மௌனக்குமிழ்கள் – 9

நாமக்கல்லில் ஏதோ மாயசக்தி இருப்பதாகவே பிரகதீஸ்வரனுக்கு தோன்றியது. தாத்தாவிடமும் செழியனிடமும் எப்படி ஸ்ரீமதி பூரித்த முகமாகத் திரிவாளோ அதேபோல தான் இந்த ஊருக்கு வந்தபிறகும் அவளின் உறவுகளைப் பார்த்த பிறகும் இருந்தாள்.

ஸ்ரீமதியின் பெரியம்மா, மாமா பிள்ளைகள் எல்லாம் இவளைவிடப் பெரியவர்கள், திருமணம் முடிந்தவர்கள். வெளியூரில் வசிப்பவர்களும் இவள் வருகிறாள் எனத் தெரிந்து வீடு வந்திருந்தார்கள்.

இரு வீடுகளும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என நிறைந்து இருந்தது. இரண்டு நாட்களும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது.

அவர்கள் அனைவரிடமும் இணக்கமாக நடந்து கொண்டதன் மூலம் மனைவியின் மதிப்பில் தான் உயர்ந்து விட்டிருப்பது அவளது பார்வையிலேயே பிரகதீஸால் புரிந்து கொள்ள முடிந்தது.

சிக்கனமான ஸ்ரீமதியின் பார்வைகள் இப்பொழுது விரிவடைந்ததில் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

முத்தாய்ப்பாய் இங்கு வந்ததற்கு ஸ்ரீமதி குறித்து மேலும் சில விஷயங்கள் கிடைக்கப்பெற்றது. இங்கு அவளைக் கேலி செய்தபோது, “டீச்சரம்மா…” என்றுதான் கேலி பேசினார்கள்.

ஸ்ரீமதி சிணுங்கினாள், மிரட்டினாள், பெரியம்மா, அத்தை எனப் பெரியவர்களிடம் புகார் கூறி பார்த்தாள் எதற்கும் யாரும் மசியக் காணோம்.

அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து மறையவும், “ஏன்? அவ அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாளா என்ன?” என மற்றவர்களிடம் விசாரித்தான்.

“ஸ்ட்ரிக்ட்டா? அவளா? அவ சரியான புள்ளைபூச்சி… அவளுக்கு டீச்சர் வேலை பிடிக்கும். அதுனால அப்படி கேலி செஞ்சோம்” என்று சொல்லிவிட்டு அவளின் அண்ணன் பெருமூச்சு விட்டான்.

“அவ வாங்கின மார்க்குக்கு டாக்டர், என்ஜினியர்ன்னு படிச்சிருக்கலாம். ஆனா, அவங்க அப்பா கடைசிவரை அவகிட்ட அவ ரிசல்ட் பத்தியோ… அவளுக்கு மேற்கொண்டு படிக்க என்ன விருப்பம்ன்னோ கேட்கவேயில்லை. இங்கிருந்து கோவை, சென்னை மாதிரி பிளேஸ்க்கு தான் பொதுவா காலேஜ் படிக்க போவோம்.

ஆனா ரிசல்ட் வந்து ஒரு வாரம் வரை அவங்க அப்பா ரெஸ்பான்ஸ்க்காக அவ காத்திருந்தது தான் மிச்சம். அவங்க அப்பா இவளுக்காக எதுவுமே செய்ய போறதில்லைன்னு புரிஞ்சு பெரும் ஏமாற்றத்தோட இங்கே வந்தவ… இங்கே இருக்க ஆர்ட்ஸ் காலேஜிலேயே ஏதாவது படிச்சுக்கறேன்னு சொல்லிட்டா… ஏன்னா அவங்க அப்பா நிறைய பணம் எதுவும் அனுப்பலை. அவர் அனுப்பின பணம் ரொம்பவும் கம்மி. காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ், புக்ஸ் இதெல்லாம் யோசிச்சா அந்த பணம் பெரிய காலேஜில் படிக்கவோ, நல்ல கோர்ஸில் படிக்கவோ ஒத்துவராது.

அவளுக்கு என்ன ஆசை இருந்துச்சோ தெரியலை. ஆனா அவ அதை அப்படியே மூட்டை கட்டி வெச்சுட்டா. அந்த ஆளுக்கு ஏன் இவ்வளவு அலட்சியமோ? பணம் அவ்வளவு வெச்சிருந்தும், சொந்த பொண்ணுக்கு செய்ய மனசு இல்லை பாருங்க” கவலையும் ஆதங்கமுமாகச் சொல்லிக்கொண்டே வந்தவன், இறுதி வாக்கியத்தில் அத்தனை வெறுப்பைக் காட்டினான்.

“அவ டென்த், ப்ளஸ் டூ ரெண்டுலேயும் மேத்ஸ்ல சென்டம் எடுத்திருந்தா… நாங்க தான் பி.எஸ்.ஸி., மேத்ஸ் படின்னு சஜ்ஜஸ்ட் பண்ணினோம். அவளுக்கு என்ன விருப்பம் இருந்துச்சுன்னு தெரியலை. நாங்க வேணும்ன்னே டீச்சர் மாதிரி இருக்க… அதெப்படி சின்ன பொண்ணுல இருந்து உனக்கு டீச்சர் விளையாட்டு பிடிக்குதுன்னு கேலி பேசி கேலி பேசி… அவளுக்கு அந்த ஆசையை நல்லா பதிய வெச்சுட்டோம். அதோட மேத்ஸல யாருக்கு டவுட் இருந்தாலும் இவ பிரண்ட்ஸ் இவகிட்ட தான் கேட்பாங்கன்னு சொல்லுவா… அதுக்கும் டீச்சரம்மா டீச்சரம்மான்னு சொல்லி கலாய்ப்போம். இப்ப வரை கன்டினியூ ஆகுது”

“எங்களுக்கு நல்லா தெரியும் அவளை ஏமாத்தறோம்ன்னு… ஏன் அவளுக்குமே புரியும்… ஆனா அவளை தேத்த எங்களுக்கு வேற வழி தெரியலை…” என எல்லாரும் ஆளுக்கொன்றாக சொன்னார்கள்.

‘இந்த பொண்ணு மட்டும் கஷ்டத்துலேயே முக்குளிச்சிருக்கும் போல…’ என கண்ணைக் கட்டியது பிகதீஸுக்கு.

ஆனால், அவள் வாழ்ந்த வாழ்வியல் தெரிந்தபிறகு ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. ‘இவளா நம்மளை பிடிச்சிருக்குன்னு சொல்லி, அதுக்கப்புறம் நம்ம குடும்பம் நடத்தறது எல்லாம் வேலைக்கே ஆகாது… நம்ம களத்துல இறங்கிட வேண்டியது தான்’ என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் பிரகதீஸ்வரன். அவனின் மனையாள் அவனது முதல் பந்திலேயே அவனை மட்டையாக்கிவிடுவாள் என புரியாமல்.

நாமக்கல்லில் இருந்து வந்ததும் முதல் வேலையாக அவர்களுக்குச் சொந்தமான பள்ளி ஒன்றில் அவளை மேனேஜ்மெண்ட் பொறுப்பில் ஒரு உறுப்பினராகச் சேர்த்து விட முன்னறிவிப்பின்றி அழைத்துச் சென்றான்.

‘டீச்சரம்மா’ என்ற சொல், அதற்கு அவளின் பூரிப்பு எல்லாம் சேர்த்து அவனை இந்த முடிவுக்குத் தூண்டியிருந்தது. கூடவே ‘ஷீ எஸ் எ பேன்டஸி’ என செழியனோட சேர்ந்து அவள் ரசிக்கும் பாடலும் மனதில் வர திடமாக இந்த முடிவை எடுத்து விட்டான். அவர்களுக்குப் பங்கிருக்கும் சொந்த பள்ளியே இருக்க அவளை ஆசிரியையாக எப்படி விடுவது என்று மேனேஜ்மெண்ட் பொறுப்பில் விடலாம் என்று முடிவெடுத்திருந்தான்.

எதுவுமே சொல்லாமல் நேரடியாகப் பள்ளிக்கு அழைத்து வந்து இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த கணவனை முறைக்கவும் முடியாமல் திட்டவும் வழியில்லாமல் விழி பிதுங்கி நின்றிருந்தாள் ஸ்ரீமதி.

அதுவும் அங்கு நிர்வாக தலைவராக செழியனின் அப்பா திலீப் இருக்க, இவளுக்குக் கணவனின் முன்றைய பேச்சுகள் நினைவுக்கு வர உள்ளே சுறுசுறுவென ஏறியது.

“இப்பவாவது ஸ்கூல் பக்கம் எட்டிப்பார்க்க தோணுச்சே உனக்கு?” என்றபடி தான் பிரகதீஸை திலீப் வரவேற்றான்.

“இல்லை மாமா… வரணும்ன்னு தான் நினைப்பேன்… ஆனா எங்கே?”

“ஆமா ஆமா புது மாப்பிள்ளை வேற… ரொம்ப அழகான 50kg தாஜ்மஹால் வேற உங்களுக்கு கிடைச்சிருக்கு. எவ்வளவு வேலை இருக்கும்?” என்று கேலி பேசினான் திலீப்.

சாதரண மாமன், மச்சான் கேலிக்கிடையில் அவளை 50kg தாஜ்மஹால் என வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அவளை லேசர் பார்வையால் திலீப் அளவிடவும் செய்ய அவளுக்கு உடம்பெல்லாம் எரிந்தது.

திலீப்பின் பார்வையை அவனுக்கு மற்றொருபுறம் நின்றதால் பிரகதீஸ் கவனிக்கவில்லை. மனைவியின் கோபமும் புரியவில்லை. ஆக மாமனின் கேலிக்கு, ‘நம்ம நிலைமை தெரியாம இவர் வேற…’ என உள்ளே நொந்தவன் வெளியே அசட்டுச் சிரிப்பொன்றைச் சிந்தி வைத்தான்.

“ஸ்ரீமதி எம்.எஸ்.ஸி., மேத்ஸ் முடிச்சிருக்கா மாமா. ஈவினிங் காலேஜில் எம்.பி.ஏ., சேர்த்து விடணும். காலையில நம்ம ஸ்கூலுக்கு வரட்டும்” தனக்கான திட்டத்தை தன் அனுமதியின்றியே போட்டுக் கொண்டிருக்கும் கணவனை எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஸ்ரீமதிக்கு.

“அதான் நேத்தே போன்ல சொல்லிட்டியே… தாராளமா வரட்டும்” என புன்னகையோடு சொன்ன திலீப், “வெல்கம் ஸ்ரீமதி…” என கைகுலுக்கி பூங்கொத்தைக் கொடுத்தான். கைகுலுக்கல் இயல்பாக இல்லை. வேண்டுமென்றே கொஞ்சம் அழுத்தினான். புன்னகை வேறு ஒரு மார்க்கமாக இருந்தது. ஒருவேளை தான் வேலைக்கு வருவது பிடிக்காமல் இப்படி செய்கிறானோ என்று கூட ஸ்ரீமதிக்கு யோசனை போய்விட்டது.

வேண்டா வெறுப்போடு கையை குலுக்கி பூங்கொத்தை வாங்கிக் கொண்டவள், வேண்டுமென்றே அந்த அறையை விட்டுக் கிளம்பும்போது மறந்தவள் போல அந்த பூங்கொத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

என்னவோ அங்கே நிற்கவே அவளுக்கு பிடிக்கவில்லை. நெருப்பில் நிற்பது போலத் தவிப்பாக உணர்ந்தாள். புயல் போல சுழன்ற கோபம் எல்லாம் கணவனிடம் கரையைக் கடக்கக் காத்திருந்தது.

பள்ளி நிர்வாகத்தில் முக்கியமான சிலரை அன்றே அறிமுகப்படுத்தி வைத்து, அவளுக்கு வேலைக்கு அசிஸ்ட் செய்ய ஒருவரையும் நியமித்து என்று அவளை அன்றே துரிதமாக பொறுப்பில் இணைத்திருந்தனர். மறுநாளிலிருந்து அவள் பள்ளிக்கு வர வேண்டும். ஆனால் அதில் அவளுக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதில் ஒருவருக்குமே அக்கறையில்லை.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு கார் சிறிது தூரம் பயணம் செய்ததும், காரை ஓரமாக பிரகதீஸ்வரன் நிறுத்தினான்.

காரின் பின் சீட்டிலிருந்து ஒரு பரிசை எடுத்து, “ஸ்மால் பிரசண்ட் பார் யூ… ஆல் தி பெஸ்ட். உன்னால இந்த வேலையைச் சிறப்பா செய்ய முடியும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லா பண்ணு” என்று வசீகரமான சிரிப்போடு தர, அதைத் தட்டிவிடும் வேகம் அவளிடம்.

அவனது பரிசை வாங்காமல் அவனையே ஊன்றிப் பார்க்க, “என்ன ஸ்ரீ?” என்றான் புரியாமல். அவன் என்னென்னவோ எதிர்வினைகளைக் கற்பனை செய்து கொண்டு வந்தால், இவள் அசையாமல் இருப்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது.

அவள் அமைதியாகவே இருக்க, “காலையிலேயே பிரசண்ட் பண்ணியிருக்கணும். சஸ்பென்ஸ் உடைய கூடாதுன்னு தான்…” என சொல்லிப் புன்னகைத்தான்.

“ஹ்ம்ம்… இந்தா இதை வாங்கி பாரு…” என்று அவளை ஊக்குவித்து ஆவலோடு அவள் முகம் பார்த்து நின்றான். அவளுக்காகப் பார்த்துத் பார்த்து தேடி அலைந்து வாங்கிய பரிசு.

ஸ்ரீமதிக்குள் அவன் இஷ்டத்திற்கு எல்லாவற்றையும் செய்கிறானே என்ற கோபம் நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

அவளோ ஆர்வமின்றி அசுவாரஸ்யமாகப் பரிசை பிரித்துப் பார்த்தவள் அதைப் பார்த்ததும் மேலும் சினந்தாள்.

கருப்பில் ஆரஞ்சு பார்டர் போட்ட அழகான காட்டன் புடவை!

பிரகதீஸ்வரன் அவளுக்குப் பிடித்த பாடலில் ஜோதிகா அணிந்திருந்த புடவை என்பதை மட்டுமே கருத்தில் வைத்துத் தேடி அலைந்து வாங்கி வந்திருந்தான். மனைவிக்குப் பிடித்ததை முதன்முதலில் வாங்கித்தர வேண்டும் என்ற ஆசை அவனுக்கு.

ஆனால், ஸ்ரீமதி கருப்பு வண்ணத்தைப் பார்த்ததும் பொங்கி விட்டாள். அவளுக்கு இருந்த கோபத்திலும் ஆற்றாமையிலும்… கணவனின் நேசத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குப் பெருமளவு காரணம் இன்று சந்தித்த திலீப்பும், அவன் நடவடிக்கையும்… மேலும் அதற்குச் சிகரம் வைத்தாற்போல திலீப் குறித்து முன்பே இருவருக்குள்ளும் நடந்த வாக்குவாதமும் தான்!

“முதன்முதல்ல கிப்ட் தறீங்க… உங்களுக்கு பிளாக் கலர் தான் கிடைச்சதா? இது மூலமா என்ன சொல்ல வரீங்க நீங்க…” என்று கோபமாக கேட்க அவளின் குரலில் பிரகதீஸ்வரன் ஸ்தம்பித்தான்.

புன்னகையில் விரியும் முகத்தை எதிர்பார்த்தவன் இந்த கோபத்தை எதிர்பார்க்கவில்லை. “இல்லை ஸ்ரீ. நான் அப்படி யோசிக்கலை. டெய்லி மார்னிங் நீ செழியனோட சேர்ந்து விரும்பி பார்க்கிற பாட்டு… நான் அதை யோசிச்சி…” என்று தன் தரப்பைச் சொல்லத் தொடங்கியவனை முடிக்கவிடாமல் வேகமாக இடை நிறுத்தினாள்.

“ஏன் இப்படி எல்லாம் பண்ணறீங்க? எல்லாமே உங்க முடிவு தானா? என்கிட்ட எதுவுமே கேட்க மாட்டீங்களா? நீங்க சொல்லறதை நான் செஞ்சாகணுமா?”

என்னவோ அவளை அடிமைப் படுத்துவது போல அவள் பேச, அவனுக்குக் கோபம் கிளர்ந்தது. “நான் என்னடி பண்ணினேன்? புரிஞ்சுக்காம உளறாத…” என்றான் அதட்டலாக.

“செழியன் அப்பாகிட்ட கூட விஷயத்தை நேத்தே சொல்லியிருக்கீங்க. என்கிட்ட சொல்லவே இல்லை. அப்படின்னா என்ன அர்த்தம் இவ கிட்ட எல்லாம் எதுக்கு சொல்லிட்டு… இதெல்லாம் பார்த்தா இவ பல்லை இழிச்சுட்டு ஒத்துக்க போறா அப்படிங்கிற எண்ணம் தானே உங்களுக்கு?”

“ஏய்…” என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

நீண்ட மூச்சிழுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “உனக்கு இதில் இஷ்டம் இல்லையா?” என்றான் பொறுமையாக.

“என்னோட படிப்பு, வேலை எல்லாம் நீங்களா தீர்மானிச்சதை கேட்கறீங்களா?” என்றாள் கேலியாக. கேட்ட விதமே அதைத் தீர்மானிக்க நீ யார் என்று கேட்பது போல இருந்தது.

ஸ்ரீமதி இத்தனை ஆண்டுகளாக ஏங்கித் தவித்த அன்பு, அரவணைப்பு, ஆறுதல், நேசம் எல்லாவற்றையும் வாரி வழங்க வேண்டும் என்ற முடிவோடு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்த பிரகதீஸ்வரன் அவளின் எதிர்வினையில் பலமாக காயப்பட்டான்.

முகம் சுருங்கிப் போய்விட, “ஓ…” என்றவன், “சாரி… இதை நானே சமாளிச்சுக்கறேன். ஸ்கூலுக்கு நீ வரமாட்டன்னு சொல்லிடறேன். எம்.பி ஏ., ஜாயின் பண்ணவும் பேசி வெச்சிருந்தேன். இப்ப தான் உன்னோட போயி அட்மிஷன் போட்டுட்டு வரலாம்ன்னு பார்த்தேன். அதுவும் தேவைப்படாது இல்லையா என்னை மாதிரியே…” என சாலையை வெறித்தபடி சொன்னவன், காரை இயக்கி வேகம் கூட்டினான்.

இத்தனை நேரம் கோபத்தில் கண்மண் தெரியாமல் பேசிக்கொண்டிருந்தவள் அவன் வார்த்தைகளை கேட்டதும் ஸ்தம்பித்தாள். என்னவோ தவறு செய்துவிட்டது போல அவளின் உள்ளம் கசங்கியது. அவன் குரலிலிருந்த இயலாமையும் ஏமாற்றமும் வருத்தமும் அவளை என்னமோ செய்தது. இப்படிப் பேசி இருக்கக் கூடாதோ என்று கலங்கியவள், இப்பொழுது சூழலைச் சமாளித்து என்ன பேச எனத் தெரியாமல் தடுமாறினாள்.

அதுவும் ‘தேவைப்படாது இல்லையா என்னை மாதிரியே…’ என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மூளைக்குள் ரீங்காரமிட, நிச்சயம் தான் என்னவோ ரொம்பவும் சொதப்பி விட்டோம் என அவளுக்குத் தோன்றியது.

கார் அதீத வேகத்தில் வீட்டை வந்தடைந்தது. கார் நின்ற பிறகும், பயத்தோடு அவள் இறங்காமல் அமர்ந்திருக்க, “நான் ஆபிஸ் கிளம்பணும்… சோ…” என்றான் அவள் முகம் பாராமல் இறுகிய குரலில்.

“அது… நான்…” என அவள் ஏதோ சொல்ல முயன்றதை காதில் கூட வாங்காமல், வேகமாக இறங்கி, அவள்புறம் வந்து காரின் கதவைத் திறந்து விட்டான்.

இப்பொழுது இறங்கித் தான் ஆக வேண்டும். தடுமாறியபடி அவள் இறங்க, வெடுக்கென்று அவளுக்கு தந்த பரிசை அவளது கைகளிலிருந்து பிடுங்கியவன், காரின் பின்புற கதவை வேகமாக திறந்து அதில் வீசினான்.

“ஹையோ…” என அலறியவள், “பிரகா… பிளீஸ்… நான் தான் ஏதோ கோபத்துல செஞ்சா… நீங்களும் பதிலுக்கு… பிளீஸ் பிரகா… நான் பேசினது தப்புதான்… தெரியாம பேசிட்டேன். அதை மறந்துடுங்க. நான் நாளையிலிருந்து ஸ்கூல் போறேன். எம்.பி.ஏ கூட படிக்கிறேன். என் கிப்ட் என்கிட்ட கொடுங்க” என்றாள் அழுகையோடு.

“இங்கிருந்து போறியா இல்லையா?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினான் அவன்.

அதில் அவள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுகொள்ளாமல் காரை இயக்கி வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

செய்வதறியாது முகம் மூடி அழுது தீர்த்தாள் ஸ்ரீமதி.