Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

 

மேகம் 3 :

 

அந்த வாரம் முழுக்க ஆடிட்டிங் என்பதால் வேலை நெட்டி முறித்தது. எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் திடீரென ஆங்காங்கே முளைக்கும் சில கணக்குகள் டாலி ஆகாமல் மண்டைக்குள் மத்தளம் வாசிக்க ஆரம்பித்துவிடும்… வேலை முடிய நேரம் பன்னிரெண்டையும் கடக்க அவனது அலுவலக அறையிலேயே உறங்கிவிட்டான் அதுல்.

அடுத்த நாள் காலையில் வாட்ச்மேன் வந்து எழுப்பவும் தான் அலுவலகத்திலேயே உறங்கியதை உணர்ந்தான்..

“ குட் மார்னிங் அண்ணா.. நேத்து வேலை முடிய ரொம்ப நேரம் ஆகிடுச்சு ” என்றான் கைகளை மேலே எழுப்பி சோம்பல் முறித்தவாறே..

“ இன்னும் எத்தனை நாளைக்கு தம்பி இந்த மாதிரி வேலை இருக்கு… விடிஞ்சதும் வந்துடுறீங்க… ராத்திரியிலும் நேரம் கழிச்சு தான் போறீங்க.. உடம்பு என்னத்துக்கு ஆகிறது.. ” என்றவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை..

“ இன்னும் ஒரு வாரம் தாண்ணா வேலை அதிகமா இருக்கும்.. அப்புறம் வழக்கம் போல தான்… ” என்று பதில் அளித்தவாறே வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானான்..

“ தம்பி… மிதுன் தம்பி உங்களுக்காக கீழ காத்திருக்காங்க.. அத சொல்ல தான் நான் வந்தேன்.. ”

“ மிதுனா… சரி அண்ணா நீங்க கீழ தானே போறீங்க.. ”

“ ஆமாந்தம்பி.. ”

“ அப்போ அவனை மேல வர சொல்லிடுறீங்களா… ”

“ சரி தம்பி… ” என அவர் வெளியேறிய ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்தான் மிதுன்.

“ நீ எதுக்கு டா வந்த.. உனக்கு காலேஜ்க்கு டைம் ஆகலையா ? ”

“ அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல அத்து.. காலைல பஸ் எல்லாம் செம ரஷ்ஷா இருக்கும்னு தான் உன்னை கூட்டிட்டு போக நானே வந்தேன்.. ”

“ சரி வந்தவன் மேல வர வேண்டியது தானே இல்ல எனக்கு கால் பண்ண வேண்டியது தானே.. ”

“ ம்ம் அதுக்கு நீ போன் வெச்சிருக்கணும்… இல்ல உங்க ஆபீஸ் டப்பா போன் வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கனும்.. ”

திரும்பி அவனது அலுவலக தொலை பேசியை பார்க்க ரிசீவர் எடுத்து வைக்கப் பட்டு இருந்தது..

இரவு வருவதற்குத் தாமதம் ஆகும்.. வேலை முடிந்துவிட்டால் வருகிறேன்  என்று அவ்வளவு வேலைகளின் நடுவிலும் வீட்டிற்குத் தகவல் அளித்துவிட்டு அமர்ந்தவனின் பொறுமையைத் தொலைபேசி சோதித்துப்பார்க்க.. தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க.. ரிஸீவரை எடுத்து வைத்துவிட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.  

“ ஸ்ஸ்ஸ்… நேத்து டிஸ்டர்ப் ஆக இருந்துச்சுன்னு எடுத்து வெச்சேன்.. கவனிக்கல.. ” என்றவாறு அதனை சரியாக வைத்தான்.

“ சரி வா.. ஒரு காபி சாப்பிட்டு கிளம்புவோம்.. ” என மிதுன் காண்டீன் அழைக்க.. அத்து எதோ கூற வர அவனை நிறுத்தியவன்,

“ என்ன நீ இன்னும் பிரஷ் பண்ணல சோ காபி குடிக்க மாட்டே அதானே !! ”

அதேதான் என்று தலையசைத்தான் அதுல்.

“ காபி எனக்கு அத்து.. உனக்காக என்னோட காஃப்பிய தியாகம் செஞ்சுட்டு வந்திருக்கேண்ணா.. சோ ஒழுங்கா வாங்கி கொடுத்திரு ” என சின்னப் பிள்ளை மிட்டாய் கடையைப் பார்த்து அடம்பிடிப்பதுபோல் செய்ய.. அவனது செய்கையில் புன்னகைத்தபடி,  

“ நான் என்ன வாங்கித் தரமாட்டேன்னா சொன்னேன்.. வா டா ” எனத் தனது வலது கையை மிதுனின் தோளில் போட்டபடி இடது கையால் அவனது புஜத்தை பிடித்தபடி இழுத்துச் சென்றான் அதுல்.

இவ்வாறு மிதுனின் தோளில் கைபோடுவது அத்துவிற்குப் பிடித்தமான ஒன்று. மிதுனுக்கும் தான்..

அதிலும் இவன் ‘ அத்து…. ’ என பிரச்சனையோடு அவன் முன்  நின்றால் ‘பார்த்துக்கலாம் வாடா.. ’ என தோள் மேல் கை போட்டு அழைத்துச் செல்லும் அந்த அத்துவை இன்னும் பிடிக்கும்.. அத்து பார்த்துப்பான் என்ற நம்பிக்கையை அது கொடுக்கும்.

உள்ளே சென்றவர்கள் டேபிளில் அமர்ந்தனர்.. அத்துவின் கவனம் நாளிதழில் பதிந்திருக்க.. மிதுன் கனகு அண்ணாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ அண்ணா.. நீங்க தான் அத்து சொல்ற கலக்கல் கனகுவா ? எங்க அம்மா உங்க மேல செம கோவத்துல இருக்காங்க.. ”

“ ஹா ஹா.. ஏன் தம்பி அப்படி ? நான் என்ன பண்ணுனேன்.. ” என அவனுக்கு எடுத்து வந்த காபியை கொடுத்து விட்டு எதிரில் அமர்ந்தார்..

“ என்ன பண்ணீங்களா ? காபி.. கட்லட்ல தொடங்கி நீங்க செய்யுற எல்லாமே நல்லா இருக்காம்.. எங்கம்மா சமையல் பக்கத்துல கூட வரமுடியாதுன்னு கமென்ட் கொடுக்குறான் என் அண்ணா.. ”

 

மிதுன் கூறியதைக் கேட்டு.. நாளிதழிலிருந்து விழிகளைப் பிரித்து எடுத்த அத்து அவனைப் பார்க்க.. உதட்டை விரித்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு காபியை பருக ஆரம்பித்துவிட்டான் மிதுன்.

அத்து இவ்வாறெல்லாம் சொல்லியதில்லை.. இதெல்லாம் மிதுன் போட்டுக் கொண்டிருக்கும் எக்ஸ்ட்ரா பிட்டுகள். ஜெயா மட்டும் அறிந்தாரென்றால் கையில் வேப்பிலையுடன் காளி அவதாரம் தான்.

கனகுவின் சமையலும் அத்துவிற்குப் பிடிக்கும் தான். அவரைப் பற்றி வீட்டிலுள்ள அனைவரிடமும், பிறரிடமும் புகழ்ந்தும் கூறியுள்ளான். அதற்காக அன்னையின் சமையலை எல்லாம் யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைப் பொறுத்தவரையில் ஜெயா தான் மாஸ்டர் செஃப்.

இங்கு கனகுவோ தன்னைப் பற்றி புகழ்ந்து கேட்டவுடன் ஒரு வித கூச்சத்துடன் அமர்ந்திருந்தார்.

“ அப்படியெல்லாம் இல்ல தம்பி.. ஏதோ ஓரளவு சமைப்பேன்.. ” என அவர் நெளிந்து கொண்டே மிதுனிடம் கூற..

“ அண்ணா.. உங்க சாப்பாடு பத்தி நம்ம ஆபிசில் இருக்கவங்க கிட்ட கேட்டு பாருங்க.. அதுவும் நம்ம கதிர் கிட்ட கேட்டு பாருங்க.. உங்க கைக்கு தங்க மோதிரம் போடலாம்னு சொல்லுவான்.. ” என்றான் அதுல்.

கனகுவின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

யாருக்குமே நீங்கள் உங்களது வேலைகளைச் சிறப்பாக செய்கிறீர்கள் என்றொரு வார்த்தையை பிறர் கூறக்கேட்டால் வானத்தில் பறக்காத குறையாய்த் தான் இருக்கும். பாராட்டுக்கு மயங்காத மனம் உண்டா !! முகஸ்துதிக்கும் மனதாரப் பாராட்டுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா.. இப்படி மனதாரப் பாராட்டவும் ஒருசிலருக்கே மனம் வரும்.

“ கிளம்புறோம் அண்ணா.. ” என அண்ணன் தம்பி இருவரும் விடை பெற்றனர்.

கனகுவை என்றுமில்லாமல் இன்றொரு புது உற்சாக மழை அடித்திருக்க.. அதில் நனைந்தபடியே காண்டீனை வலம் வந்தார்.

அத்துவை வீட்டில் விட்டுவிட்டு மிதுன் அப்படியே கல்லூரி கிளம்பிவிட்டான்.

கொஞ்சம் ரெப்ரெஷ் செய்துவிட்டு வந்த அதுல் அன்னை எடுத்து வைத்த டிபனை சாப்பிட்டு முடித்தான்.

தூக்கமின்மையால் இன்று இளையராஜாவும் யேசுதாசும் இல்லாமலே அதுலின் கண்கள் சொருக,

“ அம்மா.. நான் தூங்குறேன்.. என்னை ஒரு பதினொரு மணிக்கு எழுப்பி விடுங்க.. ” என்றவாறு அசதியில் படுக்கையில் விழுந்தான்.

 

“ சூடா எதாவது குடிக்கிறியா அத்து ” என்று கேட்டபடி வந்த ஜெயா அவன் அறைக்குள் பிரவேசிக்க.. அவன் உறங்கியிருந்தான்.

அவனைப் பார்த்தபடியே சில நொடிகள் அவன் அருகில் நின்றிருந்தவர் போர்வையை நன்கு போர்த்திவிட்டு நகர்ந்தார்.

நேரம் கடந்திருக்க.. குக்கர் விசில் சத்தம் கேட்டு விழி திறந்தவன் கடிகாரத்தைப் பார்க்க அப்போது தான் பத்தரை ஆகியிருந்தது.

எழுந்தவன் அலுப்புத் தீர ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து சோபாவில் அமர ஜெயா காபியுடன் வந்தார்..

“ தாங்க்ஸ் மா.. ” என பெற்றுக்கொள்ள

“ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே டா.. கண்ணெல்லாம் பாரு எப்படி சிவந்திருக்கு.. ” என்றவர் அவன் அருகில் அமர்ந்து தலை கோதி விட அந்த தருணத்தை மனம் வெகுவாய் ரசித்தது..

“ முழிப்பு தட்டிருச்சு மா.. ” என்றவன் காபி குடித்துவிட்டு கோப்பையை சிங்க்கிள் போட்டு வர அவன் கண்ணில் பட்டது அந்த பார்சல்.

பிரித்து பார்த்தவனின் கண்கள் வியப்பில் விரிந்தன… அவனுக்கு பிடித்த நுங்கு, பணங்கருப்பட்டி, தினைமாவு அதிரசம், எள்ளுருண்டை.. என எல்லாமே அவன் ரசித்து உண்பவை.. அதிலும் நுங்கு என்றால் இன்னும் பிடிக்கும்.. ஆனால் அதிகம் கிடைப்பதில்லை தற்போது..

“ அம்மா.. நுங்கு இருக்கு.. யாராவது நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களா என்ன ? ” என்றவாறு அந்த பார்சலோடு அவரை நோக்கி வந்தான்.

ஒரு நிமிடம் ஜெயாவின் முகம் இருண்டுவிட்டது.. இருப்பினும் நொடிப் பொழுதில் தன்னை சரி செய்து கொண்டவர்,

“ ஆமா அத்து.. நேத்து நம்ம தூரத்து சொந்தம் வந்திருந்தாங்க.. அவங்க கொண்டு வந்தது தான்… ” என அழகாக சமாளித்து விட்டார்.

“ யாருமா அது.. ” அவனென்னவோ தெரிந்து கொள்ளத்தான் கேட்டான்..

“ ப்ச் அதெல்லாம் உனக்கு தெரியாது.. சொன்னாலும் புரியாது.. நீ போய் கிளம்பு.. உனக்கு நேரம் ஆகுது.. ” என விரட்ட

“ சொன்னாத் தானே புரியும்.. ” என்று தனக்குள் சொல்லியபடி எழுந்து சென்றான்.

அந்த வாரம் அப்படியே கழிய.. அத்து தவமிருந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. என்ன தான் அவன் விரும்பி அந்தப் பணியில் சேர்ந்திருந்தாலும் ஆடிட்டிங் சமயத்தில் எண்டா இப்படி என நொந்தே போவான்..

 

நேற்றைய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வெகுநேரம் கழித்து உறங்க.. இன்று விழிப்புத் தட்ட முற்பகல் ஆகிவிட்டது..

எழுந்து வந்தவனை வரவேற்றது வரவேற்பரை சோபாவும், டீவியும் தான்..

டீபாயின் மீதிருந்த சிறு குறிப்பு காற்றில் படபடக்க.. அதனை கையில் எடுத்தான். அதைப் படித்தவனின் அதரங்களில் ஒரு புன்னகை.. அவசரத்தில் எழுதிய குறிப்பு போல.. அதிலிருந்த எழுத்துக்கள் அனைத்தும் ஆடிக் கொண்டிருந்தது.

அவனுடைய அம்மா தான்.. ஏதோ உறவினர் வீட்டு விசேஷம் போல.. மூவருமே செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

ஞாயிறன்று மட்டுமே இவனுக்கும் தந்தைக்கும் விடுமுறை.. பெரும்பாலும் வெளியில் செல்ல விரும்ப மாட்டான்.. குடும்பத்தினருடன் கழிக்கும் அந்தச் சிறு இனிய பொழுதுகளே அடுத்த வாரத்திற்கான உற்சாகத்தை அளிக்கும் அவனுக்கு.

“ ப்ச்.. இன்னிக்கு தான் போகனுமா ” என்றவாறு குறிப்பை வைத்து விட்டு அப்படியே சோபாவில் கால்களை நீட்டி கைகளை தலைக்குக் கொடுத்து படுத்துக் கொண்டான்.

எப்படி இன்றைய பொழுதைக் கழிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையைக் கலைத்தது அழைப்பு மணி.

‘ யாராக இருக்கும் ’ என எண்ணித் திறந்தவனின் முன்பு பளிச் புன்னகையுடன் நின்றிருந்தார் பக்கத்து வீட்டு பங்கஜம்..

“ அத்தை வாங்க… ” என அவர் உள்ளே வர வழிவிட்டான்.

சிறு வயது முதலே இரு குடும்பங்களுக்கு இடையே நல்ல பழக்கம்.. அண்டை வீட்டினரும் உறவினர்கள் தானே !.. அத்தை, மாமா என அழைத்தே பழக்கம்..

“ அத்து தூங்கிட்டு இருந்தியா ? எழுப்பிட்டனா ? ” என சோபாவில் அமர

“ இல்லத்த.. எந்திரிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. ” என தானும் அமர்ந்தான்.

தான் கையில் எடுத்து வந்த பாத்திரத்தை டீபாயில் வைத்தவர்,

“ காளான் பிரியாணி செஞ்சேன்.. சுரேஷ்க்காக.. உன் அம்மா வெளில கிளம்புறதா சொன்னா.. எப்படியும் செய்திருக்க மாட்டா.. நீ என்ன பண்ணுவியோன்னு யோசிச்சு தான் உனக்கும் சேர்த்து செஞ்சேன்.. ” என்றார்.

எதையும் எதிர்பாராது மற்றவர் மேல் அன்பு செலுத்தும் இந்த இவரது குணம் தான் அத்துவைக் கவரும் எப்போதுமே.

அவரது அக்கரையில் உள்ளம் குளிர்ந்தவன்,

“ ஆனா.. உங்களுக்கு ஏன் சிரமம் அத்த ” என்றான்.

“ இதுல என்னடா சிரமம்.. உங்க மாமா நான்வெஜ் சமைச்சுட்டு இருக்காரு.. சுரேஷ் தான் நான்வெஜ்னா காத தூரம் ஓடுவானே… அதான் அவனுக்கு மட்டும் காளான்.. அவனோட சேர்த்து உனக்கும்… ”

அத்து அழகாய்ப் புன்னகைக்க..

“ நீ இப்போ சாப்பிடுறியா…” என்று பங்கஜம் பரிமாற எழுந்திரிக்க..

“ இல்லத்த.. கொஞ்ச நேரம் ஆகட்டும்.. ”

“ என்ன கொஞ்ச நேரம்.. இதுவே மதிய சாப்பாட்டு நேரம்.. எந்திரிச்சு வா.. நா எடுத்து வைக்குறேன்.. ” என அவர் அதட்டிவிட்டு உள்ளே செல்ல ஒரு புன்னகையுடன் அவரைப் பின் தொடர்ந்தான்.

“ அப்புறம் அத்து.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. ” மெதுவாக ஆரம்பித்தார்..

சாப்பிடுவதை நிறுத்தியவன் நிமிர்ந்து பார்த்து “ சொல்லுங்கத்த.. ” என்றான்.

“ நீ சாப்பிடு ” என்றவர் தொடர்ந்தார்.

“ போன வாரம்.. அதான் ஒரு ரெண்டு நாள் முன்னாடி உங்களைப் பார்க்க உங்க தாத்தா வந்திருந்தார்.. ” என்றதும்

“ தாத்தா வா..” என சற்றே வியப்புடன் அவரைப் பார்த்தான்..

அவனுக்கு தெரிந்தவரை அம்மா வழியிலும் சரி அப்பா வழியிலும் சரி பெரியவர்கள் யாருமில்லை.. இவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போதே இறந்து விட்டார்களாம்.. இவனது அம்மா அப்படித்தான் சொல்லி வைத்திருந்தார்.. இப்போது திடீரென முளைத்திருக்கும் இந்த தாத்தா யார் ?

“ ஆமா அத்து.. உன் தாத்தா… உன் அப்பாவோட அப்பா தான் வந்திருந்தார்.. ” என மேலும் அவனை அதிர வைத்தார்.

“ என்னத்த சொல்றீங்க ? ” என்றவனுக்கு எப்படி இது சாத்தியம் ? சாத்தியமில்லாத ஒன்றல்லவா ? இறந்தவர் எப்படி திரும்பி வருவார் ? எனப் பற்பல சிந்தனைகள்..

“ உண்மை தான் அத்து.. அவரு வந்து இருந்தாரு.. ஆனா உங்க அம்மா அவரை வாசலோட திருப்பி அனுப்பிட்டா.. உங்க அப்பாக்கு கூட விஷயம் தெரியாதுன்னு தான் நினைக்குறேன்.. ” என்றவர் மேலும் அவருக்கு தெரிந்த சில விடயங்களைக் கூறி மொத்தமாக அதிர வைத்தார்..

அவர் கூறியதைக் கேட்ட பிறகு உணவு உள்ளிறங்க மறுத்தது.. பங்கஜ அத்தைக்காக மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளே தள்ளினான்..   

 

“ சரி நான் கிளம்புறேன் அத்து… மாமா வெயிட் பண்ணுவாரு.. ” வந்த வேலை முடிந்தது என அவர் கிளம்ப.. இவன் தான் அப்படியே அமர்ந்திருந்தான்..

இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா ? இருக்கிறாரே அவனுடைய அம்மா.. இன்னுமே நம்ப முடியவில்லை அவனால்..

உயிரோடு இருப்பதையே மறைத்து பேரப் பிள்ளையையும் வயதான முதியோரையும் பிரித்து வைத்து பாசத்தை அனுபவிக்க விடாமல் செய்யும் அளவிற்கு என்ன குரோதம் மனதில்..

அப்பா.. அவனுடைய அப்பா பெற்ற தந்தையை விட்டு வந்து வயதான காலத்தில் தனிமையில் தள்ளாட செய்துள்ளார் அவரை ?

இவனுடைய எந்த கேள்விகளுக்குமே பதில் இல்லை தற்சமயம்..

அன்னை தந்தை அப்படி பட்டவர்கள் இல்லைதான்.. என்ன காரணமாக இருக்கும் !!   தாத்தா மட்டும் உள்ளாரா பாட்டியும் உள்ளாரா !! இவர்களோடு எங்கள் பூர்வீகமும் வேறெங்கோ உள்ளதா !! இத்தனை நாள் ஏன் எங்களைக் காண வரவில்லை !!  இதற்குப் பின் எந்த காரணம் இருந்தாலும் சரி வயதான காலத்தில் ஒருவரை தனித்து விடுவது முறையல்ல என்று தான் அத்துவிற்கு தோன்றியது.

அன்றைய பொழுது சிறப்பாக வெகு சிறப்பாக மனதின் போராட்டங்களுடனும் இதுவரை பார்த்திராத தாத்தாவினுடைய கற்பனைச் சிறகுகளிலுமே கழிந்தது..

விழாவிற்கு சென்றிருந்த மிதுன், ஜெயா, அப்பா வீடு திரும்பியதும்

“ அப்பா உங்களோட கொஞ்ச பேசணும்.. ” என்றதுமே எழுந்து அத்துவினுடையே அறைக்குச் சென்றனர்..

“ அப்பா தாத்தா வீட்டு முகவரி எனக்கு வேணும் ! ” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..

சிறு அதிர்வுடன் அவனைப் பார்க்க.. அவனோ எந்த உணர்வையும் காட்டாமல் மிகச் சாதாரணமாக நின்றிருந்தான்.

“ அத்து.. ” என ஏதோ சொல்ல வர,

“ அப்பா ப்ளீஸ்.. இப்போதிக்கு எனக்கு அட்ரஸ் மட்டும் போதும்.. நிச்சயம் உங்க கிட்ட இன்னொரு நாள் விளக்கம் கேட்டுக்கறேன்.. ” என்றான் நிதானமாக..

அவர் சொல்ல அதைக் குறித்துக் கொண்டவன் அதன் பிறகு அதைப் பற்றி யாருடனும் பேசவில்லை.. எப்போதடா ஆடிட்டிங் முடியும் என காத்திருக்க நேரமும் அவனை சோதியாது நதியின் வேகத்தில் கடந்திருந்தது..

அலுவலகத்தில் சிறிது நாள் விடுமுறை அளித்துவிட்டுப் புறப்பட்டான் தாத்தாவைத் தேடி..

அதுல் கிளம்பும் போது ஜெயா வேறு துருவித் துருவி விசாரிக்க.. என்றும் இல்லாமல் புதிதாக எரிச்சல் மண்டியது.. கோபத்தில் குரல் உயர்த்துபவன் இல்லையே அவன்.. பொறுமையாகவே  

“ போயிட்டு வந்து சொல்றேன் மா.. ” என்றவன் நிற்காமல் கிளம்பிவிட்டான்..

தஞ்சையிலிருந்து கோவையை நோக்கி ஆரம்பமாகியது அத்துவின் பயணம்…

 

அதிசய ராகம்…. ஆனந்த ராகம்…

அழகிய ராகம்… அபூர்வ ராகம்…

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்………

 

பேருந்தில் ஜன்னலோரமாய் அமர்ந்து கொண்டு மனதிற்குப் பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டே வேடிக்கை பார்ப்பதே… தனி சுகம் தானே !   

 

மேகம் கடக்கும்….                                

Advertisement