Advertisement

“எப்டி சொல்ற விஷ்ணு அவங்களுக்கு எதிரின்னு யாராவது இருந்துருக்கலாம் இல்லையா? வெறும் அனுமானத்தை வச்சு எதையும் முடிவு பண்ண கூடாது கேஸ் பைல் பண்ணா என்ன ஆகும் தெரியும்ல பல விதமா திசை திரும்பும், சாந்த மூர்த்தி சொசைட்டில முக்கியமான ஆள்  மக்கள் மத்தியில் நல்ல பேரை மட்டுமில்ல நம்பிக்கைய சம்பாதிச்சு வச்சுருக்காறு அப்படிப்பட்ட ஒருத்தர் மேல அசட்டுதனமான குற்றம் சுமத்த முடியாது” என்று எச்சரிக்கும் குரலில் எதிர்வாதம் செய்ய

அவரிடத்தில் கூர்மையான பார்வை செலுத்தியவன் “இல்ல சார் வெறும் அனுமானத்தை வச்சு மட்டுமே நா இதை சொல்லை சாந்த மூர்த்தியோட வீட்டுக்கு போன அன்னைக்கு அவரோட பாடியில இருந்த அதே தடம் என்னோட ரிலேட்டிவ் அமிர்தா அவங்க உடம்புலயும் இருந்தது சார்! அவரோட பேமிலி டாக்டர்கிட்டயும் விசாரணை பண்ணேன் அட்டாக் வர சான்ஸே இல்லன்னு சொன்னாரு அவரு கொடுத்த சாந்த மூர்த்தியோட மெடிக்கல் ரிப்போர்ட்” என்று மருத்துவ ஆய்வறிக்கையை நீட்டியவன்

“அவரு இறந்து போன மறுநாளே யாருக்கு தெரியாம அவரோட ரூமை செக் பண்ணதுல சில எவிடன்ஸ் கிடைச்சிருக்கு சார்!, இறக்குறதுக்கு முன்னாடி அந்த கொலையாளி கூட சண்டை போட்டுருக்காரு அவரோட ரூம்ல கிடைச்ச இந்த மொபைல்ல எல்லா வீடியோவும் ரெக்கார்ட் ஆகிருக்கு ஆனா கொலையாளியோட முகம் மட்டும் தெரியலை!, முகத்தை மறைக்க கர்சீப் கட்டி அதுக்குமேல அடையாளம் தெரிய கூடாதுன்னு மங்கி குள்ளா போட்டிருக்கான் கையில கிளவுஸ் போட்டிருந்ததால கைரேகை எதுவும் பதியலை சார்” என்று அலசி ஆராய்ந்த முழுவதையும் அச்சு பிசரமல் விளக்கி முடிக்க

சடகோபனிற்கு தலை சுற்றியது விசாரணையில் அவனது தீவிரத்தை கண்டு, ஒரு விஷயம் கேட்டால் ஓராயிரம் விஷயத்தை கூறுகிறானே என்று எண்ணியவர் கிறுகிறுப்பை போக்கி கொள்ள அவனின் கோபத்தை தணிக்க அவன் புறம் தள்ளிய தண்ணீர் கிளாஸை எடுத்து மடமடவென குடிக்க தொடங்கினார்

தாகம் தீர்க்கும் வரை அமைதிகாத்தவன் “சார் கிடைச்ச ஆதாரத்தை உங்ககிட்ட சப்மிட் பண்ணிட்டேன் கொலையாளி யாருன்னு உங்களுக்கு தெரியும்னு சொன்னிங்க அது யாருன்னு நாங்களும் தெரிஞ்சுக்கலாமா?” என்று ஆவலோடு கேட்டு அவர் முகத்தை பார்க்க

ஆசுவாசப்படுத்தி கொண்ட தெம்புடன் “ஓ யெஸ் தாராளமா தெரிஞ்சுக்கலாம் விஷ்ணு”  என்றவர் “அவங்களை கொலை பண்ணது வேற யாருமில்ல! நீ சொன்ன மாதிரி அவங்களுக்கு நெருங்கின உறவான வக்கீல் சார் தான் கொலை பண்ணிருக்காரு குற்றத்தையும் அவரே ஒத்துகிட்டாரு!” என்று இடப்பக்கம் அமர்ந்திருந்தவன் மீது பார்வையை நிலை நிறுத்தினார் சடகோபன்

“சார்…!” என்று விஷ்ணு அதிர்ச்சி அடைந்தான் என்றால் துவரகாவின் முகத்தில் ஈ ஆடவில்லை “சார் பீ சீரியஸ், ஜோக் பண்ணிட்டு இருக்காதீங்க சாந்த மூர்த்தி இவரோட பெரியப்பா இவரு எப்டி அவர கொல்ல முடியும்?” என்று நம்ப முடியாமல் பதட்டத்துடன் கேட்க

“ஜோக்கா..? இப்போ நீ பேசுறது தான் காமெடியா இருக்கு எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிருக்கேன் ஜோக்குன்னு சொல்ற!, வக்கீல் சார் சரண்டர் ஆகலாம்னு வந்துருக்காரு நா சொன்னா நம்ப மாட்டிங்கிற அவரோட நேரடி வாக்குமூலத்தை நீயே கேளு!” என்றவர்

“கேட்ட எனக்கு அவரோட கோபம் நியாமானதா தான் தோணுது ஒருவேளை உனக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு தோணுச்சுன்னா தாராளமா அரஸ்ட் பண்ணலாம் நா எதுவும் சொல்ல போறதில்லை” என்று சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு ஒதுக்கி வேடிக்கை பார்க்க தொடங்கினார் சடகோபன்

“ஆமா! அந்த கொலைய பண்ணது நான் தான்!” என்று அதுவரை அமைதியாய் இருந்தவன் வாய்மொழி திறந்து உண்மையை ஒப்பு கொள்ள

விஷ்ணுவிற்கு கோபம் சுறுசுருவென சிரத்திற்கு ஏறியது திருமண வாழ்வை கூட சுகிக்க முடியாமல் இந்த ஒரு மாத காலமாக யார் கொலையாளி என்று நாயாய் பேயாய் அலைந்து திரிந்து மண்டை காய்ந்ததை நினைக்கும் போதே உக்கிரத்தில் நரம்புகள் விடைத்தன அவனுக்கு “நான் தான் கொலை செய்தேன் என்று சாதுவாய் வந்து நின்றால் அதிகபட்ச தண்டனை கிடைக்காது என்ற எண்ணம் போல வக்கிலுக்கு!, சட்டத்தை பற்றி சொல்லியா தரவேண்டும்” என்று நிந்தனையான எண்ணங்கள் கடிவளமிடாத குதிரையை போல தாருமாறாய் ஓட

“அன்னைக்கு அவ்ளோ கட் அண்ட் ரைட்டா பேசுனிங்க ஒரு வக்கீல் பண்ற வேலையா இது? சட்டம் தெரியும்ன்ற தைரியத்துல தானே இப்டி பண்ணிருக்கிங்க ஏன் சார்! அன்னைக்கு உங்க பெரியப்பா வீட்டுக்கு வந்தோமே அப்பவே நான் தான் கொலை பண்ணேன்னு சொல்லிருக்க வேண்டியது தானே சாவகாசமா இத்தனை நாள் கழிச்சு வந்து சொல்றிங்க” என்று ஆவேசத்துடன் கேட்டவன் ருத்ரனை உறுத்து விழிக்க

“ஏ சார் வக்கிலுக்கு பழி உணர்ச்சிகள் இருக்க கூடாதா! அவனும் மனுஷன் தானே! விச்சித்திரமான ஜீவன் இல்லையே? உறவாடி கெடுத்தவங்களை அவங்க வழியிலேயே போய் கொன்னுருக்கேன் எனக்கு அப்போ தப்பா படலை இப்பவும் எனக்கு தப்பா படலை சார்!,

என்னோட குடும்பத்தை என் கண்ணு முன்னாடியே எரிச்சு கொன்னானே அந்த சாந்த மூர்த்தி அவன கொன்னதுல என்ன தப்பு, ஒரு கன்னத்தை காட்டுன இன்னொரு கன்னத்தை காட்டுற ஆள் நா இல்லை போற போக்குல அடிச்சிட்டு போறதுக்கு, அப்பா பொறுக்கி எடுத்த அயோக்கியன்னா பையன் கடைஞ்செடுத்தவனா இருந்தான்!, என்கிட்டயே அவ்ளோ திமிரா பேசுனான்! ரூல்ஸ் போட்டான்! இன்னொரு பொண்ணை கடத்த போறோம் மாட்டுனா நீ தான் எங்களுக்காக வாதடனும்னு கண்டிஷன் போட்டான்!” என்று விஷ்ணுவிற்கு ஈடாக சளைக்காமல் ஆவேசத்துடன் பேசியவன் குரலை தணித்து கொண்டு

“என்னோட தனிப்பட்ட விஷயத்துக்காக மட்டும் நா அவங்களை கொலை பண்ணல இறந்து போனவங்களுக்காகவும் இனிமே அப்டி ஒரு தப்பு நடக்க கூடாதுன்னு தான் ரெண்டுபேரையும் சாகடிச்சேன்!, பலபேருக்கு நியாயம் வாங்கி கொடுத்துருக்கேன் ஆனா எனக்கான நியாயத்தை நானே வாங்கிகிட்டேன் ஒருவேளை அவங்கள அரஸ்ட் பண்ணிருந்தா உங்களால என்ன பண்ணிருக்க முடியும்?” என்று தன் வலுவான எண்ணத்தை கேள்விக்குறியிட்டு முன்வைத்தான் ருத்ரன்

வேகமாக “நிச்சயம் அவங்க ரெண்டு பேருக்கும் அதிகபட்ச தண்டனையா தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துருப்பேன் ஆதாரம் எல்லாமே என்கிட்ட பக்கவா இருக்கு!” என்று கையில் இருந்த பேப்பர்களை பார்த்து திண்ணமாய் உரைத்தான் விஷ்ணு

அவனின் அசட்டுதனமான பேச்சை கேட்டு இதழில் ஏளன புன்னகை இளையோட “அப்டியே உங்க அன்பான குடும்பத்துக்கும் மரண தண்டனைய கொடுத்துருப்பிங்க அவங்கள பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அமைச்சர் உத்தமன் மாதிரி அடங்கி போற ஆளுன்னு நினைச்சீங்களா..?, வெளிய வர்றதுக்கு என்ன வேணாலும் பண்ணிருப்பானுங்க யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு இவ்ளோ பெரிய தப்பு பண்ணவனுங்க எந்த தப்பும் பண்ணலைன்னு உங்கவாயாலேயே சொல்ல வைக்க எவ்ளோ நேரம் ஆகிருக்கும்?” என்று புருவம் உயர்த்தி வேகமாக கேட்க

விஷ்ணு அதிர்ந்து போய் ருத்ரனை பார்த்தான் அங்கு நடக்கும் சம்பஷணைகள் எதுவும் துவாரகாவின் மூளைக்கு முழுமையாய் எட்டவில்லை என்றாலும் ஓரளவுக்கு அனுமானமாய் புரிந்து கொள்ள முடிந்தது “ஆமா விஷ்ணு எதுக்கும் அஞ்சாத ஆளுங்க அவங்க வெளிய நல்லவங்கன்னு வேஷம் போட்டு பல பணமுதலைகளை கைக்குள்ள போட்டு வச்சுருக்காங்க ஸ்டேட் லெவல் தானே உங்களுக்கு தெரியும்? சென்ட்ரல் லெவல்ல அவங்களுக்கு லிங்க் இருக்கு!,

உதவின்னு வர்ற அத்தனை பேருக்கும் தயவு தாட்சண்யம் பாக்காம அள்ளி கொடுக்குற வள்ளல்ன்னு நினைச்சீங்களா?ம்ஹும் முடிஞ்ச அளவுக்கு செமத்தியா கறந்துட்டு ஒன்னுமில்லாம பல பேரை அனுப்பி வச்சுருக்கங்க, அவங்க கூடவே இருந்தவன் நான்!, குற்றவியல் படிச்ச எனக்கு குற்றவாளி அடுத்து என்ன பண்ணுவான்னு தெரியாதா? சட்டத்தை பத்தி தெரிஞ்சதுனாலா தான் எந்த நியாயமும் கிடைக்க போறதில்லைன்னு நானே அவனுங்களை கொலை பண்ணேன்!” என்றவனின் முகத்தில் தெரிந்த உக்கிரம் விஷ்ணுவை ஏனோ அமைதி படுத்தியது

அவன் செய்த செயல்  நூற்றுக்கு நூறு சரிதான் என்று மனம் சபாஷ் போட்டாலும் தன்னை பேயாய் அலைந்து அல்லாட வைத்ததின் கோபம் உள்ளே கனன்று கொண்டு தான் இருந்தது அதுவே அவனது கோபத்தை அதிகப்படுத்த ருத்ரனின் நியாயத்தை ஏற்க மறுத்தது

“என்ன தான் நீங்க நியாயமான காரணம் சொன்னாலும் நீங்க பண்ணது கொலை? அதுக்கான தண்டனை உங்களுக்கு கிடைச்சே ஆகணும் சார்!” என்று பிடிவாதம் நிறைந்த குரலில் கூறினான் விஷ்ணு

“நா தப்பு பண்ணலைன்னு சொல்லையே ஏசிபி சார்! தண்டனையில இருந்து தப்பிக்கிறதா இருந்தா நிச்சயம் நானா முன்வந்து குற்றத்தை ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன்! என்னோட மனசாட்சிக்கு நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் இப்போவே என்ன அரஸ்ட் பண்ணுங்க, தப்பு பண்ணா தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் நா மட்டும் விதிவிலக்கா என்ன?” என்று கேட்டு நிறுத்திய ருத்ரன்

சடகோபனிடம் திரும்பி “கமிஷ்னர் சார் ஆதாரம் எல்லாமே உங்ககிட்ட இருக்கு நேரடி வாக்கு மூலமும் கொடுத்துட்டேன் சாட்சி இதோ!, ரெண்டு பேர் இருக்காங்க இது போதும் தானே அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்குறதுக்கு” என்று படபடவென பேசியவன் அனைத்திற்கும் ஆயத்தமாய் இருந்தான்

அவன் நேர்மையை கண்டு மெச்சிக்கொண்டாலும் ஏனோ தவறிழைத்ததன் பலனை அனுபவித்து தானே ஆகவேண்டும் சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே என்று மனதோடு பிடிவதமாய் வாதம் செய்தவன் “சார் இப்போவே வாரண்ட் கொடுங்க அரஸ்ட் பண்றதுக்கு” என்று முந்தி கொண்டு வர

கையசைத்து அவனை அமைதிபடுத்தியவர் அத்தனை நேர யோசனைக்கு பின் “ஏன் விஷ்ணு ஒருவேளை காக்கி சட்டையில யோசிக்காம சக மனுஷன யோசிச்சு பாறேன் வக்கீல் சார் பண்ணது சரியா இல்லையான்னு உனக்கே புரியும்?, அப்டியே அவர அரஸ்ட் பண்றதா இருந்தா எந்த கேஸ்ல அரஸ்ட் பண்ணுவ?” என்று முகத்திலும் குரலிலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் நிதானமாய் கேட்க

” ப்ச் சா..ர்! நீங்களே இப்டி பேசுனா எப்டி?” என்று எரிச்சலாய் கேட்டவன் “எந்த கேஸ்ல அரஸ்ட் பண்றதுன்னு சாதாரணமா கேக்குறிங்க கொலை பண்ணிருக்காரு!, ஏன் சார் அவரு பண்ணது தப்புன்னு உங்களுக்கு தெரியலையா?” என்று கேட்டவனுக்கு அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

“இல்ல விஷ்ணு வக்கீல் சார் பண்ணது தப்பே இல்ல!, ஒருவேளை அவங்கள அரஸ்ட் பண்ணும் போது தப்பிச்சு போக முயற்சி பண்ணிருந்தா நீ என்ன பண்ணிருப்ப?” அதையும் நிதானமாகவே கேட்டு அவன் முகத்தை ஏறிட்டார் சடகோபன்

Advertisement