Advertisement

ஓம் ஆறெழுத்து மந்திரமே போற்றி!
பார்த்திபன் கனா 8
“இந்த ஏரியால இது தான் நம்ம பட்ஜெட்க்கு ஒத்து வரும்… ஒரு ஹால்.. கிட்சேன்… அப்புறம் இரண்டு ரூம்.. ஆனா ஒரு ரூம் மட்டும் மேல.. கீழ் ப்ளோர் ஒன் பிஎச்கே தான்.. எனக்கு சரின்னு தான் படுது.. நீ பார்த்து ஒகே பண்ணினா இன்னிகே அட்வான்ஸ் கொடுத்திடலாம்….” என்றபடி ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் பார்த்திபன்.
“இங்க இருந்து என்னோட ஆபிஸ் எவ்வளவு தூரம்…?” 
“எந்த ஆபிஸ்..??” கேட்டைத் திறந்து அவன் உள்ளே நுழைய, அவன் கேள்வியில் அவள் அப்படியே நின்றிருந்தாள்.
“நீ தானே சொன்ன… எனக்கு வேலை பார்த்து வெச்சிட்டன்னு… அப்போ என்னை சமாதானப்படுத்த தான் அப்படி சொன்னயா!! போடா…. என்னடா தேடி வந்த பிரச்சனை டக்குன்னு டாடா சொல்லுதுன்னு நினைச்சு சந்தோசப்பட்டேன்… ப்ச்… அம்மாவ வேற சமாளிக்கணும்.. இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த.. வா போலாம்…” என இவள் பேசிக் கொண்டே போக..
இவன் நிதானமாக… “பேசி முடிச்சிட்டேனா… வா உள்ள போகலாம்…” என்றான்.
மெல்லிடைக்குத் தன் மென்கரம் இரண்டையும் கொடுத்து… முகத்தில் முறைப்பை காட்டி மங்கையவள் நிற்க… இவளை சீண்டிப் பார்க்கச் சின்னதாய் ஓர் ஆசை அவனிடம்..!
பாவையின் பிரதிபலிப்பாய் பார்த்திபன் முகத்தில்.. முறைப்பிற்கு பதிலாய் முறுவல்..!
இவன் முறுவலுக்கு முன் இவள் முறைப்பு நிற்குமா என்ன…?? முகவரி தொலைத்திருந்தது.
அவள் சட்டென சிரித்துவிட… “இப்போ உள்ள போலாமா??” என்று கேட்க.. தலையசைத்து அவனுடன் நடந்தாள்.
வீடு பார்க்க வரும் முன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை யாழ் மங்கையிடத்து.. இப்போதைக்கு இருக்க இருப்பிடம்.. அவ்வளவே..! ஆனால் இங்கு வந்து பார்க்க.. திருப்தியாய் இருந்தது. முன்பு இருந்ததை விட வாடகை குறைவு.. நிதிக்கும் கல்லூரி பக்கம்.
பகவதியை நினைத்துத் தான் பயம்.. அவரைக் கேட்காமல்… வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து… அவருக்குத் தெரியாமல் கம்பனியில் பிரச்சனையை இழுத்து வைத்து… இதெல்லாம் இவளை அவர் முன்பு கொண்டு போய் நிறுத்தினால்! அவரது புரிதலின் எல்லை எதுவரை என அவளுக்குப் புலப்படவில்லை. சிந்தனை முழுக்க.. முழுக்க… அன்னையைப் பற்றியதாய் மட்டுமே இருக்க..
“மங்கம்மா… இறங்கு… நீ பஸ்ல வீட்டுக்குப் போ… எனக்கு கொஞ்ச வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்…” என்ற பார்த்திபனின் குரல் செவிகளை எட்டினாலும் அவள் சித்தத்தை எட்டவில்லை.
அவள் அமைதி கண்டு அவள் முகம் பார்த்தவன் “யாழ்…. என்ன ஆச்சு..??” என
“அம்மா என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு… என்னை புரிஞ்சுப்பாங்க தானே…..” தவிப்பின் தடம் அவளிடம்.
ஆறுதல் மொழி அவசியம் என்பதை உணர்ந்தவன்… “கண்டிப்பா அத்த உன்னைப் புரிஞ்சுப்பாங்க… நீ பண்ணின விஷயம் சரி.. பண்ணின விதம் தான் தப்பு.. எது வந்தாலும் பார்த்துக்கலாம்… நீ வீட்டுக்குப் போ… நா முடிஞ்சா சாயந்திரம் வரேன்… திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வை…” என்றதும் அவனிடம் விடைபெற்று பேருந்து நிறுத்தம் செல்ல…
அப்படியே விட்டுச்செல்ல மனமில்லை… அவளிடம் வந்தவன் 
“ஏறு.. நானே வீட்டுல விடுறேன்…” என்று அவளை இருப்பிடம் சேர்த்துவிட்டு அவள் வேலை பார்த்த அக்குவா மினரல் வாட்டர் கம்பனியை நோக்கிச் சென்றான். 
முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய விடயம் முன்னால் நிற்கின்றதே!
“ண்ணா… பார்த்து.. பார்த்து…. நா இங்க தானே இருக்கேன்… கூப்பிட்டிருக்கலாமே…” என்றபடி வந்து அந்த பழங்காலத்துப் பேழையை உள்ளே வைக்க உதவியவன்.. சமையல் அறையில் இருந்த யாழிடம் வந்தான்.
முன் தினம் வீடு பார்க்க.. பிடிக்க.. அட்வான்ஸ் கொடுக்க… அடுத்த நாள் வைகுபுலர் விடியலில் பால் காய்ச்சி… அதைத் தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் இங்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருந்தான் ராஜ பார்த்திபன்.
நிரஞ்சன் இருந்திருந்தால் பக்கபலமாய் இருந்திருக்கும் என்று தான் பகவதிக்குத் தோன்றியது. யாழ் பிரச்சனை குறித்து மேலோட்டமாக சொல்லியிருக்க… அதில் அவர் கவனம் வைக்கவில்லை… வீடு மாறுவது யாழின் வேலைக்காக என்று சொல்லப்பட்டிருந்தது.
வீட்டை காலி செய்து இன்னொரு வீட்டில் குடியமர்வது அத்தனை எளிதான காரியமா என்ன?? யாழின் பெரியப்பாவை அழைப்போமா என்று யோசித்திருக்க.. அத்தை என வந்து நின்றான் ராஜ பார்த்திபன். 
பார்வதியும் அழைத்து எல்லாம் பார்த்திபன் பொறுப்பு என்று சொல்லிவிட.. பகவதியின் நெஞ்சத்தில் நிம்மதி நீரூற்று…! 
“யாழ் டீ போட்டாச்சா…??”
“இரண்டு நிமிஷம் இரு… தம்ளர் எடுக்கணும்… எந்த பேக்குல வெச்சிருக்குன்னு தெரியல.. தேடிட்டு இருக்கேன்..”
“அத்தைகிட்ட கேளு..”  
“ம்ம்ம்… உங்கத்தைய ஹவுஸ் ஓனரம்மா வந்து கூட்டிட்டு போய் ஒரு மணி நேரம் ஆச்சு… இன்னும் வரல” முறையிட…
“அவங்க எப்பவுமே அப்படித்தான்… பேச ஆள் கிடைச்சிட்டா போதும்… விடவே மாட்டாங்க… அத்தை கிட்ட சொல்லி…..” மங்கையின் குருகுரு பார்வை குறுக்கிட.. பேச்சை நிறுத்தி.. ‘என்ன’ என்பதாய் பார்த்திபன் பார்க்க..
“அவங்கள பத்தி உனக்கெப்படி தெரியும்??” கைகளை கட்டிக் கொண்டு குறுக்கு விசாரணை நடத்தியவளை..
“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற! போ போய் டீ கொண்டு வா… நா தம்ளர் தேடுறேன்…” என விரட்டினான்.
வெளியே பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் தேநீர் எடுத்துச் செல்ல.. அவளுக்கும் அவனுக்கும் காபி எடுத்துச் சென்றாள் இவள்.
அவன் அவர்களுக்கு கொடுத்து வர.. மங்கை மாடம் செல்லவிருந்த படிகளில் காத்திருந்தாள் காபியுடன். இருவருக்கும் இடையே இருபடி விட்டு அமர்ந்து கொண்டான் பார்த்திபன். 
கரையும் கணங்கள்.. நிறையும் மனங்கள்.. குறையும் காபியோடு..!
இரவோடு இளவெயில் இணையும் நேரம்..
இளந்தென்றல் இன்னிசையில் காபியின் சுகந்தம்..
இவற்றோடு இவனின் இனியமொழிகள் 
இன்னும் இதயத்தில் இதம் சேர்க்க..
இன்பம் கூட்ட.. இது போதுமே…..! 
தன் மீது தழுவிய தரணியனின் இளங்கதிர்களால் துயில் களைந்தவளுக்கு கடிகாரம் கடிதம் நீட்டியது.
“ஏழா..?? எட்டு மணிக்கு ரெடியா இருக்க சொன்னானே….” என எழுந்து வர… எதிர் வீட்டு பலகணியில் காட்சி கொடுத்தான் இவள் நினைவின் நாயகன்.
“ஹேய்!! ராஜா!!!!!!!” பரவசம் பாவையின் வசம்… 
ஆச்சரியமும் ஆர்வமுமாய் ஆர்ப்பரிக்க…. அதை எதிர்பார்த்துத் தான் காத்திருந்தானோ..??
மன்னவன் முகத்தின் முகிழ் நகை தென்காற்றில் தவழ்ந்து வந்து தத்தையை முத்தமிட்டிட… அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள்.
இத்தனை நாள் எங்கே மறைத்து வைத்திருந்தானாம் இந்தப் புன்னகையை..! எதிராளியை இமைக்கும் பொழுதில் இவன் வசம் விழச் செய்திடும்…..! 
முதன் முதலாய் இவன் சிரித்துப் பார்க்கிறாள்…. ம்ஹும்…. இவள் பார்க்க.. இவளுக்காய் இவனிடம் இந்தப் புன்னகை. எதற்காம்..?? 
விடை கொடுக்கவா வந்து கொண்டிருக்கிறான்..?? 
“குட் மார்னிங் மங்கம்மா………” மகிழ்ச்சியின் மணம் அவன் குரலில். 
“என்ன ஆச்சுடா உனக்கு..??” மங்கை வதனத்திலும் மகிழ்மலர் வாசம்.
“என்ன ஆச்சு..?? என்ன ஆகணும்..??” புரியவில்லை அவனுக்கு.
“அதான் எனக்கும் தெரியல…” 
“ஹேய்… என்னடி..? காலைல என்னையும் சேர்த்து கன்பியுஸ் பண்ணிட்டு… நான் நல்லா தானே இருக்கேன்….” சிந்தும் சிரிப்புடன் அவன் சொன்னான்.
நிச்சயம் அவன் உண்மை உரைக்கவில்லை… அவனுக்கும் தெரியும். அத்தனை அழகாய் விடிந்தது வைகறைப் பொழுது அவனுக்கு ரம்மியமான கனவுடன்….! அதைக் கொண்டே இப்படி ஒரு ராஜாவாக இவள் முன்பு !
“நான் நானா தான் இருக்கேன்…..”
“அதை நான் சொல்லணும்… நீ நீயா இல்ல.. ஆனா இப்படியே இரு.. இது தான் எனக்கு பிடிச்சிருக்கு…….” பாசமும் பரிவும் பாவையிடத்து…!
“யாழ்க்கு ஓகேனா எனக்கும் ஒகே….” விளையாட்டாய் சொன்னாலும் விளையாட்டல்ல என விளங்கிற்று அவளுக்கு.
அதற்குள்.. “ராஜா எழுந்தாச்சா…” என்றபடி பகவதி வர….
“ஆமா அத்த… பால் ஆறு மணிக்கே வந்திடும்.. இங்க வீடு திறக்கல.. அதான் நானே வாங்கி வெச்சிருந்தேன்…” என அவரிடம் நீட்டியவன்
“எட்டு மணிக்கு தயாரா இரு… கிளம்பிடலாம்…” என அவளிடம் விடைபெற்றவன் அன்னைக்கு அழைத்தான்.
“பாரு!!!!! நீ இன்னிக்கு இங்க வரியா…??” குழந்தையின் ஆவலும் ஆரவாரமும் அவன் அகமெங்கும். 
“…….”
“ம்ம் செஞ்சுட்டேன்.. மதியத்துக்கு கடைல பார்த்துக்கிறேன்..”
“………..”
“ம்மா… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுமா… நீ வர்றியா.. அப்படியே ராஜியையும் அப்புறம்…. அவரையும் கூட்டிட்டு வா..” அத்தனை ஆசை அவன் புறம்..!
“……………” 
“மா…. போமா… அந்த ஜெயில்ல இருந்து உனக்கு விடுதலை கிடைக்கலைன்னு சொல்லு… ஒத்துக்கிறேன்…” ஏமாற்றமும் எரிச்சலும்..!
“புரிஞ்சுக்கோடா ராஜா….” இதை சொல்லிட அத்தனை தயக்கம் அவன் தாயிடம்.
“நீ தான் மா என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கற………” வருத்தம் வருட சொன்னவன் “நான் கிளம்புறேன் மா…” என அழைப்பை துண்டித்து தயாராகச் சென்றான்.
ஏனோ இன்று அம்மா… ராஜி… ராஜி அப்பா தன்னுடன் இருக்க வேண்டும் போல ஓர் ஆசை அவனிடம். அவனால் இன்று கோவை செல்ல முடியாது.. அதனாலே அன்னையை அழைத்து பேசினான். அவர் மென்மையாய் மறுத்துவிட.. வன்மையாய் ஏமாற்றம் வந்து அவனைத் தாக்கிவிட.. அத்துடனே யாழ் மங்கையை எதிர் கொண்டான்.
பார்த்திபன் முகம் படித்தவள் “என்ன ஆச்சு??” என்று கேட்டு வைக்க..
“ஏய்!!! என்ன ஆச்சு…. ஒன்னும் ஆகல… போதுமா..?? நீ ஏறி உக்காரு…” என எரிந்து விழ 
“முடியாது… நீ அட்ரஸ் சொல்லு… நான் என் வண்டியில வரேன்….” பட்டென சொல்ல.. 
‘போடி……..’ என புறப்பட்டு போயிருந்தான்.
“அட்ரஸ் சொல்லிட்டு போடா………..” அரை மணித்துளி கழித்து அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி பதில் தந்தது.
அவன் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்தவள் குழம்பி நின்றாள்.. இங்க தானா..?? உறுதிப்படுத்த அழைக்க… உரியவன் துண்டித்தான்.
“இவன் வேற… நேரம் காலம் இல்லாம…” என சலித்துக் கொண்டவள் துளிரினுள் அடியெடுத்து வைத்துச் சென்றாள்.
‘இங்க என்ன வேலை எனக்கிருக்கும்??? என் கெமிஸ்ட்ரி இங்க வர்க் அவுட் ஆகாதே!!!’ இப்படியான யோசனையுடன் இவள் பசுமைக் குடிலைக் கடக்க.. அவனே அவளை எதிர்கொண்டான்.
‘இவனும் இங்க தான் இருக்கானா..?? அதை சொன்னா என்னவாம்..??’
“இங்கயா எனக்கு வேலை..??” இவள் இப்படிக் கேட்க..
“ஏன் இங்கெல்லாம் செய்ய மாட்டியா..??” இவன் இடக்காகக் கேட்க… அதில் அவள் மனம் சற்றே சுருங்க..
“நா அப்படி சொன்னேனா..?? நீ இப்படி பேசுற மாதிரி இருந்தா இனிமே என்கிட்ட பேசவே வேணாம்..!!” சட்டென சொல்லவும் அவன் நடையை  தடை செய்து திரும்பவும் தொடர்ந்தான்.
‘ஒரு பேச்சுக்காவது இனிமே அப்படி பேசலன்னு சொல்றானா பாரு… ஆள் மட்டும் நல்லா வளர்ந்திருக்கான்..’
“உள்ள உக்காரு……..” என்றவன்.. உள்ளே வர பத்து நிமிடம் எடுத்துக் கொண்டான்.
“யாழ்… துளிர்…” என அடுத்தடுத்து அவன் சொல்லச் சொல்ல இன்ப வெள்ளம் இவள் இதயத்தில்..!
துளிரைப் பற்றி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.. அதை அறியாதவர் மிகச் சிலரே இருக்கக் கூடும்… ஆனால் பார்த்திபனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. சாப்ட்வேரில் இருந்தவன் சாயில் பக்கம் வரக்கூடும் என எதிர்பார்த்தாளா என்ன?? 
“சொல்லு யாழ்… உனக்கு இங்க வேலை பார்க்க ஓகே வா.. இல்ல…” எதிர்பார்ப்பு எட்டித் தான் பார்த்தது அவன் விழிகளில்.
“டபுள் ஓகே……..” மங்கையின் மொழியில் மலர்ந்தவன்..
“அப்போ இன்னிக்கே ஜாயின் பண்ணிக்கலாம்… அகில் கூட இருப்பான்… நா கொஞ்சம் வெளில போயிட்டு வந்துடறேன்…” விடை பெற்றுச் சென்றவன் மீண்டும் இவள் முன்பு நின்றிருந்தான்.
“சாரி!!!!!!!” கண் பார்த்துச் சொன்னான்.. காலைப் பொழுதில் அவளிடம் காய்ந்ததற்கு.
இவள் ஏற்றுக்கொள்ள.. தலையசைப்புடன் நகர்ந்தான்..
“பார்த்திபனைப் படி யாழ்!!!!!” காரிகைக்கு கட்டளையிட்டது அவள் கனிந்த.. களித்த மனம்.
கனவு நனவாகும்…….

Advertisement