Advertisement

விஷ்ணு துவாரகா இருவரும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே ஆர்டர் கொடுத்திருந்த காலை உணவு வந்துவிட உணவை முடித்து கொண்டு விஜயனை தவிர்த்து ஆண்கள் மூவரும் சற்று நேரம் கீழே சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பிவிட்டனர், சஞ்சளா வைதேகி இருவரும் மிஞ்சிய உணவுகளை எடுத்து வைத்து பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க “ஏம்மா வைதேகி காபி தண்ணி கொண்டா நெஞ்சு கரிக்கிற மாதிரி இருக்கு” என்று அன்னத்தின் குரல் கேட்டு

அவசர அவசரமாக மிஞ்சிய தேநீரை சூடு படுத்தி கொண்டு வந்து கொடுத்தவளிடம் “ஏத்தா அவன் எப்போ வருவான்னு ஏதாவது சொல்லிட்டு போனானா?” என்று கேட்க

“ஆமா அத்தை வர சாயந்தரம் ஆகும்னு சொன்னாரு ஏ அத்தை கேக்குறீங்க”

“சும்மா தான் கேட்டேன் ம்மா” என்றவர் “சரி மதியத்துக்கு என்ன செய்யலாம்னு சொல்லு சட்டுன்னு வேலைய ஆரம்பிப்போம் சும்மாவே எம்புட்டு நேரந்தான் ஒக்காந்து கெடக்குறது” என்று தேநீரை பருகி கொண்டே சொல்ல

“அவங்க கடையில சொல்லிக்கலாம்னு சொன்னாங்க அத்தை” என்று தயங்கிபடி கூறினாள் வைதேகி

“கடையிலயா..? காலையில சாப்ட்டதே நெஞ்சு கரிச்சுக்கிட்டு ஒரு மாதிரி இருக்கு மறுக்கா கடை சாப்பாடு வேணாத்தா, பொம்பளைங்க இத்தனை பேர் எதுக்கு இருக்கோம் நாமளே சமைச்சிறலாம் நீ விஜிய வர சொல்லு காய்கறி வாங்கிட்டு வர சொல்லுவோம் கடை சாப்பாடே ஒத்துக்காது அவகளுக்கு வீட்டு விஷேஷம்னு அமைதியா சாப்ட்டு போறாரு” என்று பெரிதாய்யொரு விளக்கம் கொடுக்க

சிரித்து கொண்டே “சரி அத்தை” என்று தலையாட்டியவள் தேவையான பொருட்களை எழுதி விஜயனிடம் கொடுத்தனுப்பிவிட்டு வேறு வேலையை கவனிக்க தொடங்கினாள்

உத்தமனும் எதிர்க்கட்சி தலைவரும் ரகசியமாய் சந்தித்து பேசுவதை மறைந்திருந்து பதிவு செய்து கொண்டிருந்தவனின் அலைபேசி திடீரென அதிர்ந்ததில் திடுக்கிட்டு எடுத்து பார்த்தான் விஷ்ணு கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலாளி தான் அழைத்திருந்தான்

உயிர்பித்து காதில் வைத்ததும் “சார் நீங்க ஒரு நம்பரை கொடுத்து டிரெஸ் பண்ண சொன்னிங்களே அந்த நம்பர் இப்போ ஆக்டிவ்ல இருக்கு சார்” என்ற செய்தி நொடி பொழுதில் அவன் மூளையில் சென்று பரபரப்பை ஏற்படுத்த

“இப்போ அந்த நம்பர் எங்க போயிட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா?” என்று அவசரமாக கேட்கவும் இடத்தை கூறியவனிடம் அழைப்பை துண்டிக்காமல் தொடர்பில் இருக்குமாறு கூறிவிட்டு வீடியோ எடுத்த வரை போதுமென்று குற்றவாளியை பின் தொடர விரைந்தான்

கார் எண்ணுரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலில் அருள் ஜோதியை அவசரமாக வரவழைத்து எண்ணுரை நோக்கி ஜீப்பின் வேகத்தை அதிகப்படுத்துமாறு கூறியவனின் மனதில் “எப்படியும் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணையை நடத்த வேண்டும்” என்ற உத்வேகம் பிறக்க,

 கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைக்கும் தகவலின்படி பின்தொடர்ந்ததில் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும் விதமாக அவன் பின் தொடர்ந்து சென்ற காரை நெருங்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி தீப்பிடிக்க தொடங்கியது குற்றவாளி சென்ற வாகனம்

அர்த்த ஜமாத்தில் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களின் கட்டுப்பாட்டில் நெடுஞ்சாலை இருந்ததால் தீப்பற்றி எரியும் காரை அவ்வளவாக எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை சரக்கை உரிய நேரத்தில் துரிதமாக கொண்டு  சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏதாவது இடைஞ்சல் வர கூடும் என்ற பயத்திலும் அவரவர் போக்கில் எரியும் காரை கடந்து செல்ல

காரின் உள்ளே இருந்து கேட்ட அலறல் குரலில் வேகமாக ஜிப்பை ஓரம் கட்ட சொல்ல இறங்கியவனை தொடர்ந்து அருள் ஜோதியும் இறங்கினான், அருகில் செல்ல முற்பட்டவனை “சார் வேணாம் போகதிங்க” என்று அருள் கைபிடித்து தடுத்து நிறுத்த

அவன் பிடியில் இருந்து திமிறி விலகி காரை நோக்கி முன்னேற முயன்ற விஷ்ணு மதமதவென எறிந்த தீயின் வெம்மையால் வாகனத்தின் அருகில் நெருங்க முடியமால் செய்வதறியாது திகைத்து பின் நொடி பொழுதில் நினைவில் உதித்த யோசனையில் தீயணைப்பு துறைக்கு தகவலை கூறுமாறு அருளிடம் பணித்து விட்டு அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறினான் விஷ்ணு,

அரைமணி நேர காத்திருப்பிற்கு பின் அவ்விடம் வந்த காவல் துறை தீயணைப்பு துறையினரால் களோபரமாக காட்சி அளித்தது அந்த பகுதி, எறிந்து கொண்டிருந்த காரை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பாய்ச்சி அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்க எப்படி நடந்தது என்று புரியாமல் கோபத்தில் தரையில் காலை உதைத்தவன் காவல் ஆய்வாளரிடம் விஷயத்தை கூறிவிட்டு அருள் ஜோதியை வாகனத்தை கிளப்புமாறு கூறி அங்கிருந்து கிளம்பிய பழைய நினைவுகளில் உழன்றவனை  நடப்பிற்கு கொண்டு வந்தது சடகோபனின் உரத்த குரல்

“என்ன விஷ்ணு யோசனை பலமா இருக்கு? உனக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் எனக்கு எப்டி தெரியும்னு யோசிச்சிட்டு இருக்கியா?” என்று கேட்க

“தனக்கு மட்டுமே தெரிந்த ஒருசில விஷயங்கள் இவருக்கு எப்படி தெரியும் அதுவும் அவர்கள் இருவரின் மரணமும் இயற்கையானது இல்லை என்று குறிப்பிட்டு கூறுகிறாரே?” என்ற அவனின் உள்மனம் “ஒருவேளை இவர் தான் கொலை செய்தாரே” என்ற ஐயத்தை சடகோபனின் மீது எழுப்ப “சார்… உங்களுக்கு எப்டி தெரியும்?” என்று கூர்மையான பார்வை செலுத்தி வார்த்தைகளை இழுத்து நிறுத்தினான் விஷ்ணு

சன்னமாய் முறுவலித்தவர் “எனக்கு தெரியும் விஷ்ணு! அதுமட்டுமில்ல ரெண்டுபேரையும் கொலை பண்ண கொலையாளி யாருன்னு கூட எனக்கு தெரியும்?” என்று புதிர் போட்டு நிறுத்திவிட்டு “சொல்லு எதுக்காக என்கிட்ட இருந்து விஷயத்தை மறைச்ச” என்று கண்டிப்புடன் கேட்க

“கொலையாளி யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று அதிர்ந்தவன் “அப்டின்னா அரஸ்ட் பண்ண வேண்டியது தானே சார் அதவிட்டுட்டு பேசிட்டு இருக்கீங்க!” என்று கோபமாக கேட்க

“எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற அரஸ்ட் பண்ண தெரியாம உக்காந்திருக்கல  அரஸ்ட் பண்றது நெக்ஸ்ட் பாக்கலாம் செத்து போன ரெண்டுபேரும் தியகிகளா என்ன? அவங்களும் அக்யூஸ்ட் தானே?, பித்தலாட்டம் பண்ணவனை பிளான் பண்ணி மர்டர் பண்ணிருக்கான் டிப்பார்ட்மெண்டுக்கு வேலைய மிச்சம் பண்ணிருக்கான் அவன்மேல கோபபட கூடாது நம்மலாள முடியாத காரியத்தை அவன் பண்ணிருக்கானேன்னு சந்தோஷபடனும்!” என்று அசட்டையாய் கூறியதும் அவன் மனம் இவர் தான் கொலையாளி என்று உறுதியாய் நம்பவே தொடங்கிற்று

தண்ணீர் கிளாஸை அவன் புறம் நகர்த்தி “இந்தா தண்ணி குடி குடிச்சுட்டு பர்ஸ்ட் நா கேட்டதுக்கு பதில் சொல்லு? கொலை பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சு எதுக்கு என்கிட்ட ரிப்போர்ட் பண்ணலை கேஸை ஹாண்டில் பண்ணது வேணா நீயா இருக்கலாம் ஆனா ரெஸ்பான்ஸ்பிலிட்டி என்னோடது!, ஹையர் ஆபீசர் கேட்டா அவங்களுக்கு நா என்ன பதில் சொல்றது எதுக்காக என்ன இங்க வர வச்ச! கேஸ் எந்த வித தடங்களும் இல்லாம முடியனும்னு தானே?,

இப்போ கிணறு வெட்ட போய் பூதம் கிளம்புன கதையா இப்டி ஒரு விஷயம் நடந்துருக்கு இத்தனை நாள் சொல்லாம மறைச்சிருக்க ஒருவேளை கொலை பண்ணவன் உனக்கு வேண்டபட்டவங்களோ…? அதனால தான் என்கிட்ட சொல்லாம மறைச்சியா?” என்று அமைதியை விடுத்து அதிகாரமாய் எண்ணத்தில் உதித்த கேள்விகளை கேட்க

அவரின் கேள்விகள் அத்தனையும் அவனை தாழ்ந்து போக செய்தது மட்டுமல்லாது அதிர்ச்சியை தருவித்தது, தன்னை பற்றிய இவரது எண்ணம் என்னவென்று புரிந்து கொண்டவனுக்கு அவரது அபத்தமான குற்றச்சாட்டு கோபத்தை ஏற்படுத்த “சார் நா எதுக்கு அவங்களை கொலை பண்ண போறேன்!,

எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு ஒருவேளை நீங்க யோசிக்கிற மாதிரி நானும் யோசிக்கலாம் இல்லையா?,நீங்க ஏன் அவங்களை கொலை பண்ணிருக்க கூடாது?” என்று ஆவேசத்துடன் எதிர்த்து பேசினான் விஷ்ணு

“ஹா… ஹா.. ஹா.” என்று இடிசிரிப்பு சிரித்தவர் “செம்ம ஜோக் நா! கொலை பண்ணிருப்பேனா?” என்றவர் “பின்ன சொல்லாம மறைச்சத்துக்கு உன்மேல தான் சந்தேகப்படனும் இப்பவும் என்ன நடந்துச்சுன்னு நீ சொல்லவே இல்லையே” என்று கடுமையாக முகத்தை வைத்து கொண்டு கேட்க

“சாரி சார் உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல! கொலையாளி யாரு எதுக்காக இப்டி பண்ணான்ற விவரத்தை கலெக்ட் பண்ணிட்டு எவிடன்ஸ்சோட உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன், யாருக்கிட்டயும் இந்த கேஸை பத்தி டிஸ்கஸ் பண்ணல சார் துவாரகாவுக்கே தெரியாது இப்டி ஒரு சம்பவம் நடந்துருக்குன்னு” என்று கம்மிய குரலில் கூறியவன் அருகில் அமர்ந்திருந்தவனை பார்த்தான், கோபம் ஏமாற்றம் கலந்த அத்தனையும் துவராகாவின் முகத்தில் தாண்டவமாடியது

“இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்றதும் சொல்லாததும் உன்னோட விருப்பம்” என்று அலட்சியமாய் தோளை குலுக்கியவர் “உன்னோட ஹையர் ஆபீசர் நா! உன்ன விட எக்ஸ்பீரியன்ஸ் ப்ளஸ் ஒர்க் ரெண்டுத்துலையும் சீனியர் என்கிட்ட நீ சொல்லிருக்கணுமா இல்லையா?” என்று கடுமையாக பேசியவர் பின் பெருமூச்செடுத்து

“சரி இப்போயாவது சொல்லு கேஸ் எந்த அளவுல இருக்கு கொலையாளிய கண்டுபிடுச்சுட்டியா இல்லையா? நீ கலெக்ட் பண்ண ஆதாரம் எல்லாம் எங்க?” என்று கேட்க

“சாரி சார் இன்னும் கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்கலை”என்று ஏமாற்றமாய் உரைத்தவன்

“சுரேந்தரோட பாடி முழுசா எரிஞ்சு போனதால எதையும் என்னால கண்டுபிடிக்க முடியலை! ஆனா.. அவன் ஓட்டிட்டு போன கார்ல திடீர்ன்னு தீப்பிடிக்க சான்ஸே இல்ல சார் அதோட வேல்யூவே கிட்டத்தட்ட கோடியில இருக்கும்” என்றவன் அதுவரை திரட்டிய ஆதாரங்களை சடகோபனிடம் நீட்டி

“சாந்த மூர்த்தியேட பையன் தான் சுரேந்தர்ன்னு அப்போ எனக்கு தெரியாது கேஸை பத்தி கனகராஜ் சார்கிட்ட விசாரிக்க போனப்ப தான் தெரிஞ்சது சாந்த மூர்த்தி வீட்டுல தான் கிரிமினல் யூஸ் பண்ண போட்டோ இருக்குதுன்னு, சாந்த மூர்த்தி அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்துட்டாருன்னு அருள் சொன்னதும் அவசரமா அவர பாக்க போன இடத்துல தான் அவரே ஒப்பப்படைக்க சொல்லி கொடுத்தாருன்னு இந்த பைல்ஸ் எல்லாத்தையும் வக்கீல் சார் கொடுத்தாரு” என்று அருகில் அனைத்தையும் கேட்டும் கேட்காத விதமாய் அமர்ந்திருந்த ருத்ரனை குறிப்பிட்டவன்

“அவங்க ரெண்டுபேராட இறப்பும் நேச்சர் டெத் இல்ல பிளான் பண்ணி மர்ட்டர் பண்ணிருக்கான்!, அதுமட்டுமில்ல கொலை பண்ணவன் அவங்க ரெண்டு பேருக்கும் நெருங்கின உறவு சார்” என்றதும் துவராகாவின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் தாருமாறாய் படர்ந்தன

‘இவையெல்லாம் எப்போது நடந்தது ஏன் என்னிடம் கூறவில்லை அவனுடன் தானே நானும் இருந்தேன் என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி” என்று எண்ணியவனுக்கு கோபம் மேலோங்க எதையும் அவ்விடத்தில் காட்ட பிடிக்காது அமைதியாய் அமர்ந்திருந்தான் துவாரகா

Advertisement