மௌனக்குமிழ்கள் – 13

ஸ்ரீமதிக்கு மாமியார், மாமனாரின் குணம் புரிபட்டத்தில் மனதிற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதும், அவர்களது சுயநலமான எண்ணங்களைக் குப்பையென ஒதுக்கித் தள்ளும் பக்குவம் இருந்தது.

அவளுக்குத் தான் பொக்கிஷமான கணவனின் காதல் இருக்கிறதே! அதைத் தவிர இவ்வுலகில் தனக்கு வேறு என்ன பெரிய தேவை என்கிற மனநிலையில் இருந்தாள்.

ஆனால், இப்பொழுது ஸ்ரீமதிக்கு இருக்கும் ஒரே கவலை எப்படி தாத்தாவை எதிர்கொள்வது என்பது தான்! நிச்சயம் நேற்று மாமனார், மாமியார் பேசிய எல்லாவற்றையும் கேட்டிருப்பார். எவ்வளவு வருந்துகிறாரோ… எப்படி சமாதானம் செய்வதோ என்றெல்லாம் வெகுவாக யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் தயங்கித் தயங்கி அவர் முகம் பார்க்க முடியாமல் தவிக்க, அவரோ “என்னம்மா இந்த வீட்டுக்கு வந்ததும் முதல்முறை தீபாவளியைப் பார்த்திருக்க. ரொம்ப பயந்துட்டியா என்ன? இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு. தனியா சமாளிக்க வேண்டியிருக்கு. நீ இதுக்கே பயந்துட்டா எப்படி? உன்னோட முகமே சரியில்லையே…” என்றார் இலகுவாக.

எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு என்று அவர் உள்ளர்த்தம் வைத்துப் பேசியதைக் கவனிக்கும் நிலையில் அவள் அப்போது இல்லை.

‘இதென்னடா நம்ம இவரை விசாரிக்கணும்ன்னு நினைச்சா இவரு நம்மளை விசாரிக்கிறாரு…’ என்று ஆச்சரியமும் அதிசயமுமாகத் தாத்தாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளின் பார்வையில் மெலிதாக சிரித்தபடியே, “என்ன ஸ்ரீம்மா…” என்றார் பரிவுடன்.

“தாத்தா… உங்களுக்கு எதுவும் சங்கடம் இல்லையே… ரொம்ப சாரி தாத்தா…” என்றாள் முகத்தைக் கெஞ்சலாக வைத்துக்கொண்டு.

“ஹாஹா… என் மருமக என்னைத் திட்டியதுக்கு, அவ மருமக என்கிட்ட சாரி கேட்கிறா… ஹௌ ஸ்வீட்… ஹ்ம்ம் அப்பாலஜீஸ் அக்ஸப்டேட்…. லீவ் இட் ஸ்ரீம்மா… ஆல் பிங்கர்ஸ் ஆர் நாட் ஈக்குவல்…”

அவரது ஆங்கில உச்சரிப்பு எப்பொழுதுமே ஸ்ரீமதியை ஈர்க்கும். ஸ்டைலாக பேசுவார் அவர். இப்பொழுதும் அதை ரசித்தபடியே, “அழகா இங்கிலீஷ் பேசறீங்க தாத்தா…” என்றாள்.

“எது இந்த சாரி, ஸ்வீட், தேங்க்ஸ் எல்லாமா…” என்றவருக்குச் சிரிப்பு பொங்கியது.

“ஸ்ஸ்ஸ் தாத்தா விளையாடாதீங்க. ஏம் டாக்கிங் சீரியஸ்” முகத்தை பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் போல ஸ்ட்ரிக்ட்டாக வைத்தபடி அறிவித்தாள்.

“அப்ப இரு ஸ்ரீம்மா நான் போயி ஹார்லிக்ஸ், ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு வந்து உன்கிட்ட பேசறேன்…” என்றவர், அவள் புரியாமல் குழம்பவும், “அதுதான் நீ சீரியஸா இருக்கியே…” என்றார் மீண்டும் கேலி சிரிப்புடன்.

முகத்தை அஷ்டகோணலாக்கி அவள் முறைக்கவும், “உன்கிட்ட நிறைய விஷயம் எனக்கு என் நண்பன் தர்மராஜனை நினைவு படுத்தும் ஸ்ரீம்மா. நீ அவனோட மினியேச்சர் மாதிரி எனக்கு அடிக்கடி தோணிட்டே இருக்கும். இந்த செல்ல கோபம் கூட உன் தாத்தன் தர்மராஜன் மாதிரியே! நீ என் கூட இருக்கும்போது அவனே மறுபடியும் என்கூட இருக்க மாதிரி ஒரு பீல்… உனக்கு பேசாம தங்கம்ன்னு பேரு வெச்சிருக்கலாம்” ஸ்ரீமதியின் செய்கையைப் பார்வையால் ரசனையான வருடியபடியே சொன்னார்.

நண்பன் நினைவு அதிகமானது போல அவருக்கு! பேச்சை அவரை தொடர்ந்தே வளர்த்தார். “அந்த தடியன் ரொம்ப புத்திசாலிம்மா… எந்த பொருள் எடுத்தா வியாபாரம் நல்லா போகும், எப்படி எல்லாம் வியாபாரத்தை விரிவு படுத்தலாம்… இதெல்லாம் யோசிக்கிறது சொல்லறது அவனா தான் இருப்பான். அவனோட கணிப்பு சரியாவும் இருக்கும்.

இருந்த பணத்தையெல்லாம் போட்டு வியாபாரம் தொடங்கின ஆரம்பத்துல தொழிலுக்கான ஆர்டர் பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்ப அவன் ஒரு ஐடியா தந்தான் மா… கன்ஸ்ட்ரக்ஷன் அதிகம் நடக்கும் சிட்டிக்கு கொஞ்சம் தள்ளியிருக்க வளர்ந்து வரும் ஏரியா ஒவ்வொன்னையும் நேரில் போயி பார்த்து, அந்தந்த சைட் இன்ஜினியர் கிட்ட பேசி பார்க்கலாம். லாபத்தை கம்மியா வெச்சு நம்ம மெட்டீரியல்ஸ் கொடுக்கலாம்ன்னு சொன்னான்.

நீ சொன்னா நம்ப மாட்ட, நானும் உன் தாத்தாவும் இதே அப்ரோச்ல மாத்தி மாத்தி ஆர்டர் பிடிச்சு குவிக்க ஆரம்பிச்சோம். கொஞ்ச வருஷத்துல கம்பெனி நல்ல வளர்ச்சி தெரியுமா… அப்ப கத்துக்கிட்டது தான் இந்த இங்கிலீஷ் எல்லாம்… ஹ்ம்ம் அவன் இருந்திருக்கலாம். கிறுக்கு பையன் அவனுக்கு உன்னோட கவலை மட்டும் தான் ஜாஸ்தி! அதிலேயே போயிட்டான்” என்ற மணிவண்ணன் சில நொடிகள் நண்பனை எண்ணி மௌனமாகி விட்டார்.

ஸ்ரீமதி இத்தனை நேரமும் தன் தாத்தாவைப் பற்றி ஆவலோடும் எதிர்பார்ப்போடும் கேட்டு வந்தவள், மணிவண்ணன் தாத்தாவுடைய இறுதி வார்த்தைகளில் கலவையான உணர்வுகளில் தத்தளித்தாள். தன் தாத்தா தன்மீது அன்பாக இருந்தாரே என மகிழ்வதா இல்லை அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல் வளர்ந்தோமே எனக் கவலை கொள்வதா என அவளுக்குத் தெரியவில்லை.

ஸ்ரீமதியின் தோற்றத்தை பார்த்த மணிவண்ணன், “சரி சரி… உனக்கு வேலை, படிப்பெல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லு…” என்று பேச்சை மாற்றினார்.

“நீங்க வேற ஏன் தாத்தா… வேலைக்குச் சேர்ந்து மூணு நாள் தானே ஆகுது. இன்னும் மேக்சிமம் ஸ்கூல் டூர்ல தான் இருக்கேன். ஸ்கூலில் கெத்தா சுத்தி வரணும். காலேஜ் போனா அப்படியே ஸ்டூடண்ட்டா மாறி பவ்யமாயிடணும். உங்க பேரன் என்னை நம்பி தந்த பொறுப்பைச் சிறப்பா செய்யணும் தாத்தா” என்றவளின் கண்களில் மெல்லிய கலக்கம்.

“எங்கேயும் எந்த தொந்தரவும் இல்லையே” அவளின் கலக்கத்தைக் கவனித்துப் பரிவோடு கேட்டார்.

ஸ்ரீமதியின் மனக்கண்ணில் திலீப்பின் மையல் பார்வை நினைவுக்கு வந்தது. அந்த நினைவு வந்ததும் அச்சத்தில் அவள் உடல் மெலிதாக நடுங்கியது. பள்ளிக்குச் சேர்ந்து மூன்று நாட்களில் அவன் எதுவும் பேச முயற்சிக்கவில்லை என்றபோதும் அவனை கடக்கும்போது அவன் பார்க்கும் பார்வை, நிச்சயம் அதனைச் சாதாரணமாக அவளால் கடந்து விட முடியவில்லை.

என்னதான் மோனிஷா அக்கா இறந்திருந்தாலும், திலீப் இந்த வீட்டு மாப்பிள்ளை தானே! அவனைப் பற்றி எப்படி தவறாகச் சொல்ல முடியும்? அதுவும் அவன் பார்வை சரியில்லை என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்னவோ பிரகதீஸ்வரனிடமும் தன் மனசஞ்சலத்தை சொல்ல முடியவில்லை. மணிவண்ணன் தாத்தாவிடம் சொல்லும் எண்ணமும் அவளிடம் இல்லை. மீண்டும் மௌனக்குமிழ்கள் சூழ்ந்தது அவளுக்குள்.

“எதுவும் பிரச்சினையா?” தாத்தா கொஞ்சம் கலவரமானார். வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள் தானே ஆயிற்று! அதற்குள் பிரச்சினை வந்துவிட்டதா என்ற குழப்பம் அவருக்கு.

“ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லை தாத்தா. இவ்வளவு பெரிய பொறுப்பு அதைச் சரியா செய்வேனான்னு தான் கொஞ்சம் பயம் அப்பப்ப…” எனப் பொருத்தமாகச் சமாளித்தாள்.

அவள் சொன்னதை நம்பியவர், “கண்டிப்பா நீ செய்வ மா… உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம்” என சொல்ல அவள் புன்னைத்தபடி சென்று விட்டாள்.

ஆனால், ஸ்ரீமதி எண்ணியது போல எல்லாம் எளிதாக இருக்கவில்லை. நாளுக்கு நாள் திலீப்பின் பார்வை அவளுக்கு நெருடலாக, அருவெறுப்பாக இருந்தது. தங்கை முறை உறவுப் பெண்ணை யாரும் இப்படிப் பார்ப்பார்களா என்று அவளின் மனம் அவனது துச்சாதன பார்வையில் வெகுவாக பதறியது.

திலீப்பை கண்டுகொள்ளவே கூடாது. அவனை மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவள், இப்போதெல்லாம் அவன் பார்வையைக் கண்டுகொள்வதே இல்லை. முடிந்தவரை அவனை எதிர்கொள்வதையே தவிர்த்தாள். அவன் கண்ணில் படுவதே இல்லை.

தூர விலகி நிற்பது என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று இன்னும் உலகறிவு இல்லாத ஸ்ரீமதிக்கு புரியவில்லை.

ஒன்று அவள் பிரகதீஸ்வரனிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லை அவளே அந்த சூழலைத் தைரியமாக எதிர்கொண்டிருக்க வேண்டும்.

பிரகதீஸ்வரன் துணிவானவன் தான்! அவனால் இந்த பிரச்சினையை எளிதாகச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருக்கிறது. ஆனால், திலீப் அவன் வீட்டு மாப்பிள்ளை என்கிற சூழலால் ஸ்ரீமதியால் கணவனிடம் இதுகுறித்து சொல்ல முடியவில்லை. கூடவே சுமுகமாகச் செல்ல தொடங்கியிருக்கும் தங்கள் வாழ்க்கையில் இந்த தேவையில்லாத பிரச்சினையால் எதுவும் சஞ்சலம் வந்துவிடுமோ என்று அச்சம் வேறு அவளுக்கு.

திலீப்பை தானாக எதிர்கொள்வதற்கும் ஸ்ரீமதிக்கு தைரியம் இருக்கவில்லை. ஏற்கனவே அந்த பள்ளியின் பெருமளவு பங்கு திலீப் குடும்பத்திடம் தான்! கிட்டத்தட்ட நாற்பது சதவீதம். மோனிஷாவின் பேரில் இருந்த இருபது சதவீத சொத்துகளும் அவளது மறைவுக்குப் பின்னர், குழந்தை செழியனுக்குச் சேர்ந்திருக்க அதற்கு கார்டியன் என்ற முறையில் அந்த பங்குகளும் இப்பொழுது திலீப்பிடமே இருந்தன. ஆக, அந்த நிறுவனத்தில் பெரும் பங்குகளோடு பள்ளியின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவனை இன்று வந்தவளால் என்ன செய்துவிட முடியும் என்ற படபடப்பு அவளுக்கு.

கூடவே இந்த பிரச்சினை வெளியில் கசிந்தால் இவள் சொல்வதை யார் நம்புவார்கள்? இவளைப்பற்றி முதலில் யாருக்குத் தெரியும்? இவள் என்ன சொல்லி மற்றவர்களை நம்ப வைப்பாள்? எனக் குழப்பிக் கொண்டு மௌனமாகி விட்டாள்.

ஸ்ரீமதியின் மௌனமும் எதிர்ப்பின்மையும் திலீப்புக்கு சாதகமானதால், அவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினான். வேண்டுமென்றே அவன் செய்யும் அனைத்து வேலைகளிலும் அவளை ஈடுபடுத்தி இருவருக்குமான சந்திப்பின் நேரத்தை அதிகரித்தான். ஸ்ரீமதி அவனைப் புறக்கணிக்க முடியாமல் தவித்தாள்.

வேலைகளின் போது இருவருக்கும் தனிமை கிடைக்குமாறு பார்த்துக் கொள்வது, இரட்டை அர்த்த வசனங்களை அனாயாசமாகப் பேசுவது, வேண்டுமென்றே தெரியாமல் கை படுவது போல எங்காவது உரசி வைப்பது என ஒவ்வொரு நொடியும் அவனது வக்கிர முகத்தைக் காட்டி அவளை அருவெறுக்க வைத்தான். உடம்பெல்லாம் மிளகாய் பூசியது போல எரிந்தது மங்கைக்கு.

திலீப்பின் அணுகுமுறை அவன் எத்தனை விஷமானவன் என ஸ்ரீமதிக்கு புரிய வைத்தது.

அன்றே இந்த வேலை சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தவள், கணவனிடம் தயங்கி தயங்கி, “நான் வேலைக்கு போகலைங்க. படிக்க மட்டும் செய்யறேன். பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக. தனது உறுத்தலை, மன சஞ்சலத்தை, தவிப்பை எல்லாம் மௌன குமிழ்களுக்குள் பதுக்கி வைத்திருப்பவளின் சூழல் பிரகதீஸ்வரனுக்கு எப்படி புரியும்?

ஆனால், அவன் அவளிடம் வேறு எதுவோ எதிர்பார்த்தானோ? “ஏன்?” என்று மட்டும் கேட்டான். பார்வை அவளது முகத்தை அழுத்தமாகப் பார்த்திருந்தது.

“என்னால ரெண்டையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியலைங்க…” என பொய்யுரைத்தாள். எதையோ எதிர்பார்த்து ஏமாந்த தோற்றம் அவனிடம். முகம் எரிச்சலைக் காட்டியது.

அதற்கு மேல் நிதானமாக விசாரிக்கும் மனநிலையில் பிரகதீஸ் அப்பொழுது இல்லை. அவளின் முகத்தை ஊன்றி கவனித்திருந்ததால் அவளின் தவிப்பு அவனுக்குப் புரிந்திருந்தது. ஆனால் மேற்கொண்டு விசாரித்திருந்தாலும் ஸ்ரீமதியின் மௌனம் உடைவது சந்தேகமே என்பது அவனுக்குப் புரிய இன்னும் இன்னும் கோபமானான்.

ஸ்ரீமதி மனதளவில் சஞ்சலங்களையும் சங்கடங்களையும் சுமந்து சுமந்து பலவீனமாகியிருந்தாள். கணவனின் எரிச்சல் புரிந்தாலும் தன் சூழலை விளக்கும் தைரியம் ஏனோ அவளுக்கு வரவே இல்லை.

மனைவியின் தொடர் மௌனத்தில் பிரகதீஸின் முகம் இறுகியது. “நான் அத்தனை முறை சொன்னேன் எனக்காக போக வேண்டாம். உனக்கு விருப்பம்ன்னா மட்டும் போன்னு… இப்படி ரெண்டு மாசம் போயிட்டு இப்ப வேலைக்குப் போக முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? உனக்கு வேலைக்குச் சிபாரிசு செஞ்ச என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க? எனக்கு அப்பவே தெரியும் நீ எனக்காக தான் வேலைக்கு போறதா சொல்லியிருப்ப.. என்னை சமாதானம் செய்யறதுக்காக… இப்ப அதைக்கூட முழுசா செய்ய உனக்கு மனசில்லை” அவன் ஆற்றாமையும் கோபமுமாகக் கேட்க அவளால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

“அச்சோ நீங்களும் புரியாம பேசினா எப்படிங்க? நான் என்ன இப்படியேவா இருக்க போறேன். நமக்கும் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. குடும்பம் வளரும். இப்படி நான் வேலை, படிப்புன்னு ரெண்டு பக்கமும் அலையறதால அதுக்கு எதுவும் பாதிப்பு வந்துடுமோன்னு தான் சொன்னேன்” என்று சட்டென்று ஒரு பொய்யைச் சொல்லி சமாளித்தாள்.

இத்தனை நேரமும் இருந்த எரிச்சலை எல்லாம் மாயம் ஆகியிருந்தது அவளது வார்த்தைகள்! ஒருவேளை இதுதான் உண்மை காரணமாக இருக்குமோ என்று கூட ஒரு நொடி மதிமயங்கி விட்டான். அவள் சொன்ன விஷயத்தை எண்ணிப் பார்த்தவனுக்கு உவகை கூடியது. வேகமாக மனைவியின் அருகில் நெருங்கி, இதமாக அவளின் வயிற்றை வருடி, “அப்படியா?” என ஆசையாக வினவினான்.

ஸ்ரீமதி உடல் சிலிர்த்தாள். ஏதோ சமாளிக்க என்று தோதாக ஒன்றைச் சொன்னவளுக்கு இப்பொழுது உண்மையிலேயே அப்படி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஆசை சூழ்ந்தது. அதில் கன்னம் சிவந்தாள்.

“ச்சு… இன்னும் இல்லைங்க. ஆனா நம்ம தயாரா இருக்கணும் இல்ல…” என்றாள் காதலாக.

ஸ்ரீமதியின் தலையில் மெல்ல கொட்டியவன், “ஏன்டி உனக்கு என்ன வயசாச்சு? நீ அண்டர்வெய்ட் கேட்டகரின்னு உனக்குத் தெரியுமா தெரியாதா? இப்பவே அதெல்லாம் வேண்டாம். அப்பறம் உனக்குத் தான் கஷ்டம். நாம அதெல்லாம் கொஞ்சம் மெல்ல பிளான் பண்ணிக்கலாம்” என்று வாஞ்சையாகச் சொல்ல, அவள் அவனது காதலில் உருகிப் போனாள்.

சில நாட்கள் எந்த தடையுமின்றி வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அவன் பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. மனைவியின் அழகு இப்பொழுதே குலைந்து விடும் என்ற எண்ணத்திலும் தடுக்கவில்லை. தனக்காக, தன் கஷ்டம் எண்ணி இப்படிப் பேசுகிறான். இவன் தான் எத்தனை பாசக்காரன். அவள் மனம் இறகின்றி பறந்தது.

இதுதான் விஷயம் போல… இதுக்கு போய் அப்படி தவித்து நம்மையும் பயப்படுத்தி விட்டாளே என்று எண்ணியபடி, “சோ அடம் பிடிக்காம… இதுமாதிரி சின்ன குழந்தைங்க மாதிரி காரணம் சொல்லாம ஸ்கூலுக்கு போ…” என்றான் உறுதியான குரலில்.

மறுக்க முடியாமல், மறுத்து என்ன காரணம் சொல்ல எனத் தெரியாமல், மீண்டும் புதைகுழியில் காலை வைக்கும் கட்டாயத்திற்கு ஆளானாள் ஸ்ரீமதி.