Advertisement

ஒரு நொடி துவாரகாவும் விஷ்ணுவும் திகைப்புடன் அவனை பார்க்க “உனக்கு என்ன பைத்தியமா எதுக்கு இப்டி கேக்குற?” என்று விஷ்ணு கோபமாக பேச

“இல்ல… என்னால யாருக்குமே நிம்மதி சந்தோஷம் எதுமே இருந்ததில்ல! என்ன நேசிக்கிறவங்களுக்கு கூட நா பதிலுக்கு அன்பை கொடுத்தது இல்ல? அப்டி இருக்குறப்போ நீங்க என்மேல காட்டுற அன்புக்கு நா தகுதியானாவனா?” என்று மீண்டும் கேட்க

“ப்ச் உன்னால இங்க யாருக்கு நிம்மதி சந்தோஷம் இல்லாம போச்சு! லூசு மாதிரி உளராத விஜி, பேசாம சாப்ட்டு மாத்திரை போட்டு தூங்கு” என்று கண்டிப்புடன் பேசிய துவாரகாவை வலிய பேசி அடக்கினான் விஜயன்

“இல்லாடா நா பேசியே ஆகணும் என்னால முடியலடா!, ரொம்ப வலிக்கிது” என்று கசங்கிய முகத்துடன் நெஞ்சை தடவிக்காட்ட

“நீ பேசு ஆனா இப்போ வேணாம் எதுனாலும் உடம்பு சரியானதும் பேசிக்கலாம்”

“இல்ல விஷ்ணு இப்போவே பேசனும்னு தோணுது, ஒருவேளை உடம்பு சரியாகிட்டா என்னோட மனசுல இருக்குறத நிச்சயம் சொல்ல மாட்டேன் தயவு செஞ்சு என்ன பேச விடுங்கடா” என்று இறைஞ்ச

 சரியென்று தலையாட்டி அனுமதி கொடுத்துவிட்டு இருவரும் மௌனமாய் அவன் பேச்சிற்கு செவிமடுத்தனர்,

“நா மிக பெரிய சுயநலவாதிடா அடுத்தவங்க மனச புரிஞ்சுக்க தெரியாதா முட்டாள்! உண்மையான அன்பை ஏத்துக்க முடியாத படுமுட்டாள், பாவம் வைசு அவளோட மனச ரொம்பவே காயப்படுத்திட்டேன் ரொம்..பவே…!” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து நிறுத்தியவன் காஃபி ஷாப்பில் நடந்த விஷயத்தை தயங்கியபடி விளம்ப தொடங்கினான்

முதல் முறையாக அவளை பைக்கில் தோளில் கைபோடும் அளவிற்கு உரிமையுடன் அமர வைத்து அழைத்து சென்றவன் சற்று தனிமை அளிக்கும் விதமாக இரண்டு டேபிளுக்கு ஓரிரு நபர்கள் அமர்ந்திருக்கும் காபி ஷாப்பிற்கு முன்னே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே அழைத்து சென்றான், இதமான மிதமான ஒலியில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் மற்றமடைந்த புல்லாங்குழல் ஓசையில் மிதந்து வந்தது,

செவிகளுக்கு இனிமையாக அதே நேரம் மனதிற்கு இதமாக இருந்தது அந்த இடம் ஆங்காங்கே கண்களை கவர கூடிய வகையில் மலர்களை வைத்திருந்தனர்,முன்பே புக் செய்திருந்த டேபிளில் இருவரும் அமர்ந்ததும் காஃபியை ஆர்டர் செய்தவன் “காபி மட்டும் போதுமா வேற ஏதாவது வேணுமா வைசு?” என்று எப்போதும் இருக்கும் இறுகிய முகமாய் இல்லாது இயல்பாய் கேட்க

சுற்றி இருந்தவர்களின் மீது  பார்வையை நகர்த்தி கொண்டிருந்தவள் அவன் கேட்டது புரியாது “என்ன கேட்டீங்க?” என்று கனவில் இருந்து விழித்தவள் போல வினவ

“வேற ஏதாவது வேணுமான்னு கேட்டேன்?”

“இல்ல விஜி காபி மட்டும் போதும்” என்றவள் அவனுடன் இருக்கும் தருணத்தை எண்ணி அகமகிழ்ந்து ரசித்து கொண்டிருந்தாள் அவன் நடந்து கொள்ளும் விதத்தில் உள்ளே இருந்த ஏமாற்றமெல்லாம் காணமல் போனது “நிச்சயம் இந்த முறை நல்லதொரு முடிவை கூறிவிடுவான்” என்று எண்ணி கொண்டிருக்க அவள் எண்ணத்தில் தீயை வைத்தான் ஆடவன்

“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்?”

“அதான் தெரியுமே? விஷயம் என்னனு சொல்லுங்க விஜி என்னால ரொம்ப நேரம் பொறுமையா இருக்க முடியாது முதல் முறையா என்ன வெளிய கூட்டிட்டு வந்துருக்கீங்க அதுவே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று வார்த்தைகளை அடக்க முயன்றும் முடியாமல் படபடவென உற்சாகம் பீறிட பேசியவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் விஜயன்

“கூற போகும் விஷயத்தை கேட்டு அதிர்ச்சி மட்டுமல்ல ஆத்திரமும் பட கூடும் ஆனால் பேச வேண்டியதை பேசி தானே ஆகவேண்டும்? பேசுவோம் மெல்ல மெல்ல பேசி புரிய வைப்போம்?, கேட்பாளா..? கேட்டு தானே ஆக வேண்டும் வேறு வழியில்லை? என்று அவனுக்கு அவனே உறு போட்டு கொண்ட தீர்மானத்தை நினைத்து மனதோடு மல்லுகட்டியவன் பேச வாய் திறக்க

“சார்!” என்று இரண்டு அழகான காஃபி நிரம்பிய கோப்பைகளை வைத்து விட்டு கடை ஊழியன் நகர்ந்துவிட்டான்

அவள் புறம் ஒன்றை தள்ளியவன் தனக்கொன்றை எடுத்து கொண்டு ஒருமிடரு பருகி அடுத்த வாய் குடிப்பது போல பாசாங்கு செய்தபடி

“நீ.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ வைசு! அது தான்.. உனக்கு நல்லது.! என்று தக்கி தயங்கி ஒருவழியாய் சொல்லிவிட்டவனுக்கு அத்தனை சிரமமாய் இருந்தது மூச்செடுக்க

தொண்டையில் இறங்கிய அத்தனை தித்திப்பான குளம்பியும் இப்போது வேப்பங்காய் கசந்தது அவளுக்கு “என்ன சொன்னிங்க விஜி?” என்று புரியாத மழலை பாஷை போல மலங்க மலங்க விழித்து கேட்க

“எனக்காக காத்திருந்து உன்னோட வாழ்க்கைய பாழாக்காத வைசு! என்னோட மனசு மாறும்னு நினைக்கிறது தப்பு அது என்னைக்கும் மாறாது!” என்று மூச்சுவிடாமல் முகத்தில் எந்தவித பாவனையும் காட்டது ஒப்பித்தவனை  திகைப்போடு பார்த்தவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை ஆள் காட்டி விரல் கொண்டு குடைந்தவள்

“எனக்கு புரியலை விஜி? என்ன.. என்ன கோபப்பட வைக்க தானே இந்த மாதிரி பேசுறீங்க?”, அவன் கூறியது பொய்யாய் இருந்துவிட கூடாதா என்ற தவிப்புடன் சிறு சிரிப்பை உதிர்த்து கேட்டவளின் குரலில் அத்தனை வேதனை

“ப்ச்” என்று அலுத்து கொண்டவன் பெருமூச்செடுத்து “நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ உன்னோட காத்திருப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்க போறதில்லை வைசும்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா?” என்று இறைஞ்சியவனை வலி நிறைந்த பார்வை பார்த்தவள்

“என்னைக்குமே என்ன பத்தி யோசிக்க மாட்டீங்க இல்லையா விஜி? உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? நீங்க சொன்னதையே நா வேற மாதிரி சொல்லவா?, வேற யாரையோ நா கல்யாணம் பண்றதுக்கு பதிலா ஏன் உங்கள பண்ணிக்க கூடாது! மொத்ததுல நா கல்யாணம் பண்ணிக்கணும் அவ்ளோ தானே? அது நீங்களா இருந்துட்டு போங்க உங்க மனசு எப்போ மாறுமோ மாறட்டும்” என்று முடிந்த மட்டு கோபத்தை அடக்கி கொண்டே இயல்பாக பேச

“பச் அது என்னால முடியாதுன்னு தானே உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் தயவு செய்து நா சொல்றத கேளு வைசு, என்னோட மனநிலைய யாரலையும் புரிஞ்சுக்கவும் முடியாது புரிய வைக்கவும் முடியாது? நா புரிய வைக்கவும் விரும்பலை! எனக்காக வெய்ட் பண்ணி உன்னோட வாழ்க்கைய வீணாக்கிறாத நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும் அது தான் என்னோட ஆசை”

“என்ன விஜி ரொம்ப சினிமா பாப்பிங்க போல வசனமெல்லாம் பயங்கரமா பேசுறீங்க” என்று கேலி இழையோட பேசியவள் “எப்டி  உங்களால இவ்ளோ சுயநலவாதியா இருக்க முடியுது? கடைசி வரைக்கும் என்னோட மனச புரிஞ்சுக்கவே மாட்டீங்களா! அஞ்சு நிமிஷம் கூட என்னோட சந்தோஷத்தை நீடிக்க விடல எப்பவுமே என்ன கஷ்டப்படுத்தி பாக்குறதுல உங்களுக்கு அப்டி என்ன மனத்திருப்தி சொல்லுங்க விஜி?” என்று இருக்கும் இடம் மறந்து ஆவேசமாய் கத்திவிட்டாள் வைஷாலி

சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்களை மொய்வதை கண்டு சங்கடமாய் உணர்ந்தவன் “ப்ச் எதுக்கு இவ்ளோ சத்தமா பேசுற மெதுவா பேசு இங்க நாம ரெண்டு பேர் மட்டுமில்ல” என்று பார்வையை சுற்றி அலைபாய விட்டவன்

“அஞ்சு நிமிஷம் கூட உன்ன சந்தோசமா வச்சுக்க முடியலையே இதுலயே தெரிய வேணாமா நா உன்னோட அன்புக்கு தகுதியானவனா இல்லையான்னு? ஒருவேளை மனசு மாறி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் காலம் முழுக்க சந்தோஷமா வச்சிருக்க முடியாதுன்னு ஒரு பயம் எனக்குள்ள இருக்கு!, உன்கூட போலியான வாழ்க்கை வாழ என்னால் முடியாது! பொய்யான அன்பையும் உனக்கு தர முடியாது! தயவுசெய்து நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ” என்று பிடியில் இருந்து சற்றும் தளராது தணிவான குரலில் பேசியவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்

தனியாக இருந்திருந்தால் பேசும் பேச்சிற்கு பளார் பளார் என வாய்கிழிய கன்னம் பழுக்க நாலு அரை விட்டிருக்கலாம் என்று எண்ணியவளின் மனம் அக்னி பர்வதமாய் கண்மண் தெரியாமல் கொதிக்க

“இது தான் விஷயம்னு முன்னாலயே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உங்க கூட வந்துருக்க மாட்டேன் உங்கள பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல?,

அது என்னோட தனிப்பட்ட நா! முடிவெடுக்க வேண்டிய விஷயம் உங்க முடிவ நீங்க தெளிவா சொல்லிட்டீங்க என்ன பண்ணனும்னு நா பாத்துக்கிறேன் இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க பேசு பேசுன்னு கெஞ்சாதிங்க நா கிளம்புறேன்” என்று நிதானமாக கூறி வேகமாக எழுந்து கொண்டவளுக்கு நேற்று இரவிலிருந்து சற்று முன் வரை அவன் நடந்து கொண்டதை நினைத்து பார்க்க கண்ணை கரித்து கொண்டு வந்தது

வெற்று புன்னகை புரிந்தவள் “பலி கொடுக்க போற ஆட்டுக்கு தெரியாது எதுக்கு சம்பந்தமில்லாம அக்கறை காட்டுறாங்கன்னு அது மாதிரியே ஆசைகாட்டி அக்கறை காட்டி ஏமாத்திட்டீங்க விஜி! கொஞ்சம் கொஞ்சமா மனசை கொன்னுட்டு இருந்திங்க இப்போ மொத்தமா கொன்னுட்டீங்க பலி கொடுத்த ஆடு மாதிரி துடிக்க வச்சு கொன்னுட்டிங்க நா உங்களுக்கு அவ்ளோ சீப்பா போயிட்டேன்ல ,

உங்கள இத்தனை நாள் தொந்தரவு பண்ணதுக்கு என்ன மன்னிச்சிருங்க மிஸ்டர் விஜயன் இனிமே உங்க வாழ்க்கையில மட்டுமில்ல உங்க வழியில கூட இடைஞ்சலா வர மாட்டேன்!, என்ன காதலோ  முடியலை ப்பா”என்று வலியோடு வார்த்தைகளை முடித்த பொழுது அடக்கி வைத்த கண்ணீர் மொத்தமும் உடைப்பெடுத்தது அவன் முன் அழுவது கூட அபத்தமாய் தெரிய கண்ணீரை துடைத்து கொண்டே விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள் வைஷாலி

சொல்ல வந்ததை ஒருவழியாக சொல்லி முடித்தவனின் மனம் இதத்திற்கு பதில் கனமான ரணத்தை சுமக்க தொடங்கியது, அவள் சென்ற திசையை வெறித்து கொண்டிருந்தவனின் விழிகளில் இருந்து வடிந்த உப்பு நீரின் ஈரம் உணர்ந்து நடப்பிற்கு வந்தவன் இல்லம் செல்ல மனமில்லாமல் கால் போன போக்கில் முடிந்த வரை கால் கடுக்க நடந்து திரிந்து கடைசியாக நீண்டதொரு தனிமை வேண்டி கடற்கரை சென்றான்

அழகான இரவின் தனிமை மேலும் அவனுள் அவஸ்தையை  கூட்ட வாடை காற்று கூட வெம்மையாய் இருந்தது அவனுக்கு,செய்த பிழையை இப்போது கூட சீர் செய்யலாம் தான் ஆனால் ஏதோ ஒன்று அவன் மனதை தடுப்பு சுவர் போல மேலெழும்பி தடுக்க ஆர்ப்பரிக்கும் அலையை போல ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி மௌனமாய் கண்ணீர் வடித்தான்

“நேசமிகு உறவை வெறுத்து ஒதுக்குவது போல நடிப்பதில் தான் எத்தனை வலி! ஓர் உறவு தானாய் சென்றது என்றால் வந்த உறவை நானாய் ஒதுக்கிவிட்டேன், ஆசைகாட்டி நிராகரிப்பது எத்தகைய வலியை உண்டாக்கும் உயிர் நோகும் வரை உடன் வந்து அறுக்குமே”, பல விதமாய் மனதில் எண்ணி எண்ணி மாய்ந்து போனவனின் அன்றைய நினைவெல்லாம் அவளே நீங்கமற நிறைந்திருந்தாள்

Advertisement