ஸ்ரீமதி பால்கனியில் நின்றபடி தோட்டத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பொற்செழியனின் நினைவு அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
இந்நேரம் தூங்கி எழுந்திருப்பான்… ராகி கூல் குடிக்கும் நேரம். கொஞ்சம் உண்டதுமே போதும் என அடம்பிடிக்கத் தொடங்கி விடுவான். நிறைய நிறைய விளையாட்டு காட்டினால் தான் கொஞ்சமாவது உள்ளே போகும். ஆனால், ஜெயாம்மா அப்படிச் செய்ய மாட்டாரே!
அவள் மனம் அவனின் வயிற்றுக்காகக் கவலை கொண்டது. அவனை நான்கைந்து நாட்களாகக் காணாத ஏக்கம் அவளது வதனத்திலேயே சோர்வாய் பிரதிபலித்தது. தேய்ந்த பிறை நிலவாய் இருந்தாள்.
செழியனை பார்க்காத தூரத்தில் இருக்கிறோம் என்பது வேறு… இப்படி அருகிலேயே இருந்தும் காண முடியாமல் ஒவ்வொரு நொடியும் தவிப்பது ஸ்ரீமதிக்கு நரக வேதனையாக இருந்தது.
“ம்ம்க்கும்ம்…” பிரகதீஸ்வரன் அவளுக்குப் பின்புறம் நின்று குரலை செருமினான்.
அந்த சத்தம் வந்ததும் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளின் கணவன் தான் தோரணையாக நின்றிருந்தான். பார்வை அவளைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தது. பொதுவாக அவள் இருக்கும் திசைக்கே வராதவன். இன்றைக்கு எதற்கு ஆராய்ச்சி செய்கிறானாம்… கூடவே இன்று விரைவாகவே வேறு வீட்டிற்கு வந்திருக்கிறான் எதற்காக இருக்கும்? என ஓரிரு நொடிகள் யோசித்துப் பார்த்தாள். இருந்த சோர்வில் ஒன்றும் புரிபட மறுப்பதால், அலுப்புடன் முகத்தை மீண்டும் திருப்பிக் கொண்டாள்.
பார்ரா முகத்தை திருப்பிக்கறதை… என எண்ணியபடியே பால்கனிக்கு வந்திருந்தான்.
அவன் வருகிறான் என புரிந்தும் அவளிடம் அசைவில்லை.
“கோபத்தை பெரியவங்க மேல காட்டலாம். ஆனா குழந்தைக்கு உன்னோட கோபம் புரியுமா என்ன? உன்னைத் தேட மாட்டானா?” பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றபடி அவளின் பக்கவாட்டு முகம் பார்த்துக் கேட்டான்.
‘செய்வதெல்லாம் செய்துவிட்டு வெட்டி பேச்சை பார்…’ ஸ்ரீமதியின் பார்வை பிரகதீஸ்வரனை எரித்தது. மீண்டும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இரு கைகளையும் இறுக்கக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவளின் கோபம் மிகவும் அழகாக இருந்தது. வெடுக்கென திருப்பிக்கொள்ளும் முகத்தைப்பற்றி தன்னை காணச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அவனின் கைகள் பரபரத்தது.
அந்த பரபரப்பை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட அவனது கரங்கள் அவளின் கரம் ஒன்றைப் பற்றி தன்னருகில் வேகமாக இழுத்தது. ஸ்ரீமதி இதை எதிர்பாராமல் தடுமாறி மெத்தென்று அவன் மேல் மோதி நின்றாள்.
முறைக்கும் கண்களுடன் என்னவோ திட்ட அவசரமாக வாய் திறந்தவளின் இதழ்கள்மீது அவசரமாக தன் ஆட்காட்டி விரல் வைத்து வார்த்தைகளை அணையிட்டான். “நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது தான்… ரொம்ப ரொம்ப சாரி…” என்றான் இதமான குரலில். அவன் கண்கள் அவளின் கண்களோடு கலந்து விட்டிருந்தது. அப்படியொரு பார்வை! வசீகரிக்கும் பேச்சு!
இதென்ன குரலாம் அவளுக்கு எரிச்சல் வருவதற்குப் பதிலாக ஒரு மாதிரி பிடித்தம் வந்து தொலைத்தது. பார்வையும் வசீகரிக்க, வேகமாகத் தலையைக் கவிழ்ந்து நின்று கொண்டாள்.
“ஏதோ கோபம் டா… ஹ்ம்ம்… ஓகே… ஒத்துக்கறேன். நீ என்கிட்ட பேசாத கோபம் தான்… ம்ப்ச்… என்ன இருந்தாலும் நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. முறையில்லாம மட்டமா பேசிட்டேன். நான் ஏன் அந்தமாதிரி பேசினேன்னு எனக்கே புரியலை… ரொம்ப சாரிடா…” என்றான் மீண்டும். குரலிலேயே அவனின் வருத்தம் புரிந்தது.
“ம்ப்ச்… பரவாயில்லை விடுங்க…” என்றாள் ஸ்ரீமதி. என்னவோ இவன் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்பதும் சங்கடமாக இருந்து தொலைத்தது.
அவளின் உடனடி மன்னிப்பு, அவனுள் ஆசுவாசத்தைப் பரப்பியது. கண்கள் மின்ன அவளையே சில நொடிகள் பார்த்தான்.
அவர்களுக்குள்ளான சமூக நிலையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, “நமக்குள்ள பேச்சுவார்த்தை கூட இல்லாம இருந்தா… டூ யூ திங் இட்ஸ் ரைட்?” என்று கேட்டான்.
சரியில்லைதான்! அவளுக்கும் புரிகிறது. ஆனாலும் இவனைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தேனே என் மனம் புரியாமல் போகுமா? செல்ல சிணுக்கம் அவளுக்குள்.
ஒருவேளை இந்த திருமணம் உண்மையிலேயே தொழிலுக்காகவா? அச்சமும் குழப்பமுமாக அவனை ஏறிட, பிரகதீஸ் முகத்தில் விளையாட்டில்லை… குறும்பில்லை… காதல் வழியவில்லை… வெகு சாதாரண ஃபாவம் தான் அவனிடம். அவளின் குழப்பம் கூடியது.
அவளின் குழப்பம் அவனுக்கு யோசனையைத் தான் தந்தது. இருந்தும் அதை ஒதுக்கி, “பிரண்ட்ஸ்…?” என்று கையை வாகாக நீட்டினான்.
அவனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, “இதை உன் கையால தானே வாங்கினேன்?” எனத் தாலியை காட்டி சண்டையிட்ட மனைவி, நிச்சயம் எந்த வெறுப்போடும் இந்த பந்தத்திற்குள் நுழையவில்லை என்பதுதான். அவளுக்குள் விருப்பமும் இருக்குமாயின் அது அவனுக்கு நிச்சயம் கூடுதல் போனஸ் தான்!
ஆனால், விருப்பமோ, நேசமோ எதுவாகினும் அதைத் தெரிந்துகொள்ள அவளது மௌனக்குமிழ்கள் உடைய வேண்டுமல்லவா?
மெல்லிய நீர்க்குமிழி உடைவதற்கே காற்று தேவைப்படுகிறதே! இவளின் மௌனம் மட்டும் எப்படி வெறும் காத்திருப்பில் உடையும்? இவளிடம் நெருங்கியிருந்து மட்டும் தான் உடைக்க முடியும் என்று தீவிரமாக நம்பியவன் முதலடியை எடுத்து வைத்தான்.
ஆறு ஆண்டுகளாக அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல், அவன் இருந்த திசைக்கே வராமல், கண்ணிலேயே படாமல் அவள் செய்த சோதனைகளெல்லாம் காதல் கொண்ட மனதில் கோபமாக இருக்கிறது தான் என்றாலும்… அதைக் காட்டும் உரிமை இன்னும் இல்லையல்லவா?
இன்னும் சொல்லப்போனால், கல்யாணம் ஆகியும் அவளை முறைத்துக் கொண்டு திரிந்ததில் எத்தனை எத்தனை நஷ்டங்களைக் கண்டுவிட்டான். ஆக கொஞ்சம் புத்தியோடு பிழைக்கும் எண்ணத்திற்கு வந்துவிட்டிருந்தான்.
அவனது கரத்தை யோசனையாகப் பார்த்தபடியே தான் தன் கரத்தை அவனது கரங்களுக்குள் பதித்தாள்.
பனி படர்ந்த மெல்லிய மலர் ஒன்று தன் கரங்களுக்குள் புதைந்தது போல பிரகதீஸ்வரன் இதமாக உணர்ந்தான்.
கணவனது கரங்களின் கதகதப்பும் பெண்ணவளுக்கு இதமாக இருந்தது.
“எப்ப விருந்துக்கு வரீங்கன்னு சொல்லி உங்க மாமா தாத்தா கிட்ட கேட்டிருந்தாராம் ஸ்ரீ. நீ ஏதாவது பிளான்ஸ் வெச்சிருக்கியா?” என்று பிரகதீஸ் பேச்சுவாக்கில் கேட்டதும், ஏதோ அதிசயத்தைக் கேட்டது போல விழித்தாள்.
அதில் சுவாரஸ்யத்துடன், “என்ன?” என்றான் கணவன் சிறு புன்னகையுடன்.
“இல்லை நான் அதைப்பத்தி யோசிக்கவே இல்லை… நீங்க வருவீங்களோன்னு…”
“அதுல உனக்கு இனிமே சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா வருவேன். நீ அவங்ககிட்ட போன் பண்ணி இந்த வீக்கெண்ட் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வறோம்ன்னு சொல்லிடு… ஹ்ம்ம் உனக்கு இந்த வீக்கெண்ட் ஓகே தானே?”
கணவனின் தொடர் தாக்குதலில், அவள் அவனை ஆச்சரியமாக ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்ன? என்கிட்ட ஏதாவது சொல்லலணுமா என்ன?”
எதுவும் இல்லை என்று தலை அசைத்து மறுத்தவளுக்கு இந்த விருந்துக்குச் செல்வதற்கான காரணம் தாத்தா என்று புரிந்தே இருந்தது. இவருக்குத் தாத்தாவை இவ்வளவு பிடிக்குமா என்று ஆச்சரியப்பட்டாள். பிடித்தம் இவள்மீதும் நிறைய இருக்கிறது என அவள் உள்ளமே நம்ப மறுத்தது.
பிரகதீஸ், “சரி நீ கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முதல்ல ஊருக்கு போற… உனக்கு அவங்களுக்கு ஏதாவது கிஃப்ட் பண்ண தோணினா இந்த ரெண்டு நாளில் பர்சேஸ் பண்ணிட்டு வந்துடேன்… பிரைடே ஈவினிங் கிளம்பிடலாம்” என்றான் இலகுவாக.
நான் போய் வாங்கிட்டு வரதா என்பது போலத் திகைத்து விழித்து அவள் பார்த்தாள். என்னவோ இதுவரை கேட்டறியாத மொழி போல இருந்தது அவளது பாவனை!
“என்ன?” என்றான் கணவன் புரியாமல்.
“அவங்களுக்கு போயி நான் வாங்கி தரதா?” என்றவளின் குரலில் இருந்த தொனி, அவர்கள் ரேஞ்சுக்கு நான் வாங்கி தருவது சரியாகுமா என்ற ரீதியில் இருந்தது.
அவன் யோசனையானான். அவன் கவனித்தவரையில் இவர்களைக் காட்டிலும் இவர்களின் தாயார் வீட்டுப் பக்கத்தில் அனைவரும் வசதியில் சற்று குறைவானவர்களே! அதோடு இவள் வாங்கித் தரும் பரிசை புறக்கணிக்கும் எண்ணத்தோடும் அங்கு யாரும் இவளிடம் பாராமுகமாய் இருப்பதாகவும் தெரியவில்லை. இவளைக் கொண்டாடவிட்டாலும் இவளை மதிப்பதை, இவளுக்கும் முக்கியத்துவம் தருவதை அவன் கவனித்திருக்கிறான். அவர்களுக்கு ஒரு பரிசை வாங்கி தருவது என்னவோ இமாலய மலையை ஏறுவது போல சிரமமாக இருப்பதாக ஏன் இவள் எண்ணுகிறாள் என அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
“ஏன் நீ கிப்ட் கொடுத்தா என்ன?” அவனது கேள்வி நியாயமானது தான்!
“நானா? நான் இதுவரைக்கும் அவங்களுக்கு எந்த கிப்ட்டும் தந்தது இல்லையே! அதை அவங்க எதிர்பார்க்கவும் மாட்டாங்க… எல்லாரும் எனக்குத் தான் எப்பவுமே ஏதாவது கிப்ட் தந்துட்டே இருப்பாங்க. நானும் உங்களுக்கு கிப்ட் தரணும் அப்படின்னு ஆசையா கேட்டா நீ ரொம்ப சின்ன பொண்ணு அப்படின்னு சொல்லுவாங்க. என் மேல ரொம்ப கேர் ஆக இருப்பாங்க. ஆனா இதுவரை எங்கிட்ட எந்த கிப்ட்டும் வாங்குனது இல்லை”
“அதுதான் ஏன்?” என்றான் குழப்பமாக.
“ ஏன்னு கேட்டா என்ன சொல்றது? நானா புரிஞ்சுகிட்டது தான்! வசதி வேணும்ன்னா அவங்ககிட்ட குறைவா இருக்கலாம். நான் இருந்த இடத்தில் அதிகமாக இருக்கிற மாதிரி தோணலாம். ஆனால் பணத்தை உபயோகிக்கும் உரிமை அவங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கு இருந்ததில்லை. எனக்கு என்னவோ எனக்குன்னு படிப்புக்காக வந்த பணத்தை வீண்செலவு செய்ற மாதிரி தோணும்.
எனக்கு அனுப்பும் பணத்தை உரிமையா கையாட எனக்கு எப்பவும் தோணினதே இல்லை. கணக்கு கேட்க யாரும் இல்லை தான்! அதே சமயம் என்கிட்ட இருக்க மொத்த பணமும் செலவு ஆனாலும், அதை கேட்டு தெரிஞ்சுகிட்டு அதிகமாக தரதுக்கும் யாரும் இல்லை! அதாவது எனக்கு கொடுத்த பணம் முழுசா செலவாயிடுச்சான்னு யாருக்கும் தெரியப்போறதில்லை. இன்னும் சொல்லப்போனா தெரிஞ்சுக்கவும் யாருக்கும் அக்கறை இருக்கிறதா எனக்கு தோணலை! எனக்கு அந்த பணமே போதும்ன்னு அவங்களா ஒரு முடிவு எடுத்து இருக்காங்க. அதை மீற எனக்கு மனசு இல்லை.
நினைவு தெரிஞ்சதிலிருந்து பெரும்பாலும் ஹாஸ்டல்ல வளர்ந்தேன். ஒருமுறை ஸ்கூல்ல படியில இருந்து தவறி விழுந்து கையை உடைச்சுக்கிட்டேன். பெரியம்மா வீட்டுலேயும், மாமா வீட்டுலேயும் தான் வெச்சு கவனிச்சு பார்த்துகிட்டாங்க. ஆனா செலவும் அவங்களையே செய்யச் சொல்ல முடியாதில்லையா? எனக்கு அக்கவுண்ட்டுக்கு வந்த பணத்தையே உபயோகிக்க சொல்லிட்டேன். அப்ப கையிருப்பு சுத்தமா குறைஞ்சிடுச்சு. கை சரியான பிறகு ஹாஸ்டல் போகும்போது டூத் பேஸ்ட் தீர்ந்தா கூட வாங்க என்கிட்ட காசு இல்லைன்னா பாருங்களேன். ஒன்னாம் தேதியோட அருமையை தெரிஞ்சுக்கிட்ட நாள் அதுதான். அதுக்கு பிறகு டிரஸ், ஸ்கூல் பீஸ் தவிர தேவையில்லாம எதுக்கும் அந்த பணத்தை எடுத்ததில்லை.
படிச்சு முடிச்சதும், அந்த சம்பளமும் நின்னு போச்சுன்னா பாருங்களேன்” அவள் என்னவோ சாதாரண குரலில் தான் சொன்னாள். கேட்டவனின் நெஞ்சம் கனத்து இரும்பானது.
இந்த சூழலில் வளர்ந்த ஒருத்தியால் காதலைப்பற்றி என்ன யோசித்திருக்க முடியும்? அதுவும் அந்த வயதில்? இவளையா நீ குறை சொல்லித் திரிகிறாய்? அவன் மனம் அவனை சாடியது.