Advertisement

தேநீரை பருகிய சற்று நேரம் அமைதியில் கழிய காலி டம்ளரை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்த துவாரகாவிடம்

“சரிடா வைதேகிக்கு கால் பண்ணி எல்லாரும் சாப்டாங்களா வேற ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேளு”   என்று அவனின் இறுகி இருந்த மனநிலையை இயல்பாக்க வேண்டி பேச

முறைத்து பார்த்த துவாரகேஷ் “அத நீயே கேக்கலாமே…?” என்று ஏகத்துக்கும் இழுத்து நிறுத்தினான்

“அது எனக்கு தெரியாதா? சொன்ன வேலைய செய் அதிகபிரசங்கி தனமா கேள்வி கேக்காதா!” என்று போலியாய் சிடுசிடுப்பை காட்டவும்

வைதேகிக்கு அழைப்பு விடுத்து பேசி முடித்தவன் “பேசியாச்சு எல்லாரும் சாப்டாங்களாம் வேற எதுவும் வேணாமாம்” என்று முகத்தை சுருக்கி ஏனோ தானோவென பதில் கூறிய துவாரகா “ஆனா இப்போ புதுசா ஒரு பிரச்சனை” என்று நிறுத்த

“என்ன பிரச்சனை?”

“வைஷாலி விஜி ரெண்டுபேரும் வெளிய போறேன்னு சொல்லிட்டு போனாங்களாம், ஆனா.. வைஷாலி மட்டும் தான் அழுதுகிட்டே வீட்டுக்கு வந்துருக்கா! வந்தவ அவசரமா ஊருக்கு கிளம்பி போய்ட்டாளாம் காரணம் எதுவும் தெரியலைன்னு வைதேகி சொல்றா!”

“அப்ப விஜி?”

“ம்ம் அவன் எங்க இருக்கான்னே தெரியலையாம் போன் பண்ணாலும் எடுக்க மாட்டிங்கிறானாம்” என்று அவசரமாக பதட்டம் நிறைந்த முகத்துடன் கூற

“சரி என்ன ஏதுன்னு வீட்டுக்கு போய் பேசிக்கலாம் நீ வண்டியில ஏறு எங்க போயிருக்க போறான் அவகிட்ட சண்டை போட்டுட்டு தனியா உக்காந்து பீல் பண்ணிட்டு இருப்பான் இது தெரியாதா?” என்று நேரில் இருந்து பார்த்ததை போல கூறியவன் வாகனத்தை உயிர்ப்பிக்க துவாரகேஷ் ஏறி கொண்டதும் இருசக்கர வாகனம் வேகம் பெற்றது.

இரவு மணி பத்தை கடந்து அடுத்த எண்ணை தொட இருபது நிமிடங்கள் இருக்கும் வேளையில் அழைப்பு மணி சத்தம் கேட்டு வேகமாக சென்று கதவை திறந்த விஷ்ணு வாசலில் சபரியும் விஜயனும் நின்றிருப்பதை கண்டு “உள்ள வாங்க” என்றவன் இருவரும் உள்ளே வந்ததும் கதவை சாத்திவிட்டு “என்ன சபரி துணைக்கு ஆள் கூட்டிட்டு வந்துருகானா?” என்றான் குத்தலான மொழியில்

பலமுறை அவனை தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வியை தழுவியதன் தாக்கம் அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது

“இல்ல விஷ்ணு சும்மா தான் கூட வந்தேன் ஏன் உங்க வீட்டுக்கு நா வர கூடாதா!” என்று கேட்டு சபரி சிரிக்க

“அப்டியில்ல நீங்க தாரளமா இந்த வீட்டுக்கு வரலாம் ஆனா…!” என்று அவன் அருகில் தலை கவிழ்ந்த நிலையில் நின்றிருந்தவனை பார்த்து வார்த்தைகளை நிறுத்தினான் விஷ்ணு

விஷ்ணுவையும் விஜயனையும் மாறி மாறி பார்த்தவன் புரிந்து கொண்டவனாக “எங்க? வீட்டுல பெரியவங்க யாரையும் காணோம்” என்று பேச்சை மாற்ற

“எல்லாரும் சித்தி வீட்டுக்கு போயிட்டாங்க காலையில ஊருக்கு கிளம்புறாங்க கிளம்ப வசதியா இருக்கும்னு அங்க போய்ட்டாங்க” என்றவன் “தேவிம்மா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை” என்று பணிக்க

“எனக்கு பசியில்ல சாப்பாடு வேணாம்” என்று சோர்ந்து போன குரலில் வேகமாக கூறியவனை முறைத்து பார்த்தவன் வைதேகி நிற்பதை கண்டு “தேவிம்மா.. போய் சப்பாடு எடுத்து வை அவன் வருவான்” என்றான் அதட்டலான குரலில்

‘பிரச்சனை எதுவும் நடக்க போகிறதோ?’ என்ற பயத்துடனே வேகமாக சமையலறைக்குள் சென்றவள் உணவு பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க தொடங்க

“துவாரகா கை கழுவிட்டு வா பசிக்கிதுன்னு சொன்னியே” என்றுவிட்டு “சபரி நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்றவன் விஜயன் அசையாமல் நிற்பதை பார்த்து “தனி தனியா சொல்லிட்டு இருக்க முடியாது நீயும் தான் போய் கைகழுவிட்டு வா” என்றான் காட்டமான குரலில்

விஷ்ணுவின் குரலில் தெரிந்த கோபம் விஜயனின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது “ஒருவேளை வைஷாலி கூறிவிட்டாளா?” என்று எண்ணியவன் மறுத்து பேசாமல் கைகழுவிவிட்டு வந்து அமர

அமைதியாக விஜயனை பார்த்து கொண்டே “டேய் துவாரகா வைசுக்கு கால் பண்ணியா? என்ன சொன்னா?” என்று கேட்க

சம்பந்தமில்லாத கேள்வியில்  புரியாத பார்வை செலுத்தியவன் விஷ்ணுவின் பார்வை விஜயனிடம் இருப்பதை கண்டு அவன் கூற்றை புரிந்து கொண்டவனாக “ஹான் கால் பண்ணேன்! ஆனா.. போன எடுக்கலடா சரின்னு அங்கிளுக்கு கால் பண்ணி பேசுனேன் வீட்டுக்கு வந்துட்டான்னு சொன்னாங்க!” என்று முகத்தை ஏமாற்றதுடன் வைத்து கொண்டு பதில் அளிக்க

விஜயனுக்கு தான் என்னவோ போல் இருந்தது, காஃபி ஷாப்பில் அவன் பேசிய வார்த்தைகளும் அவளின் அழுகையும் நினைவு வர உணவும் தொண்டை குழியில் சிக்கி தவிக்க, மனதின் பாரம் கூடிக்கொண்டே செல்ல மூச்சைடப்பது போல உணர்ந்தவன் பாதி உணவிலேயே வேகமாக எழுந்து செல்ல

“டேய் விஜி” என்று அழைத்தவனை வேண்டாம் என்று தடுத்த விஷ்ணு

“போகட்டும் விடு அவன் பண்ண தப்பு என்னன்னு அவனுக்கு புரியட்டும்” என்றவன் “சாரி சபரி நீங்க சாப்பிடுங்க இது வேற ஒரு பிரச்சனை” என்று சங்கடத்துடன் உரைக்க

“பரவாயில்ல விஷ்ணு அவன் ஏதோ மனவருத்தத்துல இருக்கான்னு தெரியிது அதான்! பீச்ல தனியா இருந்த அவனை நானே கூட்டிட்டு வந்தேன், அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய மட்டும் அமைச்சு கொடுத்துருங்க  வாழ்க்கையில நிறைய இழந்துட்டான் அவன் சந்தோசமா இருக்குறத பாத்தா தான் எனக்கு சந்தோஷமே!” என்று நெகிழ்வுடன் பேசியவனின் விழிகளில் ஈரம் கோர்த்து நிற்க

“கண்டிப்பா..! அத நாங்க பாத்துகிறோம் நீங்க கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் கூற

கண்களை துடைத்து கொண்டு தன் தம்பியின் விசாரணையை பற்றி கேட்க தொடங்கினான் சபரி “கர்த்திக்கு அடுத்த ஹியரிங் எப்போ வருது விஷ்ணு?”

“அடுத்த வாரம் வருது ஆனா… தண்டனை கன்பார்ம்! என்னால ஒன்னும் பண்ண முடியாது, கார்த்திக் அப்றம் உங்க அப்பா ரெண்டு பேருக்கும் எதிரா ஆதாரம் எல்லாமே பக்காவா இருக்கு அதுமட்டுமில்ல உங்க அப்பாவே அப்ரூவர் ஆகிட்டாரு” என்றதும் சபரியின் முகம் வாடி போனது

அவன் முகவாட்டத்தை கண்டு “சாரி உங்களுக்கே தெரியும் போதை பொருள் கடத்துன கேஸ்ல அரஸ்ட் ஆகிருக்காங்க” என்று வருத்தத்துடன் இயம்ப

“பரவாயில்ல விஷ்ணு அவன் தேர்ந்தெடுத்த பாதைக்கு தண்டனை தான் கிடைக்கும் உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்!, என்ன கொஞ்சம் கஷ்டமா இருக்கு! அம்மா இல்லாம வளந்த பையன் அவன் கூட இருந்து பொறுப்பா கவனிக்காம விட்டுட்டேனேன்னு அது தான் உறுத்தலாவே இருக்கு!” என்று கவலையுடன் கூற

“விடுங்க சபரி எல்லாம் சரியாகிரும் கார்த்தி திருந்துறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு” என்று தேற்றுதலாய் கூறினான் விஷ்ணு

இருக்கும் இடம் தெரியாமல் மொத்த ஜீவனும் வாடிவிட்டதை போல அமைதியாக பெயருக்கு உணவை விழுங்கிய சஞ்சளா “அக்கா எனக்கு தூக்கம் வருது நா போய் படுக்குறேன்” என்று கூறிவிட்டு துவாரகாவை திரும்பி பாராமல் சென்றவளின் செவிகளில் விசாலாட்சி கூறிய வார்த்தைகள் ரீங்காரமிட அதை எண்ணும் போதே அவளது மனம் சோர்வில் அமிழ்ந்தது

மற்ற நால்வரும் உண்டு முடிக்கும் வரை எதுவும் பேசி கொள்ளவில்லை கார்த்தியை பற்றி ஒருசில விவரங்களை மட்டும் கேட்டு தெரிந்து கொண்ட சபரி! சற்று நேரம் இருந்து பேசிவிட்டே சென்றான்,வைதேகி உணவு பாத்திரங்களை சிங்கிலேயே போட்டுவிட்டு காலையில் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று சமையல் மேடையை மட்டும் சுத்தம் செய்துவிட்டு சஞ்சளாவிற்கு துணையாக அவளுடன் சென்று படுத்து கொண்டாள்.

துவாரகேஷ் விஷ்ணு இருவரும் அறைக்குள் சென்று விளக்கை எரியவிட உறங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தான் விஜயன், மூடிய இமைகளில் இருந்து முத்து முத்தாய் அவனையும் மீறி வழிந்த கண்ணீர் தடங்களை கண்டு இருவருக்கும் அவன் மீது கழிவிரக்கம் தோன்ற

“என்னடா இப்டி பீல் பண்றான்! பேசாம எழுப்பி என்ன பிரச்சனைன்னு கேட்கவா ரொம்ப கஷ்டமா இருக்குடா” என்று வருத்தத்துடன் கிசுகிசுப்பான குரலில் துவாரகா பேச

“வேணாம்! அவன் இன்னும் தூங்கல நம்ம ரெண்டு பேரும் அவன் அழுகிறத பாக்க கூடாதுன்னு தூங்குற மாதிரி நடிச்சிட்டு இருக்கான் எதுனாலும் காலையில பேசிக்கலாம் அவனுக்கு தேவை இப்போ தனிமை, நாம ரெண்டு பேரும் கீழ படுத்துக்கலாம் அவன் மேலயே படுத்துக்கிறட்டும்” என்று கீழே விரிப்பை விரித்து விளக்கை அணைத்து விட்டு மனமில்லாமல் இருவரும் படுத்து கொண்டனரே தவிர உறங்கவில்லை

சத்தமில்லாமல் அழுதவனுக்கு நீண்ட நாட்கள் கழித்து அவன் தாயின் சாந்தமான கருணை ததும்பும் முகம் நினைவில் வந்தது “அம்மா.. அம்மா..” என்று வலியோடு மனதிற்குள் அழைத்தவன் “எதுக்கும்மா..! என்ன தனியா விட்டுட்டு போன? உன்கூடவே என்னயும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல!,

ஏம்மா.. நா நேசிக்கிற எல்லாருமே என்னவிட்டு ரொம்ப தூரம் போயிடுறீங்க? என்னால யாருக்கும் சந்தோஷமே இல்ல! நீ மட்டும் என்கூட இருந்திருந்தா இன்னைக்கு இப்டி ஒரு தப்பு பண்ணிருக்க மாட்டேன், இப்போ இந்த நிலைமையில இருந்துருக்கவும் மாட்டேன்” குற்றவுணர்வில் தன் போக்கில் பேச தொடங்கினான்

“பாவம் ம்மா அந்த பொண்ணு எப்பவும் என்னயவே சுத்திசுத்தி வருவா அப்டியே உன்ன மாதிரிம்மா! சரியா கோபப்பட கூட தெரியாது! இன்னைக்கு அவளோட மனச ரொம்பவே காயப்படுத்திட்டேன் சுக்கு நூறா உடைச்சுட்டேன் வலிக்குதும்மா.. மனசு!,

உன்ன அழவச்சுட்டு போன அந்த ஆள் மாதிரியே நானும் அவள அழ வச்சுட்டேன் ஏன் இப்டி பண்ணேன்னு அதட்டி கேட்க ஆள் இருந்தும் இல்லாத நிலையில இருக்கேன், யார்கிட்டயும் என்னால சொல்ல முடியலைம்மா மனசுல பாரம் ஏறிகிட்டே போகுது என்னால தாங்க முடியல! அவ அழுதுகிட்டே போனதை அலட்சியப்படுத்த முடியலைம்மா

எனக்கு மன்னிப்பே கிடையாது,

உன்னோட மடியில படுத்து ஓ…ன்னு கதறி அழனும் போல இருக்கு ஆறுதலா தலைய கோதிவிடுவையே அந்த ஆறுதல் வேணும்னு மனசு ஏங்குது! மத்தவங்க மாதிரி என்னால எதையும் சுலபமா கடந்து வர முடியலை அட்சய பாத்திரம் போல அன்பை கொட்டுற அவள கூடவே வச்சுக்கவும் முடியலை விட்டு விலகவும் முடியலை ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.. “என்று மானசீகமாக தன் தாயிடம் மனம் வலிக்க வலிக்க பேசியவனுக்கு அழுகையை அடக்க பிரயத்தனம் செய்ததில் ஒருகட்டத்தில் தொண்டையில் வலி ஏற்பட்டது

இரவு முழுதும் சத்தமில்லாமல் அழுது அலுத்து மரத்து போன விழிகள் அதிகாலை அளவில் அவனையும் மீறி களைப்பில் இமை இரண்டும் விழிகளை அடைத்து கொள்ள தன்னையும் மீறி உறங்கி போனான் வாழ்வில் தனிமையின் வலியை மட்டுமே அனுபவித்து வந்தவன், விஜயன் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்தி கொண்டே மற்ற இருவரும் உறக்கம் கொள்ள தொடங்கினர்.

தொடரும்…

கண் மூடினால் தூக்கம் இல்லை கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை

ஆலவிருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு

என் நெஞ்சமே பகையானதே உயிர் வாழ்வதே சுமையானதே

மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

Advertisement