Advertisement

1

பழம் நீயப்பா

ஞான பழம் நீயப்பா

தமிழ் ஞான பழம் நீயப்பா..

சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி

புலவோர்க்கு பொருள் கூறும்

பழம் நீயப்பா

ஞான பழம் நீயப்பா

தமிழ் ஞான பழம் நீயப்பா..

கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது..

“வேற எதாவது போடு.. ப்ளீஸ்..” என்றாள் ஒரு மாடர்ன் மங்கை.. கண்களை மூடிக்கொண்டு தன் இரு கைகளாலும் காதைப் பொத்தியபடி.

ஸ்டீபன் ஹாக்கிங் அவரது ஆவணப் படமான இன் டு தி யுனிவர்ஸில், பூமிக்கு வருவதற்குப் போதுமான அளவில் முன்னேறிய அந்நிய நாகரிகங்கள் அதாவது ஏலியன் சிவிலைசேஸன் விரோதமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தார். அவரது பிற்போக்கு ஆண்டுகளில் அன்னிய நாகரிகங்களைச் சந்தித்த மனிதர்களின் ஆபத்துகளைப் பற்றி பலமுறை எச்சரித்தார்.

“எது..க்கு இப்..போ நேட் ஜியோ [நேஷனல் ஜாகிரப்பிக்] சேனல்” அனல் அடிக்க வார்த்தைகளை கடித்து துப்பிக்கொண்டு.

“சரி..சரி.. காதுலயே கத்தாதே.. சன் ம்யூசிக் போடறேன் ” என்றாள் மற்றொரு யுவதி.. பொங்கல் போல் பொங்கிவரும் எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு.

வாராயோ தோழி வாராய் என் தோழி

வா வந்து லூட்டியடி

வாராயோ தோழி வயசான தோழி

வாய் விட்டுச் சீட்டியடி

அன்புக்கு நீ அரிச்சுவடி

அன்னைக்கு மேல் செல்வமடி

மழலையில் நான் சாய்ந்தபடி

முதுமையிலும் வேண்டுமடி

ஏ பாட்டி என் ஸ்வீடி

நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி

“ப்ச்.. உன்னால ஒரு நல்ல சேனல் போடமுடியாதா! ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தா.. ப்ச்.. வேணும்னே என்ன வெறுப்பேத்தி விளையாடுறயா? ஒரு வேலையும் ஒழுங்கா செஞ்சுறதா.. எல்லாமே நான் தான் பண்ணனும்” அளவுகடந்த எரிச்சலில் அவள்.

அவள் சந்தியா..

பொறுமை எருமையை விட பெரிதென்பாள்.. ஒரு ஈ எறும்பு அளவிற்கு கூட அவளிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

“ப்ச்.. இருக்கற டென்ஷன்ல நீவேற படுத்தாத தியா.. டிவில இப்படி சாங் வர்றதுக்கு நான் என்ன பண்றது? சன் ம்யூசிக் காரன் கூட போய் சண்டைபோடு.. என்கூட இருக்க பிடிக்கலைன்னா கிளம்பு, அதைவிட்டுட்டு வந்துட்டா கம்பிளைன்ட் பைல் பண்ணிட்டு”

அவளது தோழி. அங்கும் அதே நிலைதான்.. பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“உன்கூட மனுஷன் இருப்பானா..” கோபத்தில் சந்தியா.

“அப்ப நீயென்ன கொரில்லா குரங்கா? நீ என்கூட தான் இருக்க..” பதிலுக்கு தோழி.

“ரிமோட்டை குடு.. யூஸ்லெஸ் ஃபெல்லோ”

“குடுக்க முடியாது.. என்ன பண்ணுவ?” யூஸ்லெஸ் ஃபெல்லோ என்று திட்டியதால், அவளுக்குள் பற்றியது நெருப்பு.

இருவரும் ரிமோட்டிற்காக அடித்துக்கொண்டதில் ஆப் பட்டனை அழுத்தியிருக்க, தொலைக்காட்சி அணைந்திருந்தது. ரிமோட் சென்று தூர விழுந்தது.

நல்ல வேலை அங்கிருந்த தலையணை மீது தான் விழுந்தது. அதாவது தலையணை சைஸிலுள்ள அவர்களது புத்தகத்தின் மீது. அதை எடுத்து தொலைக்காட்சியின் அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு வந்த சந்தியா,

“ஏய்! நீ பாட்டுக்கு ரிமோட்டை வீசுற.. வார்டன் பார்த்தா டின்னு கட்டிடும்.. என்ன சொல்லி இந்த ரூம்குள்ள வந்தோம்? அதை ஞாபகம் வெச்சுக்கோ.. பக்கத்து ரூம்ல இருந்து யாராவது வந்தா நம்ம காலி.. பேசாம இருக்கறதுனா இரு இல்லாட்டி கிளம்பு” என்றாள்.

“உனக்கு அவங்களே பரவால்ல.. நான் நம்ம ரூமுக்கே போறேன்” என்ற தோழியை சந்தியா முறைக்க.. நொடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள் தோழி.

“போறா பாரு.. பெரிய இவன்னு நெனப்பு.. எங்கயோ போகட்டும்” மடிக்கணினியை நோண்டிக் கொண்டிருந்த சந்தியா விடுவதாய் தெரியவில்லை.. மெல்ல முணுமுணுத்தாள்.

அவள் வாயில் சாட்டர்ன் கார்டின் ஆட்டம் துவங்கியது. அவள் முணுமுணுத்தது கூட அச்சு பிசகாமல் எதிராளிக்கு எட்டிவிட,

“நான் ஏன் போகணும்! நான் இங்கதான் இருப்பேன்..” வீம்புக்கு தோழியும் கையிலிருந்த புத்தகத்தை தொப்பென்று போட்டுவிட்டு  களத்தில் குதித்துவிட்டாள்.

சிறிது நேரத்திற்கு அமைதி.. அமைதி அமைதி அமைதியோ அமைதி அங்கு.. இருவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர். இருவரது பார்வையும் சந்தித்துக்கொள்ள,

“ம்ம்க்கும்..” என முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள் தோழி.

“பார்த்து.. வாய் வாசப்படி வரைக்கும் போகுது” -இது சந்தியா

“உன் மூக்கு மூணாறு வரைக்கும் போகுது அதெல்லாம் நான் சொன்னேனா” என்று நினைத்தவள் எங்கு இதை சொன்னால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள் என்றறிந்து,

“இதப்பாரு சந்தியா.. இங்க வந்தியா.. வேலைய செஞ்சியா.. ன்னு இருக்கனும், வெட்டியா  பேசிட்டு இருந்தியா.. மர் கயா..” என்று ரைமிங்கில் அடித்தாள் நண்பி.

எதிரும் புதிருமாய் தலையை சிலுப்பிக்கொண்டு பாஷா ஆன்டனி ஸீனை ஓட்டிவிட்டு இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தினர்.

வான்வெளியிலிருந்து வேற்று கிரக உயிரிங்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தும் விதமாக அனுப்பப்பட்டிருந்த வாயேஜர் விண்கலம் அதன் வேலையைச் சரிவர செய்து கொண்டிருக்கிறது. அதில் பொருத்தியிருந்த தங்கத் தகடானது மனிதர்களை பற்றிய பல்வேறு விஷயங்களை கொண்டிருந்தது. 

அதில் மிக சிறிய ஹைட்ரஜன் அணுக்கள் இயங்கும் வேகமும் அது வெளிப்படுத்தும் ரேடியோ அலை வரிசைகளில் இருபத்தி ஒன்பது சென்டிமீட்டர் அளவும் குறிப்பிட்டிருந்தது. அதில் வேற்று கிரஹ உயிரினங்கள் எதாவது இந்த தகடை ஒலிக்கச் செய்தால் அதற்கான வாழ்த்துக்களும் வெவ்வேறு மொழிகளில் வெளிவருவதாய் அமைக்கப் பெற்றிருந்தது.

ஒரு மணிநேரம் ஒலிக்கக்கூடிய இசை தட்டில் அனைத்து உயிரினங்களின் படங்களும் நமது அன்றாட வாழ்வின் டெக்னலாஜிகல் குறித்தும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆங்கில வழிக்கல்வியில் பயின்று கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் மெதுவா படியேன் எனக்கு டிஸ்டர்ப் ஆகுது” என்றாள் சந்தியா.

“நீ காதை மூடிக்கோ” என ஐடியா குடுத்தாள் தோழி.

‘கொஞ்சமாவது அறிவிருக்கா.. நான் யாருக்காக இந்த செஞ்சுட்டு இருக்கேன்.. இவளும் தானே என் டீம் மேட்.. இந்த ப்ரொஜெக்ட்ட மட்டும் நாளைக்கு வெய்க்காம ஹெட்ச்.ஓ.டி நல்லா கழுவி ஊத்துனாதான் புத்தி வரும் இவளுக்கு.. எனக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு டீம் மேட்ஸ்.. ஒன்னு இத்தனை களேபரத்துலயும் தூங்குது இன்னோன்னு என் உசுர வாங்குது’ என முனங்கிக்கொண்டே சந்தியா எழுந்து அங்கிருந்து நகரச்செல்ல

“பேபிம்மா ஒரு நிமிஷம்” என்று பாசமாய் ஒலித்தது தோழியின் குரல். 

நம்ப முடியவில்லை என்றாலும் சந்தியா திரும்பி என்ன வென்று நோக்க..

“கோவ்சுகிட்டயா!!” என்றாள் பாவமாய் முகத்தை வைத்து.

மண்ணிப்பு கேட்க போகிறாளோ என்ற எண்ணம் வர அதற்கு வாய்ப்பில்லையே என்று மாற்று எண்ணமும் வந்தது சந்தியாவிற்கு.

“ஆமான்னா என்ன பண்ண போற??” சந்தேக பார்வையோடு சந்தியா.

“ஆமான்னா விட்ருவேன் இல்லைனா இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தி பார்ப்பேன்.. ஈஈஈ..” பாவமாய் முகத்தை வைத்தவள் இப்போது அனைத்து பல்லையும் காட்டினாள்.

“சாரி கேப்பன்னு நின்னேன் பாரு என் புத்தியை…”

“உனக்கு அந்த நெனப்பு எல்லாம் இருக்குதா!! ஸ்லிப்பர்ஸ் ரூம்க்கு வெளிய இருக்கு.. நான் வேணுனா எடுத்து வரவா?”

“ஆணியே ப்ளக் பண்ண வேணாம்.. ஷட் அப் பண்ணிக்கோ.. நான் நெஜமாவே கோவிச்சுட்டு போறேன் மிஸ்..” சந்தியா முடித்திருக்கவில்லை

“கோவிச்சுக்கோ.. கோவிச்சுக்கோ.. நல்லா கோவிச்சுக்கோ”

டிக்டிக்.. டிக்டிக்..  என்று முதலில் ஒரு மெல்லிய சத்தம்.. இருவரும் அதை கவனிக்கவில்லை.

“பாக்கறேன்! நான் இல்லாம நீ எப்படி ப்ராஜெக்ட் முடிக்கறைன்னு” என்றபடியே அனைத்தையும் போட்டுவிட்டு சந்தியா வேகமாக வெளியேற.. அபாய விளக்கு எரிந்தது தோழிக்கு.

“பேபிம்மா சாரி சாரி.. நான் சும்மா சொன்னேன். இரு பர்ஸ்ட்  உனக்கு ஒரு சமோசா வாங்கித்தரேன் நெக்ஸ்ட் நம்ம சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணலாம்.. டீல்?” என்று சமாதானக் கொடியைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னே ஓடினாள்.

இருவரும் அறையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.. புயலுக்கு பின் வரும் அமைதி பூகம்பத்திற்கு முன் வரும் அமைதி அங்கு ஆட்கொண்டிருக்க..

டிக்டிக்.. டிக்டிக்..  என்று மீண்டும் ஒரு மெல்லிய சத்தம்..

கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

*****

2

விண்வெளியில்.. எங்கும் புகை மண்டலம் சூழ்ந்திருக்க.. காண்பதெல்லாம் நீலமடி என்று சொல்லத்தோன்றும் விதமாய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எங்கும் நீல நிறம்..

டொக்.. டொக்.. என்று அறையை தட்டுவதுபோல் ஒரு சத்தம்.

அவ்வீட்டின் உட்புறக் கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஸ்பிலே போர்டில் “தேவ்.. தேவ்..” என்று ரோலிங்கில் வந்த வண்ணம் இருந்தது.

அடுத்த நொடியே ஒரு திரை மிளிர.. வீட்டிற்குள் மாட்டியிருந்த சிறிய ஒலிபெருக்கி போன்ற சாதனமானது

“ஏ. ஓபன்..

பி. இன் விசிபிள்..

சி. அட்டாக்..

டி. செக்யூரிட்டி செட்டிங்ஸ்” என்று ஒவ்வொன்றையும் தெரிவித்துக் கொண்டிருந்தது தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்க..

“ரியா ஹியர்..” என்றாள் ஒரு மடந்தை.

அவளது குரலை சரிபார்த்து “வைட்டிங் பார் யுவர் கமாண்ட் ரியா” ஒலிபெருக்கி மீண்டும்..

அவள் “ஆப்சன் ஏ ஓபன்” என்றதும் அவளது ஆணையை நிறைவேற்றியது அந்த வாய்ஸ் ரெகக்னிசன் சாதனம். அதன் பின்னரே கதவு திறக்கப்பட.. அந்தரத்தில் பறந்தபடி நின்றிருந்தான் தேவ்..

கால் தரை படவில்லை.. ஸ்பேஸ் சூட் போட்டபடி உடல் முழுவதையும் பாதுகாப்பாக காற்று கூட புகாதவகையில் மூடியிருந்தான்..

அவன் கையிலிருந்த ரிமோட்டை அழுத்தியதும், “ஹாய்.. ரியா” என அவன்புறம் இருந்து வந்தது பதிவு செய்யப் பட்டிருந்த குரல்.

“ஹாய் தேவ்!! உள்ள வா.. மாஸ்க் கொண்டு வந்திருக்கியா??”

ரிமோட்டிலிருந்து மீண்டும் ஒரு பட்டனை அமுக்கினான்.. “எல்லாம் வெச்சிருக்கேன் நீ மொதல்ல வழிய விடு” என்று ஒலித்தது.

இவள் இப்படி கேள்வியாய் கேட்டுவைப்பாள் என்று தான் முன்னதாகவே வாய்ஸ் ரெகார்டிங் செய்து பதிலை பதிவு செய்து கையோடு எடுத்து வந்திருந்தான்.

ரியா அப்போதும் நகராமல் நின்றிருக்க.. அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவன் வேகமாக கதவை அடைத்தான்.

உள்ளே வந்தவன் அவன் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டிவிட்டு, “ரியா!! டென் செகண்ட்ஸ்க்கு மேல கதவை இப்படி திறக்க கூடாது.. டாக்ஸிக் கேஸ் எல்லாம் வீட்டிற்குள்ளே வந்திரும்.. உனக்கு தெரியாதா என்ன?” என்றான் இப்போது அவனது சொந்தக் குரலில்.

“ஓகே… ஓகே.. சாரி” என்றபடி எழுந்து சென்று சுவரிலிருந்து ஒரு பொத்தானை அமுக்கினாள் ரியா.

அதில் ஆபத்தான எரிவாயுக்கள் வீட்டினுள் இருந்தால் அதை காண்பிக்கும் விதமாக ரெட் கிரீன் எல்லோ என்று மூன்று விதமான விளக்குகள் எரியும் வண்ணம் அமைக்கப் பெற்றிருந்தது அந்த ஐடென்டிபிகேஷன் கருவி..

இப்போது அதில் கிரீன் லைட் எரிந்திருக்க.. அதை பார்த்தபின் தான் ரியாவின் முகத்திலும் தேவின் முகத்திலும் ஒரு நிம்மதி பரவியது. தாமதிக்காமல் உடனே இருவரும் மூச்சு குழாய்போல் ஒன்றை பொருத்திக் கொண்டனர். அது அவர்கள் ஸ்வாசிப்பதற்காக.. அதிலிருந்து தான் ஆக்சிஜென் கிடைக்கும். மரங்கள் எல்லாம் இல்லை அங்கு.

தேவ் அவன் அணிந்திருந்த ஸ்பேஸ் ஷூட்டை கழற்றினான்.. உள்ளுக்குள் சேப்டி ஜாக்கெட் போட்டிருந்தான். 

அவன் அமரச்செல்ல..

“ஹே!! இரு இரு” என்று அவன் அருகில் வேகமாய் வந்த ரியா கையிலிருந்த ஸ்ப்ரேவால் புஷ்.. புஷ்.. என்று அவன் அமரும் இடத்தில அடித்தாள். அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் ஒருவிதமான புகை வெளியேறியது..

“டேன்ஜரஸ் பாக்டீரியாஸ்” என்றாள் விழி விரித்து. அது தேவின் கண்களுக்கு புலப்படவில்லை.

“யூஸ் திஸ் ஐ கிளாஸ்” என்று அவள் ஒரு கண்ணாடியை அளிக்க.. அதை வாங்கி போட்டபின் தான் அவன் கண்களுக்கும் அது தெரிந்தது.

பச்சை வண்ணத்தில் கொஞ்சம் இளஞ்சிவப்பு வண்ணம் கலந்து புழு போல் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருந்தது.. ஒரு நொடியில் ஆயிரக்கணக்கில் பெருகிய எண்ணிக்கையில்.

இருவரும் அருவருக்க எல்லாம் இல்லை.. அவர்கள் இருக்குமிடத்தில் அன்றாடம் அவர்கள் பார்க்கும் ஒன்றுதான் இதெல்லாம். எதுபோல் என்றால்!! பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஈ கொசு கரப்பான் பூச்சியை பார்ப்பதுபோல்..

வான் வெளியில் ஆயிரம் ஆயிரம் விண்கல்களும் கோள்களும் வலம் வந்து கொண்டிருக்க.. ஒளிப்பிழம்பான ஞாயிறு தனது அரியசானத்தை மையத்தில் அமைத்து தகிக்கமுடியாத வெப்பத்தை பொழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகங்களும் ஞாயிறுக்கு ஒரு வணக்கத்தை வைத்தபடி நகர்ந்துகொண்டிருக்க.. இப்போது நீல கிரகத்தின் முறை.

இது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள். செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு நடுவே அமைந்திருக்கும் கோள் தான் இது. பூமியைப்போல் போலத்தான் நீல கிரகமும்.. அங்கும் சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

பூமி போல் மண் நிலமில்லை நீல கிரகத்தில்.. நீல நிறத்தில் ஆன பாறைப்படிவும் பாறை குப்பைகளும் முழுதும் படந்திருந்தது. ஆயிரம் கிலோமீட்டர் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரையிலான செங்குத்தான சரிவுகளை கொண்டிருக்கும் கிரகம் அது.

ஆதவனின் ஒளிக்கதிர்கள் நீல கிரகத்தின் மீது ஆசையாய் தழுவ.. நீல கிரக வாசிகளுக்கு அழகானதாய் ஒரு விடியல் ஆரம்பமானது. வருடத்தில் ஒரே ஒருமுறை வரும் உதயம் அது.

“சன் ரைஸ்.. சன் ரைஸ்” என்று ஒலிபெருக்கி குரல் கொடுக்க

“வாவ் தேவ் வருஷத்திற்கு ஒருமுறை வரும் சன் ரைஸ் இன்னிக்கு வந்திருக்கு” என்றாள் ரியா..

“ஆமா ரியா நம்ம ஜெனெரேஷன் ரொம்ப லக்கி இல்ல” என்றான் அவனும்.

பாவம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது பூமியில் வாழ்ந்த மனிதர்களை பற்றி!! அங்கு தினம் தினம் சூரிய உதயம் தான் என்று..

இவர்கள் இருப்பதோ நீல கிரகத்தில் அல்லவா..

Advertisement