Advertisement

                              

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 8

நாட்கள் காற்றில் சருகைப்போல் பறந்திருக்க..… அந்த வருடம் முடிந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கும் விதமாய் புத்தாண்டும் பிறந்தது… அதனையொட்டி தமிழர் தம் வாழ்வுதனை சிறந்தோங்கச் செய்யும் உழவுத் தொழிலை சிறப்பிக்க பொங்கலுக்கும் ஒரு வார காலம் இருந்தது…

“ அத்து என்னடா ஏதோ தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்க “ என்றவாறு கேன்டீனில் அமர்ந்திருந்த அத்துவின் அருகில் வந்தமர்ந்தான் கதிர்…

“ ஒண்ணுமில்லடா… ஒரு கணக்கு தப்பா இருந்துச்சு எவ்வளவு முயற்சி பண்ணியும் டேலி ஆகல.. அத பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்…”  என்றவனை என்ன செய்தால் தகும் என பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்..

பின்னே யாருக்கும் என்றைக்கும் விடுப்பு அளிக்காத தங்கள் நிறுவனம் அதிசயமாய் ஒரு வாரம் அளித்திருக்கிறது.. அந்த பொன்னான நேரங்களை எப்படி செலவிடலாம் என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தால் இவன் அக்கவுண்ட்ஸை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறான்..

கதிரின் பார்வையை உணர்ந்தவன், “ உடனே பொங்காதடா…. லீவுல போறோமே முடிச்சு வெச்சுட்டு போனா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தான்… ”

ஆஹான்.. என்ற விதமே குரலில் இருந்த பாவமே கதிர் தன்னை நம்பவில்லை என பறைசாற்றியது… அவன் மேலும் தனக்கு உபதேசம் அளிக்கும் முன் பேச்சை மாற்றும் விதமாக…

“ ச‌‌ரி அத விடு… நீ என்ன பிளான் பண்ணி இருக்க… ஒரு வாரம் இருக்கே.. நிலா வீட்டுக்கா ?? இல்ல.. ” என்றவனை குறுக்கிட்டு..

“ ப்ச்.. இல்லடா.. எந்த பிளானும் இல்ல… நிலா வீட்டுக்கும் போக முடியாது.. அவங்க சொந்தக்காரங்க வராங்களாம்.. அவங்க அப்பா அம்மா ஏத்துக்கிட்டு இருந்தாலும் வர்றவங்க வாய் சும்மா இருக்காதுன்னு நிலா வேண்டாம்னு சொல்லிட்டா..

இந்த மாதிரி பண்டிகை எல்லாம் இத்தனை வருஷமா ஒன்னா சேர்ந்து கொண்டாடிட்டு இப்ப யாருமே இல்லாம தனியா இருக்கிறது ஒரு மாதிரி இருக்குடா.. ” என வருந்திய நண்பனைக் கண்டு இவனுக்கும் வருத்தம் தான்.

திடீரென ஒரு யோசனை‌ தோன்ற, “ ஹேய் கதிர்.. நாம எல்லாரும் தாத்தா ஊருக்கு போலாமா ?? அது கிராமம் தானே !! அங்கு இன்னும் நல்லா கொண்டாடுவாங்க என்ன சொல்ற ?? ” என்றான் குதூகலமாக

கதிருக்கும் இந்த யோசனை சரியெனத் தோன்றியது.. நிச்சயம் நிலாவும் அதை விரும்புவாள் என்று எண்ணியவன் ஒப்புக்கொண்டான்.

ஜெயாவிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. சென்றமுறை போய் வந்ததையே இன்னும் சொல்லவில்லை.. அதற்காக பொய் சொல்லவும் மனம் வரவில்லை.. சிந்தனையில் இருந்தவனை கதிரின் அழைப்பு மீட்டது..

“ என்னடா.. வீட்ல அம்மாட்ட என்ன சொல்றதுன்னா ?? ” சற்றே வியப்புடன் அவனை பார்த்தவன் “ ம்ம்ம் ” என்றான்..

“ அவங்ககிட்ட உண்மையை சொல்லிட்டு போனா என்ன ?? ”

“ அம்மா நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க.. அவங்க வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் கிளம்பி போய் அவங்களை கஷ்டப்படுத்த மனசு இல்ல ”

“ ஆமா ஏன் இன்னும் நீ தாத்தாவை பத்தி அவங்க கிட்ட பேசாம இருக்க ?? ” என்ற கதிருக்கு அத்துவை புரிந்துகொள்ள முடியவில்லை.. ஊருக்கு போய் வந்து மாதங்கள் ஆகிறது… இன்னும் எதற்காக தயங்குகிறான் ??

“ கதிர் என்ன நடந்துச்சுன்னு தாத்தாகிட்ட கேட்டதுக்கு அப்புறம் தான் இவங்க கிட்ட வரணும்… நான் போன தடவை போனப்ப பழச பத்தி பேசி தாத்தாவை வருத்தப்பட வைக்க வேணாம்னு எதுவும் கேட்கல… இந்த தடவை தான் கேட்கணும்.. ”

“ அப்போ அம்மா கிட்ட என்ன சொல்லப்போற ?? ”

“ அதான் தெரியல.. ” என்றவாறு சோர்வுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்..

“ நான் வேணா அம்மா கிட்ட பேசட்டா.. ”

“ என்னனு ”

“ அதெல்லாம் உனக்கு எதுக்கு ?? எப்போ கிளம்புறோம்ன்னு சொல்லு நிலாவை லீவு போட சொல்லணும்.. பேக்கிங் இருக்கு.. ”

“ இன்னிக்கே கிளம்பலாமா.. நைட் முழுக்க ட்ராவெல்ல போயிடும்.. இல்லைனா நாளைக்கு அப்புறம் ஆறு நாள் தான் இருக்கும்.. அந்த ஊரை சுத்தி பார்க்கவே நமக்கு நேரம் இருக்காது.. எனக்கும் தாத்தா கூட கொஞ்ச நாள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது ” என்றவனின் முகம் தாத்தாவை நினைத்ததும் இளகியது.

“ சரி நான் நிலாகிட்ட பேசுறேன். ஈவ்னிங் கிளம்பும் போது உன் கூடவே வந்து உங்க அம்மாகிட்ட பேசிக்கிறேன் ” என எழுந்து அவனது பிரிவிற்குச் சென்றான்.

இரவு நிலாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு கதிர் வந்து சேர.. மிதுனும் அதுலும் அங்கு காத்திருந்தனர்…

“ சாரி நண்பா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. ” என கதிர் மன்னிப்பு கோற..

“ கதிரு.. ஒரு மணி நேரம் உனக்கு கொஞ்சமாடா.. நான் கிளம்புறேன் கிளம்புறேன்னு ஒத்த கால்ல நின்ன டிரைவர் அண்ணாவை காலில் விழுகாத குறையா பிடிச்சு வெச்சிருக்கான் மிதுன்.. ”

கதிர் ஏதோ சொல்ல வரும் முன்,

“ என்ன மாம்ஸ் லேட் ஆனதுக்கு இவ தானே காரணம்.. இவ மேக்கப் போட்டுட்டு இருந்திருப்பா நீங்க பேக்கப் பண்ணிட்டு வந்திருப்பீங்க.. இப்போவே முகத்துல மூணு கோட்டிங் இதுக்கும் போல ” என நிலாவை பார்த்துக்கொண்டே கதிரின் காதில் கிசுகிசுத்தான்..

“ ஆமா டா.. உங்க அக்கா கூட இருந்து பாத்த மாதிரியே சொல்லறே.. ஆனா ஒன்னு மட்டும் தப்பு கோட்டிங் மூணு இல்லடா நாலு ” என பதிலுக்கு கிசுகிசுத்து   கதிரும் சிரித்துவிட..

கதிரை முறைத்துக்கொண்டே மிதுன் முதுகில் ஒன்று வைத்தவள்,

“ என்ன பத்தி தான் ஏதோ சொன்ன !! என்னன்னு சொல்லு ”

” ஹே அதெல்லாம் உங்கிட்ட சொல்றதா இல்லை ” என்று கூறிய மிதுன்

” மாம்ஸ்.. கேட்க மறந்துட்டேன் ஈவினிங் வீட்டுக்கு வந்தப்போ எங்க அம்மா கிட்ட என்ன சொன்னீங்க ?? வாசல் வரை வந்து சிரிச்ச முகமா எங்களை வழியனுப்புனாங்களே ” என கதிரிடம் வினவ.. அதுலும் அதை தெரிந்துகொள்ள நண்பனை பார்த்திருந்தான்.

” நீங்களும் அங்கிளும் நல்லா இருக்கணும்.. குடும்பம் ஒத்துமையா இருக்கனும்னு உங்க பசங்க எதோ வேண்டிருக்காங்க.. இப்போதான் லீவு கிடைச்சிருக்கு அதுதான் நான் நிலா எல்லாரும் சேர்ந்து வேண்டுதலை நிறைவேத்த ஒண்ணா போறோம்..

அதுலும் மிதுனும் உங்க கிட்ட வெளிய போகணும் எங்கேன்னு போய்ட்டு வந்து சொல்லுறோம்ன்னு சொன்னா.. நீங்க எங்க போறிங்கனு மட்டும் அவங்க கிட்ட கேட்டுராதீங்க.. அப்பறம் வேண்டுதல் வீணா போயிரும்.. நேரம் வரும்போது அவங்களே சொல்லுவாங்க ஆன்ட்டினு சொன்னேன் ” என்றான் கதிர் கூலாக..

” மாம்ஸ் அப்போ பொய் சொன்னீங்களா  ” என்ற மிதுனிடம்

” நான் எங்கடா பொய் சொன்னேன்.. உங்க அண்ணனுக்கு தான் பொய் சொல்லக்கூடாதே அதுதான் நான் உண்மையை வேற மாறி சொன்னேன் ” என்றான் கதிர் இப்போது அதுலை பார்த்து புன்னகையுடன்.

அவனுக்கும் நண்பனின் செயலில் நிம்மதியே.. அன்னையிடம் மறைத்துவிட்டோம் எங்கின்ற குற்றவுணர்ச்சி இப்போது குறைந்திருந்தது.. எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு பின் ஜெயாவிடம் கூறிவிடும் எண்ணத்தில் இருந்தான்.  

அதற்குள்.. யேப்பா இப்போவாவது உள்ள வரலாம்னு உத்தேசம் இருக்கா இல்லையா ?? இல்லைனா கொஞ்சம் விலகி நில்லுங்க வண்டி கிளம்ப வசதியா இருக்கும் என நடத்துனர் குரல் கொடுக்க தற்காலிகமாக தங்களது மாநாட்டை கலைத்து பேருந்தில் ஏறினர்.

அதிகாலை வேளையில் கோவையை அடைந்தவர்கள் அங்கிருந்து வேல்முருகன் ட்ராவல்ஸ் துணைகொண்டு பொள்ளாச்சியை வந்தடைந்தனர்.. அத்துவினுடைய அன்றைய தோழனான பாரி.. அதுதான் சிற்றுந்து.. அவனுக்காக காத்திருந்தது. ஏர் இந்தியா, கிங்பிஷர் போல் அவ்வூரில் பாரி… தாத்தாவை காணப்போகும் ஆவலில் தாவி ஏறினான்.

ஒரு ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு சரளைப்பதி அவர்களை அன்புடன் வரவேற்றது.. சிற்றுந்திலிருந்து இறங்கியதும் சில்லென்ற மழைக் காற்று இதமாக வருடி சிலிர்க்க செய்தது.. மார்கழி மாதத்திற்கே உரித்தான பனி பொழிந்து சாலைகளையும் மரங்களையும் போர்த்தி இருந்தது..

ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்து தன் கண்களின் வாயிலாக இதயத்தில் அதன் அழகை நிரப்பிக் கொண்டவன்,

“ இன்னும் ஐந்து கிலோமீட்டர் நடக்கணும் ஓகே தானே ” என கேட்க..

“ டபுள் ஓகே ” என்றவாறு என்று கண்முன்னே விரிந்து கிடந்த வயல்வெளிகளையும் சாலையோரமாய் கம்பீரமாய் நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாய் நின்றிருந்த மரங்களையும்.. அவற்றை ஆசையோடு தழுவிச் சென்ற வாடை காற்றையும்.. ஆதவனுக்கு முன் நாங்கள் விழி திறந்து விட்டோம் என வெற்றி ஆரவாரத்தில் கீச்.. கீச்.. என வெற்றி முழக்கமிட்டு இரை தேட புறப்பட்ட பறவைகளையும் ரசித்தவாறு நடக்கத் தொடங்கினர்..

மிதுனுக்கு ஜாக்பாட் தான்.. பேருந்தில் இருந்து இறங்கியவுடனே தனது கேமராவை கையில் எடுத்தவன்.. அதை உள்ளே வைக்க மனம் ஒப்பவில்லை.. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறி தான் போனான் அந்த சிறுவன்..

நிலா தான் சற்று திணறிவிட்டாள்.. மார்கழி மாத பனிப்பொழிவிற்கு எப்போதும் கரம் கொடுக்காதவள் இன்று வசமாய் மாட்டிக் கொண்டாள். பற்கள் கசடதபற என அச்சடிக்க கதிருக்கு தான் வருத்தமாகிவிட்டது..

நல்லவேளையாக போர்வை எடுத்து வைத்திருந்தனர்.. அவள் படும் அவதி  பொறுக்காது போர்வையை எடுத்து போர்த்திவிட்டு தன்னோடு அணைத்தபடி நடந்தான் கதிர்.  

தன்னுடன் வந்த தம்பி, நண்பன், தங்கை ஒருவரும் அத்துவின் கவனத்தில் இல்லை.. கருத்தில் பதியவும் இல்லை.. கண்ணுக்கு முன்னால் இருந்து அவனை புன்னகையுடன் வரவேற்ற இயற்கை அன்னை மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தாள்.. கருத்தில் பதிந்தாள்.. இத்தனை நாள் அவனிடத்தில் இல்லாத ஒரு நிறைவு இப்பொழுது ஏற்பட்டது..

குளிர் அதிகமாக இருந்ததால் சற்றே வேக எட்டுக்களை போட்டபடி ஊருக்குள் வந்திருந்தனர்… அன்று இருந்த வயல்கள் எல்லாம் அப்படியே ஆனால் அறுவடை செய்யப்பட்டு நெற்போர்கள் குவிக்கப்பட்டிருந்தன..

மாறல.. எதுவுமே மாறல.. மனதிற்குள் சொல்லிக் கொண்டான் அத்து.. தெருக்களில் ஆங்காங்கே ஆள் நடமாட்டம் தெரிந்தது.. அத்துவை அடையாளம் தெரிந்தவர்கள் சிறு புன்னகையோடு அவனிடம் சில வார்த்தை பேசி விசாரித்து விட்டே சென்றனர்..

தாத்தாவின் கோட்டையை அடைந்துவிட்டனர்..

முதன் முதலில் அத்து இங்கு வந்தபோது அவன் பார்த்தது போலவே மற்ற மூவரும் மதில்சுவர் கண்டு வியந்தனர்.. வாயிற் கதவை திறந்து உள்ளே செல்ல.. அத்து மட்டும் நின்று விட்டான்..

“ என்ன இன்னிக்கு கோலம் போடல ” என தாடையைத் தடவியபடி நின்றவன்

“ அண்ணா சீக்கிரம் வா எனக்கு இப்போவே தாத்தாவை பார்க்கணும் ” என மிதுன் அழைக்க உள்ளே சென்றான்..

“ ஹே மிதுன் நீங்க எல்லாரும் இங்கயே இருங்க.. முதல்ல நான் மட்டும் போறேன் தாத்தாவுக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம் ” என அத்து கூற அனைவரும் முற்றத்தில் அமர அவன் மட்டும் உள்ளே சென்றான்..

தாத்தா.. தாத்தா.. என குதூகலமாய் உள்ளே சென்றவன் முனகல் சத்தம் கேட்டு நின்றான்.. பின் தாத்தாவின் அறையில் இருந்து வருவது கண்டு ஓடிச்செல்ல.. தாத்தா படுத்திருந்த கோலம் கண்டு மனம் முழுக்க வேதனை பரவியது..

உடல் முழுவதும் அனலாய் கொதிக்க உதடுகள் உலர்ந்து கண்களை பிரிக்க முடியாமல் அனத்திக் கொண்டிருந்தார்..

ஒரு நிமிடம் நின்றவன் பிறகு வாசலுக்கு விரைந்து ஓடி வர… பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள் மீது மோதி நின்றான்..

சா.. சாரி.. என சுதாரித்தவன் விழச்சென்ற அவளையும் பிடித்து நிறுத்தினாள்..

ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவனைக் கண்டு வியந்து விரிந்தன அவளது கயல் விழிகள்..

“ சாரி.. பார்க்காம வந்துட்டேன்.. அது தாத்தாவுக்கு காய்ச்சல்.. அவர்.. ” என மேலும் சொல்வதை கேட்பதற்கு அவள் அங்கு நிற்கவில்லை.. வேகமாக தாத்தாவின் அறையை அடைந்தவள்.. அவருக்கு தான் கொண்டுவந்த மருந்தினை அளிக்க முயன்றாள்.. அவனும் பின்தொடர்ந்தான்.

அவரை எழுப்ப முயல்வது கண்டு, “ நா.. நான் பண்றேன் ” என அவரை எழுப்பி கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர வைத்தான் அத்து. அவருக்கு மருந்தை அளித்தவள் பின்பு சமையல் கட்டினுள் சென்று மடமடவென காபியை தயாரித்து கொண்டிருந்தாள்.

தாத்தாவை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவன் அவளைத் தேடி சமையல் கட்டிற்குள் நுழைந்தான்.. இவனைப் பார்த்ததும் மீண்டும் அவள் முறைக்க..

என்ன இந்த பொண்ணு இப்படி முறைக்குது !! என எண்ணியவன் வெளிக்காட்டாமல், “ என்ன தாத்தாவுக்கு திடீர் காய்ச்சல் ” என கேட்க..

“ என் கிட்ட சொல்லல.. ” என்றதும் இவன் யோசனையில் புருவம் சுருக்க..

“ இல்ல காய்ச்சல் என் கிட்ட சொல்லிட்டு வரல.. ” என்றதும் மென்முறுவல் அவன் இதழ்களில்..

ஓஹ்.. என்றவன், “ வந்தவங்களை வாங்கனு கூட கூப்பிட மாட்டியா ” என்றான் அவள் தன்னை கண்டுகொள்ளாதது சிறு வருத்தம்..

“ போனப்போ சொல்லிட்டா போனீங்க… இப்ப வந்ததும் வாங்கன்னு கூப்பிட ” சிறு கோவம் எட்டிப் பார்த்திருந்தது அவளது குரலில்..

“ என்ன ” என்றவனுக்கு அவள் கூறியது புரியும் போது அவள் அங்கு இருக்கவில்லை..

வரவேற்பரயை கடப்பது கண்டு, “ ஒய்… ஒரு நிமிஷம் நான் சொல்லிட்டு போக தான் வந்தேன்.. ஆனா நீ தான் என்கிட்ட சொல்லாம எங்கயோ போயிட்ட.. ”    

அவனது அழைப்பில் நின்றவள்.. இவன் பதில் கேட்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினாள்..

அத்து தோள்களைக் குலுக்கிக் கொண்டு தனது காபியைத் தேட.. அது அங்கு இருந்தால்தானே !!

“ அடிப்பாவி.. என்னை மட்டும் விட்டுட்டா.. சொல்லிட்டு போகாதது ஒரு குத்தமா !! அத்து.. இந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் ” என்றவாறு அவனுக்கான காபியை கலக்கினான்.

அவளும் முற்றத்தில் அமர்ந்திருந்த கதிர், நிலா, மிதுனிற்கு காபி கொடுத்துவிட்டு உணவு தயாரிக்க கிளம்பினாள்.

என்ன சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டு போனவனை இன்னும் காணோம் என்றபடி மூவரும் முற்றத்தில் அமர்ந்திருக்க.. சிறிது நேரத்தில் வந்த அத்து தாத்தாவிற்கு காய்ச்சல் என்று தெரிவிக்க..

அடுத்த சிலநொடிகளில் மற்ற மூவரும் தாத்தாவின் அறை வாசலில்..

மிதுன் தான் சோகமே உருவாக தாத்தாவின் அருகில் நின்று அவரையே பார்த்திருந்தான்.. நான் யாருனு சொல்லுங்க பாப்போம் !! நான் உங்க இன்னோரு பேரன் தாத்தா.. என்றெல்லாம் அத்துவை போலவே இவனும் ஒத்திகை பார்த்து வந்திருந்தான்.. அவரிடம் என்ன பேசுவது எப்படி தன்னை அறிமுகம் செய்வதென்று.. அப்படி ஆசையாக தாத்தாவை பார்க்க வந்தால் அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருகிறாரே..

மிதுன் தாத்தாவிடம் பேச முயல.. அதுல் தான் தாத்தா சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் அதன் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறி அவனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து வந்தான்.  

அனைவரும் குளித்து முடித்து வரவேற்பறையில் அமர்ந்திருக்க காலை உணவை எடுத்துக் கொண்டு அவள் வந்தாள்.. அவளைத் தொடர்ந்து மாரியும் வர.. வேகமாக சென்று அவரிடம் உள்ளதை வாங்கிக்கொண்டு

“ ஐயா.. நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துட்டு வரணும்.. கூப்பிட்டிருந்தா வந்திருப்போமே ” என்று சங்கடத்துடன் வினவ..

“அதனாலென்ன தம்பி நீங்க பயணம் செஞ்சு அலுப்பா வந்திருப்பீங்க.. உங்களை எதுக்கு மேல சிரமப்படுத்தீட்டு ” என்றவர் மிதுனை ஆச்சர்யமாய் பார்க்க..

“ என்னோட தம்பி ” என அறிமுகம் செய்து விட்டு பின்பு கதிர் மற்றும் நிலாவை அறிமுகம் செய்து வைத்தான்..

“ ரவியை பார்த்தமாரியே இருக்காரு சின்னத்தம்பி.. பெரியய்யா சொன்ன மாதிரியே நீங்க வந்துட்டீங்க.. ஆனால் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் ” என்றவரை அதுல் வியப்புடன் நோக்க..

“ போன வாரமே நீங்க பொங்கலுக்கு வந்தாலும் வருவீங்கன்னு சொன்னார் தம்பி பெரியய்யா ” என்றார்..

“ தாத்தாவுக்கு எப்ப இருந்து உடம்பு முடியல.. இங்க ஹாஸ்பிடல் இருந்தா கூட்டிட்டு போய் காட்டி இருக்கலாமே ” என்றான் மிதுன்.. அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவரது உடல் நிலை இப்படி இருப்பதை.

“ நேத்து ராத்திரியில இருந்து தான் தம்பி.. மூணு வேலை கஷாயம் குடிச்சா சரி ஆகிடும்.. நீங்க வெசனப்படாதீங்க… ” என்றவர் சாப்பிட அழைத்துச் சென்றார்..

“ அம்மாடி நீ இருந்து பரிமாறு.. நான் நெல்லடிக்கறதுக்கு ஆள் கூட்டிப் போறேன் ”

“ சரிங் மாமா.. இங்க முடிஞ்சதும் நானும் வரேன் ” என்றாள்.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மாரி விடைபெற்றார்.. அனைவரும் சாப்பிட அமர்ந்த பின்.. “ ஒரு நிமிஷம் ” என்றவள் அனைவரையும் பார்த்துவிட்டு அதிலும் குறிப்பாக அத்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக பின்பக்கமா செல்ல.. அந்த பார்வை உணர்த்திய செய்தியை.. அதாவது என்னை பின்தொடர்ந்து வா என்பதை உணர்ந்து அவனும் பின்னோடு சென்றான்..

‘ இது என்ன ஹிப்னாடிசம் தெரிந்த பொண்ணா இருக்குமோ கண்ணை உருட்டி ஒரு பார்வை பார்த்ததும் நம்ம அண்ணன் பின்னாடியே போறான் ’ என மிதுன் அவர்கள் சென்ற திசையையே பார்த்திருக்க.. கதிரும் நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடை செய்து கொண்டனர்.

சலவைக் கல்லின் மீது ஏறி நின்று வாழையிலையை அறுத்து அவனிடம் தர.. அவன் அங்கிருந்த நீரை பயன்படுத்தி அதனை சுத்தப் படுத்தினான். அவள் ஒவ்வொன்றாய் எட்டி எட்டி பறிப்பதும் வீசிய தென்றலில் இளம் வாழை இலைகள் அசைவதும்.. அதற்குத் தகுந்தாற்போல் அவளது இளம் பச்சை தாவணியும் அசைந்தாட.. அது வாழையா !! இல்லை இவள் வாழையா !! என்று அத்துவையே யோசிக்க வைத்திருந்தது அக்காட்சி.  

வாழை இலையில் சூடாக வைக்கப்பட்ட நெய் மனம் மாறாத குதிரைவாலி பொங்கலும்.. கேழ்வரகு கூழும்.. திணை அல்வாவும் தேவாமிர்தமாய் இறங்கியது அவர்களுக்கு.. அந்த கொஞ்ச நேரத்திலேயே நிலா அவளுடன் ஒட்டிக் கொள்ள.. அவளும் அக்கா அக்கா என நிலாவுடன் நன்கு ஒட்டிக்கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டு எழுந்தவுடன் கஞ்சியை எடுத்துக்கொண்டு தாத்தாவின் அறை பக்கம் வந்தாள். அவளை தொடர்ந்து அத்துவும் வர..

“ மாமா எனக்காக காத்து இருப்பாங்க நான் போகட்டுமா ” என்றாள் அத்துவிடம்

அவர்களோடு வந்த மிதுன், ” நீங்க போங்க.. நானே தாத்தாவுக்கு கஞ்சி தரேன் ” என்று அவளிடம் இருந்து கஞ்சியை வாங்கிக்கொண்டான்..

அவளும் தலையசைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேற..

தாத்தாவிற்கு கஞ்சியை புகட்டிக் கொண்டே அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் மிதுன்..

காய்ச்சலினால் கண்கள் எரிய.. கண்களை திறக்க முடியாமல்.. முதுமையினால் காய்ச்சலோடு உடல் சோர்வும் சேர்ந்துகொள்ள யார் ஊட்டுகிறார்கள் என்று கூட அறியாமல் தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிறுவயதில் அவனைத் தூக்கி தோளில் சுமத்தி இப்படி அவர் ஊட்டியிருக்க வேண்டும்.. அதற்கெல்லாம் வாய்பளிக்காத கடவுள் இன்று வேறுவிதமாக வாய்ப்பளித்திருக்கிறார்.

மிதுனை தாத்தாவோடு தனிமையில் விட்டுவிட்டு அதுல் வெளியில் வர.. அவள் நின்றிருந்தாள்..

என்னவெண்டு அதுல் பார்க்க.. ” நா.. நான் போகட்டுமா ” என்றாள்.

மிதுன் அப்போதே போக சொல்லிவிட்டான் இருந்தும் அவள் அத்துவின் பதிலை எதிர்பார்த்து அவன் வாய்மொழிக்காக காத்திருக்கிறாள்.

அத்துவின் புருவங்கள் சுருங்கி விரிய அதரங்களில் புன்னகையுடன் அவன் சரியென தலையசைக்க.. கொலுசொலி இசைக்கத் தொடங்கியது.. ஓட்டமாக ஓடியிருந்தாள்..

மெல்ல கஞ்சி குடித்த உடன் பெரியவர் சற்று நேரம் ஓய்வெடுக்க.. அவரை படுக்க வைத்துவிட்டு பேரன்கள் இருவரும் வெளியே வந்தனர்.

கதிர் மட்டுமே முன்புறம் அமர்ந்திருக்க..

“ கதிர் .. நிலா எங்க ”

“ நிலா.. காலைல சாப்பாடு கொண்டு வந்துதே ஒரு பொண்ணு அவ கூட வயலுக்கு போய் இருக்கா.. எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியாம உட்கார்ந்து இருக்கேன் ” என சோம்பல் முறிக்க..

“ சாரிடா தாத்தாவை பத்தி யோசிச்சிட்டு இருந்ததுல உன்னை மறந்துட்டேன் ”

“ அதனால என்னடா இப்ப தாத்தாவால பேச முடியுதா ?? காய்ச்சல் குறைஞ்சிடுச்சா ”

“ கொஞ்சம் பரவாயில்லை மதியம் ஒருவேளை கஷாயம் குடிச்சா சரி ஆயிரும்.. சரி சரி நீ வா.. சும்மா அப்படி போய் ஊற சுத்தி பார்த்துட்டு வரலாம் ” என முன் நடந்த அவனை தடுத்த மிதுன்..

“ அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தாத்தா பக்கத்தில் இரு அத்து.. நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம் ” என்றான்..

அவர்களும் வெளியே சென்ற பின் ஒரு புத்தகத்தோடு கலந்திருந்தவனை க்கும்.. க்கும்.. தாத்தாவின் இருமல் கலைத்தது.. இப்போது காய்ச்சலின் வீரியம் குறைந்திருந்தது.. அவரும் மெல்ல கண் விழித்தார்..

“ தாத்தா இந்தாங்க தண்ணீ ” என அவரை எழுப்பி அமர வைத்தவன்..

“ உடம்பை பார்த்துக்கறது இல்லையா தாத்தா ” என்றான் கனிவாக..

சிறு புன்னகையுடன், “ உடம்புக்கு ஒண்ணுமில்லப்பா.. பனிக்காலம் இல்லையா அதான் படுக்கப் போட்ருச்சு ” என்றார்.  

“ சரி வாங்க கொஞ்ச நேரம் வெளியே உட்காரலாம் ” என கைப்பிடித்து அழைத்து வந்து பிரம்பு நாற்காலியில் அமர வைத்தான்..

“ நீ எப்ப வந்த ”

“ நான் காலையில தான் வந்தேன் தாத்தா.. மாரி ஐயாவும் அவரு வீட்டு பொண்ணும் வந்து சாப்பாடு கொடுத்தாங்க.. நான் இருக்கிறதால அவங்க நெல்லடிக்க போயிட்டாங்க ”

சரி என்றவர் மேலும் ஏதோ கேட்க வந்து தயங்கியது போல இருந்தது அத்துவிற்கு.. அவர் என்ன கேட்க வந்திருப்பார் என்பதை யூகித்தவனின் இதழ்களில் சிறு புன்னகை..

அவரை அதிகம் பேச வைக்காமல்.. அத்துவே அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.. வாயிற் கதவை திறக்கும் சத்தம் கேட்டு அத்து திரும்ப.. அங்கு மிதுனம் கதிரும்..

தாத்தாவும் பார்த்தார் ஆனால் சற்று தொலைவில் அவர்கள் வந்து கொண்டிருந்ததால் அவருக்குப் புலப்படவில்லை..

மிதுன் அருகே வர வர.. தன் மகனின் மறு பதிப்பாய் இருந்தவனை கண்டு விழிகள் விரிய வியப்புடன் அத்துவை பார்த்தார்..

விழி மூடி திறந்தவன், “ நான் சொன்ன மாதிரியே உங்க பாசக்கார பேரனை கொண்டுவந்து சேர்த்திட்டேன் ” என்றான்.. அதற்குள் தாத்தாவைப் பார்த்த மிதுனும் ஓடிவந்து அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவர் வாஞ்சையுடன் அவன் கேசம் கோத..

“ ஹாய் தாத்தா.. இப்போ உடம்பு எப்படி இருக்கு ?? என்ன தாத்தா நான் ஆசையா பார்க்க வந்தா நீங்க இப்படி பயப்படுத்துறீங்க.. ஆமாம் தாத்தா அது எப்படி என்னை மாதிரியே இருக்கீங்க.. எனக்கு கொஞ்சம் வெள்ளை முடி வந்து இந்த மாதிரி மீசை வெச்சா எப்படி இருப்பேனோ அப்படியே இருக்கீங்க.. ” என கேள்வியும் நானே பதிலும் நானே என்று பேசிக்கொண்டே போக..  

“ டேய் !! அவர் உன்ன மாதிரி இல்ல.. நீ தான் அவர மாதிரி இருக்கே ” என கதிர் அவனை குறுக்கிட்டு திருத்த..

“ ஏதோ ஒன்னு மாம்ஸ்.. அதுவா முக்கியம் அடியேன் சொன்ன கருத்து தான் முக்கியம் ” என்றவனை தலையில் தட்டியவன் அவரது காலில் விழுந்து வணங்கினான்.

“ நல்லாயிருப்பா ” என்றவர் அத்துவை பார்க்க..

“ தாத்தா இவன் என்னோட நண்பன் கதிர்.. அவனோட மனைவியும் எங்ககூட வந்து இருக்கா.. ஆனா இப்ப வயலுக்கு போய் இருக்கா ”

அதன் பிறகு மிதுனை அவருடன் இருக்க சொல்ல.. மிதுனை கண்டதும் தாத்தாவின் காய்ச்சல் பறந்தோடி விட்டது என்றுதான் கூறவேண்டும். அவரை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தான். அவரும் சலிக்காமல் அவன் சொல்வதுபோல் போஸ் குடுத்துக் கொண்டிருக்க.. அவர்களை பார்த்து சிரித்தபடியே கதிரும் அத்துவும் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு சென்றனர்.

“ என்ன கதிர் என்ன சொல்லுது இந்த ஊரு ”

“ மச்சான் எனக்கு நீ ஒரே ஒரு உதவி பண்ணனும் ”

புருவம் சுருக்கிவன் “ என்னடா ” என்றான்..

“ நம்ம ஆபிஸ்ல சொல்லிடு.. இனிமே கதிர் இந்தப் பக்கம் வரவே மாட்டான்.. சொந்த ஊரில் செட்டிலாகிட்டான்னு ”

“ ஏன்டா ”

“ நண்பா என்ன ஊராடா இது !! வாழ்ந்தா இப்படி ஒரு இடத்துல வாழணும்டா.. மலை, காடு, ஆறு, வயல்ன்னு இயற்கையோடு வாழற நிறைவான வாழ்க்கை.. என்னடா இல்லை இங்க ? எல்லாமே இருக்கு.. எனக்கு இந்த ஊரை விட்டு போகற எண்ணமே இல்லை ” என்ற நண்பனைக் கண்டு சிரித்தவன்..

“ எனக்கும் அதே எண்ணம் தாண்டா.. ஆனா நம்ம நினைக்கறது எல்லாம் நடக்கணுமே ” என்றான்.

அதுதான் நடக்கப் போகிறதென்று அறிந்து அவர்களை வரவேற்கும் விதமாய் அவர்கள் மேல் பூக்களைத் தூவியது அருகிலிருந்த சரக்கொன்றை மரம்.

“ ஆமாம் நிலா எங்கடா ? வரும் போது அவளையும் சேர்த்து கூட்டிட்டு வந்து இருக்கலாமே.. இந்த மாதிரி வெயில் எல்லாம் அவ தாங்குவாளாடா ”

“ நண்பா நிறுத்து.. நிறுத்து.. அவெல்லாம் கத்திரி வெய்யிலுள்ள கத்திரிக்கா பறிக்கற ஆளு.. இந்த வெயில் எல்லாம் உன் தங்கச்சியை ஒன்னும் பண்ணாது.. அப்புறம் அவ வயக்காட்டுப் பக்கம் போய் இருப்பா.. நாங்க மாந்தோப்பு கரும்பு தோட்டம்னு தெற்கு பக்கம் போயிட்டு வரோம்.. ”

சரி.. என்றவன் மேலும் சில நிமிடங்கள் கதிருடன் பேசிக் கொண்டிருந்தான்   நிலா அவர்களைத் தேடி வரும் வரை..

வியர்த்து வேர்வை வடிய வாடிய தளிர் போல் வந்தவளைக் கண்டவன் திரும்பி கதிரை முறைக்க.. அவனோ கவனமாக அத்துவை தவிர்த்து நிலாவிடம் சென்றான்.

‘ கத்திரி வெய்யிலுள்ள கத்திரிக்கா பறிப்பானு பார்த்தா இவ சுண்டக்கா மாறி வாடி வதங்கி வாறாளே ‘ என எண்ணியவன்

“ நிலா என்னதிது ”

“ பார்த்தா தெரியல.. உங்கள மாதிரி சாப்பிட்டு சும்மா உக்காந்திருக்காம வயக்காட்டுல வேகாத வெய்யில்ல நெல்லடிச்சேனாக்கும்.. ” என்றவளின் குரலில் தோற்றத்தில் இருந்த சோர்வு துளியும் கலந்து விடாமல் அத்தனை உற்சாகமாய் இருந்தது.

“ பார்த்துக்கோடா ” என அத்துவை திரும்பி பார்த்தான் கதிர்.. சிறு முறுவலுடன் தலையை இடவலமாக அசைத்தவன்..

“ நிலா.. உனக்கு எதுக்கு மா இந்த கஷ்டம்.. முன்ன பின்ன இதெல்லாம் செஞ்சு பழக்கமா என்ன ? ”

“ அண்ணா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அங்க எவ்ளோ ஜாலியா இருந்தது தெரியுமா.. அங்க இருந்தவங்க பாட்டு பாடிக்கிட்டே இருந்ததுல வேலை செஞ்ச அலுப்பே இல்ல.. எல்லாம் புதுசா இருந்துச்சு ” என மகிழ்ச்சியில் ஆர்பரித்தவளை..

“ சரிடா இப்போ சாப்பிடப் போகலாமா ” என அழைத்துச் சென்றான்.

அதற்குள் மிதுன் தாத்தாவிற்கு மதிய வேலை கஞ்சியும் கஷாயமும் அளித்து ஓய்வெடுக்க செய்திருந்தான்.. அவனுடன் இணைந்தவர்கள் மதிய உணவை முடிக்க.. அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்தவளிடம் வந்தான் அத்து..

அவன் அருகில் நின்றது அறியாமல் திரும்பியவள் சட்டென பயந்து பின்வாங்க..

“ சாரி சாரி ” என்றான் அவசரமாக.. அவன் தான் என்று நிம்மதிப் பெருமூச்சுடன்

“ பரவாயில்லை சொல்லுங்க.. ”

“ அது இனிமேல் நாங்களே இங்க சமைச்சிக்கிறோம்.. நீ அம்மா கிட்ட சொல்லிடு.. எங்களால எதுக்கு உங்களுக்கு சிரமம் ” என்றவனை அங்கிருந்த மேடையில் சாய்ந்து கையை கட்டிக்கொண்டு பார்த்தாள்..

அவள் பார்வையின் பொருளை உணர்ந்தவன் “ உங்களுக்கு சிரமம்னு நீ சொல்லி தெரியவேண்டியதில்லை சில விஷயங்கள் நாமலே புரிஞ்சுக்கணும்.. யாரும் புரிய வைக்கனும்னு அவசியமில்லை.. நாள் பூராவும் வேலை செய்துட்டு எங்களுக்கும் சமையல் செய்துட்டு கஷ்டம் இல்லையா அதான் ”

அவள் விழிகளில் சிறு வியப்பு இவனது பதில் கண்டு..  

“ நீ என்ன பேசவே மாட்டேங்குறே.. ” ஏதோ இவன் எல்லாரிடமும் சட்டென ஒட்டிக் கொண்டு கலகலப்பாக இருப்பது போல் அவளை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“ நீங்க தாத்தா வீட்டுக்கு விருந்தினரா வந்து இருக்கீங்க.. உங்களுக்கு செய்யுறதெல்லாம் எந்த சிரமமும் இல்லை.. நீங்க இதை பத்தி எல்லாம் கவலை படாம.. ” என்று நிறுத்தி வாயிற் பக்கம் பார்க்க..

“ உன் வேலையை பாருன்னு சொல்ற ” என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்

அடிப்பாவி அதையும் தைரியமா ஒத்துக்கறாளே என நினைத்தவன்

“ நான் இங்க விருந்தாளி இல்லை.. ” என்றவனை இடை மறித்து

“ தெரியும்.. நான் பொதுவா சொன்னேன்.. ” அவசரமா சொன்னாள் அவன் ஏதும் தவறாக எடுத்து கொள்வாளோ என்று.. அதற்கு மேல் அங்கு நில்லாமல்  இடத்தை காலி செய்தான் அதுல்.

மாலைப் பொழுதும் அத்து, மிதுன், கதிர், நிலாவுடன் நன்றாக இனிமையாக கழிந்தது தாத்தாவிற்கு.. வெறும் கற்களையும் மண்ணையும் கொண்டு கட்டி விட்டால் அது வீடாகி விடுமா என்ன !! இப்பொழுது தான் தன்னுடைய வீடு வீடாக இருப்பது போல உணர்ந்தார் தாத்தா..

எப்படி இருக்க வேண்டிய வீடு இது.. மனைவி மகன் மருமகள் பேரன் பேத்தி தங்கை.. அவளது குடும்பம் என அவர்களது குடும்பம் முழுவதும் அன்பில் அக்கறை கலந்து ஜொலித்திருக்க வேண்டிய வீடு..

வெறும் தூண்களால் தாங்கப்பட்டு நிலவொளியால் சாயம் பூசப்பட்டு இருந்தது.. ஏதோ நினைவில் கண்கலங்கியவரை கண்டு கொண்டவன் அனைவரையும் உறங்கச் சொல்லிவிட்டு தாத்தாவிடம் பேசுவதற்காக அமர்ந்திருந்தான்..

மிதுன் மட்டும் போகாமல் தாத்தாவுடன் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்க.. ‘மிதுன்’ என்ற அண்ணனின் அழுத்தமான குரலில் இடத்தை காலி செய்தான்.

“ என்னப்பா அத்து நீ தூங்க போகலையா ”

“ இல்ல தாத்தா.. உங்களுக்கு தூக்கம் வருதா என்ன ? ”

மறுப்பாக தலையசைக்க..

“ அப்போ நாம கொஞ்ச நேரம் பேசலாமா தாத்தா ”

அவன் தயங்கி தயங்கி கேட்டது அவருக்கு வியப்பே.. இருப்பினும் “ பேசலாமே அதுக்கென்னப்பா.. ” என ஒப்புதல் அளித்தார்..

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு “ எதுனால தாத்தா அப்பா இந்த ஊரை விட்டு.. வீட்டை விட்டு.. உங்களை விட்டுப் போனாரு ”

“ அவன் போகலப்பா.. நான் தான் போக சொன்னேன் ” என்றார் மெல்லிய குரலில்.. சிறு அதிர்வுடன் அவரைப் பார்த்தான்.. கண்ணை மூடி அமர்ந்தவாறு தொடர்ந்தார்..

“ இப்ப நீங்க இருக்கிறது உங்க அம்மா ஓட சொந்த ஊரு.. ஒருமுறை இங்க திருவிழாவிற்காக எங்க ஊருக்கு குடும்பமா அவங்க வந்திருந்தாங்க.. திருவிழா முடிந்து ஒரு வாரம் தங்கிட்டு போவதா சொல்லி இருந்தாங்க.. அப்போதான் ஒரு நாள் உங்க பாட்டி மீனாட்சி உங்க அம்மாவை பார்த்து இருக்கா.. பார்த்ததும் தன்னோட பையனுக்கு முடிக்கலாம்னு விருப்பம்.. அவங்களுக்கும் விருப்பம் இருந்ததால மேற்கொண்டு பேசினோம் ஆரம்பத்துல எல்லாம் நல்ல விதமாதான் போச்சி.. ஆனா நாளாக நாளாக மீனாட்சிக்கும் ஜெயாவுக்கும் ஒத்துவரலை..

எல்லா வீட்டுலயும் இருக்கறது தானேன்னு நானும் உங்க அப்பாவும் பெருசா எடுத்துக்கல.. அப்போவே அதை சரி பண்ணி இருந்தா இந்த பிரிவுக்கு அவசியம் இருந்திருக்காது..

ஹ்ம்ம்.. நம்ம தலையில எழுதியிருக்கிறது போல தானே நடக்கும்.. அதை மாத்த நம்ம யாராலயும் முடியாதே..

என் தங்கச்சி குடும்பமும் இங்க தான் இருந்தாங்க.. அவங்களுக்கு ஒரே பையன்.. விவசாயம் பண்ணினதால எங்களோடவே இருந்தாங்க.. அப்ப உனக்கு மூணு வயசிருக்கும்.. பேத்திக்கு மொட்டை அடிச்சு காது குத்து வச்சிருந்தோம்.. விசேஷ சமயத்துல பாட்டிக்கும் உங்கம்மாவுக்கும் பிரச்சனை முத்தி பாட்டி எல்லார் முன்னாடியும் ஜெயாவை அடிச்சிட்டா.. அவளும் கோபத்தில திருப்பி அடிக்க கை ஓங்க.. அதுக்குள்ள துரை வந்து தடுத்துட்டான்..

ஆயிரம் இருந்தாலும் வீட்டுக்கு வந்த ஜனங்க முன்னாடி மீனாக்ஷி ஜெயாவை அடிச்சிருக்கக் கூடாது.. அதேமாதிரி ஜெயாவும் மீனாட்சியை அத்தையா பார்க்காமல் அம்மாவா பார்த்திருந்தா நாளுக்கு நாள் பிரச்சனை வளர்ந்து கிட்டே இருந்திருக்காது.. யாரை சொல்லியும் குத்தம் இல்லை நடக்கணும்னு இருந்திருக்கு நடந்திருச்சு..

ஆனா அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல ஒன்னா இருக்க முடியும்னு எனக்கு தோணல அதனாலதான் மனச கல்லாக்கிட்டு துரையை வெளியே போகச் சொல்லிட்டேன் ” என்ற அவரின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க..

“ தாத்தா என்னை கேட்டா நீங்க பண்ணினது தான் சரின்னு சொல்லுவேன்.. ஒரே இடத்துல இருந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பகையை வளர்த்துக்காம கொஞ்ச காலத்துக்கு விலகி இருப்பது நல்லது தானே.. ” என தாத்தாவை சமாதானப்படுத்த..

“ நானும் அப்படித்தான் நினைச்சேன்.. கொஞ்ச நாளில திரும்ப கூப்பிட்டுக்கலாம்னு இருந்தேன். ஆனா நாம நினைச்ச மாதிரி எல்லாம் நடக்குதா என்ன !!

ஜெயா திரும்பவும் இந்த மண்ணை மிதிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா.. எங்க தொடர்பே வேண்டாங்கற அளவுக்கு பிடிவாதம்.. மீனாட்சி கூட கொஞ்ச நாள்ல இறங்கி வந்தா ஆனால் எதுவும் மாறல.. துரை அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் சிக்கி தவிச்சு போய்ட்டான். நாங்களாவது வாழ்ந்து முடிச்சவங்க ஆனா அவங்க வாழவேண்டியவர்கள் ஆச்சே அதான் துரை கிட்ட சொல்லி ஜெயாவை வேற எங்காவது அழைச்சிட்டு போக சொல்லிட்டேன்.

ஜெயாவா மனசு மாறி இங்க வர்ற வரைக்கும் நீயும் இந்த மண்ணை மிதிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டேன் துரைகிட்ட.. அதுதான் நான் செஞ்ச மன்னிக்க முடியாத தப்பு அத்து.. அவன் வாழ்க்கைக்கு நல்லது நெனச்சுதான் அப்படி செஞ்சேன்..

எனக்கு இங்கிருந்து போக இஷ்டம் இல்லப்பா.. உங்க சொல்லுக்காக போறேன்னு துரை சொல்லும்போது என் மனசு பூரா சொல்லமுடியாத வலி. நானும் ஒவ்வொருநாளும் அவன் ஜெயாவோட வருவான்னு காத்திருக்கேன் இன்னிக்கு வரைக்கும்..

ஆனா மீனாக்ஷி கடைசி கால கட்டத்தில பெத்த புள்ளயையும் பேரனையும் பார்க்கமுடியுமா தவிச்சு போய்ட்டா.. அப்போவும் அவ சொன்னா.. நம்ம பையன் வரலைனாலும் என்னிக்காச்சு நம்ம பேரன் நிச்சயம் வருவானுங்கனு..

எல்லாம் இப்ப நடந்த மாதிரி இருக்கு ஆனா இருபது வருஷம் ஓடிப் போயிடுச்சு ” என்றார் அதே வலியுடன்.

“ உங்கள நான் முன்னமே பார்த்திருந்தாலோ உங்கள பத்தி தெரிந்திருந்தாலோ எல்லாத்தயும் சரி பண்ணிருப்பேன் தாத்தா.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது தாத்தா நாங்க இப்போ தஞ்சாவூர்ல இருக்கோம்னு !! நீங்க ஏன் என்ன பார்க்கவே வரல ??  ” என்றவனின் குரலிலும் வேதனை

“ அதுக்கப்பறம் துரை எங்க இருக்காங்கன்னே தெரியாத அளவுக்கு நிலைமை கொண்டுபோய் விட்ருச்சு. துரையோட தொடர்பே இல்லாம போனதாலயும்.. அவன் தஞ்சாவூர்லயும் இல்லைனு தகவல் கிடைக்க சோர்ந்து போய்ட்டேன்..

ஒரு வருசத்துக்கு முன்னாடி தான் துரை தஞ்சாவூர்ல இருப்பதா எனக்கு தகவல் வந்துச்சு.. நீங்கெல்லாம் ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே ஜெயாவோட சொந்த ஊருக்கே வந்துட்டதா கேள்விப்பட்டேன்.

துரையை தேடி போகலாம்னு நினைச்சேன் ஆனா மனசு ஒத்துக்கல.. அம்மா இறந்ததை ஏன் எனக்கு தெரிவிக்கலைனு கேட்டா நான் என்ன சொல்றது.. மீனாட்சி இறந்த துக்கத்துல நானும் ஒரு வருஷம் படுத்த படுக்கையாய்ட்டேன்.. அவன் எங்க இருக்கானே தெரியாம அன்னிக்கு தந்தி போடவும் வழியில்லை.. அவனுக்கு தகவல் கிடைச்சிருந்தா அவன் நிச்சயம் என் வாக்கையும் மீறி  வந்திருப்பான்.. ஆனா என்னால தெரிவிக்க முடியாத சூழல்ன்னு சொன்னா அவன் ஏத்துப்பான.. அதுதான் உங்களைத் தேடி வரல.

கொஞ்ச நாளாவே உன்னோட குழந்தை முகம் என் கண்ணுக்குள்ள இருந்துச்சு உன்னை ஒருதரம் பார்த்தா போதும் மனசு கிடந்து தவிச்சுது.. அது தான் ஆனது ஆகட்டும்னு கிளம்பி வந்துட்டேன்

ஜெயா இன்னும் எதையுமே மறக்கலைன்னு புரிஞ்சுகிட்டேன் அதான் நீங்க வர்ற வரை கூட காத்திருக்காமல் கிளம்பி வந்துட்டேன்

ஆனா நீ உன் பாட்டி சொன்ன படி நீயாவே இந்த கிழவனை தேடி வந்துட்ட அத்து ” என்றவர் குரல் கரகரக்க அவரது கையை ஆதரவாக பற்றிக்கொண்டான்.

“ நடைபிணமா வாழ்ந்துட்டு வந்த இந்த கெழவன நம்ம மாரியோட சின்ன அம்மிணி மக தான் தேத்தி கொண்டாந்தா.. நாளைக்கே உங்க பேரன் வந்தா நீங்க பார்க்கவேண்டாம்ணு சொல்லி சொல்லியே தினமும் என்ன சாப்பிட வைப்பா.. இத்தனை வருசமா எனக்கு ஒரு பேத்தியா இருந்து உங்க எல்லாரோட இடத்தையும் அவதான்ப்பா நிரப்பிட்டு இருக்கா.. ” என்றார் மனதார அவளை நினைத்து..

“ சரி தாத்தா நீங்க தூங்குங்க இந்த பிரச்சினையை என்கிட்ட விடுங்க.. கூடிய சீக்கிரம் உங்க மகனும் மருமகளும் உங்களை பார்க்க வருவாங்க.. அதனால எல்லா கவலையையும் ஓரம் கட்டிவிட்டு எங்க கூட சந்தோஷமா பொங்கல் கொண்டாடுங்க ” என்றபடி அவருக்கு போர்வை போர்த்தி விட

“ நீ சொல்லறது நிஜமா அத்து ” என்றவாறு விழியில் மகனுக்கான ஏக்கம் தவிப்பு பாசம் என கலவையான பாவனை..

“ நான் சொல்றது சத்தியம் தாத்தா.. நீங்க தூங்குங்க ” என வெளியே வந்தவன் நேராக மேல்மாடம் சென்றான்.

மனம் முழுக்க பாரமாக இருப்பது போல் உணர்ந்தான்.. இல்லத்தை தாங்கி நிற்கும் தூண்களான பெண்கள் சற்றே தடுமா..ற… சிதைந்து இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது அந்தக் குடும்பம். கொஞ்சமே கொஞ்சம் நிதானமாக.. பொறுமையாக.. விட்டுக்கொடுத்து போயிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்.

ஹம்.. என பெருமூச்சு விட்டவன் அத்து.. சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடு என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

சற்று நேரத்தில் கொலுசொலி கேட்க.. அதுவும் அவன் அருகே கேட்க எழுந்தான். அவள்தான்.. அப்போதுதான் அவனுக்கு தோன்றியது அவள் பெயர் என்னவென்று கூட கேட்கவில்லை என்று.

மேல் மாடம் வந்தவள் இவன் அமர்ந்திருப்பது கண்டு அப்படியே வந்த வழியே திரும்ப.. “ ஓய் ” என அவசரமாக தடுத்தான்.

அவனது அழைப்பில் திரும்ப..

“ இந்த நேரத்தில என்ன இங்க ?? ”

“ அது சும்மா தான்.. இன்னிக்கு பவுர்ணமி இல்ல.. அதான் நிலாவ இங்க இருந்து பார்க்கலாம்னு வந்தேன் ”

இப்பொழுது அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்.. நிலா, கதிர், மிதுன் என அனைவருமே ஏதோ நெடுநாள் பழகியது போல் அவளிடம் இயல்பாக பேச.. அவர்களது ஜோதியில் அவளும் இப்போது ஐக்கியமாகி..

“ அப்போ பார்க்க வந்தா பார்க்க வேண்டியதுதானே !! ஏன் திரும்பி போக பார்த்த.. நான் இருக்கேன்றதாலயா !! ” என தலையசைத்தது அத்து கேட்க..

இல்லை என்று தலையசைத்து.. பின்பு ஆம் என்பது போல் தலையசைக்க….

“ எல்லா பக்கமும் ஆட்டுற.. ஏதாவது ஒரு பக்கம் ஆட்டு ” என சிரித்தான்

அவள் புன்னகையுடன் ஆமாம் என்றாள்

“ சரி அப்போ நான் கீழ போறேன் ” என இவன் எழ,

“ ஐயோ பரவாயில்லை.. நீங்க இங்கேயே இருங்க நான் கீழ போறேன் ”

“ ஹேய் இரு இரு.. நான் போகல. நீயும் போக வேண்டாம். நீ நிலா கூட பேசும்போது நான் தொந்தரவு பண்ணமாட்டேன். சரியா.. ” என்று கேட்டவனை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்து.. அங்கே இருந்த திட்டின் மீது ஏறி அமர்ந்து வானொலியை இயக்கி.. அருகே வைத்துக்கொண்டு நிலவை பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.

மனதை நனைக்கும் இசைச்சாரல்..

நட்சத்திர கூட்டங்களோடு உலா வரும் நிலா..

அவள் விரும்பும் புத்தகங்கள்..

இது போதும் அவளுக்கு..

இவையே அவளது இரவு நேர விருப்பங்கள்.. அவள் விரும்பி ஏற்கும் சிலவை.. அவளுக்கு பிடித்தமானவையும் கூட..

அவளுடைய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தது அத்துவின் குரல்..

“ ஹ்ம்ம்.. என்ன கேட்டீங்க ”

“ உன் பெயர்.. என்ன.. ” என்றான்.

“ என் பெயர் கூட தெரியாதா !! ” என்று அவளின் குரல் சற்றே இறங்கித்தான் ஒலித்தது. மனதின் ஓரத்தில் ஏமாற்றம் தன் பெயரை கூட அறிந்து வைத்திருக்கவில்லை என..

ஆமா நீ தான் இந்தியாவோட அடுத்த ஜனாதிபதி பாரு அவர் உன் பெயரை தெரிந்து வைத்திருக்க என அவளது மனசாட்சி மண்டையில் கொட்டு வைக்க..

அதற்குள் அவன் “ நீ எங்கே பேசின.. ஒரே ஓட்டம்தான்.. தாத்தாவும் உங்க மாமாவும் அம்மாடி, அம்மணினு கூப்பிடுறாங்க ”

“ பைரவி.. என்னோட பெயர் ” என்றுவிட்டு அவள் மீண்டும் நிலாவை நோக்கி திரும்பிக் கொண்டாள்..

பை..ர..வி.. தனக்குள்ளே ஒரு முறை சொல்லிப் பார்த்து கொண்டவன் அவளிடம் திரும்ப.. அவள் பார்வையோ நிலாவிடம். அவளை தொல்லை செய்ய விரும்பாதவன் அப்படியே படுத்து உறங்கிவிட்டான். சிறிது நேரம் கழித்து எழுந்தவள் அவனை பார்க்க..

“ என்ன அப்படியே தூங்கிட்டாங்க…. ” என நினைத்தபடி கீழே இறங்கினாள். ஏனெனில் விரிப்பு தலையணை ஏதும் இன்றி தரையில் அப்படியே உறங்கி இருந்தான்.

சிறிது நேரத்தில் சத்தமில்லாமல் மேலே வந்தவள் அவனது தலையை மெல்ல தூக்கி அதன் அடியில் தலையணையை வைத்துவிட்டு.. ஒரு கம்பளியை போர்த்திவிட்டு.. நகர்ந்தாள்.

 

மேகம் கடக்கும்….

 

Advertisement