Advertisement

அத்தியாயம் 09

 

 ரிஷி நிச்சியகார்தத்தை நிறுத்திய செய்திக்கேட்டு வருணா மேலும் கவலை கொண்டாள். தன்னிலை தான் ரிஷியின் திருமணத்திற்கு தடையாகிவிட்டதாக, தான் அவனுக்கு பாரமாகிவிட்டதாக எண்ணினாள். எதையும் வெளியில் சொல்லாது மனதிற்குள்ளே மறைத்து அழுத்திக்கொண்டிருந்தாள். அன்னை இருந்திருந்தால் இவ்வாறெல்லாம் நடந்திருக்காது என நினைத்து கண்ணீர் வடித்தாள்.

திருமணத்தை நிறுத்தியதை நினைத்து எந்தவித மனத்தாங்கலுமின்றி ரிஷி வழக்கம் போலே தொழிலையும் வருணாவையும் கவனித்துக்கொண்டிருந்தான். வருணாவின் நிலைதான் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்து. ரிஷி பேசும் போதெல்லாம் அவன் திருமணத்தை குறித்தே கேட்டுக்கொண்டிருந்தாள்.

ரிஷி அலுவலகத்தில் வேலையில் இருக்க, வீட்டில் செவிலியரிடமிருந்து அழைப்பு வந்தது. விரைந்து அவனை வரும்படி அழைத்தார். ரிஷியும் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு விரைந்து வீட்டிற்குச் சென்றான். ஹாலில் வேலையாள் கலா கையில் காயத்துடன் அமர்ந்திருக்க, செவிலியர் அதற்கு மருத்திட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்றவன் என்ன நடந்ததென விசாரித்தான்.

“பதினோரு மணிக்கு பாப்பாவுக்கு வெஜ்சூப் கொடுக்கப்போனேன், அவங்க சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. கொஞ்சமாவது சாப்பிடட்டும்னு நான் கிட்ட போய் திரும்ப திரும்ப சொல்லவும் கோபப்பட்டு தெரியாம தட்டிவிட்டுட்டாங்க, சூப் சூடாயிருந்ததால கையில சின்ன கயம் அவ்வளவு தான் தம்பி” என்றார்.

”மேடம் நீங்க பக்கத்துல இல்லையா? காயம் அதிகமில்லையே, வேணா ஹாஸ்பிட்டல் அனுப்பவா?” என அருகேயிருந்த நர்ஸிடம் கேட்க, “நானும் இருந்தேன், என்னையும் கிட்டவிடலை. பக்கதுல போனாவே கத்துறாங்க. யாரும் வராதீங்க ரூமைவிட்டு வெளிய போங்கன்னு கத்தி அனுப்பிட்டாங்க. அதனால தான் சார் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணேன்” என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவன் பெரிதும் அதிர்ந்தான். பிறரை காயப்படுத்தும் அளவிற்கு தங்கை செல்லுவாள் என சிறிதும் ரிஷி நின்னைக்கவில்லை. வேலையாளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டு, வருணாவின் அறைக்குள் சென்றான்.

வருணாவின் அருகே வந்தமர்ந்தவன், அவள் கைகளை பற்றியவாறு, “வருணாம்மா…” என அழைத்தான். கலங்கிய விழிகளோடு அவன் முகம் பார்த்தவள், “சாரி அண்ணா” என்றாள்.

“எதுக்குடா, நீ தெரியாம தானே செய்த? விடுடா” என்றவன் பரிவாய் கைகளை வருடிக்கொடுக்க, கைகளை உருவிக்கொண்டவள், “தெரிச்சே தான் தட்டிவிட்டேன். திரும்ப திரும்ப கொஞ்சம் குடிங்க பாப்பான்னு அவங்க சொல்லச்சொல்ல கோபம் வந்திரிச்சு அதான் தட்டிவிட்டுட்டேன், பட் அவங்க மேல கொட்டிடும்னு நான் எதிர்ப்பார்கல்ல பாவம் கலாக்கா” என்றாள்.

“பெரிய காயமெதுமில்லை, சின்னதா சிவந்திடுச்சு அவ்வளவு தான் வருணா” என்க, “இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தான். நான் பிறந்துல இருந்து இங்க எத்தனை வருஷமா வேலைப்பார்குறாங்க. அம்மா இருந்த வரைக்கும் ஒருநாளும் அவங்களை குறைவா நடத்துனதில்லை. எனக்கு என்னாச்சுன்னு தெரியலை, பாசமா பேசுனா கூட பரிதாம காட்டுறாங்களோ? எனக்கு அது வேண்டாம்னு கத்திட தோனுது அண்ணா” என்றவள் அவன் முன்னே உடைந்து அழத்தொடங்கினாள். சிறிது நேரம் அவளை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

தலை தாங்கியவாறு கையூன்றி கட்டிலில் அமர்ந்தான். வருணா உடைந்து அழுது இன்று தான் பார்க்கிறான், எவ்வளவு தைரியமாக இருந்தவள் இப்போ இவ்வளவு வலுவிழந்து விட்டாலே என உள்ளம் வாடினான். ரிஷியாலே அவளுக்கு தைரியம் சொல்ல முடியவில்லை, அவனுக்கே ஒரு ஆறுதலும், தைரியமும் அவனை தாங்கும் தோளும் தேவையாய் இருந்தது. அவன் துவழும் நேரங்களில் எல்லாம் அன்னையின் நினைவும், அவள் அன்பிற்கான ஏக்கமும் தோன்றியது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியான பிரதான தொழில் நெசவு. மின்னும் பட்டின் பின்னிருக்கும் நெசவாளர்களின் உடல் உழைப்பு அளப்பரியது. ஒரு புடவை என்பது ஒரு குடும்பத்தாரின் ஒருமாத மொத்த உழைப்பு. நவீன விசைத்தறிகள் வந்து விட்ட போதும் கையால் இயக்கி தறியில் நெய்யப்படும் துணிகளுக்கான வரவேற்பு நிற்கவில்லை.

 

அவ்வகை துணிகளை கடல் கடந்தும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தான் ரிஷிநந்தன். வார இறுதியில் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தவன் தனது அலுவகத்தில் வேலையை முடித்துவிட்டு அருகே இருக்கும் கிராமத்திற்கு ஆடர் கொடுக்கச் சென்றிருந்தான். எந்த மாதிரியான துணிவகைகளில் எந்த மாதிரி நுணுக்கமான வேலைபாடுகள் வேண்டும் என்பதெல்லாம அவனே நேரில் சென்று விளக்கி விடுவான். வேலை முடித்து வரும் வழியிலே அந்த கடையைப் பார்த்தான். இத்தனை நாளும் வராத அவள் நினைவு மகிழ்நிரதியை முதல் முதலாகப் பார்த்த அதே ஐஸ்கீரிம் பார்லரை கடக்கும் நொடியில் வந்தது.

 

காஞ்சிபுரத்தில் தனது அலுவலக அறையில் சுழல் நாற்காலில் அமர்ந்திருந்தவன் யோசனையோடு சுழன்று கொண்டிருந்தான். அன்று மகிழ் திருமணப்பத்திரிக்கை கொடுக்க வந்தது, அன்றைய இரவு நெருக்கம், காலையில் தன் எழும் முன் அவள் சென்றிருந்தது, குப்பையில் சுக்கல் சுக்கலாகக்கிடந்த பத்திரிகை அனைத்தையும் கோர்வையாக நினைவுப்படுத்திப் பார்த்தான்.

 

உடனே அங்கிருக்கும் தனது உதவியாளரை அழைத்தான். உள்ளே வந்தவரிடம், “எனக்கு ஒரு பொண்ணோட அட்ரெஸ் கண்டுபிடிச்சிக் கொடுக்கணும் ராஜேஷ்” என்றான்.

 

ரிஷியா இவ்வாறெல்லாம் கேட்பது என அவர் அதிர்ந்து விழிக்க, அதை கண்டுகொண்டவன், “இந்த ஊரு தான். அவங்க பெயர் மகிழ்நிரதி” என்றான். அவ்வளவு தான் அவளை பற்றி தெரியும். என்னவோ அவள் ஜாதகம் முதல் சொல்லிவிட்டது போல் மூச்சுவிட்டுக்கொண்டான்.

 

பெயர மட்டும் சொன்னா நான் எப்படி கண்டுபிடிக்கிறது வீடுவீடா போய் கணக்கெடுக்கவா முடியும் என மனதில் நினைத்துக்கொண்டவன் “எப்போ வேணும் சார்?” என்க, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க, அட்ரெஸ் கிடைச்ச உடனே எனக்கு இன்ஃபார்ம் கொடுக்க, அண்ட் இட்ஸ் பர்சனல்” என்றான்.

 

ரிஷியிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்த ராஜேஷ் முழித்தார். அந்த பொண்ணை நான் எங்கன்னு போய் தேடுவேன், கோவில் கோவிலா போனாலும், காஞ்சிபுரத்துகுள்ள நான் எத்தனை கோவில் தான் சுற்ற? ஒருவேளை கோவிலுக்கு போகாத பொண்ணா இருந்தா? ம்ம், கோவிலுக்கே போகாத பொண்ணா இருந்தாலும் பார்லர் கண்டிப்பா போகும், தேடுவோம். கண்டுபிடிக்கிற வரைக்கும் இது என் பொண்டாட்டிக்கு தெரியாம இருந்தா போதும், தெரிச்சா சங்கு தான்! ஈஸ்வரா இந்த அபலைய நீ தான் காப்பாற்றணும்! என்ற வேண்டுதலோடு வேலையைத் தொடங்கினார்.

 

செல்களில் எல்லாம் புது இரத்தம் பாய, புது உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது ரிஷிக்கு. என்னவோ அப்போதே மகிழை காணவேண்டும் என்ற ஆர்வம் பெருகியது. அன்னை இழந்த ரிஷிக்கு அன்னையின் பேரன்பிற்கான தேவை இருந்து. தேவை தேடலை தோற்றுவிக்கும்! பேரன்பின் தேடல் தொடங்கியது!

 

சென்னைக்கு வந்து ஒருவாரம் ஓடியிருந்தது. ஒவ்வொரு நாளும் ராஜேஷிடமிருந்து வரும் தகவலை எதிர்பார்த்திருந்தான். இப்போதெல்லாம் மகிழின் நினைவுகள் அடிக்கடி வந்தது, முன்பே அவளிடம் முகம் கொடுத்து பேசியிருக்கலாமோ என்று கூட தோன்றியது. ஆறாம் நாள் காலையில் ராஜேஷிடமிருந்து வாட்ஸப் மெசேஜில் மகிழின் அட்ரெஸ் வந்திருந்தது.

 

சிறிதும் தயங்கவில்லை உடனே கிளம்பினான், வருணாவின் அறையை கடக்கையில் எட்டிப்பார்த்தான், நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவள். தன் முடிவு வருணாவிற்கு மகிழ்வை தரும் என்றே எதிர்ப்பார்த்தான். வருணாவின் மகிழ்விற்காக மட்டுமே மகிழைத் தேடிச் சென்றான். அவளுக்கு மணமாகி இருக்கக்கூடும் என ஒரு சதவீதம் கூட அவன் உள்ளத்தில் சந்தேகம் எழவில்லை. காலை எட்டுமணிக்கெல்லாம் மகிழ்நிரதியின் வீட்டிற்கு அருகே வந்துவிட்டான்.

 

மகிழின் விஷியத்தில் மட்டும் அத்தனை வேகம். அப்போது கூட சிறிதும் தயக்கமில்லாது வாசலுக்குச்சென்று அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்துக்கிடந்தான். தன்னை காணும் நொடிகளிலெல்லாம் கண்களில் மின்னும் புதுவொளியோடு மலர்ந்த முகமான அவள் முகம் நினைவில் வந்தது. இன்றும் அதை எதிர்பார்த்தே காத்திருக்க, கதவை திறந்தது குணசீலன்.

 

வாசலில் நிற்கும் புதியவனை பார்த்தவர், “என்ன விஷயம்? யார் நீங்க?” என்றார். ”நான் ரிஷிநந்தன், மகிழோட ப்ரண்ட். இதுக்கும் மேல உள்ள போய் பேசலாமா அங்கிள்?” என்றான்.

 

மகிழின் நண்பன் என்றதும் மறுகேள்வி இன்றி உள்ளே அழைத்துச்சென்றார். மகிழை வருமாறு குரல் கொடுத்து விட்டு ரிஷியை அமரச் சொன்னார். ஹாலில் அமர்ந்தவன் முதலில் தன் தொழில் குடும்பத்தைப்பற்றிய தகவல்கள் சொல்ல ஏனென்று அறியாவிடினும் பொறுமையாக கேட்டுக் கொண்டார் குணசீலன்.

 

“முதல ஏதாவது, சாப்பிடுங்க தம்பி. இருங்க காபி எடுத்திட்டு வரேன்” என்றவர் சமையலறை நோக்கிச் சென்றார். ரிஷி சிந்தையோடு கண்மூடி இறுக்கையில் சாய்ந்தான். அதே நேரம் மாடியில் துணி காயப்போட்டுவிட்டு காலியான வாளியோடு படிகளில் இறங்கி வந்த மகிழ் ஹாலில் அமர்ந்திருக்கும் ரிஷியை கண்டதும் அதிர்ந்தாள். தன் காண்பது உண்மை தானா என சந்தேகம் கொண்டாள்.

 

மகிழின் பார்த்தவிழி பார்த்தபடி இருந்தது, இமைபீலிகள் கூட அசையவில்லை. கருமை புருவங்களின் கீழ் இறுக்கிமூடிய விழிகள், அழுத்தமாய் மூடிய உதடுகள் வெண்படுக்கையில் ஆழ்ந்த துக்கத்தில் இருந்த ரிஷியின் முகமே கடைசியாக கண்டு வந்தவள், கிட்டத்தட்ட அதே நிலையில் ஐந்து மாதங்களுக்கு பின் அவனை காண்கிறாள். இந்த நாட்கள் நகரவேயில்லையோ தான் இன்னும் அதே நாளில் தான் நிற்கிறோமோ, கண் காண்பது கனவா? கற்பனை உருவா? என்ற நிலையில் இருந்தாள்.

 

குணசீலன் வர, அந்த சத்தத்தில் நிமிர்ந்து அமர்ந்தவன் படிகளில் அருகே சிற்பம் போலே நிற்கும் மகிழ்நிரதியைக் கண்டான். முகத்திலும் தேகத்திலும் முத்துமுத்தாய் நீர்துளிகள் படித்திருக்க, சற்றே நனைத்த உடையோடு நிற்க, அன்று தன் வீட்டில் நனைத்து நடுங்கி நின்ற கோலமே நினைவில் வர அந்த நொடி அப்படியே நின்றிருக்கக் கூடாதா? இந்த ஐந்து மாதங்கள் தன் வாழ்வில் வராமலே சென்றிருக்கக் கூடாத என்ற ஏக்கம் பரவுவதை உணர்ந்தான்.

 

இருவரின் பார்வையும் எங்கு இறுதியாய் சந்தித்துக் கொண்டதோ அந்த நினைவுகளுடன் இங்கிருந்து அவர்களுக்கான அத்தியாயத்தை படைத்தது விதி. 

 

பார்வையை திரும்பியவன் குணசீலன் நீட்டிய காபியை வாங்கிக்கொண்டான். மகிழ்நிரதி நிற்பதை பார்த்தவர், “அம்மாடி உன்னை பார்க்க தான் வந்திருக்காரு” என்றார். சரியென்ற தலையசைப்போடு உள்ளே சென்றவள், வேகவேகமாக உடை மாற்றினாள்.

 

“இல்லை அங்கிள் நான் உங்களை பார்க்க தான் வந்தேன்” என்க, அவன் வார்த்தைகள் சிறிது புரிபட ஆரம்பித்தது குணசீலனுக்கு. “என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றார்.

 

உடை மாற்றிக்கொண்டிருந்தவளின் உள்ளத்தில் அத்தனை படபடப்பு, எதற்காக வந்திருக்கிறான் என்ற குழம்பமும் தன்னை தேடி வந்திருக்கிறான் என்ற சந்தோஷமும் இருபுறமும் அவளை சுற்றியது. முன்பெல்லாம் ஒரு பதில் பார்வை பார்க்காதவன் இன்று தன்னை தேடி வந்திருக்கிறான் எனில் அன்றைய இரவின் நினைவு அவனுக்கு இருக்குமோ? நினைக்கும் போதே முகம் சிவந்தது. படபடக்கும் உள்ளத்தோடு ஹாலுக்கு வந்தவள் தந்தையின் அருகே சென்று நின்றாள்.

 

“எனக்கு மகிழை ரொம்ப பிடிக்கும் அங்கிள்” என்றவன் ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “மகிழுக்கும் என்னை பிடிக்கும், அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்றான் குணசீலனை நேர்கொண்ட பார்வையில் எதிர்நோக்கி.

 

ஒருநொடி அமைதியானது அவ்விடம், குணசீலன் சற்றே யோசித்தார், மகிழ் அப்போது திருமணம் வேண்டாமென்று நிருத்தியதையும் தற்போது அவன் பேச்சை ஆதரிப்பது போல அமைதியாக நிற்பதையும் இணைத்துப் பார்த்தார். மகளுக்கும் அவன் மீது விருப்பம் இருக்குமோ என ஐயமுற்றவாறு மகளைப் பார்க்க, தலை குனிந்தாள் மகிழ்நிரதி.

 

பொறுமையுடன் ரிஷி, “அவசரமில்லை நல்லா யோசிச்சு உங்க முடிவ சொல்லுங்க அங்கிள்” என்றான் சிறு சிரிப்புடன். அவரும் சரியென்பது போல் தலையசைக்க, “அப்போ நான் போயிட்டு வரேன், அங்கிள்” என விடைபெற்றுக்கொண்டு எழுந்தான். மகிழிடம் ஒரு பார்வையால் சிறு கண்ணசைவில் விடைபெற, அவள் தலை தானாக அசைத்து விடைக்கொடுத்தது.

வாசல் வரை வந்த குணசீலனிடம், “ஒரு விஷியம் அங்கிள், எங்க வீட்டு பெரியவங்க ஏற்கனவே எனக்கு ஒரு கல்யாணம் சம்பந்தம் பேசி வைச்சிருந்தாங்க, அதை நான் தான் நிறுத்திட்டேன்” என்றான்.

“ஏன், நான் எதுவும் கேட்கலையே?” என்க, “சொல்லிடுறது தான் நல்லது அங்கிள், என்னால மகிழை மறக்க முடியலை, மகிழ் இல்லாத ஒரு வாழ்க்கைய கற்பனையில கூட வாழ முடியாது அங்கிள் அதனால தான் கல்யாணத்தை நிறுத்திட்டேன்” என்க, அசோக்குடன் திருமணம் வரை வந்து நின்ற மகளின் நிலையும் நினைத்தார் குணசீலன். காரில் ஏறியவன் விடைபெற்றுக்கொண்டு கிளம்ப, யோசனையோடு வீட்டிற்குள் சென்றார் குணசீலன்.

Advertisement