Advertisement

அத்தியாயம் 04

 

மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்ரீதரை பார்த்தாள்.

 

அவனோ மென்நகையோடு கட்டிவிரலை உயர்த்திக் காட்ட, நிம்மதியாய் மூச்சு விட்டுக் கொண்டு கீழிறங்கினாள் மகிழ். கிட்டார், மைக்கோடு, நின்றிருந்த அவள் மியூசிக்கல் குழுவின் நண்பர்கள் எப்போதும் போலே மகிழின் குரல்வளமையை பாராட்டினர்.

 

கலையரங்கில் இருந்த மகிழை, வருணாவிற்கு அடிபட்டு விட்டதாக அவள் தோழி வந்து அழைத்துச் சென்றாள். அவ்வளவு தான் என்னவோ ஏதோ என பயந்தவள் தன்னுடன் இருந்த சில நண்பர்களையும் அழைத்து விட்டு மைதானத்திற்கு ஓடினாள்.

 

வருணா தரையில் அமர்ந்திருக்க அவளை சுற்றி ஒரு கூட்டமே கூடியிருந்தது, அவளோ வலியோடு கால்களை பிடித்துக் கொண்டிருந்தாள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே சென்ற, மகிழும் வருணாவின் காயத்தை பார்த்தாள். வலது முட்டியிலிருந்து சிவந்து வீக்கமாக தெரிந்தது. வலியோ கணுக்கால் வரைக்கும் பரவியிருந்தது.

 

மெல்ல அவள் கால்களிலிருந்து ஷூவை கழட்டியாவாறே, “வரு என்னடியாச்சு? ரொம்ப வலிக்கா கொஞ்சம் பொறுத்துக்கோ, ஹஸ்பிட்டல் போய்டலாம் என்ன?” என்றாள் ஆதரவாக.

 

“இருக்கட்டும் சின்ன காயம் தான் மகி, வீட்டுக்கு போய், அம்மாவ தையிலம் தேச்சுவிட சொன்னா சரியாபோய்கிடும், கிஷோர் நீ என்னை டிராப் பண்ணிடுறீயா?” என்ற வருணாவின் சமாளிப்புகளை சிறிதும் மகிழ் காது கொடுத்துக்கேட்கவே இல்லை.

 

அவளோ பேட்மிட்டன் விளையாடுகையில் இடறி விழுந்துவிட்டாதாகவும், இரத்தகாயமேதும் இல்லையென்றும் சிறுவலி தான் என்றும் சமாளித்தாள்.

 

வருணாவின் கைபேசியை பறித்தவள் அருகில் இருந்த தோழியிடம் கொடுத்து, அவள் வீட்டுக்கு செய்தியை உரைக்கும் படி சொல்லிவிட்டு ஸ்ரீதர் உதவியோடு மருத்துவமனைக்கும் அழைத்து வந்திருந்தாள் மகிழ். பரிசோதனைகளையும் சிகிச்சையும் முடித்து வந்த மருத்துவர் சாதாரண சுளுக்கு தானென்றும், வலிக்கு மருந்து கொடுத்திருப்பதாகவும் பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறிச் சென்றார்.

 

நண்பர்கள் அனைவருமே கிண்டல் கேலி பேசியவாறு வருணாவின் நலனையும் விசாரித்து விட்டு கிளம்பினர். சுபிக்ஷாவும், மகிழும் மட்டும் வருணாவின் வீட்டாள்கள் வரும் வரை நின்றுக்கொண்டிருந்தனர். செய்திக்கேட்டு பதட்டத்தொடு தேவகி வீட்டிலிருந்தும், ரிஷி அலுவலகத்திலிருந்தும் கிளம்பினர். ஆனால் முதலில் மருத்துவமனைக்கு வந்தது தேவகி தான்.

 

“வருணா அடி உனக்கு பட்டுச்சா? இல்லை உன் உயிர் தோழிக்கானு எனக்கே தெரியலை. எல்லாத்தையும் கிளப்பி விட்டு ரெண்டுடே நிமிஷத்துல என்ன வேகம், அதையும் விட இங்க வந்த பிறகு திறந்த வாட்டர் ஃபால்ஸ் தான் இன்னும் முடிவேயில்லை, பாரு அங்க?” என கண்ணீரோடு நின்றிருந்த மகிழை கிண்டலாய் காட்டினாள் சுபி.

 

”நானும் இவ பண்ணுற அலப்பறைய பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் சுபி, இவ டென்ஷன்னானது மட்டுமில்லாம அடுத்த டென்ஷன் பார்டி எங்க அம்மாவையும் கிளம்பிவிட்டுட்டாளே தான் இருக்கு, இப்போ பாரு கொஞ்ச நேரத்துல இங்க வந்து என்ன புலம்பல் வைக்க போறாங்கனு”

 

“சும்மா இருக்கடி, அப்போ நீ வலியில துடிச்சதெல்லாம் என்ன அக்டிங்கா? ஃப்ராக்ஷரா இருந்திடுமோனு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” என்றாள் கலங்கிய கண்களுடன் மகிழ்.

 

அதே நேரம் உள்ளே வந்த தேவகி முதலில் பார்த்தது கலங்கிய விழியும் வேதனை முகமுமாக நின்றிருந்த மகிழை தான். அதன் பின்னே கட்டிலில் கட்டோடு படுத்திருந்த மகளைப் பார்த்தார். மகளை பார்த்ததும் அவள் காயத்தை ஆராந்து அழுதவாறு நெஞ்சோடு அவள் தலையை அணைத்துக்கொண்டார்.

 

ஐயோ அடுத்த அலப்பறையா, ஸ்ப்பா….இப்பவே கண்ணைக்கட்டுதே! கூட அதட்டலும் அட்வைஸ்ஸும் வருமே என மனதில் அலுத்துக் கொண்டு நீண்ட மூச்சினை விட்டாள் வருணா.

 

“வலிக்குதா குட்டிம்மா?” என கேட்க, வருணா மறுப்பாய் தலையசைக்க, “ஆமா ஆன்ட்டி, கிரவுண்டல வைச்சு வலியில துடிச்சா தெரியுமா? காலெல்லாம் வீங்கி சிவப்பா இருந்துச்சு” என விரிவாக கண்களையும் விரித்துக்கொண்டு விளக்கினாள் மகிழ்.

 

தேவகி மீண்டும் விசும்ப, வருணா மகிழை முறைத்துவிட்டு, “அம்மா இப்போ இல்லைம்மா, பெயின் கில்லர் போட்டிருக்காங்க. இதென்னா முதல் தடவையா நான் கீழ விழுகிறது? சின்ன வயசுல இருந்து எத்தனை தடவ பட்டாச்சு. அதெல்லாம் பார்க்கும் போது இதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம் தான்ம்மா. எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்கீங்க? அண்ணா வந்து பார்த்தா இதுக்கும் சேர்ந்து என்னை தான் திட்டுவான்” என சமாதப்படுத்திவிட்டு, சுபிஷாவை கிளம்புமாறு கண்ஜாடை கட்டினார்.

 

சிறுவயதிலிருந்து இப்போது வரை ஏதாவது அட்வேன்ஜெர்ஸ் முயன்று பார்த்து நன்றாக வாரி வாங்கிக் கொள்வது வருணாவுக்கு பழக்கம் தான். ஆனால் விரைவில் குணமடைவத்தற்கு காரணம் தேவகியின் கவனிப்பு தான் என்பதை மறுக்க முடியாது.

 

இருவரும் கிளம்ப, ”அட இருங்கம்மா, வீட்டுக்கு வாங்க வந்து டின்னர் முடிச்சிட்டு போகலாம்” என்றார் அன்புக் கட்டளையாக. சுபி, வருணாவை பார்க்க மாட்டிக்கிட்டியா அனுபவீங்க என்பது போலே பார்த்தாள்.

 

“சரிங்க ஆன்ட்டி, ப்ரண்ட் வெயிட் பண்ணுறாங்க சொல்லிட்டு வந்துறேன்” என்ற மகிழ் கீழே சென்று ஸ்ரீதரிடம் தாங்களே விடுதிக்கு சென்று விடுவதாகவும் அவனை வீட்டிற்கு கிளம்பும் படி உரைத்தாள்.

 

திரும்பியவள் மேல்தளத்திற்கு செல்ல லிப்டிற்குள் நுழைந்ததும் அதிர்ந்தாள். கைபேசியை ஆராந்தவாறு நின்றிருந்தது ரிஷிநந்தன், அவன் நிமிர்ந்தும் பாராது போக, அங்குமிங்கும் முகத்தை திருப்பியவளுக்கு எங்கு சென்று முகத்தை மறைக்க என்றே தெரியவில்லை. உள்ளிருந்தது அவர்கள் இருவர் மட்டுமே!

 

வெளியே வந்ததும் வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள். அவனும் பத்தடி தொலைவில் அதே வேகத்தில் தொடர்ந்து வர, மகிழுக்கு இதயம் பயத்தில் பனியாய் உறையத் தொடங்கியது. கைகால்கள் நடுக்கிய போதும் வேகமாய் நடந்தாள். எங்கு சென்று மறைய என்று கூட யோசிக்க தோன்றவில்லை.

 

ஒருவேளை தன்னை அடையாளம் கண்டுகொண்டானோ? பிரச்சனை செய்வானோ? அதற்கு தானே தொடர்ந்து வருகிறான் என மனசாட்சி மேலும் பயமுருத்த ஓட்டமும் நடையுமாக, வாருணாவின் அறைக்குள் நுழைந்தாள். வந்தவள் எதுவும் பேசாது தேவகினின் முதுக்கு பின் சென்று நிற்க ரிஷி உள்ளே வந்தான்.

 

ஐய்யோ ரூம் உள்ளையும் வந்துட்டானே வசமா மாட்டிகிட்ட போ பயத்தில் வெளிறி நின்றாள். இதயமோ தடதடக்கும் இரயிலே விட வேகமாய் குதித்துக்கொண்டிருக்க முகம் லேசாய் வியர்க்க தொடங்கியது.

 

உள்ளே வந்த ரிஷிநந்தனோ தங்கையின் தலை தடவி நலனை விசாரித்து விட்டு அன்னையின் கண்ணீரை கண்டு அதட்டலிட்டான். அப்போது தான் அன்னையின் முதுகின் பின் நிற்கும் மகிழை பார்த்தான். மறைந்து கொள்ளவே தேவகின் பின் நின்றவள் ஏனோ முகத்தை மறைத்துக் கொள்ளாது அவனையே பார்த்திருந்தாள். வருணாவின் தமையன் இவன் என்றறிந்த அதிர்ச்சியில் செயலிழந்து நின்றாள்.

 

வருணா தன் தோழிகள் இருவரையும் அறிமுகப்படுத்த, ஒரு நானோமீட்டர் சிரிப்போடு ‘ஹாய்…” என்றான். சுற்றி இருக்கும் அனைவரின் பார்வையை விடவும் பேயைக்கண்டு அரண்டது போன்று தன்னை வெறித்து பார்க்கும் மகிழை புரியாது புதிதாய் பார்த்தான்.

 

அனைவரும் கிளம்ப, தன் முன்னே சென்று கொண்டிருக்கும் சுபியின் கரத்தை பற்றி தடுத்தவள் மெல்ல அவள் காதுக்குள், “நாமா இப்போ கண்டிப்பா அவங்க வீட்டுக்கு போகணுமா?” என்றாள்.

 

“என்னை கேட்டா நீ தலையாட்டுனா?” என்றாள் மென்குரலில்.

 

“லேட்டாகிடுச்சு ஹாஸ்டல் போகணும்னு சொல்லிடலாமா?”

 

“அதை நீ முதலையே சொல்லியிருக்கணும், இப்போ அங்க போறதுல உனக்கென்ன பிரச்சனை? வரோம்னு சொல்லிட்டு இப்போ முடியாதுன்னு சொன்னா என்ன நினைப்பாங்கா?” சுபியின் கேள்வியில் பதிலில்லாது மௌனமாய் வந்தாள் மகிழ்.

 

வலைக்குள்ள சிக்கின வெள்ளலி மாதிரி எதுக்கு இவ நெளிச்சிகிட்டு இருக்கா? என புரியாது பார்த்தாள் சுபிக்ஷா.

 

அவனிடம் மன்னிப்பு கேட்கத்தானே நினைத்திருந்தாய் பின்பு ஏன் ஓடி ஒளிகிறாய்? என்று மனசாட்சி கேட்க, நான் மன்னிப்பு வேண்டினால் மட்டும் அவனென்ன மன்னிக்கவா போகிறான், முறைப்பு மட்டுமே முகமூடியாக கொண்டவன் என்று பதிலளித்து மனசாட்சியை தட்டி வைத்தாள்.

 

அனைவருமிருந்ததால் சண்டையிடவில்லையோ? இல்லை தன்னை மறந்து விட்டானோ? என குழம்பினாள். இத்தனை நாட்களாகிவிட்டதே ஆகையால் தன்னை மறந்திருப்பான் இதுவும் நல்லதிற்கு தான் என்றெண்ணிய போதும், அதற்குள் தன்னை மறந்துவிட்டானா என நெஞ்சோரம் சிறு ஏமாற்றம் பரவியது ஏனென்று தெரியவில்லை.

 

மாலையல்லாது இரவுமல்லாது மெல்லிய இருள் சூழ்ந்திருந்த அந்திநேரம். இரும்புக் கதவுகளையும் தாண்டி நீண்ட நடைபாதையில் சென்று வாசல் முன் நின்றது கார். மின்சார விளக்கொளியில் பச்சைப்புள் தோட்டமும் பளிங்கு வீடும் மின்னிக்கொண்டிருந்தது. வருணாவிற்கு அருகில் அமர்ந்திருந்த மகிழ் பயணம் முழுவதும் மௌனமாய் சிந்தனையிலே வந்தாள். தன்னை அவன் மறந்து விட்டான் என்ற ஏமாற்றத்தின் வலி அவளை வேதனை கொள்ளச் செய்தது.

 

ஒற்றைகாலை மட்டுமே ஊன்றி தடுக்கி நடக்கும் தங்கையை தாங்கியாவாறு ரிஷி வீட்டிற்குள் சென்றுவிட, தேவகி, “உள்ள வாங்காம்மா” என இருவரையும் வரவேற்றார்.

 

“ஏன் மகி நம்ம ஹாஸ்டலை விட இந்த வீடு பெருசு தானே?” என்றதுக்கு பேச்சில்லாது தலையாட்டினாள் மகிழ்.

 

இருவரையும் உள்ளே அழைத்து ஹாலில் அமர்த்தியவர் இருவரின் ஊர் பொற்றோர்கள் பற்றி கேட்டறிந்துக் கொண்டார். சுபிக்ஷாவும் வருணாவும் பேசிக்கொண்டிருக்க, மருத்துவமனயில் இருந்தது போன்றில்லாது இப்போது சகஜமாக மகிழ் தேவகியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

 

சில நிமிடத்தில் எழுந்த ரிஷி தனக்கு வேலையிருப்பதாக கூறிவிட்டு மாடியேறி தன்னறைக்கு சென்றுவிட்டான். பின் இருவரையும் இரவு உணவிற்கு அழைத்தவர் பார்த்து பார்த்து பரிமாறினார்.

 

“மகி இன்னைக்கு நமக்கு ஹாஸ்டல் சாப்பாட்டுல இருந்து விடுதலைடி” என சுபி அவள் காதுக்குள் ரகசியம் பேச, “லேட்டாகுதுடி கிளம்பலாம்” என்றாள் மகிழ்.

 

“நீயெல்லாம் நல்ல மனிஷியா? என்னை பார்த்து கொஞ்சம் கூட பரிதாபப்படமாட்டியா? அந்த ஹாஸ்டல் சாப்பாடால ஐஞ்சு கிலோ குறைஞ்சிட்டேன். இன்னுக்கு புயல் வந்து தடுத்தாலும் நான் நிக்க மாட்டேன், நீ வெடிக்கை மட்டும் பாரு” என வசனம் பேசிவிட்டு நன்றாக உண்டாள்.

 

மகி இருந்த நிலையில் இறங்க மறுத்த உணவையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள். சுபி போதுமென்று எழுந்த போதும், தேவகி விடாது மீண்டும் அமர வைக்க, வாருணா தான் கேலியோடு சிரித்து, அனுபவி என்பது போலே பார்த்தாள்.

 

உடல்நிலை கவனித்துக்கொள்ளுமாறு வருணாவிடம் கூறிவிட்டு தேவகிடமும் விடைபெற, இருவருக்கும் நன்றி கூறி தங்கள் டிரைவரை அழைத்து அனுப்பி வைத்தார். அதிகம் பேசும் சுபியையும் அதிகம் பேசாதா மகிழையும் இருவரையும் பிடித்துவிட்டது.

 

வெளியே வாசலில் தொட்டிச்செடியில் இருக்கும் ரோஜா ஒன்றை மகிழ் ஆர்வமாய் பார்க்க, நேரமாகியதாக சுபி அவளை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். ஆனால் செல்லும் போதும் இருமுறை திரும்பித்திரும்பி பார்த்தவாறே சென்ற அவளை மேலே தன்னறை பால்கனியில் நின்று கைபேசியில் பேசிக்கொண்டிருந்த ரிஷிநந்தனும் பார்த்தான்.

 

Advertisement