமில்லன்னு வைசு சொல்லட்டும் நா அவள தொந்தரவு பண்ணல?,

ஒரு தடவை அவள நேர்ல பாத்து பேச வேண்டியதை பேசிடுறேன் அப்றம் அவளே முடிவெடுகட்டும்” என்று கோபம் தணியாமல் தீர்க்கமாய் கூறியவன் “சாரி விஷ்ணு என்ன மன்னிச்சிறு” என்று அவனை கடந்து விறுவிறுவென சென்றுவிட

அவன் செல்லும் வேகத்தை பார்த்து தடுக்க தோன்றவில்லை  விஷ்ணுவிற்கு ‘போகட்டும் கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் சரி’ என்று சிறு புன்னகை மிளிர அவன் சென்ற திசையை பார்த்தவன் மனைவியின் கோப முகத்தை கவனிக்கவில்லை.

Advertisement