Advertisement

ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி!
பார்த்திபன் கனா 9
கரையும் காலம்..!!
வேனிற்காலம் வசந்தம் விதைத்து விடைபெற்றுச் சென்றிருக்க.. கார்காலம் வந்து நின்றது புனல் பாய்ச்ச..
கடந்த காலம் முழுவதும் அன்பு.. அக்கறை.. கொஞ்சம் ஊடல்.. கொஞ்சும்  உவகை.. சிறு துளியாய் சினம்.. இவற்றின் கனம் தான்…! யாழுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்கும். 
மெல்லிய இருள் கவிழ்ந்த அந்த அறையினுள் மௌனம் மொழியாகி இருக்க… அதனை உடைத்திட அலறியது அலைபேசி.. அன்புக்குரியவரிடமிருந்து அழைப்பு…!
அழைப்பு ஏற்கப்படவில்லை… மறுமுறையும் அன்பு அழைத்துப் பார்க்கிறது.
அன்பு….. ஆகச்சிறந்த ஆயுதம்…! எதிரி என்ன.. எவரையும் அசைத்துப் பார்த்துவிடும்…!
கவிழ்ந்திருந்த பேரிருளை கலைக்க.. இமைக் கதவு திறந்து பார்த்தான்… தொட்டு விடும் தொலைவில் தான் இருந்தது அலைபேசி… ஆனாலும் அழைப்பை ஏற்க அவனுக்கு அனுமதியில்லை.
அழைப்பு நின்றுவிட்டிருந்தது..! 
இவன் இமை பூட்டிக் கொண்டான்… இமை இடுக்கின் வழியாக கசிந்தது அவன் தனிமையின் ஈரத் துளி. 
நாட்காட்டி.. ‘இரு நாள்கள் கடந்துவிட்டன.. இன்னும் நீ என்னை கவனிக்கவில்லை’ அவனைக் குற்றம் சாட்டியது. அதற்குத் தெரியவில்லை… அவனும் இரு நாள்களாக கவனிக்க யாருமில்லாமல் கிடக்கின்றான் என. 
வெள்ளியன்று மண் மீது மையல் கொண்டு வந்த மழை… இவன் மீதும் காதல் கொண்டு விட… நனைந்துவிட்டிருந்தான். வந்து விழுந்தவன் தான் இன்னும் எழவில்லை.. எழ முடியவில்லை.
அன்னைக்காக இங்கிவன் ஏங்கி தவித்திட… தனயன் நிலை அறியாமல் அவளும் தவித்துப் போயிருந்தாள்.
தலைவன் தவிப்பை தணிக்க… தாயின் ஏக்கம் தீர்க்க… வந்திறங்கினாள் அவன் தலைவி…!
மென்காற்று மெல்லப் புகுந்த சாளரத்தின் வழியாக… அவளும் அவன் அறையினுள் அடியெடுத்து வைத்தாள்.   
அவள் அகத்தினுள் அடியெடுத்து வைக்கின்றது அதிர்வு…! அவள் கண்கள் கடத்திய காட்சியில்..! பார்த்திபனின் கன்னவெளிகளில் படிந்திட்ட கறை துளிகளால்..!
‘ரா…ஜா….’ அவள் இதழ்கள் மெல்லிசைத்து முடிக்கும் முன் அதிவேகமாய் அவன் அண்மையில் நின்றிருந்தாள்.
அவன் கிடந்த கோலம் புள்ளிகளின்றியே புரிதலைக் கொடுக்கின்றதே இவளுக்கு..! 
மங்கையவள் மலர்க்கரம் மன்னவனைத் தீண்டி… விழி திறக்கத் தூண்டிட.. மெல்ல இமைக்கதவுகளைத் திறந்தான்.
சற்று முன்னர் இருந்த இவன் கன்னத்து ஈரம் இடமாறியிருந்தது இப்போது இவளிடம்..!
‘மங்கம்மா……..’ தனிமையிலிருந்து விடுதலை கொடுக்க… ஏக்கங்கள் தீர்க்க… ஏமாற்றம் போக்க… வந்துவிட்டாள் அவன் மங்கை. உள்ளம் உணர்ந்து கொண்டதில்.. அவள் கரத்தை தனக்குள் பொதிந்து கொள்ள பேராவல் ஒன்று அவனிடம்..! ஆனால் அசைய முடியவில்லை.. அசைக்க முடியவில்லை.
விழிகளில் தீட்டப்பட்ட செம்மையும்.. உதடுகளின் உலர் நிறமும் அவளை உடையச் செய்ய.. சட்டென அங்கிருந்து நகர்ந்தாள்.
சில மணித்துளிகள் கடந்திருக்க… அவன் நாசியை தீண்டியது காபியின் நறுமணம்.
அவனை எழுப்பி அமர வைத்து காபி புகட்டி.. மாத்திரை கொடுத்தாள்.. சாய்ந்து உட்காரக் கூட சக்தியில்லை அவனிடம். 
‘படுத்துக்கோ…..’ என படுக்க வைத்ததும் ஓரிரு மணித்துளிகளில் உறக்கம் தழுவிக் கொண்டது அவனை. அவள் இருக்கிறாள் என்ற நினைவின் நிம்மதியில்.
அவன் உறங்கவும் இவள் பார்வதிக்கு அழைப்பு விடுத்தாள்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பகவதியையும்.. நிதியையும் அழைத்துக்கொண்டு வீரபாண்டி சென்றிருந்தாள் யாழ் மங்கை. 
யாழகம்..!
யாழ் மங்கையின் கனவு.. கடமை.. எப்படியும் சொல்லலாம். வஞ்சியவள் வேர்வை வாசம் ஒவ்வொரு தூணிலும் வீசும்..
யாழ் சகோதரிகளின் வாசஸ்தலத்தில் ‘யாழகம்’ என்ற பெயர்ப்பலகை இடம்பெறாது போனால் அதிசயமே! வீரபாண்டியிலும் வரவேற்றது யாழகம். இம்முறை நிரந்தரமாக மாட்டப்பட்ட பெயர்ப்பலகையுடன்.
அவள் அன்னைக்காக… முழுக்க முழுக்க.. அவள் உழைப்பில் உருவான உறைவிடம் அது. உதிரத்தையெல்லாம் வியர்வையாய் உதிர்த்து உருவாக்கியிருந்தாள் அவள். யாழ் நிதியின் படிப்பு முடிந்ததும் மீண்டும் அவள் அப்பாவின் நினைவுகளை சுமந்து நிற்கும் அவ்வூருக்கே பயணம் மேற்கொள்வதாய் எண்ணம் மங்கைக்கு. 
இரு வாரங்களுக்கு முன்பு தான்.. கிரகப்பிரவேசம் செய்திருந்தார்கள்.. வார நாட்களில் அங்கு தான் இவர்களது வாசம். 
திங்கள்.. செவ்வாய் நிதிக்கு தொடர் விடுமுறையாகிப் போக… அவளும் அன்னையும் அங்கிருந்து கொள்ள… யாழ் வேலையைக் காரணம் செய்து இங்கே வந்திருந்தாள்.
ஊரிலேயே பார்வதி அழைத்து பார்த்திபன் அழைப்பை ஏற்க மறுப்பது பற்றிச் சொல்ல… இவன் வீடு வந்தாள்.
பார்க்காகி நின்ற பல்சர்… அதன் உரிமையாளன் உள்ளிருப்பதை உறுதி செய்ய.. அழைப்பு மணி தட்டிப் பார்த்தாள்.. திறக்கபடவில்லை கதவு.
சாட்டிலைட் தூது அனுப்பியும் செய்தி சென்று சேரவில்லையோ… வந்து சேரவில்லையோ.. பின் பக்கச் சாளரம் கம்பியற்று கட்டுப்பாடற்று இருக்க… உள்ளே குதித்து விட்டாள்.
சத்தியமாக சண்டை போடத்தான் வந்தாள்.. அப்படியென்ன அன்னையிடம் பிடிவாதம்.. அவரை இப்படி தவிக்க விடுவது தகுமா..?? தருமமா..?? நியாயம் கேட்டு வந்தவள் அவன் நிலை கண்டு துடித்துப் போய் நின்றாள்.
அதிலும் அவன் கண்ணீர்….. கண்ணீர் சொன்ன கதையில் கரைந்தே போனாள்.
முளைத்து நின்ற வியர்வைத் துளிகள்… காற்றை கேட்டு நிற்க.. எல்லா யன்னல்களையும் திறந்து வைத்து அவன் சமையலறைப்பக்கம் வந்தாள்.
மீதமிருந்த உணவை அகற்றி… சுத்தம் செய்துவிட்டு கஞ்சி வைத்து வர… விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்திருந்தான்.
கழுத்து… நெற்றியைத் தொட்டுப் பார்த்தவள்… “காய்ச்சல் குறைஞ்சிடுச்சு ராஜா… இந்தா இந்த கஞ்சியைக் குடி… அந்த மாத்திரை கொஞ்சம் ஹை டோஸ்…” என்றாள்.
அவன் அமைதியாகக் குடித்து முடிக்க.. “ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்..” என்றாள்.
அவன் மறுப்பாக தலையசைக்க… “நீ கிளம்புற…” கட்டளை மொழி காரிகையிடமிருந்து.
அவனுக்கு நேரம் கொடுத்துச் சென்றவள்… மீண்டும் வர.. அவன் அப்படியே அமர்ந்திருந்தான். அவளும் கரத்தை கட்டிக் கொண்டு கதவோரம் நின்றுவிட.. அவள் பிடிவாதத்தின் முன்பு தோற்று தான் போனான்.
ஆட்டோ வரவழைத்து அவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கிளினிக் சென்று வர.. நேரம் எட்டை எட்டியிருந்தது.
“ராஜா… நா கிளம்புறேன்.. கஞ்சியும் மாத்திரையும் வச்சிருக்கேன்… எதாவது வேணும்னா கூப்பிடு.. கதவை வெளில பூட்டிடுறேன்…” என்றுவிட்ட இவள் விடைபெற…
“மங்கம்மா!!!!!” என்றழைத்தான்.
இவள் முறைப்பை முகத்தில் காட்டி திரும்பி நிற்க… 
“தேங்க்ஸ்டி…!!” ஆத்மார்த்தமாக அவன் சொல்ல…
“நான் உன்கிட்ட கேட்கவே இல்லையே………” ராகம் பாடியவள் முறைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.   
“நான் உன்கிட்ட கேக்கவா….?” அவன் விழிகளும் விழைந்தனவே வினா தொடுக்க..
‘என்ன’ என்பதாய் பாவை பார்த்திருக்க…
“எப்பவும் என்கூடவே இருந்திடறியா………..” பார்த்திபன் பதமும் அதில் தொக்கி நின்ற தொனியும் மங்கையை மறுவார்த்தை பேச அனுமதிக்கவில்லை.
ஆனால் மறுப்பாகத் தலையசைத்தாள். பார்த்திபன் விழிகளை விலக்கவில்லை இவளிடமிருந்து.
மறுப்பு… அவனுக்கு புதுமை அல்ல… பழக்கபட்ட ஒன்று தான்… சிறு பருவம் முதலே நிறைய.. நிறைய.. மறுக்கப்பட்டிருக்கின்றன.
காதல்….. காதல் கூட காதலைச் சொன்ன மறு கணமே மறுக்கபட்டிருக்கிறது.. இவளால்..!
மறுபடியும் மங்கை…! மற்றொரு மறுப்பு…! ஆனால் மாற்றமுண்டு..! 
அன்றைய ஏமாற்றம் இல்லை…. வலி இல்லை…. வேதனை இல்லை… ஏனெனில் இவன் எதிர்பார்த்து நின்றதே இந்த மறுப்பைத் தானே…!
ஆனால் அடுத்து இவன் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஒன்றைச் சொல்லி… திகைக்க வைத்தாள் அவள்.
“மிஸ்.. யாழ் மங்கை பரதனா என்னிக்குமே உன்கூட இருக்க முடியாது… ஆனா மிசஸ்.. யாழ் மங்கை ராஜ பார்த்திபனா இருக்கலாம்…”   
குறுக்கே கட்டிய கரங்களும் குவிந்த குமிண்சிரிப்புமாய் ‘என்ன சொல்லப் போகிறாய்..??’ என இவள் பார்த்திருக்க… எப்படி இருக்கிறதாம் எதிரிலிருப்பவனுக்கு…?
ஆழி அறியா ஆனந்த அலையொன்று அகத்தை அள்ளிச் செல்ல.. தொலைந்த தடம் தெரியாமல் தித்தித்து நின்றிருந்தான்.
ஏமாற்றம்… எதிர்பார்ப்பிற்கு எதிராக…! புரட்டிப்போடும் பூரிப்புடனும் நிறைந்து நின்ற நிம்மதியுடனும் வந்த மாற்றம்…!
‘மிசஸ்.. யாழ்மங்கை ராஜபார்த்திபன்….’ மெல்ல மீட்டிப் பார்த்தான் அவள் பெயரை..! தூவிய தேனாய் தித்தித்ததில் விந்தை இல்லையே..!
நிமிர்ந்து அவள் முகம் நோக்கினான். அவள் இதழ் தொட்ட புன்னகை இவன் இதழையும் தழுவியது இப்போது.
“ஆனா ஒரு கண்டிஷன்…..” நிறுத்தினாள் அவள்.
இவன் எதிர்பார்த்தேன் என்பதைப் போல் தலையசைக்க… 
“என்னோட பிறந்த நாளைக்கு முன்னாடி நம்ம கல்யாணம் நடக்கணும்…” 
யோசனை பார்த்திபன் புறம்..
 
அவன் பாவனை கண்டவள் “என்னடா யோசிக்குற..?? உனக்கு இருக்கிறது ஒரே ஆப்ஷன் தான்…..” எனச் சொல்லி சுட்டு விரலை மட்டுமாய் ஆட்ட….
“யாழ் விளையாடாத…..” தீவிரத்தை தொட்டிருந்தது அவன் தொனி.
“நான் விளையாடல… இது விளையாடுற விஷயமும் அல்ல….” இவளும் நிதானமாக சொல்ல..
“வர சனிக்கிழமை உன் பிறந்த நாள்… இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு… இரண்டு வீட்டுலயும் பேசணும்… இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா..??”
“அது தெரியாது… ஆனா கல்யாணம் பண்ணிக்க பொண்ணு.. மாப்பிள்ளை போதும்னு தெரியும்..”
இவன் முறைக்க…. “அப்புறம்… தாலி..” கண் சிமிட்டிச் சிரித்தாள்.
“யாழ்ழ்ழ்ழ்ழ்!!!!!!!!” இவன் பொறுமை எல்லை தொடத் துடிக்க…
“எஸ் மிஸ்டர்.. ராஜபார்த்திபன்…” தடை செய்தாள் அவள்.
“புரிஞ்சுக்கோடி……..” கெஞ்சல் மொழி அவனிடம்.
‘இவனுக்கு கெஞ்சக் கூட தெரியலை…’ இதற்கு முன் செய்திருந்தால் அல்லவா இப்போது சரியாய் செய்ய… நினைத்து வைத்தததையும் இவள் சொல்லி வைக்க… 
“கிளம்புடி இங்கிருந்து…” எரிச்சல் ஏற.. இவன் விரட்ட.. 
முடியாது போடா…… அவள் சொல்லவில்லை… ஆனால் பார்வையின் பதம் அது தான்.. அதோடு அவனுக்கெதிரே கிடந்த இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்தவள் பார்வதிக்கு அழைப்பு விடுத்தாள்.
“அத்தை நான் தான் யாழ்… உங்க பையன் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டான்… நான் என்ன சொல்ல..??” இப்படிக் கேட்டு வைத்தாள்.
இங்கு இவனோ இமை மூடி அமர்ந்திருந்தான்.
“அவன்கிட்ட தரவா..?? ம்ம்.. இருங்க…” என்றவள் எட்ட நின்றே இவனிடம் நீட்டினாள்.
“ம்மா……..” 
அன்னைக்கும் அவனுக்குமான அமுத மொழிகள்… ஐந்து மணித்துளிகள் தொடர… அழைப்பை துண்டித்தவன்.. “மங்கம்மா……..” என அழைக்க அதில்  தணல் தெறித்தது.
“சொல்லுடா ராஜா…..” நக்கல் அல்லவோ நங்கையின் மொழியில் தெறித்தது.
“டா வா..?? அடிங்க….” என இவன் எழும் முன் வாயிலை எட்டியிருந்தாள் இவன் மனம் நிறைத்த மங்கை.
பார்த்திபனின் காதல் வானில் காலநிலை மாற்றம் கண்டிருந்தது… தென்றல் காற்றும் இன்பத் தூறலும் தீண்டித் தீண்டி சிலிர்க்க வைத்தன.
எதுவுமே இல்லை என்பது போய்… எல்லாம் இவள் என்ற நிலை… இவனுள் எங்கெங்கும்..! இதற்காகத் தானே காத்திருந்தான்..!
பார்த்திபன் வீட்டிலிருந்து புறப்பட்ட யாழ் அவள் வீடு வந்து.. நிரஞ்சனுக்கு அழைத்தாள்.
“யாழ்… ஹாப்பி மார்னிங்டா……..” காலை காபியோடு அவன் சொல்ல..
“வெரி ஹாப்பி மார்னிங் நிரு அண்ணா…..” குறையாத குதூகலத்தோடு இவள் சொல்ல… 
இரு இமைப் பொழுது இவள் முகத்தில் பார்வை பதித்தவன்.. “சொல்லு… நிரு அண்ணா என்ன பண்ணனும்…” என்று கேட்டான்.
“ண்ணா… எப்படிண்ணா…?” 
“அதெல்லாம் அப்படித்தான்… நீ சொல்லு..”
விடயத்தை இவள் விளக்கவும்… “உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல யாழ்…” என்றிருந்தான் அவன்.
இவள் மௌனம் காக்க…. “என் தங்கச்சி.. நான் இல்லாம.. என்கிட்ட கேக்காம.. எப்படி கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினான்னு தெரியல.” என்கவும் 
“அண்ணா…..” ஆனந்தமாய் அவள் கூவ..
“அண்ணா எல்லாம் வார்த்தை மட்டும் தான் போல…” 
நிரஞ்சன் நெஞ்சில் வைத்து சுமக்கிறான் அவன் தங்கைகளை… உடன் பிறந்தவர்களே நிறம் மாறும் நிலையில் இவன் பிரியம் பரிசுத்தமானது.
“அண்ணா… அப்படிச் சொல்லாத… நான்… எனக்கு அடுத்து ரெட்டிப்பு வருஷம்  அதுல செய்ய மாட்டங்க… உனக்கே தெரியுமே அம்மா அதுனால தான் அவ்ளோ அவசரம் காட்டினாங்க…” 
“நளன் ப்ரபோசல் வரும் போதே இத நீ சொல்லிருக்கணும்…” பார்த்திபன் பற்றி மௌனம் காத்தது குற்றமென சுட்டிக் காட்டினான்.
“ண்ணா.. சொல்ல அம்மாவும் நீயும் சான்ஸ் தரல.. நான் யூ.எஸ் போக மாட்டேங்கிற ஒரே காரணத்துக்காக.. என்கிட்ட மறைச்சு.. எல்லாம் பேசி முடிச்சு.. அடுத்த வாரம் கல்யாணம்னு வந்து சொல்றீங்க.. அது தப்பில்லையா..?”
“அது உன் மேல வெச்ச நம்பிக்கை!!”
“அண்ணா..!” 
அவள் அழைப்பில் தான் அவன் வார்த்தைகளின் அர்த்தம் படித்தான் நிரஞ்சன். நம்பிக்கை..? இவர்களது இந்த நம்பிக்கை தான் யாழ் மங்கைக்கும் இவர்களுக்கும் நடுவில் நின்ற ஒன்று.. மங்கையின் நம்பிக்கையை உடைத்த ஒன்று.
நளன் மேல் பிடித்தமா..? இல்லையா..? எதுவும் அவளிடம் கேட்கப்படவில்லை.. சொல்லப்பட்டிருந்தது அவ்வளவே.  
“சரி யாழ்.. நாங்க பண்ணது தப்பு தான்.. ஆனா நீ..? அப்பவே பார்த்திபனை பத்தி சொல்லிருக்கணும்.. இல்ல.. அந்த ப்ரோபோசல் வேண்டாம்னு சொல்லிருக்கணும்.. அதை விட்டு அமைதியா தானே இருந்த..” பாயின்ட் பிடித்தான் அந்தப் பாசக்காரன்.
“யெஸ்..! அமைதியா இருந்தேன்.. ஏன்னா அந்தக் கல்யாணம் நடக்காதுங்கிற நம்பிக்கை” வார்த்தைகளில் வேருன்றி நின்றது உறுதி.
“யாழ்!!!” அதிர்வில் அவன்.
“உண்மை தான் நிரு அண்ணா.. அந்த பீல் என்கிட்ட இருந்ததால தான் அமைதியா இருந்தேன்.. அப்புறம்…..” 
‘இன்னும் என்ன..?’ என்பதாய் அவன் பார்த்து வைக்க..
“சரவணன் இருக்க பயமேன்!!!!!” மந்தகாசம் மங்கையிடம். 
 
அவள் அகத்தினில் அத்தனை நம்பிக்கை குறிஞ்சி வேந்தன் மீது..! அன்றும்.. இன்றும்.. என்றும்..! அவள் அமைதிக்குப் பின் நின்றவன் அவனே..! 
“ஆனா யாழ்…” என்றவன் நிறுத்தி.. மென்முறுவல் ஒன்றோடு இடவலமாய் தலையசைத்து..  
“சரி.. நான் ஆபிஸ் போயிட்டு வந்து சித்திகிட்ட பேசுறேன்.. ம்ம்..?”
“இல்லண்ணா.. அம்மாகிட்ட நானே பேசுறேன்.. நான் தான் பேசணும்..! நான் உன்கிட்ட சொல்ல தான் கூப்பிட்டேன்..”
தமையனாய் அல்லாது தந்தையாய் தாங்குபவன்.. முதலில் அவனிடம் சொல்லவே ஆசை அவளிடம்… அதன் புரிதல் அவனிடம்.
பாசம் பனிமழையாய் விழிகளில்..! யாழிடம் விடை பெற்றான் நிரஞ்சன்.
இவள் ஆழ் நித்திரையில் இருக்க… இவள் நெஞ்சம் நிறைத்தவனோ உறக்கமின்றி இருந்தான். நெஞ்சாங்கூட்டில் நெய்து வைத்த காதல்.. கனவுகளை தட்டி எழுப்பி கோட்டை கட்ட வைத்து துயில் கொள்ள விடாமல் தடுத்தது.
அவன் வீட்டு நாழிகை வட்டம் ஈரைந்து முறை வட்டமடித்த பின்.. 
காரமடை அரங்கநாதர் ஆலயம்…..!
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் பூலோகத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் ஆலயம்..! 
திரிவிக்கிரமனின் திருவருள் பெற்று.. திருமாங்கல்யத்தை தன்னவளுக்குப் பூட்டி.. தன் இணையோடு இல்லறத்தில் அடியெடுத்து வைத்தான் ராஜ பார்த்திபன்.  
கனவு நனவாகும்…….

Advertisement