மௌனக்குமிழ்கள் – 11

கணவனின் காதல் கதகதப்பில் கட்டுண்டு கிடந்ததாலோ என்னவோ சீக்கிரமே தன் காயங்கள் குணமடைந்ததாய் ஸ்ரீமதி உணர்ந்தாள்.

மெல்ல மெல்ல நடமாடுவதும் மீண்டும் செழியனோடு தன்னை பொருத்திக் கொள்வதும் என வெகு உற்சாகமாய் வளைய வந்தாள்.

“யாரோ என் புருஷனுக்கு என்மேல பாசமே இல்லைன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க…” மணிவண்ணன் தாத்தா வம்பிழுக்க, “ஹிஹி நீங்க ஒரு தீர்க்கதரிசி தாத்தா. உங்க கணிப்பு தப்பா போகுமா?” என அசடு வழிந்தாள் ஸ்ரீமதி.

“ஹ்ம்ம் அதுதான் நானும் பார்த்தேனே காலை பிடிச்சுட்டே உன் புருஷன் சுத்திட்டு இருந்ததை…”

தன் கால் காயத்திற்காகத் தினம் தினம் மருந்திட்டதை இப்படிச் சொல்கிறாரே என்று சங்கடப்பட்டவள், “தாத்தா அது காயத்துக்கு மருந்து போட்டாங்க… நீங்க தானே கால் காயத்தைச் சுத்தப்படுத்தச் சொல்லி அவர்கிட்ட சொன்னீங்க…” என்று பொய்யாக முறைத்தாள்.

மனதிற்குள் எந்தவித சங்கடமும் இல்லாமல், தன்மேல் கொண்டிருந்த கோபத்தையும் மறந்து தன்னை கவனித்துக் கொண்ட கணவனின் நினைவு அவளுக்குக் கற்கண்டாய் தித்தித்தது.

“ஆமா ஆமா… உன்னை ஒய்யாரமா தூக்கிட்டுப் போனது கூட நான் சொல்லித்தான் என்ன?” என அவளை சீண்ட, “அச்சோ… தாத்தா… பிளீஸ்…” என்றாள் கோபமாக விரலாட்டி. பிறகு சின்ன சிரிப்புடன், “அப்பறம் நான் அழுதிடுவேன்…” என திரைப்பட பாணியில் பாவமாகக் கூற, அவளை அத்தோடு விட்டுவிடுபவரா அவர்?

“அதுசரி செழியனோட விளையாட வேற யாராவது கிடைப்பாங்களா?” என இன்னும் அவளை வம்பிற்கு இழுத்தார்.

அது புரியாமல், “ஏன் தாத்தா அதுதான் நான் இருக்கேனே போதாதா?” என்றாள் செழியனை ஓடவிட்டு பின்னால் ஓடியபடியே!

‘அட தத்தியே!’ என்றொரு பார்வை பார்த்தவர், “நீ அவனோட ஒன்னா சேர்ந்து ஸ்கூல் எல்லாம் போக முடியுமா என்ன?” என்றார் தலையில் அடிக்காத குறையாக.

“ஹாஹா அதெப்படி தாத்தா…”

“ஹ்ம்ம்… நீயும் உன் புருஷனும் ஒரு புள்ளைய பெத்து கொடுத்து தான்…” தாத்தா அவளுக்கு விளங்கவே போவதில்லை என்று புரிந்து பட்டென்று உடைக்க, அவள் அசைய மறுத்து ஷாக் அடித்தது போல நின்று விட்டாள்.

பிரகதீஸ்வரனின் சமீபத்திய ஊடுருவும் பார்வை… செழியனை தங்களோடு உறங்க வைக்க அழைத்து சென்றால் அவன் முறைப்பதற்கான காரணம்… எல்லாம் எல்லாம் கொஞ்சம் விளங்குவது போல இருக்க, அவளுக்குக் கூச்சம் வந்தது.

இத்தனை நாட்களும் தன் காயத்திற்காகக் கண்ணியமாக ஒதுங்கி நின்றவனுக்குத் தான் துளி கூட நியாயமே செய்யவில்லை என்று புரிந்து தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

முகப்பொலிவுடன் தலை கவிழ்ந்து ஒரு கையை கட்டிக்கொண்டு மறுகையால் தன் தலையிலேயே தட்டிக் கொண்டு நின்றவளைப் பார்த்து, ‘விளங்கிடுச்சு போல!’ என்று எண்ணிய தாத்தா… ‘ஹ்ம்ம் இனி செழியனை ஜெயாம்மா கிட்டயே தூங்க வெச்சுடுவா…’ என எண்ணி கொண்டார்.

கூடவே வான் நோக்கி பார்வையை உயர்த்தி, தன் இரு கைகளையும் மேல்நோக்கி நீட்டியவாறு, ‘பார்வதி! நீ இல்லாத குறைக்கு இன்னும் என்னவெல்லாம் நான் செய்ய வேண்டி இருக்கும்ன்னு தெரியலையே…!’ என்று மனதிற்குள் தன் மனைவியிடம் புலம்பிக் கொண்டார்.

அவர் எண்ணியபடி தான் அடுத்து ஸ்ரீமதி நடந்து கொண்டாள்.

தன்னந்தனியாக அறையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை பிரகதீஸ்வரன் வியப்பாகத் தான் பார்த்தான். இன்றும் செழியன் இருப்பான் நேரமாக வீட்டிற்குப் போய் என்ன செய்ய என்ற ஏக்கத்தோடு தாமதித்து வீடு வந்தவன் இந்த சூழலை எதிர்பார்க்கவில்லை.

பிரகதீஸ்வரன் உடை மாற்றும் சத்தத்தில் வேகமாக விழித்தவள், “வந்துட்டீங்களா? சாரி எப்படி தூங்கினேன்னே தெரியலை. ஆமா நீங்க ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்?” என்று வேகவேகமாக எழுந்தாள்.

“சும்மா தான்… ஆமா செழியன் எங்கே?”

“அ… அது… ஜெயாம்மா கிட்ட…” என்றவளுக்குக் குரலே எழும்பவில்லை. தலை குனிந்தபடி முணுமுணுத்தாள்.

“ஓ…”

“நீங்க சாப்பிட்டீங்களா?” இப்பொழுதும் தலை நிமிரவில்லை அவள்.

“ஹ்ம்ம்… ஏன் செழியனை இன்னைக்கு அங்க விட்டிருக்க?” இரவு உடையை மாற்றியிருந்தவன், கட்டிலில் அமர்ந்தபடி கேட்டான்.

இதற்கென்ன பதில் சொல்வது எனத் திணறியவள் கையை பிசைந்தபடி, “அது… அது… சும்மா தான்…” என்றவளின் கைப்பற்றி அருகிழுத்தவன்,

“அப்ப எனக்காக இல்லையா?” என்றான் ஏக்க பெருமூச்சுடன்.

அவளுக்கு மூச்சடைத்தது. மூச்சடக்கி பதில் சொல்லாமல் நின்றிருந்தவளிடம், “இந்த புடவை, அலங்காரம், பூ எல்லாம் கூட எனக்காக இல்லை போலவே…” என்றான் வம்பிழுத்தபடி. அவனது பார்வை அவளை வருடிக்கொண்டிருந்தது.

‘ஐயோ! கண்டுகொண்டானே!’ என்று நாக்கை கடித்தவளின் கைகள் அவன் கரங்களுக்குள்ளேயே நடுக்கம் கொண்டது.

“ஹேய்… கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கும் மேல ஆச்சுடி… இதென்ன இன்னும் பயம்? அதுவும் என்கிட்ட?” என இன்னும் அவளை அருகில் இழுத்து தன்னருகே அமர வைத்தான்.

அவளின் கரங்களை வருடியவாறே, “ஸ்ரீ ஒரு பக்தன் முன்னாடி கடவுள் வந்தா அவன் என்ன செய்வான்?” என்றான் கிசுகிசுப்பான மென்குரலில். பார்வை அவளை வண்டென மொய்த்தது.

“என்ன செய்வான்? ம்ம்… வரம் கேட்பான்…” என்றாள் யோசித்து.

“ம்ம்… ஹ்ம்ம்… அவனுக்கு மூச்சுக்கூட விடமுடியாது. ஸ்தம்பிச்சு நிப்பான். அசையறது கூட சந்தேகம் தான்…”

“நேர்ல பார்த்த மாதிரி கதை சொல்லுங்க…” மென்குரலில் சிணுங்கினாள். பார்வை அவளை ஊடுருவ, அவன் வேறெதோ கதை சொல்வதன் மூலம் தன் அச்சத்தைக் குறைக்கப் பார்க்கிறான் என்று புரிந்தாலும் அவளின் படபடப்பு குறைவதாய் இல்லை.

“நான் எல்லாம் சமீபமா தினமும் அதை பீல் பண்ணறேன்…” என்று முணங்கினான் அவன்.

என்ன சொல்கிறான் இவன் என்ற படபடப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்து, “என்ன?” என்றாள் சிறு அதிர்வுடன்.

“ஆறு வருஷமா என்னை அவாய்ட் பண்ணற நீ? உனக்கு அது ஞாபகம் இருக்கா?” என்றான் இப்பொழுது.

“நீங்களும் ஒன்னும் என்னைத் தேடி வந்து பேசிடலையே?” அவள் மனத்தாங்கலுடன் கேட்டாள்.

“பேசியிருக்கணுமா?” ஆழ்ந்து ஒலித்தது அவன் குரல்.

அந்த குரல் ஏதோ மாயமும் வசியமும் செய்ய, “அப்ப தெரியலை… ஆனா அடுத்தடுத்த வருஷங்கள்ல பேசியிருந்திருக்கலாம்” என்றாள் ஸ்ரீமதியும் ஏமாற்றம் சுமந்த குரலில்.

“ஓ… என்ன பேசியிருக்கணும்?” அவளின் ஏக்கத்தில் சுவாரஸ்யம் கூடியிருந்தது.

“தெரியலை… ஆனா நீங்க என்னை பார்க்க கூட மாட்டீங்க” என்றாள் உள்ளே போன குரலில்.

“எங்கே நான் பார்க்கிறேன்னு தெரிஞ்சா தான் நீ ஓடி ஒழிஞ்சுப்பியே… அதோட நான் உனக்கு தெரியாம பார்த்தேன். அது புரிஞ்சு தான் தாத்தா நம்ம கல்யாண பேச்சை எடுத்திருக்கணும்”

அவளுக்கு என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை. அப்பொழுது தாத்தா சொன்னது உண்மை தான் என உணர்ந்தவளுக்கு ஒருமாதிரி இதயம் இன்பமாய் படபடத்தது. மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“என்னை பாரேன். நீ ஹால்ப் டிக்கெட்டா இருக்கும்போது பிரபோஸ் பண்ணியிருக்கேன். இப்ப நம்ம கல்யாணத்துக்கு அப்பறம்… இப்படி ஒருத்தன் எங்கேயாவது இருப்பானா?” அவள் முகத்தை மென்மையாக உயர்த்தினான்.

‘கல்யாணத்துக்கு அப்பறம் எங்கே பிரபோஸ் பண்ணினாராம்?’ அவள் இதழ் பிரிக்காமல் சிரித்தாள். ஒருவேளை இப்படி இலகுவாகப் பேச்சுக் கொடுத்ததில் எங்கேயாவது அவன் மனதைக் கோடிட்டு காட்டினானோ?

கடவுள், பக்தன் என்ற அவனது பேச்சுகள் நினைவில் எழ கீழுதட்டைக் கடித்துக் கொண்டாள்.

‘அப்பவும் நேரடியா சொல்லலை. இப்பவும் நேரடியா சொல்லலை… இவரை எல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறதோ?’ சலித்த மனது கடித்த இதழ்களை விடுவிக்க, இப்பொழுது அவ்விதழ்கள் நன்றாகவே புன்னகை சிந்தியது.

“ஹ்ம்ம் சிரிக்கிற… ஆனா ரெண்டு முறையும் நீ பதில் மட்டும் சொல்லலை…” என்றான் அலுப்பாக.

வேண்டுமென்றே கழுத்து மாங்கல்யத்தைச் சரி செய்வது போல முன்னால் எடுத்து போட்டுக் கொண்டாள். இவர் பிரபோஸ் செஞ்ச அழகுக்கு எப்படி பதில் சொல்லறதாம் என்ற செல்ல சலிப்பு அவளுக்கு.

அவன் கண்கள் மின்னியது. அவள்புறம் சாய்ந்து மென்குரலில், “எனக்கு நிறைய சோதனை வருது பாரேன்” என்றான் ஏக்கப்பெருமூச்சோடு. அவள் நாணத்தோடு சிரித்தாள்.

அவனது கரங்கள் அவள் இடையில் கரை சேர்ந்திருந்தது. அந்த காதல் கணவனும் மனைவி சிணுங்கச் சிணுங்க அவளோடு கரை சேர்ந்திருந்தான் ஆர்ப்பாட்டமாய்!

மேற்கொண்டு எதையும் அவளை யோசிக்க அவன் விடவில்லை. அவளுள் கரைந்து அவளையும் கரைத்து தங்கள் வாழ்வின் புதியதோர் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினர் இருவரும்.

சோர்வோடு தன் மார்பில் தலை சாய்ந்திருந்தவளின் தலைமுடியை வருடியபடி இருந்தான் பிரகதீஸ்வரன்.

“என்னங்க…”

“ஹ்ம்ம்…”

“என்னோட கிப்ட்…”

சிறு புன்னகையுடன், “கிப்ட்டா? என்ன வேணும்ன்னு சொல்லு…”

“நீங்க வாங்கின புடவை தான்! சாரி அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது… சாரி சாரி…” என்றாள் அவசரமாக. அன்றைய அவளின் உதாசீனத்தில் அவன் முகம் சுருங்கியது.

“உனக்குத் தான் பிடிக்கலையே அதை விடு… நான் உனக்கு பிடிச்ச மாதிரி வேற வாங்கி தரேன்” என்றான் அந்த பேச்சைத் தவிர்த்து.

“ம்ம்ம் ஹ்ம்ம் எனக்கு என் சேலை தான் வேணும். இல்லைன்னா பாருங்க உங்களை என்ன செய்வேன்னே தெரியாது…” என்றாள் மிரட்டலாக.

அவளின் அடம் அவனுக்குப் பிடித்தது. இன்று தானே முதன்முதலில் உரிமையாக அடம் பிடிக்கிறாள். அவளின் வீட்டாட்களிடம், தாத்தாவிடம் காட்டும் உரிமை!

அதில் மயங்கியபடி, “ஹ்ம்ம் சரிடி… கோபத்துல கார்ல தூக்கிப் போட்டது அப்படியே தான் இருக்கு… நாளைக்கு எடுத்து தரேன்…” என்று சிரிப்புடன் ஒத்துக்கொள்ள,

அவன் புன்னகையில் தைரியம் பெற்றவளாய், “அப்பறம் நான் ஸ்கூலில் நீங்க சொன்ன பொறுப்பில் சேர்ந்துக்கறேன். சாரி அன்னைக்கு ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன் இல்லை…” என்றாள். அவன் மறுத்துவிடக்கூடாதே என்ற ஏக்கத்துடன் அவனை முகம் நிமிர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். இடது கரம் உயர்ந்து அவனது தாடையை கெஞ்சலாகப் பற்றியிருந்தது.

கணவனின் பாசம், பரிவு, காதல் இதெல்லாம் புரிந்ததும் தன் செய்கை தவறோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது ஸ்ரீமதிக்கு. அதோடு அவனோடு இருக்கும் இணக்கம் பிடித்துப்போக அவனிடம் மீண்டும் சண்டை வருவதில் அவளுக்கு உடன்பாடில்லை.

அதனாலோ என்னவோ திலீப்பின் பார்வை தந்த சங்கடத்தைக் கணவனிடம் வாயே திறக்கவில்லை. அதைச் சொல்லி அவன் நம்பிவிட்டால் கூட பரவாயில்லை. நம்ப மறுத்தால்? கூடவே தனக்குத் தந்த பொறுப்பு பிடிக்காமல், ஏற்கனவே அவன் பேசியதை மனதில் வைத்து இப்படி ஒரு பழியைப் போடுவதாக நினைத்து விட்டால்… அந்த நினைவே அச்சத்தைக் கொடுக்க, நாமே திலீப்பை சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடி கணவனிடம் இவ்வாறு சொல்லி விட்டாள்.

“எனக்காக ஒன்னும் வேண்டாம். உனக்கு இஷ்டம் இல்லாட்டி வேணாம் விடு…” பிரகதீஸ்வரன் பிடி கொடுக்காமல் பேசினான்.

அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. “நான் செஞ்சதுல உங்களுக்கு கோபம்…” அவளது குரலே சிறுத்துப் போனது.

“ஹே… ச்சு அதெல்லாம் இல்லைடி. எனக்காகச் செய்ய வேண்டாம்ன்னு தான் சொன்னேன். உனக்கு பிடிச்ச மாதிரியே பார்க்கலாம்” எனப் பரிவாகச் சொல்ல,

“நிஜமாவே எனக்கு பிடிச்சு தான் சொல்லறேன். நீங்க தான் கோபத்துல மறுக்கறீங்க…” என்றாள் விடாப்பிடியாக. அவளுக்குக் கணவனின் அன்றைய கோபத்தை எப்படியாவது முழுவதும் போக்கி விடவேண்டும். அதற்காக அவன் அன்று கேட்டதை எல்லாம் செய்யும் வேகம்.

“உண்மையா சொல்லறியா?”

“நான் நிஜமா தான் கேட்கிறேன். அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னே எனக்கு இன்னும் புரியலை… ரொம்ப சாரிங்க… அச்சோ! அன்னைக்கு சண்டை வந்ததுல நீங்க ஸ்கூலுக்கு நான் வர மாட்டேன்னு எதுவும் சொல்லீட்டிங்களா என்ன?”

“அதெல்லாம் இல்லை. அதுதான் அன்னைக்கே உனக்கு அடி பட்டுடுச்சே! அப்போதைக்கு அது மட்டும் தான் சொல்லி வெச்சேன்”

“அப்ப நான் போறேனே…” ஆவலும் எதிர்பார்ப்புமாய் கேட்டாள்.

அவன் அப்பொழுதும் யோசிக்க, “அன்னைக்கு மட்டும் சொன்னீங்க… முதன்முதலில் நான் கேட்டதை மறுக்க முடியாதுன்னு…” மிட்டாய் வாங்கி வரவில்லையா எனத் தந்தையை அதட்டும் குழந்தையின் குரல் போல ஒலித்தது அவளின் கோபம்.

இறுக்கி அணைத்தவன், “மறுக்கும் நிலையிலா என்னை வெச்சிருக்க… நீ கேட்டா மறுக்க தோணுமாடி எனக்கு…” என்றவன் அவளில் புதைந்தபடி, “என்ன எதுவும் கேட்கத் தான் மாட்டேங்கிற…” என அவளை குறைப்பட்டபடி அவள் கேட்காமலேயே நிறைய நிறைய வாரி வழங்கத் தொடங்கினான்.

“ச்சு… விடுங்க… விடுங்க… நான் என்ன கேட்டா நீங்க என்ன தரீங்க…” என அவனது தோளில் அடித்தவளுக்கும் அவனை மறுக்கும் எண்ணம் இல்லை.

அடுத்த ஓரிரு தினங்களில் ஸ்ரீமதி பள்ளிக்குச் செல்வதாக ஏற்பாடு.