Advertisement

தற்செயலாக அவனை சந்தித்த சபரி வலுக்கட்டாயமாக இல்லம் அழைத்து வந்தான் என்பதை கூறிமுடித்தவனுக்கு “நா பண்ணது ரொம்ப பெரிய தப்புடா அவசரப்பட்டுட்டேன்னு தோணுது” என்று நிமிர்ந்து இருவரையும் பார்க்க முடியாது தலை குனிந்து கொள்ள

அதுவரையில் கோபத்தை காட்டாது பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர், “கோபமாக பேசினால் கூண்டுக்குள் அடைபட்ட பறவையை போல அனைத்தையும் அடக்கி கொள்வான் உடலும் மனமும் பலகீனமாக இருக்கும் நேரத்தில் ஆத்திரத்தை காட்டுவது சரியாய் இராது” என்று எண்ணிய விஷ்ணு

 “ச்சே ச்சே நீ பண்ணது சரிதான் விஜி பாவம் எத்தனை நாளைக்கு தான் அவ உன்னோட மனசு மாறும்னு காத்துட்டு இருப்பா? இன்னைக்கு அவகிட்ட வெளிப்படையா பேசுனது ரொம்ப நல்லதா போச்சு!, கிருஷ்ணன் அங்கிள் அவளுக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு என்கிட்ட முன்னாடியே சொல்லி வச்சுருந்தாரு அவள மாதிரி தான்! நானும் உன்னோட மனசு மாறும்னு நினைச்சேன் ஆனா நீ உன்னோட முடிவ தெளிவா சொல்லிட்ட சரி விடு யாருக்கு யாருன்னு எழுதியிருக்கோ அது படி தானே நடக்கும்” என்று விட்டெரியாக பேச

விஷ்ணுவின் பதிலில் விஜியின் முகம் காற்றிழந்த பலூன் சப்பி போனது கடைக்கண் பார்வையில் அவனை பார்த்த துவாரகேஷ் “உனக்கு நல்லா வேணும்டா அனுபவி நீ பண்ண காரியத்துக்கு உன்ன நாலு அரை விட்டுருக்கனும் அதை பண்ண முடியாம கையை கட்டி வச்சிருக்கேன்”என்று மனதில் கருவியவன்

“சரி விஷ்ணு நா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன் ஏதோ ஒரு அத்தை வந்துருக்காங்களாம் அம்மா சீக்கிரம் கிளம்பி வர சொன்னாங்க” அவசரமாக கூற

“ஏதோ ஒரு அத்தையா உனக்கு எத்தனை அத்தைடா இருக்காங்க?”

“யாருக்கு தெரியும்? அத்தை வந்துருக்காங்கன்னு  சொன்னாங்க என்ன விஷயம்னு தெரியலை போனா தான் தெரியும்!” என்று தோளை குலுக்கி அலட்சியமாய் பதில் கூற

” சரி சாப்ட்டு போ தேவிம்மா உனக்கும் சேத்து தான் டிஃபன் ரெடி பண்ணிருக்கா!”

“சரிடா” என்றவன் மாற்று உடையை எடுத்து கொண்டு குளியலறைகுள் புகுந்து கொண்டான்

“நீ ரெஸ்ட் எடு விஜி தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனிமே பேசி எந்த காரியமும் ஆக போறதில்லை!, மாத்திரை போட்டுருக்க நல்லா தூங்கி எந்திரி” என்று கூறிவிட்டு அறையில் இருந்து வெளியேறினான் விஷ்ணு

உள்ளே நடந்த பேச்சுக்களை ஹாலில் இருந்த வண்ணம் கேட்டு கொண்டிருந்த சஞ்சளாவிற்கு அழுகை முட்டி கொண்டு வந்தது “அப்டின்னா அத்தை சொன்னது உண்மை தானா? அவ்ளோ தானா? இனிமே அந்த வீட்டுல நா எப்டி..,? என்று நினைவுகள் முற்றுபெறும் முன்னமே மனதை பிசைய தொடங்கியது வேதனை

குளித்துவிட்டு வந்தவன் காலை உணவை முடித்து கொண்டு அவசரமாக விஷ்ணுவிடம் கூறிவிட்டு செல்ல, “தன்னை திரும்பி பாராமல் செல்கிறானே..!” என்று ஏக்கமாய் வாசல் வரை சென்று அவன் உருவம் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தாள் சஞ்சளா.

காலணியை கழட்டிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்த துவாரகேஷ் வெள்ளை வேஷ்டியில் கம்பிரமாக கிராமத்து தோற்றத்தில் இரு பெரிய மனிதர்கள் அமர்ந்திருப்பதை கண்டு என்னவென்று விசாலாட்சியை பார்க்க, அவரின் வயதை ஒட்டிய பெண்மணியிடம் வளாவி கொண்டிருந்தார்

“அம்மா” என்ற மைந்தனின் குரல் கேட்டு திரும்பி பார்த்தவர் “வாடா வா வந்து உக்காரு” என்று ஏதோ வீட்டிற்கு வந்த விருந்தினரை போல அழைக்கவும் திருதிருவென விழித்து கொண்டே அருகில் சென்றான் துவாரகேஷ்

“அண்ணி ஏ பையன் எப்ப வருவான் எப்ப வருவான்னு கேட்டுகிட்டே இருந்திங்களே இவன் தான் என்னோட பையன் பேரு துவாரகேஷ்”என்றதும்

ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவர் முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பி ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைவாய் இருந்த அவன் தேகத்தை ஆராய்ந்து மனதினுள் கணக்கு போட்டு சரிதான் என்ற மனதின் வார்த்தைக்கு மறு பேச்சின்றி திருப்தி அடைந்தவராக “என்ன மதினி நீங்க வார்த்தைக்கு வார்த்தை உங்க பையன் உங்க பையன்னு சொல்றிங்க என்னோட அண்ணே பையன்னு சொல்லுங்க?”, அவரின் சுருக்கென்ற வார்த்தையில் விசாலாட்சியின் முகம் வாடி போனது, மகனின் முன் எதையும் காட்ட விரும்பாது சமாளித்து கொண்டு புன்னகைத்தவர்

 “துவா இவங்க உன்னோட அத்தை ராணி” என்று அறிமுகம் செய்ய

வெறும் அத்தை என்று அறிமுகம் செய்து வைத்ததில் எதை கண்டாரோ புசுபுசுவென மூச்சு வாங்க வேகமாக “என்ன மதினி கொஞ்சம் கூட விவரமே இல்ல உங்களுக்கு!, அத்தைன்னு மொட்டையா சொன்னா எப்டி தெரியும்? என்ன உறவுன்னு சொல்லி அறிமுகம் செஞ்சா தானே ஏ மாப்பிள்ளைக்கு புரியும்?” என்று குரலில் சிடுசிடுப்பை காட்டியவர்

“நா உங்க அப்பாரு கூட பொறந்த தங்கச்சி மாப்பிள்ளை! நீங்க என்ன பாத்துருக்க மாட்டிங்க சின்ன வயசுல உங்கள பாத்தது எனக்கே சட்டுனு புடிப்படல உங்களுக்கு எப்டி தெரியும்?, ஊரவிட்டு வந்ததும் எங்கள எல்லாம் மறந்துட்டீங்க..! உங்கள மாதிரியே நாங்களும் இருக்க முடியுமா..? சொந்தம் விட்டு போக கூடாதே..ன்னு பாத்து பேசிட்டு போலா..ம்னு வந்துருக்கோம்..” என்று ஏகத்துக்கும் நீட்டி முழங்கியவர்

“எவ்ளோ நேரமா தான் நின்னுகிட்டே இருப்பீங்க மாப்பிள்ளை வந்து அத்தை பக்கத்துல உக்காருங்க” என்று முகம் கொள்ள புன்னகையுடன் அழைக்க

“இருக்கட்டும் அத்தை” என்றவன் “அம்மா ஒரு நிமிசம் என்னோட ரூமுக்கு வாங்க கொஞ்சம் பேசணும்” என்று அழைத்து விட்டு வேகமாக முன்னே சென்றான்

தயக்கத்துடன் ராணியை பார்த்த விசாலாட்சி “அண்ணி இருங்க என்னனு போய் கேட்டுட்டு வந்துடுறேன்” என்றதும்

“ம் போய்ட்டு சீக்கிரம் வாங்க” என்று சலிப்பாய் அனுமதி கொடுக்க வேகமாக மகனின் அறைக்கு விரைந்தார் விசாலாட்சி

குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவன் உள்ளே வந்தவரிடம் பொங்க தொடங்கினான் “என்னம்மா நடக்குது இங்க எனக்கு ஒண்ணுமே புரியல? அவங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறாங்க நீங்களும் அவங்க பேசுறத கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க?, இத்தனை நாள் நாம கண்ணுக்கு தெரியலையா இப்ப என்ன புதுசா உறவு வேண்டியிருக்கு?,

 நீங்களே பேசி அனுப்பிருக்க வேண்டியது தானே! என்ன எதுக்கு வர சொன்னிங்க, அவங்க பேசுறதே எனக்கு சுத்தமா பிடிக்கல அண்ணே குடும்பம் உயிரோட இருக்குறது இன்னைக்கு தான் அவங்க கண்ணுக்கு தெரிஞ்சுருக்கா?” என்று ஆத்திரத்துடன் மூச்சுவாங்க பேசினான் துவாரகா

“டேய் கோப்படாதா அவங்க பேசுனா பேசிட்டு போகட்டும் நீ அமைதியா இரு” என்று மகனை அமைதிபடுத்த முயல

“என்னம்மா? அமைதியா இருக்க சொல்றிங்க உங்கள மட்டம் தட்டி பேசுறாங்க அத வேடிக்கை பாத்துட்டு இருக்க சொல்றிங்களா? இப்போ எதுக்கு வந்துருக்காங்க என்ன வேணுமா அவங்களுக்கு?” என்று சீற்றத்துடன் விஷயத்தை கேட்க

“தெரியலடா! எனக்கே ஒன்னும் புரியல தனியா வந்துருந்தா நானே பேசி சமாளிச்சு ஊருக்கு அனுப்பி வச்சுறுப்பேன் ஊர் பெரிவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காங்க என்ன விஷயம்னு தெரியாம நாம எதுவும் பேசிற கூடாது இல்லையா?,

அதான் நீ வர வரைக்கும் எதுவும் கேட்டுக்கல அநேகமா உன்ன அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்துருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று தன் அனுமானத்தை கூறியவர்

 “சரி வா நாம தனியா பேசிட்டு இருக்குறத பாத்து ஏதாவது நினைச்சுக்க போறாங்க” என்று  அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தார் விசாலாட்சி

வேண்டா வெறுப்பாக வந்து அமர்ந்தவன் “என்ன அத்தை திடீர்ன்னு வந்துருக்கீங்க அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வர

“மாப்பிள்ளை போலீஸ் இல்லையா அதா நேரடியா விஷயத்துக்கே வந்துட்டாரு நல்லதா போச்சு என்ன விஷயம்னு நீயே சொல்லிரு ஆத்தா”என்று வந்திருந்த பெரியவர் இருவரில் கிடா மீசை காரர் கணீர் குரலில் கட்டளையாய் கூற

அமைதியாக இருந்தார் ராணி “எங்கே தான் விஷயத்தை கூறினால் சட்டென மறுத்து பேச கூடும்” என்ற அச்சம் அவர் மனதில் துளிர்விட அவரின் அமைதியை கண்டு “என்ன ராணி விஷயம் என்னனு சொல்லு எவ்ளோ நேரமா தான் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துட்டு இருக்குறது மாப்பிள்ளைகாக தான் காத்துட்டு இருந்தோம் இப்போ அவரே வந்து என்ன சேதின்னு கேக்குறாரு சொல்லுத்தா” என்று பேச தூண்டினார் கிடா மீசையின் அருகில் இருந்த மற்றொரு வெள்ளை மீசைகாரர்

“நா என்ன சித்தப்பா சொல்றது பெரியவங்க நீங்க இருக்கீங்க என்ன ஏதுன்னு பேசி முடிச்சுறுங்க அதுக்கு தானே உங்கள கூட்டியாந்துருக்கேன்”  என்று ஒதுங்கி கொள்ள

“அதுவும் வாஸ்தவம் தான்” என்று ஆமோதித்தவர்”ஏம்மா விசாலாட்சி ஓ மகனுக்கு எங்க பொண்ண கேட்டு வந்துருக்கோம் சொந்தம் விட்டுபோக கூடாதுன்னு இத்தனை வருஷம் கழிச்சு வந்துருக்கா ராணி!, நீ என்னம்மா சொல்ற?”  என்று பட்டென கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு வந்திருந்த மூவரும் மற்ற இருவரின் முகத்தை பார்த்தனர்

“அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமா?” என்று மனதில் நிந்தனையாய் நினைத்துக் கொண்ட விசாலாட்சி தவ புதல்வனை  பார்த்துக்கொண்டே “நா சொல்றதுக்கு என்ன இருக்கு பெரியப்பா இது ஏ பையனோட வாழ்க்கை!, உங்களுக்கு முன்னாடி தானே இருக்கான் அவன்கிட்டயே கேட்டுக்கோங்க சம்மதம்னு சொன்னா சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிறலாம்” என்று சொல்ல

விசாலட்சியை முறைத்து பார்த்தான் துவாரகேஷ் “என்ன மாப்பிள்ளை அம்மா அவங்க விருப்பத்தை சொல்லிட்டாங்க நீங்க என்ன சொல்றிங்க உங்களுக்கு… விருப்பம் தானே?” என்று கிடா மீசைகாரர் தயங்கி கேட்க

“என்னங்க நீங்க! பொண்ண பாக்கமா ஓகே சொல்ல சொன்னா எப்டி?, நேர்ல பாத்து பேசி அப்றம் தானே பிடிச்சுருக்கா இல்லையான்னு சொல்ல முடியும்? ஒரு போட்டோ கூட காட்டாம பிடிச்சுருக்கான்னு கேட்டா நா என்ன சொல்லறது?, பொண்ண நேர்ல வர சொல்லுங்க பாத்துட்டு அப்றமா என்னோட முடிவ சொல்றேன்” என்று நிதானாமாக கூற

அதற்கும் ஆமோதித்த கிடா மீசை “மாப்பிள்ளை சொல்றதும் சரியா தா இருக்கு, பொண்ண பாக்காம எப்டி சரின்னு சொல்ல முடியும் ஏத்தா ராணி பொண்ணோட போட்டோ கொண்டாந்துருக்கியா இருந்தா மாப்பிள்ளைக்கிட்ட காட்டு” என்றிட

சமளிப்பான புன்னகை புரிந்தவர் “நா ஒரு கூறு கெட்டவ சித்தப்பா வர்ற அவசரத்துல போட்டோ எடுத்துட்டு வரலையே  வேணா ஏ மகளுக்கு போன் போட்டு பேச சொல்றேன் பேசிட்டு என்ன ஏதுன்னு சொல்ல சொல்லுங்க” என்றவர்

தன் மகளுக்கு அழைப்பு விடுத்து “இந்தா இவளே மீனாட்சி! மாப்பிள்ளை ஓங்கிட்ட ஏதோ பேசனுமா பேசு” என்று வெடுக்கென துவாரகேஷிடம் அலைபேசியை நீட்டினார் ராணி

அவன் முகத்திற்கு முன்னால் நீட்டிய கரத்தினையும் ராணியின் முகத்தையும் மாறிமாறி பார்த்தவன் போனை வாங்கி காதில் வைக்க மறுமுனையில் “ஹாலோ ஹாலோ சொல்லுங்க” என்ற கீச் குரலில் ஒரு மாதிரியாக விழித்தபடி

“நா மாப்பிள்ளை பேசுறேன் நீங்க கொஞ்சம் வீடியோ கால் பண்ண முடியுமா? என்னோட நம்பர உங்களுக்கு மெசேஜ் பன்றேன்” என்று கூறிவிட்டு அணைப்பை துண்டித்து ராணியிடம் அவரை போலவே வேகமாக நீட்டினான்

Advertisement