Advertisement

நேசம் 18

ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து விட்டார்.

உள்துறை அமைச்சரிடம் பேசியவர் தன் மகனுக்குப் பணி இட மாற்றம் வேண்டுமென்று கேட்க, தயங்காது சரியென்றார். பரமேஸ்வரர் கேட்ட பின் மறுப்பேது?

ட்ரான்ஸ்பர் ஆடர் கையில் கிடைத்துமே அலுவலுக்கும், பணி இட மாற்றத்திற்கும் தரும் அவகாசமே வேண்டாமென்று அன்றைய இரவே கிளம்பி விட்டான் ப்ருத்வி.

அமுதா சமையலறைக்குள் வர அவர் பின்னே வந்த ஜோதி, “நீங்க போங்க அத்தே, நான் சமைக்கிறேன். உங்களுக்கு வேற மூட்டு வலி எவ்வளவு நேரம் தான் நிப்பீங்க?” என்றாள் பாசமாக.

“நேரமாச்சேம்மா, அவரு சாப்பட வரலை இளங்கோக்கிட்ட சாப்பாட்டைக் கொடுத்து விடச் சொன்னாரு, நீ எப்படி ஒத்தையில சமைப்பா, வழிய விடு நானும் ஒத்தாசை செய்யுறேன்”

“நீங்க ரெஸ்ட் எடுங்க, அரைமணி நேர வேலை மதினி இருக்காங்க நாங்க பார்த்துகிடுறோம். போங்க அத்தே” என்று அனுப்பி விட்டாள்.

கையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்த இலக்கியாவிடம் வந்தவள், “கூட வந்து ஒத்தாசை பண்ணுங்க உங்க அண்ணன் சாப்பாட்டுக்கு வந்திடுவாரு, நேரமாகுது” என்றாள்.

இந்த அரிசியைக் கழுவிக் கொடு, காய்கறியை நறுக்கிக் கொடு, சாம்பாரை கூட்டி வை, அப்பளத்தைப் போட்டு எடு என்று இலக்கியாவை வேலை ஏவி கொண்டிருக்க, சிறிது நேரத்திலே அவள் அத்தை தெய்வானை வர அனைத்தையும் விட்டு விட்டு சென்று விட்டாள்.

வேலைகள் அனைத்தையும் முடித்தவள் இளங்கோவிற்கும் சாப்பாடிட்டு, தந்தைக்கு சாப்பாடு கொடுத்தனுப்பி தெய்வானைக்கும் ஜோதிக்கும் பரிமாறி பின்னே தானும் உண்டாள். மீண்டும் பாத்திரத்தை கழுவி வைத்து, மாலை சிற்றுண்டி செய்து, வீடு வாசல் சுத்தபடுத்தினாள். பின் மீண்டும் இரவு உணவினை தயார் செய்தாள்.

அமுதா வரும் போதெல்லாம் ஜோதி பாசமாகப் பேசி விரட்டி விட்டாள். இலக்கியாவிற்கு இதுவொன்றும் பெரிதாகத் தெரியவில்லை, தன் வீடு தானே, தம்மவர்கள் தானே என்ற எண்ணம். குறையாகத் தெரியவில்லை ஆகையால் ப்ருத்வியிடமும் இது பற்றி சொல்லிக் கொள்ளவில்லை.

 

அவள் அமைதி ஜோதிக்கு சாதகமாக தினமும் வேலை ஏவிக் கொண்டு, அத்தையோடு அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு ஏழுமணி போல் ப்ருத்வி வந்தான் அன்றேனோ இலக்கியாவை காண அவன் விழிகளில் அத்தனை ஆவல். பத்து நிமிடம் ஹாரன் இசைத்துவிட்டும் அவள் வரமால் போகவே, வண்டியை நிறுத்தி அதில் அமர்ந்து கொண்டு அவள் எண்ணிற்கு அழைத்தான்.

வருவதாகக் கூறியவள் மேலும் பத்து நிமிடங்கள் ஆனது, இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தவள் அடுப்பை அணைத்துவிட்டு வந்தாள். தெருவே நிசப்தமாக இருந்தது, சிறுவர்கள் விளையாடி முடித்துப் பாடம் படிக்க அமர்ந்து விட்டனர். தெருவிளக்கொளியில் வெறிச்சோடி கிடைத்தது வீதி.

அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் மாலை சாமி கூம்பிட்டிருப்பாள் போலும் அரக்கு நிற புடவையில் நெற்றியில் குங்குமம் விபூதியோடு, காற்றிலாடும் கார்குழலில் பூச்சூடி இருந்தாள். பொன்சிற்பமாய் எதிரே நின்றவளை விழிவிலகாது பார்த்துக் கொண்டிருந்தான்.

“வேலை அதிகமா டையடா தெரியுறீங்க?” என்றாள்.

அவன் முகம் பார்த்தே அனைத்தும் புரிந்து கொள்வாள், அந்த அன்பில் தான் ப்ருத்வி கரைந்தான்.

ஆமென்பது போல் தலையாட்ட, “சாப்பிட்டுப் போய் தூங்குங்க” என்றாள்.

“தூங்கவா? ஒரு அக்யூஸ்ட்கிட்ட வாங்குமூலம் வாங்கணும் பாளையங்கோட்டை ஜி.ஹச் வரைக்கும் போக வேண்டியிருக்கு”

மாலை வரை கலக்டருடன் மீட்டிங், இரவு வேலை, தொடர் வேலைக்குமிடையில் தன்னைக் காண வந்துள்ளான் என்பதை உணர்ந்தவள், “இத்தனை வேலைக்கும் நடுவுல இந்த நேரம் இங்க வருணுமா?” என்றாள் அதட்டலாக.

“உன்ன பார்க்கணுமே” என்றான் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு.

“பார்த்தாச்சா…?” மென் சிரிப்புடன் கேட்க, “ம்ம்ம், நல்ல தரிசனம்” என்றான் ஆழமான மென்குரலில்.

அவன் குரலில் வித்தியாசத்தைக் கண்டு கொண்டவள், குனிந்து கால் முதல் கழுத்து வரை பார்த்தாள். வந்ததிலிருந்து அவள் முகம் தவிர்த்து அவன் விழி அகலவில்லை. அவள் செயலில் முன் பற்களைக் கடித்துக் கொண்டு கொட்ட வர, பின்னே விலகினாள் இலக்கியா. எட்டிப்பிடித்துக் கொண்டவன் முகத்தருகே இழுத்து நெற்றியோடு நெற்றி முட்டினான்.

“எப்பவும் ரௌடின்னு தான் நினைப்பியாடி?”

“ம்ம்ம், என் ரௌடி பேபி” சிணுங்கலுடன் உரைத்தவள் அவன் நெஞ்சில் கைவைத்து விலகினாள்.

அதே நேரம் இளங்கோவின் பைக் வந்து கொண்டிருக்க, சரியான நேரத்துக்கு வந்துட்டானா கரடி என நினைத்துக் கொண்டான் ப்ருத்வி.

இளங்கோவுடன் சிவஞானமும் வர, இருவருரையும் பார்த்தவர் இலக்கியாவை முறைத்தார்.

 

“இலக்கியா உள்ள போ” இளங்கோ அதட்ட, அவள் கையைப் பிடித்த ப்ருத்வி, “சாய்ங்காலம் ஐயங்கார் ஹோட்டல்ல சாப்பிட்டேன். அப்படியே ஹல்வா வாங்கி வந்தேன்” என்று அவள் கையில் கொடுத்தனுப்பினான். தந்தையும் மகனும் கனலேற பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

ஐயங்கார் ஹோட்டல் ஹல்வா என்றால் அத்தனை தித்திப்பு, இலக்கியாவும் செண்பாவும் துளி கூட மீதம் வைக்க மாட்டார்கள்.

“இங்கன நீ என்னலே பண்ற?” முறைப்புடனே சிவஞானம் கேட்க,

“பேசிக்கிட்டு….இருக்கே மாமா….” என இழுத்து சிரிப்புடன் கூறினான்.

“இப்படி வீதியில நின்னு எம்மகக் கிட்ட பேசுற வேலையெல்லாம் வேண்டாலே”

“சரிங்க மாமா நாளையில இருந்து காம்பௌண்டு எகுறி குதிச்சி…ச்சே..ச்சே காம்பௌண்ட் உள்ளே வந்தே பேசிக்கிடுறேன்”

“உன்னால எங்களுக்குத் தானலே அவமானம்? தெருவுல பார்க்குறவுங்க என்ன நினைச்சிப்பாங்க?”

“அன்பான கணவன் மனைவின்னு நினைச்சிப்பாங்க, அது தான் ஆல்ரெடி ஊருக்கே தெரியுமே!”

“என்னலே எகத்தாளமா?”

“ச்சே…ச்சே…இல்லையே! என்ன மச்சான் சரியா தானே பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று அமைதியாக நின்று கொண்டிருந்த இளங்கோவை இழுத்தான்.

தந்தையை அழைத்தவன் முணுமுணுப்புடனே, “இவங்கிட்டயெல்லாம் மனுஷன் பேச முடியுமா? நீங்க வாங்கப்பா” என்றான்.

“இவ்வளவு நேரம் நீ பேசிக்கிட்டு இருந்தியே மச்சான்!” சிரிப்புடனே கேட்டான் ப்ருத்வி.

இளங்கோ பைக்கை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல, சிவஞானமும் பின்னே சென்றார்.

“மாமா ஒரு நிமிஷம்” என்ற அழைப்புடன் முன் வந்து நின்றவன், “அவ்வளவு சங்கட்டமா இருந்தா மாப்பிள்ளைன்னு சொல்லி வீட்டுக்குள்ள கூட்டிக்கோங்க, நீங்களே என் அப்பாக்கிட்ட பேசி நல்ல நாள் பார்த்து இலக்கியாவை அனுப்பி வைங்க” என்றான்.

நடக்கயியலாத ஒன்று என்று மனதில் நினைத்துக் கொண்டவர், “என்ன நடந்தாலும் சரி, எம்பொண்ணை வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டேன்லே” என்றவர் முறைப்புடனே உள்ளே சென்று விட, ப்ருத்வி நீண்ட பெருமூச்சை விட்டான்.

அன்று காலையிலிருந்து வீடே பரபரப்பாக இருந்தது.

“அந்தத் தேங்காய், மஞ்சளை எடுத்து வைச்சிட்டியா ஜோதி?” பூஜை அறையிலிருந்து அன்னையின் குரல் கேட்க, “இதோ வரேன் அத்தை” அறையிலிருந்து குரல் கொடுத்தாள் ஜோதி. வீடெங்கும் எதிரொலித்தது.

அப்பப்பா…காதே இரையுது என்ன சௌன்ட்! நினைத்துக் கொண்ட இலக்கியா அமைதியாக அமர்ந்திருந்தாள். பூஜை அறையிலிருந்து வந்த அமுதா வழக்கத்திற்கு மாறாய் மெல்லிய ஜரிகையிட்ட பட்டுடுத்தி தலையில் சிறிது பூச்சூடியிருந்தார்.

இளங்கோவும் போனில் பேசியவாறு அங்குமிங்கும் நடமாட, பஞ்சுமிட்டாய் வண்ண பட்டுடுத்தி தாய் வீட்டில் கொடுத்தனுப்பிய நகையனைத்தையும் போட முயற்சித்து பாதியை மட்டுமே கழுத்து நிறை மாட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் ஜெகஜோதியும்.

‘என்ன நாள்?’ எண்ணி எண்ணி பார்த்தும் அப்படியொன்றும் கொண்டாட்ட நாளாகத் தோன்றவில்லை இலக்கியாவிற்கு. இலக்கியாவின் பிறந்தநாள் தவிர மற்றவர்களின் பிறந்த நாள், திருமணநாள் போன்ற வைபமும் அவர்கள் வீட்டில் கொண்டாடுவதில்லை.

ஹாலில் அமர்ந்து கையில் மொபைலுடன் அவர்கள் பரபரப்பை வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் இலக்கியா. யாரும் அவளைக் கண்டு கொள்வதாயில்லை.

ஜோதியின் வீட்டில் எதுவும் கொண்டாட்டமாக இருக்குமோ? அப்படி எதுவும் அழைப்பு வந்தது போலும் தெரியவில்லையே என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு குழம்பி அமர்ந்திருந்தாள் இலக்கியா.

“அம்மா கோவிலுக்குப் போறீங்களா?” தன்னைக் கடந்து சென்ற அன்னையிடம் கேட்டே விட்டாள்.

“இல்லடி, மாவு இருக்கு தோசை ஊத்திக்கோ, மதியத்துக்குச் சாப்பாடு வேணா சின்னக் குக்கர்ல வைச்சிக்கோ. எங்களுக்கு எதுவும் வேண்டாம் ராத்திற்குத் தான் வருவோம், வந்து பார்த்துக்கிடுறேன். சமைச்சி வைச்சி வீணாக்கிடாதடி” என கையில் உள்ள பையை ஆராய்ந்தவாறே கூறியவர் அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார்.

மூவரும் கிளம்ப வாசலிலே இலக்கியா நின்றிருந்தாள். அவள் அருகே வந்து வீட்டுச்சாவியை அவளிடம் நீட்டிய ஜோதி, “கதவை உள்ளார பூட்டிபிங்களாம் இல்ல கண்ட நாயும் உள்ள வர பார்க்கும்னு மாமா சொன்னாரு!” என்றாள் இழுவையாக.

யார என்ன வார்த்தை சொல்லுறா! ஒரு அறைவிட்டுடலாமா என்று எண்ணத்தில் இலக்கியா முறைக்க, அமுதாவின் அழைப்பில் அவள் சென்றுவிட்டாள்.

பூஜையறை தாண்டி சென்று கொண்டிருந்த இலக்கியா, சாமி படத்திற்கு முன் வைத்திருந்த மஞ்சள் தடவிய அழைப்பிதழ் காற்றிலாடி அவள் கவனத்தை ஈர்க்க உள்ளே சென்று எடுத்துப்பார்த்தாள்.

 

அவர்கள் புதிய மில்லுக்கான திறப்புவிழா அழைப்பிதல்! அதைப் பார்த்ததும் நெஞ்சோரம் சிறு வலி பரவி படர்ந்தது.

தன்னை அழைக்கவில்லை, ஏன் ஒரு அறிவிப்பாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தன் வீட்டில் ஒரு விசேஷம் தான் அறியவில்லை! அவர்கள் இன்பத்தில் எனக்கு பங்கில்லை, என்னை ஒதுக்கிறார்கள். கட்டுமானம் தொடங்கும் முன் என் கைகளால் தானே பூமி பூஜையிட்டேன், தற்போது என்னை ஒதுக்கிறார்கள். அதிஷ்டமில்லாதவள் என்று நினைத்து விட்டார்காளோ! ஒதுக்கிவிட்டார்கள் என் வீட்டில் என்னை அந்நியமாக்கி விட்டார்கள்!

நேற்று வந்தளுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட எனக்கு இங்கில்லை. இலக்கியாவின் உள்ளம் உண்மையை ஏற்க மறுத்து தாங்காது தகித்தது. நேராகச் சென்று கட்டிலில் கண்ணீரோடு விழுந்தவள் தான் திறப்புவிழா முடிந்து அவர்கள் வந்த பின்னும் எழவில்லை.

வலி! நெஞ்சை பிழியும் வலி தான். சொந்த நாட்டில் அகதியானது போல் சொந்த வீட்டில் அந்நியனாய்!

அன்று காலையிலிருந்து ப்ருத்விக்குச் சற்று அதிகபடியான வேலையும் அலைச்சலும். சோர்வுடனே இரவு எட்டு மணி போல் வந்தவன் விடாது ஹாரன் இசைத்துக் கொண்டிருந்தான். அலைபேசி அழைப்புகளையும் அவள் ஏற்காது போக, வீதிலிருந்து காம்பௌண்ட் தாண்டி உள்ளே வந்து தலைவாசலில் நின்று அவள் பெயர் கூறி அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஏன்லே தெருவுக்கே கேட்குறாப்புல கத்திக்கிட்டு கிடக்க அவ தூங்கி இருப்பாலே” என்று வாசலில் வந்து இளங்கோ கத்த, அவன் பின்னே வீட்டாள்கள் அனைவரும் வந்து விட்டனர்.

அவன் பதிலில் ப்ருத்விக்கு துளியும் நம்பிக்கை இல்லாது போக, இலக்கியாவின் அறை ஜன்னலை பார்த்தவன் குனிந்து ஒரு கல்லை எடுத்து எறிய சில நொடியில் இலக்கியா ஓடி வந்தாள்.

அந்த சில நிமிட தவிப்பு அவனே அறிவான். அவளைக் கண்ட நொடி கைகளுக்குள் அணைத்துக் கொண்டவன், அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான். கண்ணீர் வற்றிய கண்கள் சிவந்திருக்க, கண்ணீர் கரை படிந்த கன்னங்கள் வீங்கி இருந்தது.

பெரியவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, இளங்கோ முறைத்துக் கொண்டிருக்க இலக்கியா விலகினாள்.

“அழுதியா?” ப்ருத்வி அதட்டிக்கேட்க மீண்டும் அழுகையுடனே ஆமென்று தலையாட்டினாள்.

“என்னாச்சுடா?”

“இன்னைக்கு ரைஸ்மில் திறப்புவிழாவாம், எங்கிட்ட யாருமே ஒரு வார்த்தைக்குக் கூடச் சொல்லலை, எனக்கு தெரியவே தெரியாதுங்க. அந்தளவுக்கு வேண்டாதவளாகிட்டேனோ?” அழுகையுடனே கேட்க, அனைவருக்கும் மனதில் சுருக்கென்று குத்தியது. அழைக்கவில்லை தான் ஆனால் அவளுக்கு அறிவிக்கவில்லை என்பது குற்றவுணர்வை தந்தது.

“அவ்வளவு தானா! இரண்டே மாசத்துல நாம புது மில்லு கட்டி உன் கையாலையே திறந்திடலாம் என்ன?” என ஆறுத்தலுரைத்தான்.

இலக்கியாவின் உள்ளம் வெகுவாக வேதனை கொண்டிருக்க, அவளை அழைத்துச் சென்று வெளி வாசல் படியில் அமர்ந்தான்.

கருமை பூசிய வானில் நட்சத்திரங்கள் துள்ளிக் குதிக்க, தென்றல் வீசும் இரவில், நிசப்தாமான வீதியில் இருவர் மட்டுமே வாசலில் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க, அவன் கால் அருகே வந்து படுத்துக் கொண்டது சீசர்.

உள்ளே வந்த இளங்கோ, “நீயாவது அவ கிட்ட ஒரு வார்த்தைக்கு சொல்லி இருக்காலமே?” என்றான் எதார்த்தமாக.

“ஏன் உங்க தங்கச்சிக்கு கண்ணில்லையா? இல்லை காது தான் கேட்காதா? வீட்டுல என்ன நடக்குன்னு கவனிக்கணும். இருபத்திநாலு மணிநேரமும் போனுலையே கொஞ்சிக்கிட்டு இருந்தா நான் பலியா? சித்ரவேல் மகள் என்ன உங்க தங்கச்சிக்கு வேலக்காரியா?” என படபடப் பட்டாசாக பொரிந்து விட்டுச் சென்றாள் ஜோதி.

அவள் செல்லவே ‘அவள் குணமறிந்தும் கேட்பியா?’ தன்னை தானே கொட்டிக் கொண்டான் இளங்கோ.

நாள்முழுவதும் இலக்கியா மட்டும் ஆறாம் விரலாய் அலைபேசியுடன் சுற்ற, அவளை விட உயர் ரக அலைபேசி வைத்திருந்து என்ன பயன் இளங்கோவிடமிருந்து ஒரு அழைப்பு கூட வருவதில்லை ஜோதிக்கு.

 

Advertisement