Advertisement

பேரன்பின் தேடலே – மித்ரா 
அத்தியாயம் 01
விடியல்?! அதை நோக்கி தான் பூமிப்பந்து சுழல்கிறது. ஆனால், இவள் வாழ்வில்? அது மிகப்பெரிய கேள்விக்குறி தான். தற்பொழுதுதான் உறக்கம் கலைந்தது போலும், கண்கள் திறக்கும் முன்பே தன்நிலை உணர்ந்து விட்டாளோ! சூடான நீர் கண்களில் பெருகி, கன்னங்களில் வழிந்தோடியது.
மகிழ்நிரதி பெயர்போலே மகிழ்ச்சி பொங்கும் பெரும்கடலாய் இருந்தவள் தான். ஆர்பரிக்க தெரியாது அமைதி ததும்பும் அழகு! மிக மிக மென்மையாய்… குணத்திலும் சரி, உருவத்திலும் சரி.
விடிந்திடாத அந்த மூன்றாம் ஜாமத்தில், அவளால் கண்களைக் கூட பிரிக்க முடியவில்லை. கண்களில் அதீத எரிச்சல், உடல் முழுவதும் அசதி, அடித்து போட்டது போன்ற வலி. ஆனால், ‘தான் இத்தனை நேரம் உறங்கினோமா? எப்படி இந்த சூழலில் உறக்கம் வந்தது?’ என்னும் கேள்வி அவளை அரித்தது.
ஒரு நாள் முழுவதும் அலைந்த அசதி, இரவில் அதீத பயத்தில் உறங்காமல் தவித்தது, அதன் பிறகு… அதற்கு மேல் எண்ணம் செல்லவில்லை, செல்வதையும் அவள் விரும்பவில்லை. மீண்டும் கண்களில் நீர் பெருகியது. எப்படியோ உறங்கிவிட்டாள்! இனி அதை யோசித்து என்ன செய்ய? இப்பொழுது எழ வேண்டும். இங்கிருந்து கண்காணாமல் எங்காவது செல்ல வேண்டும். யார் பார்வையிலும் விழாமல். ஆனால், அது சாத்தியமா? அவளின் அன்பான தந்தையை விட்டு அவளால் இருந்துவிட முடியுமா? அவருக்கும் அவளைத் தவிர யார் இருக்கிறார்கள்? சிந்தனைகள் படர்ந்து கொண்டே சென்றது.
மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருந்து என்ன பயன்? மெல்ல விழிகளை திறந்தாள். சிரமமாகத்தான் இருந்தது. அறை முழுவதும் இருள், திரைசீலைகள் கூட இழுத்து மூடப்பட்டிருந்தது. அது அவளுக்கு எப்பொழுதுமே பிடிக்காத ஒரு விஷயம். அவள் விருப்பப்படி இங்கே ஒரு துகள் கூட இல்லை. இருந்தும் அவள் இங்கே வசிக்கவே விரும்பினாள், முன்னொரு காலத்தில்!
மெதுவாக எழ முயற்சித்தாள். முடியவில்லை! கனமான வலிய கரங்கள் அவளை வளைத்திருந்தது. காலம் முழுவதும் இந்த கைகளில் அடைப்பட்டு கிடைக்கவே விரும்பி, ஏங்கி, தவித்து, இறைவனிடம் பல வேண்டுதல்கள் கூட வைத்திருக்கிறாள். இன்று அந்த பாக்கியம் கிடைத்தும் மகிழ முடியாத அவள் நிலையை என்னவென்று சொல்வது? இதழ் ஓரம் கசப்பான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
மெல்ல அந்த கரங்களை விலக்கியவளுக்கு மனதில் பாரம் சூழ்ந்து கொண்டது. மெல்ல எழுந்தவள், தான் இருக்கும் கோலத்தை எண்ணி அவமானத்தில் கூனிக் குறுகினாள், அவசரமாக தன்னை சீர்படுத்திக் கொண்டாள். அழையா விருந்தாளியாக கண்ணீர் வேறு! அதை அழுந்த துடைத்தெடுத்தாள். நீ துடைத்தால், நான் நிற்பேனா என்று அவளை எள்ளி நகையாடியபடி, கண்ணீர் மீண்டும் மீண்டும் உற்பத்தியானது. மீண்டும் துடைத்தபடி, கட்டிலில் அவனருகே அமர்ந்து அவனுடைய நெற்றியிலும், கழுத்திலும் கையை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல் விட்டிருந்தது. அந்த சூழலிலும் அது அவளுக்கு நிம்மதியை தந்தது. ஆச்சர்யம் தான்! ஆனால், அதுதானே அவள்!
‘நேற்றிரவு சுயநினைவின்றி தானே இருந்தான், மீண்டும் உறங்கும் வரை சுயநினைவு வராமலே இருந்திருந்தால்? அவனுக்கு நடந்தது எதுவுமே நினைவில் இல்லாது இருந்தால்?’ ஏதோ மெல்லிய மலர்ச்சி அவளுள். ‘கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையேல் என்னை அணைத்தபடி உறங்குவானா?’ என்று அவள் மனம் ஆதாரம் தேட, ‘அந்த நினைவுகள் இவனுக்கு இருக்காமல் பார்த்துக்கொள் இறைவா’ என்று அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தாள். பிறகு, அந்த அறையில் அவள் இருந்த அடையாளங்களை அப்புறப்படுத்தினாள்.
பெரிதாக வேலை எதுவும் இல்லை. அந்த படுக்கையை மட்டும் சுத்தம் செய்தாள். முன்தினம் வந்த காய்ச்சலினாலோ என்னவோ, அசதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ரிஷிநந்தன். அவன் உறக்கம் கலையா வண்ணம் மிகுந்த கவனத்தோடு சுத்தம் செய்தாள். சுத்தம் செய்து முடித்துவிட்டு, அவனை ஒரு முறை பார்த்தாள், உறக்கத்திலும் ஒரு அழுத்தம். ஒரு பெருமூச்சை வெளியிட்டவள், அந்த அறைக்குள் வந்த சுவடே தெரியாமல் வெளியில் வந்தாள்.
ஹால் பகுதிக்கு வந்து விளக்கை ஒளிர விட்டாள். நேற்று அவள் கொடுத்த திருமண பத்திரிக்கை ஹால் டீப்பாயில் படுத்த வண்ணம் அவளைப் பார்த்து பரிகாசித்து சிரித்தது. நேற்று இதைக் கொடுத்த பொழுது ஏளனமாய் வளைந்த அவன் உதடுகள் நினைவில் எழுந்து, அவளை கொன்று கூறு போட்டது. 
இவனை மனதில் சுமந்து கொண்டு, தந்தையின் கட்டாயத்திற்காகவும், நிம்மதிக்காகவும் இன்னொருவரை மணக்க துணிந்த அவளால், நேற்றைய சம்பவத்தின் பிறகு அது சாத்தியம் என்று தோன்றவில்லை. நேற்றைய நெருக்கம்?!? அது அனைவரிடமும் முடியாதே! இந்த சூழலில் வேறொருவரை திருமணம் செய்வது, அவருக்கு அவள் செய்யும் துரோகமாகவே பட்டது.
ரிஷிநந்தன், அவன் தான் உள்ளே அவனது படுக்கை அறையில் ஒய்யாரமாய் உறங்கிக் கொண்டிருப்பவன், அவனை தான் இவள் பல ஆண்டுகளாக மனதில் சுமந்தாள். அவன் காதல் கிட்டும் என்று காத்தும் இருந்தாள். ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. அவனுக்கு இவளை அணு அளவும் பிடிக்காது. இவளை மட்டுமல்ல வேறு யாரையும். அவனுக்காக காத்திருக்கவும் முடியாமல், அவனை எண்ணியே வாழவும் முடியாமல் விதி அவளை அசோக்குடனான திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. அதே விதி இப்பொழுது அவள் நிலையை எண்ணி எள்ளி நகையாடியது.
அவளுடைய திருமண பத்திரிக்கையை பார்க்க பார்க்க அவளுக்கு அனல் மேல் நிற்பது போல இருந்தது. அதை வேகமாக எடுத்து சுக்கல் சுக்கலாய் கிழித்து குப்பையில் போட்டாள். இன்னும் மனம் ஆறவில்லை. அவளுக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.
மேஜை மீதிருந்த நோட்டை எடுத்து, ரிஷிக்கான குறிப்பை எழுதி அவன் கண்பார்வையில் படும்படி வைத்து விட்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். நேற்றிரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவு வந்து விடக்கூடாது என்னும் பதற்றம் மட்டும் தான் அவளுக்குள். ஒருவேளை அவனுக்கு நினைவில் இருந்தால், என்னவெல்லாம் அவளைப்பற்றி கீழ்த்தரமாக நினைப்பான்? என்பதை அவளும் அறிவாளே! மனம் கசந்தது. உடல் அவமானத்தில் குன்றி குறுகியது.
அவள் செல்லும் வழி எல்லாம், வழியே தெரியாத வண்ணம் மழைநீர் தேங்கியிருந்தது. அப்பொழுதுதான் விடியல் தொடங்கி இருந்த வேளையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. சிறிது தூரம் செல்வதே பெரும்பாடாய் இருந்தது. எப்படி தான் அங்கிருந்து மெயின் ரோடு வந்து ஆட்டோ பிடித்து அவளுடைய ஹாஸ்டல் வந்தாலோ அந்த கடவுளுக்கே வெளிச்சம். அறைக்கு வந்து குளித்து படுத்தவள் தான், அழுது, அழுது அழுத வண்ணமே உறங்கியும் இருந்தாள்.
ரிஷிநந்தன் தனது கைப்பேசி சிணுங்களில் கண்விழித்தான். அவனுடைய ஆருயிர் தங்கை வருணதேவி தான் அழைத்திருந்தாள். “குட் மார்னிங் அண்ணா” புத்துணர்வான குரலோடு அவனது காலையை தொடக்கி வைத்தாள். சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தவன், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். 
பிறகு வெளியே வந்து தேடினான், வீடு முழுவதும் தேடினான். அவள் இல்லை. என்ன நிலையில் இருந்தால் என்ன? ஒரு பெண்ணை அணைத்து உறங்கியது கனவாக தோன்றிவிடுமா இல்லை மறந்து போகுமா? அதிலும் அவளின் பிரத்யேக மனம் அவன் அறையெங்கும் நிரம்பி, அவன் நாசியினுள் புகுந்து இம்சிக்கும் பொழுது?
சோர்வுடன் வந்து சோபாவில் அமர்ந்தான். அவளின் செய்கையை நினைத்து கோபம் எழுந்தது. அடைமழை என்ற காரணத்தினால், அவளை இங்கேயே தங்க விட்டிருக்க கூடாதோ! தவறு செய்து விட்டோமோ! என்று யோசித்து யோசித்து சினந்தான்.
அப்பொழுதுதான் அவள் எழுதி வைத்த குறிப்பு அவன் கண்களில் பட்டது. “உங்கள் உதவிக்கு நன்றி. மழை நின்று விட்டது. அவசரமாக செல்ல வேண்டி இருப்பதால் உங்களிடம் சொல்லாமல் செல்வதற்கு மன்னிக்கவும்” என்று அவள் எழுதியிருந்ததை படிக்கவும் அவன் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.
‘இங்கேயே இருந்தால், திட்டி விடுவேனோ என்று ஓடிவிட்டு, நல்லவள் வேஷம் வேறு! இது போன்ற பெண்கள் இன்னும் எத்தனை பேரோ! இவளை எல்லாம் இந்த வருணா வீட்டிற்குள் சேர்கிறாள்’ என்று மிகவும் இகழ்வாய் நினைத்துக் கொண்டான். அவனின் பணமும், வசதியும், திறமையும் அவனிடம் பலரை மயங்க வைத்தது. அதில் அவர்கள் எடுத்துக் கொண்ட அதீத நெருக்கம், அவனுக்கு ஒரு கட்டத்தில் அருவருப்பைத் தரத் தொடங்கி விட்டது. அதனால் அவன் நெருப்பானான்! அது தெரிந்தும் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல், அவள் அவனில் விரும்பி விழும் விட்டில்பூச்சியானாள்!
நேற்று இரவு முழுதும் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருந்தவனுக்கு, போர்வையாக அவள் உடல் சூட்டை தந்த அவளுடைய காதல், இப்பொழுது அவனின் குப்பையான எண்ணங்களால் வேஷம் என்றானது. நல்லவேளை அந்த மலர்மனம் கொண்ட பெண், இதை கேட்கக்கூடாது என்று தான் விழுந்தடித்து ஓடி இருந்தால் போலும்!
ரிஷி இன்னும் கோபமாகத் தான் இருந்தான். அவன் கையில் இருந்த காகிதம், கண்ணில் விழுந்த அவள் கையெழுத்து, சுவாசத்தில் இருந்து நகர மறுத்த அவளின் வாசம் என அவனை மேலும் மேலும் சினம் கொள்ள வைத்தது. அந்த கடிதத்தை கசக்கி குப்பையில் போடப் போனான். உள்ளே, மகிழ்நிரதியின் திருமண பத்திரிக்கை சுக்கல் சுக்கலாய் கிழிந்து கிடந்தது. புருவங்கள் முடிச்சிட அதைப் பார்த்தவன், இதை கொடுக்கத்தானே வந்தாள், ஏன் கிழித்து வீசி இருக்கிறாள்? விடையில்லா கேள்விகள் அவனை குழப்ப, அதைப்பற்றி சிந்தனை செய்ய விடாமல் அலுவல் அவனை அழைத்தது.
ரிஷிநந்தன், உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பிசினஸ் பள்ளியில் இருந்து எம்பிஏ பட்டம் பெற்று தந்தை தொழிலை ஏற்று நடத்துபவன். தந்தையின் தொழில்களான… பட்டு உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி என பல கிளைகள் கொண்ட ‘ராயல் டெக்ஸ்டைல்ஸ்’ அவனின் அடையாளம். 
பட்டுகளை வாங்கி மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசன். ஆனால் ரிஷிநந்தன் தொழிலில் வந்த பிறகு நேரடியாக பட்டு நெசவாளர்களிடம் கர்நாடகா, குஜராத்திலிருந்து மூலப்பொருட்களை வாங்கிக்கொடுத்து அவனே உற்பத்தியை தொடங்கினான். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் நெய்யப்படும் பட்டுகள் ராயல் டெக்ஸ்டைல்ஸ்ஸையே வந்து சேரும். இதனால் இடைத்தரகர்களின் இடையூறின்றி நெசவாளர்களும் ரிஷியுமே பலன் பெற்றனர். பாரம்பரியத்தோடு நவீனத்தையும் புகுத்தி வேறு மாநிலங்களிலும் கிளைபரப்பி வெற்றி கண்டான் ரிஷிநந்தன். 

Advertisement