Advertisement

7

தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது.

மீண்டும் ஒரு வயதை குறிப்பிட வேண்டும்.. தேவ் எழுந்திருக்க அவனை தடுத்துவிட்டு.. “இரு இரு.. இப்போ என் டர்ன்” என்று எழுந்து சென்றாள் ரியா..

ஒரு யோசனையுடன் செங்கல் பெட்டியை கையிலெடுத்து அவள் பாட்டிற்கு ஒரு வயதை பதிவு செய்துவிட்டு வந்தமர்ந்தாள். டோராவும் தேவும் ஆர்வமாய் பார்த்திருக்க.. திரை ஒளிர்ந்தது.. 

கோள்கள் அனைத்தும் ஒருநொடி தூரமாய் அடுத்தநொடி பக்கமாய் வந்து வந்து போக.. காலம் சுழல.. பூமியில்.. ஒரு வீட்டினில்.. கடைசியாக சுழற்சி நின்றது.

டோரா டோரா டோராவோடு பயணம்

புஜ்ஜி செல்லும் பொது நீங்கள் வரணும்

முயற்சி திருவினையாக்கும்

முயன்றால் சாதிக்க முடியும்

எங்க நம்ம போறோம்

சாக்லேட் மரத்துக்கு

டோரா டோரா டோராவோடு பயணம்

என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க..

“தேவ்!! அதென்ன ஒரு பெட்டி மாறி இருக்கு அதிலிருந்து மியூசிக் பிலே ஆகுது” என ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள் ரியா.

“எனக்கும் தெரியலையே!! டோரா டோரான்னு வருது” என்றபடி டோராவை திரும்பி நோக்கினான் தேவ்.

“இட்ஸ் டெலிவிஷன்.. எர்த்ல ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பீப்பிள் யூஸ் பண்ணுனது.. பார் என்டர்டைன்மெண்ட் பர்ப்பஸ்.. ‘டோரா தி எக்ஸ்ப்ளோரர்’ இது ஒரு கார்ட்டூன்.. நெறய சின்ன பசங்களோட கனவு கன்னி தான் இந்த டோரா” என்று கம்ப்யூட்டர் வாய்ஸில் விளக்கிக் கொண்டிருந்தது டோரா ரோபோட்.

மீண்டும் தேவ் திரையை நோக்க.. ஒரு பெண் குழந்தை நாட்காலியில் அமர்ந்துகொண்டு எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள். அதில் நடுவினில்

“குள்ள நரி திருடாதே!! குள்ள நரி திருடாதே” என்று தன் குரலில் பாடியவாறு இருந்தாள்.

“ஏய் என்ன ரியா இது.. பாட்டி என்ன பண்ணுறாங்க..”

“ஷ்ஷ்.. அவங்க இப்போ பாட்டி இல்ல.. பாப்பா..” என்று பிழை திருத்தம் செய்ய..

“என்ன ஏஜ் செட் பண்ணுனே!!” என்றான் தேவ் குழப்பத்துடன்.

“அட் ஏஜ் செவன்” 

“பாப்பா என்ன சாப்பிடுது??”

“எனக்கு எப்படி தெரியும்!! நம்ம ப்ளூ பிளானெட்ல்ல நான் பார்த்ததில்லை”

“பப்பு சோச்சி.. இட்ஸ் பேமஸ் புட் ஐட்டம் தேர். வித் மேங்கோ சைடு டிஷ்.. அதை பச்சயா பறித்து உப்பு மிளகாய்த்தூள் தூவி சாப்பிட்டா அவ்வளவு டேஸ்ட் ஆஹ் இருக்கும்.. இது இயற்கையா மாமரத்துல இருந்து கிடைக்கும்” என்றது டோரா.. அதன் மெமரியில் இப்படித்தான் ஸ்டோர் ஆகி இருந்தது.

‘மரம் எல்லாம் இருந்துச்சா அந்த காலத்துல.. அப்போ ஆக்சிஜென் இலவசமா கிடைச்சிருக்கும் அவங்களுக்கு..’ என்று சிந்தனை வயப்பட்டிருந்தாள் ரியா.

அனைத்தையும் கேட்டபின் தேவ் திரையை உற்று பார்த்தான்.. அந்த சின்ன பெண் தீவிரமாக சாப்பிட்டுக்கொண்டே இருக்க.. அவளை சுற்றிலும் சிதறிக் கிடந்தது உணவுப் பொருட்கள்.

‘எம்மாடி பல கோடியை இவ பாட்டி பாழாக்கிட்டு இருக்கு.. இந்த ஃபுட் ப்ராடக்ட்ஸ் எல்லாம் வெச்சு ப்ளூ பிளானட் பீபிள்க்கு எவ்வளவு டேப்லேட்ஸ் தயாரிக்கலாம்!!’ என்று எண்ணிய தேவ் குறிப்பெடுத்துக்கொண்டான்..

‘உணவுப் பொருட்களை வீணாக்குதல்.. ரியாவின் பாட்டி சிவபரணிகா தான் உலகம் அழிய முக்கிய காரணம்’ என்று மேற்கோளிட்டுக் கொண்டான்.

“ரியா!! உன் பாட்டி ஓட ஜீன் உங்கிட்ட இருக்குன்னு ஒத்துகிறேன்”

“எப்படி சொல்றே”

“அவங்க டோரா பாக்குறாங்க நீயும் உன் பெட் ரோபோட்டுக்கு டோரான்னு பேரு வெச்சிருக்கே பாரு.. ஆயிரம் வருஷம் கழிச்சும் உங்களுக்குள்ள ஒரு மேட்ச் பாரேன்”

அதை எல்லாம் கவனமாக குறித்துக்கொண்டான் ரியா.. அசைன்மென்டில் குறிப்பிடுவதற்காக.

போதி தர்மர் வம்சா வழியோடு தன்னையும் ஒப்பிட்டுக் கொண்டாள்.

அடுத்து சிறிது நேரத்திலேயே திரை மாறியது.. காலம் சுழன்று நின்றது. அதில் இன்னொரு வீட்டில்..

ஏலியன் டிவைஸில் உள்ள மாயம் சொல்லவா

கையில் உள்ளது காகிதம் அல்ல ஆயுதம் அல்லவா

சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஸ்டாரும் இவனே

பென் டென்!!

நொடியில் மாறி இடியாய் இறங்கும் சிங்கள் குட்டியிவன்

தீமை தீர்க்க நன்மை சேர்க்க செய்யும் சம்ஹாரம்

விண்ணை வெல்ல மண்ணில் வந்த தசாவதாரம்

பென் டென்!!

என்று டிவியை பார்த்தபடி கையில் பாப்கானோடு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

“அது.. அது.. என்.. என்..” என்ன தேவ்விற்கு வார்த்தைகள் திணற..

“என்னடா ஓவர் செண்டிமெண்டா… அது உன் பாட்டி சங்கமித்ரா தான்.. அங்கேயும் கார்ட்டூன் தான் ஓடுது.. ஆட்டம் போட்டுக்கிட்டே எத்தனை ஃபுட்டை சிந்தி வெச்சிருக்கு பாரு உன் பாட்டி.. நீயும் அவங்கள போலத்தான் உன் வாட்ச்சிற்கு பென் டென்னு பேரு வெச்சிருக்கே” என்றதும் தேவ் சமாளிப்பாக சிரித்து வைத்தான்.

ரியாவும் அவன் பாட்டி மீது கம்பளைண்ட் பைல் செய்து கொண்டாள். டோரா இருவரையும் பார்த்து “த்தூஊஊ..” எனக் காரித் துப்பியது. அப்போதும் அதில் அணுவளவும் நீரில்லை புகை தான் அதன் வாயிலிருந்து வெளியேறியது.

மூவரும் திரையைப் பார்க்க.. அந்த முப்பது நிமிடங்களும் திரையில் கார்டூனோடு தான் கழிந்தது. இப்போது திரை தானாக மூடிக்கொண்டது.

*****

8

சிறிது நேரத்திலேயே இப்படி காலக்ஸி பாக்ஸ் சொல்லாமல் கொள்ளாமல் அணைந்துவிடுவதால் கோபமுற்ற ரியா 

“என்ன தேவ் இந்த பாக்ஸ் திடீர்னு ஸ்டாப் ஆகிருதே!! நீ ரூல்ஸ் எல்லாம் சரியாய் படிச்சியா??” என்று சந்தேகமாய் வினவ

அதன் பின்னரே தேவிற்கு ஒன்று நினைவு வந்தது.. இதில் பாட்டியின் வயதை பதிவு செய்தபின் ஆளுக்கு பதினைந்து நிமிடங்கள் என மொத்தம் முப்பது நிமிடங்களில் திரை மூடிவிடும் அதுவரையில் பூமியில் நடந்த நிகழ்வுகளை பார்த்துக் கொள்ளலாம். 

அதோடு சேர்த்து இன்னொன்றும் நினைவில் வர விழி பிதுங்கி நின்றான்.

“என்னாச்சு தேவ்”

“அகைன் ஒரு தப்பு நடந்திருச்சு”

“புரியல”

“மூணு சான்ஸ் தான் நமக்கு..”

“இன்னும் புரியல”

“ப்ச்.. இன்னும் ஒரு ஏஜ் மட்டும் தான் செட் செய்ய முடியும்.. அதுக்குள்ள நமக்கு தேவையானதை நோட்ஸ் எடுத்துக்கணும்”

“அடப்பாவி!! வயசான பாட்டியை வரவெச்சு ஒரு சான்ஸ் வேஸ்ட் பண்ணிட்டியே..”

“நீ மட்டும் என்ன குழந்தையை வரவெச்சு இன்னோரு சான்ஸ் வேஸ்ட் பண்ணிட்டே”

“எல்லாம் உன்னாலதான்.. மேம் சொல்லும்போது கவனிக்காம.. ஒழுங்கா ரூல்ஸ் படிக்காம வந்து சொதப்பிட்டே” என ரியா குற்றம் சாட்ட

“நீ ஸ்கூலுக்கே வரல.. நீ பேசாத.. நீயும் தான் காரணம்..” என்றான் தேவ்.

இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த டோரா.. “சைலென்ஸ்..” என்றதும் இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு அதனைப் பார்க்க.. அதுவே சென்று ஒரு வயதை பதித்துவிட்டு வந்து அமர்ந்தது அதற்குரிய ரோபோ நடையுடன்.

திரை சுழன்றது..

தேவும் ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரையை பார்க்க.. 

‘தம்பி யூனிவர்சிட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று ஒரு வரவேற்புப் பலகை தெரிந்தது.

அதில் கல்லூரி பயிலும் ஒரு இளம் பெண் தன் கையில் இருந்த புத்தகத்தை தூக்கிப்போட்டு பிடித்தபடி வந்து கொண்டிருக்க..

“குய்ய்..” இப்போது வந்தது விசில் சத்தம்..

“தட்ஸ் மை கிராணி சங்கமி” என்றான் தேவ் உற்சாகமாய்.. அவனை முறைத்த ரியா திரையை பார்க்க.. 

நேரம் ஆகிய பதற்றத்தில் போவோர் வருவோரை எல்லாம் முட்டி தள்ளிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் ஒரு இளம் பெண் வந்து கொண்டிருக்க..

“குய்ய்..” அடுத்த விசிலை போட்ட ரியா, 

“கண்ணா அங்க பாரு.. மை கிராணி சிவா ஆன் தி வே” என்றாள்.

திரையில்..

சங்கமித்ரா, சிவபரணிகா இருவரும் தாமதமாக வந்த காரணத்தால் வகுப்பிற்குள் அவர்களை நுழைய விடாமல் ஸ்டாப் துரத்திவிட..

“குய்ய்..” நீண்ட நேரத்திற்கு ஒலித்தது இந்த விசில் மட்டும்.. எல்லாம் டோரா தான்.. ‘இதுக ரெண்டும் தான் லூசுகன்னு பார்த்தா.. இதுக பாட்டிக இதுகளுக்கே டஃப் குடுக்குங்க போலயே!!’ டோராவின் மைண்ட் வாய்ஸ்.

சங்கமித்ரா சிவபரணிகாவின் காட்சிகள் எல்லாம் இதற்கு முன்பு வந்ததுபோல் இல்லாமல் இப்போது தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. இருவரும் இந்த வயதில் ஒன்றாய் பயில்வதால்.. அதற்குமேல் இருவரும் தோழிகள் என்பதால்..

‘எங்க க்ரானிஸும் எங்களை மாதிரியே பிரெண்ட்ஸா!! அதுனாலதான் இந்த சீன்ஸ் எல்லாம் தொடர்ந்து வருதா!!’ என தேவ் ரியாவிற்கு ஆனந்த அதிர்ச்சி..

உடனடியாக அடுத்த கட்ட காட்சியாய் தேர்வறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

“டென் மினிட்ஸ் மோர்” என்று எங்கிருந்தோ திரையில் ஒரு குரல் கேட்க..

“காப்பாத்துங்க!! காப்பாத்துங்க” என்று ரியா கூச்சல் எழுப்ப.. தேவும் செய்வதறியாமல் பார்த்திருந்தான்.

“வாட் ஹாப்பெண்ட் ரியா அண்ட் தேவ்” என்றபடி டோரா கம்ப்யூட்டர் வாய்ஸில் வினவியது. “எங்க பாட்டிகளுக்கு எதோ ஆயிருச்சு” என்றாள் பதற்றத்துடன்.

“ஒன்னும் ஆகல.. அவங்க ரெண்டு பேரும் பரபரப்பா டெஸ்ட் எழுதுறாங்க.. தூரத்தில் இருந்து பார்க்க காக்கா வலிப்பு வந்ததுபோல் உங்களுக்கு தெரியுது.. இதெல்லாம் அவர்களுக்கு சகஜம்..  அவங்களுக்கு மட்டுமல்ல அங்கு இருக்குற எல்லாருக்குமே சகஜம்.. அவங்க எல்லாரும் எதையும் தாங்கும் இதயங்கள்.. நீங்க அவங்கள பார்த்து பெருமை தான் படணுமே தவிர பயப்படக்கூடாது” என்று தன் மெமரியில் பதிந்திருந்த விஷயத்தை எடுத்துக் கூறியது டோரா.

சில நொடிகளில் திரையில் எங்கும் கரும் புகை சூழ்ந்திருக்க.. தேவும் ரியாவும் உற்று நோக்கினர்.

“இது என்னோட எம்.த்ரிஈ பேப்பர்.. இத மொதல்ல கொழுத்து” என்று சிவபரணிகா நீட்ட

“மொதல்ல என்னோட எலக்ட்ரானிக்ஸ் பேப்பரை கொளுத்திட்டு அப்பறம் அதுக்கு வரேன்” என்று சங்கமித்ரா கூற.. 

இரு பெண்களும் தங்களது பழைய வேண்டாத.. தேர்வுத் தாள்களை வைத்து போகி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“ஓ மை காட்.. சுத்தமான காற்றை அசுத்தப் படுத்தறாங்க” என்று வாயில் கைவைத்துவிட்டான் தேவ்.

அங்கு வந்த புகையை பார்த்து.. ரியா அவள் இருந்த இடத்தில இருக்கும் காற்று சுத்திகரிப்பு கருவியை ஆன் செய்துவிட்டு வந்தாள்.

‘சுத்தமான காற்றை அசுத்தப் படுத்துதல்.. கொஞ்சம் என் பாட்டி அதிகம் ரியாவின் பாட்டி’ – இது தேவின் குறிப்பு 

‘பொல்லூட்டிங் ஏர் ரிசோர்ஸஸ்.. டென் பெர்ஸன்ட் மை க்ரான்னி.. நயென்ட்டி பெர்சன்ட் ப்ரம் தேவ்ஸ் க்ரான்னிஸ் சைட்’ – இது ரியாவின் குறிப்பு

டிக்டிக்.. டிக்டிக்..  என்றொரு சத்தம்.. இருவரும் பயந்துபோய் நாளா இடத்திலும் நோக்க..

“ஏலியன் அட்டாக்..  ஏலியன் அட்டாக்”  என்று ஹை டெசிபெலில் கூவிக் கொண்டிருந்தது ஒலிப்பெருக்கி.

Advertisement