Advertisement

நிலவின் அணைப்பில் துயில் கொண்ட ஆதவன் அதனிடமிருந்து விடுபட முடியாமல் விடுபட்டு சுகமான இதமான வெளிச்சத்தை பூமகளின் மீது பரப்ப தொடங்கியிருந்தான், கண்களை கூசாத அதே நேரம் உறக்கத்தை கலைக்க கூடிய வகையில் வெளிச்சம் அறையை நிரப்ப விடியலின் நேரம் உணர்ந்து இமைகளை பிரிக்க முடியாமல் கடினப்பட்டு விழிகளை திறந்த வைதேகி கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு என காட்டியது,

எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி சமையலறைக்குள் நுழைந்தவள் இரவு சிங்கிள் போட்டுவிட்டு சென்ற பாத்திரங்களை சத்தம் வராமல் கழுவி முடித்துவிட்டு தேநீர் தயார் செய்து கொண்டிருக்க

கண்களை கசக்கி கொண்டே சமையலறை நுழைந்தவளை கண்டு அதிசயித்த வைதேகி “என்ன சஞ்சு சீக்கிரம் எழுந்துட்ட கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?”

“தூக்கம் வரலை க்கா” என்றவள் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொள்ள

தயாரான தேநீரை நான்கு டம்ளர்களில் ஊற்றி “சூடா இருக்கு பாத்து குடி அவங்களுக்கு டீ கொடுத்துட்டு வந்துடுறேன்” என்று அவளுக்குரியதை அருகில் வைத்துவிட்டு விஷ்ணு படுத்திருந்த அறைக்கு சென்றாள் வைதேகி

விஷ்ணு துவாரகா இருவரும் கீழே உறங்கி கொண்டிருக்க மூவரையும் நின்று நிதானமாய் பார்த்தவள் பின் கீழே படுத்திருந்த இருவரையும் எழுப்பி விட்டு விஜயனை எழுப்ப உடல் தீயாய் தகித்தது, அதீத ஜுரத்தின் காரணமாக சிறு முணங்கலும் உடல் நடுக்கமும் இருக்க

“மாமா” என்ற அவளது பதட்டம் நிறைந்த குரலில்

“என்ன தேவிம்மா?”

“அண்ணாவோட உடம்பு பயங்கரமா சுடுது காய்ச்சல் அடிக்கிதுன்னு நினைக்கிறேன்!” என்றதும் பதறிப்போய் விஜயனின் உடலை தொட்டு பார்த்தான் விஷ்ணு

ஜுரம் செஞ்சுரியை தண்டி இருக்கிறது என்று உடலின் வெப்பதிலேயே அனுமானம் செய்து கொண்டவன் “ஆமா தேவிம்மா! ஃபிவர் தான் உடம்பு பயங்கரமா சுடுதே” என்றவாறே அவனை கன்னத்தில் தட்டி எழுப்ப, சுயநினைவு அறவே இன்றி படுக்கையில் ஏதோ ஒன்றை முணங்கி கொண்டே இருந்தான் அவன் நிலையை பார்க்க பார்க்க மூவரின் மனதிலும் அச்சம் தொற்றி கொண்டது

துவாரகாவிடம் ஆட்டோ இருந்தால் வேகமாக அழைத்து வருமாறு பணித்தவன் “தேவிம்மா நீ போய் தண்ணியும் ஒரு வெள்ளை துணியும் எடுத்துட்டு வா!” என்று அவசரமாக கூற

சடுதியில் சென்று தண்ணீரை  எடுத்து வந்தவள் கிண்ணத்தை கணவனிடம் நீட்ட வாங்கி அருகில் வைத்து கொண்டவன் வெள்ளை துணியை நீரில் நனைத்து பிழிந்து விஐயனின் நெற்றியில் வைத்து வைத்து சூட்டை தணித்து கொண்டிருக்க, சற்று நேரத்தில் ஆட்டோவை அழைத்து வந்த துவாரகேஷ் “டேய் வண்டி வந்துருச்சுடா” என்று கூறவும்

வைதேகியை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு கலைந்த அவனது உடையை சீர்செய்து இருவரும் கைதாங்களாக கீழே அழைத்து வந்தனர், முதலில் ஏறி கொண்ட துவாரகா விஜயனை தன் தோளில் சாய்த்து கொள்ள “தேவிம்மா ஹாஸ்பிடல் போய்ட்டு என்னனு கால் பண்றோம்! நீ பதட்டபடாம வீட்டுக்கு போ சஞ்சளா தனியா இருப்பா” என்று கூறி வாகனத்தில் ஏறி கொள்ள மூன்று சக்கர வாகனம் வேகம் பெற்றது

சற்று நேரத்தில் மருத்துவமனை அடைந்தவர்கள் கைதாங்களாகவே உள்ளே அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க, மருத்துவர் பரிசோதனையை முடித்து கொண்டு வரும் வரை இருவரும் பதட்டமான மனநிலையில் அறையின் வெளியே நிலவரம் எதுவும் தெரியாமல் ஒருவித கிலியுடனே  குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர்

அவர்களின் பயத்தை அதிக நேரம் நீட்டிக்காமல் அவனை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் “பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல சார் சாதாரண பீவர் தான் இன்ஜக்ஷன் போட்டுருக்கேன் ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு அவர வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க” என்றவர் சில மருந்துகளை எழுதி

 “இந்த டேபில்டஸ்ஸை மறக்காம கொடுங்க முடிஞ்சா ஈவ்னிங் இல்ல நாளைக்கு காலையில வாங்க ஃபீவர் எப்டி இருக்குன்னு செக் பண்ணிக்கலாம்” என்று பிரிஸ்கிரிபிஸன் தாளை நீட்ட

கேட்கவா வேண்டாமா என தயங்கியவன் பின் “டாக்டர் நேத்து நைட்டு நல்லா தான் இருந்தான் தீடீர்னு எப்டி பீவர் வந்துச்சுன்னு தெரியலை” என்று பதட்டம் தணியாமல் கேட்ட துவாரகாவை பார்த்து சன்னமாய் புன்னகைத்த மருத்துவர்

“காய்ச்சல் யாரையும் கேட்டுட்டு வறாது சார் அவருக்கு ஏதோ மனஅழுத்தம்னு நினைக்கிறேன் அது என்னனு கேட்டு தீர்த்து வைங்க ஏதே முணங்கிட்டே இருந்தாரு தெளிவா கேக்கலை ஆனா இப்போ கொஞ்சம் பரவாயில்ல சார், எல்லாத்தையும் மனசுக்குள்ளயே போட்டு அடக்குறதால தான் பல நோய்கள் வருது? என்ன பிரச்சனைன்னு கேளுங்க அவருக்கிட்ட” என்று இலவச அறிவுரை வழங்கியவர் அடுத்த நோயாளியை கவனிக்க சென்றுவிட்டார்

ஒருவர் முகத்தை ஒருவர் கவலையுடன் பார்த்தபடி அமைதியாக இருவரும் உள்ளே நுழைய, படுக்கையில் துவண்டுபோய் சோர்வை மீறிய வேதனையுடன் படுத்திருந்தவனை கண்டு மனம் வலித்தது துவாரகாவிற்கு “எதையாவது மனசுவிட்டு சொன்னா தானே தெரியும்? எல்லாத்தையும் அவனுக்குள்ளயே போட்டு அடக்கிக்கிறான்!, என்ன தான் இவனுக்கு பிரச்சனைன்னே தெரியல விஷ்ணு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி அவனும் கஷ்டப்பட்டு இதெல்லாம் தேவையா? பாரு இப்போ எப்டி படுத்துருக்கான்னு பாக்கவே சகிக்கலை!” என்று வேதனையுடன் பேச

தீவிர யோசனையில் முழ்கி  இருந்த விஷ்ணு “டேய் நீ வைசு அப்பாக்கு போன் போடு அவருக்கிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்னு யோசிப்போம்! இப்படியே இவன் போற போக்குலயே விட்டா ரொம்ப தப்பா போயிடும்!” என்றான் முடிவை எடுத்துவிட்ட திடத்துடன்

அடுத்த நொடி வைஷாலியின் தந்தை கிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்து துவாரகா அலைபேசியை நீட்ட “என்ன துவாரகேஷ் இவ்ளோ காலையில போன் பண்ணிருக்க?”

“அங்கிள் நா விஷ்ணு பேசுறேன் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியணும் அதுக்காக தான் கால் பண்ணேன்!” என்றவன் தயக்கமில்லாமல் “உங்களுக்கு விஜயனை பிடிக்கும் தானே?, அவன் உங்களுக்கு மாப்பிள்ளையா வந்தா சந்தோஷமா ஏத்துக்குவிங்களா?” என்று பட்டென கேட்டுவிட

அவன் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவர் பின் “என்னப்பா இப்டி கேட்டுட்ட நானே அவகிட்ட பேசலாம்னு இருந்தேன் இப்போ நீயே கேக்குற எனக்கு பரிபூரண சம்மதம் ஆனா….!” என்று தயக்கத்துடன் வார்த்தைகளை இழுத்து நிறுத்தினார் கிருஷ்ணன்

“என்ன அங்கிள்?”

“ப்ச் என்னனு தெரியலப்பா நேத்து வீட்டுக்கு வந்ததும் வராததுமா எவ்ளோ சீக்கிரம் முடியுமே அவ்ளோ சீக்கிரம் எனக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போய்ட்டா!, நைட்டு சாப்பிட கூட இல்ல! அவ முகமே சரியில்லாம இருந்துச்சு என்னைக்குமே அவள அப்டி ஒரு நிலையில நா பாத்தது இல்ல ப்பா,

நேத்து அவ வந்து நின்ன கோலத்தை பாத்ததும் பக்குன்னு ஆகிருச்சு ஏதாவது பிரச்சனையா விஷ்ணு? அவகிட்ட கேட்டா உருப்படியான பதிலை சொல்ல மாட்டா நா கஷ்டப்படுவேன்னு தயங்குவா இல்ல சமாளிப்பா என்னப்பா ஆச்சு?” என்று வருத்தம் இளையோட கூறியவரின் குரல் மொழியே அறிவித்தது மகளின் நிலை அவரை பயம் கொள்ள செய்திருக்கிறது என்று

“இல்ல அங்கிள் எந்த பிரச்சனையும் இல்ல டிராவல் பண்ணி வந்ததுல சோர்வா இருந்துருக்கலாம் தூங்கி எந்திரிச்சா சரியா போகும் நீங்க ஒரி பண்ணிகாதிங்க” என்று ஆறுதல் வார்த்தைகள் கூற

அவரின் மனம் ஏற்று கொள்ள மறுத்தது பெற்றவருக்கு தெரியாத பிள்ளையின் மனநிலை என்னவென்று? எதையும் துருவி கேட்காது “சரிப்பா எனக்கு சம்மதம் ஆனா வைசு என்ன சொல்ல போறான்னு தான் தெரியலை?” என்றார் தயங்கியபடி

“அவ இந்த அளவுக்கு முடிவெடுத்துட்டான்னா சொல்றதுக்கு எதுவுமில்ல அங்கிள்! நீங்க வைசு சொன்ன மாதிரியே மாப்பிள்ளை பாக்குற மாதிரி பாருங்க! மத்தத நா பாத்துக்கிறேன் நா உங்ககிட்ட பேசுன விஷயம் அவளுக்கு தெரிய வேணாம் மாப்பிள்ளை பாத்துட்டு எனக்கு சொல்லுங்க” என்று கூறி சாரதாவின் உடல் நிலை பற்றி விசாரித்துவிட்டு அழைப்பை துண்டிக்க

அதே சமயம் விஜயனிடமும் சிறு அசைவு தெரிந்தது, அருகில் சென்றவன் கடினபட்டு கண் திறக்க முயன்றவனை பார்த்து “இப்போ ஓகே தானேடா?” என்று கேட்க

“ம்” என்று முணங்கி தலையாட்டியவனுக்கு மருந்தின் வீரியத்தில் உறக்கம் சொக்கியது, வறண்டு போன நாவிற்கு தண்ணீர் வேண்டி பேச வாய் திறக்க முயன்றவனை புரிந்து கொண்டவனாக தண்ணீரை நீட்டியவனிடத்தில் சங்கடமான பார்வை செலுத்திய விஜயன் மடமடவென தாகம் தீர குடித்து முடித்தான், வயிறு நிரம்பியதே தவிர தாகம் தீர வில்லை வேண்டும் வேண்டும் என்று வாய் கேட்டாலும் வயிறு வேண்டவே வேண்டாம் என்று பதறி மறுத்தது தண்ணீர் கேட்கும் வாயை கட்டுபடுத்தி கொண்டு மெதுவாக எழுந்து அமர

” உனக்கு இப்போ எல்லாமே ஞாபகம் இருக்கு தானே எதுவும் மறந்து போகலையே? பீவர் நூத்தி பத்து டிகிரி இருந்துருக்கு என்ன மனவருத்தமோ போ நல்லா வந்துச்சு காய்ச்சல்” என்று போலியாய் சலித்து கொண்டவன் ஓர கண்ணால் விஜயனின் முகத்தை பார்க்க கசங்கி கந்தலாய் காட்சி அளித்தது

“சரி வீட்டுக்கு கிளம்பலாமா? டாக்டர் உனக்கு நினைவு திரும்புனதும் கூட்டிட்டு போக சொல்லிட்டாரு” விஜயனிடத்தில் கூறியவன் பின்னால் நின்ற துவாரகாவிடம் “டேய் நீ போய் பில் பே பண்ணிட்டு வா கிளம்பலாம்! ஆட்டோ வெய்ட்டிங்களா தானே இருக்கு?” என்று கேட்டு பணத்தை கொடுத்தனுப்பிவிட்டு திரும்ப

 “சாரிடா உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்” என்று கம்மிய குரலில் கூற கோபம் உச்சந்தலைக்கு ஏறியது விஷ்ணுவிற்கு

“அடிக்க கூடாதுன்னு பாக்குறேன் விஜி என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு? நீ எதுவும் பேச வேணாம் முதல உடம்பு சரியாகட்டும் அப்றமா நா பேச வேண்டியத பேசுறேன்! இப்போ கிளம்பலாம் வைதேகி என்னமோ ஏதோன்னு பயத்துல காத்துட்டு இருப்பா?” என்று கண்டிக்கும் குரலில் பேசியதும்

மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து நிற்க முயன்றான் விஜயன்

 “நா எதுக்கு இருக்கேன் சும்மா வேடிக்கை பாக்கவா? என்னோட தோள் மேல கைபோட்டுக்கோ” என்று அதட்ட

விஜயனின் முகம் வாடி போனது மனதில் குற்றவுணர்வு மேலும் மேலும் கூடி கொண்டே சென்றதே தவிர குறைந்த பாடில்லை என்ன தான்  நண்பர்களாய் இருந்தாலும் அவர்களின் உதவியை ஏற்று கொள்வதில் சிறு தயக்கம் உண்டாக

தயங்கியபடி தோளில் கைபோட்டவனின் கரத்தினை சலுகையுடன் இழுத்து பிடித்து கொண்டு அரவணைத்தபடி மெதுவாக அழைத்து சென்று மூவரும் ஆட்டோவில் ஏறி இல்லம் வந்து சேர மணி ஒன்பதை தாண்டி இருந்தது,

மருத்துவர் கூறியதை வைதேகியிடம் முன்பே விஷ்ணு போன் செய்து கூறிவிட அவனுக்கு கொடுக்க வேண்டிய உணவை தயார் செய்து வைத்திருந்தாள் “இப்போ கஞ்சி மட்டும் கொடு தேவிம்மா நானே அவனுக்கு கொண்டு போய் கொடுக்குறேன்” என்றதும் மிதமான சூட்டில் இருந்த ஆகாரத்தை கிண்ணத்தில் ஊற்றி கொடுத்துவிட

படுக்கையை சரி செய்ய உதவி கொண்டிருந்த சஞ்சளா வெளியேறிட “டேய் விஜி சாப்ட்டு மாத்திரை போடணும் போய் ப்ரெஸ் பண்ணிடுவா” என்றான் விஷ்ணு

எழுந்து நிற்க முடியமால் தடுமாறியவனை கைதாங்களாய் பற்றி கொண்ட துவாரகா குளியலறை வாசல் வரை உடன் சென்று அவன் வரும் வரை இருந்து அழைத்து வந்து அமர வைக்க விஷ்ணுவின் கையில் இருந்த கிண்ணத்தை கண்டு “கொடு நானே சாப்ட்டுக்கிறேன்” என்று கையை நீட்டினான் விஜயன்

கண்கள் இடுங்க முறைத்து பார்த்தவன் “ஏ நா ஊட்டிவிட்டா உன்னோட தொண்டையில இறங்காதா” என்று கடுமையாக முகத்தை வைத்து கொண்டு கேட்கவும் மீண்டும் ஓர் கனத்த மௌனம் அவனிடத்தில்

“ம் இந்தா சாப்டு” என்று அக்கறையாக  ஊட்டிவிடுபவனை கண்டு கண்கள் பனிக்க, யாருக்கு கிடைக்கும் இது போன்ற நட்புகளும் உறவுகளும் என்று எண்ணியவன் “ஏ விஷ்ணு! உங்களோட அன்புக்கு நா தகுதியானாவனாடா?” என்று நீண்ட அமைதிக்கு பின் தாழ்வுணர்ச்சியுடன் கேட்டான்

Advertisement