மௌனக்குமிழ்கள் – 6

அர்த்தமற்று நிகழ்ந்துவிட்ட சண்டையை நினைத்து ஸ்ரீமதியின் மனம் அடிக்கடி சோர்ந்து போனது.

அவன் பேசினான் என்பதற்காகப் பதிலுக்கு தானும் பேசி… ச்சே எனக்கு என்ன தான் ஆச்சோ என்று அடிக்கடி அலுத்துக் கொண்டாள்.

சில சமயங்களில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வரும்போது அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினால் தான் என்ன என்றளவு ஆத்திரமும் குறையாமல் பொங்கிக் கொண்டே தான் இருந்தது.

ஸ்ரீமதி பெரும் மனவுளைச்சலில் இருந்ததாலோ என்னவோ அவளிடம் ஒரு சுறுசுறுப்பே இல்லை.

வழக்கமாக பொற்செழியனை பார்த்துக்கொள்ள ஜெயலட்சுமி என்கிற கேர் டேக்கர் ஒருவர் வீட்டிலேயே இருப்பார்.

ஆனால், ஸ்ரீமதி இந்த வீட்டிற்கு வந்த பிறகு, அந்த அம்மாவுக்குப் பூரண ஓய்வு தான். பெரும்பாலும் இவள் தான் செழியனைக் கவனித்துக் கொள்வாள். உணவு கொடுப்பது முதல் உறங்க வைப்பது வரை முழுக்க முழுக்க இவளே கவனித்துக் கொள்வாள். இப்போதானால் பிள்ளையை அதிக நேரம் ஜெயாம்மாவிடமே விட்டுவிட்டு அறைக்குள் சுருண்டு கிடக்கிறாள்.

பார்த்த மணிவண்ணன் தாத்தாவிற்குச் சங்கடமாக போய்விட்டது. அன்று தேவையில்லாமல் பொற்செழியனை உள்ளே இழுத்து பேசிவிட்டோமோ என வருந்தினார். ஸ்ரீமதியிடம் இதைக் குறித்துப் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த போது தான் அதிசயத்திலும் அதிசயமாக அவரின் பேரன் பிரகதீஸ்வரன் அவரை தேடி வந்தான்.

வந்தவன் இவர் முகம் பார்த்துத் தயங்கி, தயங்கி நிற்க, அவருக்குத் தான் அவனிடம் சகஜமான பேச்சுவார்த்தையே இல்லையே! ஆக என்ன விசாரிக்க என்று கூட தெரியாமல் அமைதியாக இருந்தார்.

யுகம் போல அச்சுறுத்திய சில நொடிகளுக்குப் பிறகு அவராக எதுவும் பேசவே போவதில்லை என்று புரிந்து, “தாத்தா…” என்றான் அழுத்தமாக.

என்ன என்பதாய் பார்த்தாரே தவிர வாய்மொழியால் கேட்கவில்லை.

“ஏன் எங்களை எல்லாம் ஒதுங்கியே வெச்சிருக்கீங்க தாத்தா?” ஏக்கமும் கோபமும் கலந்து ஒலித்தது அவன் குரலில்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை” மணிவண்ணன் பட்டும் படாமலும் பதில் சொன்னார்.

“இல்லை தாத்தா. ஐ கேன் பீல். இவ்வளவு நாளும் நீங்க ரொம்ப அமைதின்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அது கோபமோ?” என்றவன் தன் தாடையை விரல்களால் வருடி எதையோ யோசித்தான்.

சட்டென்று, “ஆனா ஏன் தாத்தா எங்க மேல என்ன கோபம்? நாங்க என்ன தப்பு செஞ்சோம். மத்தவங்க எல்லாரையும் கூட விடுங்க. நான் என்ன பண்ணினேன் தாத்தா? எதுக்காக உங்களுக்கு என்னை பிடிக்கலை” படபடவென்று தன் சந்தேகங்களை கொட்டினான்.

“உளறாம போ முதல்ல…”

அவனது இறுதி வார்த்தைகளில் அவரின் முகம் மாறியதிலிருந்தும், அதற்கு இணையாக குரலில் வந்த மாறுதலிலும் அவரின் கோபம் புரிபட்டு விட்டது. சிறு புன்னகை முகத்தில் தவழ, “உங்களுக்கு என்னை பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் தாத்தா. இல்லாட்டி எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் கேட்காமயே நிறைவேத்தி தருவீங்களா என்ன? நீங்க ரொம்ப ஸ்வீட் தாத்தா… எனக்கு நீங்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்” என கொண்டாடினான்.

ஸ்ரீமதியை அவனுக்கு மனம் முடித்துக் கொடுத்ததைச் சொல்கிறான் என மணிவண்ணனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் முறைத்தே நின்றார்.

இவனுக்கு பிடித்ததை நிறைவேற்றித் தந்து மட்டும் என்னவாம்? இப்பொழுது என்ன சந்தோசமாகவா வாழ்ந்து தொலைத்தான்? இவன் ஒரு மூலையில், இவன் மனைவி ஒரு மூலையில் என இருந்து… கடைசியில் என்னையே தன் முடிவு சரிதானா என்று குழப்படித்து விட்டானே… என்ற பெருங்கோபம் அவருக்கு!

“என்ன தாத்தா?” என்றான் புரியாமல்.

“பிடிச்சது ஈஸியா கிடைச்சுட்டா அதோட அருமை தெரியாது போல” நக்கல் வழிந்தது அவர் குரலில். இன்னமும் முறைப்பு மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.

“என்னது ஈஸியாவா? விளையாடாதீங்க தாத்தா. ஆறு வருஷமா மேடம் என்கிட்ட பேசவே இல்லை. ஏதோ உங்க புண்ணியத்துல தாலி கட்டியிருக்கேன்” என்றான் கண்ணடித்து மெதுவான குரலில்.

இது வேறயா என்ற தினுசில் அவனைப் பார்த்துவிட்டு, “கல்யாணம் கட்டி மட்டும் இப்ப என்ன பிரயோஜனம்?” என முணுமுணுத்தார்.

அது ஸ்பஷ்டமாய் காதில் விழுந்து தொலைத்தாலும், மீசையில் மண் ஒட்டாத பாவனையில், “என்ன சொன்னீங்க தாத்தா?” என்றான் காதை அவற்புறமாக தீட்டி வேண்டுமென்றே!

இவன் ஏன் இன்னைக்கு நம்மளை இப்படி நோண்டறான்! பொண்டாட்டிகிட்ட செய்ய வேண்டியதெல்லாம் நம்மகிட்ட செஞ்சுட்டு திரியுது. இது எங்கே உருப்பட போகுதோ! என்றொரு மட்டமான பார்வையைப் பார்த்து வைத்தார் மணிவண்ணன்.

என்னவோ அந்த பார்வை பேரனுக்கு அத்தனை பிடித்தது. இத்தனை நாளாக இழந்த ஏதோ ஒன்றை வலுக்கட்டாயமாக பிடுங்கி வைத்துக்கொண்ட குழந்தையின் மனநிலையில் குதூகலமாக இருந்தான். இனிமேல் அடிக்கடி தாத்தாவிடம் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவன் மனம் அவசர திட்டமொன்றை ரகசியமாக ரசனையான வகுத்துக் கொண்டது.

பேசிக்கொண்டிருந்த பேச்சை அம்போவென விட்டுவிட்டு, “சரி தாத்தா… நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன்” என்றவனை ‘இது எந்த தேசத்து ஜந்தோ?’ என்பதுபோல பார்த்து வைத்தார்.

அவனுக்கு பலத்த சங்கடம். அவர் சொல்ல வந்தது புரியாமல் இல்லை. ஆனால், மனைவியின் மீதிருக்கும் கோபமும் மட்டுப்பட மறுத்தது. அவன் பேசியது அதிகம் என்று அவளின் பதிலடியிலேயே புரிந்து விட்டது. இருந்தும் அவளும் தன்னைப்போலவே பேசியதில், இத்தனை நாட்களும் தன்னிடம் பேசாமலேயே இருந்து தன்னை ஒதுக்கி வைத்ததில்… அவனுக்குள் கோபம் இருக்கத்தான் செய்கிறது. ஆக, விஷயத்தை ஆறப் போட நினைத்து அப்படியே விட்டுவிட்டான்.

ஆனால், மனைவியின் சோர்வு அவனைப் பாதிக்கிறது. அவள் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது அவனை உறுத்துகிறது. என்ன அவளை அணுகும் வழி தான் தெரியவில்லை. அவனே இப்படி தத்தளித்துக் கொண்டிருக்கையில் தாத்தா வேறு அதைப்பற்றியே கேட்கவும் அந்த பேச்சைத் தவிர்க்கத் தான் பார்த்தான். ஆனால், தாத்தா அப்படி எளிதில் விடுபவர் போலத் தெரியவில்லை.

“உன் பொண்டாட்டி கொஞ்ச நாளா ரொம்ப டல்லா இருக்காளே கவனிச்சியா இல்லையா?” என்று மணிவண்ணன் கேட்டதும் அவன் முகம் சோர்ந்தது.

ஹ்ம்ம்… அவனும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். ரொம்பவும் டல்லடித்து தெரிகிறாள். தன் கோபத்தை ஒதுக்கி வைத்து, மனைவியிடம் பேச நினைத்தாலும் அவனால் பேசவே முடிவதில்லை. என்ன பேசுவது என்ற காரணத்தைத் தினமும் தேடித் தேடி அலுத்துப் போனான். இருவரிடையேயும் இயல்பான பேச்சுவார்த்தைகள் இல்லாத காரணத்தால் சாதாரண பேச்சுவார்த்தைக்கே தடுமாறினான்.

என்னவோ தன் இயலாமையைக் குறித்து தாத்தா கேள்வி எழுப்பவும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

“என்ன?” என்றார் அவர்.

“ஒன்னுமில்லை தாத்தா…” பள்ளி மாணவனின் பவ்யம் அவனிடம்.

அதுதான் ஒன்னுமே இல்லைன்னு தெளிவா தெரியுதே! இவனெல்லாம் எதுக்கு கல்யாணம் செய்வானோ என்ற கடுப்புடன் அவனை மற்றுமொருமுறை மட்டமாக நோக்க, இந்த முறை அர்த்தம் விளங்கவில்லை அந்த வளர்ந்து கெட்டவனுக்கு.

அவனின் பார்வையிலேயே அவனுக்குப் புரியவில்லை என உணர்ந்து, “முதல்ல எப்பவும் செழியனோடவே தான் இருப்பா… இப்ப ஜெயாம்மா கிட்ட தான் நிறைய நேரம் விடறா. அந்த குட்டி பையனுக்கு என்ன வசியம் பண்ணினாளோ குழந்தை அவளையே தேடுது…” என்று சொன்னவரிடம் பெருமூச்சு.

செழியனை வசியம் பண்ணி இருக்க கூடாது என்று நினைக்கிறாரா? இல்லை புருஷனை மயக்கத் தெரியாத மக்கு என மனைவியை திட்டுகிறாரா? என்ற தீவிர யோசனைக்கு பிரகதீஸ்வரன் தாவினான்.

“ஏன் குழந்தைகிட்ட இந்த விலகல்? நீ எதுவும் அவளை சொன்னியா?”

மணிவண்ணனுக்கு சங்கடம். ஒருவேளை தான் அன்று செழியனுக்காகத் தான் இந்த திருமணமா என்று கேட்டதை வைத்து இந்த ஒதுக்கமா என்று? ஆனால் அன்று ஸ்ரீமதி அழகாக சமாளித்தாளே… பிறகும் ஏன் இப்படி என அவருக்குக் குழப்பியது. அதுதான் பேரனிடம் விசாரித்தார். கிட்டத்தட்டப் போட்டு வாங்கினார்.

இந்த கேள்வி வந்ததுமே பிரகதீஸின் முகம் பொலிவிழந்து விட்டது. அப்படியும் இருக்குமோ என உள்ளம் பிசைந்தது. “அதெல்லாம் இல்லை தாத்தா” என்றவனுக்கு குரலே வரவில்லை.

“ஹ்ம்ம்…?” பார்வையைக் கூராக்கி பேரனை அழுத்தமாகப் பார்த்தார்.

அவன் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தான். பார்வையை இலக்கற்று அலைய விட்டான். அவனின் தோற்றம் பார்த்ததும், மேற்கொண்டு இதைக்குறித்துத் தோண்டி துருவ அவருக்கு மனமில்லை.

“சரி கல்யாணமாகி ரொம்ப நாள் ஆச்சு. உன் பொண்டாட்டி சொந்தகாரங்களுக்கு உங்க ரெண்டு பேருக்கும் விருந்து கொடுக்கணும்ன்னு இருக்கும் போல… இவ அவங்க கேட்கும்போதெல்லாம் பிடி கொடுத்தே பேசறதில்லைன்னு அவங்க மாமா எனக்கு கூப்பிட்டு பேசினாரு. உனக்கு அவளை கூட்டிட்டு போக முடியுமா?” என்று விசாரித்தார்.

“ஏன் தாத்தா கூட்டிட்டு போன்னு நீங்க சொன்னா நான் என்ன மறுக்கவா போறேன். அது ஏன் தாத்தா என்கிட்ட இத்தனை விலகல் காட்டணும்” முகம் சுருங்க தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான்.

ஒரு மாதிரி தினுசாக பார்த்தாரே தவிர அவரிடம் இதற்கு எந்த பதிலும் வரவில்லை.

தாத்தா தன்னிடம் இந்தளவு பேசியதே பெரிய விஷயம் என்று தோன்ற மேற்கொண்டு அதைப்பற்றி பேசாமல் அவரிடமிருந்து விடைபெற்று அலுவலகம் கிளம்பினான்.

அவன் உள்ளமெங்கும் மகிழ்ச்சி ஊற்று! மனைவியிடம் பேச வாய்ப்பு கிடைத்துவிட்டதை நினைத்து… அன்று முழுவதும் ஒருமாதிரி வேலையே சரியாக ஓடவில்லை. வேலையிலிருந்து மாலையில் விரைவாகவே வீட்டிற்கு வந்துவிட்டிருந்தான்.

தோட்டம் வெறுமையாகக் காட்சியளித்தது. முன்பானால் மனைவி செழியனோடு விளையாடிக் கொண்டிருப்பாள். அவனைக் கொஞ்சிவிட்டு கண்டும் காணாமலும் அவளையும் ரசித்துவிட்டு வரலாம்… இப்பொழுது எதுவும் இல்லை! ஏக்கப்பெருமூச்சு வந்து அவ்விடத்தை அனலாக்கியது.

ஹாலில் நுழையும்போது காபியின் மனத்தை நாசி தேடியது. அவன் வீட்டிற்கு வந்ததும் பிள்ளையோடு சமையலறை புகுந்து, அவன் ரிஃப்ரெஷ் ஆகி வருவதற்குள் அவன் கையில் மணக்க மணக்கக் காபி இருக்குமாறு பார்த்துக் கொள்வாள். தருவது வேலைக்காரம்மா என்றபோதும் தயாரித்தது மனைவியாயிற்றே என்ற ஜில்லிப்பு அவனது மனதிற்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

இவளிடம் பகைத்துக் கொண்டால், எத்தனை சந்தோஷங்களை இழக்க வேண்டியிருக்கிறது? மீண்டுமொரு பெருமூச்சு ஹாலை அனலாக்கியது.

மலர் ஜாடியில் ஏதோவொரு பூக்கள்… அவளுக்குப் பிடித்த பன்னீர் ரோஜா நிறைய இடம் பெறவில்லை. அதுவேறு கண்ணை உறுத்தியது. பேசாமல் நாமே போய் தோட்டத்திலிருந்து பன்னீர் ரோஜாவைப் பறித்து வந்து இங்கே அடுக்கி வைத்து விடலாமா? என்ற யோசனைக்குக் கூட சட்டென்று போய்விட்டு தன்னையே கடிந்து கொண்டான். கொஞ்ச நாட்களில் தன்னுள் நீக்கமற நிறைந்து போன தன் மனையாளை வழக்கம் போல மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

‘சரியான குள்ள கத்திரிக்காய்…’ மனம் முணுமுணுக்க இதழ்கள் சிரித்துக் கொண்டது. ஒருவேளை இவன் திட்டவில்லையோ? கொஞ்சிக் கொள்கிறானோ? காதல் ஒரு விசித்திர நோய் என்பதை இவனைப் பார்ப்பவர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.