Advertisement

3

தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது.

தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என வித விதமான கோணங்களில் அறை முழுத்திலும் சிலிண்டர்களே..

“ரியா!! அடுத்த ஒரு வருசத்துக்கு பிரீத்திங் கேன் இப்போவே ஆர்டர் பண்ணி வெச்சுடீங்களே..”

“அப்பா தான் பக்கத்துல ஜூபிட்டர்ல்ல இருந்து ஆர்டர் செய்து வரவழைத்தார்.. ரொம்பவே காஸ்ட்லீ”

சுத்தமான காற்று எந்த கிரஹத்திலும் இல்லை. டின்களில் அடைத்து குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்டு மூச்சு விடுவதற்காக தயாரித்ததுதான் இந்த பிரீத்திங் கேன். இதில்லாமல் அங்கு யாரும் உயிர்வாழ முடியாது.

“உன் பேரெண்ட்ஸ் எங்க??” என்றான் தேவ் சுற்றிலும் பார்த்தபடி..

“அம்மா செவ்வாய் ல்ல.. அப்பா சனி ல்ல”

ஷீல்டு, சேப்டி ஜாக்கெட், அப்ரோன்ஸ் எல்லாம் வாங்குவதற்காக செவ்வாய் கிரஹத்துக்கு ஷாப்பிங் சென்றிருக்கிறார் அவள் அன்னை. தந்தையோ வேலைக்காக சனி கிரகத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.

இருவரும் சுவற்றை பார்த்தபடி மணிக்கட்டை அழுத்தி பிடிக்க அதிலிருந்து புறப்பட்ட ஒளியில் சுவற்றில் திரை மின்னியது.

“ஷோ மாம்” என்று ரியா கூற அவளது அன்னை திரையில் தெரிந்தார்..

ஒரு மாத்திரை டப்பாவை எடுத்துப் போட்டார். சொல்லப்போனால் அதுதான் அவர்களது உணவு. விலை ஒரு கோடி.. மாதம் ஒரு மாத்திரை போதும். கடைசியாக பூமியில் விளைந்த உணவுப் பொருட்கள் கொண்டு உருவாக்கப் பட்ட மாத்திரைகள் தான் அது.

உணவு என்பது அந்த கிரஹத்திலேயே இல்லை. இந்த மாத்திரை பசி தாகம் போன்ற உணர்வுகள் வராமலிருக்க.. ஷாப்பிங் செய்தபடியே அங்கிருந்து கை அசைத்தார் அன்னை.. இருவரும் திரையில் தோன்றியவருக்கு ஒரு ஹாய் காண்பித்தபின்,

“சி யு லேட்டர் மாம்” என்று ரியா மீண்டும் மணிக்கட்டை அழுத்திபிடிக்க.. திரையில் படர்ந்திருந்த ஒளி நீங்கியது.

“வர நேரம் ஆகுமா?” என்று தேவ் வினவ

“ஸ்பேஸ் ஷட்டில்ல தான் போயிருக்காங்க ரெண்டு மாசத்துல வந்துருவாங்க” என்றாள் ரியா புன்னகையுடன்.

தேவையானவற்றை வாங்குவதற்கு வேற்று கிரஹத்திற்கு தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி சென்றாலும் வருவதற்கு சில மாதங்கள் ஆகிவிடும். தொழில்நுட்ப வளர்ச்சி.. சிறந்த தொழில்நுட்பத்தால் தான் இரண்டு மாதங்களில் ஒரு கிரஹத்திலிருந்து மற்றொரு கிரஹத்திற்கு ஸ்பேஸ் ட்ராவல் நடக்கிறது..

“என்ன மேட்டர் தேவ் நீ இவ்வளவு தூரம் வந்திருக்க”

“உன்ன பார்க்கத்தான் ரியா..”

“எப்படி வந்தே?”

“ப்ளையிங்ல தான்.. ப்ளையிங் சூட் போட்டுக்கிட்டு வந்தேன்.. வரும்போது ஒரு அஸ்டெராய்டு பார்த்தேன் அநேகமா அது பூமியை நோக்கித்தான் போய்ட்டு இருக்கும்னு நினைக்கிறேன்”

“எர்த் டெத் ஆகி தோஸண்ட் இயர்ஸ் ஆச்சே.. அஸ்டெராய்டு அங்க போய் ஹிட் பண்ணினாலும் நோ ப்ராப்லெம்”

ஆம் பூமி அழிந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. வீனஸ் போல் வெப்பமான வளிமண்டலத்தை பூமி பெற்றதனால் தான் இன்று உயிர்கள் வாழ தகுதியற்று கருகிப்போய் நிட்கிறது.

“இன்னோனும் பார்த்தேன் ரியா.. ஷூட்டிங் ஸ்டார் என் தலைக்குமேலே போச்சி.. பக்கத்துல தான் விழுந்திருக்கும்”

எறி நட்சத்திரம் நினைத்த நேரத்தில் உலா வரும். அதற்கு இருக்கும் சுதந்திரம் கூட அங்கு வாழும் மனிதர்களுக்கு இல்லை.

“என்ன தேவ் இவ்வளவு ஆபத்தோட நீ இங்க வரணுமா!!”

இருவரும் பதினாறு வயதே உடையவர்கள். பக்கத்து வீட்டுக் காரர்கள் தான். ஆனால் நீல கிரஹத்தில் தரை தொடாத வீடுகள் அந்தரத்தில் பறந்திருக்க.. எண்ணற்ற ஒளிக்கதிர்கள் அங்கும் இங்கும் ஒளி வீசியவண்ணம் இருக்க.. ஆபத்து தான் அதிகம் அங்கு அதனாலேயே அருகிலிருப்போரையே அரிதாகத்தான் பார்க்க முடியும்.

காமா மற்றும் பீட்டா கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானவை.. அவை தோலை ஊடுருவி, உள்ளே உள்ள செல்களை எல்லாம் சேதப்படுத்திவிடும் ஆற்றல் கொண்டவை. பீட்டா துகள்கள் அலுமினியத்தின் தாள் மூலம் தடை செய்யப்படலாம், ஆனால் காமா கதிர்களுக்கு எஃகு அல்லது கான்கிரீட்டாலான  தடித்த, அடர்த்தியான பாதுகாப்பு தேவை.

அவ்வகையான எண்ணற்ற கதிர்வீச்சுகள் தாக்காமல் இருக்கவே மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப் பட்டிருந்தது நீல கிரகத்தின் வீடுகள். நீல கிரகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு சேர்த்து பல உயிரினங்களும் வாழ்கின்றன. ஆடு மாடு கோழியல்ல அவை அனைத்துமே ஏலியன்ஸ்..

“நான் சேப் ஆஹ் தான் வந்தேன் ரியா.. உன்ன ஸ்கூல்ல பார்க்காம டென்ஷன் ஆயிட்டேன்.. அது தான் என் வீட்டில சொல்லிட்டு உன்ன பார்க்க வந்திருக்கேன்.. ஆமா நீ ஏன் லீவு போட்ட??”

“அதுவா.. ஒரே கடுப்பா இருந்துச்சு அதான் வரல”

“இதுக்கெல்லாமா லீவு போடுவாங்க!! வீட்ல போர் அடிக்கலயா”

“எதுக்கு போர் அடிக்கப்போகுது நான் தான் என்னோட ரோபோட் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருந்தனே”

“டோரா…” என்று ரியா குரல் கொடுத்ததும்..

லெப்ட் ரைட் லெப்ட் என்று அடியெடுத்து வந்தது அந்த ரோபோட்..

நினைத்த நேரத்தில் நினைத்த தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் படியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த ரோபோட்.. இப்போது முகமே இல்லாமல் மொழுக்கென்று கருநீல வண்ணத்தில் ஒரு ஏலியனின் தோற்றத்தில் நடை போட்டபடி வர, தேவ் அரண்டுவிட்டான்.

தேவ் அடுத்தநொடியே வேகமாக ஆள் காட்டி விரலை நீட்ட.. அதன் முனையில் துப்பாக்கி போல் ஒன்று வெளிப்பட்டது..

தேவ் அவன் வீட்டிலிருந்து கிளம்பியபோதே இது போன்ற ஒரு ஏலியன் பின்தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த ஏலியனிடம் இருந்து விடுபட்டு வந்து சேர்ந்தான். இப்போது இந்த ரோபோட்டும் அதே வடிவில் வர அதிர்ந்துவிட்டான்.

“தேவ் வாட் ஆர் யு டூயிங்!! இது என்னோட ரோபோட். டோன்ட் ஃபயர்..” ரியா கூறியதும் அவனது விரலை கீழிறக்கினான். அதிலிருந்த ஷூட்டிங் கன் மறைந்தது.

அந்த ரோபோட்டை பார்த்தபடியே, “டிஸ்கஸ்டிங் ரோபோட்” என்றான்.

“டோரா.. சேஞ் யுவர் அப்பியேரன்ஸ்” என்று ரியா கூறியதும் அவர்களது வயதை ஒத்த அழகிய பெண்ணின் தோற்றத்தில் மாறியது.

“டோரா.. மீட் மை பிரென்ட் தேவ்..” என ரியா அறிமுகப் படுத்த 

“ஹாய் தேவ்.. ஐ அம் டோரா..  ரியாஸ் சர்வெண்ட்..  ஸ்பீட் ஒன் டேரா ஹெர்ட்ஸ்.. மெமரி ஒன் ஜிகா பைட்ஸ்” என்று டோரா கம்ப்யூட்டர் வாய்ஸில் பேசிக்கொண்டே போக..  தேவ் அதனை முறைத்து வைத்தான்.

அவன் அருகில் வந்த டோரா அவனை வேகமாக கண்களால் ஸ்கேன் செய்துவிட்டு “ஐ கியூ லெவல் ரொம்ப கம்மி.. ரொம்ப கம்மி..” என்று அதையே கூறிக்கொண்டிருக்க.. ரியா சிரித்துவிட்டாள்.

“ஏய் தகர டப்பா யாருக்கு ஐ கியூ கம்மி.. பேசாம போயிரு இல்ல உன் ஒயரை கட் பண்ணி விட்ருவேன்” என்று பொங்கிவிட்டான் தேவ்.

“யு மே கோ டோரா” என்று அதனை அனுப்பிவைத்தாள் ரியா.

அதுவும் ஒரு முறை நின்று தேவை பார்த்துவிட்டு கம்ப்யூட்டர் வாய்ஸில், “டேஞ்சரெஸ் தேவ்.. டேஞ்சரெஸ் தேவ்..” என்றபடியே உள்ளே சென்றது.

தேவ் இப்போது முடிவெடுத்துவிட்டான் அதன் ஒயர்களை கழட்டி விட்டே ஆகவேண்டும் என்று..

“சாரி தேவ்.. டோரா எனக்கிருக்கற ஒரே பெட்.. ரொம்ப செல்லம்” என்றதும் ரியாவின் முகத்திற்காக அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு டோராவை விட்டுவைத்தான்.

*****

4

தேவ் இன்னும் டோராவை நினைத்து கடுப்பிலேயே அமர்ந்திருக்க அவனை கண்ட ரியா.. “நீ ஒன் மந்த் இங்க தானே இருப்பே நான் டோராவை உன்கூட பிரென்ட் ஆக்கி விடறேன்” என்றாள்.

“ஹ்ம்ம் சரி.. நானும் அடுத்த அசைன்மென்ட் முடிச்சிட்டு தான் இங்கிருந்து போவேன்” என்றான் புன்னகையுடன்.

“அசைன்மேன்ட் குடுத்தாச்சா?? இந்த முறையும் நீயும் நானுமா செய்யப்போறோம்” என்றாள் ஆவலுடன்.

“ஹ்ம்ம்”

நொடிக்கு நொடி எக்ஸாம் என்றெல்லாம் இல்லை நீல கிரகத்தில். வருடத்திற்கு ஒரே ஒரு அசைன்மெண்ட் தான். அதை இரண்டு பேர் இணைந்து முடித்துவிட வேண்டும். ஸ்கூலும் மாதத்திற்கு இரண்டு நாட்கள் தான். அப்படி இருந்தும் ரியா ஸ்கூலிற்கு மட்டம் போட்டுவிட்டாள்.

“ஹே ரியா.. இங்க பாரு” என்று தனது பாக்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்து வைத்தான் தேவ்.

“என்னதிது” என்றாள் புரியாமல்.

செங்கல் போல் இருந்தது அதில் ஸ்வஸ்திக் போல் ஒளி வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது. அதில் சிறு சிறு பட்டன்கள் இருந்தது. அதனுள்ளேயே ஒரு சிறிய திரை இருந்தது. செந்நிற கதிர்களை உள்ளிழுப்பதுமாய் பின் வெளியில் விடுவதுமாய் இருந்தது.

“காலக்ஸி பாக்ஸ்” என்றான் கண்கள் மின்ன..

“இத வெச்சு என்ன பண்ண?”

“இத வெச்சு எர்த் பத்தின ரிசெர்ச் ஈஸியா பண்ணலாம்”

“அடப்போடா அதுவே ஆளில்லாம சும்மா தெண்டத்துக்கு சுத்திகிட்டு இருக்கு.. அதையை ஆராய்ச்சி பண்ணி என்ன செய்ய போறோம்..” என்றாள் ரியா சலிப்புடன்.

“ஏய் ரியா இப்போ இருக்குற எர்த் இல்ல.. தொளசண்ட் இயர்ஸ் பாக் இருந்த எர்த்த பார்க்கப்போறோம்”

ரியாவிற்குள் ஆசை ஊற்றுகள் கிளம்ப.. இருந்தும் அழிந்து போன ஒன்றை இந்த மெஷின் காண்பிக்க போகிறதா என்று நம்பவில்லை அவள்.

“எப்படி இத வெச்சு அழிஞ்சு போன எர்த் பத்தி ரிசெர்ச் பண்ண முடியும்?? லூசு தனமா பேசாதடா லூசு பயலே”

“ஏய்ய் ரியா.. டெக்னாலஜிக்கல் டெவெலப்மென்ட் தெரியாம பேசாத.. இத நம்ம மேம் தான் குடுத்தாங்க.. நீ இதோட பவர் தெரியாம பேசிட்டு இருக்கே”

“அப்படி என்ன இதுல இருக்கு எங்கே சொல்லு பாப்போம்”

அவன் அந்த காலக்ஸி பாக்ஸை டேபிள் வைத்துக்கொண்டு இரண்டு ஒயர்களை எடுத்து இணைத்தான் அதில் மின்சாரம் பாய்வதுபோல் ஒளியோடு சத்தமும் இரைச்சலாக வந்து வந்து போனது. திடீரெண்டு அந்த அறை முழுத்திலும் பிரகாசமாகி சிலநொடிகளில் ஒட்டு மொத்த பிரகாசமும் அந்த பெட்டிக்குள் மட்டும் நிறைந்திருந்தது. 

“பாக்ஸ் ஆன் ஆயிருச்சு” – தேவ்

“எப்போ பெண் ஆகும்” – ரியா

தலையில் அடித்துக்கொண்டு.. “பாக்ஸ் ஒர்க் ஆக ஆரம்பிச்சிருச்சு ரியா.. நீ நெனைக்குற மாறி மேல்.. பீமேல்.. இல்ல” என்றான்.

இப்போது தேவ் டோராவை தேட.. இவ்வளவு நேரம் அவர்களை ஒளிந்து பார்த்திருந்த டோரா இன் விசிபிள் மோடிற்கு சென்றது.  அதற்கே அவமானம் தாங்க முடியவில்லை ரியாவை நினைத்து.

“ஓகே ஓகே சாரி.. நீ மேல சொல்லு” என்றாள் ரியா சமாளிப்புடன்.

“நல்லா கேட்டுக்கோ.. இந்த பாக்ஸ் வெச்சு ஹிஸ்டரிய தெரிஞ்சுக்கலாம்.. பூமியில கடந்த காலத்துல இருந்த இடங்களை எல்லாம் பார்க்கலாம்..”

“வாவ்.. செம.. அப்போ அமெரிக்காவ சுத்தி பார்க்கலாம் வா..”

தேவ் அமைதியாய் இருப்பது கண்டு.. அவனை நிமிர்ந்து நோக்கினாள் ரியா.. அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

“குறுக்க பேசல.. யூ கன்டினியூ” என்று வாயை மூடிக்கொண்டாள்.

“பார்க்க மட்டும்தான் செய்ய முடியும்.. அதேபோல் எர்த்ல எல்லா இடத்தையும் பார்க்க முடியாது ரியா.. மேம் நமக்கு இந்த அசைன்மெண்ட் கொடுத்ததற்கு ரீசன் என்னனா நம்ம முன்னோர்களுக்கு முன்னோர்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எர்த்ல வாழ்ந்ததுதான். நம்ம இந்த காலக்ஸி பாக்ஸ் வெச்சு நம்ம முன்னோர்களை மட்டும் தான் பார்க்க முடியும். அவங்க வாழ்க்கை வரலாறை தெரிஞ்சுக்கலாம். அவங்க வாழ்ந்த இடத்தை மட்டும்தான் பார்க்க முடியும். அத வெச்சு எர்த் அழிஞ்சதுக்கான ரீசன் என்னவா இருக்கும்ன்னு கண்டு பிடிக்கணும்.. இதான் டாஸ்க்..”

அனைத்தையும் விழி விரித்து கேட்ட ரியா.. ‘நம்ம குடும்பம் மொத்தத்தையும் இந்த பாக்ஸ்குள்ள பார்த்துற வேண்டியது தான்’ என்றெண்ணியவள் முதலில் யாரிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பட்டியலிட்டு 

“அப்போ எங்க தாத்தாவோட.. தாத்தா..த்தா…. தாத்தா..த்தா” என்று இழுத்துக்கொண்டே போக..

அவள் எண்ணத்தை அறிந்தவனாய் “ரியா ரியா.. போதும் நிறுத்து வாய் கொன்னிக்க போகுது” என்றான் வேகமாய் வரும் ட்ரைனை ஒத்தை கையால் நிறுத்துவது போல்.

அவள் தேவ்வை முறைக்க.. “பின்ன என்ன ரியா… முழுசா கேளு” என்றுவிட்டு தொடர்ந்தான்

“நம்ம எர்த்ல இருந்து ரெண்டே பேரைத்தான் சூஸ் பண்ணனும்.. உதாரணத்திற்கு.. எதோ ஒரு ஆண் இல்லாட்டி எதோ ஒரு பெண்..  உன்னோட சொந்தம் ஒருத்தர் என்னோட சொந்தம் ஒருத்தர்.. இப்படி ரெண்டே பேர். அவங்க இருக்கும் இடங்கள்.. அவங்க செய்யற செயல்களை மட்டும் தான் பார்க்கமுடியும்.. அவங்க வயசை மாத்தி.. அவங்க வளர்ற ஒவ்வொரு ஸ்டேஜையும் நம்ம பார்க்கலாம்   அப்படிதான் இந்த பாக்ஸ்ல கமாண்ட் கொடுத்திருக்காங்க..”

குழம்பிப் போயிருந்தாள் ரியா.. பூமி பற்றி சில மாதங்கள் முன்புதான் கேள்வியே பட்டிருந்தாள். அழகிய பூமி அழிந்து விட்டதாகவும்.. நீல கிரகத்தில் வசிப்போர் எல்லாம் பூமியில் வாழ்ந்தோரின் வழித்தோன்றல்களே என்று ஆசிரியர் கூறும்போது ரியாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.. பூமியை ஒருமுறை ஆவது காணவேண்டும் என்று ஆசை அவளுக்கு அது இன்று நிறைவேறப் போகிறது.

பூமியில் இப்போது யாரை தேர்ந்தெடுப்பது..? யார் மூலம் பூமி அழிந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். தேவ் வும் அதையே தான் நினைத்திருந்தான்.

அவன் உதாரணத்திற்கு கூறிய ஏதோவொரு ஆண் அல்லது பெண்ணே ரியாவின் மனதில் வந்துபோக.. அவளுக்கு பெண்ணை தேர்வு செய்யலாம் என்ற எண்ணம்.. அதை அவனிடமும் தெரிவித்தாள்.

இருவரும் சேர்ந்து அவர்களின் விரல் பதித்து பெண்ணை கடைசி தேர்வாக லாக் செய்தனர். 

Advertisement