Advertisement

பாரதி கண்ட புதுமைப் பெண்

                                 – மித்ராபரணி

 

எல்லாரும் உங்க பேர் அப்புறம் எந்த ஊருல இருந்து வரீங்கன்னு சொல்லுங்க…

புதுசா எங்க கிளாஸ்க்கு வந்த மேத்ஸ் டீச்சர் இப்படிக் கேட்டாங்க.. எல்லாரும் வரிசையா எந்திருச்சு நின்னு சொல்லிட்டே வந்தாங்க..

 

கவிதா எந்திரிச்ச உடனே.. நான் மைக்கேல் ஜாக்சன் போல பிரேக் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டேன்.. ம்கூம்.. என்னை கேக்காமயே என் கையும் காலும் ஆட ஆரம்பிச்சிருச்சு. ஐப்பசி மாச அடைமழையிலும் எனக்கு வேர்த்து கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.. ஏன்னா அவளுக்கு அடுத்து நான் எந்திரிச்சு நின்னு பேசணும்.

 

இத்தனைக்கும் அவங்க அவங்க இடத்துல இருந்து தான் பேச சொன்னாங்க… நல்ல வேலை முன்னாடி போய் நின்னு பேச சொல்லல.. இல்லைனா அப்போவே என் மூச்சு நின்னு போயிருக்கும்.. பாவம் என்னால எங்க மேத்ஸ் டீச்சரும் ஜெயிலுக்கு போயிருக்கும். இது ரெண்டும் நடக்காம கடவுள் காப்பாத்திட்டாரு.

 

பேசி முடிச்சு கவிதா உக்கார்ந்ததும் நானும் எழுந்துக்க முயற்சி பண்ணுறேன்.. பண்ணுறேன்.. முடியல.. என் கை கால் எல்லாம் கட்டி போட்டு உக்கார வெச்சிருக்க மாறி ஒரு பீல்…

அடியே எந்திரி எல்லாரும் உன்ன தான் பாக்குறாங்க… என் காதுல கவி முணுமுணுக்குறது நல்லாவே கேக்குது.. இருந்தும் என்ன பண்ண ? ஃபெவி கால் போட்டு ஒட்டுனமாதிரி டெஸ்க் என்னை கெட்டியா புடிச்சுகிச்சு..

 

எந்திரிக்கனும்னு அறிவு சொல்லுது.. ஆனா மனசு ஒத்துழைக்க மாட்டேங்குது..

 

என்னோட முறை வந்தும் எழுந்துக்காம கமுக்கமா உக்கார்ந்திருக்கறதப் பார்த்து.. புதுசா வந்த டீச்சர் ஒரு மாறி பாக்குறாங்க.. பின்னாடி இருந்து திவ்யா பென்சில்ல ஊசி போட்டு சிக்னல் கொடுக்குறா… கவி முறைக்கவே ஆரம்பிச்சுட்டா…

 

கவிவி…. னு பாவமா அவளை ஒரு பார்வை பார்த்து வைக்க…

இனி என்னை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு கவி களத்துல எறங்கிட்டா…

வழக்கமா என்னை நோக்கி பாயும் பிரமாஸ்திரம்… கிச்சு கிச்சு மூட்டுறது..

 

அவ கை என் இடுப்புக்கு பக்கம் வந்துதோ இல்லையோ நா அட்டென்ஷன் எழுந்து நின்னு அரை நிமிஷம் ஆயிருந்துச்சு…

 

ஒரு வழியா எந்திரிச்சு நின்னு கண்ணை மூடிகிட்டேன்….

பின்ன கண்ண திறந்து வெச்சு என்னோட கான்பிடென்ஸ் கரஞ்சிட்டா !! உசாருரு……

 

டெஸ்க்க இருக்கமா பிடிச்சிட்டு… காலை நிலத்துல அழுந்த ஊனிட்டு.. வாய மெல்லத் திறந்தேன்…

நா… என்… பே… பேர்……

 

பயந்தாங்கொள்ளி….

நான் சொல்லல… மொத்த கிளாசும் டைமிங் பார்த்து அடிச்சுவிட்டுது….

 

சுத்தி இருக்குற எல்லாரும் சிரிச்சப்ப… கண்ல இருந்து கர கரன்னு தண்ணி… ஆனா அதுகூட எனக்கு பழக்கமானது தான்….

 

வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்னை நினச்சு நானே அழுகிறது பழகிடுச்சு… என்னை ஏன் இப்டி பயந்தாங்கொள்ளியா படச்சேன்னு சாமி கிட்ட கூட சண்ட போட்ருக்கேன்..

 

ஆனா எதுவும் மாறல… நானும் மாறல… நான் பயந்துகிட்டே தான் இருக்கேன்.. என்னை பார்த்து சிரிக்கறவங்க சிரிச்சுட்டே தான் இருக்காங்க…

 

சில சமயம் எனக்கே சிரிப்பா வரும் என்ன நினைச்சா…. பின்ன பல்லிய பார்த்தா பயம்… கரப்பான் பூச்சிய பார்த்தா பயம்… கரண்ட்டு கட்டானா பயம்.. நாய பார்த்தா பயம்… நாய்க் குட்டிய பார்த்தாலும் பயம்.. சைக்கிள் ஓட்ட பயம்.. தனியா கடைக்கு போக பயம்… தெரியாதவங்க கூட பேச பயம்.. டீச்சர பார்த்தா பயம்… எக்ஸாம் பார்த்தா பயம்… ஏன் வீட்டுல எங்க அப்பாவ பார்த்தா கூட பயம்தான்…

இப்படி எல்லாமே பயம்…. பயம்… பயம்..

 

சில சமயம் என்னை பார்த்தே எனக்கு பயம் !! ஏன் நான் மட்டும் இப்படி இருக்கேன்னு…

 

நானும் எவ்வளவோ என்ன மாத்திக்க முயற்சி பண்ணினேன்… முடியல… என்னோட பயத்துனால நான் இழந்தது ரொம்பவே அதிகம்…

 

‘ சின்னவளா !! அவள கூட்டிகிட்டு போயி… காரியம் கெட்டு குட்டிச்சுவரா போகும்… பயந்தே சாவா… அப்பறம் நாங்க மந்திரிச்சு கூட்டியாரனும்.. அவ சரிப்பட்டு வரமாட்டா.. நீங்க பெரியவள அனுப்புங்க… ’

 

சொந்தக்காரங்கள்ள ஆரம்பிச்சு பக்கத்து வீட்டுக்காரங்க வரைக்கும் எல்லாருமே எல்லா பக்கமும் என்ன ஒதுக்கினாங்க..

 

அவ்ளோ ஏன் என் அப்பா கூட… கொஞ்ச நாள் என்னோட பயத்த போக்க முயற்சி பண்ணினாரு.. ஆனா அவருக்கு முடி கொட்டுனது தான் மிச்சம்.. கழுத எப்படியோ போன்னு விட்டுடாரு.. மொத்தமாவே…

 

அப்புறம் ப்ரெண்ட்ஸ்… எல்லாரும் சேந்து லீவுல ஊர் சுத்துவாங்க.. என்னையும் கூப்பிடுவாங்க… ஆனா எனக்கு எதாவது ஆய்ருமோனு பயம்.. போக மாட்டேன்…

 

சரி எதையும் நினைக்காம அமைதியா தூங்குவோம்னு வந்து மெத்தைல படுத்து.. ஒரு பாட்டை போட்டு விட்டேன்.. அப்டியே இசைல மூழ்கி விட்டத்தை பார்த்துட்டு இருந்த நான்.. என் பார்வையை கொஞ்சம் கீழ இறக்குனப்போ.. செவுத்துல இருந்த போட்டோவுக்கு மாலை போட்டு  அதுல சிரிச்ச மொகமா இருந்த என் பாட்டியை பார்த்தேன்.. ஒரு நொடில ஏதேதோ மனசுல வந்து போச்சி..

 

செத்துப்போன பாட்டி என்னய்ய  வா வா ன்னு கைய நீட்டி கூப்புடுற மாறியே ஒரு பீல் !!

 

ஐயோ ஆள வுடு கெழவின்னு ஓடுனவ தான்.. அன்னைல இருந்து பாட்டி போட்டோவுக்கு என் ரூமுல இடம் இல்ல. என் பயம் இப்படி உயிரில்லாத பொருட்களை கூட விட்டுவைக்கல..

 

இப்படியே நான் எல்லாத்தையும் ஒதுக்குறேனா.. இல்ல என்னை  எல்லாரும் ஒதுக்குறாங்கலான்னு ஒரு கண்பியுஷன்லையே என்னோட கால் வாசி வாழ்நாள் போயிடுச்சு…

 

எந்த வித முன்னேற்றமும் இல்லாம…

 

எங்க ஊர்ல இருந்து அஞ்சு கிலோமீட்டர்ல இருக்குற ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் பி.ஸ்.சி படிச்சேன்…

 

ஆனா எனக்கு ஆசை ஆர்க்கியாலஜி படிக்கணும்னு.. ஆசை மட்டும் இருந்தா போதுமா… அது படிக்க நான் டவுனுக்கு போகணும்..

 

புது எடம்… புது ஊரு.. தனியா போக பயம்… அந்த கனவு என்னை பார்த்து பயந்து ஓடிருச்சு… ம்கூம்.. காரித் துப்பிட்டு போயிருச்சு.

 

படிச்ச அந்த காலேஜ்லையே லேப் அசிஸ்டன்ட் வேலை…. இன்னும் ஒரு டிகிரி பண்ணினா அங்கேயே லக்ஷரர் வேலை தரேன்னாங்க… ஆனா நான் வேணாம்னு சொல்லிடேன்… காரணம் வேற என்ன ??

 

பாழாப் போன அந்த பயம்… நாற்பது அம்பது பேர் முன்னாடி நின்னு.. நான் பாடம் நடத்தி.. ம்கூம்… கற்பனைலையே என்னால நிக்க முடியல… அப்புறம் எங்க ??

 

யாரோட தொந்தரவும் இல்லாம என்னோட கூட்டுக்குள்ள நான் என் பயம்  மட்டும்னு வாழ்க்கை நல்லா போகலைனாலும் சுமாரா போயிட்டு இருந்துச்சு.. அந்த நாள் வரைக்கும்…. என் வாழ்கையே தலைகீழா மாறின நாள்…

 

டிசம்பர் 7

 

காலேஜ்ல பிராக்டிகல் நடந்துட்டு இருந்துச்சு… கடைசி பேட்ச் முடிய ஆறு மணி ஆகிடும்… என் ஊருக்கு போற பஸ் அஞ்சு மணிக்கே போயிரும்… அதுக்கப்புறம் நடந்து தான் போகணும்…

 

சொலுஷன் எல்லாம் கலக்கி ரெடியா எடுத்து வெச்சுட்டு… என் கூட வேலை பாக்குற கமலி அக்கா கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தா… பிரின்சிபால் சார் உள்ள வந்து ஜம்முன்னு உக்கார்ந்து கிட்டாரு… உடனே என் மொகம் உம்முனு மாறிருச்சு..

 

இதுவரைக்கும் அவருகிட்ட நான் பேசின வார்த்தை குட் மார்னிங் மட்டும் தான்… வேலைல சேரும் போது இண்டர்வியு கூட இல்ல… இருந்திருந்தா இந்த வேலை நிச்சயம் எனக்கு இல்ல… என்மேல இருந்த நல்ல அபிப்பராயத்துல வேலை கொடுத்துட்டாங்க..

 

பிரின்சிபலை மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.. அவருகிட்ட வீட்டுக்கு போக பெர்மிஷன் கேக்கலாம்னு போகைல…. என் முன்னாடி பறக்குது ஒரு ஸ்டுடென்ட்டோட எக்ஸாம் பேடு…

 

பிட் அடிசிட்டானாம்…. கடவுளே… ரெண்டு ஸ்டெப் முன்னாடி வெச்ச என் கால் என் பெர்மிஷன் இல்லாமயே நாலு ஸ்டெப் பாக் அடிச்சிருச்சு…

 

அவனுக்கு பிட் அடிக்கவாச்சு தைரியம் இருந்திருக்கே !! உனக்கு வீட்டுக்கு போறதுக்கு பெர்மிஷன் கேட்க கூட தைரியம் இல்ல.. தூஊஊஊ… வேற யாராச்சும் துப்பரக்குள்ள என்னை நானே துப்பிக்கிட்டேன்..

 

ஆறு மணிக்கு பேட்ச் முடியவும் என்ன பண்றதுன்னு தெரியாம அப்பாக்கு போன் பண்ணினா அவரு நான் வெளில இருக்கேன்.. என்னால வரமுடியாது மொள்ள நடந்து போயிருன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டு வெச்சுட்டாரு….

 

என் இதயம் வெளிய எட்டி குதிச்சிருச்சோன்னு எனக்கு ஒரு பீல்…

 

ஊருல இருக்குற எல்லா சாமியையும் கூட கூட்டிட்டு மெதுவா எங்க ஊருக்கு போற வழில நடக்க ஆரம்பிச்சேன்…

 

தெரிஞ்சவங்க யாராவது வந்தா கூடவே போயிடலாம்னு பார்த்தா ஒரு ஈ காக்கா இல்ல… அன்னிக்கு சனி கிழமை… சந்தை நாள்…. யாரும் இந்த பக்கம் வரமாட்டாங்கன்னு அப்போ தான் நியாபகம் வந்துச்சு….

 

மத்த நேரம்னா கண்ண மூடிட்டு இருந்திருப்பேன்… இப்ப அதுவும் முடியாம… ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன்…

 

பாதி தூரம் வந்திருப்பேன்… ஒரு பைக் கவுந்து கிடந்துச்சு…. பாக்கவுமே ஆல் பார்ட்ஸ் ஆட்டோமாட்டிக்கா ஜெர்க்க்க்….  

 

அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்… இங்க பொழுது சாயுற நேரத்துல குடிச்சுட்டு கவுந்து கிடப்பானுங்கலாம்…

 

இப்போ என்ன பண்ண ? முன்னாடி போகவா இல்ல இப்படியே பின்னாடி திரும்பி வந்த வழில போகவா…. சுத்தியும் பேந்த பேந்த பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன்.

 

இருட்ட வேற ஆரம்பிச்சுடுச்சு…. பயத்துல கை கால் எல்லாம் வேர்த்திருச்சு.. கூடவே கண்ணும்…

 

எதையும் கண்டுக்காம முன்னாடி வெச்ச கால பின்னாடி வெக்காம போய்டே இருன்னு உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லிச்சு… ஒழுங்கா ஊடு போய் சேர்ந்தா போதும்னு வேகமா எட்டு வெச்சேன்.

 

கவி சொல்லிருக்கா… எப்பயுமே மனசு சொல்லுறத தான் கேக்கனும்னு… அவ சொல்லி இதுவரைக்கும் எதையும் கேட்டது இல்ல… நாளைக்கு உயிரோட இருப்போமோ இல்லையோ கடைசியா இதையாவது கேப்போம்னு முடிவு பண்ணி முன்னாடி போனேன்…

 

கிட்ட நெருங்க நெருங்க… என்னோட குட்டி இதயம் உள்ள இருக்க முடியாம எகிறி குதிச்சு வெளிய வந்திடுச்சு…

 

தண்ணி… தண்ணி…. னு முனகல் சத்தம்….

 

சகலமும் அரண்டுருச்சு… ஆளே இல்ல… சத்தம் மட்டும் வந்தா !!

 

ராம் ராம்னு சொல்லிட்டே வேகமா அந்த இடத்தை கிராஸ் பண்ணும்போது மெல்ல என் கண்ணு சைடுல பார்க்க.. கரப்பாண்பூச்சி மாதிரி கவுந்து கிடந்த வண்டிக்கு அந்தப்புறம் ஒருத்தன் விழுந்து கெடந்தான்….

 

குடிகார நாய் னு திட்டிட்டே நடந்தேன்…  

 

மறுபடியும் தண்ணி தண்ணினு கேட்டான்…

 

இவ்ளோ தண்ணி போட்டு மட்டையாயிட்டு திரும்பவும் தண்ணி கேக்குறான் பொறம்போக்குன்னு மனம்போன போக்குல திட்டிட்டு நடந்தா புடவைல ஏதோ தடுக்குச்சு…

 

கீழ குனிஞ்சு பார்த்தா அந்த பக்கி என் டிரெஸ்ஸ பிடிச்சுட்டு இருந்தான்…

 

எப்படி தப்பிக்கறதுன்னு யோசிக்க கூட முடியல.. நடு நடுங்கி போயிட்டேன்…

 

மூச்சு விடுறது கூட மறந்து போச்சு… நாக்கு வறண்டு ஓட்டிகிச்சி…

 

சொல்லிட்டு இருந்த ராம் மறந்து போயிருச்சு….

 

அப்போ தான் கண்ணுல பட்டுச்சு…. அ… அது…

 

ரத்தம்….. அவன் முகத்தில இருந்து…. அவன சுத்தியும்…. ரத்த வெள்ளத்தில கெடந்தான்….

 

நான் அவன பாக்குறன்னு தெரிஞ்சதும்… போ…ன்…. ஆம்…புல…ன்…ஸ்…னு திக்கி திணறி சொன்னான்…..

 

அவன் மொதல்ல சொன்ன தண்ணி.. தண்ணி ஞாபகம் வந்துது… அந்த தண்ணி இந்த தண்ணி இல்லைனு அப்போதான் புரிஞ்சுது. பாக்ல இருந்த வாட்டர் பாட்டிலோட அவன் பக்கம் போனேன்…

 

அவன் முகத்த பக்கத்துல…. ரத்தத்துல பார்த்த உடனே… சுத்துது சுத்துது இந்தாரு தான் எனக்கு.. தலை கிறுகிறுக்க ஆரம்பிச்சுடுச்சு….

 

என் நிலைமை அவனுக்கு புரிஞ்சுது போல…. அந்த நிலைமைலயும் என்னை பயப்பட வேண்டாம்னு சொன்னான்…

 

தலைய ஆட்டிட்டே… கஷ்டப்பட்டு அவனுக்கு தண்ணிய கொடுத்தேன்……

 

அடுத்து போன் பண்ணனும்னு ஞாபகம் வந்து என் பாக்கை எடுத்து அதிலிருந்த போனை கைல எடுத்தா.. கை உதறல்ல அது கீழ விழுந்து செதறு தேங்காயா செதறிருச்சு..

 

ஐயோ சில்லு சில்லா போச்சே !! இதுல கண்ணுல இருந்து தண்ணி  வேற வந்து தொலச்சி… என் உயிரை வாங்க…

 

உ… உ…. ங்க போ….

 

இவ ஒவ்வொரு வார்த்தையா என்னிக்கு பேசி முடிக்கறதுனு நெனச்சிருப்பான் போல.. அவனே அவன் போன் பாக்கெட்ல இருக்குன்னு சொன்னான்….

 

இதுவரைக்கும் எந்த பையன் கூடவும் பேசினது கூட இல்ல…. இப்போ இவன தொட ஒரு மாதிரி இருந்துச்சு…. ஆனா அந்த தயக்கத்தை எல்லாம் ஒரு நொடில தூக்கி போட்டுட்டு அவன் போன பாக்கெட்ல இருந்து எடுத்தேன்…

 

அது பாஸ்வோர்டு கேக்கவும் அவனை பார்த்தேன்….

 

சொன்னான்…

 

ஒரு சின்ன ஆச்சர்யம் அந்த நிமிஷத்துல கூட…

 

அவனும் என்னையே தான் பார்த்துட்டு இருந்தான்.. பாஸ்வோர்ட் போட்டு.. மொபைல் ஆன் பண்ணி.. போன் பண்ண போகும் போது என் கண்ணுல பட்டு தொலஞ்சிது அது…

 

ரத்தம்… என் கைல…

 

அவ்ளோ தான்… எல்லாம் முடிஞ்சுது….. அதோட…..

 

அடுத்த நாள் கண்ணு முழிக்கும் போது என் அம்மா என் பக்கத்துல உக்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க…. சுத்தியும் பார்த்ததுல என் வீணாப் போன மூளைக்கு புரிஞ்ச விஷயம் நான் ஹாஸ்பிடல்ல இருக்கேனுங்கறது மட்டும்தான்…

 

நா எப்படி ஹாஸ்பிடள்ளன்னு ஒரு குட்டி பிளாஷ் பாக்… ஒட்டி பாத்ததுல..    

 

கைல இரத்தத்த பாத்த உடனே…. அது வரை நா பிடிச்சி வெச்சிருந்த தைர்யம் பிச்சுகிட்டு போயிருச்சு… அப்படியே மயங்கி விழுந்துட்டேன்… அப்போகூட யாரோ என்னை காப்பாத்த முயற்சி பண்ணுனதா நிழலாடுது.. என் கன்னத்தை தட்டி தட்டி எழுப்புறாங்க..

 

அம்மா சொன்னாங்க யாரோ அந்தப் பக்கம் போனவங்க பார்த்து வீட்டுக்கு சொல்லி என்னைய இங்க கொண்டு வந்து சேர்த்துருக்காங்க…

 

கொஞ்ச நேரத்துல அப்பா வரவும் வீட்டுக்கு கிளம்பிட்டோம்… தயங்கி தயங்கி ஒரு வழியா அப்பாகிட்ட கேட்டுடேன்….

 

அவனுக்கு என்ன ஆச்சு.. எப்படி இருக்கான்னு…

 

என்னை ஒரு பார்வை பார்த்தவர்… தலைய இட வலமா அசைச்சாரு…

 

அப்படின்னா………

 

அடிபட்டு ரொம்ப நேரமா அப்படியே கிடந்ததுனால… ரத்தம் நெறைய போயிருச்சு… இங்க கொண்டு வரவும் லேட் ஆயிட்டதுனால……..

 

வேணாம்……. இதுக்கு மேல கேக்க வேணாம்னு காதை அடச்சு வச்சுகிட்டேன்….

 

காதை அடைச்சா மத்தவங்க பேசுறது தான் கேக்காது… உள்ளுக்குள்ள என்ன கீறி குத்தி கிழிச்சுகிட்டு இருக்குற என் மனசாட்சி பேசுறது கூடவா கேக்காது…..

 

இதுவரைக்கும் என் பயத்தால எதை எதையோ இழந்தாச்சு…. அது எல்லாம் ஒண்ணுமே இல்ல.. இப்ப போன உசுருக்கு முன்னாடி….

 

என்னால என் பயத்தால ஒரு உயிர் போயிருச்சு….

 

நானே கொன்னுட்டேன் அவனை… என் பயத்தால…

 

நான் மட்டும் உடனே போன் செஞ்சிருந்தா அவன் இந்நேரம் உயிரோட இருந்திருப்பான்….     

 

திரும்ப திரும்ப இது மட்டும் தான் என் மனசுக்குள்ள ஒடிட்டு இருக்கு….

 

என் கண்ணுக்குள்ள அவன் முகம் மட்டும் தான்…

 

காதுல கடைசியா அவன் சொன்ன வார்த்தைகள்……

 

அச்சமில்லை…. அச்சமில்லை….

 

சாகப்போற கடைசி நிமிஷத்துல எனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டு போயிட்டான்…    

 

நானும் செத்துட்டேன் எனக்குள்ள இருந்த பயமும் செத்துபோச்சு….

 

அவன் செத்து என்னை மறுபடியும் பிறக்க வெச்சுட்டான்….

 

என்னோட எல்லா பயத்தையும் தூக்கி போட்டேன்…. எது எதெல்லாம் எனக்கு பயமா இருக்கு வேண்டாம்னு சொன்னேனோ அதையெல்லாம் நானே தேடி போக ஆரம்பிச்சேன்…

 

பயத்தை நான் துரத்த.. துரத்த.. அது என்னை பார்த்து பயந்து போறத உணர்ந்தேன்.

 

சைக்கிள் ஒட்டவே பயப்பட்ட நான் இப்போ பைக் ஓட்ட கத்துகிட்டேன்.. ரத்தத்தை பார்த்து தலை சுத்தி விழுற நான் இன்னிக்கு ரத்த தானம் செஞ்சு பல உயிர்களை காப்பாத்திட்டேன்..

 

இந்த தைரியம் மட்டும் அப்போவே என்கிட்ட இருந்திருந்தா அவனை நிச்சயம் காப்பாத்தியிருப்பேன். இன்னும் குற்றவுணர்ச்சி மட்டும் என்னை விட்டு போகல..

 

இதெல்லாம் அவன் கிட்ட சொல்லத் தோணும்.. அதுக்கு நானும் சொர்கத்துக்கு தான் போகணும்.. அதனால அவன்கிட்ட சொல்ல நெனச்ச விசயத்தை எல்லாம் ஒரு டைரில எழுத ஆரம்பிச்சுருவேன்.. என்னை மன்னிச்சிருன்னு மட்டும் ஒரு நாளைக்கு நூறு முறை எழுதிருப்பேன்.

 

எல்லாப் பக்கமும் என் வழி தனி வழின்னு போக ஆரம்பிச்சேன்…

வெளி உலகத்த புது பார்வைல பார்க்க ஆரம்பிச்சேன்…

 

வீட்ல சொன்ன கல்யாணத்த எதிர்த்து எனக்கு பிடிச்ச படிப்ப படிக்க ஆரம்பிச்சேன்….   

                                                    

காலம் மாற.. காட்சி மாற.. நானும் என்னை மாத்திக்கிட்டே வந்தேன்.. அவன் எனக்குள்ள இருந்து என்னை மாத்த வெச்சான்.

 

இப்படி எல்லாமே மாறிப் போச்சு… மாறாதது…. தினமும் எனக்குள்ள இருக்குற அவனோட முகமும்.. அவனோட அந்த வார்த்தைகளும்…. அவனோட குரல்.. அது எனக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு.. எப்போவும் அவன் என்கூடவே இருக்கிற பீல்.

 

அப்போ தான் எங்கப்பா ஒரு வரன் வந்திருக்குன்னு ஆரம்பிச்சாரு… என்னோட ஒரே முடிவு.. எனக்கு கல்யாணம் வேணாம்…. தைர்யமா சொல்லிட்டேன்..

 

ஏன்னு கேட்டாங்க… சொல்ல முடியல… சொன்னா நிச்சயம் உளருரான்னு சொல்லுவாங்க… அதான் பேசாம இருந்துட்டேன்…

 

ஒருத்தன் வாழ்க்கையை அழிச்சிட்டு என்னால என்னோட வாழ்க்கையை பத்தி யோசிக்க முடியல.. அதோட எல்லாம் முடிஞ்சுதுன்னு நினச்சுட்டேன்… நான் மட்டும் தான்…

 

திடீர்னு எங்கப்பா வந்து சொன்னாரு சாயந்தரம் மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்கன்னு…

 

அப்போ நான் இவ்ளோ சொல்லியும் இவங்க இப்படி பண்ணினா என்ன அர்த்தம்னு ஒரு கோவம்… வரட்டும்…. அவங்க முன்னாடியே எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்ல போறேன்னு முடிவு எடுத்தேன்….

 

சாயந்தரம் அவங்களும் வந்தாங்க… என்ன வெளில விடாம பிடிச்சு வெச்சுருந்தா எங்க அக்கா…

 

எப்படியும் காபி கொடுக்க போய் தானே ஆகணும்… அப்போ இருக்கு உங்களுக்கு..

 

நான் எதிர்பார்த்த நேரமும் வந்திருச்சு.. காபி தட்டோட போனேன்…. மொத்தமே ஒரு அஞ்சு பேர் தான்.. எங்க பக்கம் அப்பா அம்மா… எங்க அக்கா இருந்தா…

 

இங்க பாருங்க…. னு கொஞ்சம் மெதுவாத்தான் ஆரம்பிச்சேன்…

 

மாப்பிளையாய் ஒருத்தன் வந்தானே அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்….

 

நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன்

உன்னைப் பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை

ன்னு சுஷீலாமா வாய்ஸ் எனக்கு கேக்குது..

 

தட்…..

 

அப்படியே மயங்கி விழுந்துட்டேன்…

 

முழிச்சு பார்த்தா என் ரூம்ல… என் பெட்க்கு பக்கத்துல ஒரு சார்ல உக்கார்ந்து என் டைரிய படிச்சுகிட்டு இருந்தான்….

 

அவன் பார்த்த பார்வையே எனக்கு உணர்த்திருச்சு.. என் டைரியை முழுசா படிச்சுட்டான்னு..

 

நான் எழுந்து உக்கார்ந்ததும் அவன் கேட்ட கேள்வி

 

இன்னும் நீ மாறவே இல்லையா ?

 

மாற்றம் ஒன்றே மாறாதது எனில் என்னை மாற்றவே பிறவி எடுத்து அதில் வெற்றியும் கண்ட மன்னவன் அல்லவா அவன்….  

 

அன்னிக்கு அப்பா சொல்ல வந்ததை முழுசா கேட்காம நானா முடிவுசெஞ்சுட்டு ஒரு குற்ற உணர்ச்சிலேயே இத்தனை நாள் வாழ்ந்திருக்கேன்.   

 

அதுவும் நல்லதுக்கு தான் இல்லாட்டி நான் மாறறது நடக்கற காரியமா !!

 

இப்போ ஒரு நிம்மதி மனசு பூரா.. அவனை பார்த்தனாலயா இல்ல அவன் உயிரோட இருக்கான் அவனுக்கு எதுவும் ஆகல.. நானும் யாரோட இறப்புக்கும் காரணம் இல்லைனு தெரிஞ்சதாலயான்னு எனக்கு சொல்ல தெர்ல..

 

அவன் ரொம்ப சந்தோசமா இருக்கானு அவன் முகமே காட்டி கொடுக்குது.. என் டைரியின் மகிமை அப்படி..

 

அவ்ளோ நேரம் இருந்த அதிர்ச்சி போயி கண்ணுல தண்ணி தாரை தாரையா கொட்ட ஆரம்பிக்குது…

 

நியாயமா அவன் என்ன பண்ணிருக்கணும்….

 

வழக்கமா கேக்குற மாதிரி ஏன் அழுகுறன்னு கேட்டு இருக்கனும்… இல்ல பொண்ணுங்க கண்ணீர் ரொம்ப ப்ரீசியஸ்.. அதை இப்படியெல்லாம் வேஸ்ட் பண்ணாதன்னு அட்வைஸ் பண்ணிருக்கணும்….  

 

அதையெல்லாம் விட்டு ஏதோ மிஸ்டர் பீன் வந்து அவன் முன்னால நின்னு பெர்பார்ம் பண்ணற மாதிரி பக்கி சிரிக்க ஆரம்பிக்குறான்…

 

நான் அழுகுறேன்… அவன் சிரிக்கிறான்…

 

கோவம் தலைக்கேறி மைன்ட் பிளாக் ஆனதுல கண்ணுல ஓபன் ஆயிருந்த வாட்டர் பால்ஸ் ஸ்டாப் ஆகிரிச்சு….

 

அவனும் சிரிப்பை நிறுத்திட்டான்…

 

என்னையே பார்த்துட்டு இருந்தான்.. எனக்கு கேக்க வேண்டிய விஷயம் நெறைய இருந்துச்சு அவன்கிட்ட…

 

நீங்க…. உயிரோட தானே இருக்கீங்க !! அப்பறம் ஏன் செத்து போயிட்டதா பொய் சொன்னீங்க….

 

மண்டைல மசாலா தான் இருக்குன்னு நானே கன்பார்ம் பண்ணிகிட்ட மொமென்ட்..

 

செத்துப் போனவன் எப்படி வந்து என்கிட்ட சொல்லுவான்….

 

மானசீகமா மண்டைய முட்டிகிட்டேன்….

 

அடுத்து அவன் கிட்ட கேள்வி கேக்க தோணுமா என்ன ?

 

அமைதியா நகத்தை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்… அவனே ஆரம்பிச்சான்…

 

என்கிட்ட ஏதும் கேக்கனுமா ?

 

அவசரமா ஆமா சொன்னேன்….

 

கேளு….

 

நீங்க எப்படி உயிரோட இருக்கீங்க ?

 

கடவுளே… எல்லாமே நான்சிங் ஆ போகுதே….

 

வாட்…. அப்படின்னு அவன் ஷாக் ஆவானு பார்த்தா…      

 

உன்னால தான் இந்த உயிர் இன்னும் இருக்குன்னு என் கண்ண பார்த்து கைய பிடிச்சு சொன்னான்…..

 

திகைச்சு போய் அவன பார்த்தேன்…..

 

எப்படி ???

 

அது உனக்கு தான் தெரியும்…

 

அது தெரிஞ்சா நான் ஏன் கேக்க போறேன்….. என்கிட்டயே கேட்டுகிட்டு அவனை பார்த்து முழிச்சு வெச்சேன்.

 

நான் பார்த்த பார்வைல.. அது தெரியனும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ… சிம்பிள் ஆஹ் சொல்யுஷன் சொல்லிட்டான்… அழகா கண்ணை சிமிட்டி.

 

அப்புறம் என்ன ?

 

ஒரே வாரத்துல….

 

பாரதி வெட்ஸ் பாரதி….

 

கல்யாணத்துல எல்லாரும் எங்களைப் பத்தி பேசுனாங்களோ இல்லையோ எங்க பேர பத்தி பேசுனாங்க…….   

 

அவன் என் கழுத்துல மூணு முடிச்சு போட்டதும் நான் கேட்ட மொத கேள்வி….

 

அப்படி நான் என்ன பண்ணுனேன் ?

 

அந்த நேரத்துல நீ தான் எனக்குள்ள ஒரு விதைய வெதச்ச…. அது எனக்குள்ள விருஷமா எழுந்ததால  தான்.. அதன் நிழலுல இன்னிக்கு நீயும் நானும் நின்னுட்டு இருக்கோம்..

 

எந்த நேரத்துல !! என் மண்டைல பல்ப் எரிய மறுத்த தருணம்.. புரியலைனு சொல்லி அவனை பாவமா பார்த்து வெச்சேன்..

 

சிரிச்சுகிட்டே சொன்னான்… எனக்கு ஒன்னே ஒன்னுதான் தோணுச்சு..

 

சத்தியமா புரியல..

 

என் கைய பிடிச்சுக்கிட்டே.. உன்ன காப்பாத்தணும்னு தோணுச்சு.. அப்படினான்.

 

அவன் அப்படி சொன்னதுமே என் கண்ணுல ஷட்டர் ஓபன்.. இப்போதான் பல்ப் பிரகாசமா எரிஞ்சுச்சு எனக்குள்ள..

 

அவன் ரத்தத்தையே பார்த்து மயங்கி விழுந்த நான் எங்க !! அந்த நிலைமைலயும் என்னை காப்பாத்த போராடிட்டு இருந்த அவன் எங்க !! அவன் என்னை காப்பாத்த முயற்சி செஞ்சதுல தான் அவனோட வில் பவர் அதிகமாருக்குனு சொல்றான்.

 

என்னுள் பல மாற்றம் புரிய வந்த மன்னவன்னு அவனை நான் நெனச்சா.. சத்தியவானை மீட்ட சாவித்ரி ரேஞ்சுக்கு பக்கி என்னை நெனச்சிருக்கு..

 

இருக்குற இடம் மறந்து அவன் மேலையே சாஞ்சுகிட்டேன்.. அந்த போட்டோக்ராபர் வேற நல்லா இருக்கு போஸுனு சொல்லி ரெண்டு கிளிக் எடுத்துகிட்டான்.

 

சரி எடுத்துட்டு போடான்னு நானும் ரெண்டு நிமிஷம் அந்த நேரத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன்.

 

இப்போவும் புன்னகை மாறாம சொன்னான் என் கண்ணை பார்த்து..

அந்த நிமிஷம் தோணுச்சு.. உன்னை பாரதி கண்ட புதுமைப் பெண்ணா பாக்கனும்னு….

 

பார்த்துட்டீங்களா…. ?? நான் ஆர்வமா அவன் முகத்தையே பார்க்க..

 

இதோ… என் முன்னாடி… என்னோட மனைவியா…. இந்த பாரதி கண்ட புதுமைப் பெண் னு சொல்லி அழகா சிரிச்சான்.

 

உங்கனாலதான் இந்த பாரதி புதுமை பெண்ணாவே மாறிருக்கா.. னு சொல்ல.. என் நெத்தியில திலகம் வெச்சு விட்டான்…

 

என்னோட பிறவிப்பயனை அடஞ்சுட்டேன் என் பாரதி ஆசைப்பட்டமாறியே பாரதி கண்ட புதுமை பெண்ணாய் மாறி….

 

என்றும் அன்புடன்….

திருமதி. பாரதி                                                                                                                          

Advertisement