Advertisement

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர் தட்டுப்பாடு ஏட்படும் அபாயம் உள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துபோய் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டுமென்று அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்திக்கு செவிகொடுத்து சிந்தனையில் அமர்ந்திருந்தாள் வருணா.
அவள் சிந்தனையை சிதைக்கவென்றே,
“ஏய் வரு.. வாட் இஸ் திஸ் யா! காலங்காத்தால செய்தி கேட்டுட்டு இருக்க.. சன் மியூசிக் போடு..” என்று குளியலறையில் இருந்து குதித்தோடி வந்தது நீராவின் குரல்.
“எதோ பெரிய வாட்டர் ப்ராப்லெம் வரப்போகுதுன்னு சொன்னாங்க.. அதான் பார்த்துட்டு இருந்தேன்.. நீ டேங்கை காலி பண்ணாம  தண்ணிய அளவா யூஸ் பண்ணி குளிச்சிட்டு வா தாயே!!”
“வாட்டர் ப்ராப்லெம் ஆஹ்.. நமக்கா..! வெரி ஃபனி!!!” என்றவாறே ஷவரைத் திறந்துவிட்டாள் நீரா.
வான்முகில் உடைந்து மழை பொழியச் செய்ததுபோல் ஷவரிலிருந்து நீர் கொட்ட.. ஆனந்தக் குளியல் ஒன்றை அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போட்டுவிட்டு வெளியேறியவள் பின் விரைந்து தயாராகினாள்.
முகத்திற்கு அளவான ஒப்பனை செய்துகொண்டு அவர்களது ரூமை பூட்டிவிட்டு வெளியே வர, ஸ்கூட்டியை தயார் நிலையில் வைத்திருந்தாள் வருணா. நீரா ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினாள்.
இருவரும் பிரதான சாலையில் சென்றுகொண்டிருக்க சிறிது தூரத்திலேயே போக்குவரத்துக்கு நெரிசல்.. மகளிர் அணியினரின் போராட்டம் போல் தெரிந்தது.
“என்னாச்சுங்க??” அருகிலுள்ள ஆட்டோக் காரரிடம் வருணா விசாரிக்க
“பொம்பளைங்க எல்லாம் போராட்டம் பண்ணுறங்கலாமா இதுக்குமேல வண்டி போகாது சுத்திதான் போகணும்” என்றார் அவர்.
“என்ன பிரச்சனைங்க?? எதுனால இந்த போராட்டம்” ஹாட் நியூஸ் அறிய வேண்டுமே!.
“எதோ தண்ணி பிரச்சனைமா.. அதான் எல்லாரும் குடத்தோட ரோட்டல உக்காந்து சாலை மறியல் பண்ணுறாங்க” விளக்கிவிட்டு ஆட்டோவை திருப்பினார் ஆட்டோக்காரர்.
“என்ன.. தண்ணி பிரச்னையா!!” அருகிலிருந்த ஆடவளுக்கோ அப்பட்டமான அதிர்ச்சி அகத்தினில்.. அது முகத்தினில் தெரிய..
“நான்தான் காலைலயே சொன்னேன்ல நீரா.. பெரிய வாட்டர் ப்ராப்லெம் வரப்போகுதுனு” வருத்தம் வருணாவிடம்.  
போக்குவரத்துக்கு அதிகாரிக்கெல்லாம் போக்குக்காட்டி போராட்டம் நடத்திக்கொண்டிருந்த பெண்களில் சிலரது குரல் ஸ்பீக்கர் இல்லாமலே அங்கிருந்ததோர் அனைவரது செவிகளையும் சிறப்பாய் சென்றடைந்தது.
“வரசொல்லுய்யா தண்ணி லாரியை இப்போவே..!!!”
“இப்போவே எப்படிம்மா வரும்??”
“ஏன் போராட்டம் பண்ணுறோம்னு தெரிஞ்சு நீ வரல!! அப்படித்தான் அதுவும் வரும்.. நீ வரசொல்லுய்யா முதல்ல..”
நகராட்சி நிர்வாகத்தினர் என்றெல்லாம் வைத்துப் பாராமல் வார்தைப்போர் தொடுத்துக் கொண்டிருந்தனர் நல்லாள்கள்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க ஏற்பாடு செஞ்சுட்டு தான் இருகாங்க நீங்களும் ஒத்துழைக்கணும்..”
“என்னத்த ஏற்பாடு செஞ்சு கிழிகிறீங்க.. தண்ணியில்லாம நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம் நீங்க நீச்சல் குளத்துல நீச்சல் அடிக்குறீங்களோ நீச்சலு.. வெக்கங்கெட்டவிங்க.. இதுக்கு எதுக்கு வெள்ளையுஞ் சொல்லையுமா அலையனும் ஓட்டு கேட்டு நாளபின்ன ஊட்டுபக்கம் வரட்டும் வகுந்து போடுறேன் வகுந்து”
கலவையான கத்தல் குரல்களில் சிலர்.. அதில் கந்தல் ஆனோர் பலர்..
“ஹே யாரடி திட்டுறாங்க எல்லாரும்!!” என வருணா வினவ
“அரசியல்வாதிகள்ல இருந்து அரசு அதிகாரிகள் வரைக்கும் எல்லாரையும் தான்.. இது இப்போ ரொம்ப முக்கியம்.. ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நீ வேற ரூட் எடு” என நீரா கூற வண்டியை திருப்பினாள்.
இருவரும் வேறு வழியில் ஸ்பீடாக சென்றுகொண்டிருக்க.. ஸ்பீட் பிரேக்கறாய் எதிர்பட்டார் போக்குவரத்துக்கு காவலாளர்.
“நில்லுங்க.. இந்த வழியா போக முடியாது.. டேக் டைவெர்சன்” என்று அனைத்து வண்டிகளையும் திசை திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.
அனைவரும் பொருமிக்கொண்டே வண்டியைத் திருப்ப
“ஏன் சார்? என்ன பிரச்சனை இந்த வழில?” என்றாள் நீரா மட்டும்.
“ஏம்மா!! போக சொன்னா போங்களேன்மா.. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கணுமா??” அவர் பாய..
“அதுக்கு இல்லைங்க சார் தகவல் அறியுறது சிட்டிசன்ஸ் கடமை.. நீங்க தகவல் அளிக்குறதை நெட்டிசன்ஸ் பார்த்தா உங்களுக்குத்தான் பெருமை.. சிறப்பா மீம் ரெடி பண்ணிருவாங்க” அவள் பயம் காட்ட..
“மெயின் பைப் ஒடஞ்சு ஒரே வெள்ளமா இருக்குமா.. அதை சரி பண்ணுற வரைக்கும் இந்த வழியா போகமுடியாது.. குழி தோண்டிப் போட்டிருக்காங்க.. இப்போ கிளம்புறீங்களா!!” பவ்யம் போலீசிடம்.
“ஓஹ்!! ஓகே ஓகே சார்.. ஹாவ் எ குட் டே சார்” என்று நீரா சிரித்து வைக்க..
அவர் முறைத்து வைக்க..
“கொஞ்சம் சும்மா வாயேண்டி” என வஞ்சியவளை அடக்கி வண்டியைக் கிளப்பினாள் வருணா.
“பார்த்தியா நீரா.. ஒரு பக்கம் தண்ணி வரலைன்னு ரோட்டை பிளாக் பண்ணுறாங்க.. மறுபக்கம் தண்ணி வெள்ளம் போகுதுனு பிளாக் பண்ணுறாங்க..” என வருணா சொல்ல
“இங்க எவண்டி ஒழுங்கா வேலைய செய்யுறான் கடைசில பப்ளிக் தான் பாதிப்படையறது.. நீ ரூட்டை மாத்து” என்றாள் நீரா.
இருவரும் ஒருவழியாக அலுவலகம் வந்தடைய.. இந்த இரு கன்னியர்களுக்காகவே காத்திருந்தனர் இரு காளையர்கள்.
“ஏன் பேபி லேட்!!” என்றொருவன் கவலையாய் காந்தையிடம் வினவ..
“டோன்ட் கால் மி பேபி..” விரல் நீட்டி எச்சரித்து கத்தரித்தாள் அவன் காரிகை.
“கூல்.. நீ வராம உன்ன பார்க்காம என்னால வேலையே செய்யமுடியலை தெரியுமா?”
“நீ என்னிக்கு வேலை செஞ்சிருக்க இன்னிக்கு செய்யறதுக்கு!! சமாளிக்கறதுக்கு ஒரு சாக்கு வேற..” என்று அவள் முன் நடக்க.. அவளைப் பின்தொடர்ந்தான் நீரஜ்.
அவளும் அவனும் ஒரே நாளில் தான் இங்கு வேலையில் சேர்ந்தனர். ஒரே டீம் வேறு. இருவரும் அவரவர் வேலையை மட்டும் கவனித்திருக்க சுற்றியும் இருப்பவர்கள் சும்மா இருக்கிறார்களா!! அவர்களுக்குள்ளான ஃபன் டைமில் இவர்களுக்கு டாஸ்க் வைக்கிறேன் பெயர்வழியில் நீராவை நீராஜிடம் ப்ரொபோஸ் செய்யக் கூற..
அவள் முடியாது விலகிவிட்டாள்.. அவன் மொத்தமாய் விழுந்துவிட்டான் அவளிடம். அன்று துவங்கியது நீரஜின் காதல் காவியம்.. புனையா ஓவியம்..
மன்னவன் மனதில் மதங்கி மட்டுமே. மதங்கியின் மனதில் என்னவென்று தெரிந்துகொள்ள முயல்கிறான். நன்றாக சுத்த விடுகிறாள் நங்கை. மங்கையின் மணாளனாக மாறுவதற்கு அவனும் விடாது சுற்றிக்கொண்டிருக்கிறான் அவள் பின்னால்.
செல்லும் இருவரையும் ஒரு மென்னகையுடன் பார்த்திருந்தாள் வருணா. வண்டியை பூட்டிக்கொண்டிருக்க.. அவள் பின்னால் ஒலித்த “க்கும்” மில் திரும்பினாள்.
அவளருகே நின்றிருந்தான் அவளது டீம் லீடர்.  
வருண்..
திடுக்கிட்ட வஞ்சியவள் வண்டிமீது விழச்செல்ல.. விழாது பிடித்தும் நிறுத்தியிருந்தான். அவள் விழுந்திருந்தால் கூட பெரிதாய் பாதிப்பிருந்திருக்காது.. அவன் பிடித்து நிறுத்தியதில் தான் இதயம் தறிகெட்டோட.. அவன் மென்ஸ்பரிசத்தால் மாதுவிடம் ஒருவித மயக்கம்.
“ஏன் லேட்” என்ற அவனது ஒற்றை வார்த்தைக்கு
“அது வந்து.. வாட்டர் ப்ராப்லெம்.. தண்ணி வரல.. குழாய் ஒடஞ்சிருச்சு.. டேக் டிவெர்சன் சொல்லிட்டாங்க போராட்டம் பண்ணுறாங்க..” என்று அவள் வாய் டைப் அடிக்க
நாட்டியமாடிய அவள் நயனங்களை பார்த்தபடியே உள்ளே போகுமாறு கைகாண்பித்தான்.
அவன் கைகாண்பித்தது தான் தாமதம்.. போமா மின்னலென ஓட்டம் எடுத்திருந்தாள் வருணா.
அவள்தான் வேண்டும் என்று அவனது டீமிற்கு அவளை தேர்வு செய்திருந்தான் வருண். அவளது ரெஸ்யூம் பார்த்ததும் அவன் அதரங்களை அழகாய் விரியச் செய்தது அவளது பெயர். முதலில் பெயரால் உண்டான பொருத்தம் மெல்ல உருவெடுத்து அவன் மனதில் மங்கையைப் பொருத்தியது.
அதை அவளும் அறிந்திருந்தாள்.. அதனால் தான் அவன் அருகில் வந்தாலே அகத்தில் உருவெடுக்கிறது ஆனந்த ஊற்றொன்று.. அதனோடே பதற்றமும் சேர்ந்து அடுத்தநொடி அவளை அவன் முன் இருக்கச் செய்யாது அப்ஸ்காண்டாக வைத்து விடுகிறது.
அதை அறிந்திருக்கவில்லை அவன். இன்றும் அவள் ஓட்டத்தை துவங்க.. புரியாமலே அவளை பின்தொடர்ந்து அவனும் அலுவலகத்தை நோக்கி எட்டு வைத்தான்.
*****
இரண்டு நாட்களுக்குப் பின்
சென்னையின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏட்பட்டுள்ள நிலையில் குடிநீர் வழங்க முடியாது நீர் வாரியம் தடுமாறி வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டுபோய் காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் ஸ்தம்பித்துவிடும் சூழல் உருவெடுக்கும். அரசு இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றைய செய்தியை மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் வருணா.
‘என்னடா இது! ரெண்டு நாளைக்கு முன்ன அரசு மக்கள்கிட்ட கோரிக்கை விடுத்தது இப்போ மக்கள் அரசுகிட்ட கோரிக்கை விடுறாங்க.. இதுக்கு இல்லை போலயே ஒரு எண்டு.. இந்த நிலைமையை எப்படி கையாளுறது??’ என மங்கையின் மன அலைகள் முட்டி மோதிக் கொண்டிருந்தது.
“நீரா.. நம்ம நிலைமை ரொம்ப மோசமா இருக்கும் போலயேடி.. ரெண்டு நாள் முன்னாடியே ரோட்ல சாம்பிள் பார்த்தோமே!! தண்ணிய கொஞ்சம் அளவா யூஸ் பண்ணுடி”
அமிழ்தை சேமிக்க வருணாவின் அகம் முடிவெடுத்திருக்க..
“ஹே வரு!! அது அந்த ஏரியால பைப் ஒடஞ்சது நாளா தான் ப்ராப்லெம்.. பிக்ஸ் செஞ்சா சால்வ் ஆயிரும். நீ சன் மியூசிக் போடு ப்ளீஸ்” கண்டுகொள்ளாமல் காந்தை.
நீரா இன்றும் ஷவரை திறந்துவிட்டு அருவிபோல் ஆர்ப்பரிக்கும் நீருக்காக காத்திருக்க.. ஷ்..ஷ்.. காற்றோடு கூடிய ஓசை தான் வந்தது.
‘என்ன இஸ்கு இஸ்குனு கேக்குது’ யோசித்தவாறே பைப்பை திருகிவிட அதிலும் தண்ணீர் வரவில்லை.
“வருணா தண்ணி வரல..” என்று குரல் கொடுக்க..
“என்ன சொல்ற..”
“தண்ணி வரலைன்னு தமிழ்ல தானே சொல்றேன்.. என்னனு பாருடி நான் இன்னும் சரியா குளிக்கல…”
“ஒரு பக்கெட் தனியா பிடிச்சு வெச்சிருக்கேன் பாரு.. அதுல குளிச்சிட்டு வா நான் ஹவுஸ் ஓனர் கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று கீழே சென்றாள்.
நீரா அதில் குளித்து முடித்து வரும் வரை வருணா மேலே வரவில்லை. தயாராகி கீழே சென்றவள் சிலைபோல் நின்றிருந்த தோழியை உலுக்கி
“என்னாச்சு வரு.. இங்க என்ன பண்ணுற?” என வினவ
“ஹவுஸ் ஓனர் அவரோட சொந்த ஊருக்கு போறாராம்..”
“அந்தாளு போய்ட்டுப் போறான் அதுக்கு நீ எதுக்கு வயலின் வாசிக்குற?”
“ப்ச்.. வாட்டர் ப்ராப்லெம் நாலதான் அவரு போறாரு. இன்னைக்கே டேங்க்ல இருந்த தண்ணி எல்லாம் காலி. நம்மளையும் போகச் சொல்றாரு.. இங்க இருக்கிறதா இருந்தா ரெண்ட்டோட சேர்த்து தண்ணிக்கும் தனியா காசு கொடுக்கணுமாம். அதுக்குமேல உங்க இஷ்டம்னு போய்ட்டாரு”
“அந்தாள போகச் சொல்லு.. அதெல்லாம் நம்ம பார்த்துக்கலாம்.. சரி டைமாச்சு வா கிளம்பலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்ப, அவர்களுக்கு அடுத்த வீதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டிருந்தார்.
“என்ன அங்கிள் காலைலயே கூட்டம் அலைமோதும்.. இன்னும் ஹோட்டல் திறக்கலயா?” என்றாள் நீரா.
“அட அதை ஏன்மா கேட்குற.. குடிக்கவே சுத்தமா தண்ணி இல்ல.. இதுல எங்க போய் ஹோட்டல் நடத்துறது. பாத்திரம் எல்லாம் கழுவாம கிடக்குது ஒரு வாரத்திற்கு என் சம்சாரத்தோட ஊருக்கு கிளம்ப போறேன்” என்று கிளம்பிவிட்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்ப சிறிது தூரத்தில்
“வருணா அக்கா.. நீரா அக்கா” என்று ஒலித்த குரலில் வண்டியை நிறுத்தினாள் வருணா.
ஒரு சிறுமி ஓடி வந்துகொண்டிருந்தாள். இருவரும் தினமும் செல்லும் வழி என்பதால் அந்தச் சிறுமி நன்கு பழக்கம்.  
“என்னாடா பாப்பு! ஸ்கூல் இல்லையா இன்னைக்கு” என்றாள் நீரா வண்டியிலிருந்து கீழே இறங்கி
“ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க.. வாட்டர் இல்ல கேம்பஸ்ல.. ஒரு வாரத்திற்கு நான் ஊருக்கு போறேன் அதை சொல்லத்தான் கூப்பிட்டேன் பை க்கா” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.
“இதில இருந்து என்ன தெரியுது நீரா?”
“என்ன நடந்தாலும் ஏன் சுனாமியே வந்தாலும் நம்ம ஆபிஸ் மட்டும் லீவ் விடமாட்டானுகன்னு தெரியுது!!!” அவளுக்கு அவள் பிரச்சனை
“ஏய் வாட்டர் பிராப்லெம் ரொம்ப சீரிஸ் ஆகுதுன்னு சொன்னா நீ என்ன பேசிட்டு இருக்க..”
“அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.. சரி வா இன்னைக்கும் லேட்டா போனா அங்கிருக்கறவன் சீரிஸ் ஆய்ருவான்.. நீ உட்காரு நான் ஓட்டுறேன்” என வருணாவை அழைத்துக்கொண்டு அலுவலகம் சென்றாள் நீரா.
அவள் உள்ளே சென்றதும் தாகம் எடுக்க.. தண்ணீர் குடிக்க வாட்டர் டாக்ட்டரை நாடிச்சென்றாள். எங்கு தேடியும் அதைக் காணவில்லை.
“ஆபிஸ்ல வாட்டர் டாக்ட்டர் இல்லை. இனிமேல் நாமதான் தண்ணி கொண்டு வரணுமாம்.. நியூ ரூல்” என்றபடி ஒரு பாட்டிலை அவள் முன்பு நீட்டினான் நீரஜ்.
அதை வாங்கிப் பருகியவள் “எந்தக் கிறுக்கன் இதை சொன்னது??” என்று குரல் உயர்த்த
“எம்.டி” என்ற பதிலில் வாய்க்கு பூட்டை பூட்டிக்கொண்டாள் நீரா.
இருவரும் வந்து அவரவர் இருக்கையில் அமர, தண்ணீர் பிரச்சனை தான் அன்றைய ஹாட் நியூஸ்.. அதுகுறித்த விவாதங்களே அலுவலகம் முழுவதும் எதிரொலித்தது.
“ரெஸ்ட்ரூம்ல தண்ணி வருமா!!” என அருகிலிருந்தவன் கேட்க
“யாருக்கு தெரியும் வெஸ்டர்ன் கண்ட்ரிஸ் போல டிஸ்யூ தான்” என்று மற்றொருவன் பதிலளிக்க..
“அட வெக்கம் கெட்ட ஜென்மங்களா” என நீரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“கெரகம் புடிச்சவனுகளா எந்திரிச்சு போங்கடா” என துரத்திவிட்டான் நீரஜ்.  
அதன் பின் அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்திருக்க..  
வருண் ஒரு கோப்பையை எடுத்துவருமாறு வருணாவிடம் கூற அவளும் அதை எடுத்து சென்றாள்.
அவன் கோப்பையில் ஒரு பார்வையும் பாவை மேல் ஒரு பார்வையுமாய் இருக்க.. திடீரென்று விக்கல் எடுக்கத் துவங்கியது அவளுக்கு.
அவள் உடனே தண்ணீரைத் தேடினாள்.. அவளவனும் உடன் தேடினான்.. அவனிடமும் இல்லை.
கோப்பையை கீழே வைத்தவன் வெளியே சென்று தண்ணீர் கேட்க எவரிடமும் இல்லை. வேறு வழியின்றி ஸ்விக்கியில் தண்ணீர் பாட்டில்களை ஆர்டர் செய்தவன் அவளிடம் வந்து
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.. தீப் பரீத் எடு” என்று கூறிக்கொண்டிருக்க வருணாவிற்கு மூச்சு வாங்கியது. விக்கல் நின்றபாடில்லை.
“நான் உன்முன்னாடி இருக்கும் போது உன்னை வேற யாரு நினைக்குறாங்க?” வருண் வருணஜாலம் புரிய..
அவனை விழி விரித்து பார்த்தவளுக்கு விக்கலின் வேகம் தான் கூடியது..
“ஓகே ரிலாக்ஸ்” என்றவன் என்ன செய்வதென்று பார்த்திருக்க அவளுக்கோ விக்கல் விடாது வந்து இம்சித்து. ஒரு கட்டத்தில் நெஞ்சை பிடித்துகொண்டாள். அவளது செய்கையில் அவனே பயந்துவிட்டான்.
பதற்றத்தை தள்ளிவைத்து யோசித்தவன்
“வருணா.. காக்ரோச்” என்று கத்த.. பாவையோ பாவமாய் பார்த்துவைத்தாள்.
விக்கல் நிட்க அவன் கூறினான் அதற்கெல்லாம் பயப்படுபவள் இல்லை அவள்.
பின் ஒரு முடிவோடு அவள் அருகில் வந்தவன் அவன் நயனங்களை அவளுள் பாய்ச்ச.. வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விக்கினால்.
அவன் அதரங்களில் அரும்பிய குறுநகையுடன் அவளை நெருங்கியவன் அவள் முன்நெற்றியில் செல்லமாய் முட்டி
“ஐ லவ் யூ” என்று அவன் அகத்தின் அடி ஆழத்திலிருந்து உச்சரிக்க..
இமையும் இமையும் இமைக்காது பார்த்திருந்தாள் வருணா.
சிலையென நின்றவளுக்கு உயிர்ப்பு கொடுக்க அவளை பார்த்து கண்சிமிட்டினான் வருண். அவள் இமை தாழ்த்திக்கொள்ள.. செம்மை பூசிக்கொண்டது அவள் கன்னங்கள் இரண்டும். அதை அவன் ரசித்துக் கொண்டிருந்த நேரம்
“அப்படிப் போடு” என்று ஒலித்த குரலில் இருவரும் திடுக்கிட்டு விலகி நிற்க.. புன்னகை முகமாய் நின்றிருந்தான் நீரஜ்.
“அது.. விக்கல் நிற்க தான் அப்படி சொன்னேன்” என்று வருண் சமாளிக்க..
“நம்..பிட்..டேன்..” என்றான் நீரஜ். அழுந்த உச்சரித்து தான் நம்பவில்லை என்றுணர்ந்த.
விக்கல் நின்றுவிட்டதை அப்போது தான் உணர்ந்தாள் வருணா. கதவை தள்ளிக்கொண்டு அவள் அங்கிருந்து வேகமாய் வெளியேற.. ஒரு ரகசிய சிரிப்புடன் வருணிற்கு கைகொடுத்துவிட்டு நீரஜும் கிளம்பிவிட்டான்.
இதே டெக்னிக்கை அவன் நீராவிடம் பயன்படுத்த ஆரம்பித்தான். வராத விக்கலை வாவா என்றழைத்து நாடகத்தை அரங்கேற்ற.. நீரா அவனை கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. சோர்ந்துபோய் நாடகத்தை கைவிடும் நேரம் நடந்தது அது.
“நீரஜ் ஆர் யூ ஓகே பேபி?” என்றபடி அவன் அருகில் வந்தாள் திவ்யா.
‘பேபியா!’ என ஸ்லொவ் மோஷனில் திரும்பிய நீரா அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனிக்க..
“இன்ஹேல்.. எஸ்ஹேல்..” என்று அவன் முதுகை நீவிவிட்டு தலையை தட்டி ஏதேதோ செய்துகொண்டிருந்தாள் திவ்யா.
நீரா பார்க்கிறாள் என்றறிந்ததும் “அம் ஓகே பேபி டோன்ட் வொரி..” என்று நீரஜும் ஆட்டத்தை ஆரம்பித்தான்.  
நீரஜிற்கு சென்று சேர வேண்டிய பல அடிகளை கீபோர்ட் நீராவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. கவனித்தும் கவனியாதவன் போல் அவன் இருக்க. ஒரு கட்டத்தில் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவள்
“திவ்யா உங்கள டி.எல் கூப்பிட்டாரு” என்று அவளை அங்கிருந்து கிளப்ப முயன்றாள்.
“அவரை இப்போதான் பார்த்துட்டு வரேன்” என திவ்யா பதிலளிக்க.. நீரஜ் சிரிப்பை அடக்கினான். அதை நீரா பார்த்துவிட, உடனே
“க்க்.. க்க்..” விக்கலைத் தொடர்ந்தான்.
“நீரஜ் நம்ம ஹாஸ்பிடல் போயிரலாம் வாங்க” என திவ்யா அவனது கைப்பிடிக்க..
அதை தட்டிவிட்ட நீரா, “நான் பார்த்துக்கறேன் நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க திவ்யா” என்று குரலில் காட்டத்தை கூட்ட.. திவ்யா புரியாது பார்ப்பது கண்டு
“இல்ல உங்களுக்கு வேலை அதிகம் இருக்குமே! நான் ப்ரீ தான் அதான் சொன்னேன்” என்று சமாளித்துக்கொண்டாள்.
“நோ நோ எனக்கு எந்த வித ப்ராப்லெமும் இல்ல.. நான் பார்த்துக்கிறேன். நீங்க வாங்க நீரஜ்” என்று மீண்டும் அவனது கைப்பிடிக்க
“ஏய் எடுடி கையை” கிளம்பியது நீரா புயல்
‘அட்ராசக்க’ என்று பார்த்திருந்தான் நீரஜ்.
“என்ன மிஸ்.நீரா இப்படி பேசுறீங்க?”
“வேற எப்படி பேசுவாங்க!! அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல.. அப்பறம் என்ன உனக்கு. உன் வேலைய மட்டும் பாரு போ.. தேவையில்லாம என் விசயத்துல தலையிடாதா” என்றவள் நீராஜின் கையோடு அவள் கையை கோர்த்துக்கொண்டாள்.
திவ்யாவை நோக்கி இது என்னுது லுக்கை பறக்க விட.. நீரஜ் நீராவை காதலுடன் பார்த்திருக்க.. இருவரையும் ஒரு முறைப்புடன் கடந்து சென்று அவள் வேலையைத் தொடர்ந்தாள் திவ்யா.   
“நீ வா நீரஜ் நம்ம போலாம்” கவலையாய் அவள்.
“எங்க.. பேபி..!” கிளுகிளுப்பாய் அவன்.
“ஹாஸ்பி..” என்னும்போது தான் கவனித்தாள் அவனுக்கு விக்கல் நின்றுவிட்டதை.
“விக்கல் நின்னுடுச்சி உனக்கு!!”
“அது எப்போ வந்தது இப்போ நிக்குறதுக்கு”
“அட ப்ராடு.. இது எல்லாம் வேணுன்னுதான் பண்ணுனியா” என்றவள் துரத்தி அடிக்க.. ஆசை தீர அவள் அன்பளிப்பாய் அளித்த அடிகளை எல்லாம் பெற்றுக்கொண்டவன் அவள் கை பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தி
“எல்லாம் வேணும்னு பண்ணல.. நீ வேணும்னு தான் பண்ணுனேன்” என்றான்.
அவள் அகத்தில் எழுந்த அலைகளில் காதல் படகு மிதக்க.. அதில் இருவரும் பயணிக்க.. பயணத்தை தற்காலிகமாய் நிறுத்தியவள் தலைவனை நிமிர்ந்து நோக்கி
“அதுக்குன்னு அவளை பேபின்னு கூப்பிடுவயா??” என்று கண்களை சுருக்கி காரிகை முறைக்க.. கரைந்துதான் போனான் காதலன்.
“உன்னைத்தான் கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டயே!”
“நான் சொன்னா நீ கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்ப பாரு.. என் பின்னாடி சுத்தாதேனும் தான் சொன்னேன் அதெல்லாம் கேட்டயா!”
“இனிமேல் சுத்த மாட்டேன் ஏன்னா.. மிசன் கம்ப்ளீடெட்.. சக்களத்தி சண்டை எல்லாம் நல்லா போடற நீரா” என்று கண்ணாடிக்க..
“ப்ச்.. போடா” அவன் நெஞ்சில் பல தாக்குதல்களைத் தொடுத்தாள்.
அவன் குனிந்து அவள் முகம் காண.. வெட்க ரேகைகள் அவள் முகமெங்கும் படர்ந்திருக்க.. அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
“உனக்குள்ள கொஞ்சம் கூட ஈரமே இல்ல நீரா..”
அவன் கூற்று புரியாது பாவை நிமிர்ந்து நோக்க  
“ஒருத்தன் விக்கிட்டு இருக்கானே என்னமோ ஏதோனு நீ திரும்பி பார்த்தயா! அவளை பேபின்னு கூப்பிட்டதால மட்டும்தானே நீ புயல் வேகத்துல வந்த.. திவ்யாக்கு இருக்குற அக்கறை கூட உனக்கில்லை..”
தன்னவளை விட தன்மேல் வேறுசிலர் அக்கறை கொள்வதை எண்ணி மனதோரம் ஒரு சிறு வருத்தம் எட்டி பார்த்தது அவனுக்கும்.
“நீ யாரு எந்தெந்த வேலைக்கு எப்படி டைப் டைப்பா யோசிப்பனு சகலமும் யான் அறிவேன். உன் நடிப்பும் எனக்கு நல்லா தெரியும் ராஜா. இருந்தும் ரொம்ப நேரம் பெர்பார்ம் பண்ணுனயா கடைசில நானே உண்மை தானோனு நம்பிட்டேன்”
அவன் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள
“நான் கண்டுக்கலைனு நீ பார்த்தயா.. விக்கல் வந்தா முதல்ல என்ன கொடுப்பாங்க??” கேள்வியாய் அவள்.
“தண்ணி” பதிலாய் அவன்.
“அதை யாராவது உனக்கு கொடுத்தாங்களா??”
அவன் இல்லையென்று தலையசைக்க.. அவள் கைபேசியை காண்பித்தாள் ஸ்விக்கியில் தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்திருந்தாள்.
ஆர்டரும் சரியாய் வர, அதை வாங்கி நீரஜுக்கு அளித்தாள்.
“கடைசில தண்ணியைக்கூட ஸ்விக்கி பண்ணுற அளவுக்கு நம்ம நிலைமை வந்திருச்சே! கலி காலம்” என்று புலம்பினாலும் நீராவை கண்களால் பருகியபடி பாட்டிலில் இருந்த நீரைப் பருகினான் நீரஜ். நீரா நீராக நிறைந்திருந்தாள் அவனுள்.
ஸ்விக்கியில் ஆர்டர் வந்ததும் வருணாவின் இடத்திற்கு ஒரு தண்ணீர் பாட்டிலுடன் சென்றான் வருண்.
சிறிது நீரைப் பருகியவள் மீதியை அவன்புரம் நீட்ட.. அதை வாங்கிப் பருகியவன் மீண்டும் அவளிடம் அளிக்க.. இப்படியே அதிலிருந்த நீரை ஒன் பை டூவில் இருவரும் குறைக்க.. குறைந்த நீரோடு கரைந்தது உள்ளம்.. பெருக்கெடுத்தது காதல் வெள்ளம்..
*****
இரண்டு நாட்களுக்குப்பின்
சென்னையில் கடும் நீர் தட்டுப்பாடு. மக்கள் அவதி. மக்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு தற்காலிகமாய் இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய செய்தி.
வருணாவோடு நீராவும் தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வரு உன்னோட பெர்ப்யூம் கொஞ்சம் கொடேன்” என்று கேட்டு வாங்கி புஷ் புஷ் என அடித்துக்கொண்டாள் நீரா.
சிறிய அளவு நீரை மட்டுமே இருப்பு வைத்திருந்தனர். அதுவும் ஹவுஸ் ஓனர் குடும்பம் இல்லாததால் வாளியில் சேமிக்க முடிந்தது. அந்த குறைந்த அளவு நீர் அவர்களது தேவை போக முகம் கழுவ மட்டுமே வரும். குளியலுக்கு துணி துவைக்க எல்லாம் போதாதுபோக செண்டின் உபயோகத்தில் இருவரும் குளிக்காது கிளம்பினார்.
தண்ணீர் தட்டுப்பாடு.. இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது. அதனோடே அலுவலகம் செல்ல.. அங்கிருப்போருக்கும் அதே எண்ணம் தான்.
“என்ன நீரா பெர்ப்யூம் எல்லாம் தூக்குது.. குளிக்களையோ!!” என்றபடி வரவேற்பளித்தான் நீரஜ்.
‘ஆமா இங்க குடிக்கவே தண்ணி இல்லையாம் இதுல குளிக்கறது ரொம்ப முக்கியம்’ என நினைத்தவள்
“அங்க மட்டும் என்ன வாழுதாம்.. குப்புனு வருது” என்று மோப்பம் பிடித்து “ஃபாக் மென்??” என புருவம் உயர்த்த.. சரி என்று அவன் தலையசைக்க.. அவர்கள் இருவரையும் வினோதமான பார்த்திருந்தார் வருணாவும் வருணும்.
பின் இருவரும் வேகமாய் உள்ளே செல்ல.. அவர்களை பின்தொடர்ந்தனர் நீராவும் நீரஜும்.
“எதாவது செய்யணும்.. வாட்டர் ப்ராப்லெம் ரொம்ப சீரியஸா இருக்கு” வருணா
“இன்னிக்கு மட்டும் பார்க்கலாம்.. ரொம்ப கஷ்டமா இருந்தா லீவ் போட்டுட்டு பேசாம ஊருக்கு போய்டலாம்..” நீரா
“போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வரலாம்.. அதுக்குள்ள கவர்ன்மெண்ட் எதாவது ஸ்டேப் எடுப்பாங்க..” நீரஜ்
“இப்போ எடுப்பாங்க அப்பறம்!! சிங்கார சென்னை.. வந்தவங்க எல்லாரையும் வாழவைக்குது.. இங்க ஒரு பிரச்னைனதும் இங்கிருந்து கிளம்ப தான் எல்லாரும் நினைக்குறோமே தவிர அதை எப்படி சரி செய்யலாம்னு யாரும் நினைக்குறதில்லை இல்லையா!!” வருணா
“ஹே கூல்.. எதுக்கு டென்ஷன் ஆகுற!! நம்ம கண்டிப்பா எதாவது செய்யலாம்” வருண்
“ஏதாவது செய்யணும் வருண்.. பட் என்ன செய்யுறது??” என்று யோசித்தவள் பின் நேரே எம்.டியை சந்தித்து அவரிடம் ஒரு வாரம் நால்வருக்கும் சேர்த்து அலுவலகத்திற்கு விடுப்பு வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள்.
“என்ன பிளான் பண்றே நீ?? எனக்கும் சேர்த்து லீவ் வாங்கிட்டு. நாம எங்காவது ட்ரிப் போறோமா” அவள் காதில் வருண் கிசுகிசுக்க
“ஹ்ம்ம் ஆமா வாங்க சொல்றேன்” என்று அவளும் கிசுகிசுக்க.. அவள் பின் சென்றான். அவன் பின் புரியாத பாவனையில் நீராவும் நீரஜும்.
அடுத்து அவள் கூறிய விடயத்தில் மூவரும் அதிர்ந்தனர்.
அருகில் இருக்கும் நீர் நிலைகளை தூர்வாரச் செல்லப்போகிறோம் என்றதுதான் அவர்களது அதிர்ச்சிக்குக் காரணம்.
“நம்மால மட்டும் எப்படி முடியும்??” நீரா
“நம்மளோட இன்னும் சில வாலண்டியர்ஸ் பப்ளிக் சேர்ந்தா??”   வருணா
“என்ன உளர்ற வருணா.. அங்கிருக்க மக்கள் எல்லாம் எப்படி நமக்கு உதவுவாங்க” நீரஜ்
“இங்கிருந்தே எப்படி உதவுவாங்கனு பேசிட்டு இருந்தா உதவி கிடைக்காது களத்துல இறங்கி பார்த்தா தான் உதவி கிடைக்குதா இல்லையானு தெரியும்..” வருண்
“இப்போ எதுக்கு இதை பண்ணப் போறோம்?? இதை செய்யுறதால தண்ணிப் பிரச்சனை தீருமா என்ன??” நீரா
“இதுக்கான பதில் இப்போ கிடைக்காது.. நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்” வருணா
“கைஸ் வாட் இஸ் திஸ்.. அவதான் அவ்வளவு சொல்றாளே செய்து தான் பார்ப்போம் வாங்க” வருண்
“இருந்தாலும்” என இருவரும் இழுக்க
“என்ன நீங்க.. உங்க டி.எல் சொன்னாகூட ப்ரொஜெக்ட்ல இறங்க மாட்டீறீங்க?? ஒழுங்கா வாங்க” என்று உத்தரவிட்டாள் வருணா
“நல்லா பேச கத்துகிட்ட நாலு நாள்ல..” என்று அவளோடு இணைந்தான் வருண்.
அவர்களது திட்டம் தெரிந்து அலுவலகமே அவர்களோடு கிளம்பியது.
“இதுதான் விஷயம்னு சொல்லிருந்தா நானும் உங்களோட ஜாயின் பண்ணிருப்பேனே கைஸ்” என்று எம்.டியும் கிளம்பிவிட்டார்.
அடுத்து அவர்கள் செய்தது இதுபற்றி சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு.. அவர்களோடு பலரை இணைத்து.. முறைப்படி அனுமதி பெற்று களத்திற்கு செல்லத் தயாரானது தான்.
*****
ஒருவாரம் கழித்து
சென்னை மாநகர் இயல்பிற்குத் திரும்பியிருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து தண்ணீரை வரவழைத்து அரசு அதிகாரிகள் நிலைமையை சிறப்பாய் கையாண்டனர். தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்தும் வழிகள் குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
“வரு.. சன் மியூசிக் ப்ளீஸ்” குளியலறையில் இருந்து குரல்கொடுத்தாள் நீரா.
அவள் குளித்து முடித்து வெளியே வந்ததும் வருணா சென்று பார்க்க.. ஒரு பக்கெட் நீரை மட்டுமே பயன் படுத்தியிருந்தாள். மணிக்கணக்கில் என்றும்போல் ஷவரை பயன்படுத்தவில்லை. அதைக்  கண்டதுமே வருணாவின் இதழ்கள் அழகாய் நெளிந்து வளைந்தது.
*****
ஒரு வருடம் கழிந்து
சென்னையில் கடும் வெயில் நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் குறைந்து காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்த வித குடிநீர் பற்றாக்குறையும் ஏட்படாதென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஓராண்டிற்கு முன் பல நீர் நிலைகள் சமூக ஆர்வலர்களால் தூர்வாரப்பட்டு இப்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. அரசாங்கத்தோடு மக்களும் கரம் கோர்த்ததில் போன வருடம் நிகழ்ந்ததுபோல் அல்லாது சென்னை மாற்றம் கண்டுள்ளது.
தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க
“பேபி!! எதுக்கு இவ்வளவு வாட்டர்?? குளிக்கத்தானே போற பேபி ஒரு பக்கெட் அளவே போதும்” என்று அவன் கையிலிருந்த மற்றுமொரு வாளியை வாங்கிக்கொண்டாள்.
“அநியாயம் பண்ணாத பேபி.. எனக்கு ஒரு பக்கெட் எல்லாம் பத்தாது!!”
“அப்போ குளிக்காத பேபி.. ஃபாக் மென் ட்ரை பண்ணு.. உனக்கென்ன இது புதுசா??” என மிசஸ்.நீரஜ் கண்ணடித்துக் கேட்க
“அடிங்க” அவளை துரத்திக்கொண்டு ஓடினான் நீரஜ்.
தன்னார்வல அமைப்பான சிறுதுளியினர் ஓராண்டுக்கு முன் எடுத்து வைத்த முதல் அடி இன்று பல தொண்டு நிறுவனங்களையும் பொதுப்பணித்துறையினரையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து பல நீர் நிலைகளை மீட்கச் செய்திருக்கிறது.
தொலைக்காட்சியில் ஓடிய செய்தியை கேட்டு அவனுக்கு ஓயாமல் விக்கல் எடுக்க
“நான் உங்க பக்கத்துல இருக்கும் போது வேற யாரு உங்கள நினைக்குறா?? விக்கல் வருது..” என்று மிஸஸ்.வருண் கேட்க.. அவன் அதரங்களில் அரும்பியது புன்னகை.
“ஒய் விக்கல் நிக்கல.. காக்ரோச்க்கு எல்லாம் நானும் பயப்படமாட்டேன்”
“அப்படியா!!” அவனை நெருங்கியவள் “ஐ லவ்…” யூ சொல்லும் வரை யார் காத்திருப்பதாம்…? அணைத்து அவன் பாஷையில் காதல் சொல்லியிருந்தான்.
இதுபோல் பல ஊர்களில் அரசின் உதவியை எதிர்பார்க்காமல் மக்களே முன்வந்து பல நீர் நிலைகளை மீட்டெடுத்தனர். அரசும் பொதுமக்களும் தன்னார்வல அமைப்பினரும் தனியார் நிறுவனங்களும் களம் இறங்கி பல குளங்களை தூர் எடுத்துள்ளனர். குளத்தின் நடுவில் மரக்கன்றுகள் நட வசதியாக மண் மேடுகள் ஏட்படுத்தியுள்ளனர். தன்னார்வல அமைப்பான சிறுதுளியினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
என்று செய்தித் தொகுப்பாளினி கூறியதைக் கேட்ட இருவரும் ரகசியப் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஒலித்தது வருணாவின் கைப்பேசி. நீரா தான் அழைத்திருந்தாள்.
அதை எடுத்து காதிற்கு கொடுக்க
“பதில் கிடைத்தாச்சு” என்றாள்.
 

Advertisement